வடுவூர் ராமபிரான்  ஆலயம்
சாந்திப்பிரியா

ராமபிரான் ராவணனுடன் போர் தொடுக்க இலங்கைக்கு சென்றார். அப்போது வானகத்தில் இருந்த ரிஷி முனிவர்களிடம் தான் இலங்கையில் இருந்து வெற்றியுடன் திரும்பும்போது மீண்டும் அங்கு வந்து அவர்களை சந்தித்தப் பின்னரே அயோத்தியாவுக்குச் செல்வேன் என்ற உறுதி மொழியை தந்து விட்டுச் சென்றார். அது போலவே இலங்கையில் ராவணனை வதம் செய்தப் பின்  வனவாசம் இருந்தக் காட்டிற்குச் சென்று அந்த ரிஷி முனிவர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் ராமபிரானிடம் தம்மை விட்டு செல்லக் கூடாது என வேண்டிக் கொண்டார்கள்.  எங்களை விட்டுச் செல்லாதீர்கள் எனக் கண்ணீர் மல்க கேட்டார்கள். அதற்கு ராமபிரான் ‘நான் ஏற்கனவே அயோத்தியாவிற்கு வருவதாக பரதனுக்கு வாக்கு கொடுத்து விட்டதினால் நான் அங்கே கண்டிப்பாகப் போக வேண்டும். ஆகவே நாளைக் காலை நான் இங்கு உள்ளதைப் போலவே, என்னைப் போன்றே ஒரு சிலையை வடிவமைத்து வைக்கின்றேன். அதைப் பார்த்தப் பின் நான் இங்குதான் பரதனுக்குக் கொடுத்த வாக்கை மீறி இருக்க வேண்டுமா, இல்லை எனக்குப் பதில் சிலையை ஏற்கின்றீர்களா  என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்’ என்றார்’. அதைக் கேட்ட முனிவர்கள் ‘அந்த சிலை உயிருள்ளதைப் போல இருந்தால் அதை ஏற்றுக் கொள்கிறோம்’ என்று கூறினார்கள். மறுநாள் காலை அவர்கள் கண் விழித்தபோது ராமபிரானின் தத்ரூபமான சிலை அங்கே காட்சி அளித்தது. அந்த சிலையின் அழகை கண்டு தம்மை மறந்து நின்றார்கள். ராமர் எப்போது அதை உருவாக்கினார் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அதை ராமபிரான் தானே ஸ்வயம்புவாகப் படைத்து இருந்தார். ஆகவே ‘அந்த சிலை அங்கு இருந்தால் போதும், நீங்கள் வாக்கு கொடுத்தபடி அயோத்தியாவுக்கு கிளம்பிச் செல்லுங்கள்’ என்று மன நிறைவோடு ராமரை அயோத்தியாவிற்குச் செல்ல அனுமதி கொடுத்தார்கள். அதன் பின் ராமபிரான் அங்கிருந்துக் கிளம்பிச் சென்று விட்டார். சில காலம் ஆயிற்று. அந்த இடத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட அங்கிருந்த முனிவர்கள் அந்த ராமரின் சிலையை அங்கேயே ஒரு இடத்தில் பூமியில் புதைத்து வைத்து விட்டு பிறகு வந்து பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளலாம் என்று அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்கள். அதன் பிறகு ஏற்பட்ட பல குழப்பங்களினால் அவர்களால் அங்கு திரும்பவும் முடியவில்லை. அந்த சிலை தலைஞாயிறு எனும் பெயர் கொண்ட  பகுதியில் பூமிக்குள் புதைந்தே கிடந்தது.

