பிரபஞ்சம் துவங்கியபோது முதலில் படைக்கப்பட்டவர்களில் ஏழு ரிஷிகள் இருந்தார்கள். அடுத்து படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் அந்த ஏழு ரிஷிகளில் ஏதாவது ஒருவரை தமது வம்சத்தை ஸ்தாபித்தவர்கள் எனக் கருதி வணங்கினார்கள். ஒவ்வோருவரின் வழிதோன்றல்களுக்கும் அவர்கள் பாட்டன் வணங்கிய ரிஷியே மூல தெய்வமானார்கள். இப்படியாகப் படைக்கப்பட்டவர்களான ஏழு ரிஷிகளுடைய வம்சா வழியில் வந்த வம்சத்தினர் பலரும் பல இடங்களிலும் வசிக்கத் துவங்கினார்கள். அந்த ஏழு ரிஷிகளில் ஒருவருடைய குலத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் என்பதைக் பறைசாற்றும் வகையில் தம்மை அந்தந்த ரிஷிகளின் கோத்ராதிகள் என்று கூறிக்கொண்டார்கள். கோத்திரம் என்றால் குலம் என்றும், வம்சம் என்றும் அர்த்தங்கள் உண்டு. ஆகவேதான் மனிதர்கள் தம்மை இன்னின்ன ரிஷியின் கோத்ராதிகள் என்பதைக் குறிக்கும் வகையில் தத்தம் குடும்பத்தை இன்ன கோத்திரத்தைக் கொண்டவர்கள் என்று அடையாளம் காட்டிக் கொண்டார்கள். அந்த கோத்ராதி என்பதே பின்னர் கோத்திரம் என ஆயிற்று. ஆனால் இந்து மதத்தினரைத் தவிர பிற மதத்தினர் எவருமே தம்மை இந்த முறையிலான கோத்ராதிகள் என்று கூறிக் கொண்டதற்கான வரலாறு இல்லை என்பதினால் இந்து மதத்தில் மட்டுமே கோத்திரம் என்று கூறப்படும் பழக்கம் இருந்தது.
கோத்திரம் என்பதின் அடிப்படையில் விவாஹம் மற்றும் உறவு முறைக் கொண்டாலும் இப்படிப்பட்ட கோத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள வாணிய செட்டியார்கள் எனும் சமூகத்தை சார்ந்த ஐந்து கோத்ராதிகள் வணங்கும் ஸ்ரீ பெரிய நாச்சியம்மன் திருக்கோவில் ஒன்று தமிழ்நாட்டின் திருச்சி அருகில் உள்ள தென்னூரில் காணப்படுகிறது. அந்த ஆலயத்தில் உள்ள ஸ்ரீ பெரிய நாச்சி அம்மையாரே வாணிய செட்டியார்களின் குல தெய்வமாவார். வாணிய செட்டியார்கள் எனும் சமூகத்தை சேர்ந்த அந்த ஐந்து கோத்ராதிகள் யார் என்றால் மகரிஷி கோத்திரத்தை சார்ந்த பருத்தி குடையான், பயிராளலக, தென்னவராயன், பாக்குடையான் மற்றும் மாத்துடையான் எனும் கோத்ராதிகள் ஆவர்.
இந்த பெரிய நாச்சியம்மன் ஆலயம் அமைந்த கதை பல கிராமங்களிலும் காணப்படும் கிராம தெய்வங்களின் கதையில் கூறப்பட்டு வரும் மனிதர்கள் தெய்வமான கதையை ஒத்து உள்ளது. இந்தக் கதைக்கான வரலாற்று ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை என்றாலும் வாய்மொழி வழியே காலம் காலமாக கூறப்பட்டு வரும் இந்த ஆலயம் குறித்தக் கதை கீழே உள்ளதாகும். இந்த ஆலயம் உள்ள இடத்தில் ஆலயத்தின் கதையை சேர்ந்த மன்னர் வரலாறு உள்ளது. இடங்களும் காணப்படுகின்றன.
