பாகம் – 6

உடல் பொலிவை இழந்தாலும் மன திடத்தை இழக்காத ஸாம்பாவும் உடனே மித்திர வானத்துக்குக் கிளம்பிச் சென்றான். அங்கு ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு பன்னிரண்டு வருடங்கள் தவம் இருந்து வர, சில காலத்துக்குப் பிறகு சூரியன் அவனுக்குக் காட்சி அளித்து அவன் சாப விமோசனம் அடைய வேண்டுமானால் பல்வேறு கடவுளரின் நாமாக்களை ஜபிக்குமாறு கூறினார். அதன்படியே அந்த நாமங்களை உச்சரித்து வந்த ஸாம்பா சூரியன் கூறிய தினத்தன்று சந்திரபாகா நதியில் மூழ்கி ஸ்நானம் செய்து, சாபம் நீங்கி, மீண்டும் பழைய இளமையையும் பொலிவையும் திரும்பப் பெற்றான். அப்போது அவன் முன்னால் தாமரை மீது நின்ற  நிலையில் சூரிய பகவான் காட்சியளித்தார். தாமரை இதழில் நின்ற நிலையில் எழுந்தருளிய சூரியனாரின் சிலையைக் கொண்டு போய் தனக்கு சாப விமோசனம் தந்து தனது பழையப் பொலிவைப் பெற அருள் புரிந்த சூரியனாருக்கு ஒரு ஆலயத்தை எழுப்ப ஏற்பாடுகளை செய்தான். ஆனால் அவன் கொண்டு சென்ற சிலையை வைத்து ஆலயத்தை எழுப்ப அங்கிருந்த பிராமணர்கள் ஒத்துழைக்கவில்லை என்பதினால், அவன் மீண்டும் மேகா தேசத்துக்கு சென்று அங்கிருந்து பல அந்தணர்களை அழைத்துக் கொண்டு வந்து ஆலயத்தை நிர்மாணித்தான்’.

(தற்போது ஒரிசா மானிலத்தில் கோனார்கில் உள்ள சூரியனின் ஆலயம் ஸாம்பாவினால் கட்டப்பட்ட ஆலயம். தற்போது சந்திரபாகா எனும் நதி இருந்த இடத்தில் ஒரு சிறிய குளமே உள்ளதாகவும், அது புனிதமாகக் கருதப்பட்டு பக்தர்கள் நீராடி சூரிய பகவானை வழிபடும் குளமாக உள்ளதாகவும் கூறுகிறார்கள். முதலில் ஸாம்பா ஸ்தாபித்த ஆலயம் சிறிய அளவில் இருந்தது. அந்த காலத்தில் அப்படிப்பட்ட வழிபாட்டுத் தலங்களை ஆலயம் என்றே அழைப்பார்கள். ஆகவே அந்த ஆலயத்தை பின் நாளில் அந்த ஆலயத்தின் மகிமையைக் கேள்விப்பட்ட நரசிம்ம தேவா எனும் மன்னனே பெரிய ஆலயமாக கட்டினார். இந்த செய்தியில் இன்னொரு விசேஷமும் உள்ளது. சூரியனாரின் அருளைப் பெற ஸாம்பா பன்னிரண்டு ஆண்டுகள் தவத்தில் இருந்தான். நரசிம்ம தேவா அதை பன்னிரண்டாவது ஆண்டு ஆகியும் கட்டி முடிக்க முடியாமல் இருந்ததினால் அதற்கான காலக் கெடுவை வைத்து அதை முடிக்க ஆணையிட்டபோது அதை முடித்து வைக்க பன்னிரண்டு வயது சிறுவன் முன் வந்தானாம். அவனை கடவுளே அனுப்பி உள்ளாரோ என நம்பிய மன்னன் அவனுக்கு அனுமதி அளிக்க அந்த சிறுவன் தன கையில் ஒரு கல்லை எடுத்துப் போய் ஆலய உச்சிப் பகுதியில் கட்டிடப் பணி நடைபெற்ற இடத்தில் கொண்டு வைக்க, ஆலய பணிகள் தடங்கல் இன்றி நடைபெறத் துவங்கியனவாம். ஆலயம் முடிந்ததும் அந்த சிறுவன் ஒருநாள் கடல் கரையில் இறந்து கிடந்தானாம். ஆகவே அவன் தனது இனத்தவரைக் காப்பாற்றுவதற்காக ஆலயம் கட்டி முடிந்தவுடன் அதற்கு காணிக்கையாக தன்னை பலியாகத் எடுத்துக் கொள்ளலாம் என்று வேண்டிக் கொண்டதினால் அவன் கடல் அலையில் சிக்கி இறந்திருக்க வேண்டும் என்றே நம்புகிறார்கள். ஆனால் அவன் இறந்து கிடந்ததின் காரணமே யாருக்கும் தெரியவில்லையாம். அது போலவே பன்னிரண்டாம் ஆண்டு முடிந்த தறுவாயில் ஆலயமும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.  ஆகா அனைத்திலும் பன்னிரண்டு என்றே உள்ள அவை அனைத்தையுமே அதிசய செய்தியாகவே கூறுகிறார்கள். மேகா தேசத்தில் இருந்து வந்தவர்கள் சூரியனை வழிபாட்டு வந்தப் பிரிவினர். அவர்கள் பிராமணர்களுக்கு இணையானவர்கள். அவர்களே பின் நாளில் சூரிய வழிபாட்டை ஊக்குவித்து வளர்த்தவர்கள். ஸாம்பா கட்டியதாக கூறப்படும்  ஆலயத்தை கருப்பு ஆலயம் என்கிறார்கள் – சாந்திப்பிரியா ).

