துலா புராணம்- 8
காவிரி ஆற்றின் மகிமை
சாந்திப்பிரியா

சித்ரகுப்தன் சிரித்ததைக் கேட்ட சுசீலை ஆச்சரியம் அடைந்து ‘நான் தெய்வத்தை பூஜித்து இருந்தது நிஜம் என்றால், நான் தர்ம பத்தினி என்றால், நான் நல்லெண்ணம் கொண்டவள் என்றால், நாராயணனே என் மனதில் கணவருக்கு அடுத்து நிலையாக உள்ளவர் என்பதும் உண்மை என்றால், காவேரியில் துலா ஸ்நானம் செய்து புண்ணியத்தைப் பெற்று இருந்துள்ளேன்  என்பது உண்மை என்றால், என் கண்களுக்குப் புலப்படாமால் சிரித்தவர் என் எதிரில் வர வேண்டும் ‘ என உரத்தக் குரலில் கூறினாள்.

இப்படியாக சுசீலை கூறிய சொற்களைக் கேட்ட சித்ரகுப்தன் ஆச்சர்யம் அடைந்தார். அவள் கூறிய அனைத்துமே சத்தியமாக இருந்ததினால் வேறு வழி இன்றி அவள் முன் அவர் தோன்றினார். பிரகாசமான முகத்தைக் கொண்டவரும், இவர் அக்னியோ எனக் கூறும் தேஜஸ்சயையும் கொண்டவர், சுசீலை முன் தோன்றியதும், அவர் யார் என்பதை உடனடியாக கண்டு பிடித்துவிட்டால். ஏன் என்றால் பதிவிரதைகளுக்கு அந்த சக்தி உண்டு.  சற்றும் தயங்காமல் அவர் பாதங்களில் விழுந்து அவள்  நமஸ்கரிக்க, சுமங்கலிகளுக்கு ஆசிகளைத் தருவதைப் போலவே அவரும் ‘தீர்க்க சுமங்கலி பாவா’ என தன்னை மறந்து அவளுக்கு ஆசிகளைக் கூறினார். அதனால் உடனே மகிழ்ச்சி அடைந்தவள் அவருக்கு அர்க்கியம் மற்றும் பாத்யம் போன்றவற்றைக் கொடுத்து உபசரிக்க அதைக் கண்டு சித்ரகுப்தன் வெட்கம் அடைந்தார்.

ஆகவே அவரும் சற்றும் தயங்காமல் தான் வந்தக் காரியத்தைக் கூறியப் பின், அவளிடம் கூறினார் ‘ சுசீலை, நான் சங்கடத்தில் ஆழ்ந்து விட்டேன். நம் கால்களில் யார் விழுந்து நமஸ்கரித்தாலும், முக்கியமாகப் பெண்கள் நமஸ்கரிக்கும்போது அவர்களுக்கு ஆசிகளைக் கூற வேண்டும் என்பது தர்ம நெறியாகும். கன்னி நமஸ்கரித்தால், விரையில் விவாஹம் நடக்கட்டும் என்றும், திருமணமானவள் நமஸ்கரித்தால் தீர்க்க சுமங்கலியாக இரு என்றும் விதவை நமஸ்கரித்தால் ஞானாவதியாக இருப்பாய் என்றும், ஆசி கூற வேண்டும். அதனால்தான் உனக்கும் நான் தீர்க்க சுமங்கலியாக இரு என ஆசிர்வதிக்க வேண்டி வந்தது. நான் இங்கு வந்தக் காரணம் ஆயுள் முடிந்து விட்ட உன் கணவரை அழைத்துப் போகத்தான். ஆனால் நானே உனக்கு தீர்க சுமங்கலியாக இருக்க ஆசிகளை தந்து விட்டதினால் அதை திரும்பப் பெறவும் முடியாது. உன் கணவரும் இன்று யமலோகத்தில் காலடி எடுத்து வைக்காமலும் இருக்க முடியாது என்பதின் காரணம் அவருடைய ஆயுள் எங்கள் கணக்கின்படி இன்றோடு முடிவடைந்துவிட்டது.  ஆனால் அதே நேரத்தில் உனக்கும் தீர்க்க சுமங்கலியாக இருக்க ஆசிர்வாதம் செய்து விட்டதினால் அவர் உயிரை பறிக்கவும் முடியாது.  இந்த சிக்கலான பிரச்னைக்கு தீர்வு கண்டு, இந்த பிறப்பிலேயே, இந்த உடலிலேயே உன் கணவருக்கு மறு ஜென்மம் கொடுக்க ஒரு வழி உள்ளது.  நீ துலா ஸ்நானம் செய்து புண்ணியத்தைப் பெற்றுள்ளதில் ஒரு ஆண்டுக்கான பலனை என்னிடம் கொடு. அதற்குப் பதிலாக நான் உன் கணவரை யமனிடம் அழைத்துச் சென்று மீண்டும் ஒரு யம காலத்தில் அவரை உன்னிடம் வந்து ஒப்படைக்கின்றேன் என்று வாக்குறுதி தருகிறேன். நான் அவரை திரும்ப அழைத்து வரும்வரை அவர் உடலை நீ பத்திரமாகப் பார்த்துக் கொள் ‘ என வாக்கு தந்தார்.

