
திருப்பூவண ஆலய புராணம் மற்றும் வரலாறு
இத்தலம் மதுரை – மானாமதுரை இருப்பு பாதையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்னும் ஊரில் வைகை ஆற்றின் தென் கரையில் அமைந்திருக்கிறது.
பிரும்மா இந்த பிரபஞ்சத்தைப் படைத்த சில காலத்துக்குப் பின் அவரிடம் சென்ற அனைத்து முனிவர்களும் ரிஷிகளும் தாம் அனைவரும் நிம்மதியாகவும், தடங்கல்கள் இன்றியும் யாகங்களை செய்யவும், தவம் செய்யவும் ஒரு தக்க இடத்தைக் காட்டுமாறு அவரிடம் வேண்டிக் கொண்டார்கள். அவரும் சிறிது நேரம் யோசனை செய்தப் பின் தன் கையில் அப்போது வைத்து இருந்த ஒரு சங்கு சக்கரத்தை எடுத்து பூமியில் ஓட விட்டார். அடுத்து அந்த ரிஷி முனிவர்களிடம் பிரும்மா கூறினார் ‘ ரிஷி முனிவர்களே, நீங்கள் இந்த சக்கரத்தை தொடர்ந்து செல்லுங்கள். அது எந்த இடத்தில் சென்று நின்று விடுமோ அந்த இடமே நீங்கள் விரும்பும் இடம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார். அவர் கொடுத்த அறிவுரைப்படி அந்த ரிஷி முனிவர்கள் சங்கு சக்கரத்தை தொடர்ந்து சென்றார்கள். அதுவும் பல இடங்களுக்கும் ஓடிச் சென்ற பின் முடிவாக நைமிசாரண்ய வனத்தில் சென்று நின்று விட, அந்த இடமே அனைத்து ரிஷி முனிவர்களும் கூடி சத் சங்கம் செய்யவும், வேள்விகள் செய்யவும் ஏற்ற இடமாக அமைந்தது.
நம் நாட்டில் பல்வேறு புராணங்கள் உள்ளன. அவற்றில் பலவற்றையும் நைமிசாரண்ய வனத்தில் சூதக முனிவர் கூறியதாக கூறுவார்கள். ஆனால் உண்மையில் அனைத்து புராணக் கதைகளையும் முருகப் பெருமானே சிவபெருமானின் வாகனமான நந்தி தேவருக்கு விரிவாகக் கூறியதாகவும், அதை நந்தி தேவர் வியாச முனிவருக்கும் பிற ரிஷி முனிவர்களுக்கும் கூறினார் என்றும் நம்பிக்கை உள்ளது.
அப்படி நந்தி தேவர் மூலம் சனகாதி முனிவரும், சனகாதி முனிவர் மூலம் வியாச முனிவரும் அறிந்து கொண்ட புராணங்களில் சூதகர் எனும் முனிவருக்கு பதினெட்டு புராணங்களை வியாச முனிவர் போதித்தார். அவற்றை நைமிசாரண்ய வனத்தில் இருந்த ரிஷி முனிவர்கள் கூட்டிய சத்சங்கத்தில் சூதக முனிவர் மற்ற முனிவர்களுக்கு விளக்கிக் கூறினாராம். இப்படியாகத்தான் சூதக முனிவர் மூலம் மற்ற முனிவர்கள் பல புராணங்களை, பல ஆலய மான்மியங்களை, மகத்துவங்களை தெரிந்து கொண்டார்கள். அப்படி கூறப்பட்ட புராணங்களில் ஒன்றே பிரும்மகைவர்த்த புராணம் என்பதாகும். வட மொழியில் எழுதப்பட்டு உள்ள இதில்தான் திருப்பூவணம் புராணமும் சுமார் பதினான்கு அத்தியாயங்களில் இருந்தது எனவும், வடமொழியில் இருந்த அந்த திருப்பூவணப் புராணத்தை கந்தசாமி புலவர் என்பவரே தமிழில் மொழி பெயர்த்து பாடினார் என்பதாக கூறுகிறார்கள். இந்த ஆலயத்தை திருப்பூவண ஆலயம் என்றும் கூறுகிறார்கள். திருப்பூவண ஆலயம் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆலயம் சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம். இந்த ஆலயப் பெருமையை குறித்து அப்பர், சம்மந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்க வாசகர் போன்ற தமிழ் புலவர்கள் பாடி உள்ளார்கள். ஆலயத்தின் மூலவர் பூவணநாதர் மற்றும் அம்பாளின் பெயர் சௌந்தர்யநாயகி என்பதாகும். இனி இந்த ஆலயத்தின் மகாத்மியத்தை படிக்கலாம்.
சூதக முனிவர் நைமிசாரண்யத்தில் முனிவர்களுக்கு திருப்பூவணத்தைப் பற்றி விளக்கிக் கூறலானார், ‘முனிவர்களே, திருப்பூவணத்திற்கு நான்கு யுகங்களில் நான்கு பெயர்கள் இருந்துள்ளன. கிரேதாயுகத்திலே தேவிபுரம் என்றும், திரேதா யுகத்திலே லஷ்மிபுரம் என்றும், துவாபர யுகத்தில் பிரும்மபுரம் என்றும் பெயர்கள் உண்டு. அதுவே கலியுகத்தில் தட்ஷிண காசி அல்லது பிதுர் முக்திபுரம் என அறியப்படும். அங்கு செல்பவர்களுக்கும் அங்கேயே வசிப்பவர்களுக்கும் முக்தி கிடைக்கும், பித்ரு பாபம் தீரும் மற்றும் சிவப்பிராப்தி கிடைக்கும்.
முன் ஒரு காலத்திலே இந்த தலத்திலே பொன்னையாள் என்றொரு மாது வாழ்ந்திருந்தாள். அவள் ஆலயத்தில் நடனமாடும் மங்கை. அவள் சிவபெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டவள். அங்கு இருந்த சிவபெருமானுக்கு பூவண்ணனாதர் என்ற பெயருண்டு. தினமும் அவரை பூஜித்து வந்திருந்த பொன்னையாளுக்கு ஒரு தீராத ஆசை இருந்தது. தன் வாழ்நாளில் பூவண்ணனாதரை தங்கத்திலான சிலை அழகில் காண வேண்டும் என்பதே அந்த ஆசை. ஆனால் ஏழை அவளால் எப்படி அத்தனை தங்கத்தை சேர்த்து சிலையை வடிவமைப்பது?
ஆகவே அவள் தினமும் மனமுருகி ஆலயத்தில் சிவபெருமானையே அதற்கான சக்தியை தனக்கு தர வேண்டும் என்று வேண்டி வந்தாள். சில காலம் கடந்ததும் சிவபெருமானுக்கு அவள் மீது கருணைப் பிறந்தது. அவள் வேண்டிய வரத்தை தர முடிவு செய்தார். ஆகவே ஒரு நாள் சிவபெருமான் ஒரு சித்தரைப் போல வேடம் கொண்டு அந்த நகருக்கு வந்தார் . ஆலயத்தில் சென்று அங்கிருந்த சிவபெருமானை வணங்குவது போல பாவனை செய்தார். அவர் அங்கு வந்து சிவபெருமானை வேண்டிய பின் பொன்னையாள் காதில் விழும்படி வேறு ஒருவரை நோக்கி ‘இந்த ஊரில் நமக்கு ஒருநாள் தங்கி இளைப்பாறி உணவு உண்ண ஏதேனும் இடம் இருக்குமா?’ என்று கேட்டார்.
