சாந்திப்பிரியா 
பாகம்-3

இமயமலையின் ஒரு பகுதியே கோணேஸ்வர பர்வதம் என்ற நம்பிககை காரணமாகக் கோணேஸ்வரத்திற்கு தட்சண கைலாயம் என்ற பெயர் உருவாகியது. திருமால் மச்சவதாரத்தில் தட்சணகைலாயத்தை அடைந்து தனது மீன் உருவத்தை விட்டு நீங்கி மகேஸ்வரனை வணங்கியதால் மச்சகேஸ்வரம் என்ற பெயரும் உருவாகியதாக தட்சணகைலாய புராணம் எனும் நூலில் குறிப்பு உள்ளது. விஷ்ணு பகவான் மீன் உருவம் எடுத்தக் கதைக்கான காரணத்தை பின்னர் கூறுகிறேன்.

தமிழ் மொழிப் புலவர்களான திருஞான சம்மந்தம், திருமூலர் மற்றும் அருணகிரிநாதர் போன்றவர்களால் பாடப்பட்ட தலம் திருக்கோணேஸ்வரம் என்பதில் இருந்து இதன் மேன்மை புரியும். கி.மு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை ராவணன் பூஜித்து வந்ததாக மட்டக்கிளப்பு மானியத்தில் குறிப்புக்கள் உள்ளன. அதற்கு ஆதாரமாக அனைவரும் குறிப்பிடுவது அங்குள்ள ராவணன் வெட்டு என்ற ஒரு பாறை இடுக்கு ஒன்றைத்தான் .

கோணேஸ்வர மலையில் ஒரு பெரிய பாறைப் பிளவு உள்ளது. அந்த பிளவிற்குக் காரணம் ஒரு விசேஷ லிங்கத்தை அவரது தாயாரின் பூஜைக்காக எடுத்து வருவதற்காக கைலாசத்துக்கே சென்று சிவபெருமானிடம் இருந்து இருமுறை சிவலிங்கத்தை பெற்றுக் கொண்டு  வந்த ராவணன் வரும் வழியில் ஏமார்ந்து போய் தான் எடுத்து வந்த லிங்கத்தை தவற விட்டார். ஆகவே மூன்றாம் முறையாக  திருக்கோணேஸ்வரர் சிவாலயத்தில் இருந்து சக்தி வாய்ந்த  சிவலிங்கத்தை  எடுத்து வரச் சென்ற ராவணன் பூமியில் இருந்த அதை அங்கிருந்து அதை எடுத்து வர முடியாமல் போனதினால்  அந்த இடத்தையே பெயர்த்துக் கொண்டு வந்ததாகவும் அதனால்தான் மலையில் அந்த பிளவு ஏற்பட்டதாகக் கூறுவார்கள். ராவணன் எடுத்துச் செல்ல முயன்ற சிவலிங்கத்தின் கதை என்ன?

ராவணன் பல அறிய வரங்களைப் பெற்று ஆட்சியில் இருந்தான். மிகப் பெரிய சிவ பக்தனாக இருந்தவன், நீதி தவறாமல் ஆட்சி செய்து வந்தவன் காலம் செல்லச் செல்ல அவனுக்கு கிடைத்திருந்த வரங்களினால், இனி நம்மை வெல்ல யாரும் இல்லை என்ற இறுமாப்பு கொண்டு அகங்காரம் பிடித்தவன் ஆயினான். தேவர்களையும் அவ்வபோது துன்புறுத்தி வந்தான். ஆனால் அவன் சிவபெருமானின் பூரண அருளைப் பெற்று இருந்ததினால் அவனை யாராலும் ஒன்றும் செய்ய முடியாமல் போனதினால் மனம் புழுகிக் கொண்டு இருந்தார்கள்.  சிவ பூஜையை ராவணன் மட்டும் செய்யவில்லை. ராவணனின் குடும்பமே சிவபக்தர்கள்.  அதிலும் அவனது தாயாரான கைகேசி சிவபெருமானின் பெரிய பக்தை. அவள் நாள் தவறாமல் சிவபூஜை செய்து வந்தவள்.

