COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION


பாகம் –11 : அஷ்டாங்க யோக  தத்துவம்

அத்தியாயம் 33
தாரணை (Dharana): அஷ்டாங்க யோகத்தில் ஆறாவது படி நிலை; குறை, நிறைவுகள்

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

சீடன் தீபக் தன் குருவான வேத தர்மாவிடம் ஆழ்ந்த பணிவுடன் வினவுகிறான் ‘ஸ்ரீமத் தத்த பகவான் அலர்கனுக்கு ஞான நிலையை அறியச் செய்தார்; அதன் பின் அவன் அவரிடம் வேறு என்ன வேண்டினான்? ||1||

அந்த கல்வி போதனையின் அனைத்து சிறப்பு அம்சங்களையும் மற்றவைகளையும் எனக்கு எடுத்துரையுங்கள்; அவற்றை அறிந்து கொண்டால்தான் ஒருவர் பெற்ற கல்வி முழுமையானது என்று கூறிக் கொள்ளலாம்; அப்போதுதான் அதற்கான பலன் கிடைக்கும் பயிற்சியை பிழைகள் இன்றி செய்ய முடியும்’ ||2||

குரு வேத தர்மா கூறலானார் ‘அலர்கனின் வேண்டுகோளைச் கேட்டதும், அத்ரி முனிவரின் தெய்வ புதல்வரான ஸ்ரீமத் தத்தாத்ரேயர் இவ்வாறு பதிலளித்தார் ‘ஓ அரசனே, கவனத்துடன் நான் கூறுவதைக் கேட்பாயாக; முதலாவதாக, இந்த யோக கல்வியில் ஏற்படக் கூடிய குறைகளை நான் உனக்கு விவரிக்கிறேன்||3||

ஒருவர் யோக வழி முறையிலான பயிற்சியில் உள்ள குறைகளையும் அவற்றில் ஏற்படும் இடர்பாடுகளையும் அறிந்து கொண்டு அவற்றைச் சமாளிக்கும் வழிகளையும் நன்கு அறிந்த பின்னர்தான் அனைத்து பாதுகாப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டு யோக வழிப் பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டும்; அப்போதுதான் அவர் அடைய விரும்பும் அனைத்துச் சித்திகளும் (வெற்றிகளும்) எளிதாகக் கைகூடும்; மேலும் ஒருவர் தான் பயணிக்க விரும்பும் பாதையின் மீது முழு நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் ||4||

ஒருவர் உடல் வலியால் அவதிப்பட்டாலோ, மிகுந்த பசியுடன் இருந்தாலோ, மனதிற்குள் அமைதியின்றி, சஞ்சலத்துடனும், துயரத்துடனும், கடும் கோபத்தின் பிடியில் சிக்கியிருந்தாலோ அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் மன அமைதி இழந்திருந்தாலோ, எச்சரிக்கை தேவை ||5||

அத்தகைய சூழலில் ஒருவர் யோகப் பயிற்சியை மேற்கொள்ள முற்பட்டால், அவரது அறிவுத் திறன்களிலோ அல்லது மனதிலோ எவ்வித அமைதியோ, தெளிவோ ஏற்படாது; எனவே, ஒருவர் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொண்டு, மேலே குறிப்பிடப்பட்ட குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை முதலில் நீக்கிக் கொள்ள வேண்டும்; அதன் பின்னரே மீண்டும் யோகப் பயிற்சியைத் தொடங்க வேண்டும்||6||

ஒருவர் தீயவர்களின் நட்பில் சிக்கியிருந்தால், அவர் யோகப் பயிற்சியைத் தொடங்கவே கூடாது; அத்தகைய சூழல், பிற் காலத்தில் கடக்கவே முடியாத மிகக் கடுமையான தடைகளை உருவாக்கக் கூடும்; எனவே, அத்தகைய தீய சகவாசத்தையோ அல்லது அத்தகைய இடத்தையோ, இயன்றவரை விரைவாகத் துறந்து விட வேண்டும் ||7||

ஒருவர் மிகக் கடுமையான குளிரிலோ அல்லது கடுமையான வெப்ப சூழலில் இருந்தாலோ, அல்லது கடும் மழையில் நனைந்திருந்தாலோ, அத்தகைய சூழ்நிலைகளில் தனது பயிற்சியைத் தொடங்க எண்ணக் கூடாது ||8||

