-சாந்திப்பிரியா-

கும்பகோணத்தின் அருகில் உள்ள கஞ்சனூருக்கு அருகில் உள்ளது கீழச்சூரியமூலை என்றொரு சிற்றூர். அங்குள்ள சூர்ய கோடீஸ்வரர் ஆலயம் சுமார் 2000 ஆண்டுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த ஆலயம் என்கிறார்கள். இந்த ஆலயத்தில் சூரிய பகவான் தினமும் காலை முதல் மாலைவரை சிவபெருமானை வணங்கித் துதிப்பதாக ஐதீகம் உள்ளது.  அப்படி துதிப்பதின் மூலமே சூரிய  ஒளிக்கதிர் சக்தி குறையாமல் கிடைப்பதாகவும் ஐதீகமுள்ளதாம். இந்த ஆலயத்தின் புராணக் கதை என்ன?

உலகில் உள்ள அனைவரும் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை தரிசனம் செய்து பல பயன்களை அடைகிறார்களே, ஆனால் தன்னால் மட்டும் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் சூரிய பகவானுக்கு ஏற்பட அவர் தன்னுடைய சீடரும் மாமுனிவருமான யாக்கியவல்லவரிடம் தனது மன வருத்தத்தையும் வேதனையையும் எடுத்துரைத்தார்.  அதைக் கேட்டு வேதனை அடைந்த அந்த மாமுனிவரும், அவருக்கு ஆறுதல் கூறி விட்டு, சூரிய பகவானுக்காக தானே சிவபெருமானை வழிபட்டு அதன் மூலம் சூரியனுக்கு   தன்னால் ஆன உதவியை செய்வதாக வாக்குறுதி கொடுத்தப் பின் தினமும் சிவபெருமானின் சன்னதிக்கு சென்று மாலையில் தான் பெற்று இருந்த அனைத்து வேத சக்தியையும் சூரிய கிரண சக்திகளாக மாற்றி அதை  இலுப்ப எண்ணை தீபத்தில் இறக்கி  வைத்து  சிவபெருமானை வழிபடலானார். தினமும் ஒரு கோடி  இலுப்பை எண்ணை  தீபம் ஏற்றி சூரியனுக்காக தவம் இருந்தார்.

 தினமும் ஒரு கோடி இலுப்பை எண்ணை
 தீபம் ஏற்றி சிவபெருமானை துதித்தபடி 
யாக்யவால்யகர் தவத்தில் இருந்தார்

பல காலம் இப்படியாக சிவபெருமானை வழிபட்டு வந்த யாக்யவால்யகருக்கு நாளடைவில் இலுப்ப எண்ணை கிடைப்பதில் சில சிக்கல்கள் ஏற்படத் துவங்கியது.  அனைத்து இடங்களிலும் இருந்த  இலுப்ப எண்ணையை   பயன் படுத்தி விட்டதினால் மேலும் இலுப்ப எண்ணை  கிடைப்பது கஷ்டமாகியது. அதனால் அவரது வழிபாடு தடைபடலாயிற்று. மாமுனிவர் அங்கும் இங்கும் அலைந்து இலுப்ப காய்களைக் கொண்டு வந்து எண்ணை எடுத்து அதனால் விளக்கு ஏற்றி வழிபட வேண்டியதாயிற்று.  அதைக் கண்ட வேத சக்திகள் அந்த இலுப்ப எண்ணை தீபத்தினால் ஏற்றப்பட்ட விளக்கு அணைந்ததும் பூமியிலே சென்று புதைந்து கொண்டு இலுப்ப மரமாக மாறி வளரத் துவங்கின. இப்படியாக இலுப்ப மரங்களாக மாறிய மரங்களினால் அந்த இடமே இலுப்ப மரத்தினால் சூழ்ந்த அடர்ந்த வனப்பிரதேசமாக மாறி விட அது முதல் மாமுனிவருக்கு இலுப்பை எண்ணை கிடைப்பதில் எந்த தடங்கலும் இல்லாமல் போயிற்று.

