சாந்திப்பிரியா

பாகம்-11

சோழ மன்னன் அமைத்த ஆலயம்
காலம் ஓடியது. வியாக்கிரபாத முனிவர் ஆணைப்படி இரண்யவர்மர் நடராஜப்  பெருமானுக்கு (அங்கு நடனம் புரிந்த சிவபெருமானுக்கு – அது தனிக் கதை ) திருவம்பல ஆலயத்தையும், திருமூலாடேஸ்வரருக்கு ஒரு திருக்கோவிலும், தில்லை வாழ் அந்தணர்களுக்கு வீடுகளும் கட்டுவித்து அவர்களைக் குடியேற்றினார்.
பதஞ்சலி முனிவரைக் கொண்டு சிவகணப்படி நியமங்களை எழுதச் செய்து அதை யானை மேல் ஏற்றி தில்லைக்  கோவிலை வலம்  வரச் செய்தப் பின் கனகசபைக்கு எடுத்துச் சென்று  பூஜா விதிகளை அமைத்தார்.
நித்ய பூஜை, ஆண்டு பூஜை,  ஆணி உற்சவம், பவித்திரம் சாத்துதல்,  ஆடி நீர் விளையாட்டு உற்சவம், மார்கழி மற்றும் தைபூச திருப்பாவாடை போன்றவற்றை விதிப்படி செய்ய ஏற்பாடுகளை செய்தார்.
இப்படியாக சோழ மன்னன் இரண்யவர்மானால்  சிவாலயம் அமைக்கப்பட்டு இருந்தாலும், பூமியிலே முதன் முதலாக தோன்றிய திருக் கோவிலாக சிதம்பரமே இருந்தது என்பதின் காரணம் கட்டிடம் என்ற அமைப்பில் அங்கு சிவாலயம்  சோழ மன்னன் காலத்தில் தோன்றினாலும், அந்த தில்லை வனத்தில் காலமறியாக் காலம் முதலே சிவகங்கைப் பகுதியில் இருந்த சிவலிங்க உருவிலான சிவபெருமானை முனிவர்களும், ரிஷிகளும் ஆலயக் கடவுளாகவே வணங்கி வந்துள்ளனர். அவரே பின்னாளில் கட்டிடமாக அமைந்த கனக சபையில் குடி புகுந்தார். ஆகவே சிவபெருமான் அங்கிருந்த காலமும் விளங்கவில்லை. பூமியிலே புனிதமான விசேஷ தலங்களில்  மட்டுமே ஆலயங்கள் எழுகின்றன.  புண்ணியம் செய்தவர்களினால் அது அமைக்கப்படுகிறது.  புண்ணியங்களை செய்தவர்களால் மட்டுமே அங்கும் செல்ல முடிகிறது. சிதம்பரத்திலோ புண்ணியம் செய்யாமலேயே ஒருவர் செல்ல முடியும். புண்ணியத்தை தம்முடன் கொண்டு வர முடியும்.
புண்ணியத் தலங்கள் என்பவற்றுக்கு சில உருவகங்கள் உள்ளன. அவை சித்தர்கள் தவம் செய்த இடங்கள், இயற்கை அற்புதங்கள் நிகழ்ந்திருக்கும்,  சர்பதோஷங்கள் இருந்திராது, வம்சாவளியினரின் சாபங்கள் இருக்காது, அந்த பூமிக்கு அடியிலே கண்களுக்குப் புலப்படாத புனித நதிகளின் ஓட்டம் இருக்கும், ஸ்தல விருட்ஷங்கள் இல்லாமல் இருக்காது (ஸ்தல விருட்ஷங்கள் இல்லாத ஆலயங்கள் ஆவியற்ற உடலைப் போன்றது என்பார்கள்). இப்படிப் பலப் பல சிறப்புக்களைக் கொண்டதாகவே புண்ணியத் தலங்கள் இருக்கும். ஆலயங்களை அமைக்கும் முன்னர் அந்த பூமியின் சிறப்புக்களை அறிந்து கொள்ள  அந்த பூமியின் மீது  விநாயக  பகவானை வேண்டிக் கொண்டு சிறப்பு பூஜையை செய்து  அதன் முடிவில் அந்த இடத்திலேயே  சிறந்ந்த ஜோதிடரை  அழைத்து வந்து ஜோதிடம் அல்லது பிரசன்னம் பார்ப்பார்கள். அவற்றில் நன்மை தீமைகள் தெரிந்து விடும்.  அதற்கேற்பவே  அந்த இடங்களில் அமையும் ஆலயங்களின் கட்டிடப் பணி – எங்கு, எதை அமைப்பது என்பன- துவங்கும்.
அந்த காலங்களில் கடவுளே நேரில் வந்து முனிவர்களிடம் அந்த இடத்தின் மகிமையை எடுத்துக் கூறுவார்கள்.  ஆலயங்களை அமைப்பவர்களின் கனவில் வந்து இப்படி, அப்படி என எடுத்துக் கூறுவார்கள். அவற்றை காலப் போக்கில் வாய்மொழி மூலம் வம்சாவளியாகப்  பரவி வந்தன. காலம் மாறுவதினால் அது பிரசன்னத்தில் முடிவடைந்துள்ளது.  ஆனால் பின் காலத்தில்  பல்வேறு இடங்களிலும்  ஆலயங்களை அமைப்பது ஒரு வாடிக்கைப் போக்காகி விட்டது.  ஆகவே ஆலயங்கள் அனைத்துமே புண்ணியத் தலங்களில் அமைந்தவை  என்று கூற முடியாது.
சிதம்பரத்தில் சிவபெருமான் நடராஜர் அல்லது தில்லைக் கூத்தன் அதாவது தில்லையில் கூத்தாடியவர் என்று அழைக்கப்படுகிறார். கூத்தாடியவர் என்றால் நடனமாடியவர் என்று பொருள் கொள்ள வேண்டும்.  இந்த ஆலயத்தில்  விசேஷம் என்ன என்றால் சிவபெருமான் மூன்று வடிவங்களில் இங்கு உள்ளார். நடனமாடும் நடராஜராக, உருவமற்ற சிவலிங்கமாக பளிங்குக் காண்ணாடியிலான சந்திர மவுலீஸ்வரராக, ஆகாய லிங்கம் எனும் யந்திர வடிவிலாக  அவர் இந்த ஆலயத்தில் உள்ளார்.
இந்த ஆலயத்தில் உமாதேவியார் அவருக்கு துணைவியாக சிவகாமி அம்மாள் என்ற பெயரில் வீற்று உள்ளார். சிதம்பரத்தில் அவரை ஏன் நடராஜராக காட்டுகிறார்கள் என்றால் அவர் அங்குதான் நடனம் ஆடி காளி தேவியின் கோபத்தை அடக்கினார். அதற்கும் ஒரு கதை உள்ளது.
……….தொடரும்