துலா புராணம்- 15
காவிரி ஆற்றின் மகிமை

சாந்திப்பிரியா

அங்கிருந்து கிளம்பிய அர்ஜுனன் வியாச முனிவருடைய ஆஸ்ரமத்துக்கு சென்று தான் தீர்த்த யாத்திரைக்கு செல்வதற்கான காரணத்தைக் கூறிய பின், தனக்கு கிருஷ்ணருடைய சகோதரியான சுபத்ரையை மணக்க ஆசையாக உள்ளதாகவும், அதற்கு அவருடைய ஆசிகளையும் அருளையும் தர வேண்டும் என்று வேண்டினான். அதைக் கேட்ட வியாச முனிவர் அவனிடம் கூறினார் ‘ தனஞ்சயா, உன்னுடைய ஆசை மிகப் பெரியது. அதை அடைவது கடினம் என்றாலும் நீ பிரயர்தனப்பட்டால் அவளை மணம் செய்து கொள்ள முடியும். அதற்கு நீ முதலில் செய்ய வேண்டியது சர்வ மங்களத்தையும் சித்தியையும் தரக்கூடிய லஷ்மி ஹிருதய தோத்திரத்தைத்தான். அது சகல நோய்களையும் நீக்கி ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கூட விருத்தி தரும் வல்லமைப் படைத்தது. அதை ஆராதிப்பத்தின் மூலம் நீ மனதில் விரும்பியதை அடைய முடியும். அதை நான் உபதேசிக்கிறேன் கேட்டுக் கொள்’ என்று கூறிய பின் அவனுக்கு அந்த மந்திரத்தை உபதேசம் செய்தார். அதை மூன்று வேளை ஜெபிக்க வேண்டும். வெள்ளிக் கிழமைகளில் ஜெபித்தால் அதன் சக்தி மும்மடங்காக இருக்கும். உன் அதிருஷ்டத்துக்கு ஏற்ப துலா மாதமும் வெகு விரைவில் வருகிறது. ஆகவே நீ இதை ஜெபிக்க ஆரம்பித்தவுடன் தினமும் காவேரியில் ஸ்நானம் செய்து அந்தக் கரையில் உள்ள ரங்கநாதரையும் வழிபாட்டு வர வேண்டும். சர்வ புண்ணிய தீர்த்தங்களிலும் நீ ஸ்நானம் செய்ததால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அதே அளவிலான புண்ணியம் துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்யும் போதும் உனக்குக் கிடைக்கும். அதற்குக் காரணம் துலா மாதத்தில் அனைத்து நதிகளும் காவேரியில் வந்து கலக்கின்றன. அர்ஜுனா நீ செல்லும் தீர்த்த யாத்திரைகளில் காணும் அனைத்து புண்ணிய நதிகளிலும் மறக்காம ஸ்நானம் செய்தப் பின் லஷ்மி யந்திர வழிபாட்டையும் தொடர வேண்டும். நீ துரியோதனனை ஜெயிக்க வேண்டுமானால், சுபத்ரையை அடைய வேண்டுமானால், உனக்கு ஐஸ்வர்யம் வேண்டும் என்றால் காவேரியில் ஸ்நானம் செய்தப் பின் இந்த லஷ்மி யந்திர ஆராதனை தவறாமல் செய்து வர வேண்டும். ரங்கநாதர் ஆலயத்தில் நெய்யால் ஒரு லட்ஷ தீபம் ஏற்ற வேண்டும். உனக்கு இன்னொரு இரகசியத்தையும் கூறுகிறேன். கேட்டுக் கொள். காவேரிக்கு வலது புறத்தில் மகா புண்ணிய ஷேத்ரம் இன்னும் ஒன்று உள்ளது. அது சிவஷேத்ரம் ஆகும். அதன் பெயர் மயூரம் என்பது (மாயவரம்). கல்ப காலத்தில் பகவான் ஸ்ரிஷ்டி செய்த இரு ஷேத்திரங்களில் மாயவரம் ஒன்றாகும். ஆகவே உடனே கிளம்பிச் சென்று அந்த ஷேத்திரங்களில் ஸ்நானம் செய்து லஷ்மி யந்திரத்தை உபாசித்து சுபத்ரையை மணந்து கொள்ளும் வழியைப் பார்’ என்று அவனுக்கு ஆசிகளைக் கூறி விட்டு அவனை அனுப்பி வைத்தார்.

