துலா புராணம்-2
காவிரி ஆற்றின் மகிமை
சாந்திப்பிரியா
அகஸ்தியர் கூறலானார் :
முன்பொரு காலத்தில் கிருதமாலா எனும் நதிக்கரையில் இருந்த மதுராபுரி எனும் ஊரில் வேதராசி எனும் அந்தணர் வாழ்ந்து வந்தார். அந்த ஊர் ஆயிரக்கணக்கான பசுக்கள் இருந்த இடம். நான்கு வர்ணங்களை சேர்ந்த இனத்தவரும் அங்கு ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்து கொண்டு இருந்தார்கள். நான்கு வர்ணங்களையும் சேர்ந்தவர்களுக்கென இருந்த  அவரவர் கலையில் அவர்கள் சிறந்து இருப்பார்கள் என்பதே உண்மை என்பதினால் பிராமணர்கள் அனுஷ்டித்து வந்த  வேத பாஷ்யங்களைத் தவிர்த்து, பிற கலைகளான இயல், இசை, நாடகம் போன்ற அனைத்துக் கலைகளையும் நன்கே அறிந்திருந்த பிற  ஜனங்களும்  அங்கு நிறையவே இருந்தார்கள். இப்படிப்பட்ட சுகமான பட்டினத்தில் இருந்த வேதராசி எனும் அந்த அந்தணன் விஷ்ணுவின் பக்தர். நல்ல அறிவாளி. அனைத்து வேதங்களையும் கற்றறிந்தவர். தன்னுடைய வர்ணத்துக்கு ஏற்ப தான் செய்ய வேண்டிய தர்ம நெறிக் கடமைகளை செய்து வந்த  ஆசாரிய சீலர்.
அந்த மகா புருஷருக்கு இருந்த மனைவியான சந்தரகாந்தை என்பவளோ அதி சுந்தரியானவள். அதீத இளமைக் கொண்டவள். அங்கமெங்கும் அற்புத நகைகளை அணிந்து கொண்டு பிரகாசித்தவள். அவளைக் காண்பவர்கள் அவளா, வயதான அந்த அந்தணரான வேதராசியின் மனைவி என்று கூறும் அளவிற்கு உடல் வாளிப்பைக்  கொண்டவள். அவளும்  கணவனை தெய்வமாக பூஜிக்கும் மஹா பதி விரதை. வேறு யாரையும் கண்ணெடுத்தும் பார்க்காதவள். கணவர் அவள் மீது என்றுமே கோபமுறாதபடி அவள் அவருக்குப் பணிவிடை செய்து வந்தாள்.
அவள் வீட்டின் அருகில் வித்யாவளி என்று வேசிப் பெண்ணும் இருந்திருந்தாள். அவள் மஹா வேசி. ஆண்களை சல்லாபிப்பதில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவள். சொந்தக் கணவனையே தனது காம இச்சையினால் கொன்று விட்டவள். துர் குணங்களில் பிறப்பிடமே அவள்தான் என்று கூற வேண்டும். ஆனால் அவளைப் பற்றிய விவரம் எதுவும் யாருக்கும் அதிகம் தெரிந்தது இல்லை.