அவர் ஆலயத்தில் இப்படிக் கேட்டதைக் கண்ட பொன்னம்மாளோ நேரடியாக அந்த சித்தரிடம் சென்று ‘ ஐயா, நான் இந்த ஆலயத்தில் பல காலமாக நடனம் ஆடி வரும் மங்கை. நான் என் வாழ்க்கையையே சிவபெருமானுக்கு அர்பணித்து விட்டேன். ஆகவே நான் சம்பாதிக்கும் அனைத்தையும் இந்த ஆலயத்துக்கே செலவு செய்கிறேன். ஒரு சிவனடியாரான உங்களுக்கு ஆட்ஷேபணை இல்லை என்றால் என் வீட்டில் வந்து உறங்கி உணவருந்தி விட்டுச் செல்லலாமே. அப்படி நடந்தால் அதுவே என் பாக்கியம்’ என்று மனமுருகி கேட்டாள் .
அதைக் கேட்ட சித்தர் உருவில் இருந்த சிவபெருமானும் அவளிடம் போலியாக நடித்தார். ‘அம்மணி உங்கள் அன்பு எம்மைக் கவர்கிறது. ஆனால் நீங்களோ ஒரு பெண். ஆகவே உங்கள் வீட்டில் வந்து இரவு தங்கினால் அது நன்றாக இருக்காது. மேலும் நானோ இன்றே மதுரைக்கு கிளம்பிச் செல்ல வேண்டும். ஆனால் மனம் கனிந்த உங்கள் வேண்டுகோளை தட்ட விரும்பவில்லை என்பதினால் நான் உங்கள் வீட்டில் வந்து உணவு மட்டும் அருந்தி விட்டுச் செல்ல சம்மதிக்கிறேன். உங்களுக்கு அதில் ஆட்சேபணை இல்லையே?’ என்று கேட்க பொன்னமாளும் தயங்காமல் அவர் கூறியதை ஏற்றுக் கொண்டார்.
சிவனடியாரும் குளித்து விட்டு, ஆலயத்தில் சிவபெருமானை தரிசனம் செய்து விட்டு வருவதாகக் கூறி விட்டு உணவு அருந்தும் நேரத்தில் அவள் வீட்டுக்குச் சென்றார். அவளும் அவருக்கு வயிறு நிறைய உணவை படைத்துப் போட்டாள். வயிறு நிறைய உணவு அருந்தியவர் உணவு அருந்தி விட்டு கிளம்பும் முன் அவர் அவளிடம் கேட்டார் ‘மங்கையே , உன்னைப் பார்த்தால் உனக்கு மனதுக்குள் எதோ ஒரு ஏக்கம் உள்ளது தெரிகிறது . ஆகவே உன் விருப்பம் என்ன என்பதை என்னிடம் கூறினால், நானும் நான் பூஜிக்கும் போது உன் சார்பில் சிவபெருமானை வணங்கி துதிப்பேன்’ எனக் கூற அவளும் தனது மனதில் இருந்த தன் ஆசையை அவரிடம் கூறத் துவங்கினாள்.
தன் வீட்டிற்கு வந்து உள்ளது சிவபெருமானே என்பதை அறியாத பொன்னையாள் அவரிடம் மனம் உருகிக் கூறினாள் ‘சித்தர் பெருமானே உங்களிடம் நான் எதை, என்ன என்று கூற. எனக்கு மனதில் தீராத ஆசை ஒன்று உள்ளது. நான் பூஜிக்கும் சிவபெருமானுக்கு தங்கத்திலான சிலையை செய்து அவரை அழகு பார்க்க வேண்டும் என்று மனது நினைக்கின்றது. ஆனால் மனதில் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ள வசதி வேண்டும் அல்லவா. நானோ நடன மாது. நான் என் சம்பாத்தியத்தைக் கொண்டு அதை எப்படி நிறைவேற்ற முடியும் ? ஆகவே நடக்க முடியாத அந்த காரியத்தை மனத்தால் மட்டும் எண்ணி மகிழ்ந்து கொண்டு வேறு எந்தப் பிறவியிலாவது அதை செய்யும் பாக்கியம் பெற்றவளாக இருப்பேன் என்ற மனக் கனவுடன் வாழ்ந்து வருகிறேன். ஆகவே குறைந்தபட்ஷம் சிவன் அடியவர்களான உங்களைப் போன்றவர்களுக்காவது இந்த ஜென்மத்தில் சேவை செய்யலாம் என்பதை என் கடமையாக செய்து வருகிறேன். ஆகவே பெரியவரே நீங்கள் சிவபெருமானிடம் எனக்காக வேண்டினாலும் அது எங்கே நடக்கும்? உங்களுக்கு சேவை செய்வதையே பெரிய பாக்கியமாகக் கருதி என் கனவை முடித்துக் கொள்கிறேன். என் மனம் மாறாமல் நான் இப்படியே வாழ்ந்து கொண்டு இருக்க நீங்களும் எனக்காக பிரார்த்தனை செய்வதோடு மட்டும் இல்லாமல், இந்த அபலைக்கு ஆசிகளையும் வழங்கி விட்டுப் போனால் அதுவே போதும்’ எனக் கண்களில் நீர் மல்க கூறினாள்.
அதைக் கேட்ட சித்தர் உருவில் இருந்த சிவபெருமானோ அவளைப் பார்த்துக் கூறினார் ‘ பெண்ணே, நீ வருத்தப்பட வேண்டியது இதில் எதுவுமே இல்லை. நீ செய்யும் சேவை அத்தனை எளிமையானது என்று நினைத்து விட்டாயா? இதைக் கேள் பெண்ணே, மனதில் மனத் தூய்மை மற்றும் மன உறுதி இல்லாமல் ஆயிரம் பசுக்களை கங்கைக் கரையிலோ அல்லது காவிரி தீர்த்ததிலோ கொடுத்தாலும் கூட நீ செய்யும் இந்த காரியத்துக்கு அது ஈடாகாது. கொடுப்பவனும் சரி அதைப் பெறுபவரும் சரி, இருவருமே மனத் தூய்மையோடும், மன நிறைவோடும் கொடுத்தாலும் பெற்றாலும் மட்டுமே நல்லது நடக்கும். புண்ணியம் கிட்டும். அப்படி மன பூர்வமாக தானம் செய்பவர் யாராக இருந்தாலும், அதுவும் முக்கியமாக சிவனடியார்களுக்கு தானம் செய்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் வேண்டுவது நிச்சயம் நடக்கும் என்பதே சத்தியமான உண்மை.
ஒருமுறை தன்னிடம் வந்து சந்தேகம் கேட்ட கருடனுக்கு திருமால் என்ன கூறினார் தெரியுமா? ‘கருடா, கிரேதா யுகத்தில் மகா தவத்தை செய்வதே மனிதப் பிறவியில் பிறந்து உள்ளவர்கள் செய்யும் மிகச் சிறந்த காரியமாகும். திரேதா யுகத்திலோ அந்த மனிதப் பிறவிகள் தியானம் செய்வது அதி உத்தமமானது. அது போலவே துவாபர யுகத்தில் யாகங்களை செய்வதும் மிகச் சிறந்தது. இவற்றைப் போலவேதான் கலி யுகத்திலே யார் ஒருவர் மனத் தூய்மையோடும், மன நிறைவோடும் அன்ன தானங்களை செய்து கொண்டு தெய்வ சேவையில் ஈடுபட்டு வருவாரோ அதை விட உத்தமமான புண்ணியக் காரியம் உலகில் வேறு எதுவுமே இருக்காது’ என்றார். அதை நினைத்துப் பார். நீ அனாவசியமாக உன் சேவையை குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதே. நீ செய்யும் இந்த புண்ணியக் காரியம் அடுத்த எட்டு யுகத்திலும் உன்னை தொடர்ந்து காப்பாற்றும் ”.
இப்படியாகக் கூறியப் பின் அந்த சித்தர் அவள் வீட்டு பின் புறம் சென்று ஒரு இடத்தில் ஒரு யந்திரக் கோலமிட்டார். அதை போட்டப் பின் அவளிடம் கூறினார் ‘மங்கையே, இந்த யந்திரம் மீது ஒரு அடுப்பை எரிய வை. அதன் பின் உன் வீட்டில் உள்ள உலோகப் பாத்திரம் சிலவற்றைக் கொண்டு வந்து அவற்றை அந்த அடுப்பில் உள்ள தணலில் இரவு முழுவதும் வைத்து விடு. காலையில் அந்த உலோகத்தை எடுத்துப் போய் உருக்கி சிவபெருமானின் சிலையை செய்து வைத்தால் அதையே அவர் பொன்னாலான சிலையாக பாவிப்பார். அதை மனதார ஏற்றுக் கொண்டு, வேறு எந்தப் பிறவியிலாவது நீ விரும்பியதை அடைய உனக்கு கருணைப் புரிவார்’ என்று அர்த்த புஷ்டியோடு கூறினார். இப்படியாக அந்த சித்தர் கூறியதைக் கேட்ட பொன்னையாள் அவர் கூறியதை அப்படியே செய்வதாக உறுதி கூற, சித்தர் உருவில் இருந்த சிவபெருமானும் தாமதிக்காமல் மதுரைக்கு கிளம்பிச் செல்வதாகக் கூறி விட்டு வெளியில் சென்று விட்டார்.
அவர் கிளம்பிச் சென்றதும் பொன்னையாள் அன்று இரவு மறக்காமல் அந்த யந்திரத்தின் மீது ஒரு அடுப்பைப் மூட்டி வைத்து தன் வீட்டில் இருந்த உலோகப் பாத்திரங்களை எடுத்து அதில் இரவு முழுவதும் போட்டு வைத்தாள் .
மறுநாள் அவற்றை எடுத்து உருக்கி தான் வைத்து இருந்த சிவபெருமானின் உருவைக் கொண்ட வார்ப்பில் அதை ஊற்றி வைத்தாள். அந்த உலோகம் ஆறிய பின் அந்த வார்ப்பை திறந்து பார்த்தவள் திக்கிட்டு நின்றாள். வாய் பேச முடியாமல் திக்கெட்டது. ஏன்?…..ஏன் தெரியுமா…அந்த சிலை தங்கத்திலான சிலையாக மாறி இருந்தது. அது மட்டும் அல்ல அதன் அழகும் கண்களை விட்டு அகல மறுக்க அந்த சிலையை பல முறை பல விதத்திலும் சோதனை செய்து பார்த்தவள், அந்த சிலை முழுவதுமே தங்கத்தினாலானது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டப் பின் ஆலயத்துக்குள் ஓடிச் சென்று மனமுருகி இறைவன் முன் நின்று கொண்டு கதறி அழுதாள் .
‘ஐயனே சித்தர் உருவில் வந்தது நீதானோ? எனக்குப் புரியவில்லை. அது இல்லை என்றால் சித்தர் பெருமானே நீர் வரைந்த யந்திரம் மந்திர சக்தி வாய்ந்ததோ? அதுதான் அலுமினியப் பாத்திரங்களை தங்கமாக மாற்றி விட்டதோ? என்ன ஆனாலும் சரி, நான் செய்ய விரும்பியதை இந்த ஜென்மத்திலேயே செய்து விட்டேன். இனி எனக்கு இந்த ஜென்மத்தில் வேறு எதுவுமே தேவை இல்லை. இனிமேல் உங்கள் பாதங்களை நான் சரணடைய நீங்கள் அருள் புரிந்தால் அதுவே போதும். சிவபெருமானே, என்னே அழகாக நீ இந்த சிலையில் இருக்கிறாய்’ என்று ஆனந்தம் தாங்காமல் ஆலய சன்னதியில் கதறியவள் தன்னை மறந்து அந்த சிலையின் கன்னத்தை செல்லமாக கிள்ளி விட்டப் பின் அதில் முத்தமிட்டாள். அதன் விளைவாக அவள் முத்தமிட்ட அந்த முகத்திலான கன்னப் பகுதி சற்றே பள்ளமாக ஆயிற்று (இன்றும் அந்த சிலையின் முகத்தில் அந்தப் காயம் போன்ற பள்ளம் உள்ளது). இப்படியாக ஒரு நடன மாதுவினால் ஏற்பட்ட சிலையைக் கொண்டு திருப்பூவண ஆலயம் எழுந்தது’. இப்படியாக அந்த ஆலயத்தில் உள்ள சிலை தோன்றியக் கதையைக் கூறிய சூதகர் அந்த ஆலய மகிமைகளை பற்றி மேலும் எடுத்துரைக்கலானார் .
சூதக முனிவர் கூறத் துவங்கினார் ”கல்ப காலத்திலே யமுனை நதியின் கரைப் பகுதியில் வாழ்ந்து கொண்டு இருந்த தர்மயக்ஞன் எனும் பிராமணன் ஒருவன் இறந்து விட்ட தனது தந்தையின் அஸ்தியைக் கடலில் கரைக்க காசி மற்றும் ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணத்தை மேற்கொண்டார். காசியில் சென்று அஸ்தியைக் கரைத்து விட்டு மீதி அஸ்தியை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரத்துக்கு செல்லத் துவங்கினார். தென் பகுதிக்கு வந்து விட்டவர் வழியிலே திருப்பூவணத்தில் இரவு தங்கிவிட்டு மறுநாள் கிளம்பலாம் என இரவு அங்கே இளைப்பாறினார். அவருடன் துணைக்கு சென்று இருந்த குடும்பத்தினர் ஒருவருக்கு ஒருவருக்கு பசி எடுக்கவே அஸ்திக் கலசத்துடன் கொண்டு சென்றிருந்த பெட்டியைத் திறந்து அவர்கள் கொண்டு சென்று இருந்த உணவை வெளியில் எடுத்தார். அப்போது அஸ்தியை வைத்து இருந்த கலசத்திலே அஸ்தியை காணவில்லை என்பதை கவனித்து விட்டு அதை வெளியில் எடுத்துப் பார்க்க, அஸ்தி கலசத்தில் இருந்தது சாம்பல் அல்ல ஆனால் அதற்குப் பதில் அதில் இருந்தது பூக்கள் என்பதைக் கண்டு பயந்து போய் தர்மயக்யனை எழுப்பி அவரிடம் தாம் கண்ட அதிசயத்தைக் காட்டினார். மற்றவர்களையும் எழுப்பி அவர்கள் அதைக் காட்டினார்கள்.