தனது வேண்டுகோள் நிறைவேற வேண்டும் என்பதற்காக மாமுனிவர் யாக்யவால்யகர் தொடர்ந்து சூரிய கிரணங்களை இலுப்பை எண்ணை தீபத்தின் ஒளியாகவும், சூரியனார் தனக்கு அளித்த சக்திகள் அனைத்தையும் பாஸ்கர சக்கரம் எனும் ஒரு சக்கரமாகவும்  மாற்றி அமைத்து அதை சிவலிங்கத்தின் பாதத்தில் வைத்து வழிபடலானார். இப்படியாக தினமும் மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு ஒரு கோடி இலுப்பை எண்ணை தீபங்களை தொடர்ந்து ஏற்றி, அந்த இடத்தையே காலை வேளையோ என்று அதிசயிக்க வைக்கும் அளவுக்கு சூரிய கிரணங்களினால் மினுமினுக்க வைத்து, சிவபெருமானை வழிபட்டு வந்த மாமுனிவர் யாக்யவால்யகர் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவர் முன்னால் தோன்றி அவருக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, யாக்யவால்யகரும் தனக்கு வேதங்களை பயில்வித்த தனது குருவான சூரியனின் வேதனையை சிவபெருமானிடம் எடுத்துக் கூறி அதற்கு தக்க உபாயம் செய்து பிரதோஷ காலத்தில் சூரியனும் சிவபெருமானை வணங்கித் துதிக்க சிவபெருமான் ஏற்பாடு செய்ய வேண்டும், சூரியனின் கிரணங்களைக் கொண்ட தீபத்தை தான் ஏற்றி வழிபட்டதினால் சூரியன் இழந்த ஆற்றலையும் திரும்பத் தந்து, சூரியனுக்கு இன்னும் அதிக ஒளிச் சக்தியை தினம் தினம் தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

அந்த மாமுனிவருக்கு சிவபெருமான்  காட்சி தந்தது பிரதோஷ வழிபாடு துவங்கும் காலம் ஆகும். அதைக் கேட்ட சிவபெருமானும் அந்த இலுப்பை எண்ணையில் சூரியனின் கிரண சக்திகளை ஏற்றி யாக்யவால்யகர் வழிபட்டதினால் இனி மாலை வேளையில் இலுப்பை எண்ணை ஊற்றிய தீபத்தை தான் தங்கி உள்ள அந்த இடத்திலேயே ஏற்றி வழிபடும்போது சூரியனின் அருள் அங்குள்ளவர்களுக்கு பரிபூரணமாகக் கிடைக்கும் என்றும்,   சூரியனின் கிரணத்தையே இலுப்பை எண்ணையில் ஏற்றி வழிபட்டதினால் சூரியனும் தினமும் காலை முதல் மாலைவரை தன்னை அங்கு வழிபட முடியும் என்றும்,  அதன் மூலம் இலுப்ப எண்ணை தீபத்தில்  இழந்த கிரண சக்திகள் சூரியனுக்கு மீண்டும் கைகூடுவது மட்டும் இல்லாமல், அது மேலும் மேலும் அதிகரிக்கும் என்றும் வரம் அருளினார். அது மட்டும் அல்லாமல் மாலை வேளையில் அந்த இலுப்பை எண்ணை விளக்கு தீபம் சூரிய கிரணத்தால் ஒளி விடுகிறது என்பதினால் தினமும் தனது ஒளியை பூமியில் வெளிப்படுத்தாமல் சூரியனால் மாலையிலும் அந்த இடத்தில் வந்து இலுப்ப எண்ணை ஒளி மூலம் தன்னை வணங்கித் துதிக்க முடியும் என்றும் அருள் புரிந்தார்.

அதைக் கேட்டு மகிழ்ந்து காலையில் உதித்தெழுந்த சூரியன் அன்று மாலையிலேயே, சூரிய அஸ்தமனம் ஆகிய உடனேயே, பிரதோஷ காலம் முடியும் முன்பாகவே இலுப்பை எண்ணெய் தீப ஒளியில் பிரவேசித்து அதன் மூலம் சிவபெருமானை தரிசித்து பிரதோஷ வழிபாட்டின் பலன் பெற்றாராம். இப்படியாக மாமுனிவர் யாக்யவால்யகர் மூலம் சூரியனுக்கும் பிரதோஷ காலத்தில் மாலையிலும் பூமியிலே வந்து அந்த ஆலயத்தில் சிவபெருமானை வணங்கித் துதிக்க முடிந்தது. அது முதல் சூரியன் மட்டுமல்லாது பலகோடி மண்டலத்து சூரிய அவதாரங்களும் சூரிய கணங்களும் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாலும் சூரியனுக்கு பிரகாசமான ஒளியை தரும் ஆற்றலை தந்தபடி சிவபெருமான் அங்கு தங்கி  இருப்பதினாலும் இங்குள்ள  சிவபெருமான் சூரிய கோடீஸ்வரர் என்ற பெயர் பெற்று  இங்கேயே தங்கி  அருள் புரிகிறார். யாக்யவால்யகரும் பல காலம் அங்கேயே தங்கி இருந்தார்.  அப்போது அவர் சிவபெருமானுக்காக செய்த ஒரு யாகத்தை தவறின்றி நடத்தி முடிக்க பைரவர் அவருக்கு ஆசானாக இருந்து அதை நிறைவேற்றித் தந்தார். அதனால் அந்த இடத்தில் தங்கிய பைரவரும் சொர்ண பைரவர் என்ற பெயரைப் பெற்றார்.

