மஹாவித்யா – (10) 

 

மாதங்கி தேவி

சாந்திப்பிரியா

மாதங்கியும் மகா வித்யாவின் ஒன்பதாவது சக்தி தேவியே. அவள் தோன்றிய கதை இது.  இவளும் லலிதா பரமேஸ்வரியுடன் பண்டாஸுர வாதத்தில் கலந்து கொண்டவள் ஆவார். அவள் எப்படி முதலில் தோன்றினாள் என்பதைக் கூறும் கதை இது. ஒருமுறை சிவபெருமானின் மனைவியான பார்வதி தன்னுடைய தந்தையின் வீட்டுக்குச் செல்ல விரும்பினாள். அவள் தன்னுடன் வருமாறு சிவனையும் அழைத்தாள். ஆனால் அவரோ அவளை முதலில் போகச் சொல்லிவிட்டு, திரும்ப வரும்போது தான் வந்து அழைத்து வருவதாகக் கூறினார். அவளும் தந்தையின் வீட்டுக்குச் சென்று விட்டாள்.

சிவபெருமானினால் அவளைப் பிரிந்து இருக்க முடியவில்லை. ஆகவே ஒரு நாள் அவள் என்ன செய்கிறாள் எனப் பார்க்க ஆசைப்பட்டு ஒரு நகை வியாபாரி உருவில் மாமனார் வீட்டுக்குச் சென்றார். நகைகளைப் பார்த்து வாங்க ஆசைப்பட்டவளிடம் பணத்திற்குப் பதிலாக அவளே தனக்கு ஒரு நாள் வேண்டும் என்றார். பார்வதி அதைக் கேட்டு கோபமுற்று அவரை சபிக்க நினைத்தாள். அப்போது அவள் உள் உணர்வு அவளை தடுத்து, அவளையே அழைக்கும் தைரியம் சிவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது எனவும் வந்துள்ளது சிவனே எனவும் கூறியது. அவளும் அதை வெளிக் காட்டாமல் சரி பிறகு ஒரு நாள் வருகிறேன் எனக் கூறி அவரை அனுப்பி விட்டாள். பின் ஒரு நாள் தன்னை ஒரு சண்டாளி போல ( தாழ்ந்த குலத்தவள் ) மாற்றிக் கொண்டு ஒரு நாள் அவரைக் காணச் சென்றாள். அற்புதமான பாடல்களைப் பாடி ஆடியவள் இனிய கீதமும் இசைத்தாள். அவளைக் கண்டதும் அவளை அடையாளம் கண்டு கொண்ட சிவனோ, அதை வெளிக் காட்டாமல் அவளை யார் அவள் எனக் கேட்க அவளும் தான் சண்டாள குலத்தை சேர்ந்தவள் எனப் பொய்யாகக் கூறி அவரை சோதிக்க விரும்பினாள். அவரும் சரியெனக் கூறி அவளைக் கட்டி அணைத்து அவளை தான் புரிந்து கொண்டதை வெளிப்படுத்தினார். ஆகவே தன்னிடம் வந்து தன்னை சண்டாளி என தன்னைக் காட்டியதினால் அந்த அவதாரமும் அவளுக்கு பெருமை தரும் எனக் கூறி அவள் தாழ்ந்த ஜாதியை சேர்ந்த ரிஷியான மாதங்கியின் மகளாகப் பிறந்து தன்னை மணக்க வேண்டும் என அருள் புரிய அவளும் மாதங்க முனிவரின் மகளாக பிறந்து மாதங்கி என பெயர் பெற்று சிவபெருமானை மணந்து கொண்டாள்.

பார்வதியை சண்டாளியான மாதங்கி ரூபத்தில் வணங்கும் தாத்பர்யம் என்ன என்றால், மனிதப் பிறவிகள் அனைவரும் இறைவனுக்கு ஒன்றுதான். அங்கு மேல் ஜாதி என்பதோ கீழ் ஜாதி என்ற பேதமோ கிடையாது. இறைவன் அனைவரிடமும் உள்ளார் என்பதை உணர்த்துவதே அந்த அவதாரம். அதி ஆற்றல் பெற்ற ஒரு ரிஷியின் மகளாகப் பிறந்து சிவனை மணந்த அவள் சிவனை மயக்கப் பாட்டுப் பாடி, இனிய சங்கீதத்தை வெளிபடுத்தியதினால் தொண்டைகளின் அதிபதியானாள். ஆன்மீக ஞானம் , வாக்கு சாதுர்யம், இசை ஞானம் பெற அவளை ஆராதிக்கின்றனர். நல்ல கரிய நிறம் கொண்டவள் தன் கையில் வீணைப் போன்ற வாத்தியத்தை ஏந்தி சரஸ்வதியைப் போல காட்சி தருகிறாள். சில நேரங்களில் வாத்தியமும் இன்றி காட்சி தருகிறாள்.

இவளையை ஏன் யுத்தத்தில் ஒரு தேவதையாக லலிதா பரமேஸ்வரி எடுத்துக் கொண்டாள் என்றால் வாக்கின் ஒரு அதிபதியான அவள் அந்த யுத்தத்தில் பண்டாசுரன் தனது சேனைகளுக்கு கட்டளைகளை கொடுக்க முடியாமல் அவன் தொண்டை சப்தத்தை தடுத்து நிறுத்தி அவனது சேனைகள் தேவியின் சேனைகளினால் அழிக்கப்பட உதவினாள். இதனால்தான் தொண்டையின் அதிபதியான  இவளும் வாக் தேவதையில் ஒருவளாக இருக்கலாம் என்பதாக கூறுகின்றார்கள் .