ரகுவம்சம்-9
– சாந்திப்பிரியா – 

ராமர் சீதையை மணந்ததும் 
பரசுராமர் கர்வ பங்கத்தை அடக்கிய கதையும்

சீதையை மணக்க வேண்டும் என மனதார விரும்பி ஆசை ஆசையாக அங்கு வந்திருந்த அனைத்து ராஜ குமாரர்களும் நான் முந்தி, நீ முந்தி என அடுத்தடுத்து சபை நடுவே வந்து வில்லையும், அம்பையும் தூக்க முயன்று தோல்வி அடைந்து முகம் சோர்ந்து போய் அவரவர் ஆசனங்களில் சென்று அமர்ந்தார்கள். நடந்தவற்றைக் கண்ட ஜனகரும் சோர்ந்து போய் அமர்ந்து கொண்டார். சீதைக்கு இனி மணமாகாது என்றே நினைத்து வேதனையில் ஆழ்ந்தார். அப்போது விஸ்வாமித்திரர் ராமனை நோக்கி ‘நீ சென்று முயன்று பார்’ என்று கூறி ராமனை அனுப்ப ராமனும் விஸ்வாமித்திரரை வணங்கி விட்டு அந்த வில்லையும் அம்பையும் தூக்க எழுந்து சென்றார். இத்தனைப் பேர் முயன்றும், அனைவரும் தோற்றுப் போய் விட்ட நிலையில் அவர்களை விட இளம் வயதினராக தோன்றும் இந்த ராமன் எங்கே இதை தூக்கி வெற்றி கொள்ளப் போகிறான் என முகத்தில் எந்த சலனமே இன்றி அமர்ந்திருந்த ஜனகருக்கு ராமர் வணக்கத்தை தெரிவித்தப் பின்  எளிதாக அந்த வில்லைத் தூக்கி வளைத்து உடைத்தார். அனைவரும் அதைக் கண்டு மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்தார்கள்.  ஜனகரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் வேகமாக நடந்தேறியன.  தசரத மன்னன் தமது பரிவாரங்களுடனும், ராஜ குருவான  வசிஷ்டருடனும் மிதிலைக்கு வந்து சேர ஜனக மன்னரும் சீதையை ராமனுக்கு திருமணம் செய்து தந்தார்.   ஊர்மிளை எனும் கன்னிகையை லஷ்மணர் மணந்து கொள்ள, மாண்டவி மற்றும் சுதகீர்த்தி என்பவர்களை முறையே பரதரும் சத்ருக்னனும் மணந்து கொண்டார்கள்.   மணம்  முடிந்ததும் அனைவரும் ஊருக்கு திரும்பும் வழியில் பரசுராமர் அவர்களை தடுத்து நிறுத்தினார்.

அவர்களை தடுத்து நிறுத்திய பரசுராமர்  ‘ஷத்ரிய வீரனே, எனது பிதாவின் மரணத்துக்குக் காரணமான ஷத்ரியர்களை அழித்து விட்டு இங்கு வந்துள்ளேன். இனி நான் அழிக்க வேண்டிய ஷத்ரியர்களில் நீயும், காத்தவீர்யனும்தான் மீதம் உள்ளீர்கள். உனக்கும் எனக்கும் ராமன் எனும் நாமகரணமே உள்ளது என்பதினால் உன்னைக் கொல்ல யோசனையாக உள்ளது.   நீ ஜனகனிடம் இருந்த  வலிமையற்ற  சிவ தனுஷை உடைத்து விட்டு சீதையை மணந்து கொண்டாலும், அது உன் உண்மையான வலிமையை எடுத்துக் காட்டாது.  இதோ  என்னிடம் உள்ள இந்த  விஷ்ணுவின் வில்லைப் பார். இதை நீ எடுத்து வளைத்து நாணேற்றினால்  என்னை வெற்றிக் கொண்ட உண்மையான வீரன் என்று உன்னை ஒப்புக் கொள்வேன். அதன் பின் நீ மேலே செல்லலாம்’ என்று கூறினார்.

அந்த சவாலை ஏற்றுக் கொண்ட ராமன் பரசுராமரிடம் கூறினார் ‘முனிவரே, நீங்கள் என்னை விட மூத்தவர் என்பதினால் இந்த வில்லை வளைத்து நாணேற்றி வெற்றி கொண்டால் அதன் பிறகு   உம்மைக்  கொல்வது குற்றம் ஆகும். ஆகவே இந்த பாணத்தை  தூக்குவதற்கு முன்னரே தயவு செய்து இந்த  பாணத்துக்கு  என்ன இலக்கு என்பதைக் கூறுவீர்களேயானால்  நான் அதை செய்வேன். ஆனால் நீங்கள் விரும்பினால் கூட நான் உங்களைக் கொல்ல  மாட்டேன். அதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. நீங்கள் ஒரு பிராமணர் என்பதைத் தவிர விஸ்வாமித்திரருக்கும் உறவினர் ஆவீர்கள். விஸ்வாமித்திரர் என்னுடைய குரு ஆவார்.  ஆகவே என்னால் என் குருவுடன் சம்மந்தம் உள்ளவர்களைக் கொல்ல முடியாது. அது குரு துரோகம்  ஆகிவிடும். அதனால்  இந்த  பாணத்துக்கு இலக்கு உங்கள் ‘பாத கதியா’ அல்லது நீங்கள் ‘ஜெயித்து உள்ள பூமியா’  என்று கேட்டார்.

விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர்  சாந்தமான முனிவராக இருந்தவர். ஆனால் தன்னுடைய தந்தையைக் கொன்ற ஷத்ரியர்களை பழிவாங்க புறப்பட்டு சென்றபோது விஷ்ணுவின் கோப குணாதிசயங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு ஆவேசமானவர். அவரது அவதாரத்திலே அவருக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. அந்த சக்தியைக் கொண்டு  ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடையே எவ்வளவு இடைவெளி இருந்தாலும்  ஷண நேரத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அவரால் சென்று விட முடியும்.  அந்த சக்தியையே ‘பாத கதி’  என்பார்கள்.

பரசுராமானின் குரு காஷ்யப முனிவர் என்பவர் ஆவார். பரசுராமர்  அவருடைய குருவான காஷ்யபருக்கு குருதட்ஷணையாக  தான் தபஸ் மூலம் வெற்றிக் கொண்டிருந்த  அனைத்து பூமியையும் தானமாக தந்திருந்தார்.  அப்போது அதைப் பெற்றுக்  கொண்ட காஷ்யபர் பரசுராமரிடம் கூறினாராம்  ‘ பரசுராமா, எப்போது உனக்கு தபஸ் மூலம் கிடைத்த அனைத்து பூமியையும் எனக்கு நீ  தானம் தந்து விட்டாயோ, அந்த தானம் தந்த பூமியில் நீ  வசிக்கலாகாது,  அங்கு  நீ விஜயம் மட்டுமே செய்யலாம். இரவிலே தங்கலாகாது.

அதனால் பரசுராமர் காலை வேளையில் அந்த பூமியில் எங்கு விஜயம் செய்தவாறு இருந்தாலும், இரவு துவங்கியதுமே தனது பாத கதி எனும் சக்தியை பயன்படுத்தி வெகு தொலைவில் அந்த இடத்தின் எல்லையாக இருந்த மகேந்திர மலைக்கு அப்பால் சென்று விடுவாராம்.  ஆகவே அப்படிப்பட்ட சக்தியைத் தரும் பாத கதியையோ, அல்லது தான் ஏற்க்கனவே தானம் தந்து விட்ட பூமியையோ இலக்காக்கி அவற்றை இழக்க விரும்பவில்லை என்பதினால், ராமர் வில்லில் நாணேற்றி வெற்றி பெற்றால்  ஒன்று தன்னை கொன்று விடலாம், அப்படி தன்னைக் கொல்ல   விருப்பம் இல்லை எனில் அவர் அதற்கு மாறாக தான் யாகம் செய்து பெற்றுக் கொண்ட ஸ்வர்க கதியை இலக்காகக் கொள்ளலாம்  என்று கூறி விட்டார். அதாவது பரசுராமர் என்ற அந்த மானிடப் பிறவி முடிந்து விட்டதும்  அவர் ஸ்வர்கத்துக்கு  செல்ல இருந்த அந்தப் பாதையை* அழித்து  விடலாம் என்ற அர்த்தம் ஆகும்.

அதைக் கேட்டதும் ராமர் பரசுராமரிடம் இருந்த வில்லை வாங்கி அதை தூக்கி அதில் நாணேற்றி பரசுராமரை வெற்றிக் கொள்ள பரசுராமரின் கர்வ பங்கமும் அடங்கியது. அது நடந்து முடிந்ததும் பரசுராமர் தன் முன் உள்ள ராமனே தனக்கு பின் வந்துள்ள விஷ்ணுவின் அவதாரம் என்பதை புரிந்து கொண்டு அதை ராமனிடமே எடுத்துக் கூறி கைகளைத் தூக்கி ராமனை ஆசிர்வதித்து வழி அனுப்பினார். தனக்கு முடிவு வந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்ட பரசுராமனே தம்முடைய தவ வலிமை முழுவதையும் ராமர் தூக்கி நிறுத்திய தமது பாணத்திற்கு இரையாக்கி விட்டு, பிராமணர் என்ற நிலையில் இருந்து கொண்டு  ‘நீ அவதரித்தக் காரணம் அனைத்தும் இனிதாக முடியட்டும் என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்ய, ராமனும் தனது மனைவி மற்றும் பரிவாரங்களுடன் பரசுராமரின் கால்களில் விழுந்து வணங்கிய பின் அவர் ஆசிகளை ஏற்றுக் கொண்டு தனது நாட்டுக்குத் திரும்பினார்.

