துலா புராணம்- 12
காவிரி ஆற்றின் மகிமை

சாந்திப்பிரியா

 

இப்படியாக நாரதர் கூறிய கதையைக் கூறிய பின் அகஸ்திய முனிவரும் அங்கிருந்த அனைவருக்கும் மற்றும் அரிச்சந்திரனுக்கும் துலா ஸ்நான விதி, அதற்க்கான தின விதிமுறைகள், அக்னி பூஜா முறைகள் போன்றவற்றை விஸ்தாரமாக எடுத்துரைத்தார். அவற்றைக் கூறியப் பின் தன் பங்கிற்கு அக்னி பூஜை விஷயத்தில் தவறு செய்து விட்டால் அந்த பாபத்தை அகற்றிக் கொள்ள வழி உள்ளாதா என்பதை விளக்கும் ஒரு சிறிய கதையைக் கூறினார். அகஸ்தியர் கூறலானார் ‘ முன் ஒரு  காலத்தில் சந்தபனன் என்றொரு பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்தவர். தர்ம நிஷ்டானாம் செய்து வந்ததுடன் மற்றவர்களுக்கும் தர்மோபதேசம் செய்து வந்தார். அவர் இரண்டு வேளையிலும்  அக்னி பூஜையும் செய்து வந்தார். அவருக்கு தர்மலன் மற்றும் தர்ம விருத்தி என்ற இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களுக்கும் சாஸ்திரங்களைக் கற்றுத் தந்து தக்க நேரத்தில் திருமணமும் செய்து வைத்தார். ஒரு நாள் தனக்கு வயதாகி விட்டதை அவர்களுக்கு எடுத்துக் கூறியப் பின் , அவர்களுக்கு ஒரு உபதேசம் செய்தார் ‘புத்ரர்களே, நீங்களும் என்னைப் போலவே தினமும் இரண்டு வேளையும் நியமம் தவறாமல் அக்னி பூஜை செய்ய வேண்டும். எந்த வீட்டில் அக்னி பூஜையை சரிவர செய்கிறார்களோ அங்கு யமன் அனாவசியமாக தலைக் காட்டமாட்டார். தேவைப்பட்டால் மட்டுமே வருவார். இல்லை என்றால் சிவகணங்களும், வைகுண்ட கணங்களும் பார்த்துக் கொள்வார்கள் என இருந்து  விடுவார். ஆகவே நீங்கள் உங்கள் வீட்டு நன்மைக்காக அக்னி பூஜையை முறைப்படி செய்து வர வேண்டும்’.

இப்படி இருக்கையில் காலவாக்கில் சந்தபனன்  மரணம் அடைந்து விட யம தூதர்கள் தங்க பல்லக்கை எடுத்துக் கொண்டு வந்து அவரை அதில் ஏற்றிக் கொண்டு சொர்கத்துக்கு சென்றார்கள். அவரது மனைவியும் கணவருடன் உடன்கட்டை ஏறி விட்டாள். அவர்களுடைய இரண்டு மகன்களும் தந்தை கூறிய உபதேசத்தை மதித்து  தர்ம நெறிப்படி வாழ்ந்து வந்தார்கள்.

ஒரு முறை தர்ம விருத்தி யாத்திரைக்கு சென்று இருந்தபோது தந்தையின் சிரார்த்த தினம் வந்தது. அவனுடைய மனைவி அதே ஊரில் இருந்த பிறந்த வீட்டிற்குச் சென்று இருந்தாள். சிரார்தம் நடந்த தினத்தன்று தர்மலனின் மனைவி அசௌகரியமாக இருந்ததினால் அவள்  இல்லாமலேயே தர்மலன் சிரார்தத்தை நடத்திக் கொண்டார். ஆனால் தர்ம சாஸ்திர விதிப்படி  பத்தினி இல்லாமல் செய்யப்படும் சிரார்த்தம் ராக்ஷஷர்களுக்கு ஒப்பானது என்று கூறி அங்கு வந்த பித்ருக்கள் அவர் கொடுத்த அவிர் பாகத்தை ஏற்க மறுத்து அவருக்கு சாபமும் கொடுத்து விட்டுச் சென்று விட்டார்கள்.

