செளந்தர்யலஹரி –
சில அரிய தகவல்கள்
சாந்திப்பிரியா
( முன் குறிப்பு:- இந்தக் கட்டுரைக் குறித்து சில விஷயங்களை முதலிலேயே தெளிவுபடுத்துவது அவசியமாகின்றது. செளந்தர்யலஹரி குறித்து நான் எழுத நினைத்தபோது செளந்தர்யலஹரி இயற்றப்பட்டதின் காரணம் என்னவாக இருக்கும் என யோசனை செய்தேன். அப்போதுதான் எதேற்சையாக செளந்தர்யலஹரி எழுதப்பட்டதின் பின்னணிக் காரணத்துக்கான கதை கிடைத்தது. இதில் கூறப்பட்டு உள்ள ஆதி சங்கரரின் கதைக்கான கருவை செளந்தர்யலஹரி இணையதளத்தில் இருந்து பெற்றேன். அந்தக் கதை இந்தக் கட்டுரைக்கு பயனுள்ளதாக அமைந்தது. அதற்கான அனுமதி கொடுத்த திரு மெளலி (மதுரையம்பதி) அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவிக்கின்றேன். அவர் வலை தளத்தில் http://sowndharyalahari.blogspot.com/2007_09_01_archive.html செளந்தர்யலஹரி பற்றிய பல தகவல்களையும் அனைத்து சுலோகங்களின் விளக்கத்தையும் வெளியிட்டு உள்ளார். அவற்றை படித்து மகிழவும் – சாந்திப்பிரியா .)
செளந்தர்யலஹரி வெறும் வார்த்தை அலங்காரம் செய்யப்பட்டுள்ள பாடல்களோ இல்லை கவிதைகளோ இல்லை. இது அன்னை பராசக்தியைப் போற்றி ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட மந்திர சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள். தேவியின் பெருமையை யாராலும் இவ்வளவுதான் என அளவிட்டுக் கூற முடியாது. ஆகவேதான் சகல லோகத்துக்கும் தாயான அவள் மீது பக்தி செலுத்துவது அவசியமானது என்பதை உணர்ந்த ஆதி சங்கரர் அவளுடைய மகிமையை வெளிப்படுத்தவே கல்பவிருட்ஷம் போன்ற இந்த ஸ்லோகங்களை இயற்றி உள்ளார். இதைப் படிப்பவர்களுக்கு செல்வப் பிராப்தி, சகல கலைகளிலும் வெற்றி போன்றவை கிட்டுமாம். சக்தியின் மகிமையைப் பற்றி மட்டும் அல்லாது அவளுடைய அழகைப் பற்றியும் வர்ணிக்கும் மிகச் சிறந்த மந்திர சாஸ்திரமாக நாடெங்கிலும் போற்றப்படுகிறது.
இந்த செளந்தர்யலஹரி எப்படி வந்தது எனபது பற்றி பல கதைகள் உள்ளன. லிங்க புராணத்தில் விநாயகர் வாழ்த்தில் இது மகாமேரு மலையில் விநாயகரால் எழுதப்பட்டதென்று கூறப்படுகிறது. மேருமலையில் எழுதி வைத்தவர் புஷ்பதந்தர் என்றும், ஆனால் அதற்கு முன்பே கையிலையில் சிவாலயத்தின் மதிற் சுவரில் இந்த ஸ்லோகங்கள் எழுதப்பட்டிருந்ததாகவும் மேருமலையில் இருந்ததை கெளட பாதர் கிரகித்துப் பின்பு ஆதிசங்கரருக்கு உபதேசம் செய்ததாகவும் செளந்தர்யலஹரியினை தமிழாக்கிய வீரை கவிராஜ பண்டிதர் கூறியுள்ளார்.
இன்னும் ஒரு கதை என்ன எனில் , ஆதிசங்கரரே இதனை கைலாசத்திலிருந்து கொண்டு வந்தார் என்பதே. அந்தக் கதை என்ன?
ஆதி சங்கரர் பல ஊர்களுக்கும் சென்று ஆங்காங்கே இருந்த கோவில்களில் இறைவனை தரிசித்தும் போற்றிப் பாடிக் கொண்டும் சென்றவாறு இருக்கையில் கைலாயத்தையும் அடைகிறார். அங்கு அவருக்கு ஈசன் மற்றும் உமையவளின் தரிசனமும் கிடைக்கிறது. அப்போது ஈசன் ஆதி சங்கரருக்கு 5 ஸ்படிக லிங்கங்களை தந்தார். ஈசன் ஆதி சங்கரருக்குக் கொடுத்த அந்த பஞ்சலிங்கங்கள் அனைத்திற்கும் சந்திர மெளலி என்றே பெயர். தற்போது அந்த 5 லிங்கங்களும் ஸ்தாபிக்கப்பட்டு உள்ள இடங்கள் என்று கீழே உள்ள இடங்களைக் கூறுகிறார்கள்.
