பாகம் – 5
நாரதர் கூறினார் ‘கிருஷ்ணா, இதை நான் உனக்கு நிரூபித்துக் காட்டுகிறேன். அதுவரை நீ இதைப்  பற்றி யாரிடமும் பேசாதே. பேசினால் அவர்கள் எச்சரிக்கையாகி விடுவார்கள்’ என்று கூறி விட்டு சென்றார். சில நாட்கள் சென்றன. கிருஷ்ணர் தனது பதினாறாயிரம் மனைவிகளுடனும் ஜலக்கிரீடை செய்து கொண்டு இருந்தார். அந்த இடம் இறைவதாக மலை என்பதின் அடிவாரத்தில் இருந்தது. பட்ஷிகள் ஆனந்தமாக ரீங்காரம் செய்து கொண்டு இருந்தன. அவருடைய மனைவிகள் அற்ப்புதமான நகைகளை அணிந்து கொண்டு வந்திருந்தார்கள். நீலோத்பலம் மற்றும் தாமரைப் போன்ற மலர்களின் வாசனையும் கமகமவென மூக்கைத் துளைத்தபடி இருந்தன. அனைவரும் மது மயக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் அங்கு வருவதற்கு முன்னர்தான் வேண்டும் என்றே நாரதர் அவர்கள் பருகி இருந்த பானத்தில் மயக்க மதுவைக் கலந்து கொடுக்க ஏற்பாட்டை செய்திருந்தார். அவர்கள் அனைவரும் கிருஷ்ணரை சுற்றி சுற்றியே வந்து கொண்டு தன்னை மறந்து அவரை ஆலிங்கனம் செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் முகங்களில் காமம் வழிந்தோடியது.
அந்த நேரமே சரியான நேரம் என்பதை உணர்ந்து கொண்ட நாரதர் ஓடோடிச் சென்று ஸாம்பாவிடம் அவர் தந்தை அவனை உடனே அந்த இறைவதாக மலை அடிவாரத்துக்கு வரச் சொன்னதாகக் கூறினார். அவனும் அதை அப்படியே நம்பிக் கொண்டு  இறைவதாக மலை அடிவாரத்துக்குச் செல்ல  அங்கு தண்ணீரில் ஜலக் கிரீடை செய்து கொண்டு உடலோடு ஒட்டி நனைந்து இருந்த துணியில் அங்கங்கள் பளீரெனத் தெரியும் வகையில் நின்றிருந்த தனது சின்னத் தாயார்களைப் பார்த்தான். அவன் மனது படபடத்தது. அழகான உருவங்களைக் கண்டவன் மனதில் காம உணர்ச்சி எழுந்தது. அதே சமயம் அவர்களும் அங்கு வந்திருந்த ஸாம்பாவைப் பார்த்து அவன் அழகில் மயங்கி காம உணர்வு அதிகரிக்க  நின்றார்கள்.  தாம் கிருஷ்ணருடன் இருப்பதையும் மறந்துவிட்டு ஸாம்பாவை நோக்கிப் பார்த்தபடி வெட்கம் மறந்து உடல் அழகை வெளிப்படுத்தியபடி நின்றார்கள். சில நிமிடங்கள் கழிந்தன. அனைவரும் ஒன்றுமே கூறாமல் வேறு எங்கோ பார்த்தபடி  நின்றுள்ளதைக் கவனித்த கிருஷ்ணரும் அவர்கள் பார்த்துக் கொண்டு இருந்த திசையை நோக்கினார்.  ஸாம்பாவும் தனது மனைவிகளும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டு காம விரசத்துடன் நிற்பதைப் பார்த்தார்.  அவ்வளவுதான், அவர் மனம் கொதித்தது. நாரதர் கூறியது உண்மையே  என்று மனம் எண்ண, உடனே அவர் ஸாம்பாவைப் பார்த்து உரத்தக் குரலில் அவனுக்கு சாபமிட்டார். ‘ தாயைக் கூற மயக்கும் உனது அழகு அவர்களையும் கற்பிழக்கச் செய்து விட்டது. ஆகவே உன் உடல் முழுதும் குஷ்ட நோய் பரவி நீ பார்க்கவே விகாரமாக ஆகக் கடவது’. அடுத்து தனது மனைவிகளைப் பார்த்து அவர்களுக்கு சாபமிட்டார் ‘ கட்டிய கணவனுக்கே துரோகம் செய்த நீங்கள் நரகத்துக்குச் செல்வீர்கள்’.
அடுத்த நிமிடமே அனைவரும் தம் நிலைக்கு வந்து, அவமானம் தாங்காமல் தங்களுடைய உடலை  கைகளால் மறைத்துக் கொண்டு மறைவிடத்துக்கு ஓடினார்கள். தன நிலைக்கு வந்த ஸாம்பா குரூபியானான். உடல் முழுவதும் குஷ்டரோக நோய் அவனைப் பற்றி இருந்தது. பார்க்கவே விகாரமாக ஆனவன் கண்ணனின் காலடியில் விழுந்து தெரியாமல் நடந்துவிட்ட தவறுக்கு மன்னிப்புக் கேட்டான். தனக்கு பாப விமோசனம் தருமாறு தந்தையை வேண்டிக் கொள்ள அவரும் அவனை சந்திரபாகா நதிக்கரையில் இருந்த மித்திர வனப் பகுதிக்குச் சென்று சூரியனை வேண்டி தவம் இருந்து சாப விமோசனம் பெறுமாறுக் கூறினார்.
……தொடரும்