பதினாறாம் நூற்றாண்டில் இன்றைய திருச்சி மாவட்டத்தில் உறையூர் எனக் கூறப்படும் பகுதி விசுவப்ப நாயக்கர் என்பவர் ஆட்சியின் கீழ் இருந்தது. நாயக்கர் மரபில் வந்த இராணி மங்கம்மாள் (1689-1704) மதுரையை ஆண்ட பெண்மணி ஆவார். துணிவு மிக்கப் பெண்மணியான இவருடைய ஆட்சி காலத்தில் மதுரை நாயக்கர்களின் தலைநகரமாக திருச்சி விளங்கியது. அவருடைய சகோதரரே விசுவப்ப நாயக்கர் ஆவார். விசுவப்ப நாயக்கரின் இன்னொரு சகோதரர் 1595 – 1601 ஆண்டுகளில் மதுரையை ஆண்டு வந்த கிருஷ்ணப்ப நாயக்கர் என்பவர் ஆகும். அவர்கள் ஆண்டு வந்த காலங்களிலும் அதற்கும் முன்னதாக பல நூற்றாண்டுகளாக பல இடங்களிலும் நடைபெற்று வந்திருந்த, கணவன் இறந்தால் அவர் உடலை எரிக்கும் சிதையில் தாமும் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் மனைவிகளின் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்து வந்துள்ளது. ஆகவேதான் இந்த ஆலயம் எழும்பிய காலம் 1689-1704 என்பதாக கூறுகிறார்கள். பல இடங்களிலும் உடன்கட்டை ஏறிய பெண்களை பத்தினி தெய்வமாக போற்றி வணங்குதல் தென் நாட்டில் மட்டும் அல்ல, வடநாட்டிலும் இருந்துள்ளது. அப்படி இறந்தவர்கள் நினைவாக நடுக்கல் என்ற பெயரில் கல்லை ஊன்றி வைத்து நினைவுச் சின்னமாக கருதி வந்தார்கள். அதை சதிகள் என்றும் கூறினார்கள். இன்றும் பல இடங்களில் அப்படிப்பட்ட நடுக்கல் தெய்வமாக வணங்கப்படுவதைக் காண முடியும்.
இந்த நிலையில் முன் ஒரு காலத்தில் உறையூர் பகுதியில் ஸ்ரீ வீரியப் பெருமாள் எனும் ஒரு வணிகர் எண்ணை வியாபாரம் செய்து வந்தார். அவருடைய மனைவியே ஸ்ரீ பெரிய நாச்சி அம்மையார் என்பதாகும். அவர்கள் தெய்வ பக்தி மிக்கவர்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அப்போது அந்த நாட்டை விசுவப்ப நாயக்கர் என்றொரு மன்னன் ஆண்டு வந்திருந்தார். அந்த மகனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். ஆகவே அந்த மன்னன் அவளை மிகவும் ஆசையோடு வளர்த்து வந்தார். ஆனால் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த மன்னனின் மகள் இளம் வயிதிலேயே இறந்து விட்டாள். அவள் மீது அதிக பாசம் கொண்டிருந்த மன்னனால் தனது மகளின் மரணத்தின் சோகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன் பின்னர் அவரால் ஆட்சியிலும் கவனம் செலுத்த முடியாமல் அங்கும் இங்கும் அலையத் துவங்கினார்.
இப்படியாக அலைந்து கொண்டிருந்தவர் ஒருநாள் எதேற்சையாக ஸ்ரீ வீரியப் பெருமாளுடைய மனைவி பெரிய நாச்சி அம்மையாரை கடை வீதியில் காண நேரிட்டது. பெரிய நாச்சி அம்மையார் உருவ அமைப்பில் மன்னனின் இறந்து போன மகளைப் போலவே இருந்ததைக் கண்டார். அதனால் அவளிடம் சென்று அவள் இருப்பிடத்தைக் கேட்டறிந்தவர், பெரிய நாச்சி அம்மையாருடைய கணவரை சந்தித்து அவர்களை தமது அரண்மனையிலேயே வந்து தங்கிக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்து, அப்படி அவர்கள் தமது அரண்மனையில் வந்து இருந்தால் இறந்து போய்விட்ட தனது மகள் தன்னுடன் உள்ளதைப் போலவே உணர்ந்து கொண்டு இருக்க முடியும். அதனால் நாட்டு நலனிலும் அதிக கவனத்தை தன்னால் செலுத்த முடியும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அந்த தம்பதியினரோ அரண்மனையில் சென்று தங்க விருப்பம் இல்லை என்றும், மன்னன் போது தனது மகளாகக் கருதும் பெரிய நாச்சி அம்மையாரைக் எப்போது காண விரும்பினாலும் உடனே அவர்கள் அரண்மனைக்கு வந்து அவரை தரிசிப்பதாகக் கூற மன்னனும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டு அரண்மனைக்கு திரும்பினார். அது முதல் பெரிய நாச்சி அம்மையாரை அந்த மன்னன் தனது மகளாகவே கருதி அவர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தனது இறந்து போன மகளே நேரிலே மீண்டு வந்து விட்டதைப்போலக் கருதிக் கொண்டு மகிழ்ச்சியில் நல்லாட்சி செய்யலானார். அவர்களுக்கு அடிக்கடி எதையாவது சேவகர்கள் மூலம் அனுப்பியும் வந்தார்.
