ஸ்ரீ கோண்ட்வாலே மகராஜ்
ராம பக்தியை பரப்பிய துறவி 
சாந்திப்பிரியா
 படம் நன்றி:

மகாராஷ்டிரா மானிலத்தின் சத்தாரா எனும் மாவட்டதில் உள்ள கோண்ட்வாலே எனும் தாலுக்காவில் பிறந்தவரே ராம பக்தரான ஸ்ரீ பிரும்ம சைதன்ய மகராஜ் கோவிந்தவலேகர் என்பவர். 1845 ஆம் ஆண்டு பிறந்தவருடைய  தந்தை ராவாஜி மற்றும் தாயாரின் பெயர் கீதாமணி என்பதாகும். அவர்களுடைய  குடும்பத்தினர்  கடவுள் பக்தி அதிகம் மிகுந்தவர்கள்.  பிறந்த குழந்தைக்கு கணபதி எனப் பெயரிட்டார்கள்.

குழந்தை கணபதி நல்ல முறையில் வளர்ந்து வந்தது.  அவருக்கு சிறு வயதில் அவருடைய பாட்டனாரே  பாடம் கற்றுத் தந்தார். அவருடைய தத்தா பாண்டுரங்கனின் பக்தர். கணபதிக்கு நியாபக சக்தி மிகவும் அதிகமாக இருந்ததினால் பாடங்கள் அனைத்தையும் ஒரே நாளில் கற்றுக் கொண்டு விடுவாராம். அந்த வயதிலேயே  ஸ்ரீமத் பாகவதத்தை மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டு இருந்தார். அந்தக் குழந்தையை பாடச் சொல்லிவிட்டு அவருடைய பாட்டனார்  நடனம் ஆடுவாராம். அது முதல் எப்போதும் ராம், ராம் என ராம ஜெபம் செய்வதையும் கணபதி வழக்கத்தில் வைத்து இருந்தார்.

குழந்தைக்கு ஐந்து வயதானபோது அதற்கு பல ஆன்மீகக் கதைகள் மனப்பாடமாக ஆகி இருந்தன. எப்போதும் யோசனை செய்தபடியே சிறுவன் அமர்ந்து இருப்பார். வீட்டில் அதை அதிகம் சட்டை செய்யவில்லை. ஒரு நாள் பிள்ளையைக் காணவில்லை. பல இடங்களிலும் தேடினால் அவர் வீட்டைத் தள்ளி இருந்த  ஒரு மயானத்தில் இருந்த கட்டிடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்து கொண்டு இருந்ததைக் கண்டார்கள். சிறுவன் மயானத்தில்  சென்று தியானத்தில் அமருவதா? புத்தி பேதலித்து விட்டதா எனக் குழம்பினார்கள். பயந்து போய் அவரை தூக்கி வந்தார்கள். ஆனால் சிறுவன் கணபதியோ மிகவும் தெளிவாக  இருந்தான்.

  படம் நன்றி:

மயானத்தில் பயமாக இல்லையா எனக் கேட்டதற்கு, தான் எதைக் கண்டு பயப்பட வேண்டும் என்று சிறுவன் பதில் கூறினான். ஒரு முறை அவனுடைய பாட்டனார் விளையாட்டாக அவனிடம் கேட்டார்

‘உனக்கு தங்கக் கட்டிகளை கொடுத்தால் என்ன செய்வாய்’?

சிறுவன் பதில் தந்தான்.

‘அவற்றை வைத்துக்  கொண்டு ஏழைகளுக்கு உணவு தானம் செய்ய ஏற்பாடு செய்வேன்’.

பாட்டனார் கேட்டார்.

‘சரி நீ அரசனாக மாறினால் என்ன செய்வாய்’

சிறுவன் கூறினார், ‘

ஏழைகளை பட்டினியினால் வாட விடாமல் பாதுகாப்பேன்’.

அப்போதே  புரிந்தது கணபதியின் குடும்பத்தினருக்கு அந்த சிறுவன் சாமானியன் அல்ல என்பது. ஆகவே அந்த சிறுவனை அவன் போக்கிலேயே விட்டுப் பிடிப்பதே சரியாக இருக்கும் என நினைத்த குடும்பத்தினர் அவனது செயல்களை கண்காணித்து வந்தாலும் அவனை அதிகம் அடக்கவில்லை. காரணம் சிறுவனின் நாட்டம் ஆன்மீகத்தில் இருந்ததினால்தான்.

