அத்தியாயம் -32
”இவை மட்டும் அல்ல லோபமுத்ரவிடம் ஒரு விதவை எப்படி வாழ வேண்டும் என்பதையும் பிரஹஸ்பதி எடுத்துக் கூறினார். ‘தன்னுடைய கணவன் இறந்து விட்டால் அவனுடைய மனைவி அவனுடன் உடன்கட்டை ஏற வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் அவள் கர்பமாக இருந்தாலோ, அல்லது குழந்தை பிறந்து அதற்கு தன் மார்பில் இருந்து பாலூட்டிக் கொண்டு இருப்பவளாக இருந்தாலோ அப்படிப்பட்ட பெண்கள் உடன் கட்டை ஏறக் கூடாது. அப்படி செய்தால் அவளுக்கு வயிற்றில் உள்ள குழந்தையைக் கொன்ற பாவமும், பசியால் வாடும் குழந்தையை தவிக்க விட்ட தோஷமும் சேர்ந்து கொள்ளும். அது போல அவள் கணவர் வெளியூரில் இறந்து விட்டாலும் அப்படிப்பட்ட பெண்கள் உடன் கட்டை ஏறக் கூடாது. அப்படிப்பட்ட பெண்கள் தனது கணவன் இறந்த பின் தலையை மொட்டை அடித்துக் கொண்டு, ஒரு வேளை மட்டும் உணவருந்திக் கொண்டு, சந்திரயான் எனும் விரதத்தை அனுஷ்டித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
சந்திரயான் எனும் விரதம் எப்படி செய்யப்பட வேண்டும் என்றால் அம்மாவாசை அன்று ஒரு கவளம் உணவை உண்ட பின், தொடர்ந்து ஒவ்வொரு கவளமாக உணவின் அளவை ஏற்றிக் கொண்டு போய் பொர்ணமி அன்று தான் சாதாரணமாக சாப்பிடும் அளவு உண்ணலாம். அது போலவேதான் மறுநாள் முதல் ஒவ்வொரு கவளமாக உணவை குறைத்துக் கொண்டு அம்மாவாசை அன்று ஒரே கவளம் உணவு உண்டபடி இருக்க வேண்டும். இதை செய்வதின் மூலம் இளம் விதவைகளின் இந்ரிய மற்றும் அலை பாயும் உணர்வுகள் தாமாகவே அடங்கத் துவங்கி ஆசைகள் அழியும். உலக பந்தங்கள் குறையத் துவங்கும். தெய்வீக நாட்டம் அதிகரிக்கும். அப்படி செய்யாவிடில் இறந்து போனவனின் ஆத்மா நிம்மதி இன்றி அலையும்.
வசதி படைத்த வீடுகளில் உள்ள விதவைகள் வைகாசி மாதங்களில் மண் குடங்களை தானம் செய்தபடியும், கார்திகைகளில் பிராம்மணர்களுக்கு விளக்குகளை தானம் செய்விக்கலாம். ஆனால் அவற்றை எல்லாம் தாமே தரக் கூடாது. தன் சார்ப்பில் வீட்டில் உள்ளவர்கள் மூலமே தர வேண்டும். விதவைகளின் மகன்கள் இருந்தால், அவர்களுக்கு உபநயனம் ஆன பின் அவள் மூத்த மகனின் சொல்லைக் கேட்டு நடக்க வேண்டும். அவன் வார்த்தைகளுக்கு மதிப்பை தர வேண்டும். ஏன் எனில் கணவருக்குப் பின்னர் அந்த குடும்பத்தின் தலைமையை அவனே ஏற்கிறான்’.
இப்படியாக பிரஹச்பதி ஒரு விதவை என்பவளின் வாழ்கை நெறியை குறித்து அகஸ்திய முனிவரான லோகமுத்ராவிடம் கூறிய அதை நெறிமுறைகளை சாவித்ரியிடம் கூறிய சன்யாசி, அவளிடம் முடிவாகக் கூறினார் ‘அம்மணி, இனி நீங்கள் உடன்கட்டை ஏற வேண்டுமா, கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு விதவையாகவே வாழ ஆசைப்படுகிறீர்களா? இரண்டும் உடன்கட்டை ஏறிய நிலைக்கு சமமானதே என்பதால் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்’. என்று கூறினார்.