ஒருவரைச் சுற்றிப் பலத்த காற்று வீசிக் கொண்டிருந்தாலோ, அல்லது ஒருவர் வெளியே செல்லும்போது அச்சம் கொண்டிருந்தாலோ, அத்தகைய வேளையில் தனது மனதை நிலைப்படுத்தும் பயிற்சியில் ஈடுபடக் கூடாது; அவ்வாறு செய்வது தியானத்தில் இடையூறுகளையே விளைவிக்கும் ||9||

நீர் நிரம்பி வழியும் நதிக் கரைகளிலோ, அல்லது சுடுகாடுகள் மற்றும் இடுகாடுகளிலோ ஒருவர் பயிற்சி செய்யக் கூடாது; அதுபோல, காய்ந்து சுருங்கிய நிலையில் உள்ள மரத்தின் அடியிலும் அமர்ந்து பயிற்சி செய்யக்கூடாது; அவ்வாறு செய்தால் அது பெரும் துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும் ||10||

சுவர்கள் அமையப் பெற்ற ஒரு பாதுகாப்பான சூழல் இல்லாமல், ஒருவர் புனித நாமத்தையோ அல்லது மந்திரத்தையோ ஜபம் செய்யத் தொடங்கினால், ஏதோ ஒரு வகையான இடையூறு நிச்சயம் தோன்றும்; எனவே, பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் அனைத்து முன் நிபந்தனைகளையும் நன்கு அறிந்து வைத்திருப்பது அவசியமாகும் ||11||

ஒருவர் இந்த அறிவுரையை புறக்கணித்து விட்டு, மேலே குறிப்பிடப்பட்ட, பயிற்சிகளை செய்யக் கூடாத இடங்களில், ஏதேனும் ஒன்றில் பயிற்சியைத் தொடங்கினால், அவற்றை போதித்த ஞான குருமார்களின் கருணை மிக்க வார்த்தைகளைப் புறக்கணித்தற்காக அந்த மூடர் நிச்சயம் துன்பங்களின் சேற்றில் சிக்கித் தவிப்பான் ||12||

அவர்கள் தமது நினைவாற்றல் இழப்பதையும், காது கேட்கும் திறன் குறைவதையும் உணர்வார்கள்; அவர் உளறத் தொடங்கலாம் அல்லது பேசும் திறனை முற்றிலுமாக இழக்கலாம்; அல்லது பார்வை மங்கலாகி, கண் பார்வையை இழக்கும் நிலையும் ஏற்படலாம்||13||

அல்லது அவர் அறிவாற்றல் மந்தமானவராகவும், அறிவு இழந்தவர்களாகவும் கூட மாறி விடலாம்; அவருக்குத் தொடர் விக்கல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படலாம்; அல்லது உடலுக்குள் உள்ள வாயுக்கள் சீற்றமடைந்து அவரைத் துன்புறுத்தலாம்; சளி மற்றும் பித்தம் சார்ந்த உடல் உபாதைகள் அவரைப் பாதிக்கலாம்’ என்றார் ||14||

ஒரு சாதகனைத் துன்புறுத்தக்கூடிய இத்தகைய உடல் ரீதியான பாதிப்புகளைப் பற்றிக் கேட்டறிந்த அலர்கன், ஸ்ரீமத் தத்தரிடம் பின்வருமாறு வினவினான் ‘ஆழ்ந்த ஞானம் பெற்ற பெரியோர்களின் அறிவுரையை புறக்கணித்து விட்டு, ஒருவர் யோக வழியிலான ஆன்மீகப் பாதையின் பயிற்சிகளைத் தொடங்கினால், தாங்கள் குறிப்பிட்ட அந்தத் தீங்குகள் நிச்சயம் அவரைப் பற்றிக் கொள்ளும் அல்லவா? ||15||

அப்படியிருக்கையில், அறியாமையின் காரணமாக ஒருவர் அவ்வாறு செய்து, அதனால் உடல் நலக் குறைவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டால், அந்த சாதகனைக் குணப்படுத்த என்ன செய்ய வேண்டும்?; அவரைத் துன்புறுத்தும் அந்தக் காரணத்தை எதன் மூலம் விரைவாக அகற்ற முடியும்? அந்தச் சாதகன் தனது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மீண்டும் எவ்வாறு மீட்டுக் கொள்ள இயலும் ?||16||