என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஈஸ்வரன் விட்ட வழி, நாமோ கலசத்தில் எடுத்து வந்திருந்த அஸ்தியில் பாதியை காசியில் கரைத்து விட்டு மீதியை அல்லவா எடுத்து வந்தோம். இப்போது என்னடா என்றால், அஸ்தி இருந்த கலசத்திலே பூவல்லவா இருக்கிறது. ஒருவேளை நாம் தவறாக காசியிலேயே அஸ்தி முழுவதையும் கரைத்து விட்டோமோ அல்லது தவறுதலாக நாம் எடுத்துப் போய் இருந்த கலசத்தை அங்கேயே விட்டு விட்டு தவறாக பூக்களைக் கொண்ட வேறு ஒருவரது கலசத்தைக் கொண்டு வந்து விட்டோமோ என பயந்து போய் மீண்டும் காசிக்கே சென்று அஸ்தியைக் கரைத்த இடத்திலே அந்த கலசம் உள்ளதா எனப் பார்த்து விட்டுத் திரும்பலாம். ஒருவேளை தவறாக வேறு கலசத்தை எடுத்து வந்திருந்தால் அதை அங்கேயே விட்டு விட்டு வந்து விடலாம் என்று எண்ணினார்கள். ஆகவே திருப்பூவணத்தில் இருந்து காசிக்கே மீண்டும் கிளம்பிச் சென்றார்கள்.
காசியை அடைந்து தாம் அஸ்தியைக் கரைத்த இடத்துக்குப் போய் கலசத்தை தேடினார்கள்.
(சிறு விளக்கம் :
அந்த காலங்களில் எவரும் மற்றவர்கள் எடுத்துச் சென்ற கலசங்களை எத்தனை நாட்கள் ஆனாலும் தொட மாட்டார்கள். அவை வைத்த இடத்திலேயேதான் இருக்கும். நதியில் இருந்து நீர் கரைக்கு பொங்கி வந்து அவற்றை நதிக்குள் இழுத்துப் போனால் மட்டுமே அவை அங்கு கிடைக்காது. ஆகவே அவர்கள் தவறுதலாக கலசத்தை அங்கு வைத்து விட்டு வந்து இருந்தால் அதை எடுத்து வந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டுதான் அங்கு திரும்பிச் சென்றார்கள் .மேலும் எத்தனை நாட்கள் ஆனாலும் சரி அஸ்தியை காசியிலும் ராமேஸ்வரத்திலும் கரைக்க சங்கல்பம் செய்து கொண்டு இருந்தால் அந்தந்த இடங்களுக்கு குடும்பத்தினரோடு சடங்கு யாத்திரையை மேற் கொள்வார்கள். அங்காங்கே தங்கிக் கொண்டு கிடைத்த வண்டிகளில் பயணம் செய்வார்கள். – சாந்திப்பிரியா ).
ஆனால் அவர்கள் காசி நதிக் கரையில் சடங்குகளை செய்த இடத்தில் கலசம் எதுவும் காணவில்லை. இதென்ன கூத்தாக உள்ளது என குழம்பியவர்கள், சரி எதோ தவறு நடந்து விட்டதினால் தவறாக பூக்கள் இருந்த அஸ்திக் கலசத்தை எடுத்து வந்து விட்டோம். ஆகவே அதை அங்கேயே கொட்டி விட்டு ராமேஸ்வரத்துக்கு சென்று மிச்ச சடங்குகளை செய்து முடித்து விட்டு திரும்பி வரலாம் என எண்ணியவர்கள் கலசத்தை திறந்து அந்தப் பூக்களை கடலில் கொட்டி விடலாம் என எண்ணியவாறு அதை திறக்க அனைவரும் திடுக்கிட்டார்கள். திருப்பூவணத்தில் எந்த அஸ்திக் கலசத்தில் பூக்கள் இருந்ததோ அதில் பூக்கள் இல்லை. மாறாக தர்மயக்ஞன் கொண்டு சென்றிருந்த அவர் தந்தையின் சாம்பலே இருந்தது. அனைவரும் குழம்பி நின்றார்கள். என்ன மாயமோ தெரியவில்லை, நாம்தான் ஏதோ யோசனையில் தவறிப் போய் ஆஸ்தியை பூ என நினைத்து விட்டோமோ என பயந்தார்கள். அனைவரும் ஒன்று கூடி மேற்கொண்டு என்ன செய்யலாம் என ஆலோசனை செய்தப் பின் மீண்டும் அந்த அஸ்தியை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரத்துக்குக் கிளம்பிச் செல்ல முடிவு செய்தார்கள்.
வழியில் மீண்டும் திருப்பூவணத்தில் வந்து அங்கேயே இரவு தங்கி விட்டு மறுநாள் கிளம்பலாம் எனத் தங்கினார்கள். மறுநாள் காலை எழுந்து கிளம்பும் முன் அஸ்திக் கலசத்தை திறந்து பார்த்தவர்கள் திடுக்கிட்டார்கள். அதில் சாம்பல் இல்லை, மாறாக மீண்டும் அதில் பூக்கள் மட்டுமே இருந்தன. மீண்டும் மீண்டும் குழப்பம். என்ன செய்வது எனப் புரியாமல் ஆலோசனை செய்தார்கள். நடப்பது நடக்கட்டும் அஸ்தி இருந்த கலசத்தில் காணப்படும் பூக்களை அஸ்தியாக பாவித்து ராமேஸ்வரக் கடலில் கரைத்து விடலாம் என மறுநாள் ராமேஸ்வரத்துக்கு கிளம்பிச் சென்று அஸ்தி கலசத்தை திறந்து பார்த்தபோது அதில் பூக்கள் இல்லாமல் அஸ்தி இருந்ததைக் கண்டு மிரண்டு போனார்கள். அவசரம் அவசரமாக அனைத்து காரியங்களையும் முடித்துக் கொண்டு விட்டப் பின் தமது சொந்த ஊருக்கே திரும்பும் வழியில் ஒரு சித்தரை சந்தித்தார்கள்.
அவர் வேறு யாரும் இல்லை. சித்தர் உருவிலே இருந்த சிவபெருமானே அவர். அவரிடம் மிரண்டு போய் இருந்த தர்மயக்ஞன் குழுவினர் தாம் அனுபவித்த வேதனைகளைக் கூறி அந்த மாயத்தின் காரணத்தை விளக்குமாறுக் வேண்டிக் கொண்டார்கள். அவரும் அவர்களிடம் கூறினார் ‘குழந்தைகளே, கவலை வேண்டாம். இந்த ஷேத்திரம் மிகப் புனிதமானது. அஸ்தியே இங்கு பூவாக மாறி விடும் புனிதத் தன்மைக் கொண்டது. உனது தந்தை மிகப் பெரிய புண்ணியவான். ஆகவேதான் அவருடைய அஸ்தியும் இந்த தலத்தில் வந்ததும் பூவாக மாறி புனிதம் அடைந்தது. அவர் மோட்ஷம் அடைந்து விட்டதைக் காட்டவே உங்களுக்கு இந்த மாயம் காட்டப்பட்டு உள்ளது. இதில் இருந்து உங்களுக்கு ஒன்று புரிய வேண்டும். இந்த தலம் காசியை விட பல மடங்கு புண்ணியம் பெற்றத் தலமாகும். அதற்குக் காரணம் இங்கு சிவபெருமானே தங்கி உள்ளார். அவர் உள்ள இடத்திலே மயான சாம்பலே அவருக்கு அபிஷேகப் பூக்கள் ஆகி விடுகின்றன. ஏன் எனில் அவர் மயானப் பிரியர் அல்லவா? ஆகவேதான் காசி நகரத்தை விட பல மடங்கு புண்ணியம் தரும் இடமாக இத்தலம் போற்றப்படுகிறது. காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள வைகையில் அஸ்தியை கரைத்து மோட்ச தீபம் போட்டால் அவர்களது பித்ருக்களின் ஆத்மாவும் மோட்ஷம் அடையட்டும். அவர் குடும்பத்தினர் மேன்மை அடைவார்கள். கஷ்டங்கள் விலகும்’ என்று கூற அவர் கால்களில் விழுந்து அனைவரும் வணங்கி எழுந்தார்கள். என்ன அதிசயம்? அங்கு சித்தர் இல்லை. மாயமாக மறைந்திருந்தார்”.
