பஞ்ச லிங்க ஷேத்திரங்கள்
ஆந்திரப் பிரதேசத்தில்
ஐந்து சிவ லிங்க ஆலயங்கள்
சாந்திப்பிரியா
ஆந்திரப் பிரதேசத்தில் மற்ற மாநிலங்களைவிட அதிக அளவிலான ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒரு முக்கியமானது பஞ்ச லிங்க ஷேத்ர ஆலயங்கள். ஐந்து சிவாலயங்களை உள்ளடக்கியது அந்த ஐந்து ஷேத்ரத்தில் உள்ள ஆலயங்கள். அந்த ஆலயங்களைக் கட்டியவர்கள் இந்திரன், சந்திரன், சூரியன், மஹா விஷ்ணு மற்றும் குமாரசுவாமி என்கிறார்கள். அந்த ஐந்து சிவாலயங்களிலும் உள்ள சிவ லிங்கங்கள் ஒரே ஒரு சிவ லிங்கத்தில் இருந்து வெளிவந்த ஐந்து சிவ லிங்கங்கள் என்று புராணக் கதையைக் கூறுகிறார்கள். அந்த ஐந்து ஆலயங்களும் வந்த பல கதைகள் இவை.
அமரேஸ்வரர் ஆலய சிவ லிங்கம்
தாரகாசுரன் என்ற அசுரன் சிவ பக்தன். அவன் தனது தொண்டையில் சிவ பெருமானிடம் இருந்து பெற்ற ஒரு சிவ லிங்கத்தை அடக்கி வைத்து இருந்ததினால் அவனை எவராலும் வெல்லவோ அடக்கவோ முடியாமல் இருந்தது. ஆகவே அவனை அழிக்க அவதாரம் எடுத்த முருகப் பெருமான் தாரகாசுரனை யுத்தத்தில் வென்று அவன் தொண்டையை நோக்கி ஆயுதத்தை வீச அவன் தொண்டையில் மறைத்து வைத்திருந்த சிவ லிங்கம் வெளியில் விழுந்தது. விழுந்த வேகத்தில் அது ஐந்து துண்டுகளாகச் சிதறி பல்வேறு இடங்களில் விழ அவை பஞ்ச லிங்க ஷேத்திரங்கள் ஆயின. அவை அமராவதி, தஷராமம், பீமாவரம் , பலகோல் மற்றும் சமல்கோட்டா என்ற ஐந்து இடங்கள் ஆகும். அவற்றில் மிகப் பெரியது சுமார் பதினைந்து அடி உயரமான சிவ லிங்கம் . அது அமராவதியில் உள்ள அமரேஸ்வரி ஆலயத்தில் உள்ளது.
இன்னொரு கதை என்ன எனில் கோதாவரி நதிக்கரையில் இருந்த ஜமதக்கனி, அத்ரி , கௌதம , பாரத்வாஜ ,கௌசிக , வசிஷ்ட மற்றும் காஷ்யப போன்ற ஏழு முனிவர்கள் ஒரு சிவ லிங்கத்தை வணங்கி வந்தனர். தினமும் சிவனை பூஜிக்கும் தன்னால் அந்த முனிவர்களுக்கு தொல்லை இருக்ககூடாது என நினைத்த சூரிய பகவானே அந்த சிவலிங்கத்தில் இருந்து ஐந்து சிவ லிங்கங்களை படைத்து ஐந்து இடங்களில் வைத்து தான் வணங்கி வந்தாராம். அவையே அந்த ஐந்து ஷேதிரத்திலும் உள்ள பஞ்ச லிங்கங்கள். இன்னொரு கதை என்ன எனில் திருபுர சம்ஹாரத்தில் மூன்று அசுரர்களை அழித்த சிவன் கௌசிக முனிவரின் பிள்ளையான உபமன்யு தான் தினமும் வணங்கும் சிவனாருக்கு அபிஷேகம் செய்ய தனக்கு தடங்கல் இன்றி தொடர்ந்து பால் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கேட்டபோது ஒரு சிவ லிங்கத்தை ஐந்து துண்டுகளாக்கி ஐந்து இடங்களில் பிரதிஷ்டை செய்து அந்த ஷேத்ரங்களில் இருந்த குளங்களில் பாலாற்றை ஓட வைத்தாராம்.
இப்படிப்பட்ட அந்த ஐந்து ஆலயங்களைப் பற்றிய செய்திக் கட்டுரை தனியாக வெளிவரும்.