கிராம தேவதைகளும் 
நகர தெய்வங்களும் 
(வழிபாட்டுத் தலங்கள்  தோன்றிய  வரலாறு  )
-சாந்திப்பிரியா-
– I-

சில நாட்களுக்கு முன்னர் என்னுடைய ஒரு உறவினர் என்னிடம் சில விவரங்களைக் கேட்டார். அவர் கேட்ட சந்தேகங்களின் சாரம் :-கிராம தேவதைகள் என்பது என்ன?

ஆலயங்கள் மற்றும் கிராம தேவதைகளின் ஆலயங்கள் வெவ்வேறானதா?
பல குடும்பங்களில் கிராம தேவதை எனப்படும் தெய்வங்களை குலதெய்வமாக வழிபடுகிறார்களே. அதன் பின்னணி என்ன?
ஒவ்வொருவருடைய குல தெய்வம் என்பதும் அம்மனாகவே இருக்கும் (பெண் தெய்வம் ) என்பது சரியா?

அவருடைய சந்தேகங்கள் அனைத்துமே விளக்கப்பட வேண்டியவை. நானும் பல நாட்களாக இந்த விஷயங்களைக் குறித்து பல இடங்களிலும் விசாரித்து வந்தேன். அது போலவே கிராம தேவதைகள் மற்றும் வேத முறையிலான தெய்வ ஆலயங்கள் (இரண்டும் வெவ்வேறானவை) எழுந்த வரலாற்றுப் பின்னணியையும் பலரிடமும் விசாரித்து வந்தேன். அவற்றைக் குறித்து நான் நீண்ட கட்டுரை எழுத நினைத்து இருந்தேன். ஆனால் என்னிடம் கேட்கப்பட்ட விளக்கங்களுக்கு உடனடியாக விளக்கம் தர வேண்டும் என்பதினால் நான் எழுத இருந்த கட்டுரையை சிறிய கட்டுரையாகவே எழுதி உள்ளேன்.

கிராம தேவதைகள் தெய்வங்கள் இல்லையா? அவர்களுக்கும் தெய்வங்கக்ளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? வேத முறையிலான சிவன், பார்வதி, முருகன் , மகாவிஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு ஆலயங்கள் எப்படி எழுந்தன? முருகனை மட்டும் ஏன் வேதமுறைக் கடவுளாக பார்ப்பதில்லை? கிராம தேவதைகளின் ஆலயம் மற்றும் வேத முறையில் அமைந்த ஆலயங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன, பல பிரசித்தி பெற்ற இன்றைய ஆலயங்கள் முன்னர் கிராம தேவதை ஆலயங்களாக இருந்த ஆலயங்களா? கிராம தேவதை மற்றும் தெய்வீக ஆலயங்கள் என்ற பாகுபாடு ஏன் போன்றவற்றை முடிந்தவரை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

முதலில் சில உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆலயங்கள் எப்போது எழுந்தன என்பது யாருக்குமே தெரியாது. அதைப் பற்றிய சரியான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் சரித்திர ஆய்வாளர்களின் கூற்றுப்படி வேத காலத்திலும் கூட அதாவது கி.பி 1500 அல்லது கி .பி 1600 ஆம் ஆண்டுகளில் கூட ஆலயங்கள் எனும் வழிபாட்டு தலங்கள் இருந்திருக்கவில்லை. முதன் முதலில் ஆலயம் என்ற ஒன்றை கண்டு பிடித்தது ஆப்கானிஸ்தானில்தான். இந்தியாவில் உள்ளதைப் போன்ற பல இந்து ஆலயங்கள் ஆசியாவின் பல பாகங்களிலும் அதாவது கம்போடியா, தாய்லாந்து, இரான், பாகிஸ்தான், மலேஷியா, சிங்கப்பூர், ஆப்ரிக்க நாடு போன்ற பகுதிகளில் பரவலாக இருந்துள்ளன. ஆனால் தென் பகுதிகளில் அவை இல்லை. தென் பகுதிகளில் இருந்த பெரும்பாலான வழிபாட்டுத் தலங்கள் அனைத்துமே காவல் தெய்வ ஆலயங்களாகவே இருந்துள்ளன. வேத கால தெய்வ வழிபாட்டில் வேத மந்திரங்களை ஓதி தெய்வங்களை ஆராதித்திருந்தார்களே தவிர உருவ வழிபாடோ இல்லை விக்ரஹ வழிபாடோ இருந்ததான செய்திகள் இல்லை. அவை பிற்காலத்தில்தான் அதாவது வேத காலத்தின் பிற்பகுதியில்தான் தோன்றி உள்ளன என்பது கருத்தாகும்.

தென் பகுதிகளில் வேத முறையிலான வழிபாட்டுத் தலங்கள் சிறு ஆலயங்களாக எழுந்த காலம் ஒன்றாம் நூற்றாண்டில்தான். வடநாட்டில் குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் மூன்றாம் நூற்றாண்டில் ஆலயங்கள் தோன்றாத துவங்கி பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் தென் இந்தியாவிலும் (அதாவது கி. பி 500 ஆம் ஆண்டுக் காலம்) ஆலயங்கள் கட்டப்படத் துவங்கி, பின்னர் சோழ மன்னர்கள் மற்றும் வேறு பல பல மன்னர்கள் ஆட்சியில் பெருமளவில் தொடரப்பட்டது என்பதே உண்மை.

