துலா புராணம்-3
காவிரி ஆற்றின் மகிமை
சாந்திப்பிரியா
சந்திரகாந்தா அந்த ஊரிலேயே தங்கி இருந்தாள். கணவன் தன்னை விட்டு விலகிப் போனப் பின் முன்பை விட தைரியம் கொண்டு பல இளைஞர்களுடன் கூடி, தனது காம இச்சையை தணித்துக் கொண்டு,  அவர்களுக்கும்  உல்லாசத்தை தந்தபடியும் இருந்தாள். அந்த ஊரில் அவள் அழகில் மயங்காதவர்கள் யாருமே இல்லை. அவள் சண்டாளர்கள் முதல் அனைத்து பிரிவு ஆண்களையும் தன்  இசையைத் தீர்க்க பயன்படுத்தி வந்தாள். இது அந்த நாட்டு அரசன் காதுக்கும் எட்டியது. இனி இவள் இங்கிருந்தால் இந்த ஊரின் கலாச்சாரமே அழிந்து விடும் என்பதினால் அவளை நாடு கடத்தினான். அவளும் சளைத்தவள் இல்லை. ஒரு திருட்டு கும்பலுடன் பல இடங்களிலும் கொள்ளையடித்தப் பொருட்களுடன் ஊரை விட்டு வெளியேறி வேறு நாட்டுக்கு சென்று விட்டாள். இதனிடையே மேலுலகில் இருந்த தர்ம தேவதைகள் அங்குள்ள நிலைமையை பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ‘சீச்சீ …கேடு கேட்டவள், இவளை எப்படி அடையாளம் தெரிந்து கொள்ளாமல் அந்த அந்தணன் இவளை மணந்து கொண்டு இவளுடன் வாழ்கை நடத்திக் கொண்டு இருந்துள்ளான். பாவம் அவன். இவள் நரகத்துக்குச் சென்று நாசமாகட்டும்’ என்று மனமார சபித்தார்கள். சந்திரகாந்தா இன்னமும் இளமையை தன்னிடம் வைத்துக் கொண்டு இருந்ததினால் ஆவலுடன் வந்த திருடர்கள் அங்கும் இங்கும் திருடி வந்த பொருட்களைக் கொண்டு  அவளுடன்  ஆனந்தமாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் எத்தனைக் காலம்தான் அந்தக் கதையைத் தொடர இயலும்? சந்ரகாந்தாவின் அங்கம் தளர்ந்தது. உடல் வனப்பும் குறைத்து போய் பல வியாதிகளையும் கொண்டவள் ஆயினாள். அவளுடன் வந்தவர்கள் மெல்ல மெல்ல அவளை விட்டு விலகி ஓடி விட்டார்கள். முடிவில் யாருமற்ற அனைதையாகி அகால மரணம் அடைந்து யாமலோகம் சென்றாள். நரகத்தில் பலவிதமான சித்திரவதைகளையும் கொடுமைகளையும் யமன் அவளுக்குக் கொடுத்தான். நரக வேதனை என்பார்களே அதை முற்றிலுமாக அவள் அனுபவித்தாள். அவள் புருஷனுக்கு செய்த துரோகத்தினால் இப்படியாக நரக வேதனையில் இருந்தவளை மேலுலகில் இருந்த தர்ம தேவதைகள் பார்த்துவிட்டு ‘அவதிப்படட்டும், நன்கு அவதிப்படட்டும்’ என்று அவளை மேலும் சபித்தார்கள்.