அவள் சந்தரகாந்தையின் வீட்டருகில் இருந்ததினால் வெளியில் போகும்போதும் வரும் போதும் இருவரும் பேசிக் கொண்டு இருப்பதுண்டு. காலபோக்கில் இருவரும் அன்யோன்யமாகி விட்டார்கள். பல விஷயங்களையும் விவாதித்தபடி இருப்பார்கள். ஒரு நாள் அவளை சந்தித்த வித்யாவளி கேட்டாள் ‘சந்தரகாந்தை, உனக்கே தெரியும் உன் மீது நான் அதிக அன்பை வைத்துள்ளது. ஆனாலும் நீ என்னிடம் சில விஷயங்களை மறைக்கின்றாய். உன்னிடம் நான் பல நாட்களாக ஒன்று கேட்க வேண்டும் என நினைத்து இருந்தேன். நீ ஏன் ஏதோ யோசனையுடனே உள்ளாய்? உன் மனதில் துயரம் ஏதும் உள்ளதா? உன் அழகு சந்திரனுக்கு ஒப்பானதாக உள்ளது. இளமையோ உன் மீது ஓயாரமாக ஊஞ்சல் ஆடுகிறது. உன் கணவரால் உனக்கு பூரண திருப்தி ஏற்படுகிறதா? உன் ஆசைகளை பூரணமாக நிறைவேற்றித் தருகிறாரா? இந்த வயது போக பாக்கியங்களை அனுபவிக்க வேண்டிய வயதாகும். இதை நீ உணர்ந்தாயா? உனக்கும் மனதுக்குள் பர்த்தாவின் உடல் மீது ஆசைகள் இருக்க வேண்டுமே. அப்படி உனது ஆசைகளை அவர் பூரணத்துவமாக பூர்த்தி செய்யவில்லை என்றால் அதற்கான வேறு உபாயம் என்னிடம் உள்ளது. அதையும் நான் கூறுவேன். தயவு செய்து என்னிடம் இந்த ரகஸ்யங்களை மறைக்காமல் கூறுவாயா?’ என அன்புடன் கேட்டாள். அவள் மனதிற்குள்ளோ சந்தகாந்தை மீது அதீத பொறாமை இருந்தது. அவள் மனதைக் கெடுத்து , அவளையும் தன்னைப் போல ஆக்க வேண்டும் என்ற தீவீரமான எண்ணத்துடன்தான் அவளிடம் பழகி வந்திருந்தாள். ஆனால் அவளது வஞ்சகத்தை சந்தரகாந்தை அறிந்திருக்கவில்லை.
அதைக் கேட்ட சந்தரகாந்தை வெட்கமும், கோபமும் அடைந்து கூறினாள் ‘ அடியே வித்யாவளி, என்ன துஷ்டத்தனமான வார்த்தைகளைக் கூறுகிறாய். உன் எண்ணமே மோசமாக உள்ளதே. நான் உனக்கு பதில் தராவிடில் உன்னிடம் பயந்தவளாகி விடுவேன். பெண்களுக்கு  ருது (மாதவிலக்கு) கழிந்து ஐந்தாம் நாளன்று ஸ்நானம் செய்தப் பின் அடுத்த பதினாறு நாட்களும்தான் தாம்பத்திய உறவை மேற்கொள்ளும் காலம் ஆகும். ருது (மாதவிலக்கு) கழிந்து குளித்த அந்த பதினாறு நாட்களும்  கழிந்து விட்டால் அதற்குப் பிறகு மீண்டும் ருதுவாகி குளிக்கும் வரை தாம்பத்திய உறவு கொள்ளக் கூடாது என்பதாக சாஸ்திரங்கள் கூறவில்லையா? அந்தப்  பதினாறு நாட்களிலும் கூட உறவு கொள்ளக் கூடாத நாட்களும் உண்டு. அவற்றில் அம்மாவாசை, பௌர்ணமி, ஏகாதசி, துவாதசி, ஷஷ்டி, சதுர்த்தி , இருவரின் ஜன்ம நட்சத்திரம், விரத தினம், ஸ்ராவண மாதம் என வரும் தினங்களும் உண்டு. அது போல பகல், சந்தியா காலம் போன்ற காலங்களிலும் உறவு கொள்ள முடியாது. அந்த நாட்களிலும், நேரத்திலும் உறவு கொண்டு பிள்ளைகளை பெற்றெடுத்தாள் அவர்கள் ஆரோக்கியம் இல்லாமலும், அல்பாயுசாகவும் இருப்பார்கள் என்று வேதங்களை நன்கு கற்றரிந்துள்ள என் கணவர் கூறுவார். ஆகவே நல்ல நாட்களாகப் பார்த்து என் கணவர் எனக்கு தேவையான இன்பத்தை அளிக்கத் தவறுவதில்லை. இனியும் இது பற்றி நீ மேலும் கேட்காதேடி’ என்று வெட்கத்துடன் கூறினாள்.