இதைக் கூறிய சூதர் அந்த தீர்த்தத்தின் அடுத்த மகிமையைக் கூறத் துவங்கினார்.
‘நவக்கிரகங்களுக்கு தலைவர் சூரியன். அவரே அனைத்து நவக்கிரங்களையும் தன்னிடம் கட்டுப்படுத்தி வைத்து இருந்தார். அப்போது ஒருமுறை பிரபஞ்சத்தில் ஏற்பட்ட குழப்பங்களினால் நவக்கிரகங்கள் சூரியனின் ஆணையை சரிவர நிறைவேற்ற முடியாமல் திணறினார்கள். அவருக்கு தமது முழு ஒத்துழைப்பையும் கொடுக்கவில்லை. அதனால் நவக்கிரகங்கள் மீது சூரியன் கோபம் அடைந்தாலும் அவர்களை ஒரு அளவிற்கு மேல் கட்டுப்படுத்த இயலாது, அவர்கள் உதவி இல்லாவிடில் மனிதர்களைக் கட்டுப்படுத்த இயலாமல் போய் விடும் என கவலை கொண்டு அதற்கு என்ன நிவாரணம் செய்யலாம் என யோசனை செய்யலானார்.
அந்த நிலையில் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சிவ லிங்கங்களுமே திருப்பூவணத்தில் எழுந்தருளுகிறது என்பதை நாரதர் மூலம் அறிந்து கொண்டார். மேலும் அங்குதான் பார்வதி தேவியும் சிவபெருமானை பாரிஜாத மலர்களினால் அர்ச்சனை செய்து சாப விமோசனம் பெற்றதினால் அது விஷேசமான தலமாக உள்ளது என்பதையும் அறிந்து கொண்டார். ஆகவே அங்கு சென்று சிவபெருமானை பூஜை செய்து தமக்கு ஏற்பட்டு உள்ள இக்கட்டான சூழ்நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தார்.
(சிறு விளக்கம் :
இதென்ன புதிய செய்தியாக உள்ளது. பிரபஞ்சத்தில் உள்ள சிவலிங்கங்கள் அனைத்தும் திருப்பூவணத்தில் எழுந்தருளுகிறது என்றால் என்ன அர்த்தம்? அத்தனை சிவபெருமான் உலகில் உள்ளாரா என ஒருவர் நினைக்கலாம். அந்த குழப்பம் தேவை இல்லை. பல முறை என் முந்தைய கட்டுரைகளில் நான் இது பற்றி விளக்கம் அளித்துள்ளேன். பரப்பிரும்மனால் படைக்கப்பட்ட மும் மூர்த்திகளினால் ஒரே நேரத்தில் பல்வேறு மாய அவதாரங்களை எடுக்க முடியும். வெவ்வேறு அவதார தோற்றத்தை அந்த மாய உருவங்கள் வெளிப்படுத்தினாலும், அனைத்து அவதாரங்களும் அவர்களின் பிம்பங்களே. சில நேரங்களில் அவர்கள் ஒரே நேரத்தில் பல அவதாரங்களை போல இடங்களிலும் எடுப்பார்கள். அவற்றில் உண்மை அவதாரத்தை விட்டு மற்ற அனைத்துமே துணை அவதாரங்களாக இருப்பார்கள். அந்த துணை அவதாரங்களுக்கு அதிக காலம் ஒதுக்கப்படுவது இல்லை, அப்படியே மறைந்தும் விடுவார்கள். அப்படி அவற்றை மறைய வைக்கும் முன் அந்தந்த கடவுள் தனது அனைத்து மாய அவதாரங்களை ஒவ்வொரு இடங்களிலும் சென்று சந்திப்பார்கள். அங்கு சென்று , யார் யாரை வைக்கலாமோ அவர்களை வைத்து விட்டு மற்ற மாய பிம்பங்களை மறைத்து விடுவார்கள்.
இதே போலத்தான் பல இடங்களிலும் உள்ள சக்தி வாய்ந்த சிவபெருமானின் மாய உருவங்களும் ஒரு கட்டத்தில் தம்மை அனுப்பிய சிவபெருமான் எங்கு அழைக்கிறாரோ அங்கு சென்று ஒன்றாகக் கூடி அவர் எடுக்கும் முடிவிற்காக காத்திருப்பார்கள். மற்ற கடவுட்களின் மாய பிம்பங்களுக்கும் துணை அவதாரங்களுக்கும் சிவலிங்கங்களுக்கு உள்ள வித்தியாசம் என்ன என்றால் மேலே குறிப்பிட்டது போல மற்ற கடவுட்கள் தமது மாய பிம்பங்களை ஒரே இடத்தில் அழைப்பது இல்லை. சிவலிங்கங்கள் மற்றும் சாலிகிராமங்கள் மட்டுமே சிவனார் அல்லது விஷ்ணு பெருமான் அழைக்கும் இடத்துக்கு ஒரே நேரத்தில் சென்று அவர்கள் கூறும்வரை அங்கிருந்தபடி தவம் செய்து கொண்டு இருக்கும். அதனால்தான் எங்கெல்லாம் அதிக அளவு சிவலிங்கங்கள் மற்றும் சாலிகிராமங்கள் உள்ளனவோ அவை எல்லாமே சக்தி வாய்ந்த பூமிகளாக உள்ளன. சிவபெருமானைக் குறிக்கும் சிவலிங்கம் போல, விஷ்ணுவை குறிக்கும் சாலிகிராமங்கள் போல வேறெந்த கடவுட்களுக்கும் தனிப்பட்ட அடையாள சின்னங்கள் எதுவுமே இல்லை என்பது ஒரு விசேஷம். – சாந்திப்பிரியா).
இப்படியாக சிவபெருமானின் அனைத்து சிவ லிங்கங்களும் (மாய உருவங்கள்) திருப்பூவணத்தில் வந்து கூடுவது உண்டு. அங்கு வந்து அவை சிவபெருமானை துதித்து தியானம் செய்யும்போது அந்த மண்ணின் மகிமை மேலும் அதிகமாகிறது. அப்படிப்பட்ட இடம் மிக சக்தி வாய்ந்த இடமாக இருக்கும். அங்கு சென்று வேண்டியது கிடைக்கும். ஆகவேதான் சித்தரை மாத சித்திரை நட்ஷத்திரத்தில் சூரியன் திருப்பூவணம் சென்று அங்கிருந்த நதிக் கரையில் மணலினால் ஆன சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு உரிய பூஜை செய்து ஆராதித்தார். அங்கு சென்ற சூரியனார் தன் கையினாலேயே ஒரு குளத்தை வெட்டி அந்த நீரிலே தாமரை மலரையும் தோற்றுவித்து சிவாய நமஹா என்ற ஆறெழுத்து மந்திரத்தை ஓதியவண்ணம் வழிபட்டார். அதனால் மகிழ்ச்சி அடைந்து அவர் முன் சிவபெருமான் தனது மனைவி உமாவுடன் சேர்ந்து காட்சி தந்து அவர் வேண்டிய வரத்தை அருளினார். அதனால் மீண்டும் சூரியன் முழு அதிகாரத்தைப் பெற்றிட அனைத்து நவக்கிரகங்களின் ஒத்துழைப்பும் சூரியனுக்கு மீண்டும் கிடைத்தது. அது மட்டும் அல்ல அன்று முதல் நவக்கிரகங்களை அடக்கும் வகையில் சூரியனாரின் சக்தியும் அதிகரிக்க நவக்கிரகங்களின் கர்வ பங்கமும் குறைந்தது. சூரியனாரும் மீண்டும் சூரிய மண்டலத்தின் முழு அதிகாரியானார். சூரியன் அமைத்த தீர்த்தத்திற்கு மணிக் கங்கை என்ற பெயர் அடைந்தது. அதில் குளித்து விட்டு சிவபெருமானின் நாமத்தை பலமுறை உச்சரித்து அவரை வணங்கினால் சிவப் பிராப்தி பெறுவார்கள். அந்த தீர்த்தத்தின் மகிமை என்ன தெரியுமா? பெரும் முனிவரான அகத்திய முனிவரும் கூட மணிகன்னிகை தீர்த்தத்தில் மூழ்கி சிவபெருமானின் நாமத்தை உச்சரித்து திருப்பூவணநாதரை வணங்கியதினால்தான் சமுத்திர தண்ணீர் முழுவதையும் குடிக்கும் வல்லமையைப் பெற்றார். அதன் மகிமை குறைவானதா? மேலும் அதன் மகிமையையும் கேளுங்கள்’ என்று சூதகர் கூறி விட்டு கதையை மீண்டும் தொடரலானார்.