அடுத்து சில காலத்திலேயே மீண்டும் ஒரு பெண்ணாக தாசி வீட்டிலே பிறக்க வேண்டி இருந்தது. அங்கும் அவள் பல ஆண்களை திருப்தி செய்ய வேண்டி இருந்தது. இரவும் பகலும் ஒரு இயந்திரமாக உடலை மற்றவர்களுக்கு தந்தவள் விரைவில் குஷ்டரோகத்தை பெற்றாள். உடல் முழுவதும் சீழ் புண்கள் வந்து படாத அவதிகளை பட வேண்டி இருந்தது. வியாதி வந்து விட்டவளை யார் சீண்டுவார்கள்? அங்கும் அவளை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள். பிச்சை எடுத்து உண்ண  வேண்டி இருந்தது. அவளைக் கண்டாலே முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல்  அனைவரும் துரத்தினார்கள். அப்போதுதான் பூர்வ ஜென்ம கர்மாவினால் (சிறு புண்ணியத்தினால்) அவள் ஒரு காலஷேபத்தைக் கேட்க நேரிட்டது. அதில் காவேரி ஆற்றின் மகிமையையும், துலா மாதத்தின் மகிமையையும் பற்றிய  கதைகளை காலட்சேபம் செய்தவர் கூறிக் கொண்டு இருந்ததைக் கேட்க நேரிட, அன்று இரவு யாரும் இல்லாத நதிக்கரை  இடத்துக்குச் சென்று காவேரி ஸ்நானம் செய்து விட்டு ஒதுக்குப்புறமான ரோட்டின் ஓரத்தில் படுத்து உறங்கினாள். அது துலா மாதம். அவளுக்கு அதுவும் தெரியாது. பசிக்கு உணவும் இல்லை. உணவு தர யாரும் இன்றி  அப்படியே பட்டினியால் வாடி அடுத்த சில தினங்களில் இறந்து விட்டாள். அவளை யம தூதர்கள் வந்து அழைத்துச் செல்ல வந்தார்கள். வந்தவர்கள் அவளை தங்க விமானத்தில் ஏற்றிக் கொண்டு சொர்கலோகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். மேலுலகில் இருந்த தர்ம தேவதைகள் அதைக் கண்டு வியந்து நின்றபோது, சந்திரகாந்தா  அவர்களை நமஸ்கரித்தாள். வழியில் தென்பட்ட மூதோர்களின் ஆத்மாக்களுக்கும் தனது வந்தனத்தை தெரிவித்தபடியே சென்றாள். அவளை தங்கத் தேரில் ஏற்றிக் கொண்டு சென்ற யம கிங்கர்களிடம் தர்ம தேவதைகள் அதற்கான காரணத்தை வினவியபோது, அவர்களோ இரண்டு ஜென்மங்களுக்கு முன்னால் மகா பாவியாக அவள் இருந்திருந்தாலும் காவேரி நீரில் துலா மாதத்தில் குளித்து இருந்ததினால்தான் இந்த கௌரவத்தைப் பெற்று உள்ளாள் என்று கூறினார்கள்.
அதற்கு இடையில் சந்திரகாந்தாவை மனத்தைக் கெடுத்து தவறான மார்கத்தில் அழைத்துச் சென்று, ஒரு வேதங்களை நன்கறிந்த பிராமணனை தவிக்க விட்டதின் காரணமாக வித்யாவளி மரணம் அடைந்ததும், யம லோகத்துக்குச் சென்றாள்.  