வித்யாவளியா விடுவாள்… வாயைக் கிண்டியாகி விட்டது. ‘ அடியே அசட்டுப் பெண்ணே, உன்னைப் பார்த்தால் எனக்கு பரிதாபம்தான் வருகிறது. உனக்கு நன்மையை தரும் சில உண்மைகளைக் கூறுகிறேன், கேட்டுக் கொள். எல்லோருக்கும் பிரியமான நாம் உடல் நோய் நொடி இன்றி இருக்க வேண்டுமல்லவா. வயதாகி விட்டால் நம்மை பிணியும் மூப்பும் அல்லவா பிடித்துக் கொள்ளும்.  இதில் இருந்து யார்தான் தப்ப முடியும்? இந்த யௌவன வயதில் அம்மாவாசை, பௌர்ணமி, ஏகாதசி, துவாதசி, ஷஷ்டி, சதுர்த்தி என பார்த்துக் கொண்டு தாம்பத்தியத்தை அனுபவிக்காவிடில் மீண்டும் அந்த இளமை காலம்  திரும்புமா? நீ பாக்கியமில்லாதவள்….. உன் கணவனைப் பற்றி எனக்கல்லவா தெரியும். பொல்லாதவரடி  அவர்….நீ சாது என்பதினால்  உனக்குத் தெரியாமல் வேறு ஒரு தாஸியிடம்,  நீ கூறினாயே அந்த பொல்லாத தினங்கள், அந்த தினங்களில் அவர் உறவு கொண்டு இருக்கிறார். எனக்கு மிகவும் பர்ச்சயமான அவர் தொடர்ப்பு கொண்டுள்ள அந்தப் பெண் என்னிடம் அதைப் பற்றிக் கூறி உள்ளாள். உன் கணவர் அதிக சக்தி இல்லாதவர். அதனால்தான் உனக்கு நாள், கிழமை எனக் கூறி, உன்னை ஏமாற்றுகிறார். அனுபவிக்க வேண்டிய நேரத்தில் அனுபவிக்காமல் இருந்து விட்டால் மீண்டும் அந்த காலம் வாராது தோழி. நீயும் கிழவி ஆகி, உன் கணவரும் கிழவராகி விட்டால், உனக்கு அவர் மீண்டும் இன்பம் கிடைக்குமா, இல்லை உன்னால்தான் மீண்டும் வாழ்கையை அனுபவிக்க முடியுமா …உண்மையை நீ தெரிந்து கொள். வாழ்க்கையைப் பாழடித்துக் கொள்ளாதே’ என்று வித்யாவளி கூறினாள்.
அதற்கு அவளுக்கு பதிலளித்த சந்தரகாந்தை ‘சுந்தரனோ, அழகற்றவனோ, கட்டிய புஸ்ருஷந்தானே ஒரு பெண்ணுக்கு தெய்வம். ஸ்வர்கத்துக்கு செல்ல வேண்டும் எனில் கணவரை அல்லவா பூஜித்தபடி இருக்க வேண்டும். தனது கணவனை தூழிப்பவள் மறு பிறவியில் அற்ப நாயாக அல்லவா பிறப்பு எடுப்பார்கள் என்று வேதம் கூறுகிறது. நல்லவனோ, கெட்டவனோ, என் கணவர் எனக்குப் போதும் ‘. என்றாள்.
