கோலக் கலையும்

அதன் சில உண்மைகளும்
சாந்திப்பிரியா

கோலக் கலை என்பது இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தோன்றி உள்ளது என்பது தெரிகின்றது. கோலம் என்பது ஒரு விதத்தில் பார்த்தால் சித்திரக் கலையைப் போன்றதே. இன்றும் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் மலைகளிலும், பள்ளங்களிலும், குகைகளிலும் உள்ள பாறைகளைப் பார்க்கையில் அவற்றில் கோலங்கள் போன்ற பல உருவங்கள் உள்ளதைக் காணலாம். ஆகவேதான் கோலக் கலை ஆதி முதலேயே இருந்துள்ளது என்பதை நம்ப வேண்டி உள்ளது.
வாயிலில் கோலங்களைப் போடுவது ஒரு பழக்கமாக இருந்துள்ளது என்றாலும் அதற்கும் சில காரணங்கள் இருந்துள்ளன. துஷ்ட தேவதைகள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க, தர்ம தேவதைகளை உள்ளே அழைக்க, தூய ஆவிகளை உள்ளே அழைக்க மற்றும் லஷ்மி தேவியை உள்ளே அழைக்க என பல காரணங்களுக்காக பல விதமான கோலங்கள் போடப்பட்டன. அப்படியாக கோலங்களைப் போட்டபோது அதைப் போடும் பெண்கள் சில மந்திரங்களையும் உச்சரித்தவாறே போட்டு வந்தனர் என்பது கிராமியக் கதையாக உள்ளது. அதற்கு மேலும் சென்றால் கோலங்கள் போடுவது புழு பூச்சிகளுக்கு உணவாக இருக்கட்டும் என்பதற்காக எனவும் நம்பிக்கை உள்ளது.
ஆனால் அது பற்றி ஒரு பண்டிதர் கூறிய செய்தி சற்றே சிந்திக்க வைத்தது. நம்முடைய மறைந்து போன வம்சாவளியினர் பல ரூபங்களிலும் பிறப்பு எடுத்து சுற்றித் திரிவார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ள பிறப்பு இறப்பு காலம் முடியும்வரை அவரவர் செய்துள்ள நன்மை தீமைகளுக்கு ஏற்ப சில பிறப்புகளை எடுத்து அவர்களுடைய சந்ததியினர் வாழும் இடங்களிலேயே சென்று சுற்றிக் கொண்டு இருப்பார்கள். அப்போது அவர்கள் பறவை, புழு பூச்சிகள் பிறப்பு எடுத்து இருந்தால் அவர்களுக்கு உணவு தரும் வகையில் இருக்கட்டும் என்பதற்காக அரிசி மாவினால் கோலம் போட்டனர். அரிசி மாவை அந்த புழு பூச்சிகள் வந்து தின்னும் போது அவை மனதார நம்மை வாழ்த்தி விட்டுச் செல்லுமாம்.அது மட்டும் இன்றி வீட்டின் வெளியில் சுற்றித் திரியும் ஆவிகள் அந்த அரிசி மாவை தனக்கு போடப்பட்ட உணவாகக் கருதி அந்த வீட்டில் உள்ளவர்களை வாழ்த்தி விட்டுப் போகுமாம்.
பண்டைய காலத்தில் வீட்டின் முன்புறதுக்கு அழகூட்ட என்பதற்கு மட்டும் அல்லாமல், தத்தம் வீடுகளில் நடக்கும் விழாக்களைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அழகான கோலங்கள் போட்டனர். கோலம் இல்லாத வீட்டில் வீட்டில் எதோ சடங்கு – சிரார்த்தம் போன்றவை- நடைபெறுகின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தீய ஆவிகள் வீட்டில் நுழைவதை தடுக்க பல பயங்கரமான உருவங்களைக் கொண்ட கோலம் மற்றும் மந்திரங்கள் அடங்கிய கோலம் , நல்ல ஆவிகள் வீட்டில் நுழைய வேண்டும் என்பதற்காக பூக்கோலங்கள், வீட்டிற்கு வந்துள்ள திருஷ்டிகள் விலக வேண்டும் என்பதற்காக சாணி மீது பூ வைத்த கோலம் போன்ற கோலங்களைப் போட்டு தாம் நம்பிக்கையை தெரிவித்து வந்தனர். மொத்தத்தில் கோலங்களைப் பார்த்தாலே அவை மந்திர சக்திகளை உள்ளடக்கிய கோலங்கள் என்பது புரியும். ஆனால் அவற்றை நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டதினால்தான் அவற்றின் மகிமை நமக்கு தெரியாமல் இருந்துள்ளது.
பொதுவாக கிராமப் புறங்களில் வீடுகளின் சுவர்களிலும், முற்றத்திலும் கீழ் கண்ட முறையில் சில உருவங்கள் கொண்ட கோலங்களைப் போடுவார்கள். அந்த கோலங்கள் வீட்டில் நுழையும் தீய ஆவிகள் பயந்து ஓடவும், திருஷ்டிக்கு எனவும் போடப்பட்டன. வாசலில் அல்லது வாயில் சுவற்றில் ( குடிசை என்பதினால் மண் சுவரே இருந்த இடங்கள்) சாணியால் மெழுகி அந்த கோலங்களை வெள்ளை மாவு ( சுண்ணாம்பு போன்றது ) மற்றும் சிவப்பு நிறப் பொடிகளை ( செம்மண்ணை இடித்து மாவுபோல ஆக்கி) பயன்படுத்திப் போடுவார்களாம்.அதில் சில வகைகளை கீழே காணலாம். இப்படிப்பட்ட கோலங்கள் பெரும்பாலும் ஆந்திரா, கர்னாடகா மற்றும் தென் பகுதி தமிழ்நாட்டுப் உள் பகுதிகளில் காணலாம்.

