குல தெய்வங்களுக்கும்
பிற தெய்வங்களுக்கும்
என்ன வேறுபாடு ?
”ஐயா, ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒவ்வொரு தெய்வத்தை தமது குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு இருப்பார்கள். அதாவது நம்முடைய ஐம்பது தலைமுறைக்கு முன்னர் இருந்த நம்முடைய தாத்தாவுக்குத் தாத்தா என நீண்டு கொண்டு போகும் பெரும் பெரும் பெரிய தாத்தா (இருபது தலைமுறையின் தாத்தா) வணங்கி வழிபாட்டு வந்திருந்த தெய்வத்தையே அவர் வழி வருபவர்கள் குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு உள்ளார்கள். அவர் குடும்பத்தில் பிறக்கும் ஆண் மகன்கள் மூலம் பெருகும் ஆண் வழி குடும்பத்தினர் அனைவருமே அதே தெய்வத்தைத்தான் வணங்கி வருவார்கள். எந்த ஒரு குடும்பத்தில் ஆண் மகனே இல்லையோ அதோடு அந்த குடும்பத்தின் வம்சம் பெருகுவது இல்லை என்பதினால் குலதெய்வம் முடிந்து விடும் என்பார்கள். ஏன் என்றால் பெண்கள் புகுந்த வீட்டுக்குச் சென்றதும் அவர்கள் அந்தக் குடும்பத்தின் குல தெய்வத்தையே ஏற்க வேண்டும். இது குறித்து – குல தெய்வம் மற்றும் பிற தெய்வம் என்பதைக் குறித்து- நான் எழுதி வரும் குரு சரித்திரம் முடிந்தவுடன் விவரமாக எழுதுவேன்”.
நான் குரு சரிதாவை எழுதி முடித்தப் பின்னர் அதைக் குறித்து எழுதுவதாகக் கூறி இருந்ததினால் அதன் விளக்கத்தை இப்போது எழுதி உள்ளேன். நான் எழுதும் அனைத்துமே சில பண்டிதர்களிடம் இருந்து நான் பெற்ற விவரங்களின் அடிப்படையை கொண்டே எழுதுகிறேன் என்பதினால் இதையும் சற்று விளக்கி எழுத வேண்டி உள்ளது.
ஒரு தெய்வம் என்பது இன்னொரு தெய்வத்திடம் இருந்து அதாவது பரமாத்மனிடம் இருந்து வந்ததுதான். அதாவது உலகெங்கும் பல்வேறு ரூபங்களில் பல்வேறு தரப்பினர் வணங்கும் தெய்வங்கள் அனைத்துமே பரமாத்மனிடம் இருந்து வந்தவையே ஆகும். முதலில் பரமாத்மன் படைத்தது மூன்றே தெய்வங்களைத்தான். அந்த முதல் நிலையில் உள்ளவர்கள் பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான். அந்த பரமாத்மன் தனக்குத் தானே ஒரு ரூபம் தந்து அதை சிவபெருமானாகினார் என்றும் கூறுவார்கள். காரணம் பரமாத்மன் என்பது உருவமற்ற சிவனும்-பார்வதியும் இணைந்திருந்த சிவசக்தி ஸ்வரூபம் ஆகும். அந்த பரமாத்மனை பெண்ணினமாகவே கூறுவார்கள். காரணம் கருவுற்று குழந்தைகளைப் படைப்பது பெண்கள் என்பதினால் தெய்வங்களைப் படைத்த பெண்ணாக பரமாத்மனை கருதினார்கள்.