கணபதிக்கு ஒன்பது வயதானபோது  வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் அவனது குடும்பத்தினர் அவனை தேடிக் கண்டு பிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். சிறுவனது நடத்தையில் பயமடைந்தவர்கள் அவனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால் வீட்டை விட்டு ஓட மாட்டன் என எண்ணி அவனது பதினோராவது வயதில் திருமணத்தையும் செய்து வைத்தார்கள்.  வைதீக தர்மம் மிகுந்த அந்த காலங்களில் பத்து வயதிலும் பதினோரு வயதிலும் திருமணம் செய்வது மிகவும் சாதாரணம்.

ஆனாலும் நாள் முழுவதும் ராம ஜெபமே செய்து கொண்டு அந்த சிறுவன் தனது பன்னிரண்டாவது வயதில் வீட்டை விட்டு மீண்டும் வெளியேறினார். தனக்கு ஒரு குரு வேண்டும் என ஒரு குருவை  தேடி அலையத் துவங்கினார்.  அந்த சிறு வயதிலேயே தெளிந்த மனமுடைய சிறுவனாக இருந்தவர் ‘அக்கல்கோட்’டிற்கு சென்று ‘ஸ்வாமி ஸமர்த்தை’ சந்தித்தார். அங்கிருந்து ராமகிருஷ்ண மடத்துக்கும் சென்றார். ஆனாலும் அவருக்கு தனது மனதிற்கு ஏற்ற  குரு  கிடைக்கவில்லை. ஆகவே அங்கிருந்து கிளம்பிச் சென்று ‘நான்டெட்’ எனும் மாவட்டத்தில் இருந்த ‘ஏலகோன்’ எனும் இடத்தை அடைந்தார். அப்போது கணபதியின் வயது 15 அல்லது 16 இருக்கும்.
அங்கு  சென்றவர் ‘துக்கோமணி’ மகராஜ் என்ற துறவியை சந்தித்தார். அந்த துறவி மெத்த ஞானம் பெற்றவர். தன்னிடம் வந்து சேர்ந்த ‘கணபதி’க்கு உடனே தீட்ஷை  தரவில்லை. தன்னுடன் தங்க வைத்துக் கொண்டு பல மாதங்கள் அவரை கடுமையான பயிற்சிகளை  கொடுத்து அவரை சோதனை செய்தார். ‘கணபதி’யோ அந்த குரு கொடுத்த அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக கையாண்டு அவருடைய நன்மதிப்பை பெற்றார். ஆகவே  இறுதியாக ‘துக்கோமணி’ மகராஜ் மனம் மகிழ்ந்து ‘கணபதி’க்கு ‘ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெயா ஜெயா ராம் ‘என்ற தீட்ஷை தந்தது மட்டும் அல்லாமல் அவருடைய பெயரை ‘பிரும்ம சைதன்யா’ எனவும்  மாற்றினார்.

‘பிரும்மசைதன்யா’ பின்னர்  ‘ஸ்ரீ மகராஜ்’ என அனைவராலும் அறியப்பட்டார். ‘ஸ்ரீ மகராஜுக்கு’ முப்பது வயதானபோது அவர்  ஹிமாலய யாத்திரையை மேற்கொண்டார்.  சுமார் 12 ஆண்டு காலம் பல இடங்களிலும் சுற்றி ராம நாம உபதேசம் செய்தப்பின்  கோண்டேவாலேவிற்கு திரும்பி வந்தவர் அங்கேயே தங்கி வாழலானார்.  அவருக்கு 32 வயதானபோது அவருடைய முதல் மனைவி மரணம் அடைந்தார். ஆகவே அந்த காலப் பழக்கப்படி அவருடைய தாயாரின் நிர்பந்தத்தினால்  வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.   அந்தப் பெண்மணி கண் பார்வையை  இழந்தவர்.