இந்த நிலையில் ஒரு நாள் ராவணன் அவனது  தாயார் கைகேசி  நெல்லைக் குத்தி அரிசியை எடுத்து அதை மாவாக்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தான். தாயாரிடம் சென்று அதற்கான காரணத்தைக் கேட்டான். அவள் கூறினாள் ‘ மகனே, நீ இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உலகையும் ஆண்டவாறு, உன்னை யாராலும்  வெற்றி கொள்ள முடியாதவாறு இருக்கவே நான் தினமும் ஆயிரம் மாவிலான லிங்கங்களை செய்து, அதை  கடற்கரைக்கு கொண்டு சென்று அங்கு அவற்றுக்கு பூஜை செய்து விட்டு   கடலில் கரைத்து விட்டு வருகிறேன். நான் பூஜித்தப் பின் கடலில் கரைக்கும் சிவ லிங்கங்கள் பல்லாயிரக்கணக்கான  சிவ கணங்களாக கடலில் வாழ்ந்திருந்து அரணைப் போல உனது ராஜ்யத்தைக் காத்து வரும்.   இந்த ஆயிரம் மாவு லிங்கங்களுக்கு இணையான  சில சிவலிங்கங்கள்  கைலாயத்தில் சிவபெருமானிடம்  அல்லவா உள்ளது.  அவற்றில் ஒன்று கிடைத்தாலும் நான் செய்யும் பூஜைக்கு இணையாக இருக்கும். ஆனால் அதை யார் கொண்டு வர முடியும் என்பதினால் இப்படி என்னால் முடிந்ததை  உனக்காக செய்கிறேன்’ என்று கூறினாள்.

அதைக் கேட்ட ராவணன் வருத்தம் அடைந்தான். தனக்காக தனது தாயார் செய்யும் பூஜைக்கு தன்னால் ஆன உதவியை செய்ய வேண்டும் என நினைத்தவன் தாயாரிடம் கூறினான் ‘ அம்மா, இத்தனை வாய்மை வாய்ந்த மகன் நான் இருக்க நீ ஏன் இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டு மாவிலான சிவலிங்கங்களை செய்து பூஜித்தது வருகிறாய்? நான் கைலாயத்துக்கு சென்று அந்த  சிவலிங்கத்தை  சிவபெருமானிடம் இருந்து வாங்கிக் கொண்டு வருகிறேன்’ என சூளுரைத்து விட்டு கைலாயத்துக்கு சென்றான்.

கைலாயத்துக்கு சென்றவன் அதன் வாயிலில் ஆயிரம்  ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான். அவன் தவத்தைக்  கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவன் முன் தோன்றி அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.  அவனும் தனது தாயாரின் ஆசையைக் கூற அதைக் கேட்ட  சிவபெருமானும் வேறு வழி இன்றி அவனுக்கு ஒரு சிவலிங்கத்தை கைலாயத்தில் இருந்து தந்தப் பின் அதை அவன் எடுத்துச் செல்லும் வழியில் பூமியில் எங்குமே வைக்கக்  கூடாது என்றும், ஆயிரம் மாவு லிங்கங்களை செய்து அவன் தாயார் பூஜித்ததை விட, பல்லாயிரக்கணக்கான  வருடங்கள், பல கோடி தேவர்களால் ஐந்து  வேளை பூஜை செய்து சக்தியூட்டப்பட்ட தன்னுடைய ஆத்ம  லிங்கங்களில் அதுவும் ஒன்று  என்றும், எந்த இடத்திலாவது  அவன் பூமியில் அதை வைத்து விட்டால் அதை திரும்ப எடுக்க முடியாது என்றும் அதன் பின் அதன் சக்தி அதனுள் அங்கேயே அடங்கி இருக்கும் என்று கூறி அனுப்பினார். அதை எடுத்துக் கொண்டு நாடு திரும்பத் துவங்கிய  ராவணனை நினைத்து தேவர்கள் அஞ்சினார்கள். அதை எடுத்துக் கொண்டு சென்று அதை பூஜித்தால் பிறகு ராவணனை யாருமே அடக்க முடியாதே என அஞ்சி நாரதரிடம் சென்று அதை தடுத்து நிறுத்த ஒரு உபாயத்தைக் கேட்டார்கள்.