வித்யாவளி அவளை விடவில்லை.’ பைத்தியக்காரி சந்தரகாந்தை, நீ கூறினாயே சொர்க்கம் , சொர்கம் என்று, அந்த சொர்க்கத்தில் உள்ள  ஊர்வசி, ரம்பை, மேனகா மற்றும் கிருதாசி போன்றவர்கள் தேவதாசிகள் இல்லையா? பாவ புண்ணியங்களை அறிந்துள்ள அவர்களும் போகத்தை அனுபவிக்காமலா இருக்கிறார்கள் ? புராண இதிகாசங்களைப் பார், ஒவ்வொருவரும் எத்தனை கணவன் மனைவிகளைக் கொண்டு இருந்துள்ளார்கள் என்பது. அதற்குக் காரணம் என்ன? உடல் ஆசைதானே. இத்தனை நளினமான உடலழகைக் கொண்ட நீயும்  அவற்றை எல்லாம் ஏன் வீணடிக்கிறாய்? ஒரு பேச்சுக்காக பாவம் செய்தவன் நரகத்துக்கு செல்வான், புண்ணியம் செய்தவன் சொர்கத்துக்கு செல்வான் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாமே தவிர பாவ புண்ணியங்களினால் சொர்கமும், நரகமும் போவதென்பது சுத்தக் கட்டுக் கதை. இறந்து போனப் பின் சொர்கத்தையும் நரகத்தையும் பார்த்ததாக நம்மிடம் வந்து எத்தனை பேர்கள் கூறி உள்ளார்கள்? பாவ புண்ணியங்களை நானும் நன்குதான் அறிவேன். பிறந்தவர் எவரும் இறக்க வேண்டும் என்பதே நியதி. இறந்தப் பின் யார் எங்கு போனால் என்ன? இறந்தப் பின் உனக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம் உள்ளது? உள்ளவரை உல்லாசமாக இருக்க வேண்டும் அல்லவா. என்னைப் பார். நான் என் கணவனைக் கொன்று விட்டு  என் வாழ்க்கையில் எத்தனை உல்லாசமாக இருக்கிறேன். எனக்கு என்ன கெடுதி வந்து விட்டது? நிம்மதியாக உல்லாசமாக என் வாழ்கையை அனுபவித்தபடி இருக்கிறேன்.’ என்று பசப்பாக வார்த்தைகளைக் கூறிக் கொண்டே இருந்து சந்தரகாந்தையின் மனதை முற்றிலுமாகக் கெடுத்தாள். அன்று மட்டும் அல்ல தினமும் அவளை சந்தித்த வித்யாவளி எதையாவது கூறிக் கொண்டே இருக்க பதி விரதையான சந்த்ரகாந்தையின் மனமும் மெல்ல மாறலாயிற்று. சந்தரகாந்தையின் முற்பிறவிக் கர்மா தலை தூக்கியது. நல்லறிவுடன் இருந்தவள் தர்மத்தை தவற விட்டாள். மெல்ல மெல்ல பிற ஆண்களுடன் சகஜமாகப் பழகத் துவங்கினாள். நல்லொழுக்கம் விலகியது. அடிக்கடி ஆண் இன்பம் தேவைப்பட்டது. முதலில் அடக்கி வாசித்தவள், மெல்ல மெல்ல பகிரங்கமானாள் . அவளது பதி சில நாட்களாக மனைவியின் நடத்தை தடம் புரள்வதைக் கண்டார். அவள் செயல்களை நன்கு கவனிக்கத் துவங்கியவர், அவள் செய்து வந்த லீலைகளை பற்றி அறிந்து கொண்டார். இனியும் அவள் தனக்கு உத்தமமான மனைவியாக இருக்க லாயக்கற்றவள் என்பதை உணர்ந்ததும் அவளை வீட்டை விட்டு துரத்தி விட்டார். அவருக்கு தன் நிலையை எண்ணி வருத்தம் உண்டாயிற்று அனைத்தையும் துறந்து விட்டு, தன் ஊரை விட்டே வெளியில் சென்று தொலைதூர நகரில் இருந்த காவிரிக் கரை ஆற்றின் அருகில் ஒரு குடிசையில் அமைதியாக வசிக்கலானார்.
……………………தொடரும்
  முந்தைய பாகங்கள்