ஆகவே அந்த தடைகளை நீக்கும் வழிமுறை என்ன என்பதை எனக்கு நீங்கள்தான் கருணையுடன் கூற வேண்டும் ; இதன் மூலம் ஒருவர் தனது ஆன்மீகப் பாதையில் பயிற்சியை விரைவாகத் தொடர முடியும்; அனைத்துக் குறைகளும் நீங்கி, நல்ல உடல் நலமும் விரைவில் கைகூடும் ||17||

நோயைத் தீர்க்கும் வழிகளைக் கோரி அலர்கன் விடுத்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்த குரு தேவ ஸ்ரீமத் தத்தர், பின்வருமாறு பதிலளித்தார் ‘ஓ அரசனே, இப்போது மிகுந்த கவனத்தோடு , அதற்கான தீர்வுகளைச் கேள்||18||

ஒரு யோகி தனது ஆன்மீகப் பயிற்சியை ஒரு பொருத்தமற்ற இடத்தில் மேற் கொள்ளும்போது, அதனால் அவருக்குச் சிரமங்கள் ஏற்பட்டாலோ, அல்லது ஒன்றன்பின் ஒன்றாகப் பல உடல்நலக் குறைபாடுகள் தோன்றத் தொடங்கினாலோ, அதற்கான தீர்வுகள் பின்வருமாறு அமையும் ||19||

ஒன்பது கப் அளவிலான அரிசியை எடுத்துக் கொண்டு, அதைப்போல ஆறு மடங்கு அதிக அளவு நீரை அதில் சேர்க்க வேண்டும்; பின்னர், அந்த அரிசி நன்கு வெந்து பக்குவமடையும் வரை அதைச் சூடுபடுத்த வேண்டும் ||20||

இந்தக் கலவை யவாகு’ (Avago)* என்று அழைக்கப்படுகிறது; யோகிகள் இதனை விரும்பித் தேடி அருந்துவார்கள் ; இது அனைத்து உடல் நலக் குறைபாடுகளையும் நீக்கி விடும்; ஒருவர் எதிர்கொள்ளும் சிரமங்களிலிருந்து விடுபடுவதற்கு இது ஒரு எளிய வழியாகும்
{*எடுத்துக் கொண்ட அரிசியுடன் 6 மடங்கு தண்ணீர் சேர்த்து, வேகவைத்து, கஞ்சி போன்ற திரவ நிலையில் வடிக்கப்படும் உணவே யவாகு’ (Avago) ஆகும்} ||21||

சமஸ்கிருதச் சூத்திரம்: ‘யவாகு ஷட்குண-ஜலே ரசிதா விரலோதனா’
இதன் விளக்கம் என்ன என்றால் எடுத்துக் கொண்ட அரிசியின் அளவைப் போல ஆறு மடங்கு அதிக அளவு நீரைச் சேர்த்து, ‘யவாகு’ என்னும் கலவையைத் தயார் செய்ய வேண்டும் ||22||

‘யவாகு’ என்று அழைக்கப்படும் இந்தக் கலவையின் சிறப்பம்சங்கள், மருத்துவ நூல்களில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன; இது நோய்களைத் தீர்க்க கிடைக்கும் மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும்; எனினும், ஒவ்வொரு வகையான உடல் நலச் நோயின் தன்மைக்கு ஏற்பவே இதனை உட்கொள்ளும் முறையானது மாறுபடும் ||23||

இந்த முறையை எவ்விதம் கையாள்வது என்பதை ஒருவன் தானாகவேதான் கற்றுக் கொள்ள வேண்டும்; தன் அறிவைப் பயன்படுத்தி தன்னைத் தானே ஆராய்ந்து, பிணியின் மூல காரணத்தைக் கண்டறிந்த பிறகு, அந்த ‘யவாகு’ (கஞ்சி) கலவையை உட் கொள்ளத் தொடங்க வேண்டும்; இதன் மூலம் உடல் சார்ந்த குறைகள் அனைத்தும் நீங்கும் ||24||

நன்கு சூடாக்கப்பட்ட அந்த யவாகு கலவையில், சிறிதளவு நெய்யைச் சேர்க்க வேண்டும்; அதனை நன்கு கலக்கிய பிறகு, தகுந்த நேரங்களில் உட்கொள்ள வேண்டும்||25||

