திருநீலக்குடி சிவன் ஆலயம்
சாந்திப்பிரியா
திருநீலக்குடி என்கின்ற பெருமை வாய்ந்த இடம் கும்பகோணத்தில் இருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு உள்ள திருநீலக்குடி என்கின்ற ஆலயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். ஆடுதுறைக்கு பஸ்சிலோ ரயிலிலோ சென்று விட்டால் அங்கிருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ள ஆலயத்தை அடையலாம். ஆலயத்தில் இரண்டு நுழை வாயில்கள் உள்ளன. இரண்டு நுழை வாயில்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பிரகாரத்தில் நந்தி மண்டபம், கொடிமரம் மற்றும் பலிபீடம் உள்ளது. சன்னதியில் இறைவன் மனோக்கியநாத சுவாமி சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். ஆலயத்தில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. ஒரு அம்மனின் பெயர் பக்தபீஷ்டப்பிரதாயினி . அவள் தவக் கோலத்தில் காட்சி தருகிறாள். திருமணக்கோலத்தில் உள்ள இன்னொரு அம்மனின் பெயர் அனுபமஸ்திரி என்பதாகும். இங்குள்ள வில்வ மரத்தில் உள்ள இலையின் ஒரு தளம் ஐந்து இலைகள் கொண்டது என்பது விசேஷம். ஆலயத்தில் வந்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும், திருமணம் விரைவில் நடைபெறும், வியாதிகள் தீரும், ஆயுள் விருத்தி ஆகும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. ஆலயம் வந்த வரலாறும் சுவையானது.
மிருகண்டு என்கின்ற முனிவர் தனக்கு புத்திர பாக்கியம் கிடைக்க ,சிவனை இறைவனை வழிபட்டு வந்தார். அவர் பக்தியை மெச்சிய சிவனும் அவர் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் ”- நல்ல குணங்களைக் கொண்ட மகனா இல்லை தூய உள்ளம் கொண்டவனையா” எனக் கேட்க முனிவரும் தனக்கு நல்ல குணம் உடைய மகனே வேண்டும் என்றார். ஆகவே அவருக்கு நல்ல குணமுடைய மகன் பிறப்பான் எனவும், ஆனால் அவன் வயது பதினாறு வருடமே எனவும் கூறி அவருக்கு புத்திர பாக்கியம் தந்துவிட்டு மறைந்தார். பிறந்த குழந்தைக்கு மார்கண்டேயர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். சிவபெருமானின் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது ஆயிட்று . இனி தனக்கு ஆயுள் முடிய உள்ளது என்பதை பெற்றோர் மூலம் அறிந்து கொண்டவர், தன்னுடைய ஆயுள் முடியக் கூடாது என எண்ணினார். . அதற்கு ஒரே வழி மீண்டும் சிவபெருமானை வேண்டுவதே என எண்ணிய மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக சென்று அங்கிருந்த சிவ பெருமானை தரிசித்து வேண்டி வந்தார். அப்போதுதான் அவர் திருநீலக்குடி தலத்திற்கும் வந்து ஈசனை வழிபட்டார். அங்கு வந்து கடுமையாக விரதம் அனுஷ்டித்து சிவபெருமானை தியானிக்க சிவனார் அவர் முன் தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க மார்க்கண்டேயர் தன்னுடைய ஆயுளை நீடிக்க வேண்டும் என வேண்டினார். அதைக் கேட்டு மகிழ்ந்த சிவபெருமானும் மார்க்கண்டேயார் அந்த தலத்தில் என்றுமே பதினாறு வயதுடைய இளைஞ்சனாகவே இருக்கட்டும் என வரம் அளித்தார். மார்க்கண்டேயரும் அங்கேயே தங்கி சிவனை வழிபட்டு வந்தார்.
சதுரகிரி மலை சிவ லிங்கம்
அதன் பின் அமிர்தம் கிடைக்க பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதில் இருந்து வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டார். அது அவர் வயிற்றுக்குள் செல்லாமல் தடுக்க பார்வதி தேவி அவரின் கழுத்தை எண்ணைப் போட்டு தடவி விட விஷம் அவர் கழுத்தில் தங்கியது. உள்ளே இறங்கவில்லை. ஆகவேதான் அங்குள்ள இறைவன் நீலகண்டேஸ்வரர் என்று பெயர் பெற்றார். அந்த தளத்தில் பிரும்மா, வசிஷ்டர் போன்றவர்கள் வந்து சிவனை வழிபாட்டு உள்ளனராம். ஆலயத்தின் அருகில் நான்கு புனித தீர்த்தங்கள் உள்ளன.
இத்தலத்தில் அதிசயம் என்ன என்றால் அங்குள்ள நீலகண்டேஸ்வரர் ஆலகால விஷத்தை உண்டதினால் அவர் தொண்டையில் தங்கி இருந்த அந்த விஷத்தன்மையைக் குறைக்க நல்லெண்ணை லிங்கத்தின் மீது ஊற்றி அபிஷேகம் செய்கிறார்கள். அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது. நாள் பூராவும் எண்ணை அபிஷேகம் செய்தாலும் அத்தனை எண்ணையையும் லிங்கத்தினால் உறிஞ்சப்பட்டு விடுகிறது. தொடரும் அதிசயம் என்ன என்றால், எத்தனை எண்ணை ஊற்றி அபிஷேகம் செய்தலும், அதை துணியினால் துடைப்பது இல்லை, தண்ணீர் ஊற்றி அலம்புவது இல்லை. ஊற்றப்படும் எண்ணையும் கீழே வழிவதே இல்லை. லிங்கமே அதை உறிஞ்சி விடுகிறது. மறுநாள் சென்று பார்த்தால் எண்ணெ ஊற்றிய அடையாளமே தெரியாமல் லிங்கம் உலர்ந்து காணப்படும். அபிஷேகம் செய்யப்படும் எண்ணை அனைத்தும் எங்கு சென்று மறைகின்றது என்பது இத்தனை காலமும் யாருக்கும் புலப்படவில்லை. எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருந்தாலும் சிவலிங்கம் வழுவழுப்பாக இருப்பதற்கு மாற்றாக சொர சொரப்பாகவே உள்ளது. அங்குள்ள லிங்கத்துக்கு அபிஷேகம் செய்த எண்ணையை உட்கொண்டால் தீராத நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை.