சாந்திப்பிரியா

பாகம்-10
இரண்யவர்மர்  சோழ மன்னனான கதை

தில்லையில் இருந்த மூவாயிரம் அந்தணர்களும் அந்தர்வேனிக்கு சென்றார்கள். இரண்யவர்மனும்  வியாக்கிரபாத முனிவரது இரண்டாவது மகனைப் போலவே  இருந்து கொண்டு அனைவருக்கும் தொண்டு செய்து கொண்டு இருந்தவண்ணம் அவர்களுடன் இருந்து வந்தார்.

இப்படி இருக்கையில் கெளட தேசத்தில் ஆட்சியில் இருந்த மனு மன்னன் மரணப் படுக்கையில் இருந்தார். ஆகவே தனது ராஜ்யத்தை மூத்தக் குமாரனான சிங்கவர்மனிடம்  ஒப்படைக்க விரும்பினார்.  அவர் சிவபெருமானின் அருளினால் தில்லையில் உடல் கோளாறு நீங்கி சேவை செய்து கொண்டு இருந்த நிலை அவர் செவியையும் எட்டி இருந்தது என்பதினால் இனி ராஜ்ய பாரத்தை தனது மூத்த மகனான சிங்கவர்மர்  எனும் இரண்யவர்மர்  ஏற்க வேண்டும்  என எண்ணினார். ஆனால் அவர் இருந்த  இடத்துக்கு தம்மால் செல்ல முடியவில்லை என்பதினால் வசிஷ்ட முனிவரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்து விட்டு சுவர்க்கத்தை அடைந்தார். மனு மன்னன் மரணம் அடைந்தப் பின் அவரது இறுதிக் கிரியைகளை இளைய மகன்கள் மூலம் செய்து கொடுத்தப் பின், தற்காலிகமாக ஒரு மன்னனை நிறுவி வைத்தப் பின், வசிஷ்ட முனிவர் தென் திசைக்கு இரண்யவர்மரைக்  காண கிளம்பிச் சென்றார்.

தில்லைவனத்தை அடைந்த வசிஷ்ட முனிவரும் வியாக்கிரபாத முனிவரது பர்ணசாலையை அடைந்து சிவகங்கையில் முழுகி ஸ்நானம் செய்தப் பின் அங்கிருந்த மூன்று சிவலிங்கங்களுக்கும் பூஜைகள் செய்து வழிபட்டப் பின்னர் வியாக்கிரபாத முனிவரிடம் தான் வந்த விவரத்தைக் கூறினார். தனது தந்தை சுவர்க்கம் அடைந்த சேதியைக் கேட்ட இரண்யவர்மர் துக்கம் அடைந்தார். அதே நேரத்தில் பதஞ்சலி முனிவரும் அங்கு வந்து சேர மூன்று முனிவர்களும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டப் பின் நடக்க வேண்டிய காரியத்தை  செய்யத் துவக்கினார்கள்.

துக்கத்தில் இருந்த இரண்யவர்மரை தேற்றிய வியாக்கிரபாத முனிவர் அவரை வசிஷ்டருடன் அழைத்துக் கொண்டு போய் சிவகங்கை நதியில் ஸ்நானம் செய்வித்து சிவலிங்கங்களுக்கு பூஜித்தப் பின் தமது ஆஸ்ரமத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு விருந்து உண்டு களைப்பாறியப் பின் வசிஷ்ட முனிவர் அவர்களிடம் கெளட தேச மன்னன் தனது மூத்த மகனை  ராஜ்ய பரிபாலனத்தை ஏற்க ஏற்பாடு செய்யுமாறு தம்மை அனுப்பி உள்ளதினால் அதற்கான ஒரு முடிவை எடுக்குமாறு அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட வியாக்கிரபாத முனிவர் இரண்யவர்மரை நோக்கி ‘ உன் விருப்பம் என்னவென்றுக் கூறுவாயாக’ என ஆணையிட்டார். இரண்யவர்மரோ  தாம் அங்கிருந்து கொண்டு சிவசேவை செய்து கொண்டிருப்பதையே விரும்புவதாகக் கூறினார்.

அதைக் கேட்ட வியாக்கிரபாத முனிவர் ‘நீ சிவ சேவையே பெரும் சேவையாக நினைப்பதினால், உடனே  வசிஷ்ட முனிவருடன் கிளம்பிச் சென்று ராஜ்ய பரிபாலனத்தை ஏற்க வேண்டும். அதன் பின் உனது யானை, தேர் மற்றும் பிற வீரர்களையும் அழைத்துக் கொண்டு இங்கு வருவாயாக. வரும்போது அந்தர்வேனியில் தங்கி உள்ள மூவாயிரம் அந்தணர்களையும் உம்முடன் அழைத்து வர வேண்டும்’ என ஆணையிட்டார்.