சில காலம் பொறுத்து தர்ம விருத்தியும் அவர் சகோதரனும் மரணம் அடைந்து விட அவர்கள் இருவரையும் யம லோகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு யமதர்மராஜர்  தர்ம விருத்தியை மிக நேர்த்தியாக உபச்சரித்து ஸ்வர்கத்துக்கு அனுப்ப உத்தரவு இட்டார். ஆனால் அவருடைய சகோதரனான  தர்மலனை  ஸ்யாமா மற்றும் சபள என்ற வெறி நாய்கள் கடித்துக் குதறுமாறு  ஆணை இட்டார். அதைக் கேட்டு பதபதைத்த தர்ம விருத்தி அதற்கான காரணத்தைக் கேட்டபோது யமன் கூறினார் ‘ நீயும் உன் சகோதரனும்  தர்ம நெறிமுறைகள்  அனைத்தையும் சரியான முறையில்  அனுஷ்டித்து வந்திருந்தாலும், அக்னி பூஜையை நியமத்துடன்  செய்யவில்லை. ஆகவே உன் சகோதரனுக்கு  அந்த தோஷத்துக்கு இந்த தண்டனை தரப்படுகிறது. ஆனால் நீயோ தீர்த்த யாத்திரைக்குப் போய் காவேரி ஸ்நானமும் செய்து விட்டு வந்து விட்டதினால் உன்னை அந்த தோஷம் பாதிக்கவில்லை’ என்று கூற, தர்ம விருத்தியோ தன்னுடைய புண்ணியத்தில் பாதியை தனது சகோதரனுக்கு தந்து விடுவதாகவும் அவரை விட்டு விடுமாறும் கூறினார். ஆனால் ‘அக்னி பூஜையை சரிவர செய்யாத பாவாத்மாக்களுக்கு யார் தன்னுடைய  புண்ணியத்தை தந்தாலும், அது அந்த அக்னியில் கரைந்து இருவருக்கும்  பிரயோஜனம் இல்லாமல் போய் விடும் என்பதினால் அதை ஏற்க முடியாது என்றும், அக்னி பூஜை அத்தகைய மேன்மையான பூஜை என்றும் அவர்களுக்கு எடுத்துக் கூறிய  யமராஜர்  தர்ம விருத்தியை ஸ்வர்கத்துக்கும், தர்மமலனை நரகத்துக்கும் அனுப்பினார். இப்படிப்பட்ட மேன்மையான அக்னி பூஜையை சரிவர செய்யவில்லை என்றால் இதுதான் நடக்கும்’ என்று கதையைக்  கூறி முடித்த அகஸ்தியர் நடுவில் தாம் நிறுத்திய நாரதர் தருமருக்குக் கூறியதான கதையை மீண்டும் தொடர்ந்து கூற ஆரம்பித்தார்.

அக்னி பூஜையில் தோன்றி அருள் புரியும் அக்னி தேவர்  

தருமருக்கு நாரதர் கூறலானார் ‘ ஒரு சமயம் சந்தனு மகராஜன் வனத்துக்கு வேட்டையாடச் சென்றான். அப்போது யமுனையில் இருந்து அற்புதமான மணம் வீசியது. அது என்ன வாசனை என்பதைக் கண்டறிய  அங்கு சென்றவர் அங்கு அழகான பெண் ஒருவளைக் கண்டார். அவளிடம் ‘நீ யார், எங்கிருந்து வந்தாய்’ எனக் கேட்டபோது அவள்   ‘மன்னா நான் சம்படராஜனின் மகளான  மத்யஸ்கந்தி என்பவள். மேலும் திருமணம் ஆகாதவள். என் தந்தைக் கூறியபடி இங்கு ஓடம் ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்’ என்றால்.  அதைக் கேட்ட சந்தனு அவளிடம் மோகம் கொண்டு தன்னை மணக்குமாறு கேட்க அவளும் தன் தந்தையிடம்   கேட்க வேண்டும் என்று கூறி விட்டாள்.

அவள் கூறியபடியே சந்தனுவும்    தந்தையிடம் சென்று அவரது மகளை தான் திருமணம் செய்து கொள்ள விருப்பப்டுவதாகக் கூற, அதற்கு ஒப்புக் கொண்டவர் ஒரு நிபந்தனை இட்டார். ‘மன்னா, உனக்குப் பிறகு என் மகளுக்குப் பிறக்கும் பிள்ளையே நாட்டை ஆள வேண்டும். அது சம்மதம் என்றால் அவளை உனக்கு திருமணம் செய்து கொடுக்கிறேன்’.

