மஹாவித்யா  –  (4)  
திரிபுரா  பைரவி  தேவி
சாந்திப்பிரியா 

திரிபுரா  பைரவி என்பவள் மகா வித்யாவின் பத்தாவது தேவியாவாள். அவளுக்குப் பல ரூபங்கள் உண்டு. ஒன்று சாந்தமான தோற்றம், இரண்டாவது பயங்கரமானத் தோற்றம். இரண்டிலும் நான்கு கைகள், மூன்று கண்கள். மகா சக்தி துர்காசுரனை வதம் செய்தபோது தன்னுடைய உடலில் இருந்து வெளியேற்றிப் படைத்த பல சக்திகளில் அந்த ரூபமும் ஒன்று. அதையும் சிவனுக்கு பார்வதி காட்டினாள்.

சாந்தமான தோற்றத்தில் உள்ளவள் ஆயிரம் சூரியன்கள் ஜொலிப்பது போல ஜொலித்தபடியும், கையில் ஜெபமாலை, பால் குடம் மற்றும் புத்தகம் வைத்துக் கொண்டு, புன்சிரிப்போடு அபாய முத்திரையைக் காட்டிக்  கொண்டு இருந்தாலும் கழுத்தில் மனித கபாலங்கள் கோர்த்த வெள்ளை மாலையை அணிந்து கொண்டு காட்சி தருவாள்.அவளை காளியின் மற்றொரு ரூபம் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் பயங்கரமான தோற்றத்தில் உள்ளவளோ கழுதை மீது அமர்ந்து கொண்டு, தலை முடிகள் பறக்க, கையில் வாள் ஏந்திக் கொண்டு, உடம்பெல்லாம் ரத்தம் ஓட ஒரு யுத்த வீரனைப் போல காட்சி தருகிறாள். அவள் சண்டா மற்றும் முண்டா என்ற அசுரர்களை அழித்தவுடன் அவர்களது ரத்தத்தைக் குடித்தபோது அவள் வாயில் இருந்து வெளியே வந்து வழிந்தது ரத்தம்.

அவள் தீயவர்களுக்கு  விரோதி, நல்லவர்களுக்கு நல்லவள். அவளுடைய பல ரூபங்களில் திரிபுரா பைரவி, கால பைரவி, சித்த பைரவி, சைதன்ய பைரவி மற்றும் ருத்ர பைரவி , சாமுண்டேஸ்வரி போன்றவை அடங்கும். அவளுடைய யந்திரத்தை ஆராதித்து சித்தி பெற ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் முறை மந்திர உச்சாடனம் செய்ய வேண்டுமாம். அப்படி செய்து விட்டால் அவர்களுக்கு நினைத்த காரியம் கைகூடும், காரியத் தடங்கல்கள் விலகும், ஆன்மீக ஞானம் பெருகும் என்கிறார்கள். ஆனால் அவளை ஆராதிப்பதில் மிக கவனம் தேவை.