 சித்ரகுப்தர் 

சுசீலை கேட்டால், ‘அது சரி நீங்கள் காரணம் இல்லாமல் ஏன் சிரித்தீர்கள். அதையும் தயவு செய்து கூற வேண்டும் ?’. அதற்கு அவர் பதில் கூறினார் ‘அம்மணி,உணவை உண்டப் பின் தனக்கு இந்த உலகில் இனியும் இடமில்லை என்பது தெரியாமல் இரவு சாப்பாடிற்கு மீதி ரசத்தை பத்திரமாக வைத்திரு என்று பிரும்ம சர்மா கூறியதைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்தது. அடுத்த கணம் உயிரற்ற ஜடமாக போக உள்ளவருக்கு இருந்த அற்பத்தனமான ஆசையை  எண்ணி சிரித்தேன். அவ்வளவுதான்’ என்றார். சுசீளையும் சித்ரகுப்தரும் பேசிக் கொண்டது பரம ரஹஸ்யமானது. அதை பிரும்ம  சர்மாவும் அறிந்திருக்கவில்லை. அவன் அமைதியாக தன்னுடைய உணவை உண்டு  கொண்டு இருந்தார். அவர் கண்களுக்கு எதுவும் தென்படவில்லை, எந்த சொற்களும் விழவில்லை. அப்போது திடீர் என சிறிது உணவு அவர் தொண்டையை அடைத்தது. தண்ணீரைக் குடிக்கும் முன் அப்படியே மரணம் அடைந்து கீழே சாய்ந்தவருடைய உயிரை சித்ரகுப்தன் மேலே இழுத்துச் சென்றார்.
அவர்கள் யம லோகத்துக்கு சென்று கொண்டு இருந்தபோது, வழியிலே செருப்பு தைக்கும் தொழிலாளிகள் இரண்டு பேர் அவர்களை சந்தித்தார்கள். பிரும்ம சர்மாவைக் கண்டதும், அவர்கள் அவரை பிடித்துக் கொண்டு கத்தினார்கள் ‘அயோக்கிய பிராமணா, எங்களை ஏமாற்றிப் பறித்துக் கொண்ட பணத்தை திரும்பத் தந்து விடு. இல்லை என்றால் அந்த செருப்பு தைக்க பயன்படுத்திய தோலையாவது திருப்பித் தந்து விடு’ என்று கத்தியவாறு அவரை அடிக்கத் துவங்கினார்கள். சித்ரகுப்தன் எத்தனையோ தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் கூறினார்கள் ‘நாங்கள் பசியோடு இருந்தபோது இவருக்கு ஒரு பாதரஷையை விற்றோம். அந்தப் பணத்தைக் கொண்டு சென்றுதான் வீட்டிற்கு தேவையான அரிசி – பருப்பை வாங்க முடியும் என்ற நிலைமை. இன்னும் ஒரு மணி நேரம் பொறுத்து வா, பணம் தருகிறேன் என்று கூறி விட்டு வீட்டிற்குப் போய் விட்டார். நாங்கள் எப்போது அவர் வீட்டிற்குச் சென்றாலும், அவர் வீட்டில் இல்லை என்று பொய் கூறி எங்களை அலை கழித்தது மட்டும் அல்லாமல், பணமில்லாமல் நாங்கள் பஞ்சத்தில் உழளவும் காரணமாகி விட்டார். ஆகவே பணமில்லாமல், அரிசி-பருப்பு வாங்க முடியாமல் பசி தாங்க முடியோயாமல் போன நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டோம்.  ஆகவே  நாங்கள் அவருக்குக் கொடுத்த பாதரட்ஷையை அல்லது பணத்தை தர வேண்டும். இல்லை என்றால் அவர் முதுகுத் தொலையாவது சீவி நாங்கள் அவருக்கு செய்து கொடுத்த பாதரஷைக்கு ஈடாகத் தர வேண்டும். இல்லை என்றால் அவரை விட மாட்டோம் என அவரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டார்கள்.