அந்தக் கலவையை அருந்திய பிறகு, ஒருவன் தன் கவனத்தை அந்தப் பிணி குடி கொண்டிருக்கும் இடத்தின் மீது ஒருமுகப்படுத்திக் கொண்டு அமர வேண்டும்; அமைதியுடனும் பொறுமையுடனும் அமர்ந்திருந்து, அக் கலவை தன் முழுப் பலனை தரத் துவங்கும் வரை காத்திருக்க வேண்டும்; காலப் போக்கில், அந்த உடல் சார்ந்த குறைகள் படிப்படியாக விலகத் தொடங்கும்||26||

உடலின் எந்தப் பகுதியில் ‘வாத’ (காற்று) தோஷம் குடி கொண்டிருப்பதாக ஒருவன் கண்டறிந்தானோ, அந்தப் பகுதியின் மீதே தன் கவனத்தை முழுமையாகச் செலுத்த வேண்டும்; அக் கால கட்டத்தில் அந்த குறிப்பிட்ட உடல் உறுப்பையே தன் சிந்தனையில் வைத்துக் கொண்டு தியானிக்க வேண்டும்; காலப் போக்கில், அந்த உறுப்பில் ஏற்படும் நடுக்கங்கள் அல்லது துடிப்புகள் அனைத்தும் தணிந்து அமைதியுறும் ||27||

யவாகு கலவையை உட் கொண்ட பிறகும், உடலின் ஏதேனும் ஒரு பகுதி தொடர்ந்து நடுங்கிக் கொண்டோ அல்லது துடித்துக் கொண்டோ இருந்தால், ஒருவன் தன் மனதை ஏதேனும் ஒரு புனித மலையின் மீது ஒருமுகப்படுத்தி தியானிக்க வேண்டும்; இதன் மூலம் அந்த நடுக்கங்கள் படிப்படியாகத் தணிந்து விடும்||28||

ஒருவனுக்குத் தனது கேட்கும் திறன் குறைந்திருப்பதாகவோ அல்லது கேட்பதில் திடீரென ஏதேனும் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவோ உணர்ந்தால், யவாகு கலவையை உட் கொண்ட பிறகு, தன் மனதைச் செவிகளின் மீதே முழுமையாக ஒரு முகப் படுத்த வேண்டும்; அவ்வாறு செய்யும்போது, கேட்கும் திறனில் ஏற்பட்ட சிரமம் படிப்படியாகக் குறைந்து, மீண்டும் கேட்கும் திறன் இயல்பாகத் திரும்பும்||29||

ஒருவனால் பேசவோ அல்லது சொற்களை வெளிப்படுத்தவோ இயலாத நிலை ஏற்பட்டால், யவாகு கலவையை உட் கொண்ட பிறகு, அவன் தன் கவனத்தை ‘பேச்சு’ எனும் செயலின் மீதே முழுமையாக ஒரு முகப் படுத்த வேண்டும்; இதன் விளைவாக, பேச இயலாத நிலை மறைந்து, தடையற்ற சரளமான பேச்சு வெளிப்படும் ||30||

ஒருவனுக்குப் பிறப்பிலிருந்தே மரபு வழியாகவே ஏதேனும் உடல் சார்ந்த குறைபாடு (ஊனம்) அமைந்திருந்தால், அக்குறைபாட்டை இம் முறையின் மூலம் நீக்கி விட இயலாது; இந்த முறையைப் பின்பற்றிப் பயிற்சி செய்யும்போது புதிதாக எழும் பிரச்சனைகளை மட்டுமே, இந்த முறையின் வாயிலாக முழுமையாகக் களைந்து கொள்ள முடியும் ||31||

இம் முறையின் முதல் படி என்னவென்றால், அந்த உடல் சார்ந்த குறைபாடு அல்லது பிணி எங்கு குடி கொண்டிருக்கிறது என்பதைக் கண்டறிவது ஆகும்; உடலின் எந்தப் பகுதியில் அது உள்ளது என்பதைத் துல்லியமாகச் சுட்டிக் காட்ட வேண்டும்; அதன் பிறகு யவாகு கலவையை உட் கொண்டு, தன் மனதின் முழு கவனத்தையும் அந்த குறிப்பிட்ட உடல் உறுப்பின் மீதே முழுமையாக வைத்துக் கொள்ள வேண்டும் ||32||