இப்படியாக தினம் தினம் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகும், வெளித் தெரியாமல் இலுப்பை எண்ணை தீப ஒளி மூலம் சூரிய பகவான் அங்கு வந்து சிவபெருமானை வணங்கித் துதிப்பதினால், மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னால் அங்கு வந்து சிவபெருமானுக்கு இலுப்பை எண்ணை தீபம் ஏற்றி வணங்கித் துதித்தால் சிவபெருமானின் அருள் மூலம் சூரியனின் அருளையும் பெற்று செய்வாய் கிரக தோஷங்களை விலக்கிக் கொள்ளலாம் என்பதாக ஐதீகம் ஏற்பட்டது. சூரிய கோடீஸ்வரரை காலை முதல் மாலை வரை சூரிய பகவான் தனது பொற்கரங்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம் உள்ளது என்பதினால் காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை சூரிய கோடீஸ்வரராக லிங்க உருவில் அமர்ந்துள்ள மூல லிங்கத்தின் உருவம் நிழலாக கருவறை சுவற்றில் தொடர்ந்து தெரிகிறது. இத்தனைக்கும் அந்த கருவறையில் சிவலிங்கத்தின் உருவத்தை நிழலாகத் தரும் வகையில் சூரிய கிரணங்கள் நேரடியாக விழுவது இல்லை என்பது பெரிய அதிசயம் ஆகும்.
அங்குள்ள சன்னதியில் பவளக்கொடி எனும் பெயரில் பார்வதி தேவியும் சிவபெருமானுடன் தங்கி உள்ளார். அவர்களுக்குக் காவலாக சொர்ண பைரவர் எனும் பெயரில் பைரவரும் தங்கி உள்ளார். அந்த பைரவருக்கு பிரதோஷ காலத்தில் தீபாராதனை காட்டும்போது அவரது கழுத்தில் பவளமணி அளவில் சிவப்பு ஒளி தோன்றி மறைவதும் அது மெல்ல அசைவது போலவும் காட்சி தருவது அற்புதமான காட்சியாகும் என்கிறார்கள்.

இங்குள்ள ஒரு சன்னதியில் குடி உள்ள துர்க்கையின் சிலையில் ஒரு காலில் மட்டுமே மெட்டி காணப்படுகிறது.  தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை துர்க்கை அம்மன் எழுந்து வந்து வரவேற்பதாக இதன் பொருள் ஆகும். சூரிய தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கும், நிம்மதி கிடைக்கும், பார்வைக் கோளாறு நீங்கும் என்கிறார்கள்.  இக் கோயிலில் அன்னதானம் செய்தால், முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும். கடன், நோய், எதிரிகள் பிரச்னை எளிதில் தீரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை ஆகும். ஆலயம் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும், மாலை நான்கு முதல் ஏழு மணிவரையிலும்  திறந்து இருக்கும். இங்கு ஆலயத்தில் உள்ள சூர்யகோடீஸ்வரர் ஸ்வயம்புவாக எழுந்தருளியவர் ஆகும். நாங்கள் சென்ற ஆண்டு இந்த ஆலயத்துக்கு சென்று இருந்தபோது மதியம் ஆகிவிட்டதினால் சன்னதிகள் மூடப்பட்டு இருந்தன. ஆனாலும் கதவு  வழியே சிவபெருமானை தரிசித்து விட்டு வந்தோம்.

  சன்னதியில் துர்க்கை 
 பவளக் கொடி  மற்றும் சூர்யகோடீஸ்வரர் 
: ஆலய விலாசம் :
அருள்மிகு சூர்யகோடீஸ்வரர் திருக்கோயில்,
 கீழச்சூரியமூலை,
தஞ்சாவூர். -613001,
தமிழ்நாடு.