இப்படியாக சில காலம் கடந்தது. ஒருமுறை மன்னன் புதுக்கோட்டைக்கு அருகில் இருந்த வனப்பகுதியில் வேட்டையாடச் சென்று இருந்தார். திரும்பி வரும் வழியில் வேட்டையாடிக் கிடைத்த மிருகத்தின் சிறிது இறைச்சியை தனது சேவகனிடம் தந்து அதை பெரிய நாச்சி அம்மையாருக்கு தந்துவிட்டு வருமாறு கூறி அனுப்பினார். அப்போது சற்று மாலைப் பொழுதாகி விட்டது. அந்த சேவகனும் இறைச்சியை எடுத்துக் கொண்டு செல்லும்போது வழியில் வீரியப் பெருமாள் தனது நாயுடன் செல்வதைக் கண்டு அவரிடம் சென்று மன்னன் கொடுத்து அனுப்பிய இறைச்சியை அவரிடம் தந்துவிட அவரும் அதை தனது எண்ணைப் பானை மீது வைத்துக் கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தபோது, தற்போது காந்தி மார்க்கெட் எனப்படும் (அதை காமன் ஆர்ச் என்கிறார்கள்) இடத்தைக் கடக்கும்போது அங்கு உலவிக் கொண்டு இருந்த கோட்டை முனி ஓன்று அவரை அடித்துக் கொன்று விட்டது.
சாதாரணமாக இன்றும் பல கிராமங்களில் காத்து அல்லது காற்று, கருப்பு, பேய், பிசாசு, ஆவி, முனி என பல பெயர்களில் அமானுஷ்ய ஆத்மாக்கள் உலவுவதாக நம்புகிறார்கள். இரவு வேளையிலும், மனித நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களிலும் அப்படிப்பட்ட பேய், பிசாசு, முனி போன்றவை உலாவிக் கொண்டு இருக்கும் என்பார்கள். அவர்களில் கோட்டை முனியும் ஒருவர் ஆகும். அவரை பேய் போன்றதில் ஒன்று என்று நம்புபவர்களும் உண்டு. முனிகளிலும் தீய மற்றும் நல்ல குணம் கொண்ட முனிகள் உண்டு. அதனால்தான் கந்தர் ஷஷ்டி போன்ற முருகன் பாராயணங்களிலும் முனி பற்றிய கீழுள்ள வரிகள் இடம் பெற்று உள்ளது. இதில் இருந்தே தீமை செய்யும் முனிகள் உண்டு என்பது விளங்கும்.
வீரியப் பெருமாள் எங்கு சென்றாலும் அவருடன் துணைக்கு அவருடைய வளர்ப்பு நாயும் உடன் செல்லும். நாய்கள் பேய் மற்றும் தீய ஆத்மாக்களைக் கண்டால் அவற்றை அடையாளம் கண்டு கொண்டு விடும். முனி தனது எஜமானனை அடித்துக் கொன்று விட்டதைக் கண்ட நாய் இறந்து ரத்தக்கறையுடன் கிடந்த அதன் எஜமானனின் உடலை எப்படியோ வாயால் கௌவ்வி வீட்டுக்கு இழுத்து வந்து விட்டது. நாய் இழுத்து வந்த இறந்து கிடந்த கணவரின் உடலைக் கண்ட பெரிய நாச்சி அம்மையார் எதோ விபரீதம் நடந்து விட்டதைக் கண்டு கொண்டார். அப்படி அகால மரணம் ஏற்ப்பட்டால் அதன் காரணம் பேய் அல்லது பிசாசுகளாகவே இருக்கும் என்பது பண்டையக் கால நம்பிக்கையில் ஒன்றாக இருந்தது. பெரிய நாச்சி அம்மையார் சோகத்தினால் கதறி அழுதாலும் மனதை திடமாக்கிக் கொண்டு தனது கணவரை கொன்ற முனியிடம் நியாயம் கேட்க உடனடியாக தனது கணவரின் உடலை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு உறையூருக்குக் கிளம்பிச் சென்றார். ஆனால் அந்த வண்டியோ தற்போது பெரியநாச்சி அம்மன் ஆலயம் உள்ள இடத்தருகே வந்ததும் அங்கிருந்து மேலும் நகராமல் அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தது. என்ன செய்தும் அந்த வண்டியை வேறு இடத்துக்கு தள்ளிக்கொண்டு போக முடியவில்லை.