பிரும்ம சர்மா கதறினார், கெஞ்சினார், தன்னை விட்டு விடும்படி மன்றாடினார். அவர்கள் ஒப்புக் கொள்ள மறுத்தார்கள். ஆகவே என்ன செய்வது என அவர்கள் தடுமாறிக் கொண்டு இருந்தபோது தெய்வாதீனமாக அங்கு இருவர் வந்தார்கள். அவர்கள் அந்த செருப்பு தைப்பவர்களிடம் பிரும்ம சர்மாவிற்குப் பதிலாக தாங்கள் அவர்களுக்கு தம் உடலில் இருந்து தோலை தருவதாகக் கூறியதும், அவர்கள் பிரும்ம சர்மாவை போக விட்டார்கள்.  முன்பின் தெரியாதவர்கள் அப்படி தனக்காக  கூறியதைக் கேட்ட பிரும்ம சர்மாவும், சித்ரகுப்தரும் ஆச்சர்யத்துடன் அவர்களை ‘நீங்கள் இருவரும் யார்’ என்று கேட்க அவர்கள் கூறினார்கள  ‘பிராமணரே நாங்கள் இருவரும், நீங்கள் சிறு செடியாக வைத்து வளர்த்த அரச மரங்கள். நீங்கள் வைத்த துளசி செடி மாடத்தின் பின் புறத்தில் எங்களையும் வைத்தீர்கள். எங்களுக்கும் தண்ணீர் ஊற்றி வளர்த்தீர்கள். நாங்கள் பெரியவர்கள் ஆனதும், எங்கள் மரத்தடியில் பூஜைகளை செய்து, எங்களை சுற்றி மக்கள் வழிபட்டார்கள். அந்தப் பெருமை அனைத்துமே உங்களால்தான் கிடைத்தது. அது மட்டும் அல்லாமல், காவேரியில் ஆற்றில் ஸ்நானம்  செய்து விட்டு தண்ணீர் குடத்தில் நீரைக் கொண்டு வந்து எங்களை சுற்றி இருந்த இடங்களில் தெளித்து, அதை சுத்தம் செய்து மீதி தண்ணீரையும் எங்கள் மீது ஊற்றி எங்களை அலம்பினார்கள். அதனால் நாங்களும் காவேரி ஆற்றில் குளித்தப் பலனைப் பெற்றோம். அந்தப் புண்ணியம் எல்லாம் உங்களினால்தான் கிடைத்தது. இப்போது எங்கள் ஆயுள் முடிந்து போகின்றோம். வழியில் உங்களை இங்கு பார்த்ததும் இங்கு வந்து நிலைமையை புரிந்து கொண்டோம். எங்களை நீங்கள் குழந்தைப் போல வளர்த்து ஆளாக்கியதினால், நாங்களும் காவேரி ஆற்று நீரில் ஸ்நானம் செய்தப் பலனை நீங்கள் தந்ததினால் அதற்க்கு  பிரதி உபகாரமாக உங்களுக்கு இதை செய்தோம்’ என்று கூற அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள்.