ஒருவர் தனது புலன்களைப் பிற அனைத்திலிருந்தும் இருந்து விலக்கிக் கொண்டு, மேலே குறிப்பிட்ட முறையில் மனதை ஒரு முகப்படுத்தும்போது, அனைத்துக் குறைகளும் இடர்பாடுகளும் படிப்படியாக மறைந்து விடும்; இந்த சாதனைப் பயிற்சியின் போது உடலில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டால், குளிர்ச்சி தரும் (சந்திரன் போன்ற) அனைத்தின் மீதும் மனதை வைத்துக் கொண்டு தியானிக்க வேண்டும்||33||

இன்னொருபுறம் உடல் முழுவதும் குளிர்ச்சி சூழ்ந்து கொண்டால், நண்பகல் சூரியனைத் தியானிக்க வேண்டும்; ஒரு முக்கியமான செய்தி என்ன என்றால் குளிர்ச்சியைப் போக்கும் ‘யவாகு’ (கஞ்சி) கலவையை உட் கொண்ட பிறகு, உடல் படிப்படியாக வெப்பமடையத் தொடங்கும் ||34||

ஒருவர் காற்று மற்றும் நெருப்பு ஆகிய இரண்டையும் தியானிக்கும் போது, எதிர்மறை ஆற்றல்கள் விலகிச் செல்கின்றன; பூமி மற்றும் ‘த்யாவா’ (வானம்) ஆகியவற்றைத் தியானிப்பது, தடைகளை பன்னிரண்டு வழிகளில் விலக்கித் தள்ளுகிறது ||35||

ஒருவர் தனது இலக்கைத் தவற விட்டு விட்டாலோ, மூச்சுப் பயிற்சியின் போது மூச்சானது வேறு திசையில் விலகிச் சென்றாலோ, அல்லது தலையின் உச்சியில் உள்ள ‘பிரெக்மா’ (Bregma) எனும் மையப் புள்ளிக்குச் சென்று விட்டதால், மூச்சை மீண்டும் கீழே கொண்டு வர இயலாத நிலை ஏற்பட்டாலோ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?||36||

அத்தகைய குறைபாடு ஏதேனும் எழுந்தால், அதை ஒருவரால் தனியாகவே சரி செய்ய இயலாது; அவ்வாறு இருந்தும், ஒருவர் அந்த நிலையிலேயே நீண்ட காலம் நீடிக்க வைத்து இருப்பது உடலுக்கு நன்மையல்ல ||37||

அந்த நிலையில் உள்ளவர்கள் அருகில் உள்ள எவருடைய உதவியையாவது நாட வேண்டும்; அந்த உதவியாளர் பின்வரும் வழி முறைகளைக் கையாண்டு, மேலே ஏறிய மூச்சை மீண்டும் அதன் இயல்பான நிலைக்குக் கொண்டு வர முழு முயற்சியுடன் உதவ வேண்டும்||38||

எண்ணெய் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தி, வாயின் மேல் அண்ணப் பகுதியை (palate- மேல் வாய்ப்பகுதி) மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்; அல்லது ஒரு சிறிய மரத் துண்டைக் கொண்டு, அந்தப் பகுதியில் லேசாகத் தட்டிக் கொண்டே இருக்க வேண்டும் ||39||

இவ்வாறு படிப்படியாகச் செய்வதன் மூலம், மேலே ஏறிய மூச்சானது கீழே இறங்கி வரும்; இத்தகைய சாதகருக்கு உதவும் போது, ஒருவர் சோர்வுக்கோ அல்லது பலவீனத்திற்கோ ஆளாகி விடக் கூடாது; மேற் கொள்ளப்படும் தீர்வு முயற்சியை எவ்விதத்திலும் அரைகுறை மனதுடன் செய்யக் கூடாது ||40||

மற்றொரு வழி முறை என்னவென்றால், நல்லெண்ணெய் அல்லது நெய் போன்ற எண்ணெய் சார்ந்த பொருட்களைக் கொண்டு கழுத்தின் இரு வெளிப் புறங்களையும் மசாஜ் செய்ய வேண்டும்; பின்னர், மசாஜ் செய்பவர் தனது வாடிக்கையாளரைத் தட்டுவதுபோல சாதகரின் உடலைத் தட்டும் போது, மேலே ஏறிய மூச்சானது மீண்டும் அதன் இயல்பான நிலைக்குத் திரும்பும் ||41||