ஆகவே அந்த அம்மையார் ‘ஒருவேளை தனது கணவர் தன்னை அங்கேயே தகனம் செய்து கொள்ள எண்ணி உள்ளதை அப்படிக் காட்டுகிறாரோ என்னவோ என எண்ணியபடி அந்த உடலை அங்கேயே இறக்கி வைத்து தகனத்துக்கான ஏற்ப்பாடுகளை செய்யத் துவங்கினாள். இதன் இடையே நடந்திருந்த அந்த நிகழ்ச்சி மன்னன் காதுகளை எட்டியது. அதைக் கேட்டறிந்த மன்னனும் உடனடியாக அந்த இடத்துக்கு வந்து சேர்ந்து பெரிய நாச்சியிடம் துக்கம் விசாரித்தப் பின், அவளது கணவரின் இறுதி சடங்கை முடித்து விட்டு தன்னுடன் அரண்மனைக்கு வந்து விடுமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அந்த அம்மையாரோ தான் வீரியப்பெருமாளின் தர்ம பத்தினியாக வாழ்ந்திருந்ததினால் அவர் மரணத்துக்குப் பின்னால் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்க முடியாது என்றும், ஆகவே அவர்களது குல பழக்கத்தின்படி அவர் சிதையில் விழுந்து உடன்கட்டை ஏற உள்ளதாகவும், தன்னை தடுப்பது மன்னனுக்கு பாவத்தைக் கொண்டு சேர்க்கும் எனவும் கூறினாள்.
அந்த காலத்தில் இருந்த பெண்கள் தனது கணவன் மரணம் அடைந்தால் அவரை எரிக்க சிதையூட்டும்போது அதில் தானும் குதித்து தற்கொலை செய்து கொள்வார்கள். அதன் மூலம் தனது கணவரது ஆத்மாவுடன் தானும் சேர்ந்து கொள்வதாக நம்பிக்கை கொண்டு இருந்தார்கள். அப்போதெல்லாம் மயானம் என்பது தனியாக இருந்தது இல்லை. அந்தந்த ஊர் எல்லையில் உள்ள பாழும் நிலத்தின் எல்லைகளில் தகனம் செய்து விடுவார்கள். அப்படி உடன்கட்டை ஏறிய பெண்கள் பின்னர் தெய்வமாகி விடுவார்கள் என்று நம்பப்பட்டதினால் பின்னர் அந்த ஊரிலேயே அப்படி தற்கொலை செய்து கொண்ட பெண்கள் பத்தினித் தெய்வமாகவும் வணங்கப்பட்டனர். அதையே ‘சதி’ என்று வட மொழியில் கூறுவார்கள். ஆகவே அப்படி தகனம் செய்யப்பட்ட இடத்தில் உடன்கட்டை ஏறிய பெண்கள் நினைவாக ஒரு நடுக்கல்லை நட்டு அதையே அந்த தெய்வமாகி விட்ட பெண்ணாகக் கருதி வழிபடுவார்கள். அப்படி தெய்வமாகி விட்ட பெண்களை தமது கிராமத்தை காத்து வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு சிறு ஆலயமும் அங்கு அமைத்து விடுவார்கள்.
ரிக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும் கூட சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் குறிப்புகள் காணப்படுகின்றன. ஒரு விதத்தில் பார்த்தால் அந்த இரண்டு வேதங்களுமே சதியை ஆதரிப்பது போல உள்ளதினால் உடன்கட்டை ஏறும்போது சொல்ல வேண்டிய மந்திரங்களும் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. (ரிக். 10.18.8: அத. 28,3.1). இதை மனதில் கொண்டதினால்தான் வேறு வழி இன்றி அவளது உடன்கட்டை ஏறும் முடிவுக்கு மன்னன் விசுவப்ப நாயக்கரும் கட்டுப்பட வேண்டியதாயிற்று.
