தெரிந்த ஆலயம்…பலரும் அறிந்திடாத வரலாறு   -11
சென்னை  பாரிமுனை 
கச்சாலீஸ்வரர் ஆலயம்
சாந்திப்பிரியா
 
நாம் அனைவருமே ஆலயங்களுக்கு அது நடக்கும், இது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் செல்கின்றோமே தவிர  அந்த ஆலயம் வந்தது எப்படி, அதன் மகத்துவம் என்ன என்பதை புரிந்து கொள்வது இல்லை. ஆகவே ஆலய விவரத்தை அறிந்து கொண்டு சென்று வழிபடுவது சிறந்தது என்பதற்காக எழுதப்பட்டு உள்ளதே இந்த கட்டுரை.
1720 ஆம் ஆண்டு சென்னை தம்புச் செட்டி சாலைக்கு அருகில் உள்ள ஆர்மனியன் தெருவில் அமைந்துள்ளது  இந்த ஆலயம்.  சமிஸ்கிரதம் மற்றும் இந்தியில் கச்சா என்றால் ஆமை என்று பொருள்.  இந்த ஆலயத்தில் ஒரு காலத்தில்  விஷ்ணுவானவர் கூர்மாவதாரம் எடுத்தபோது ஆமை வடிவம் எடுத்து  வந்து  சிவபெருமானை வணங்கினாராம். அதனால்தான் அதன் பெயர் கச்சாலீஸ்வரர் என ஆயிற்று என்கிறார்கள்.
அந்த ஆலயம் அங்கு வந்தது எப்படி?  அந்த காலத்தில் செட்டி நாட்டவர் அதிகம் வாழ்ந்த இடம் அது. அநேகமாக அனைத்து இடங்களும்  பெர்ரி  என்ற பிரிவு செட்டியார்களிடம்தான் இருந்தன.  பெரும் செல்வந்தர்கள் அவர்கள். அருகில் உள்ள கந்தசுவாமி ஆலயத்தைக் கட்டியவர்களும் அவர்கள்தான்.  அப்படிப்பட்ட சமூகத்தினரில் தலையாட்டி செட்டியார் என்பவர் இருந்தார். அவர் அடிக்கடி காஞ்சிபுரம் சென்று சிவபெருமானை வணங்கி  விட்டு வருவது வழக்கமாம்.  அப்படிப்பட்ட நிலையில் ஒரு நாள் பயங்கர மழை. செட்டியாரினால் காஞ்சிபுரம் செல்ல முடியவில்லை  . மனம் வருந்தினார்.  ஈசனைப்  பார்க்காமல் எப்படி இருப்பது?  தூக்கம்  வராமல்  தவித்தவர்  கனவில்  சிவபெருமான்   தோன்றி  ‘என்னை    நீ   இங்கேயே  பார்க்கும்  வகையில்  ஆலயம் கட்டி   வழிபடு’  எனக்  கூற  அந்த ஆலயத்தை  அந்த செட்டியார் நிறுவினார் .
ஆலயத்தில் விஷ்ணுவானவர் ஆமையாக சிவ பெருமானின்  பாதத்தை  வணங்கிக் கொண்டு இருக்க சிவலிங்கத்தின் பின்புறம் சிவபெருமான் இந்து தலைகளைக் கொண்டு சதாசிவ மூர்த்தியாக மனைவி மனோகரியுடன் காட்சி தருகிறார். அப்படிப்பட்ட சிவபெருமானின் வடிவத்தை வேறு எங்குமே காண முடியாது. அவருடைய மனைவி பார்வதி சுந்தராம்பிகை என்ற பெயரில் தனிச் சன்னதியில் இருக்கிறாள்.  வருடாந்திர உற்சவத்தின்போது கந்தசுவாமி ஆலய மூர்த்தி ஒரு மன்னனைப் போல அந்த நேரத்தில் உருமாறி காளிகாம்பாளுடன் ஊர்வலமாக வந்து கச்சாலீஸ்வறரை வணங்கி நன்றி கூற ஆலய தெப்ப உற்சவம் துவங்கி நடைபெறுமாம்.  வேத ஆகம  முறையில் பூஜைகள் நடைபெறுகின்றன  . ஆலயத்தில் பஞ்சமுக விநாயகர், முருகன், நாயன்மார்கள், நவகிரகங்கள் என அனைத்தும் உள்ளன.  அங்குள்ள துர்காதேவியை  ராகு காலத்தில் பூஜை செய்து  புத்திர பாக்கியம் பெறவும், திருமணம் நடக்கவும்  வேண்டுகின்றனர். ஆலயத்தில் என்னொரு அபூர்வ காட்சி என்ன எனில் தத்தாத்திரேயர்  அனுசூயாவுடன் உள்ள காட்சி உள்ளது.  போர்ணமியில் கால பைரவருக்கு நடத்தப் படும் பூஜை தீமைகளை விரட்டுமாம்.