மதுரை அழகர் ஆலய
காவல் தெய்வம்
கருப்பஸ்வாமி
சாந்திப்பிரியா
 கருப்பஸ்வாமி சன்னதி உள்ள மதுரை  அழகர் ஆலயம்
 
சாதாரணமாக கருப்பஸ்வாமி எனும் கடவுளை கிராமத்தைக் காக்கும் கிராம தேவதையான கருப்பசுவாமி என்றே பலரும் நினைத்து இருப்பார்கள். ஆனால் அவர் சீதைக்குப் பிறந்தவர் என்ற ஒரு கதையும் அவர் கிருஷ்ணரின் அவதாரம் என்ற கதையும் உள்ளது. அவை அனைத்துமே வாய்மொழிக் கதைகள். புராணத்தில் அது குறித்துக் காணப் படவில்லை என்றாலும் அவரையும் ஒரு கடவுளாக ஏற்றுக் கொண்டு உள்ளதினால்தான் தமிழ்நாட்டில் கருப்பஸ்வாமிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அவருக்கு மதுரை அழகர் ஆலயத்தில் தனி மரியாதையுடன் கூடிய சன்னதியே உள்ளது. அந்த சன்னத்திக்குச் செல்பவர்கள் ஒருவரும் அங்கு பொய் சொல்ல மாட்டார்கள். ஏன் என்றால் அவர்களை கருப்பஸ்வாமி கடவுள் தண்டிக்காமல் விடமாட்டாராம். மேலும் அவருக்கு திருநெல்வேலியிலும் அம்பை தாலுக்காவில் உள்ள வீரவானல்லூரிலும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட ஒரு தனி ஆலயம் உள்ளதாம். அவரை பதினெட்டாம் படிக் கறுப்பர் என்றே மரியாதையுடன் அழைகின்றார்கள். அவர் பிறப்புப் பற்றி கூறப்படும் கதை இது.
ராமாயணப் போர் முடிந்ததும் எழுந்த சர்ச்சையினால் சீதாபிராட்டி வானகத்துக்குச் சென்று வசிக்க வேண்டியதாயிற்று. அங்கு சீதாபிராட்டி வால்மீகி முனிவரின் ஆசரமத்தில் தங்கி இருந்தாள். அப்போது அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தினமும் அவள் ஆசிரமத்துக்குத் தேவையானவற்றை காட்டில் தேடி அலைந்து கொண்டு வருவார். அப்படிப் போகும்போது தூங்கும் சிறுவனை அங்குள்ள முனிவர்களின் கண்காணிப்பில் விட்டுச் செல்வாளாம். ஒரு நாள் அப்படி அவள் போய் இருந்த நேரத்தில் அங்கு இருந்த முனிவர் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். சீதை காட்டிற்குச் சென்று திரும்பி வந்தாள். முனிவர் தியானத்தில் இருந்ததைக் கண்டு அவருக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பதற்காக சப்தம் போடாமல் அந்தக் சிறு சிறுவனை எடுத்துக் கொண்டு சென்றாள். கண் முழித்த முனிவர் குழந்தையைக் காணாமல் திடுக்கிட்டார். என்ன செய்வது எனப் புரியவில்லை. ஆகவே குழந்தையைக் காணாமல் சீதை தவித்து விடுவாளே என்ற எண்ணத்தில் அந்தக் குழந்தை தூங்கிக் கொண்டு இருந்த இடத்தில் சிறிது தர்பைப் புல்லைப் போட்டு அதை ஒரு சிறிய சிறுவனாக மாற்றினாராம். மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு தனது குழந்தையுடன் சீதை வந்தாள். முனிவர் இன்னும் அதிகக் கவலை அடைந்தார். நடந்ததை சீதையிடம் கூறிக்கொண்டு இருக்கையிலேயே ராமரும் வந்தார். ஒரு குழந்தையை பெற்ற சீதையிடம் எப்படி இரண்டு குழந்தைகள் உள்ளன என அவரும் குழம்பி அவற்றில் எது தமது உண்மையானக் குழந்தை என்பதை அனைவருக்கும் காட்ட வேண்டும் என எண்ணியவர் ஒரு தீயை மூட்டி இரு குழந்தைகளையும் அதைக் கடந்து வரச் சொன்னார். உண்மையான லவன் அதைக் கடந்து வர, தீயினால் ஏற்பட்ட வெப்பத்தினால் கருப்பசாமியின் உடல் கருப்பாகியது. ஆகவே ராமர் அந்த சிறுவனை அன்புடன் அணைத்துக் கொண்டு இனி அவனே தனக்கு காவல் காக்கும் தேவதையாக இருந்து வர வேண்டும் என ஆசிர்வதிக்க ராமரின் அடுத்த பிறவியில் மதுரைக் கூடலூரில் ராமரின் அவதாரமான விஷ்ணுவின் ஆலயத்தில் அவர் தனி சன்னதி பெற்றார்.
 திருநெல்வேலி   ஆலயத்தில் கருப்பஸ்வாமி
இன்னொரு கதையின்படி கருப்பசாமி கருப்பாக இருப்பதினால் சில காரணங்களினால் அவர் பிராமணர் அல்லாத யாதவர் குலத்தில் பிறந்து இருந்த கிருஷ்ணரின் அவதாரம் எனவும், மக்களை துன்பங்களில் இருந்து காப்பாற்ற பூமியில் கிருஷ்ணரே கருப்பசாமியின் உருவத்தில் அவதரித்து உள்ளார் என்கிறார்கள். மேலும் கிருஷ்ணர் நல்லவர்களைக் காக்க மகாபாரத யுத்தத்தின் போது தனது கையிலும் ஆயுதங்களை சில நேரத்தில் தூக்கியதினால் கருப்பசாமியின் உருவத்தில் உள்ளவர் கையில் வாள் , கேடயம், கதை  போன்ற ஆயுதங்களும் உள்ளன என்கிறார்கள்.
எது எப்படியோ கருப்பசாமி பல கிராமங்களிலும் கிராம தேவதையாக பார்க்கப் பட்டு வந்தாலும் , நகரத்திலும் ஆலய தெய்வமாகப் போற்றும் வகையில் அவர் சில ஆலயங்களில் உள்ளார். அவர் ஆலயங்கள் மலேசியாவிலும்  , சிங்கபூரிலும், கனடா நாட்டிலும் கூட  உள்ளன என்பதில் இருந்தே அவர் முக்கியத்துவம் தெரிகின்றது.