விடியல் காலையில் கோலம் ஏன் போடுவார்கள், அதுவும் வெள்ளை மாவில்? வெள்ளை மாவு அல்ல , முதலில் அரிசி மாவில்தான் கோலங்களைப் போட்டு வந்தார்கள். அதுவே பின்னர் உபயோகத்தில் மெல்ல மெல்ல வெள்ளை மாவாக ,மாறியது. வெண்மையில்தான் அனைத்து நிறங்களும் கலந்து உள்ளது. விப்ஜியார் என்பார்களே- அதாவது ஏழு நிறங்கள் கொண்ட வண்ணத்தை. அது சுற்றினால் வெண்மையாகத் தெரியும். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு நிறம் உண்டு. அப்படிப்பட்ட அனைத்து நிறங்களும் கொண்ட கடவுட்கள் அங்கு சங்கமிக்கும்போது வெண்மையாகி விடுவதினால் வீட்டில் போடும் வெண்மைக் கோலத்தில் அனைத்து கடவுளும் அடங்கி உள்ளதாகவும் அவர்கள் வீட்டில் நுழையும் வாயிலே அந்தக் கோலம் என்ற ஐதீகம் இருந்ததாம்.- கோலங்களில் பயன்படுத்தப்பட்ட மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் மங்கலத்தை எடுத்துக் காட்டின. வெள்ளை நிறம் தெய்வங்களைக் குறித்தது.

புள்ளிகள் வைத்த கோலம்

புள்ளி என்பது ஆரம்பமும் முடிவும் இல்லாத ஒரு சித்திரம். ஆகவே ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளே புள்ளியைக் குறிக்கின்றது எனக் கருதியே நம் வீட்டின் வாயிலில் கடவுளே நின்று நம்மைக் காக்கின்றார் என்பதைக் காட்ட புள்ளிக் கோலங்கள் போடப்பட்டன. சில கோலங்களில் புள்ளியை சுற்றி வட்டங்களும் கட்டங்களும் இருக்கும். அவை பல நம்பிக்கைகளைக் காட்டின ?

– வட்டம் பெண் இனத்தையும், புள்ளி ஆண் இனத்தையும் குறித்து (சில லிங்கம் போல) வட்டத்தின் நடிவில் வைத்த புள்ளிக் கோலம் சிவ சக்தியின் ரூபமாய் கருதப்பட்டது.
– கோலத்தின் நடுவில் வைத்த புள்ளி நம்மையும், அதை சுற்றி உள்ள வட்டமும் கட்டமும் நம்மைக் கத்து நிற்கும் கடவுளின் அரணாகுமாம்
– வீட்டில் இருந்து வெளியே செல்லும் நமது சக்திகளை தடுத்து நிறுத்தி அவற்றை இழக்காமல் இருப்பதை காட்டும் சின்னமாம் அது.
– வட்டம் என்பது ஒற்றுமையைக் குறிக்கும்
– உன்னை சுற்றியே நாங்கள் உள்ளோம் என தேவதைகள் கூறுவதை பிரதிபலிப்பதுதான் புள்ளி வைத்த கோலத்தில் சுற்றி உள்ள இழைகள்.
-நாக தேவதைகளை வணங்க நவகிரக நாயகர்களை வணங்க என பல புள்ளிக் கோலங்கள் போடப்பட்டு வந்தன.

