திக்குவாய் முனிவர்
சொன்ன நீதிக் கதை-3
சாந்திப்பிரியா
முன்னொரு காலத்தில் காஷ்யப முனிவருக்கு பல கணங்கள் மகன்களாகப் பிறந்தனர். அஷ்டவசுக்கள் அவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்றாலும் திருமணம் ஆயிற்று. கானகங்களில் மனைவிகளுடன் சென்று திரிந்தனர். ஒரு முறை வசிஷ்ட முனிவர் காமதேனுப் பசுவை தேவேந்திரனிடம் இருந்து சில நாட்கள் இரவலாகப் பெற்றுக் கொண்டு தம் குடிலில் வைத்துக் கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் அங்கு சென்ற அஷ்டவசுக்கள் ஒருவரின் மனைவி அதன் அழகில் ஆசைப்பட்டு அதைக் கேட்க அஷ்டவசுக்கள் அதை திருடிக் கொண்டு சென்று விட்டனர். ஆகவே கோபமடைந்த வசிஷ்டர் அவர்களுக்கு மனிதர்களாகப் பிறக்குமாறும் அவர்களில் முக்கியத் திருடரைத் தவிற அனைவரும் சில காலமே அங்கு வசித்தப் பின் பூமா தேவி மூலம் விமோசனம் பெறுவார்கள் என்றார். சில காலம் பொறுத்து பூமியில் பிரதீபா என்ற மன்னனின் மகனாகப் பிறந்து இருந்த சந்தனுவுக்கு பூமாதேவி மனைவியாகப் பிறப்பு எடுத்திருந்தாள். அவர்களுக்கு அஷ்டவசுக்கள் மகன்களாகப் பிறந்து இருந்தனர். அந்த திருமணம் நடக்கும் முன் பூமாதேவி சந்தனுவிடம் ஒரு சத்தியம் பெற்று இருந்தாள். பிறக்கும் குழந்தையை தான் என்ன செய்தாலும் அதை அவன் தடுக்கக் கூடாது. ஒன்றன் பின் ஒன்றாக முதலில் பிறந்த ஏழு குழந்தைகளையும் அவள் நதியில் வீசி எறிந்துவிட்டு அவர்களின் சாபத்தை அழித்தாள். அதைப் பார்த்துக் கொண்டே இருந்த சந்தனு மன வேதனை அடைந்தார். என்ன இது பிறக்கும் குழந்தைகள் அனைத்தையும் பிறந்தவுடனே கொன்றால் அதை எப்படி சகித்துக் கொள்ள இயலும்? எட்டாவது குழந்தை பிறந்தது. அதை நதியில் போட பூமாதேவி போனபோது அவளை தடுத்து நிறுத்தினார் சந்தனு. அவ்வளவுதான் பூமாதேவி மறைந்தாள். குழந்தையை சந்தனுவே வளர்க்க வேண்டியதாயிற்று. அந்தக் குழந்தை யார் தெரியுமா? அதுவே பீஷ்மர். முன் பிறவியில் வசிஷ்ட முனிவரின் காமதேனுப் பசுவை தன் மனைவியின் ஆசைக்காகத் திருடி வெகு காலம் பூமியில் பிறவி எடுத்து சங்கடங்களை அனுபவித்தே மரணம் அடைய வேண்டும் என சாபம் பெற்று இருந்த அஷ்டவசுக்களில் ஒருவர்.
நீதி:- விதியை மாற்ற முடியாது. செய்த கர்மாவுக்கு தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்.