சூதகர் கூறி விட்டு கதையை தொடரலானார். ‘திருமால் அமிர்த கலசத்தை எடுத்துக் கொண்டு சென்றபோது அதில் இருந்து மூன்று இடங்களில் அமிர்தம் விழுந்தது. அதில் ஒன்றே திருப்பூவணம் ஆகும். விஷ்ணுவின் கலசத்தில் இருந்து விழுந்த அமிர்தம் மணி மணியாக இந்த தீர்த்தத்தில் விழுந்ததினால்தான் இதன் பெயர் மணி கன்னிகையென்று ஆயிற்று. அமிர்தம் விழுந்ததினால்தான் இந்த தீர்த்தத்தில் ஆயிரம் கோடி தேவர்களும் முனிவர்களும் வசிக்கிறார்கள் என்பது ஐதீகம். மணி கங்கையின் புனிதத் தன்மை வந்ததின் காரணம் இங்குதான் பாரிஜாத பூக்களை தூவி சிவனை வழிபட்டு பார்வதி சாப விமோசனம் பெற்றாள்.
{ சிறு விளக்கம் :
இந்த தீர்த்தம் தற்போது காணப்படவில்லை. அது எதோ சில காரணங்களினால் மூடப்பட்டு விட்டதோ என்று கருத வேண்டி உள்ளது. ஆனால் அம்மன் ஆலயத்தின் அக்னி திசையிலே ஒரு சிறு கிணறு உள்ளது. அதுவே மணி கன்னிகை தீர்த்தத்தின் ஒரு பகுதி என்று கருதப்படுவதினால் அதில் இருந்தே தண்ணீரை எடுத்து தலையில் ப்ரோக்ஷணம் ( சிறிது தண்ணீரை தலையில் தெளித்துக் கொள்வது) செய்து கொள்கிறார்கள்- சாந்திப்ரியா}
இந்த தலத்திலே சிவலிங்கங்கள் வந்து கூடி இந்த தீர்த்தத்திலே குளித்தமையால் அது மேலும் புனிதம் அடைந்தது. ஆகவேதான் தெரிந்தோ தெரியாமலோ இந்த தீர்த்தத்தில் ஒருநாள் குளித்தாலும் நம் பாபங்கள் அகலும் என்பார்கள். குளிக்கும்போது அங்கு ஆறெழுத்து சிவ மந்திரத்தை உச்சரித்தால் மேலும் புண்ணியம் கிடக்கும் என்பார்கள். ஆயிரம் பசுக்களை கங்கைக் கரையிலோ அல்லது காவிரி தீர்த்ததிலோ தானம் செய்வதினால் கிடைக்கும் பலனை விட அதிக பலன் இந்த தீர்த்தத்திலே குளிப்பவர்கள் பெறுவார்கள் என்பதின் காரணம் சிவலிங்கங்கள் அனைத்தும்- அதாவது சிவபெருமானின் மாய அவதாரங்கள் இங்கு வந்து குளிப்பதினால் இங்குள்ள தண்ணீர் பல ஆயிரம் கோடி புனிதம் அடைகிறது; சுய அறிவுடனோ அல்லது அறிவின்றியோ ஒரு கணப் பொழுதாவது திருப்பூவணத்தில் வசித்தால் சிவ உருவம் பெறுவர்; ஒரு மரக் கிளையையோ, பழத்தையோ இங்குள்ள சிவபெருமானுக்கு அபிஷேகப் பூஜையில் எவர் ஒருவர் கொடுப்பார்களோ அவர்கள் முத்தி அடைவர். இந்த தீர்த்தத்தின் இன்னொரு முக்கியமான அம்சம் என்ன என்றால் இறந்தவர்களின் சாம்பலை காசியில் சென்று கரைப்பதை விட அதிக புண்ணியம் இங்குள்ள தீர்த்தத்தில் அவற்றைக் கரைப்பதே. இதற்கு ஒரு கதை உள்ளது’.
‘முன் ஒரு காலத்தில் ஒரு அந்தணன் பித்ரு காரியங்களை செய்து விட்டு திரும்புகையில் ஒரு மயானத்தின் அருகில் இருந்த சாலை மூலம் தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தபோது திடீர் என கண்கள் இருண்டு போக அங்கிருந்த பாறை ஒன்றில் மோதிக் கொண்டு அடிபட்டு ரத்தம் வழிந்து மூர்ச்சையாகக் கிடந்தான். அந்த இடத்தில் கழுகுகள் வட்டம் அடித்துக் கொண்டு இருந்தன. யாரோ ஒருவன் உடல் கிடக்கிறதே என எண்ணிய அவை கூட்டமாக வந்து அவனைக் கொத்தித் தின்னத் துவங்கின. மூர்ச்சையாகக் கிடந்த அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் மரணம் அடைந்தான். அவன் உடலில் இருந்த ஒரு சதைப் பகுதியை கவ்விக் கொண்டு பறந்து சென்ற ஒரு கழுகின் வாயில் இருந்து அந்த சதை கீழே ஓடிக் கொண்டு இருந்த இந்த தீர்த்தத்தில் விழ அவன் ஆத்மா மேலுலகம் செல்ல, அவன் கணக்கை ஆராய்ந்த சித்ரகுப்தர் அவன் செய்திருந்த அனைத்து பாபமும் விலகி இருப்பதைக் கண்டார். அதில் அவன் ஆத்மா சிவலோகம் செல்ல வேண்டும் என முடிவாக எழுதப்பட்டு இருந்தது. ஆகவே அவனது ஆத்மா சிவ லோகத்துக்கு சென்றது. அதைக் குறித்து அந்த பக்கமாக வந்து கொண்டு இருந்த நாரத முனிவரிடம் விளக்கம் கேட்ட யம தர்மனுக்கே அவர் கூறிய செய்தியினால்தான் அந்த தீர்த்தத்தின் மகிமை புரிந்தது’ என்றார்.
அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு முனிவருக்கு இன்னும் ஒரு சந்தேகம் எழுந்தது. அவர் சூதகரிடம் கேட்டார் ‘மா முனிவரே, எனக்கொரு சின்ன சந்தேகம். நீங்கள் பல கதைகளை எங்களுக்கு கூறி வந்துள்ளீர்கள் அதில் பல ஆலயங்களுக்கு வந்து பிரும்மாவும், விஷ்ணுவும், சூரியனும், யமனும் மேலும் பல கடவுட்களும் அவரவர்கள் பெற்று இருந்த ஒரு குறிப்பிட்ட சாபத்தை நீக்கிக் கொண்டு சாப விமோசனம் பெற்று உள்ளார்கள் என்று கூறி உள்ளீர்கள். அது போலவேதான் இந்த தலத்திலும் அவர்கள் வந்து அதே சில குறிப்பிட்ட சாபங்களுக்காக சாப விமோசனம் பெற்று உள்ளதாக கூறி உள்ளீர்கள். சாப விமோசனம் பெற பல ஆலயங்களுக்கும் அவர்கள் சென்று பிரார்த்தனை செய்து ஒரு குறிப்பிட்ட கடவுள் மூலம் சாப விமோசனம் பெற்றுள்ளதாக கூறி உள்ளதினால் உண்மையில் அவர்கள் எந்த தலத்தில் குறிப்பிட்ட சாப விமோசனம் பெற்றார்கள்? ஒரு தலத்திலே சென்று பூஜித்து ஆராதித்து அங்கு சாப விமோசனம் பெற்றப் பின் மற்ற தலங்களுக்கும் சென்று அதே சாபத்திற்காக ஏன் வேண்டிக் கொண்டு சாப விமோசனம் தேட வேண்டும்? மற்ற தலங்களில் அதே சாபத்திற்காக சாப விமோசனம் அடைந்ததாக கூறுவது ஏற்கும்படியாக இல்லையே. இப்படி இருக்கையில் எந்த தலம் உண்மையிலேயே சாப விமோசனம் தரும் இடம் என்பதை விளக்குவீர்களா?” என்று கேட்டார். அதற்கு சூதகர் விளக்கம் அளிக்கலானார்.
சூதகர் கூறலானார் ” முனிவர்களே இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றால் ஒன்றை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கடவுளும் நம்மைப் போன்ற சாதாரண உருவத்தைக் கொண்டவர்கள் அல்ல. அவர்களுடைய உருவம் தற்காலத்தில் உள்ளது போல ஆறு அடி, ஏழு அடி என்பதல்ல. அவர்கள் சாதாரண மனிதர்களும் அல்ல. ஒவ்வொரு தேவ மனிதரும் அசாதரணமான உருவங்களைக் கொண்டு இருந்து உள்ளார்கள். குறிப்பாக மும்மூர்த்திகள் பிரும்மாண்டமான உருவைக் கொண்டவர்கள். அவர்களுடைய உருவம் ஆகாயம் முதல் பூமி வரை படர்ந்து இருக்கும். அவர்களால் எந்த அளவிலும் தம்முடைய உருவை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். பல கடவுட்கள் நான்கு கைகள், எட்டுக் கைகள் மற்றும் பன்னிரண்டு கைகளைக் கொண்டவர்கள். ராவணனே பத்து தலைகளைக் கொண்டவன் என்றெல்லாம் புராணங்கள் வர்ணிக்கும்போது அப்படிப்பட்ட உருவங்களை சாதாரண உருவம் கொண்ட மனிதர்களால் பெற்று இருக்க முடியுமா? பிரும்மாவுக்கும் விஷ்ணுவிற்கும் காட்சி தந்த சிவபெருமானின் தலை தேவலோகத்தில் இருக்க அவர் கால்களோ பாதாளத்தில் இருந்ததாக புராணக் கதை இல்லையா? கிருஷ்ணர் காட்டிய விஸ்வரூப தரிசனத்தில் அனைத்து கோள்களும், ஆயிரம் கோடி தேவர்களும் இருந்தார்கள் எனும்போது அது எந்த அளவு பரந்து விரிந்து இருக்கும் என்பதை எண்ணினால் நீங்களே அந்த உருவத்தின் அளவை எண்ணிப் பார்க்காலாம். அப்படி என்றால் தேவ மனிதர்களான அவர்கள் சாதாரண உருவங்களைப் படைத்தவர்களாகவா இருந்திருப்பார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இதை விளக்க சில கடவுட்கள் சிவபெருமானை வேண்டி சாப விமோசனம் பெற்ற நிலையை ஒரு உதாரணமாகக் கூறுகிறேன். பலருக்கும் தரிசனம் கொடுத்த மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் முன்னர் பரத பூமி எனக் கூறப்பட்ட இந்த இந்த புண்ணிய பூமிக்கு வந்தபோது அவருடைய உருவம் ஒரு கோடியில் இருந்து மறு கோடிவரை பரவி இருந்தது. அவரிடம் ஒரு குறிப்பிட்ட சாபத்தை நீக்கிக் கொண்டு சாப விமோசனம் பெற வந்த விஷ்ணு, திருமால், சூரியன், சந்திரன், சனீஸ்வரர் போன்றவர்கள் அவரை சுற்றி வலம் வந்து கொண்டு இருந்தவாறு பல இடங்களிலும் அமர்ந்து கொண்டு பூஜைகளை செய்தபோது அந்த இடங்கள் சிவபெருமான் அருள் புரிந்த புண்ணிய தலங்கலாயின. அவற்றில் பிற்காலத்தில் ஆலயங்கள் எழுந்தபோது அந்த ஆலயங்கள் அனைத்துமே குறிப்பிட்ட சாப விமோசனம் கொடுக்கும் ஆலயங்களாக இருந்ததாக வரலாறு அமைந்தது. அதனால்தான் உங்களுக்கு இந்த சந்தேகம் வந்துள்ளது. ஆகவே ஒரு குறிப்பிட்ட சாபத்துக்கு சாப விமோசனம் பெற அந்த ஆலயங்களில் எதில் ஒன்றில் சென்றாலும் சாப விமோசனம் கிடைக்கும் என்பதே உண்மை. அதற்குக் காரணம் ஒவ்வொரு ஆலயத்துக்கும் தனி மகிமை என்பது இருக்கும் என்பது உண்மை என்றாலும், அதற்கும் காரணம் அந்த பூமி பெற்று இருந்த தன்மை.
அதாவது அந்த ஆலயங்கள் அனைத்தும் உள்ள இடங்களை தழுவியவாறு பரவி நின்றிருந்த சிவனை சுற்றி வலம் வந்த கடவுட்கள் ஒவ்வொரு இடத்திலும் அமர்ந்து கொண்டு பிரார்த்தனைகளை செய்தபோது அந்தந்த இடங்களில் அவர்கள் ஓதிய பூஜை மந்திரங்கள், ஹோமத்தில் விழுந்த மந்திரங்கள் போன்றவை அந்தந்த இடங்களில் சில சக்திகளை பெருக்கிற்று. ஒவ்வொரு மந்திரத்துக்கும் தனி சக்தி உண்டல்லவா. ஒவ்வொரு சாப விமோசன பிரார்த்தனை செய்தபோதும் அதை செய்தவர்கள் அஷ்ட திக்குகள் எனப்படும் எட்டு திக்குக்களிலும் சென்று அமர்ந்து பூஜைகளை செய்து வலம் வந்தனர். அப்படி வலம் வந்தபோது அவர்கள் செய்த சக்தி வாய்ந்த பூஜைகளும், ஓதிய சக்தி மிக்க மந்திரங்களும் அந்த இடங்களின் சக்திகளை பெருக்கின. அதனால்தான் அந்த பூமிகளில் பிற்காலத்தில் எழுந்த ஆலயங்கள் சக்திகளில் வேறுபட்டு இருந்தது என்றாலும், அந்த அனைத்து ஆலயங்களுமே குறிப்பிட்ட சாப விமோசனம் கொடுத்த ஆலயங்களாக இருந்துள்ளன. ஆகவே அப்படி சாப விமோசனம் கொடுத்த ஆலயங்களில் எது உண்மையான ஆலயம், எது சிறந்த ஆலயம் என்ற சந்தேகத்தை எழுப்புவதோ நினைப்பதோ தவறானது’ என்றார்.