1) காமகோடி மடத்தில் – யோக லிங்கம்.
2) கேதாரத்தில் – முக்தி லிங்கம்
3) நேபாளத்தில் நீலகண்ட க்ஷேத்ரத்தில் – வரலிங்கம்
4) சிருங்கேரியில் – போகலிங்கம்
5) சிதம்பரத்தில் – மோக்ஷலிங்கம்
இப்படியாக ஈசன் ஆதி சங்கரருக்கு கொடுத்த ஐந்து லிங்கங்களும் அருவ-ருபமான ஈஸ்வரரே என்பது நம்பிக்கை. சிவபெருமான் ஆதி சங்கரருக்கு லிங்கங்களை தந்ததைக் கண்ட உமையவளும் தனது பங்கிற்கு ஆதி சங்கரருக்கு தனது கையில் இருந்த ஒரு கட்டு ஓலை சுவடிகளைத் தந்தாள். அந்த சுவடிகளில் தேவியைக் குறித்து எழுதப்பட்டு இருந்த மந்திர சாஸ்திரமான ஸ்லோகங்கள் இருந்தன. அவற்றைப் பெற்றுக் கொண்ட ஆதி சங்கரர் கையிலாயத்தை விட்டு வெளி வந்தார் .
ஆதி சங்கரர் ஓலை சுவடுகள் மற்றும் லிங்கங்களுடன் கைலாயத்தை விட்டு வெளி வந்தபோது அங்கு வாயிலில் அமர்ந்து இருந்த நந்தி தேவர் அவற்றைக் பார்த்தார். முக்கியமாக ஆதி சங்கரர் கையில் இருந்த சுவடிக்கட்டைப் பார்த்த உடன், கயிலையின் மிகப் பெரிய புதையலான மந்திர சாஸ்த்திரம் கையிலையை விட்டுப் போகிறதே என்று சினம் கொண்டார் . சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்கவில்லை என்பது போல நந்தி கோபத்துடன் சங்கரர் கையில் இருந்த சுவடிக் கட்டை பிடித்து இழுத்தார். ஆனால் ஆச்சாரியரோ அதனை கவனிக்காமல் சென்று விட்டார். நந்தி தேவர் அவர் கையில் இருந்த ஓலை கட்டை இழுத்தபோது அனைத்து சுவடிகளையும் நந்தியால் கைப்பற்ற முடியவில்லை. ஆதி சங்கரர் கையில் ஒரு பகுதி சுவடி தங்கிவிட்டது, மீதி கயிலையின் வாயிலில் விழுந்து விட்டது. [ இந்த நிகழ்ச்சி மார்க்கண்டேய புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது ]
நந்தி தேவரிடம் பறிகொடுத்த சுவடிகளை கவனிக்காமல் பூமிக்குத் திரும்பிய ஆதி சங்கரரிடம் தங்கி இருந்த சுவடிகளில் இருந்தவையோ 41 ஸ்லோகங்கள் மட்டுமே. ஆகவே செளந்தர்ய லஹரி முழுமை பெறவேண்டும் என்றால் விடுபட்ட மீதி 59 சுலோகங்களும் மீண்டும் புதியதாக இயற்றப்பட்டு அதனுடன் சேர்க்கப்பட வேண்டும் என்பதை புரிந்து கொண்ட தேவி, ஆதி சங்கரர் முன் பிரத்யஷமாகி நடந்தக் கதையைக் கூறிவிட்டு மீதமுள்ள 59 ஸ்லோகங்களையும் அவரையே புதிதாக இயற்றுமாறு ஆணையிட்டார் .
அவ்வளவுதான் உடனடியாக மடை திறந்த வெள்ளம் போல ஆதி சங்கரர் வாயில் இருந்து அன்னையின் ரூப லாவண்யத்தை போற்றிப் பாடும் கவிதைப் போன்ற ஸ்லோகங்கள் வெளிவரத் துவங்க அவையே 59 புதிய ஸ்லோகமாக உருவெடுத்தது. இப்படியாக அன்னையின் அருளினால் ஆதி சங்கரர் அன்னையின் அழகிய சொரூபத்தை வெளிக் காட்டும் வகையில் இயற்றிய 59 ஸ்லோகங்கள் செளந்தர்ய லஹரி என கருதப்பட்டது.