அல்லது, ‘ஸ்ருங்கி’ (Shrug)* எனப்படும் இசைக் கருவியைப் பயன்படுத்தி, அதைச் சாதகரின் வலது காதின் அருகே இசைக்க வேண்டும்; அந்த இசையின் ஸ்வரங்கள் மெதுவாகவும், படிப்படியாக உயர்ந்து கொண்டு இருக்க வேண்டும்; இது மேலே ஏறிய மூச்சினை மென்மையாகக் கீழே இறங்கி, அதன் இயல்பான நிலைக்கு திரும்ப வைக்கும்.
{* இது யானை பிளிறுவது போன்ற கம்பீரமான மற்றும் சற்றே உரத்த ஒலியை எழுப்பும் காற்றுக் கருவியாகும்; இதில் துளைகள் எதுவும் கிடையாது. கலைஞர்கள் தங்கள் மூச்சுக் காற்றை முழுமையாகப் பயன்படுத்தி, அடிவயிற்றில் இருந்து ஊதுவதன் மூலம் ஒலியை உருவாக்குகிறார்கள் } ||42||

மனிதனின் உடல் கழிவுகளால் நிறைந்திருந்தாலும், அது முக்தியை அடைவதற்கான ஒரு வாசல் அல்லது வழியாகவும் இருக்கிறது; எனவே, யோக மார்க்கத்தை அறிந்தவர்கள், அதை பாதுகாப்பாக வைத்து இருக்கவும் பராமரிக்கவும் முயற்சி செய்கிறார்கள் ||43||

வெளித் தெரியும் உடல் காலத்தால் கட்டுப்படுத்தப்பட்டது என்பதை ஒருவன் உணரா விட்டால், அவன் மந்த புத்தி உடையவன்; அழியும் உடலைக் கொண்டு அசைக்க முடியாத, அழியாத பேரின்பத்தை அடைய வேண்டும். ஆன்மீக முன்னேற்றத்திற்காக அல்லது வாழ்வின் சாராம்சத்தை உணர்வதற்கு நமக்குக் கிடைத்துள்ள ஒரே மார்க்கம் இந்த உடல் தான்; இது ஒரு பெரும் பரிசு ||44||

எட்டுப் பகுதிகளைக் கொண்ட அஷ்டாங்க யோகம் (பதஞ்சலி முனிவர்) அல்லது பகவானின் திருப்பிரசங்கங்களைக் (பக்தி/ஞான யோகம்) கேட்டுப் பின்பற்றுவது எனப் பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும், விடுதலை (முக்தி) எனும் இலக்கை அடைவதற்கு மனித உடல் எனும் வாசல் ஒன்றாகவே இருக்கிறது; மனித உருவத்தைப் போல விடுதலை பெறுவதற்கு வேறு எந்த உருவமும் அவ்வளவு பொருத்தமானதல்ல ||45||

ஆகையால், உடலைப் பராமரிக்க வேண்டும்; அதன் பிறகு ஒருவர் ஆர்வத்துடன் யோக வழிப் பாதையைப் பின்பற்ற வேண்டும்; அதன் மூலம்தான் தடைகள் விலக்கப்படுகின்றன; மேலும் தாம் தீர்மானித்து வைத்துள்ள சாதனைகள் நிகழத் தொடங்குகின்றன||46||

யோக வழிப் பயிற்சியினால் உள்மன உணர்வுத் திறன்கள் மகிழ்கின்றன, மூச்சையும் குரலையும் சரியான முறையில் பயன்படுத்துவதால் உடலின் உள் அக்னி எழுகிறது, புலன்களின் படபடக்கும் அமைதியற்ற தன்மை குறைகிறது, நல்ல ஆரோக்கியம் முழு உடலையும் சூழ்ந்து கொள்கிறது’ ||47||

சிறுநீர் மற்றும் மலம் எனும் உடல் கழிவுகளின் அளவும் எண்ணிக்கையும் குறைகிறது; உடல் ஒரு தனித்துவமான நறுமணத்தை வெளியிட தொடங்குகிறது; பார்வை பிழையின்றி, தூய்மையாகவும் களங்கமின்றியும் இருக்கிறது; இதுவே இந்தப் பாதையில் செல்பவர்களுக்கு கிடைக்கும் முதல் ஆதாயமாகும்||48||

உடலின் அதிகப்படியான எடை குறைகிறது; நாள் முழுவதும் உள் மகிழ்ச்சி ஒருவரைச் சூழ்ந்து கொள்கிறது, ஒருவரின் உடலைச் சுற்றிப் பொலிவு தெரிகிறது; இதுவே இந்தப் பாதையில் செல்பவர்களுக்கு கிடைக்கும் இரண்டாவது ஆதாயம்||49||