 அர்ஜுனன் வியாச முனிவரிடம் சென்று  ஆசி கோரினான் 

அர்ஜுனனும் உடனே கிளம்பிச் சென்று பல இடங்களையும் நதிகளில் ஸ்நானம் செய்தான். சில நாட்களில் காவேரிக் கரையையும் அடைந்தான். அங்கு இருந்தபடி பிராமணர்களுடன் சேர்ந்து காவேரி ஸ்நானம் செய்து கொண்டும், கரையில் நடந்து வந்த காலஷேபங்களை கேட்டுக் கொண்டும், லஷ்மி யந்திரத்தையும் வியாச முனிவர் உபதேசித்துக் கொடுத்ததைப் போல ஆவாஹித்துக் கொண்டு இருந்தான். தேவி மகிமைகளையும் கேட்டறிந்தான். அங்கிருந்து கோஷ்டிபுரீஸ்வரர் என்ற இடத்துக்கு சென்று அமிருத புஷ்கரணியில் ஸ்நானம் செய்தப் பின், அந்த நதிக்கரையில் இருந்த ஆலயத்தில் நரசிம்மரையும் வணங்கித் துதித்தான். அங்கிருந்து கிளம்பி விஷ்ணுவிற்குப் பிரியமான நுபூரா நதிக்கு சென்று அதிலும் ஸ்நானம் செய்தான். அது விஷ்ணுவிற்காக பிரத்தியேகமாகவே ஏற்பட்டது. கங்கை நதி அங்கு தானாகவே வந்து பிரவாஹித்தாள். அங்கிருந்து கிளம்பிச் சென்று சஹ்யாத்ரி எனும் பகுதியை அடைந்து அங்கு தத்தாத்திரேயரின் ஆசிகளையும் அருளையும் பெற்றுக் கொண்டு முடிவாக துவாரகாவை அடைந்து அங்கு கிருஷ்ண பரமாத்மரை சந்தித்தான். ஆனந்தக் கண்ணீர் பெருகி ஓட அவரை மனதார ஆலிங்கனம் செய்து கொண்டு தான் வந்த விஷயத்தையும், தன்னுடைய ஆசையும் கூறினான். அதைக் கேட்டு மகிழ்ந்த கிருஷ்ணரும் பலபத்திரர் உள்ளவரை அது நடப்பது அத்தனை எளிதல்ல என்பதினால் ஆகவே ஒரு சன்யாசி வேடம் பூண்டு துவாரகைக்கு வந்து அங்கு தங்கி இருந்தால் மேற்கொண்டு ஆக வேண்டியதை தான் செய்து தருவதாக வாக்கு தந்தார்.

அர்ஜுனன் கிருஷ்ண பகவானிடம்  
சென்று  ஆசி கோரினான்

ஆகவே அர்ஜுனனும் ஒரு சன்யாசி வேடம் பூண்டு துவாரகைக்கு அருகில் இருந்த குகையில் பல காலம் தங்கி இருந்தவாறு தவத்தில் அமர்ந்து கொண்டான். அவன் அர்ஜுனன் என்பது கிருஷ்ணரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இப்படி இருக்கையில் ஒரு விரதத்தை செய்து முடித்த பலபத்திரரும் தனது சைனியங்களுடன் அந்த குகைப் பகுதிக்கு வந்தார். அங்கு யாரோ ஒரு சன்யாசி பலகாலமாக தவத்தில் உள்ளதாகவும், அவர் பெரும் சிறப்புக்களைக் கொண்டவர் என்றும் , அவரை தரிசிப்பது பெரும் புண்ணியத்தையும் தரும் என்பதையும் கேட்டறிந்திருந்த பலபத்திரர் அவரை சந்திக்கச் சென்றார்.

