சூதக முனிவர் கூறத் துவங்கினார் ”கல்ப காலத்திலே யமுனை நதியின் கரைப்  பகுதியில் வாழ்ந்து கொண்டு இருந்த  தர்மயக்ஞன் எனும் பிராமணன் ஒருவன் இறந்து விட்ட தனது தந்தையின் அஸ்தியைக் கடலில் கரைக்க காசி மற்றும் ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணத்தை மேற்கொண்டார். காசியில் சென்று அஸ்தியைக் கரைத்து விட்டு மீதி அஸ்தியை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரத்துக்கு செல்லத் துவங்கினார். தென் பகுதிக்கு வந்துவிட்டவர் வழியிலே திருப்பூவணத்தில் இரவு தங்கிவிட்டு மறுநாள் கிளம்பலாம் என இரவு அங்கே இளைப்பாறினார். அவருடன் துணைக்கு சென்று இருந்த குடும்பத்தினர் ஒருவருக்கு ஒருவருக்கு  பசி எடுக்கவே   அஸ்திக் கலசத்துடன் கொண்டு சென்றிருந்த பெட்டியைத் திறந்து அவர்கள் கொண்டு சென்று இருந்த உணவை வெளியில் எடுத்தார். அப்போது அஸ்தியை வைத்து இருந்த கலசத்திலே அஸ்தியை காணவில்லை என்பதை கவனித்து விட்டு அதை வெளியில் எடுத்துப் பார்க்க, அஸ்தி கலசத்தில் இருந்தது சாம்பல் அல்ல ஆனால் அதற்குப் பதில் அதில் இருந்தது பூக்கள் என்பதைக்  கண்டு பயந்து போய் தர்மயக்யனை எழுப்பி அவரிடம் தாம் கண்ட அதிசயத்தைக் காட்டினார்.  மற்றவர்களையும் எழுப்பி அவர்கள் அதைக் காட்டினார்கள்.

என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஈஸ்வரன் விட்ட வழி, நாமோ கலசத்தில் எடுத்து வந்திருந்த அஸ்தியில் பாதியை காசியில் கரைத்து விட்டு மீதியை அல்லவா எடுத்து வந்தோம். இப்போது என்னடா என்றால், அஸ்தி இருந்த கலசத்திலே பூவல்லவா இருக்கிறது. ஒருவேளை நாம் தவறாக காசியிலேயே அஸ்தி முழுவதையும் கரைத்து விட்டோமோ அல்லது தவறுதலாக நாம் எடுத்துப் போய் இருந்த கலசத்தை அங்கேயே விட்டு விட்டு தவறாக பூக்களைக் கொண்ட வேறு ஒருவரது கலசத்தைக் கொண்டு வந்து விட்டோமோ என பயந்து போய் மீண்டும் காசிக்கே சென்று அஸ்தியைக் கரைத்த இடத்திலே அந்த கலசம் உள்ளதா எனப் பார்த்துவிட்டுத் திரும்பலாம். ஒருவேளை தவறாக வேறு கலசத்தை எடுத்து வந்திருந்தால் அதை அங்கேயே விட்டு விட்டு வந்து விடலாம் என்று எண்ணினார்கள். ஆகவே திருப்பூவணத்தில் இருந்து காசிக்கே மீண்டும் கிளம்பிச் சென்றார்கள்.

காசியை அடைந்து தாம் அஸ்தியைக் கரைத்த இடத்துக்குப் போய் கலசத்தை தேடினார்கள். (அந்த காலங்களில் எந்த ஒருவரும் மற்றவர்கள் எடுத்துச் சென்ற கலசங்களை எத்தனை நாட்கள் ஆனாலும் தொட மாட்டார்கள். அவை வைத்த இடத்திலேயேதான் இருக்கும்.  நதியில் இருந்து நீர் கரைக்கு பொங்கி வந்து அவற்றை நதிக்குள் இழுத்துப் போனால் மட்டுமே அவை அங்கு கிடைக்காது.  ஆகவே அவர்கள் தவறுதலாக கலசத்தை அங்கு வைத்து விட்டு வந்து இருந்தால் அதை எடுத்து வந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டுதான் அங்கு திரும்பிச் சென்றார்கள் .மேலும் எத்தனை நாட்கள் ஆனாலும் சரி அஸ்தியை காசியிலும் ராமேஸ்வரத்திலும் கரைக்க சங்கல்பம் செய்து கொண்டு இருந்தால்  அந்தந்த இடங்களுக்கு குடும்பத்தினரோடு  சடங்கு  யாத்திரையை மேற்கொள்வார்கள். அங்காங்கே தங்கிக் கொண்டு கிடைத்த வண்டிகளில் பயணம் செய்வார்கள். சாந்திப்பிரியா ). ஆனால் அவர்கள் காசி நதிக் கரையில்  சடங்குகளை செய்த இடத்தில் கலசம் எதுவும் காணவில்லை. இதென்ன கூத்தாக உள்ளது  என குழம்பியவர்கள், சரி எதோ தவறு நடந்து விட்டதினால் தவறாக   பூக்கள் இருந்த அஸ்திக் கலசத்தை  எடுத்து வந்து விட்டோம். ஆகவே அதை அங்கேயே கொட்டிவிட்டு ராமேஸ்வரத்துக்கு சென்று மிச்ச சடங்குகளை செய்து முடித்து விட்டு திரும்பி வரலாம் என எண்ணியவர்கள் கலசத்தை  திறந்து அந்தப் பூக்களை கடலில் கொட்டி விடலாம் என எண்ணியவாறு அதை திறக்க அனைவரும் திடுக்கிட்டார்கள்.