அதைக் கேட்ட சித்ரகுப்தன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து ‘ஐயா, நீங்கள் வளர்த்த இந்த இரண்டு மரங்களின் பெருந்தன்மையைப் பாரும். நீங்கள் முதல் படியைக் கடந்து விட்டீர்கள். இப்போது நாம் யமராஜரிடம் சென்றப் பின் அங்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று உள்ளது. நான் உங்கள் மனைவியிடம் உங்களை ஒரு யம காலத்துக்குள் திரும்ப அழைத்து வருவதாக உறுதி கூறி உள்ளேன். ஆகவே நான் கூறியபடி நீங்கள் செய்தால்தான் உங்களுக்கு விடுதலைக் கிடைக்கும். நான் யமனிடம் உங்களை அழைத்துச் சென்றதும், தண்டம் போல அவர் கால்களில் தடாலென விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின் இப்போது நான் உங்களுக்கு சொல்லித் தரும் ஸ்தோத்திரத்தை கூறிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்தால்தான் உங்களுக்கு விடுதலைக் கிடைக்கும்’ என்று கூறியப் பின் அவரை யமராஜரிடம் அழைத்துச் சென்றார்.

முன்னரே சித்ரகுப்தன் பிரும்ம சர்மாவுக்கு கூறி இருந்தது போலவே அவரும் யமராஜர் முன் சென்று நின்றதும் தடாலென  அவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்தப் பின் சித்ரகுப்தர் சொல்லிக் கொடுத்த ஸ்தோத்திரங்களை கடகடவென உச்சரிக்கலானார். அந்த ஸ்தோத்திரம் யமனை ‘நீ சாந்த சொரூபி, தயாநிதி, சத்யரூபி’ என பல்வேறாக அவரை புகழும் விதத்தில் அமைந்து இருந்தது. அதனால் அவர் மீது சந்தோஷம் அடைந்த யமராஜர் கீழே விழுந்து விழுந்து  தண்டனிட்டு ஸ்துதி பாடியவரை எழுப்பி தன்னுடன் சேர்த்துக் கட்டி அணைத்தவாறு ‘ நீ நீண்ட ஆயுளைப் பெறவும், தீர்காயுசாக இருக்கவும் வரம் தருகிறேன். நீ பூமிக்குச் சென்று உன் மனைவியுடன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வா ‘ என அவரை ஆசிர்வதித்தார். அதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்த பிரும்ம சர்மா அவரிடம் கேட்டார் ‘மகாராஜா, தர்ம தேவா, எனக்கு சிறிய சந்தேகம் வந்துள்ளது. அதை விளக்கினால் நான் பூமிக்கு மன அமைதியுடன் செல்வேன்’ என்று கூறி விட்டு அவரைக் கேட்டார் ‘ எந்தப் புண்ணியத்தினால் எனக்கு தீர்காயுசு கிடைத்தது? எதனால் என் ஆயுள் குறைந்தாலும் மீண்டும் வளர்ந்தது. பிரபோ, நீங்கள் அறியாதது ஒன்றும் இல்லை என்பதினால் எனக்கு இதை விளக்குவீர்களா?’ எனப் பணிவுடன் கேட்க யமதர்மராஜர் அவருக்குக் கூறலானார்.

………தொடரும்