மேலுலகில் இருந்த தர்ம தேவதைகள் அங்குள்ள நிலைமையை பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ‘சீச்சீ …கேடு கேட்டவள், இவளை  நம்பி அல்லவா  சந்தரகாந்தா  கெட்டாள். இவள் நரகத்துக்குச் சென்று நாசமாகட்டும்’ என்று அவளையும் மனமார சபித்தார்கள். யமலோகத்துக்கு சென்றதும்  அவள் கதறக் கதற யம லோகத்தில் இருந்த நாய் ஒன்று அவளது கழுத்தைக் கவ்வி இழுத்துச் சென்றது. அவளுடைய  சதைகளை பீய்த்து பீய்த்து  தின்று விட்டு ஓடியது. அவள் கதறி அழுதாள். அங்கு அவளுக்கு தண்டனைக் காலம் முடியும் வரை பல விதமான கொடுமையான தண்டனைகள் தரப்பட்டன. மீண்டும் மீண்டும் இருபது முறை அவள் தெருவில் சுற்றித் திரிந்த நாயாகவும், பன்றியாகவுமே பிறப்பு எடுத்தாள். அதன் பின் பீஷ்மருக்கும் பரசுராமருக்கும் சண்டை நடக்க காரணமாக இருந்தவளான அம்பா என்ற பெயருடன் காசிராஜனின் மகளாகப் பிறந்தாள். அந்தப் பிறவியில் அவளை மணப்பதற்கு எத்தனை முயன்றும் அவளை யாருமே மணக்க முன் வரவில்லை. வாழ்நாள் முழுவதும் வாழாவெட்டியாகவே வாழ்ந்து வந்தவள் பெரும் மனத் துயரத்துடன் மரணம் அடைந்தவள். அதற்கு அடுத்தப் பிறவியில் பேடியான சிகண்டியாக பிறப்பு எடுத்து புகழ் இல்லாமல் மரணம் அடைந்தாள். இப்படியாக அவளுடைய எந்தப் பிறப்புமே ஜீவனற்ற பிறவியாகவே அமைந்தது. அவள் சொர்க்கம் என்ற ஒன்றை எந்த ஜென்மத்திலும் பார்க்காமலேயே, கொடிய நரகத்துக்கு மட்டுமே வந்தவாறும், சென்று கொண்டு இருந்தவாறும் இருந்தாள்’ என்று கூறியப் பின் சற்றே அமைதியாக இருந்தார் அகஸ்திய முனிவர்.
அதைக் கண்ட அரிச்சந்திரன் அவரிடம் கேட்டான் ‘மா முனிவரே பதிவிரதையாக இருந்து, நரகத்துக்குச் சென்று விட்டு, அதன் பின் துலாமாத காவேரி ஸ்நானம் செய்ததினால் ஸ்வர்கத்துக்கு சென்ற சந்திரகாந்தையின் கதையையும், அவளை தவறான பாதைக்குக் அழைத்துச் சென்றதின் பயனாக பிறவிப் பிறவியாக  நரகத்திலேயே உழன்று கொண்டு இருக்கும் வித்யாவளியின் கதையையும் கூறினீர்கள்.  அவற்றைக் கேட்டப் பின் துலா மாதம் எப்போது வரும்?  அந்த மாதத்தில் காவேரி ஸ்நானம் செய்து விட்டு இங்கு வந்து யாகத்தைத் துவக்க ஆவலுடன்  காத்து இருக்கின்றேன். ஆனால் என் மனதில் இன்னும் ஒரு குழப்பம்  நீடிக்கின்றது.  கட்டிய மனைவியை, தன்னை நம்பி வந்தவளை  துரத்தி விட்டு சென்ற  வேதராசி காவேரிக் கரையின் அருகில் வாசம் செய்து வந்ததாகக் கூறினீர்களே. பிறகு அவன் என்ன செய்தான்?. கட்டிய மனைவியை துரத்தியதற்கான பாவம் அவனை நரகத்துக்குக் கொண்டு சென்றதா, இல்லை அவருக்கு என்ன ஆயிற்று?’ என்று ஆவலுடன் கேட்டதும், கூடி இருந்த ரிஷி முனிவர்களும் அவனது சந்தேகத்திற்கு ததாஸ்து  கூறினார்கள் (ஆமோதித்தார்கள்) .
அதைக் கேட்ட அகஸ்திய முனிவரும் ‘இன்னொரு பக்கத்தில் சந்திரகாந்தாவின் கணவரான வேதராசிக்கு என்ன ஆயிற்று என்று யோசிக்கின்றாயா?. அந்தக் கதையையும் கேள்’ என்று கூறிய பின்  மேலும் தொடர்ந்து கூறலானார்.

…….தொடரும்

முந்தைய பாகங்கள்