அதைக் கேட்ட அந்த இளம் பெண் கூறினாள் ‘முனிவரே, நீங்கள் யார் என்று எனக்கு தெரியாவிடிலும் இந்த நேரத்தில் நீங்கள்தான் என்னுடைய தாயாராக, தகப்பனாக, உடன்பிறந்தவர்கள் போல இங்கிருந்து எனக்கு தக்க அறிவுரைகளை தந்து இருக்கிறீர்கள். நானோ இளம் பெண். விதவை ஆகி விட்டேன் என்றாலும், என்னுடைய இளமையைக் கண்டு என்னை எவர் வேண்டுமானாலும் தீய கண்களுடன் நோக்கலாம். அதை என்னால் தடுக்க இயலாது. தீய கண்களுடன் விதவையை நோக்கினாலே அவள் கற்பை அவர்கள் சூறையாடுவது போலத்தான். ஆகவே நான் இறந்துவிட்ட என் கணவருடன் உடன்கட்டை ஏறுவதையே விரும்புகிறேன். ஆகவே தற்கொலை செய்து கொண்ட பாவம் அல்லது தோஷம் எனக்கு ஏற்பட்டு அடுத்த ஜென்மத்தில் அது என்னை தொடர வாய்ப்பு இருக்குமேயானால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னை பாதிக்காமல் இருக்க நீங்களே அருள் புரிய வேண்டும்’
அதைக் கேட்டவர் ‘சரி உன்னுடைய மனநிலையை ஏற்கிறேன்’ என்றவர் அவளுடைய நெற்றியில் தானே திருநீரை இட்டார். அவளிடம் நான்கு ருத்ராக்ஷ மாலைகளைக் கொடுத்து விட்டு குளித்து விட்டு பிணத்தின் கழுத்தில் அதில் இரண்டை போட்டப் பின், அவள் கழுத்திலும் இரண்டை போட்டுக் கொள்ளுமாறும், அதன் பின் அவர் கொடுத்த நீரை பிணத்தின் மீது தெளித்து விட்டு அதனுடன் அது எரிக்கப்படும்போது உடன்கட்டை ஏறுமாறு கூறினார்.
மிகவும் அமைதியாக இருந்தவள் மடமடவென காரியங்களை துவக்கினாள். பிராமணர்களை அழைத்து வருமாறு கூறி விட்டு நதியில் சென்று குளித்து விட்டு பட்டாடைகளை உடுத்திக் கொண்டு நெற்றி நிறைய குங்குமத்தையும் இட்டுக் கொண்டாள். அடுத்து பிணத்தை ஸ்வாமிகள் அமர்ந்து இருந்த கருநெல்லி மரத்தின் எதிரிலேயே சற்று தள்ளி வைத்தப் பின் உடன்கட்டை ஏற அனைத்து ஏற்பாடுகளையும் அங்கிருந்தவர்களின் உதவியுடன் செய்யத் துவங்கினாள்.
உடன்கட்டை ஏறும் மனநிலையைக் கொண்ட அந்த பெண்மணியைக் கண்டவர்கள் அதிசயப்பட்டு நின்றார்கள். இளம் வயதிலேயே அவள் திடமான மனதுடன் இருந்ததைக் கண்டு வியந்தார்கள். அவளே உண்மையான பதிவிரதையாக இருக்க வேண்டும் என எண்ணினார்கள். ஆனாலும் அவர்களில் சிலர் ‘அம்மா, உடன்கட்டை ஏறுவதை விட உன் பெற்றோர்களுடன் சென்று அங்கு விதவையாக வாழ்ந்து கொண்டு இருக்கலாமே’ என இரக்கப்பட்டுக் கூறினார்கள். ஆனால் அவளோ யாருடைய கருத்தையும் ஏற்கவில்லை. தன்னுடைய முடிவில் தீர்மானமாகவே இருந்தாள்.
கணவனின் சடலத்தின் மீது இருந்த துணிகளை எடுத்துக் கொண்டு நதிக் கரைக்குச் சென்றவள் அங்கு செய்ய வேண்டிய கர்மாக்களை செய்தாள். தன்னுடைய தாலி முதல் தான் உடலில் அணிந்து இருந்த அத்தனை நகைகளையும் எடுத்தாள், அப்படியே அவை அனைத்தையும் அங்கிருந்த பிராமணர்களுக்கு தானமும் செய்தாள். அவளது முகத்தில் அசாதாரண அமைதி நிலவி இருந்தது. அப்போது அவள் தனது மனதில் நினைத்தாள் ‘குருவே, நீங்கள் என் கணவருக்கு உயிர் பிச்சைக் கொடுப்பீர்கள் என்று நினைத்தே உங்களிடம் இறந்து போன என் கணவரின் உடலை எடுத்துக் கொண்டு வந்தேன். திருமணமான ஒவ்வொரு பெண்ணும் சுமங்கலியாகவே இருக்க ஆசைப்படுவார்கள். ஆனால் விதியின் பயனா இல்லை என் கர்மாவின் விளைவா என்று எனக்குத் தெரியவில்லை, அந்த தாலி பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆகவே ஸ்வாமி நடந்தது நடந்து விட்டது, அதை நினைத்து வேதனைப் படுவதில் பயனில்லை என்பதினால் உங்களிடம் நான் வேண்டுவது ஒன்றுதான். அடுத்த ஜென்மத்திலாவது எனக்கு கணவருடன் நல்லபடியாய சேர்ந்து வாழவும், சுமங்கலியாக இறக்கவும் அருள் புரிய வேண்டும்’ என்று மனதுக்குள் கூறியபடியே கணவனின் சடலம் வைக்கப்பட்டு இருந்த இடத்துக்கு சென்றாள். அதற்கு முன்னால் ஸ்வாமிகளின் கால்களில் விழுந்து வணங்கினாள்.