முக்கோணக் கோலங்கள்

முக்கோணக் கோலம் என்பது ஜாதி பேதம் இன்றி இந்த மண்ணில் அவதரித்த அனைவருமே மேல் உலகை நோக்கியே இறுதியில் செல்கிறோம் என்பதை குறிக்கும் கூர்முனைக் கொண்டது. அது போலவே மேல் உலகில் உள்ளவர்களும் கீழே இறங்கி வந்து அனைத்து இடங்களிலும் பரவி நிற்கின்றோம் என்பதைக் காட்டுகிறது. மஞ்சளும் குங்குமமும் வைத்த வட்ட வடிவமான சின்னம் எரிந்து கொண்டு இருக்கும் விளக்கின் நெருப்பைக் குறிக்கிறதாம். நெருப்பில் விழும் அனைத்தும் பொசுங்கி விடுவது போல கண் திருஷ்டியும் அதில் பொசுங்கி விடுமாம்.

ஸ்வஸ்திக் கோலங்கள்

வெற்றியைத் தரும் சின்னம் ஸ்வஸ்திக் . பண்டை காலங்களில் மன்னர்கள் போர் புரியச் சென்றபோது ஸ்வஸ்திக் கோலங்கள் போடப்பட்டன. பின்னர் அவை அவரவர் வீடுகளில் நடக்கும் விழாக்கள் நல்லபடியாக வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதற்காக போடப்பட்டன. அது மட்டும் அல்லாது தெய்வங்கள் வந்து அமரும் இடமே ஸ்வஸ்திக் எனக் கருதப்பட்டது. ஸ்வஸ் + அஸ்தி + கா என்பதின் வார்த்தையே ஸ்வஸ்திகா . அதாவது சுவாசம் ( ஸ்வாஸ்) நின்று நீ அஸ்தியாகப் ( அஸ்தி) போய் மோட்ஷம் பெற காத்திரு என்பதை நினைவு படுத்துவதே ஸ்வஸ்திகா . ஸ்வஸ்திகாவை பாருங்கள் ஒவ்வொரு பக்கத்தையும் நோக்கி குழாய் போல நீண்டு இருக்கும். ஸ்வஸ்திக் சின்னத்தைப் போட்டு அதன் நடுவில் வைக்கப்படும் புள்ளியின் அர்த்தம் என்ன என்றால் நடுப்புள்ளி நம் ஆத்மா. வீட்டில் உள்ளவர்களின் ஆத்மா அனைத்து திசைகளிலும் உள்ள தெய்வங்களை நோக்கி பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கட்டும் என்பதற்காகவே அது போடப்பட்டது. மேலும் ஸ்வாதிக் நமக்கு எடுத்துக் காட்டுவது என்ன?

-நான்கு வேதங்கள்
– நான்கு திசைகள்
-நான்கு யுகங்கள்- சத்ய, த்ரேதா , துலாபார, கலி யுக
– நான்கு வர்ணங்கள் (ஜாதிகள்) -பிராமண , ஷத்ரிய, வைஷ்ய, சூத்திர என்பவை
-நான்கு யோகங்கள்- ஞான, பக்தி, கர்ம, ராஜ
– நான்கு மூலங்கள் – ஆகாயம்,வாயு, நீர் , நிலம்
-வாழ்கையின் நான்கு பருவங்கள்- குழந்தை, பிரும்மச்சாரி, கிரஹஸ்தன், சந்நியாசி (அனைத்தையும் துறந்தவர்)

இதில் மூன்றாவது ஜெயின் மதத்தினர் போடுவது. நான்காவது எந்த திசையை நோக்கி வெளியேறும் பகுதி இருக்க வேண்டும் என்பதைக் காட்டும் படம்.

………கோலம் பற்றிய செய்திகள் மேலும் பின்னர் தொடரும் .