இப்படியாகக் கதையைக் கூறி முடித்த வசிஷ்டரை பிரகுத்பலா வணங்கி எழுந்தான் என்று சூதக முனிவர் சௌனக முனிவருக்குக் கூறியதும், அவர் கேட்டார் ‘ சூதக மாமுனிவரே, நீங்கள் கூறியதில் இன்னொரு சிறு பகுதியும் விளக்கபடாமல் உள்ளதே. சிவபெருமானிடம் இருந்து வரம் பெற்ற கிருஷ்ணருக்கு மகனாகப் பிறந்த ஸாம்பா இரண்டு காரியங்களை முடிக்க வந்தவன் . முதலாவது ஸாம்பா மூலம் சூரிய பகவானின் மேன்மை உலகிற்கு வெளிப்பட்டது. இரண்டாவது, கிருஷ்ணர் ஸ்தாபித்த வம்சம், அவர் வழியினாலேயே அழிந்தும் விட வேண்டும் என்று கூறினீர்களே. அப்படி என்றால் இரண்டாவது யாரால் நிகழ்ந்தது, ஸாம்பாவினாலா என்பதையும் விளக்குவீர்களா?’ என்று கேட்க சூதகர் அதையும் கூறினார் .

‘மகாபாரத யுத்தம் முடிந்து அனைவரும் அவரவர் இருப்பிடங்களுக்குச் சென்று விட்டார்கள். கிருஷ்ணரும் துவாரகைக்கு வந்து விட்டார். ஆனால் ஒரு கட்டத்தில் யாதவர்கள் தன்னிலை மறந்து ஆடினார்கள். நித்தம் ஆடலும் பாடலுமாக பொழுதைக் கழித்துக் கொண்டு உல்லாசமாக இருந்தார்கள். தர்ம நெறி அவர்களிடம் காணப்படவில்லை. நெறி தவறி வாழ்ந்து வரத் துவங்கினார்கள். இந்த உலகம் உல்லாசமாக வாழ்வதார்க்கே என்று எண்ணினார்கள். அவற்றை எல்லாம் பார்த்த கிருஷ்ணர் அதனால் கவலைக் கொண்டார். எந்த தர்ம நெறிக்காக தாம் அத்தனை காலம் பாடுபட்டோமோ அத்தனையும் இந்த யாதவர்களினால் வீணாகி வருகிறதே.  அவர்களை வளரவிட்டால் தர்ம நெறியையே அழித்து விடுவார்களே, ஆகவே நம் காலத்திலேயே நாம் ஸ்தாபித்த வம்சமும் அழிந்து போகட்டும் என்று எண்ணலானார். அதற்கு ஏற்றார்போல ஒரு நிகழ்ச்சி முன்னர் நடந்து இருந்தது .