செளந்தர்யம் என்றால் அழகு என்ற பொருள் அல்லவா. லஹரி என்றால் பிரவாஹம் (அ) அலை என்றும் பொருள். உலகில் உள்ள அத்தனை அழகுகளும் எங்கிருந்து பிறந்ததோ அந்த பரம சக்தியை அதாவது ஸ்ரீமாதா உருவினை தலையிலிருந்து கால்வரை அங்கம்-அங்கமாக வர்ணிக்கும் ஸ்துதிக்கு செளந்தர்யலஹரி என்ற பெயர் கொடுத்தது மிகச் சரியல்லவா? இதில் முதல் 41 ஸ்துதிகள் ஈசனே இயற்றி அன்னையை ஆனந்திக்கச் செய்ததால் அவற்றை ஆனந்த லஹரி என்பதாகச் சொல்வார்கள். எப்படி அழகென்றால் அது அன்னையை மட்டும் குறிக்குமோ அதே போல ஆனந்தம் என்பதும் அவளை அடைந்தால் மட்டுமே கிடைக்கப் பெறுவது, அதனால்தான் அது ஆனந்த பிரவாஹம் என்று பெயர்.
கைலாயத்தில் ஆதி சங்கரரிடம் அன்னை தந்த சுவடிகளில் முதல் 41 ஸ்லோகங்கள் ஆனந்தத்தைத் தரும் வகையில் அமைந்து இருந்ததாம். ஆகவே அவை ஆனந்த லஹரி என கருதப்பட்டது . அன்னை தந்த சுவடிகளில் ஆதி சங்கரரிடம் தங்கி இருந்த இருந்த 41 ஸ்லோகங்களை தொடர்ந்து அவரால் இயற்றப்பட்ட 59 சுலோகங்களையும் சேர்த்தே 100 ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்துதியாக செளந்தர்யலஹரி பாராயணம் செய்யப்படுகின்றது.
முதல் 41 ஸ்லோகங்களில் மந்திர சாஸ்திரமும், குண்டலினி சக்தியும், ஸ்ரீவித்யா வழிபாட்டுத் தத்துவங்களும் விளக்கப்பட்டுள்ளது. ஆகவே அதை அனுசந்தானம் செய்வதற்கு கடுமையான நியமங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதினால் அது சாதனாக்களை செய்பவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது என்று கருதப்படுகின்றது. மேலும் அதை ஆராதனை செய்ய ஒரு குருவின் மதிரோபதேசம் அவசியம் என்பதினால் அனைவராலும் அதை படிக்கவோ, ஆவாகனம் செய்யவோ முடியாது. அதே நேரத்தில் பின் இயற்றப்பட்ட 59 ச்லோகங்களோ பக்தி மார்கத்தினருக்காக ஏற்படுத்தப்பட்டது என்று கருதலாம்.
ஆதி சங்கரருக்குக் கிடைத்ததோ முதல் 41 ஸ்லோகங்கள் (ஆனந்த லஹரி) மட்டுமே என்றும், எஞ்சிய 59 ஸ்லோகங்களையும் சங்கரர் தாமே எழுதி பூர்த்தி செய்ததாகவும் சில கருத்துக்கள் உள்ளன . எது எப்படியோ, செளந்தர்யலஹரி ஆதிசங்கரரால் உலகிற்கு தந்து அருளப்பட்டது என்பதில் எந்த மாறுபட்ட கருத்துக்களும் இல்லை. செளந்தர்யலஹரியின் 41 ஸ்லோகங்களை கையிலை சங்கரனும், அடுத்த 59 ஸ்லோகங்களை காலடி சங்கரனும் தந்துள்ளதான நம்பிக்கை உள்ளது.
இதனால்தான் மந்திர சாஸ்திரத்தையும், தேவியின் அழகை வர்ணிக்கும் கவிதைப் போன்ற ஸ்துதிகளையும் உள்ளடக்கிய ஒரே படைப்பான செளந்தர்யலஹரி போன்ற அபார சக்தி தரும் வழிபாட்டு படைப்பை இந்த உலகில் வேறு எந்தப் படைப்பிலுமே காண முடியாது என்று கூறுகிறார்கள் .
செளந்தர்யலஹரியின் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஒவ்வொரு சக்தி உண்டு. அதில் கூறப்பட்டு உள்ள பிரயோகங்கள் ரகசியமானது என்றும் கூறுவார்கள். ஆகவே யாராவது ஒரு குருவின் குரு மந்திரத்தை பெற்றுக் கொண்டு இதை சாகித்தியம் செய்பவர்கள் பல பலன்களை அடைவார்கள். ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஒவ்வொரு பீஜாஷரங்களுடன் கூடிய யந்திரம் உண்டு. அவற்றில் சில பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் அவற்றை பாராயணம் செய்ய வேண்டிய விதி முறைகள் வெவ்வேறானவை. முறையாக குருவின் துணைக் கொண்டு ஒவ்வொரு யந்திரத்தையும் ஆராதித்தால் சகல காரியங்களிலும் சித்தி, சர்வரோக நிவாரணம், சகல காரிய பிராப்ப்தி, நினைத்ததை கனவில் காண்பது, புத்திர பாக்கியம் போன்றவற்றைப் பெறலாம் . செளந்தர்யலஹரியின் ஸ்லோகங்களை தினமும் படிக்கலாமே ஒழிய அதன் பிரயோக சக்கரங்களை தாமாகவே யந்திரங்களாக்கி அதை ஆராதித்து பூசிப்பது நல்ல பலனைத் தராது.