இன்னும் சில காலம் சென்றது. பல அரசியில் மாற்றங்கள் ஏற்பட்டன. வனம் அழிக்கப்பட்டு கிராமங்கள் தோன்றின. அப்போதுதான்  தஞ்சாவூரை ஆண்டு வந்த சரபோஜி மன்னரின் கனவில் ஒரு நாள் ராமர் வந்து தலைஞாயிறு எனும் பெயர் கொண்ட  பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கூறி அங்கு தான் புதைந்து கிடப்பதாகவும், தன்னை வெளியில் எடுத்து ஒரு ஆலயம் அமைக்குமாறு கட்டளை இட்டார். மன்னனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்தக் கனவு உண்மையாக இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் இரண்டு நாள் அதே கனவு அவருக்கு வரவும் அவர் அதை தட்டக் கூடாது என்று முடிவு செய்து தமது படையினருடன் அந்த  குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பூமியைத் தோண்டிய போது கனவில் ராமர் கூறிய அதே ராமபிரானின் சிலைக் கிடைத்தது. அந்த சிலையின் அழகைக் கண்டு சொக்கியவர் அதை தஞ்சாவூருக்கு எடுத்துச் சென்று அங்கு ஆலயம் அமைக்க முடிவு செய்தார். தஞ்சாவூருக்குத் திரும்பிக் கொண்டு இருந்தவரை  வழியில் வடுவூரில் இருந்த மக்கள் தடுத்து நிறுத்தினார்கள். அந்த ராமரின் சிலை தங்களுக்கு சொந்தம் என்றும், அதை அங்கேயே ஒரு ஆலயத்தில் வைக்க வேண்டும் என்றார்கள். ஆனால் மன்னன் அவர்களிடம் தனக்கு வந்த கனவைப் பற்றிக் கூறி அந்த சிலையை ஒரு பெரிய ஆலயத்தில் வைக்கவே  தஞ்சாவூருக்கு எடுத்த்குச் செல்வதாக எத்தனை சமாதானம் கூறியும் அதை ஏற்க மக்கள் மறுத்தார்கள்.  தஞ்சாவூருக்கு பதில் வடுவூரிலேயே அந்த சிலையை பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைக்க வேண்டும் என்றும்  அப்படி வைக்காவிடில் ஊரில் உள்ள அனைவருமே தற்கொலை செய்து கொள்வோம் என்று மன்னனிடம் கூற தம்முடைய மக்கள் மடிவதை விரும்பாத மன்னனும் அங்கேயே ஒரு ஆலயத்தில் அந்த சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார். இப்படியாக வடுவூர் ஆலயத்தில் ராமபிரான் குடி அமர்ந்தார்.

படம் நன்றி: 

இந்த ஆலயத்தில் உள்ள சிலை ஸ்வயம்பூவாக ராமபிரான் தானே வடிவமைத்த சிலை ஆகும். இங்குள்ள உற்சவ மூர்த்தியின் சிலை திருத்துறைப் பூண்டிக்கு அருகில் இருந்த கிராமத்தில் புதையுண்டுக் கிடந்ததாகவும் அதை எடுத்து வைத்து இங்கு வைத்தார்களாம். அதில் இன்னொரு விசேஷம் என்ன என்றால் அந்த சிலையில் ராமர் சீதை மற்றும் ஹனுமார் என்ற மூவர் மட்டுமே இருந்ததாகவும் லஷ்மணர் இல்லாமல் ராமர் மட்டும் சீதை மட்டுமே உள்ள சிலையை எப்படி வைப்பது, அது ராமனுக்கே நிறைவாக இருக்காதே என்பதற்காக லஷ்மணரின்  சிலையை தனியே செய்து வந்து அதனுடன் வைத்தார்களாம். இன்னொரு செய்தியின்படி முதலில் செய்யப்பட்ட லஷ்மணரின் சிலை பெண் வடிவத்தில் அமைந்து விட அதற்குப் பதிலாக வேறு ஒரு சிலையை மீண்டும் செய்துவிட்டு முதலில் செய்த சிலையை  வடுவூருக்கு கிழக்கே ஒரு ஆலயம் அமைத்து அங்கு அழகிய சுந்தரி என்றப பெயரில் பிரதிஷ்டை செய்தார்களாம். முன் காலத்தில் அது  கிருஷ்ணர் தன் மனைவிகளான ருக்மணி மற்றும் சத்தியபாமாவுடன் இருந்தக் கோவிலாக  இருந்தது.

இந்த வடுவூர் ஆலயம் தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் (NH 63) பாதையில் உள்ளது. இந்த ஊரை வகுலாரண்யம் அல்லது தக்ஷின அயோத்தியா என்றும் அழைத்து உள்ளார்கள்.

ஆலயம் செல்லும் வழி  -தரைப்படம்
ஆலய விலாசம்
The Executive Officer
Vaduvur Sri Kothandaramaswamy Temple
Vaduvur 614019
Tiruvarur District
Tamil Nadu, India
Phone: +91 (0) 4367 267110
vaduvur@gmail.com