அதன் பின் இரண்யவர்மர்  தனது தந்தையாக ஏற்றுக் கொண்ட வியாக்கிரபாத முனிவர், அவர் பத்தினியான தனது வளர்ப்புத் தாய், பதஞ்சலி முனிவர் என அனைவரையும் சிரம் தாழ்த்தி  வணங்கி விட்டு வசிஷ்ட முனிவருடன் தனது நாட்டிற்குச் சென்று அரச பதவியை ஏற்றுக் கொண்டார். சிலகாலம் அங்கு தமது சகோதரர்களுடன் தங்கி இருந்தப் பின் தம்பிமார், மந்திரிமார், காலாட், தேர், யானைப் படை என அனைத்து படை வீரர்களுடன் கிளம்பி தில்லைவன எல்லையை அடைந்தார். தாம் வரும்போது தமக்கு கொடுக்கப்பட்ட ஆணைப்படி அந்தர்வேதியில் இருந்த மூவாயிரம் அந்தணர்களையும் தமது தேர்களில் ஏற்றிக் கொண்டு வந்திருந்தார்.

அங்கு வந்த அந்தணர்களை தேரில் இருந்து இறக்கியப் பின் ‘ பிரபோ, தாங்கள் கூறியபடி மூவாயிரம் அந்தணர்களையும் யாம் அழைத்து வந்து விட்டோம்’ என்று கூற, வியாக்கிரபாத முனிவரும் ‘மூவாயிரம் அந்தணர்களில் யாரையும் விட்டு விட்டு வந்திருக்க மாட்டீர்களே? இருந்தாலும் வந்துள்ளவர்கள் எத்தனைப் பேர் என அவர்களை எண்ணிக் காட்டி விடுங்கள்’ என்று கேட்க இரண்யவன்மனும் அவர்களை வியாக்கிரபாத முனிவருக்கு எண்ணிக் காட்டினார். என்ன குழப்பம், எப்படி எண்ணிப் பார்த்தாலும் மூவாயிரம் அந்தணர்களில் ஒருவர் குறைவாகவே இருந்தார்கள். அதைக் கண்ட  அனைவரும் அஞ்சி நடுங்கிக் கொண்டு கனக சபைக்கு சென்று முறையிட, அவர்கள் முன்னால் தோன்றிய சிவபெருமானோ ‘ யாவரும் அஞ்சேல். இங்குள்ள அந்தணர்கள் எமக்கு ஒப்பானவர்கள். அவர்கள் யாவரும் எம்முள் ஒருவர். முன்னர் இருந்தது இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது (2999) அந்தணர்களே. ஆனால் அதில் ஒன்று நாமாகவே இருந்ததினால்தான் அவர்கள் எண்ணிக்கை மூவாயிரம் என இருந்தது’ என்று கூற அனைவரும் சிவபெருமானின் கருணையை எண்ணி வியந்தார்கள்.
அதன் பின் இரண்யவர்மர்  கனக சபைக்கு கிழக்கு திக்கிலே ஒரு நகரை உருவாக்கிக் கொண்டு அங்கு தங்கினார்.

சில காலம் கழிந்தது. சிதம்பரத்திலே அனைவரும் சிவபெருமானின் நித்ய தரிசனத்தை பெற்றுக் கொண்டு வாழ்ந்திருந்தார்கள். அப்போது வியாக்கிரபாத முனிவர் கூறினார் ‘ இந்த தேசத்தை (சிதம்பரத்தை) ஆள  வேண்டியவன் இரண்யவர்மனே. அவன் தம்பிமார்கள் ஆள வேண்டியது கெளட தேசத்தை என்பதினால் அவரவர் அவரவர் பூமிக்கு  செல்லலாம்’ என ஆணையிட, பதஞ்சலி முனிவர் முதல் உபமன்யு முனிவர் மற்றும் அனைத்து அந்தணர்களும் அதை ஆமோதிக்க, வியாக்கிரபாத முனிவர் இரண்யவர்மருக்கு   புலிக் கொடி ஒன்றைக் கொடுத்து அவருக்கு விவாஹம் செய்து வைத்து அந்த ராஜ்யத்தின் மன்னனாக  முடி சூட்ட, இரண்யவர்மரும் சோழ மன்னனாக அங்கே ராஜ்ய பரிபாலனத்தை ஏற்றுக் கொண்டார். அவர் தம்பிமார்களோ முனிவரின் ஆணையை ஏற்று கெளட தேசம் சென்று அங்கு நல்லாட்சி தரலானார்கள்.

…..தொடரும்