இந்த செளந்தர்யலஹரியின் ஒரு யந்திரத்தின் மகிமையை எடுத்துக் கூறும் இந்தக் கதையை படியுங்கள்.
விபஞ்ச்யா காயந்தீ விவிதமபதாநம் பசுபதே
ஸ்த்வயாரப்தே வக்தும் சலிதசிரஸா ஸாதுவசநே
ததீயயர்மாதுர்யைரபலபிததந்த்ரீகலரவாம்
நிஜாம் வீணாம் வாணி நிசுலயதி சோலேந நிப்ருதம்
இதற்கான யந்திரம் என்று கீழே கொடுக்கப்பட்டு உள்ள சக்கரத்தைக் கூறுகிறார்கள்
இந்த யந்திரத்தை ஒரு தங்கத் தகட்டில் வீபுதியால் தினமும் எழுதி வைத்து ஒரு நாளைக்கு 25,000 முறை என ஸ்லோகத்தை பாராயணம் செய்ய வேண்டும். இப்படியாக தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தால் சர்வ சங்கீத பிராப்தம் கைகூடுமாம். வாக்கு சாதுர்யம் கிடைக்குமாம். மூன்றாம் நாள் நைவித்தியம் படைத்து பூஜை செய்து பாராயணத்தை முடிக்க வேண்டும்.
இந்த ஸ்லோகத்தின் மகிமைக் குறித்து ஒரு கதை கூறப்படுவது உண்டு. ” ஒருமுறை ஒரு விசேஷ தினத்தில் தேவலோகத்தில் அனைவரும் கூடி இருந்தனர். அப்போது சபையினரை கவுரவிக்க சரஸ்வதி தேவி பரமேஸ்வரருடைய சரித்திரத்தையே பாடலாக்கி தனது வீணையின் அற்புதமான இசையில் அதை வெளிப்படுத்தினாள். அனைவரும் மெய் மறந்து அந்த கான மழையை ரசித்துக் கொண்டு இருந்தார்கள். அங்கு பரமேஸ்வரருடன் அமர்ந்து இருந்த பார்வதிக்கோ மனதில் பூரிப்பு. தனது கணவரின் புகழை எத்தனை அற்புதமாக வீணையில் சரஸ்வதி வாசிக்கின்றாள் என்பதைக் கண்டு தன்னை அறியாமலேயே அற்புதம், அற்புதம் என்ற அர்த்தம் தரும் ‘சபாஷ்’ என்ற சொல்லை திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டு இருக்கையில் பரமேஸ்வரியின் நாக்கில் இருந்து வெளிவந்த வார்த்தையின் இனிமை சரஸ்வதியின் வீணையின் இசைத் தந்திகளின் நரம்பில் ஏறி அவள் இசைத்த இசையை மேலும் ரீங்காரமாக ஆக்கிக் கொண்டு இருந்ததைக் கவனித்த சரஸ்வதி தனது வீணையின் இசையை நிறுத்தினாள். பரமேஸ்வரியின் வாயில் இருந்து வெளிவந்த இனிமையான வார்த்தைகள் தன் இசைக் கருவியின் தந்திகளையே ஆக்கிரமித்து விட்டதே என்பதை உணர்ந்து அந்த வாக்கின் இனிமையையே நாளும் நாளும் மனதார நினைத்து நினைத்து மகிழத் துவங்க அவளது வீணையின் நாதமும் மேலும் மேலும் அற்புதமாக வெளி வரத் துவங்கியதாம். அதுவே பராசக்தியின் வாக்விலாஸ மகிமையை எடுத்துக் கூறும் மேற் கூறப்பட்ட சுலோகம் ஆகும்.”
அனைவரும் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக யந்திரங்களின் படங்களை கொடுத்து உள்ளேன். பொதுவாக பூஜை அறையில் செளந்தர்யலஹரியின் புத்தகம் ஒன்றை (-யந்திரங்களுடன் கூடியது -) சுவாமி மீது பூக்கள் போடும் பீடத்தில் வைத்து இருந்தால் அது மட்டுமே போதும் . தினமும் அந்தப் புத்தகத்தை பூஜை அறையில் வைத்து அதை வணங்குவத்தின் மூலம் அந்த ஸ்லோகங்களைப் படித்தால் கிடைக்கும் பலனுக்கு ஏற்ப பல நல்ல நன்மைகளும் நமக்கு கிடைக்கும் என்பார்கள்.
யந்திரங்களின் படங்கள்
Pictures of yantra is not clear if you can pl correct it