அதற்கு முன்னர் தெய்வ வழிபாடு இல்லையா என்ற கேள்வி எழும். உண்மைதான். அதற்கு முன்னரும் அதாவது வேத காலம் பிறந்தப் பின் அங்காங்கே ஆலய வழிபாடுகள் தோன்றத் துவங்கின. ஆனால் அந்த இடங்கள் ஆலயங்கள் அல்ல. ஆலயங்கள் எனப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மண் குடுசைகளிலும், கூறை வேயப்பட்ட நான்கு மண் சுவர்களுக்குள்ளும், குகைகளிலும், கற்களினால் சூழப்பட்டு இருந்த இடங்களிலும் மேல் கூரை இல்லாமலும் இருந்த இடங்களில் இருந்தன. அவற்றில் எந்த வகையிலான வழிபாட்டு முறைகள் இருந்தன என்பது தெரியவில்லை .

அப்படி என்றால் 10,000 20,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மகாபாரதம், ராமாயணம், விஷ்ணு புராணம், சிவ புராணங்களில் கூறப்பட்டு உள்ள தெய்வங்கள் பொய்யானதா என்ற கேள்வி எழலாம் ? இங்கு ஒன்றை கூர்ந்து கவனிக்க வேண்டும். நடந்த அவை அனைத்துமே தெய்வங்கள் மனிதப் பிறவிகளை எடுத்து வந்து பூமியிலே நிகழ்த்திய காட்சிகள். ஆகவே அவர்கள் ஆலயங்களில் அமர்ந்திருந்தவர்கள் அல்ல. ராமன், சீதை, லஷ்மி, விஷ்ணு, பார்வதி, போன்ற அனைவருமே பூலோகத்தில் நடந்த காட்சியில் பங்கேற்ற மனித உருவில் வந்திருந்த தெய்வங்கள். மானிட ரூபத்தில் இருந்த அந்த தெய்வங்களை அவர்கள் வாழ்ந்திருந்த தோற்றத்தில் சிலை அமைத்து, ஆலயங்களில் பிரதிஷ்டை செய்து ஆராதித்து வழிபாட்டு வந்திருக்கவில்லை. தெய்வங்களின் உருவங்கள் வெளி வந்தது வேத காலத்துக்குப் பின்னர்தான். விஷ்ணு என்றால் இந்தந்த உருவங்கள், சிவன் என்றால் இந்தந்த உருவங்கள் என ஓவ்வொரு கடவுளின் வடிவங்களும் வேத காலத்துக்குப் பின்னரே வெளியாகத் துவங்கின.

இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால் தெய்வங்களுக்கு ஒரு உருவம் கிடைத்தது வேத காலத்துக்குப் பின்னர்தான் என்பதினால் இந்தியாவின் வடக்குப் பக்கங்களில் இருந்த இடங்களில் கிராம தேவதை வழிபாட்டுத் தலங்கள் இல்லாமல் வேத முறையிலான இந்து கடவுட்களின் ஆலயங்கள் மட்டுமே கூரைகளிலும், மண் சுவர்களுக்கு இடையிலும், குகைகளிலும் இருந்திருக்க, தென் பகுதியில்தான், ஒரிஸ்ஸா மானிலப் பகுதிகள்வரை பல இடங்களிலும் கிராம தேவதை வழிபாடுகள் இருந்து உள்ளன. கிராம தேவதைகளின் வழிபாடு தோன்றிய பிறகுதான் தெய்வீக ஆலயங்கள் தென் பகுதிகளில் பரவலாக தோன்றின. அதே நேரத்தில் வட பாகங்களிலும் ஆலயங்கள் சிறிதும் பெரிதுமாக போன்றத் துவங்கின. இன்றைக்கும் பல முக்கியமான ஆலயங்களின் பின்னணி வரலாற்றை பார்த்தோம் எனில் அவை ஆலயங்களாக எழுப்பட்டதற்கு முன்னர் கிராம தேவதைகள் வழிபாட்டு தலங்களாகவே இருந்துள்ளன. அப்படிப்பட்ட கிராம தேவதை ஆலய பூமிகள் மீதே இன்றைக்கு நாம் காணும் பல பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டு உள்ளன. அது எப்படி? பொதுவாக கிராம தேவதைகள் என்றாலே கருப்பசாமி, சங்கிலிக் கறுப்பர், பேச்சாயி,குதிரை வீரன், மதுரை வீரன் போன்ற மனித ரூபத்தில் உள்ளவர்கள் ஆராதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் என்று கருதுவார்கள். ஆனால் அவர்களும் தெய்வத்தின் சில அம்சங்களே என்பதை பெருமளவில் மக்களிடையே கொண்டு செல்லவில்லை . இந்த நிலையினால்தான் ஆரிய, திராவிட பிரிவுகளின் ஆலய வழிபாட்டு தோற்றமும் அமைந்தது.

………….தொடரும்