அப்படி படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் எண்ணவே முடியாத அளவில் கோடிக்கணக்கான உயிரணுக்களை தம்முள் கொண்டு படைக்கப்பட்டவர்கள். ஆகவே முதலில் படைக்கப்பட்ட மூவரும் தம்முள் இருந்த அணுக்களை தனது சார்ப்பிலே பல ரூபங்களில், பலவேறு உருவங்களில், பல்வேறு நிலைகளில் உருவாக்கி ஐந்து நிலை பிரபஞ்சத்திலே அனுப்பினார்கள். அவர்கள் மேலே தேவலோகத்திலே படைக்கப்பட்டு இருந்ததினால் கீழே இருந்த பூமி மற்றும் நான்கு திசைகளில் தம்முடைய அணுக்களை அனுப்பியதினால்தான் ஐந்து நிலை பிரபஞ்சத்திலே அனுப்பினார்கள் என்று கூறுகிறார்கள். இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். தமது படைப்புக்குப் பின்னர் பிரும்மன் கோடி கோடியான ஜீவன்களைப் படைக்க, மற்ற இருவரும் அந்த ஜீவன்களைக் காக்கும் மற்றும் அழிக்கும் அவதாரங்களைப் படைத்தார்கள். அவர்களுக்கு பல்வேறு சக்திகளை தந்தார்கள். அவர்களது பணிகளை நிர்ணயித்தார்கள். இதனால்தான் தொண்ணூற்றி ஐந்துக்கும் அதிக சதவிகிதத்திலான தெய்வீக அவதாரங்கள் மற்றும் தேவதைகள் அனைவருமே விஷ்ணு அல்லது சிவபெருமானின் வழிமுறையை சார்ந்தவர்களாகவே காணப்படுகிறார்கள்.
அதனால் மூவரில் அந்த இருவருக்கு மட்டுமே இந்த பிரபஞ்சத்தில் ஐந்து நிலைகளிலும் பல லட்சக்கணக்கான அவதாரங்கள் இருக்க பிரும்மனுக்கு மட்டும் மிக மிகக் குறைந்த அளவிலேயே அவதார ரூப கணங்கள் இருந்தன. அதனால்தான் பிரும்மாவை வேண்டிக் கொண்டு செய்யப்படும் விரதங்களும் நியமங்களும் அபூர்வமாகவே காணப்படுகின்றன. பிரும்மாவினால் படைப்பைக் கொடுக்க முடிந்தது, அவரை வேண்டித் தவம் இருந்தவர்களுக்கு அழிவற்ற நிலை என்ற அளவு அருள் புரிய முடிந்தது. ஆனால் சிவபெருமானைப் போலவும், விஷ்ணுவைப் போலவும் பல்வேறு ரூபங்களை எடுத்து அசுரர்களையும், ராக்ஷசர்களையும், அரக்கர்களையும் நேரடியாக களத்தில் இறங்கி அவர்களை அழித்ததான புராணங்கள் அல்லது வரலாறுகள் எதுவுமே இல்லை. அதன் காரணம் பின்னர் பிரும்மா சாபம் பெற்று பிரபஞ்சத்திலே மக்களால் பூஜிக்கப்படாத கடவுளாக இருப்பார் என்பது முடிவாகி இருந்ததினால்தான் இந்த நிலை இருந்துள்ளது. பிரும்மா கோடி கோடியான ஜீவன்களைப் படைத்தப் பின் விஷ்ணுவும், சிவபெருமானும் அனுப்பிய அவதாரங்களும், ரூபங்களும் கண்களுக்குப் புலப்படாத வகையில் இருந்து கொண்டு பிரும்மனால் படைக்கப்பட்ட உயிரினங்களை காப்பற்றுவதற்காக பிரபஞ்சத்தில் உலவி வரலாயின.
இப்படியாக சிவபெருமான் மற்றும் விஷ்ணுவினால் படைக்கப்பட்ட பல அவதாரங்களில் ஒன்றாகவே குல தெய்வமும் அடங்கும். அந்த ஐந்து நிலைகளில் காணப்படும் ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கும். அவ்வளவு ஏன் துர்தேவதைகள் கூட அந்த அவதாரங்களில் உள்ளன. அவையும் சில காரண காரியங்களுக்காகவே படைக்கப்பட்டுள்ளன. அது சரி அதென்ன குல தெய்வம் என்ற பெயர் ? ஐந்து நிலைகளில் உள்ள தெய்வீக ரூபங்களில் குல தெய்வம் என்பது என்ன பிரிவு??
