சங்கொலி ஆஞ்சனேயர் ஆலயம்
சாந்திப்பிரியா
போபால் எனும் நகரம் மத்தியப் பிரதேசத்தின் தலை நகர் ஆகும். அந்த இடத்தில் பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உண்டு. ஆனால் அவை மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டு உள்ளது இல்லை என்றாலும் முக்கித்துவம் வாய்ந்தவை. பல்வேறு காரணங்களினால் அந்த ஆலயங்கள் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கவில்லை. முன்பு போபால் நகரம் முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் அப்கான் நாட்டினரிடம் இருந்த அந்த பிரதேசம் பின்னர் முகமதியர் ஆட்சிமைக்குக் கீழ் வந்தது. அப்படிப்பட்ட நிலையில் பதினெட்டாம் நூற்றாண்டில் பேகம் ஷாஜகான் என்பவர் அந்த இடத்தில் ஆட்சி செய்து வந்தார்.
முஸ்லிம்களின் ஆட்சியில் நகரம் இருந்தாலும் மத்தியப் பிரதேசத்து மானிலத்தில் பகவான் ஹனுமான் உபாசனை மிகவும் அதிகம். பகவான் ஹனுமான் ஆலயங்கள் இல்லாத ஊர்களே மத்தியப் பிரதேசத்தில் இல்லை எனும்படி பல இடங்களிலும் பகவான் ஹனுமான் ஆலயங்கள் தோன்றி உள்ளன. அதில் சரித்திர முக்கியம் வாய்ந்த ஆலயம் ஒன்று போபால் நகரின் மையப் பகுதியிலேயே அமைந்து உள்ளது. இரயில் நிலையத்தின் அருகில் உள்ள ஹனுமான் கஞ்ச் என்ற ஒரு இடத்தில் உள்ள அந்த பகவான் ஹனுமான் ஆலயம் முஸ்லிம் மன்னர்களினாலும் போற்றப்பட்டது. அந்த ஆலயத்தை சங்கொலி ஆஞ்சனேயர் ஆலயம் என்கின்றார்கள்
பேகம் ஷாஜகான் ஆட்சி செய்து வந்திருந்த காலத்தில் தற்பொழுது பகவான் ஹனுமான் ஆலயம் உள்ள இடத்தில் இருந்த ஒரு ஆல மரத்தடியில் ஒரு முனிவர் வசித்து வந்தார். அவரை கமாலி மகராஜ் என அழைத்தனர். அவர் தீவிரமான பகவான் ஹனுமான் பக்தர் மட்டும் அல்ல, தினமும் அங்கேயே பஜனை செய்து வந்தார். அவர் முனிவர் என்பதினால் பலரும் அவரிடம் வந்து ஆசி பெற்றுச் செல்வார்கள். அப்படி வரும் பெரும்பாலான மக்கள் பல சமயங்களில் மாலை நேரங்களில் அங்கு வந்து பஜனை செய்வதுண்டு. அந்த நேரத்தில் அந்த முனிவர் ஒரு சங்கை எடுத்து ஊதுவார். அவரால் முடிந்தவரை நீண்ட நேரம் சங்கொலி எழுப்பி பஜனையை ஊக்குவிப்பார். சில சமயங்களில் அந்த பஜனை விடியற் காலை வரை நீடிக்கும். பஜனை நடக்கின்றதோ இல்லையோ தினமும் விடியற் காலை அந்த முனிவர் சங்கொலி எழுப்பி பகவான் ஹனுமானை ஆராதிப்பார். இது பல நாட்கள் தொடர்ந்தது. அந்த இடத்தின் அருகில்தான் பேகம் ஷாஜகானின் இருப்பிடமும் இருந்தது.
தினமும் தொடர்ந்து கொண்டிருந்த விடியற்காலை சங்கொலியை சகித்துக் கொள்ள முடியாமல் போன அந்த அரசி அதை ஊதுவது யார் எனக் கண்டறியுமாறு தன் மெய்காப்பாளர்களை அனுப்ப அவர்களும் திரும்ப வந்து அவளிடம் அந்த ஒலியை எழுப்பி வரும் முனிவரைப் பற்றிக் கூறினார்கள். ஆகவே அவள் சங்கொலி தனக்கு இடைஞ்சலாக இருந்ததினால், இனி சங்கொலி எழுப்பக் கூடாது என உத்தரவு போட்டாள். ஆனாலும் அவர் அசைந்து கொடுக்கவில்லை. தினமும் விடியற் காலை சங்கொலி எழுப்பி பகவான் ஹநுமானை ஆராதித்துக் கொண்டே இருந்தார். தான் ஆணையிட்டும் சங்கொலி எழுப்புவதை அவர் நிறுத்தவில்லையே என கோபமுற்ற அவள் அந்த முனிவரைக் கொன்று விடும்படி ஆணையிட்டாள். அதற்கேற்ப அவரைக் கொல்லச் சென்ற காவலாளிகள் அந்த ஆல மரத்தடியில் உயிர் இறந்து கிடந்த முனிவரைக் கண்டு அரண்மனைக்குச் சென்று அரசியிடம் விஷயத்தைக் கூறினர். ஆனால் மறுநாள் விடியற்காலை மீண்டும் சங்கொலி கேட்டது. அதைக் கேட்ட பேகம் ஷாவின் கோபம் அதிகமாகி உயிர் அற்ற அவர் கைகளையும் தலையையும் வெட்டி வேறு இடத்தில் போட்டு விட்டு வருமாறு ஆணையிட அதை செய்ய அங்கு சென்றவர்கள் ஆச்சரியம் அடையும் வகையில் அந்த முனிவரின் தலையும் கைகளும் வெட்டப்பட்டுக் கிடந்தன. இனி கவலை இல்லை என நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பது போல் மறுநாள் விடியற்காலை மீண்டும் சங்கொலி கேட்டது. அதைக் கண்ட பேகம் ஷாவும் தானே அந்த இடத்திற்கு சென்று பார்த்தாள். ஆனால் அங்கு எவரும் இல்லை. சங்கொலி மட்டும் கேட்டபடி இருந்தது.
