அத்தியாயம் -3
அவர் கூறியதைக் கேட்டு மனம் மகிழ்ந்து நின்ற நமத்ஹரா அவரிடம் கேட்டார் ”மகாத்மாவே, மாமுனிவரே, உங்களை சந்தித்து இத்தனை விவரங்களை அறிந்து கொண்டதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கே தெரியாத என் குருநாதரை தேடிக் கொண்டு, எங்கு செல்கிறேன் என்பதையும் புரிந்து கொள்ளாமல் சென்று கொண்டு இருக்கும் எனக்கு வழியிலே உங்களை சந்திக்கும் பாக்கியம் கிடைத்ததும் நான் செய்த பெரும் புண்ணியமாகவே இருந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். என் மனதில் உங்களைக் குறித்து ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. ஸ்வாமி, நீங்கள் உண்மையிலேயே யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? உங்கள் பயணத்தின் நோக்கம் என்ன என்பதையெல்லாம் இந்த அபலைக்கு கூற வேண்டும். என்னை உங்களுடைய சீடனாக ஏற்றுக் கொண்டு எனக்கு கருணை புரிய வேண்டும்” என்று அவரிடம் கேட்டார்.
கால்களில் விழுந்து வணங்கிய நமத்ஹராவை தூக்கி நிறுத்தினார் அந்த சித்த புருஷர். அவரிடம் கூறினார் ”மகனே, உன்னை சுற்றி இன்னும் பல அற்புதங்கள் நிகழ்வதை நீ இனிக் காணலாம். அதற்குக் காரணம் என்னுடைய குருநாதரே. அவர் அமிர்தம் போன்றவர். மும்மூர்த்திகளின் அவதாரமான காமதேவனை போன்ற அவரை நினைக்க நினைக்க மனதில் நம்மை அறியாமலேயே அமைதியும், மகிழ்ச்சியும் பொங்குவதை உணர முடியும். இதோ என் கையில் நீ பார்க்கிறாயே, இதுவே என் குருநாதரின் அற்புத சரித்திரம். நான் தினமும் பல முறை இந்த சரித்திரத்தை பல முறை படிப்பதினால்தான் என் மனம் சஞ்சலம் அடையாமல் உள்ளது. நான் மட்டும் அல்ல இதை படிப்பவர் எவர் ஆயினும் அவர்களுக்கும் அதே இன்பம் கிடைக்கும். இதைப் படித்தால் அனைத்து புண்ணியங்களும் கிட்டி வாழ்வில் நம்மை சூழ்ந்து வரும் தீமைகள் விலகும். நாம் வேண்டியது நமக்குக் கிடைக்கும். பாவங்கள் விலகும். இத்தனை ஏன், ஒரு பிராமணனைக் கொன்ற பிரும்மஹத்தி தோஷம் கூட இந்த புத்தகத்தில் எழுதப்பட்டு உள்ள சூரியனைப் போல ஜொலிக்கும் எனது குருநாதரின் சரித்திரத்தை படிப்பதினால் விலகிவிடும் எனும்போது இதன் மகிமை எப்படிப்பட்டது என்பதை உன்னால் உணர்ந்து கொள்ள முடியும்”.
நமத்ஹரா அவரிடம் ஆர்வத்துடன் கேட்டார் ”ஸ்வாமி, நீங்கள் இவற்றை எல்லாம் கூறும்போதே அதைக் கேட்டு என் உடல் புல்லரிக்கிறது. நான் முற்றிலும் உலக பந்தத்தில் இருப்பவன். காமம், க்ரோதம், ஆசாபாசங்கள் அனைத்தையும் கொண்டவன். எனக்கு இந்த நிலையில் இருந்து முக்தி கிடைக்க வேண்டும் என்பதினால்தான் என் கண்களுக்கு புலப்படாத என் குருவை தேடிக் கொண்டு செல்கிறேன். நீங்கள் கூறுவதில் இருந்து உங்கள் கையில் உள்ள குருநாதரின் புத்தகத்தைப் படித்தாலே நான் வேண்டும் அனைத்தும் கிடைக்கும் என்பது புரிகிறது. ஸ்வாமி ஆகவே தயவு செய்து அந்த புத்தகத்தில் எழுதப்பட்டு உள்ள சூரியனைப் போல ஜொலிக்கும் அவருடைய வாழ்கை வரலாற்றை எனக்கு விவரமாக எடுத்துரைப்பீர்களா?”.