அவரும் அந்த தேவர்களுடன் சென்று விநாயகரை வேண்டி துதிக்க அவரும் அவர்கள் முன்னால் பிரசன்னமாகி அவர்களுக்கு உதவுவதாகக் கூறினார். அதற்கேற்ப  அவர்  ஒரு வயதான பிராமண உருவில் சென்று ராவணனை வழியில் சந்தித்தார். சிவ லிங்கத்தை கையிலே வைத்துக் கொண்டு தன் நாட்டை நோக்கி  சரியான பாதையில் சென்று கொண்டிருந்த ராவணனின் கவனத்தை சற்றே கலைய வைத்தார்.  தன்னையே அறியாமல் புத்தி தடுமாறியவன் தான் சென்று கொண்டு இருந்த பாதையை மறந்து வேறு வழியில் செல்லத் துவங்கினான்.

சிவலிங்கத்தை தூக்கிக் கொண்டு  வழி தவறி  சென்று கொண்டு இருந்த ராவணனுக்கு வழியில்  ஒரே தாகம் எடுத்தது. ஆனாலும் வைராகியமாக சென்று கொண்டு இருந்தபோது  வழியில் ஒரு கமண்டலத்தில் தண்ணீருடன் சென்ற பிராமண உருவில் இருந்த விநாயகரை பார்த்தான்.  அவர் அருகில் சென்று  தான் வழி தவறி  வந்து விட்டதாகவும், தான் இலங்கைக்கு செல்ல வேண்டிய வழியைக் காட்டுமாறும்  வேண்டிக் கேட்டுக் கொண்டப் பின், தனக்கு தாகமாக  உள்ளதினால்  குடிக்க சிறிது தண்ணீர் தர முடியுமா என்று  கேட்டான். அதையே எதிர்பார்த்து காத்திருந்த  விநாயகர் அவனுக்கு ஒரு கமண்டலம் தண்ணீரைக் கொடுத்தார். தனது மடியில் லிங்கத்தை வைத்துக் கொண்டே நீரைக் குடித்தப் பின் அவரிடம்  பேசிக் கொண்டே செல்லத் துவங்க அவன் வயிற்றிலே சென்ற நீர் பெரும் ஆறு போல வயிற்றில் பெருக்கெடுக்கத்  துவங்க  அவனுக்கு சிறுநீர் உபாதை வந்து விட்டது. ஆகவே தன்னுடன் வந்து கொண்டிருந்த பிராமண உருவில் இருந்த விநாயகரிடம் அந்த சிவ லிங்கத்தை கீழே வைக்காமல் வைத்துக் கொண்டு இருக்குமாறு கூறி விட்டு சிறுநீர் கழிக்கச் சென்றான்.

அவன் வருவதற்குள் விநாயகர் அந்த சிவலிங்கத்தை கீழே வைத்து விட்டு மறைந்து விட்டார். அந்த இடம் பாட்னாவின் அருகில் உள்ள பைத்யநாத்  ஆலயம்  உள்ள இடம். அங்குதான் ராவணன் ஏமார்ந்து போய் விநாயகரிடம் தந்து அவர் கீழே வைத்த  ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான வைஜ்யநாத் எனும் லிங்கம் உள்ளது.   சிறுநீர் கழித்து விட்டு வந்தவன்  அந்த சிவ லிங்கத்தை எடுக்க முடியாமல் திணறினான். தான் எமார்ந்து விட்டதை நினைத்து வருந்தினான். எத்தனைக் கஷ்டப்பட்டு வந்து இப்படி ஏமார்ந்து விட்டோமே என எண்ணி வருந்தியவன், மீண்டும் கைலாயத்துக்கு சென்று இன்னொரு சிவலிங்கத்தைப் பெற்றுக் கொண்டு வர தவம் இருக்கலானான்.

………..தொடரும்