(சிறு விளக்கம் :
சூதகர் கூறியதை சரியாக புரிந்து கொள்ள ஒரு உதாரண படத்துடன் சற்று விளக்க வேண்டி உள்ளது. இது ஒரு உதாரணமே. முன் காலத்தில் பாரதம் என்பது ஒரே பூமியாக அதாவது இலங்கைவரை ஆசியாவின் பல பகுதிகளை கொண்ட தரை பகுதியாகவே இருந்துள்ளது. ஒரே பூமியாக இருந்த அவை அனைத்தும் பிற் காலத்தில் கால கோளாறினால் பிளந்து தனித் தரை ஆயின. கடவுட்களின் உருவம் தற்கால மனிதர்களைப் போன்றதன்று. அவர்கள் ஆகாயத்துக்கும் பூமிக்கும் பரவி உள்ள பெரும் உருவைக் கொண்டவர்கள். ஆகவேதான் அவர்கள் அமர்ந்தாலோ அல்லது நின்று கொண்டு இருந்தாலோ அந்த உருவத்தின் அளவு தென் இந்தியாவின் கன்யாகுமரியில் இருந்து இமயமலை அளவுக்கும், பங்களா தேசத்தில் இருந்து பாகிஸ்தான் வரையிலுமான அளவில் பரவிய வகையில் சர்வசாதாரணமாக விஸ்வரூபமாக இருக்கும். இல்லை சிலருடைய உருவம் சற்றே சிறியதாகவும் இருந்திருக்கும். அப்படிப்பட்ட நிலையில் ஒரு குறிப்பிட்ட சாப விமோசனம் தர பூமிக்கு சிவபெருமான் வந்ததாக உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். அப்படி வந்த போது பெரும் உருவத்தைக் கொண்ட கடவுளான சிவபெருமானின் கால் கன்யாகுமரியில் பதிந்திருக்க ஒரு கை குஜராத் பகுதிவரை நீண்டு இருக்க மறு கையோ கல்கத்தா வரை நீண்டு இருக்கும். தலைப் பகுதியோ ஹிமாசலப் பிரதேசத்தை தொட்டபடி இருக்கும். அப்படி அவர் நின்று கொண்டு இருக்கையில் சாப விமோசனம் பெறுவதற்கு அவரை சுற்றி வலம் வந்தவர்கள் ஒருமுறையும் வலம் வந்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பெரும் தூரத்தைக் கடக்கும் அளவில் இருக்கும். அதாவது கன்யாகுமரியில் நின்றிருந்த அவர்கள் வலம் வரத் துவங்கியதும் கன்யாகுமரியில் இருந்து எடுத்து வைக்கும் அடுத்த காலடி கோவா, மகாராஷ்டிரா, குஜராத், அடுத்து உத்திரப்பிரதேசம், ஒரிஸ்ஸா என பல இடங்களிலும் ஒன்று ஒன்றாகப் பதியும். அங்கெல்லாம் அவர்கள் செய்த பூஜைகள் மற்றும் ஓதிய மந்திரங்கள் அந்தந்த பூமிக்கு சிறப்பு சக்தியை தந்தன. அப்படி வலம் வந்தவர்கள் அனைத்து இடங்களிலும் அதாவது எட்டு திக்குக்களிலேயே அமர்ந்தார்கள் என்பதல்ல இதன் பொருள். அவர்கள் சில இடங்களில் அமர்ந்து பூஜித்திருக்கலாம். சில இடங்களை தவிர்த்து இருக்கலாம். ஆகவே எட்டு திக்கிலும் அவர்கள் அமர்ந்து இருக்க வேண்டும் என்பதும் சரி அல்ல. ஒரு குறிப்பிட்ட சாப விமோசனம் பெற அவர்கள் வலம் வந்த எட்டு திக்குக்களில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் மட்டுமே அவர்கள் ஹோமம், பூஜை போன்றவற்றை செய்து இருப்பார்கள். பிற்காலத்தில் அங்கெல்லாம் எழுந்த இரண்டு அல்லது மூன்று ஆலய வரலாற்றிலும் அந்த ஆலயங்கள் சிவபெருமாணினால் சில கடவுட்களுக்கு ஒரு குறிப்பிட்ட சாப விமோசனம் கொடுத்த ஆலயங்களாக கூறப்பட்டன. அந்தக் கடவுட்கள் சாப விமோசனம் பெற்றது ஒரே ஒரு முறைதான் என்றாலும் சில திக்குக்களில் அவர்கள் அமர்ந்திருந்து பூஜித்த இடங்களே பின்னர் சாப விமோசனம் கொடுத்த ஆலயங்களாக மாறின.
இதற்கு இன்னொரு உதாரணம். ராமபிரான் தமது பிரும்மஹத்தி தோஷத்தை தொலைத்துக் கொள்ள ராமேஸ்வரம் சென்று சிவனை வழிபட்டதாகவும், அதே காரணத்துக்காக கூத்தனூரில் உள்ள திலதர்ப்பண பூமி எனும் ஆலயத்துக்கும் வந்து சிவனை ஆராதித்து அதே தோஷத்துக்கு சாப விமோசனம் பெற்றதாகவும் புராணக் கதைகள் உள்ளது.
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் சிவபெருமான் தரிசனம் கொடுத்தபோது அவர் உருவம் ராமேஸ்வரத்தில் இருந்து மாயவரத்துக்கு செல்லும் வழியான கூத்தனூர் வரை பரவி இருந்திருக்க அவரை சுற்றி வலம் வந்த ராமர், ராமேஸ்வரம் இருந்த இடத்திலும், திலதர்ப்பண பூமி இருந்த இடத்திலும் பூஜைகளை செய்துள்ளார். பிற்காலத்தில் அங்கு ஆலயங்கள் எழுந்தபோது அந்த இரண்டு இடங்களில் உள்ள ஆலயங்களில் ராமர் வந்து பூஜை செய்து சாப விமோசனம் பெற்றதாக புராணக் கதைகள் எழுந்துள்ளன. ஆனால் ராமபிரான் பிரும்மஹத்தி தோஷத்தை தொலைத்து சாப விமோசனம் பெற்றது ஒரே ஒரு முறைதான் என்றாலும் ஆனால் அப்போது ராமர் வலம் வந்த இடங்களில் இரண்டு இடங்களில் பூஜைகளை செய்திருக்க அங்கு ஆலயங்கள் தோன்றி உள்ளன. இதுவே மற்றவர்கள் சாப விமோசனம் பெற்றதாக கூறப்படும் அனைத்து ஆலயங்களின் நிலையும். கீழுள்ள மாதிரிப் பட அமைப்பு இந்த விளக்கத்தை மேலும் தெளிவாக்கும் –சாந்திப்பிரியா }

………………திருப்பூவண ஆலய புராண வரலாற்றுக் கதை தொடர்கின்றது