அதைக் கேட்ட சித்த முனிவர் கூறினார் ” மகனே உனது ஆர்வம் எனக்குப் புரிகிறது. வா, அதோ தெரிகிறதே ஒரு நெல்லி மரம். அதன் அடியில் அமர்ந்து கொண்டு உனக்கு என் குருநாதரைப் பற்றிய அனைத்து சரித்திரத்தையும் கூறுகிறேன். . வா…அங்கு செல்வோம் ..வா”. அதைக் கேட்ட நமத்ஹரா சித்த முனிவரிடம் கேட்டார் ”குருநாதா, அதென்ன நெல்லி மரத்தடியில் அமர வேண்டும் என்கிறீர்கள்? நெல்லி மரத்துக்கு என்ன அத்தனை விஷேசம்??” என்று கேட்க சித்த முனிவர் கூறத் துவங்கினார் ”மகனே, நெல்லி மரம் சாதாரண மரம் அல்ல …. அது தத்தாத்திரேயருக்கு மிகவும் பிடித்த மரமாகும். அதனால்தான் எனது சத்குருனாதரும் நெல்லி மரத்தடியில் அமர்வதை விரும்புவார் என்பதினால் நானும் என் குருநாதரை என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்ள எங்கெல்லாம் நெல்லி மரம் தென்படுமோ அங்கெல்லாம் சென்று அதன் நிழலில் தவறாது அமர்வேன்” என நமத்ஹரகாவை அந்த நெல்லி மரத்தடிக்கு அழைத்துச் சென்று, அதனடியில் அமர்ந்து கொண்டு தனது குருவின் வாழ்கை சரித்திரத்தை கூறத் துவங்கினார்.
”முன்பு ஒரு முறை சூரிய வம்சத்தைச் சார்ந்த அம்பாரிஸா என்ற மன்னன் பூமியிலே ஆட்சியில் இருந்தான். அவன் விஷ்ணு பகவானின் பரம பக்தன். ஒவ்வொரு பௌர்ணமியின் பதினோறாவது தினங்களிலும் கடுமையான ஏகாதசி விரதம் அனுஷ்டித்து அந்த விரதத்தை துவாதசி அன்று முடித்துக் கொள்வார். ஏகாதசி முழுதும் விஷ்ணு பகவானின் நாம ஜெபம் செய்தபடியும், அவர் மீது தோத்திரங்களை பாடியும், பஜனைகள் செய்தும் விஷ்ணு பெருமானை தன் இருப்பிடத்துக்கு வருமாறு அழைப்பார். அந்த கடுமையான விரதத்தை எக்காரணம் கொண்டும் அவர் அனுஷ்டிக்காமல் இருந்ததே இல்லை. இப்படியாக பல காலம் கழிந்தது. அந்த மன்னனின் நேர்மையினால் அவர் புகழ் எங்கெங்கும் பரவி இருந்தது. அதைக் கேள்விப்பட்ட துர்வாச முனிவர் அந்த மன்னனின் வைராக்கியத்தை சோதனை செய்ய முடிவு செய்து வேண்டும் என்று வேண்டும் என்றே ஒரு துவாதசி தினத்தன்று அம்பாரிஸாவின் அரண்மனைக்கு சென்றார். துர்வாச முனிவர் முன் கோபக்காரர் என்பதை அனைவருமே அறிவார்கள். அவர் சென்றபோது மன்னன் ஏகாதசி விரதத்தில் இருந்தான். ஆனாலும் விரதம் முடிய உள்ள துவாதசி தினத்தில் வீட்டுக்கு வந்த துர்வாச முனிவரை கண்டவன் பெரும் மகிழ்ச்சி அடைந்து அவரை அன்புடன் வரவேற்று முறையாக அர்கிய பாத்யம் கொடுத்து அவரை உபசரித்தான். அர்கிய பாத்யம் என்பது வந்தவருக்கு கை கால்களை அலம்பிக் கொள்ள ஒரு செம்பில் தண்ணீர் தருவது ஆகும். தன் அரண்மனைக்கு வந்த முனிவரிடம் தான் ஏகாதசி விரதத்தை துவக்கி விட்டதாகவும் அதை துவாதசி முடியும் முன்னர் முடிக்க வேண்டும் என்பதினால் துவாதசி முடியும் முன்னர் விரைவாக அவருடைய அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வந்து உணவு அருந்துமாறு அவரிடம் மிகவும் பணிவாக வேண்டிக் கொண்டான். அதற்குக் காரணம் அந்த முனிவர் வந்தபோது துவாதசி முடிய ஒரு மணி நேரமே மீதம் இருந்தது. அந்த மன்னன் கூறிய காரணத்தைக் கேட்ட முனிவரும் அவன் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு விரைவில் நதிக் கரைக்கு சென்று குளித்து விட்டு தன்னுடைய ஆசார அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பி வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வேண்டும் என்றே அவர் திரும்பி வருவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டார்.