முன்னரே கூறியது போல தக்ஷ்யன் ஒரு முறை செய்த யாகத்தில் தானும் சென்று பங்கேற்க பார்வதி விரும்பினாள். கோபமுற்ற சிவபெருமான் அதற்கு முதலில் சம்மதிக்கவில்லை. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆகவே அதில் கோபமடைந்த பார்வதி தனக்கும் அவரைப் போலவே சக்தி உள்ளது என்பதை எடுத்துக் காட்ட பத்து பயங்கரமான மற்றும் சாந்த வடிவங்களில் சிவனைச் சுற்றி நின்றபடி நடனம் ஆட அவர் எந்த பக்கம் திரும்பினாலும் அங்கு ஒரு தோற்றத்தைக் காட்டி தன்னுடைய சக்தியை வெளிப்படுத்தி சிவனை சாந்தம் அடையச் செய்து அந்த யாகத்தில் கலந்து கொள்ளச் சென்றாளாம். அப்படி செய்தபோது வெளியானதே தூமாவதி தேவியின் தோற்றமுமாம். ஆகவே அவளும் யந்திரமாக செய்து ஆராதித்து சக்தியை பெறத்தக்க சக்தி தேவதை என்றாலும் அவளுடைய யந்திர ஆராதனை மிகக் கடினமாம்.
தச மஹாவித்யா — 5
மஹாவித்யா – (5)
தூமாவதி தேவி
சாந்திப்பிரியா
மகா வித்யா தேவிகளில் இன்னொருவளே தூமாதேவி. அவள் துக்கங்களின் தேவி .சிவன் இல்லாவிடில் கூட அவர் இருப்பவர் என்பது அவர் சிறப்பு. ஒரு முறை சிவா பெருமான் அனைவருக்கும் சில கடமைகளை செய்யுமாறு ஒதுக்கியபோது அவளுக்கு ‘ நீ துக்கங்களின் அதிபதி ‘ என்றாராம்.
அவள் பார்ப்பதற்கு விதவைப் போல காட்சி தருபவர். காகத்தின் மீது அமர்ந்து கொள்பவர். கிழிந்த ஆடை, பொலிவில்லாத முகம். வெள்ளை உடை. மூக்கு கூர்மையானது. தலை முடி சீவி விடப்படாமல் கோபமான கண்களுடன் காட்சி தருபவர். அவர் ஸ்மசானங்களில் உள்ள புகைகளை விரும்புபவர். புகையுடன் கூடிய இடங்களில் வசிப்பவர். அவர் குதிரைகள் இழுக்காத தேரில் அமர்ந்து இருப்பார். அவளுடைய தேரை இழுப்பது காகங்களே. அவள் கழுத்தில் தொங்குபவை காபாலங்கள். சில நேரங்களில் அவள் சுடுகாட்டில் உள்ள பிணங்களை தின்று கொண்டு இருப்பார். சில நேரத்தில் சண்டா மற்றும் முண்டா என்ற அசுரர்களின் ரத்தத்தைக் குடித்துக் கொண்டு இருப்பது போல காட்சி தருவார். சில நேரத்தில் அவள் கைகளில் யம பெருமானின் வாகனமான மாட்டின் கொம்பு இருக்கும். அவள் துக்கங்களின், வறுமையின், துன்பங்களின் அதிபதி. நல்ல காரியங்களை செய்யக்கூடாது எனப் படும் சதுர் மாதங்களில் தோன்றி வசிப்பவள். பிரளய காலங்களில் அவள் ஆதிக்கம் அதிகம். படைத்தல் மற்றும் அழிதல் சரியான அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக படைக்கப்பட்டவள் அவள் எனக் கருதப்படுவதினால் பிரளயத்தை ஏற்படுத்துபவள் என்றும் கூறுவார்கள். அவள் ஒரு யுத்த தேவதை. அவளைப் பற்றிய புராணக் குறிப்புக்கள் இல்லை என்றாலும் இவை அனைத்தும் மஹா வித்யா தோன்றிய பிறகே வெளியான செய்திகளாம்.
இத்தனை மோசமான குணங்களுடன் காட்டப்படும் அவள் ஏன் மஹா வித்யாவின் ஒரு தேவியானாள்? அதற்குக் காரணம் அவள் பராசக்தியின் ஒரு அவதாரம்தான், அசுரனை வதம் செய்ய படைக்கப்பட்டவள்தான் என்பதினால் அவளுக்குள்ள சக்தியின் குணம் போய்விடுமா என்ன? சிலரை அழிக்க சில ரூபங்கள் தேவை. ஆகவேதான் தூமாவதியாக தோன்றி இருந்தாலும் அவள் மிகவும் கருணை மிக்கவளாகத் திகழ்கிறாள். தன்னை சரணடைந்து வந்தவர்கள் கேட்கும் வரம் அனைத்தையும் தர வலிமை உள்ளவள். பெண்களுடன் அதிகம் வசிப்பவள். குழந்தை பாக்கியம் தருபவள். மரணம் அடைந்தவர்களை நல்ல லோகத்துக்கு அனுப்பி வைப்பவள். அவளை ஆயிரம் பெயர் சொல்லி பூஜிப்பார்களாம்.
அவள் பிறப்பு பற்றி கூறப்படுவது என்ன எனில், தக்ஷய யாகத்தில் ஏற்பட்ட சில நிகழ்சிகளினால் கோபம் ஏற்பட்டு பின்னர் அந்த கோபம் அடங்க , மடிந்த போன மனைவியின் உடலை சிவ பெருமான் எரித்தபோது அவளது உடலில் இருந்து தோன்றியவளே தூமாவதி தேவி என்கிறார்கள். பார்வதியின் உடலில் இருந்து வெளி வந்தவள் பசியெடுத்து அவரைப் பிடித்து தின்ன முற்பட்டாள். அப்போது அவரை அவள் முழுங்கி விட்டாள். ஆனால் அவர் தன்னை வெளியில் விட வேண்டிக்கொண்டு உயிர் பிழைத்தார். ஆகவே அவள் தீயவற்றின் சொந்தக்காரியாக இரு என சிவபெருமான் சபித்தாராம். மற்றொரு கதை அவளை துர்க்கை நிஷும்பாவை அழிக்கச் சென்றபோது தனக்கு உதவ பயங்கரமான குணத்தைக் கொண்ட அழிவு தேவதையாக அவளை படைத்தாள் என்கின்றது.