யாருமற்ற இடத்தில் இருந்து சங்கொலி மட்டும் எப்படி வருகின்றது? பயந்து போனவள் தன் செய்கைக்கு அங்கிருந்த பகவான் ஹனுமான் சிலை முன் மன்னிப்புக் கேட்க அவள் முன் எங்கிருந்தோ வந்து நின்றார் இறந்து விட்டதாகக் கருதப்பட்ட முனிவர். அவருடைய மகிமையைக் கண்டவள் அதன் பின் அவருக்கு எந்த விதமான தொந்தரவும் கொடுக்க விரும்பவில்லை. அது மட்டும் அல்ல அவள் அவருக்கு மேலும் சிறிது நிலமும் தானம் செய்தாள். அவரை அடிக்கடி சென்று சந்தித்தும் வந்தாள். ஒரு முறை தன் அரண்மனையில் வைத்திருந்த தன்னுடைய நெக்லஸ் தொலைந்து விட அது விஷயமாக அவரிடம் ஆலோசனைக் கேட்க அங்கு சென்றவளிடம் அவள் வாயைத் திறக்கும் முன்பே அது இருந்த இடத்தைப் பற்றிக் கூற தொலைந்து போன நெக்லஸ் கிடைத்தது. அவருடைய மகிமையைக் கண்டு அவள் திகைத்து நின்றாள். அவர் மீது இன்னும் மதிப்பு அதிகமாயிற்று. அவள் தந்த நிலத்தில் எழுப்பப்பட்டுள்ள பகவான் ஹனுமான் ஆலயத்தின் பெயராலேயே அந்த இடம் ஹனுமான் கஞ்ச் என இன்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. அந்த ஆலயம் சிறிய ஆலயம் என்றாலும் மகிமை வாய்ந்ததாகவே உள்ளது. அந்த முனிவர் உபயோகித்து வந்த சங்கும் அந்த ஆலயத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அவர் எப்பொழுது மரணம் அடைந்தார் என்ற விவரங்கள் தெரியவில்லை.
Sangoli Lord Anjaneyar Temple
Santhipriya
The city of Bhopal is the capital of Madhya Pradesh. Though there are famous temples in the city of Bhopal, most of them are only smaller shrines. Neither the legend nor the history of many of such temples are known and they are told by word of mouth stories only. Once upon a time Bhopal was under the rule of Moghul emperors and smaller Kings. The area, where the present temple of Lord Hanuman has been established belonged to the Afghans in the seventeenth century, but later came under Moghul rulers. During eighteenth century it was ruled by one Begum Shajahan.
Although the city was under the rule of Muslims Kings, the worship of Lord Hanuman has been very high in the entire state of Madhya Pradesh. The temples and smaller shrines of Lord Hanuman can be seen in many places. One such historic temples is located in the heart of Bhopal near the city Railway station, in a locality called Hanuman Ganj. This temple was also patronized by the Muslin rulers at a much later stage. This temple is called Sangoli Anjaneyar Temple.
During the reign of Begum Shajahan, a saintly person lived under a banyan tree in the site of the present temple of Lord Hanuman. Locals called him in the name of Kamali Maharaj. An ardent devotee of Lord Hanuman, he used to conduct daily Bhajans, under the same tree in which many locals participated. At the end of the Bhajans session he would bless them. During Bhajan the Maharaj used to continuously blow a conch in high pitch which lasted till the Bhajan session ended. At times the Bhajan commenced in the evening went beyond past mid night. Also it was routine to the Maharaj to blow the conch every day in the early morning irrespective of whether Bhajan session was held or not. The Palace of Begum Shajahan was nearer to the temple site.
Unable to bear the disturbance caused due to sound from the blow of the conch, the queen after ascertaining who blew the conch, sent a message asking the Maharaj to stop blowing the conch. Unwilling to heed her order, the Maharaj continued his routine habit of blowing the conch. Angered over his defiance, she asked her bodyguards to go and kill the Maharaj. When they went there to kill the saint, they found him lying dead in the same place. However when the sound of blowing conch continued the next day too, she ordered the hands and legs of the dead man be severed and thrown away. Again when her bodyguards went there to execute her orders, they found his hands and legs lying severed from his body. They went back relived hoping the menace of conch blowing has ended. Shockingly next morning too when the sound of blowing conch continued, not to waste time any further, the Begum herself visited the site to see who was blowing the conch. None were seen but she was surprised to hear someone invisible blowing the conch.
Unable to find from where the sound continued to come, when the frightened woman sought pardon from the Lord the temporary shine there, the Maharaj, who was presumed dead appeared before her. She realized his divine powers and went away after donating some more land to him for his activities. Besides she used to regularly visit him to seek his advice. Once when she lost a diamond necklace she went to seek his opinion. Even before she told him of her concern, he told her where the necklace was kept and the lost necklace recovered which increased her belief on him further. The place where the temple has been established in the land donated by her is called Hanuman Ganj. Though the temple is small, its glory cannot be explained by mere words alone. The conch used by the saint is still kept preserved in the temple and worshiped. However nobody knows when, where and how the saint died as he remained untraceable.