திருப்பூவணத்தில் எந்த அஸ்திக் கலசத்தில் பூக்கள் இருந்ததோ அதில் பூக்கள் இல்லை. மாறாக தர்மயக்ஞன் கொண்டு சென்றிருந்த அவர் தந்தையின் சாம்பலே இருந்தது. அனைவரும் குழம்பி நின்றார்கள். என்ன மாயமோ தெரியவில்லை, நாம்தான் ஏதோ யோசனையில்  தவறிப் போய் ஆஸ்தியை பூ என நினைத்து  விட்டோமோ என பயந்தார்கள். அனைவரும் ஒன்று கூடி மேற்கொண்டு என்ன செய்யலாம் என ஆலோசனை செய்தப் பின் மீண்டும் அந்த அஸ்தியை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரத்துக்குக் கிளம்பிச் செல்ல முடிவு செய்தார்கள்.
வழியில் மீண்டும் திருப்பூவணத்தில்  வந்து அங்கேயே இரவு தங்கி விட்டு மறுநாள் கிளம்பலாம் எனத் தங்கினார்கள். மறுநாள் காலை எழுந்து கிளம்பும் முன்  அஸ்திக் கலசத்தை திறந்து  பார்த்தவர்கள் திடுக்கிட்டார்கள்.  அதில் சாம்பல் இல்லை, மாறாக  மீண்டும் அதில் பூக்கள் மட்டுமே இருந்தன. மீண்டும் மீண்டும் குழப்பம். என்ன செய்வது எனப் புரியாமல் ஆலோசனை செய்தார்கள். நடப்பது நடக்கட்டும் அஸ்தி  இருந்த கலசத்தில் காணப்படும் பூக்களை அஸ்தியாக  பாவித்து ராமேஸ்வரக் கடலில் கரைத்து விடலாம் என மறுநாள் ராமேஸ்வரத்துக்கு கிளம்பிச் சென்று அஸ்தி  கலசத்தை திறந்து பார்த்தபோது அதில் பூக்கள் இல்லாமல் அஸ்தி இருந்ததைக் கண்டு மிரண்டு போனார்கள். அவசரம் அவசரமாக அனைத்து காரியங்களையும் முடித்துக் கொண்டு விட்டப் பின்  தமது சொந்த ஊருக்கே  திரும்பும் வழியில் ஒரு சித்தரை சந்தித்தார்கள்.

அவர் வேறு யாரும் இல்லை. சித்தர் உருவிலே இருந்த சிவபெருமானே அவர். அவரிடம் மிரண்டு  போய் இருந்த தர்மயக்ஞன் குழுவினர் தாம் அனுபவித்த வேதனைகளைக் கூறி அந்த மாயத்தின்  காரணத்தை விளக்குமாறுக் வேண்டிக் கொண்டார்கள். அவரும் அவர்களிடம் கூறினார் ‘ குழந்தைகளே, கவலை வேண்டாம்.  இந்த ஷேத்திரம் மிகப் புனிதமானது. அஸ்தியே இங்கு பூவாக மாறிவிடும் புனிதத் தன்மைக் கொண்டது. உனது தந்தை மிகப் பெரிய புண்ணியவான். ஆகவேதான் அவருடைய அஸ்தியும் இந்த தலத்தில் வந்ததும் பூவாக மாறி புனிதம் அடைந்தது.  அவர் மோட்ஷம் அடைந்துவிட்டதைக் காட்டவே உங்களுக்கு இந்த மாயம் காட்டப்பட்டு உள்ளது.  இதில் இருந்து உங்களுக்கு ஒன்று புரிய வேண்டும். இந்த தலம் காசியை விட பல மடங்கு புண்ணியம் பெற்றத் தலமாகும். அதற்குக் காரணம் இங்கு சிவபெருமானே தங்கி உள்ளார்.    அவர் உள்ள இடத்திலே மயான சாம்பலே அவருக்கு அபிஷேகப் பூக்கள் ஆகி விடுகின்றன. ஏன் எனில் அவர் மயானப் பிரியர் அல்லவா? ஆகவேதான் காசி நகரத்தை விட பல  மடங்கு புண்ணியம் தரும் இடமாக இத்தலம் போற்றப்படுகிறது.   காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள வைகையில் அஸ்தியை கரைத்து மோட்ச தீபம் போட்டால் அவர்களது பித்ருக்களின் ஆத்மாவும் மோட்ஷம் அடையட்டும். அவர் குடும்பத்தினர் மேன்மை அடைவார்கள். கஷ்டங்கள் விலகும்’ என்று கூற அவர் கால்களில் விழுந்து  அனைவரும் வணங்கி எழுந்தார்கள். என்ன அதிசயம்? அங்கு சித்தர் இல்லை. மாயமாக மறைந்திருந்தார்”.

இதைக் கூறிய சூதர் அந்த தீர்த்தத்தின் அடுத்த மகிமைக் கதையைக் கூறத் துவங்கினார்.

…………….தொடரும்