—————————–
* ஒரு  சிறு விளக்கம் :-​  

ஸ்வர்க கதியை அழிப்பது என்றால் பரசுராமர் தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு விட்டால் ஸ்வர்கத்துக்கு செல்லவே முடியாது என்பதல்ல இதன் சாரம். ஸ்வர்க பாதையை அழித்து விட்டால் பரசுராமர் அவதாரம் முடிந்தவுடன் முதலில்  அவர் எண்ணி இருந்தபடி நேரடியாக ஸ்வர்கத்துக்கு செல்ல முடியாமல் வேறு வழியில் ஸ்வர்கத்துக்கு செல்ல வேண்டி வரும்.  அதற்கு மேலும் சில ஷணங்கள் தேவைப்படும்.  நாம் கணக்கிடும் ஒவ்வொரு ஷணமும்  தெய்வங்களைப் பொருத்தவரை பல்லாண்டு காலம் ஆகும்.  ஆகவே வீணாகும் ஒவ்வொரு ஷணமும் தெய்வங்களைப் பொருத்தவரை பொன்னானவை. அப்படி  வீணாகும் ஒவ்வொரு ஷணமும்  ஒரு அவதாரத்தை முடித்து விட்டு அடுத்த அவதாரம் எடுப்பதற்கு  இடையே பல்லாயிரம் ஆண்டுகள்   இடைவெளியை ஏற்படுத்தி விடும்.  அப்படி என்றால் அனைத்தையும் இயக்கும் எனப்படும் தெய்வங்களால் அவற்றை முன்னரே அனுமானித்து இருக்க முடியாதா, இப்படிப்பட்ட சங்கடங்களை தவிர்க்க முடியாதா என்ற கேள்வி எழலாம்? புராண விளக்கங்களின்படி தெய்வங்களை மையமாகக் கொண்டு நடப்பது அனைத்துமே  தெய்வ லீலைகள் ஆகும்.  இப்படி செய்வதின் மூலம் இப்படி நடக்கும் என்ற விதியை மானிடப் பிறவிகளுக்கு உணர்த்திடவே அப்படிப்பட்ட லீலைகளை வேண்டும் என்றே தெய்வங்கள்  நடத்திக் காட்டுகிறார்கள்.

விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் தனது அவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டிய கட்டத்தை அடைந்ததும், தனது சக்தியை ராமருக்கு செலுத்த வேண்டிய தருமணம் வந்து விட்டதை உணர்ந்து கொண்டார். அதனால் தன்னிடம் இருந்த வில்லை ராமன் வாங்கிக் கொண்டு, அதை தூக்கி நாணேற்றி  தன்னை  வெற்றிக் கொண்டவுடன்  தன்னை  வணங்கி நின்ற ராமருக்கு தனது கைகளைத் தூக்கி பரசுராமர் ஆசிர்வதிக்கிறார். பரசுராமர் உருவில் இருந்த விஷ்ணு பகவான் அப்படி கைகளை தூக்கி ஆசிர்வதிக்கும்போதே அதன் மூலம் தனது சக்திகள் அனைத்தையும் ராமாவதாரத்துக்கு மாற்றி விடுகிறார்.  ஏன் என்றால் ஒரே நேரத்தில் தன்னுடைய அனைத்து சக்திகளையும் இரண்டு வெவ்வேறு மானிட அவதாரங்களில் வைத்திருந்து  தமது கடமைகளை செய்ய முடியாது.

‘நீ அவதரித்ததின் காரணம் அனைத்தும் இனிதே முடியட்டும்’ என்று பரசுராமர் ஆசிர்வதித்தபோதும் கூட தான் விஷ்ணுவின் அவதாரம் எனும் உண்மையை ராமர் புரிந்து கொள்ளவில்லை. அது போலவே மற்றவர்களும் விஷ்ணுவைப் போல சக்தி கொண்ட மானிடர் என்றே ராமரைக் குறித்து நினைத்திருந்தார்களே தவிர அவரை தெய்வம் என்று கருதவில்லை. தானே விஷ்ணுவின் அவதாரம் என்பது ராமருக்குப் புரிந்து இருந்திருந்தால் விஷ்ணுவின் அவதாரமாக, தமக்கு மூத்த அவதாரமாக இருந்த பரசுராமரை தம்மிடம் தோற்றுப் போக வேண்டும் என ராமர் எண்ணி இருப்பாரா? இந்த காட்சி கூட பரசுராம அவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும், தனது சக்திகளை ராமாவதாரத்துக்கு செலுத்திவிட வேண்டும் என விஷ்ணு எண்ணியதினால் நடைபெற்ற நிகழ்ச்சியாகும்.

தொடரும்…………10