சன்யாசி வேடத்தில் அமர்ந்திருந்த அர்ஜுனனிடம் சென்றவர்கள் அவரை நமஸ்கரித்தார்கள். ‘ மாமுனிவரே, நாங்கள் உங்களுக்கு சேவகம் செய்ய விரும்புகிறோம். ஆகவே நீங்கள் இந்த குகையில் தங்கி இருக்காமல், எங்கள் குடிலுக்கு (அரண்மனைக்கு என்று அர்த்தம்) வந்து தங்கி இருக்க வேண்டும். நீங்கள் வந்தால் அது எங்கள் அரண்மனையும் புனிதமாக்கும். ஆகவே தாங்கள் எங்களுடைய அரண்மனைக்கு வர வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்கள். சன்யாசி வேடத்தில் இருந்த அர்ஜுனன் லேசுப்பட்டவனா? ஏற்கனவே என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்து இருந்ததைப் போலவே அர்ஜுனன் இன்னும் தனது நன்றாகக் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து இருக்க சற்று நேரம் பொறுத்திருந்து பார்த்தவர்கள் அந்த சன்யாசி எதுவுமே பதில் கூறாமல் மௌனியாக இருக்கின்றாரே என்று எண்ணிக் கொண்டு கிருஷ்ணரிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள். அந்த சன்யாசியை அரண்மனைக்கு அழைத்தும் அவர் மெளனமாக இருந்தவண்ணம் இருப்பதினால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அதைக் கேட்ட கிருஷ்ணரும் ஒரு சன்யாசி தனிமையில்தான் இருக்க விரும்புவாரே தவிர அரண்மனைக்கு வந்து ஸ்த்ரீகள் உள்ள இடத்தில் எப்படி இருக்க முடியும் என எதிர்க் கேள்வி எழுப்பினார்.