பிரும்மன் படைத்த உயிரினங்களைக் காக்க விஷ்ணுவும், சிவபெருமானும் பலவேறு அவதாரங்களையும், ரூபங்களையும் படைத்தார்கள் என்று கூறினேன் அல்லவா. அந்த உயிரினங்களைப் படைத்தப் பின் அவற்றை கோடிக்கணக்கான பல்வேறு பிரிவுகளாக பிரித்து உலகின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு குணங்களுடன் படைப்புக் கொடுத்தார். அந்த பல்வேறு குனங்களுடம், பலவேறு இடங்களிலும் பரவிக் கிடந்த படைப்புக்களை பாதுகாக்க, வழிப்படுத்த வேண்டும் என்பதை முன்னரே பரமாத்மன் முடிவு செய்து இருந்ததினால்தான் விஷ்ணு மற்றும் சிவபெருமானின் மூல அவதாரங்கள் மூலம் கோடிக்கணக்கான துணை அவதாரங்களை படைக்க வழி செய்யப்பட்டு இருந்தது. அவர்களால் அப்படியாக படைக்கப்படும் ஒவ்வொரு அவதாரத்துக்கும் சில பொறுப்புக்களும் அதிகாரங்களும் தரப்பட்டது. அவர்கள் பிரும்மாவினால் படைக்கப்பட்டு கோடிக்கணக்கான பிரிவுகளில் இருந்த ஒவ்வொரு பிரிவையும் பாதுகாத்து வழிகாட்டும் பொறுப்புக்களைப் பெற்றது.
பிரும்மாவினால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவனும் 13 ஜென்ம காலங்களைக் கொண்டு படைக்கப்பட்டு உள்ளது. படைப்பின் தத்துவப்படி ஒரு ஆத்மாவின் 13 ஜென்ம காலம் எனப்படுவது சுமார் 781 ஆண்டுகளைக் கொண்டதாம். ஒவ்வொரு ஆத்மாவும் படைக்கப்பட்டவுடன் அதை நல்வழிப்படுத்தி பாதுகாக்க எந்தெந்த தேவதை அல்லது தெய்வங்களுக்கு அதிகாரம் தரப்பட்டு இருந்ததோ அந்த தெய்வங்களும், தேவதைகளும் அந்த ஆத்மாக்களை தம்முடன் இணைத்துக் கொண்டு விடுவதினால் அந்த அந்த தெய்வத்தையே காக்கும் கடவுளாக அந்த ஆத்மாவும் ஏற்றுக் கொண்டு விடுகிறது. அதுவே அந்த ஜீவனின் குல தெய்வமாகி விடுகிறது. அந்த ஜீவனை சார்ந்த அனைத்து ஜீவனுக்கும் வம்சாவளியாக அதே தெய்வமும், தேவதையும் குல தெய்வமாகி விடுகிறது. இப்படியாக அமைந்ததே குல தெய்வம் என்பது. அவரவர் தமது குல தெய்வத்தை வணங்க வேண்டும் என்று இதனால்தான் கூறப்படுகிறது.
ஒரு ஆத்மாவானது ஜனனம் எடுத்தப் பின் அவர்கள் தங்கி உள்ள இடங்களில் ஏதாவது ஒரு காரணத்தினால் உந்தப்பட்டு தமக்கு பாதுகாப்பைத் தர அவர்கள் மனதில் தோன்றும் தெய்வம், தேவதை அல்லது ஏதாவது ஒரு உருவத்தை மானசீகமாக வணங்கத் துவங்குவார்கள். இந்த செயலும் தெய்வ நிர்ணயித்தின்படியே நடைபெறத் துவங்குகிறது. அதுவே அவர்களது குல தெய்வமாகி விடும். இப்படியாக துவங்கும் அந்த குல தெய்வ வழிபாடு என்பது அவர்கள் குடும்பத்தில் துவங்கி அவர்கள் மூலம் அவர்களது வம்சத்தில் தொடரும்.
ஒரு வம்சம் என்பது எத்தனை ஆண்டுகள் அல்லது எத்தனை குடும்பத்தினர்வரை பொருந்தும்? ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே ஒரு வம்ச கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் கூட 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். நம்மில் யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சந்ததியினர் யார் என்பது தெரியுமா? யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள்? அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது. மகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.
எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு – வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்.