மறுநாள் காலை அதே இடத்தில் சிதையை தயார் செய்து வீரியப் பெருமாளை அந்த சிதையில் தகனம் செய்ய, ஏற்க்கனவே முடிவு செய்து விட்டதைப் போலவே பெரிய நாச்சி அம்மையாரும் அதில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது சிதையில் குதித்த அம்மையார் பூமியிலே தனக்கு ஒரு வாரிசு இல்லை, தம்மை தகனம் செய்ய சந்ததி இல்லையே என மனம் வருந்தி தனது கணவரின் இஷ்ட தெய்வமான பெருமாளிடம் அடுத்த ஜென்மத்திலாவது தமக்கு சந்ததி வேண்டும் என்று வேண்டிக் கொண்டவாறு தீயிலே குதித்தார். ஆனால் பெருமாள் அவளது வேண்டுகோளை நிராகரிக்கவில்லை. மரணத்திலும் அவள் மனம் வருந்த வேண்டாம் என்பதற்காக பெருமாளே மலை மீது இருந்து இறங்கி வந்து வீரப்ப ஸ்வாமி என்ற உருவில் அங்கு நின்றிருந்தபடி பெரிய நாச்சி அம்மையாரின் தகனத்தில் கலந்து கொண்டாராம். அதன் பின் அனைவரும் திரும்பச் சென்று விட்டார்கள்.
மன்னனும் சில நாட்கள் அமைதி இன்றி இருந்தார். அப்போது ஒருநாள் அவர் கனவில் தோன்றிய பெரிய நாச்சி அம்மையார் தான் சக்தியின் சொரூபம் என்றும், தான் வந்த வேலையை பூமியிலே நிறைவேற்றி விட்டதாகவும், ஆகவே அந்த ஊரைக் காத்தபடி தான் இருக்க விரும்புவதாகவும், அதற்கு அங்குள்ளவர்கள் ஒப்புக் கொண்டால் தான் சதியாகி தற்கொலை செய்து கொண்ட இடத்திலேயே ஒரு ஆலயம் அமைத்து தன்னை வழிபட வேண்டும் என்றும் கூறினாள். அது மட்டும் அல்லாமல் தனது மகனாக தனது தகனத்தில் வந்திருந்த வீரப்ப ஸ்வாமிக்கும் ஆலயத்தில் சன்னதி ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினாராம். அதைக் கேட்ட பின்னரே சதியாகி மரணம் அடைந்த பெரிய நாச்சி அம்மையார் சக்தியின் ஒரு அவதார கணம் என்றும், எதோ காரணத்துக்காக பூமியிலே பிறப்பு எடுத்திருந்ததும் மற்றவர்களுக்குப் புரிந்தது. அதைக் கேட்டு மெத்த மகிழ்ச்சி அடைந்த மன்னன் விசுவப்ப நாயக்கரும் பெரிய நாச்சி அம்மையாரின் ஆணையின்படியே அந்த இடத்தில் பெரிய நாச்சி அம்மையாருக்கு ஒரு ஆலயம் எழுப்பினார். அது முதல் ஊர் ஜனங்களும் அந்த அம்மையாரை ஸ்ரீ பெரிய நாச்சி அம்மையார் என பெயரிட்டு வணங்கத் துவங்கினார்கள்.
அந்த ஆலயத்தின் மூல சன்னதியில் மற்றும் அதை ஒட்டிய சன்னதியில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பெரிய நாச்சி அம்மன், ஸ்ரீ வீரிய பெருமாள், ஸ்ரீ வீரபத்திர ஸ்வாமி, ஸ்ரீ விசுவப்ப நாயக்கர் போன்றவர்களது சிலைகள் காணப்படுகின்றன.
: ஆலயம் உள்ள இடம் மற்றும் செல்லும் வழித்தடம் :
ஸ்ரீ் பெரிய நாச்சியம்மன் கோவில்
தென்னூர் ஹை ரோடு
தென்னூர்
திருச்சி – 620 017
பேருந்து: (திருச்சி ஜங்ஷன் பேருந்து நிலையம் or சத்திரம் பேருந்து நிலையம்)
தில்லைநகர் வழி : காவேரி ஆஸ்பத்திரி நிறுத்தம்
உறையூர் வழி : புத்தூர் நால் ரோடு நிறுத்தம்
ஆலய பூஜை மற்றும் பிற விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள மணி மீது கிளிக் செய்யவும்.