அப்போது உக்ரசேனர் கூறினார் ‘கண்ணா, நா அரண்மனைக்கு சாதுக்களையும் சன்யாசிகளையும் அழைத்து பிட்ஷை தருவது இல்லையா? அது போலத்தானே இதுவும். நீ சிறியவன். உனக்கு இதெல்லாம் தெரியாது. சாதுக்கள் வரவினால் அவர்கள் செல்லும் இடங்கள் புனிதம் ஆகுமே தவிர அவர் பெண்களை என்ன செய்யப் போகிறார்’ என்று கூறினார். கிருஷ்ணர் கூறினார் ‘ பலராமா, ஒரு யோகியானவர் கிரஹஸ்தர் வீட்டிற்குச் சென்றால் அவருக்கு பாபம் அல்லவா கைகூடும். ஒரு சன்யாசி தானாகவேதான் ஒரு கிரஹஸ்தர் வீட்டிற்குச் சென்றால் அது கடவுளே நம் வீட்டிற்கு வந்ததற்கு சமானம் ஆகும். அந்த சன்யாசியும் அதன் பின் ஸ்வர்க லோகத்தை அடைவார். ஆனால் ஒருவர் அழைத்து அவர் வீட்டிற்கு வந்து பெரு பிடி அன்னம் உண்டாலும், யமராஜன் அவரை நரகத்துக்கு அனுப்பி நாய்களை அல்லவா சாப்பிடச் சொல்வார். அதுதானே தர்ம நெறி. ஆகவே அவர் வரவில்லை என்றால் விட்டு விடுங்களேன்’ என்றார். அதைக் கேட்ட பலராமர் கூறினார் ‘ ஆபத்தில்லாத காலத்தில் ஒரு கிரஹஸ்தன் வீட்டிற்கு ஒரு யோகி சென்று தங்கினால் அப்போது அவர்கள் மகா பாவியாவார்கள். ஆனால் ஆபத்தான நாட்களில் ஒரு துறவி யதி வீட்டில் தங்கினாலும், காட்டில் வசித்தாலும் அவர்களது தேஜஸ்சினால் அந்த இடம் புனிதம் ஆகுமே தவிர அவர்களுக்கு எந்த பாபமும் சேராது’ என்றவுடன் கிருஷ்ணர் வேண்டும் என்றே ‘பலராமா எனக்கென்னவோ இது சரியாகப் படவில்லை. துறவிகள் அனைவரையுமே உடனே நம்பி விடக் கூடாது. அதுவும் அழகான தாஸிகளும், ராஜ குமாரிகளும் நடமாடும் இந்த இடத்தில் அவர்கள் இருந்தால் அவர்கள் மனதில் அவர்களை அறியாமலேயே காமம் வந்து விடும். மஹாயோகியான சௌபாரி முனிவர் மந்தாதாவின் பெண்களிடம் காமம் கொண்டு அவர்களை மணந்து கொண்டப் பிறகுதானே யோகியானார். விஷ்ணுவின் அம்சமான பராசரர் நதியில் பயணம் செய்தபோது செம்படவப் பெண் மீது காமம் கொண்டு அந்தப் பெண்ணுடன் சல்லாபிக்கவில்லையா. அவ்வளவு ஏன், தானே படைத்த திலோத்தமை மீது மோகம் கொண்ட பிரும்மா அவளை அனுபவிக்க ஆசைப் படவில்லையா? ஆகவேதான் துறவிகளை உடனேயே நம்பாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கிறேன்’ என்றார். ஆனால் பரசுராமர் விடவில்லை. அவர் கூறினார் ‘கிருஷ்ணா நீ கூறுபவர்களுக்கும் இந்த சன்யாசிக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. அவர் இங்கு வரட்டும். அவருக்கு பணிவிடை செய்ய நம் சகோதரி சுபத்ரையை அனுப்பலாம். அவளுக்கு திருமணம் ஆகா வேண்டி உள்ளது என்பதினால் ஒரு சாதுவிற்குப் பணி விடை செய்தால் நல்ல பதி கிடைப்பார் அல்லவா’ என்றார். கிருஷ்ணரும் சரி என்று கூறி விட்டார்.
ஆகவே பலராமர் மீண்டும் மற்றவர்களுடன் அர்ஜுன சன்யாசி இருந்த இடத்துக்கு சென்று அது மழை காலம் என்பதினால் ஒரு சன்யாசியால் ஊருக்கும் மடத்துக்கும் செல்வது எளிதாக இருக்காது என்பதினால் அரண்மனையில் தனி இடம் அமைத்துத் தருவதாகவும், அவருக்கு அந்த இடத்தில் யாராலும் தொந்தரவு இருக்காது என்றும், அங்கு வந்து இருந்து கொண்டு தாம் அனைவரையும் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்குமாறும், தவத்தை தொடர்ந்து கொண்டு இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்கள்.

 அர்ஜுன  சன்யாசியிடம்  அனைவரும் சென்று
அவரை  அரண்மனைக்கு  வருமாறு அழைத்தார்கள்

அவர்கள் அங்கு சென்று பலவாறாக அவரிடம் பேசி அர்ஜுன சன்யாசியை அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள். அவர் வந்ததும், அவருக்கு தனி இடத்தை அமைத்துக் கொடுத்து தியானத்தை செய்ய வழி வகுத்தார்கள். அவருக்குப் பணிவிடை செய்ய சுபத்ரயையும் அனுப்பினார்கள். அவளும் வேளா வேளைக்குச் சென்று பிட்ஷை வந்து விட்டது என்பாள், ஜலமோ அல்லது புஷ்பமோ அவருக்கு எந்த காலத்தில் எது தேவையோ அதைக் கொண்டு போய் தந்தவண்ணம் இருந்தாள். இப்படியாக சில நாட்கள் கழிந்தன. அப்போது ஒரு நாள் அவருடைய ராஜ லஷணத்தை தூரத்தில் இருந்தே பார்த்துக் கொண்டே இருந்த சுபத்ரைக்கு அவர் மீது தன்னை அறியாமல் பெரிய சந்தேகம் வந்து விட்டது.

…..தொடரும்
முந்தைய பாகங்கள்