ஸ்ரீ மகராஜ்’ அதற்குள் வெகுவாகப் புகழ் பெற்று இருந்தார். அவர் துவக்கிய பக்தி மார்கத்தில் ஈடுபட்டு அவரைத் தேடி பலரும்  வரலாயினர். அவருடைய தேஜஸ்சைக் கண்ட ஏழை முதல் பணக்காரர்வரை அவர் மீது பக்தி கொண்டு அவரை வந்து வணங்கினார்கள். அதனால் அவருக்கு பக்தர்கள் பெருகினார்கள். அவர் தமது பக்தர்களை கடவுளிடம் தம்மை முழுமையாக அர்பணித்துக் கொண்டு, அகங்காரத்தை அழித்துவிட்டு அவரிடம் சரணாகதி அடைய வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.  பக்தர்களை தினமும் ஸ்ரீ ராம் ஜெயா ராம் ஜெயா ஜெயா ராம் என்ற  மந்திர சக்தி கொண்ட எழுத்துக்கள் கொண்ட மந்திரத்தை தினமும் சிறுது நேரம் உச்சரிக்குமாறு கூறி வந்தார். அந்த மந்திர சக்தி வாய்ந்த வார்த்தைகளை ராமபிரான் சீதைக்கு தீஷையாக தந்தாராம். ஆகவே அதை தினமும் சிறிது நேரம் உச்சரித்தால் நமது வாழ்வில் வரும் துன்பங்களின் அளவு குறையும் என்பார். மேலும் தமது பக்தர்களை கீழ்கண்ட சில காரியங்களை செய்யுமாறும் அறிவுறுத்தி வந்தார்.

  • முதலாவதாக தம்மால் முடிந்தவரை ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்
  • இரண்டாவதாக சகுந் பக்தி எனப்படும் கடவுள் சிலை வழிபாடு. முக்கியமாக ராம நாம ஜெபம், ராமர் மற்றும் ஹனுமார் வழிபாடு.
  • அடுத்ததாக பசு பாதுகாப்பு.

தனக்கு அனைவரும் கொண்டு வந்து செலுத்திய  காணிக்கைகளைக் கொண்டு அவர் ராமருக்கு பல இடங்களிலும் ஆலயங்களை எழுப்பினார். ராமபிரானை வணங்கும் முறைகளையும் அனைவருக்கும் கற்றுத் தந்தார். அவர் சென்ற இடங்கள் எல்லாம் பக்தி மார்க்க சொற்பொழிவு ஆற்றினார். 1876 முதல் 1896 ஆம் ஆண்டு வரை நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது ஸ்ரீ கோண்டாவலே மகராஜ் அங்கிருந்த  கிராம மக்களுக்கு உணவும், உடைகளையும் தந்து உதவினார். பல அரசியல்வாதிகளும் பெரிய மனிதர்களும் அவரிடம் வந்து அவருடைய ஆசிகளை வேண்டிப் பெற்றுச் சென்றார்கள்.  ஆனால் கோண்டாவாலே மகராஜ் அனைவரையும் ஒரே மாதிரியாகவே நடத்தினார். மகராஷ்டிராவில் அவர் புகழ் பெரும் அளவில் பரவியது. பல இடங்களில் அவருக்கு வழிபாடுகள் நடந்தன.

அவரும் அந்த இடங்களுக்கு சென்று ராமர் ஆலயங்களை எழுப்பி பக்தி மார்க்கத்தைப் பரப்பி வந்தார். ஏழை மற்றும் பணக்காரன் என்ற வித்தியாசத்தைக் காட்டவில்லை. அங்கிருந்த கிராம மக்கள் அவரை தம்முடைய தந்தையாகவே பார்த்தார்கள்.  இப்படியாக ராம பக்தியை பரப்பி வந்தவர் 1913 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம்  தேதியன்று ஜீவ சமாதி அடைந்தார்.

 சமாதியில் பாதுகைகள் 

ஆனாலும் அவர் இன்னமும் கோண்டாவாலேயில் தங்களுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார் என்றே மக்கள் நினைக்கின்றார்கள். அங்கு அவர் கட்டி இருந்த ஆலயம் இணைந்த மடத்தில்  அவருடைய சமாதி உள்ளது. அந்த ஆலய மடத்திற்கு வருடம் முழுவதும்  ஆயிரக்கணக்கான  பக்தர்கள் வருகிறார்கள்.  விடியற்காலை நாலரை முதல் ஆலயத்தில் ஆரத்தி துவங்கி ஆலயம் திறக்கப்பட்டு விடுகின்றது.  மும்பை மற்றும் பூனாவில் இருந்து கோண்டாவாலேவுக்கு நேரடியாக பஸ் சேவைகள் உள்ளன.  மும்பையில்  இருந்து அங்கு செல்ல சுமார் எட்டு மணி நேரம் ஆகும். இல்லை என்றால் ரயிலைப் பிடித்து பூனா, சதாரா அல்லது கோரேகான் என்ற  ரயில் நிலையங்களில் இறங்கி அங்கிருந்து பஸ்களில் செல்லலாம்.