ஆனால் அந்த நிபந்தனையை சந்தனுவால் ஏற்க முடியவில்லை என்பதினால் தன் நாட்டிற்கு திரும்பி விட்டான். நாடு திரும்பினாலும் அவன் மனதில் அந்த மங்கை மீதான காமமும் ஆசையும் குறையவே இல்லை. உடல் நலமுற்றான். தேகம் மெலிந்தது. அந்த நேரத்தில் அவருடைய குல குருவான தௌம்யர் அங்கு வந்து அவன் மனக் குறையை அறிந்து கொண்டு அவன் நினைத்ததை அடைய துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்து ரங்கநாதரை தோத்திரம் செய்யுமாறு அவனுக்கு  வழி கூறினார். அது மட்டும் அல்லாமல் அந்த ஸ்லோகத்தையும் அவனுக்கு உபதேசித்தார்.

நாரதர் மேலும் கூறினார் ‘இந்த மந்திரம் ரகஸ்யமானது. வாழ்க்கையில் அனைத்தையும் அளிக்கவல்லது. சர்வ மங்களத்தையும்  தரும். ஆகவே நீ இதை நியமத்துடன் ஜெபித்து மத்யஸ்கந்தியை திருமணம் செய்து கொள்’ என்று கூறிய குல குருவான தௌம்யர் அங்கிருந்து சென்று விட்டார்.

சந்தனு நாடு திரும்பினார். தனது ராஜ்யத்தை பீஷ்மரிடம் கொடுத்து விட்டு பலகோடி சைன்னியங்களுடன் சென்று காவேரியில் ஸ்நானம் செய்து ரங்கநாதரை முறைப்படி வழிபட்டார். வழியில் அவரை எதிர்த்த அனைத்து மன்னர்களையும் வென்று வெற்றி வாகை சூடினாலும் மனதில் மட்டும் மத்யஸ்கந்தி மீதான ஆசை மட்டும் குறையவே இல்லை. அதை அறிந்த பீஷ்மர் சம்படராஜனிடம் தானே சென்றார். அவரிடம் சந்தனுவிற்கு மத்யஸ்கந்தியை மணம் முடித்துத் தருமாறு கேட்க மத்யஸ்கந்தியின் தகப்பனும் சந்தனுவிற்கு விதித்த அதே  நிபந்தனையை பீஷ்மரிடமும் கூற அதை பீஷ்மர் ஏற்றுக் கொண்டார். ஆனால் சம்படராஜன் சற்று பயந்து விட்டுக் கூறினான், ‘ராஜகுமாரா, இன்று நீங்கள் இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டாலும், நாளை நீங்கள் திருமணம் செய்து கொண்ட உடன் உங்களுக்குப் பிறக்கும் குழந்தை என்னுடைய பேரனைக் கொன்று  விட்டு ஆட்சியைப் பிடித்துக் கொள்ளமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்பதினால்தான் தயங்குகிறேன்’ என்று கூறினார். அதைக் கேட்ட பீஷ்மர்  தான் திருமணம் செய்து கொண்டால்தானே அந்தப் பிரச்சனை எழும் என்பதினால் தான் உயிருள்ளவரை திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று அவனிடம் சத்தியம் செய்து கொடுத்தார். அதன் பின் சந்தனு மத்யஸ்கந்தியை மணம் செய்து கொண்டு பல காலம் ஆட்சி செய்து வந்தார். இதற்கு அவர் செய்த துலா ஸ்நானமும், ரங்கநாதர் ஜபமுமே காரணம்’ என்று நாரதர் கூறி முடித்தார்.

அவற்றைக் கூறி முடித்ததுடன் தனக்கு வேறு வேலை உள்ளதினால் கிளம்பிச் செல்வதாக நாரத முனிவர் கிளம்பியபோது ஓடோடி வந்த பாண்டவர்களின் மனைவியான திரௌபதி அவர் கால்களில் விழுந்து வணங்கியப் பின் தனக்கிருந்த சந்தேகத்தையும் தீர்த்து வைத்து விட்டுப் போகுமாறு வேண்டிக் கொண்டாள்.

…….தொடரும்
முந்தைய பாகங்கள்