பிணத்தை எரிக்கும் முன் ஸ்வாமிகள் தன கையில் வைத்து இருந்த கமண்டலத்தில் இருந்த ருத்திராபிஷேக நீரை அந்த பிணத்தின் மீது தெளிக்குமாறு கூறினார். அவருடைய சிஷ்யர்கள் அதை அப்படியே செய்தனர். அப்போது ஸ்வாமிகள் அவர் அந்த உடலை ஒரு கணம் முறைத்து பார்த்தார். இறந்து கிடந்தவன் உடல் அசைந்தது. அடுத்த சில வினாடியில் உறக்கத்தில் இருந்து எழுந்தவன் போல எழுந்தான். எழுந்தவன் ஓடிச் சென்று தன்னுடைய மனைவியைக் கட்டிப் பிடித்து மகிழ அவனுக்கு நடந்த கதை அனைத்தையும் அவள் கூறினாள். இருவரும் ஸ்வாமிகளின் பாதங்களில் விழுந்து வணங்கினர். அவர்கள் ஸ்வாமிகளை துதித்தார்கள் ‘ஸ்வாமிகளே, உங்கள் மகிமையை என்னவென்று கூறுவது? நீங்கள் தத்தாத்திரேயரின் அவதாரம். இந்த உலகில் பக்தர்களின் துயர்களை தீர்க்க மனித உருவெடுத்து வந்துள்ளவர். மாயையில் கட்டுண்டு கிடந்த எங்களை அதில் இருந்து கரை சேர்த்து அந்த மாயை என்பதையே உருவாக்கிய பரப்பிரும்மன் நீங்கள். அனைத்தையும் அறிந்த நீங்கள் ஒரு கருணைக் கடல்’ எனப் பலவாறாக போற்றித் துதிக்க கூடி இருந்த அனைவரும் அவர் முன் விழுந்து வணங்கினார்கள்.
அப்போது அந்த கூட்டத்தில் இருந்த தீய மனத்தைக் கொண்டவன் ஸ்வாமிகளிடம் கேட்டான் ‘ஸ்வாமி, வேத சாஸ்திரங்களும் உங்களைப் போன்ற ஞானிகளும் விதியை வெல்ல முடியாது என்று கூறும்போது இறந்து கிடந்த இவர் எப்படி பிழைத்து எழுந்தார் என்பதைக் கூறுவீர்களா?’
அதைக் கேட்ட ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் ‘அப்பனே நீ கேட்ட கேள்வி இங்குள்ள அனைவர் மனதிலும் உள்ளது என்பதை நான் அறிகிறேன். உண்மையில் இந்த இளைஞன் மரணம் அடைந்து போனவன்தான். ஆனால் என்னை நம்பிக்கொண்டு சடலத்தை என்னிடம் வந்து உயிர் பிட்சைக் கேட்ட அவனுடைய மனைவியின் தூய எண்ணங்களையும், புருஷ பக்தியையும் கண்டதினால்தான் நான் பிரும்மாவுடன் பேசி அவனுடைய அடுத்த ஜென்மத்தில் இருந்து முப்பது ஆண்டுகளை இந்த ஜென்மத்துக்கு மாற்றிக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டு அவனுக்கு மீண்டும் உயிர் கிடைக்க ஏற்பாடு செய்தேன்’ என்றார்.
அதைக் கேட்ட அனைவரும் வியந்து போனார்கள். அந்த பிராமணத் தம்பதியினரும் குருதேவரை வனங்கித் துதித்தப் பின்னர் அங்கிருந்துக் கிளம்பிச் சென்று மகிழ்ச்சியோடு நெடுநாட்கள் வாழ்ந்து வந்தார்கள் (இத்துடன் அத்தியாயம் -32 முடிவடைந்தது).