கிருஷ்ணரின் வம்சம் அழியும் காலம் கனிந்து வந்தபோது, கிருஷ்ணருக்கு முன்னொரு சமயம் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. துவாரகாவிற்கு விஸ்வாமித்ரர், வசிஷ்டர், துர்வாசர் போன்ற முனிவர்கள் ரிஷி முனிவர்களுடன் வந்தார்கள். அப்போது யாதவர்கள் ரிஷி முனிவர்களை கேலி செய்தவண்ணம் இருந்தார்கள். அவர்களின் சக்தியை சோதனை செய்ய விரும்பிய ஸாம்பா மற்றும் பிற யாதவர்கள், ஸாம்பாவை ஒரு கர்பிணி போல வேடம் தரிக்க வைத்து ரிஷி முனிவர்களிடம் சென்று இந்த கர்பிணிக்கு பிறக்க உள்ள குழந்தை ஆணாக இருக்குமா பெண்ணாக இருக்குமா என்று கேட்டு சிரிக்க அதைக் கேட்ட ரிஷி முனிவர்கள் கோபம் கொண்டு அவன் வயிற்றில் இருந்து வெளியாவதே அவர்கள் வம்சத்தின் அழிவுக்குக்  காரணமாக இருக்கும் என்று அவர்களுக்கு சாபம் கொடுத்தார்கள். அதன் பயனாக போலி வேடம் அணிந்திருந்த ஸாம்பாவின் வயிற்றுப் பகுதியில் இருந்து ஒரு உலக்கை வெளியில் விழ பயந்து போன அவர்கள் அந்த உலக்கையை தூள் தூளாகி கடலில் வீசி விட்டு அங்கிருந்துச் சென்று விட்டார்கள். ஆனால் அந்த துண்டுகள் பின்னர் அந்தக் கடற்கரையில் பெரிய பெரிய கூர்மையான இதழ்களைக் கொண்ட செடியாக வளர்ந்து இருந்தது.

அந்த நினைவு கிருஷ்ணருக்கு ஏற்பட அவர் ஒரு கேளிக்கைக்கு ஏற்பாடு செய்து அதற்கு அனைத்து யாதவர்களையும் அழைத்துக்  கொண்டு   அதே கடற்கரைக்கு அருகில் தங்கினார். அன்று இரவு  யாதவார்கள் நன்கு குடித்துவிட்டு கும்மாளம் போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டு இருக்கையில் அவர்களுக்குள் திடீர் என சண்டை மூண்டு விட்டது. வாய் சண்டை கைகலப்பாக மாறி விட அவர்கள் அடித்துக் கொள்ளத் துவங்கினார்கள். அந்த கடற்கரையில் ஸாம்பாவின் வயிற்றுப் பகுதியில் இருந்து விழுந்திருந்த உலக்கையின் தூளினால் ஏற்பட்டு இருந்த  செடியைப் பெயர்த்து எடுத்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ள அனைவரும் படுகாயம் அடைந்து விழுந்து கிடந்தது மடிந்தார்கள். ஆக இப்படியாக யாதவ குலம் அழிவதற்கு ஸாம்பாவே   காரணமாக இருந்து கிருஷ்ணர் சிவபெருமானிடம் இருந்து பெற்று இருந்த வரத்தை முடித்து வைத்தார்’.

அந்தக் கதையா சூதக முனிவர்  கூறி முடித்ததும் அங்கு அமைதி நிலவ, அனைவரும் அவரை வணங்கி விட்டு எழுந்து சென்றார்கள்.

ஸாம்பா புராணம் முற்றியது