இப்படியாக மூன்று தெய்வங்களும் தமது சார்ப்பிலே லட்சக்கணக்கான அணுக்களைப் படைத்து தமது அவதார தூதர்களாக, தெய்வங்களாக, தேவதைகளாக கிங்கணர்களாக உலகெங்கும் அனுப்பி வைத்து உள்ளார்கள். அவை அனைத்தும் பல்வேறு ரூபங்களில் அங்காங்கே குடி கொண்டுள்ளன. அப்பொழுது அங்கு குடி கொள்ளும் தெய்வங்களையும், தேவதைகளையும் அந்தந்த இடங்களில் உள்ளவர்கள் ஆராதிக்கத் துவங்குவார்கள். அப்படி தம்மை ஆராதிக்கத் துவங்கும் வம்சத்தை அந்தந்த தேவதைகளும் தெய்வங்களும் தமது பாதுகாப்பில் தத்து எடுத்துக் கொள்ளும்.
ஒருமுறை ஒரு தேவதையோ அல்லது தெய்வமோ ஒரு வம்சத்தினரை தத்து எடுத்துக் கொண்டு விட்டால் அதன்பின் அந்த வம்சத்தின் ஏழேழு தலை முறைக்கும் அவர்களே பாதுகாப்பாக இருந்தவாறு அந்த வம்சத்தினரின் குல தெய்வமாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள். அந்த வம்சத்தினரின் வீடுகளில் நடைபெறும் நல்லவை மற்றும் கெட்டவை என்ற அனைத்து அம்சங்களிலும் சடங்குகளுக்கும் அந்தந்த தேவதைகளும் தெய்வங்களும் மட்டுமே பொறுப்பு ஏற்பார்கள். அந்த வம்சத்தை மற்ற தேவதையோ அல்லது தெய்வமோ ஏழேழு தலை முறை முடியும் வரை பாதுகாக்க முன்வராது. இதுவே அவற்றை படைத்த மூல தெய்வங்களின் சட்டமாகும்.
இப்படியாக நிர்ணயிக்கப்பட்ட தெய்வீக சட்டத்தை மீறி ஏழேழு தலை முறை முடியும்வரை ஏற்கனவே ஒரு தேவதை அல்லது தெய்வம் தத்து எடுத்துக் கொண்ட வம்சத்துக்கு வேறு தேவதை அல்லது தெய்வம் அடைக்கலம் கொடுக்க முன்வந்தால் அப்படி தடம் பிழன்று வேறு தெய்வ ஆராதனை செய்யும் வம்சத்தினரின் பிராத்தனைகளை அவற்றைப் படைத்த மூல தெய்வம் ஏற்காது. மாறாக அப்படிப்பட்ட வம்சத்தினர் ஏராளமான பிரச்சனைகளை தத்தம் வாழ்க்கையில் சந்தித்தபடி இருப்பார்கள். ஆகவே குல தெய்வம் என்பது தெய்வத்தின் ஒரு பிரிவே என்றாலும் ஒரு குறிப்பிட்ட வம்சத்தினர் வணங்கித் துதிப்பதற்காக, அவர்களது வம்சங்களைப் பாதுகாக்கவே படைக்கப்பட்டவை.
குல தெய்வங்களுக்கு சில குறிப்பிட்ட காரியங்கள் தரப்பட்டு உள்ளன. அவற்றை செய்தப் பின் அவர்கள் தாம் செய்ததையும், அவற்றுக்கான காரணங்களையும், முறையான வழிப்பாதை மூலம் அவரவர்களைப் படைத்தவர்கள் மூலம் பரப்பிரும்மனிடம் அனுப்பும். அங்குதான் ஒரு கம்பியூட்டர் போல அனைவரது கணக்குகளும் வைக்கப்பட்டு அடுத்தப் பிறவி நிர்ணயிக்கப்படுகின்றது. ஆகவே குலதெய்வ வழிபாடு என்பதும் இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்ம வழிபாடே என்பதினால்தான் குலதெய்வத்தை அவமதிப்பது என்பது பரப்பிரும்மனை அவமதிப்பது என்பதினால் அந்தக் குற்றம் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்பட்டு ஆறு ஜென்மங்களுக்கு தண்டனைக் கிடைக்கின்றது. மனிதர்கள் பெற்றுள்ள ஆறு அறிவும் இந்த ஆறு நிலைக் கடவுள் தத்துவத்தினாலேயே அமைந்து உள்ளது. குல தெய்வம் என்பது குறித்து இப்போது அனைத்தும் விளக்கப்பட்டு இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.