ஒருவர் வெளிப்புற வெப்பம் அல்லது குளிரை அறியாமல் இருக்கிறார்; எந்த சூழ்நிலைகளிலும் அச்சமற்ற நிலையில் இருக்கின்றார், ஒருவர் மேற்கூறிய நிலைகளைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தால், அது இந்தப் பாதையில் செல்பவர்களுக்கு கிடைக்கும் மூன்றாவது ஆதாயம் என்று கூறப்படுகிறது||50||

யோகாவை வெற்றிகரமாக கையாண்டு அதன் சாதனைகளை அனுபவிக்கும்போது, அதில் ஒரு சிறிய சறுக்கல் அந்த யோகிக்கு ஏற்படலாம்; நன்கு கற்றறிந்த அந்த யோகி தனது பயிற்சியை தற்காலிகமாக கைவிட்ட பின்னர், தனது சாதனைகளை விளம்பரப்படுத்தத் தொடங்குகிறார் ||51||

இப்படி செய்வது அவரது உள்ளத்தின் தூய்மையை கெடுக்கிறது; முன்னேறுவதற்கு தேவையான உள்ளத்தின் தூய்மை குறைகிறது; இதன் விளைவு, அவனால் முழுமையாக தியானிக்க முடியாமல் போய் அந்த யோகியின் முழு முயற்சியும் பயனற்று பொய் விடும் என்று கூறப்படுகிறது ||52||

அலர்கன் குரு ஸ்ரீமத் தத்தாத்ரேயரிடம் வினவினார் ‘ஆத்ம விடுதலையை தேடுபவர்களது பாதையிலிருந்து அவர்களை தடுக்கும் அனைத்து தடைகளையும் குறித்து எனக்கு விளக்குங்கள்; ஒவ்வொன்றையும் விவரித்து, அவற்றைக் கடப்பதற்கான வழி முறைகளையும் கூறுங்கள்||53||

தெய்வமான ஸ்ரீமத் தத்தர் கூறினார் ‘மன்னா, நான் உனக்கு விரிவாகச் சொல்லப் போவதைக் கேள்; தடைகள் அனைத்தையுமே தேவர்கள்தான் ஏற்படுத்துகிறார்கள்; ஏனென்றால், ஒரு சாதகர் தாம் தேடுவதை வெற்றிகரமாக அடைந்து விடுவார்கள் என அவர்கள் அஞ்சுவதினால்தான் அவற்றை தடுக்க முயற்சி செய்வார்கள் ||54||

இந்தத் தடைகளைப் பற்றி நன்கு அறிந்து கொண்டே ஒரு யோகி தான் எடுத்துக் கொண்ட பாதையில் முன்னேற விரும்புகிறார்; ஆனால் இடையில் சற்றே ஏற்படும் சறுக்கல்களினால் அவரது ஆழ்ந்த விருப்பம் பலவீனமடையத் தொடங்குகிறது; அப்போது அவரை அறியாமலேயே அவர் அற்பமான இன்பங்களை நாடத் தொடங்குகிறார்||55||

பேராசையினால் உந்தப்பட்டு, யோக வழி முறையினால் கிடைக்கும் பலன்களுக்காக அந்த சாதகர் பயிற்சியில் முன்னேற விரும்புகிறார்; அற்பத்தனமான இன்பங்கள் அவரை இழுக்கிறது; வேறு பல சிறிய தெய்வங்கள் விரைவாக வழங்கக் கூடிய தற்காலிகமான பலன்களால் கவரப்படும் அவர் தவத்தில் கூட அமர்ந்து விடுவார்||56||

அதன் பின்னர் அவர் செல்வம் சேர்க்க வேண்டும் என அலைவார்; அவரது பேராசைக்கு எல்லையே இருக்காது; செல்வம் கிடைத்ததும் புலன் இன்பங்களுக்கான அவரது ஆசை பெருகுகிறது; மெல்ல மெல்ல அதுவே அவரது வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாகி விடுகின்றது ||57||

அந்த தேவதைகள் ஆத்ம விடுதலையை தேடுபவர்களுக்கு ஏற்றவர்களாக அமைந்து விட்டால், அவர்கள் அவருக்கு அளவற்ற செல்வத்தை அளிப்பார்கள்; மேலும் சில கன்னியர்கள் அவரை திருப்திப்படுத்த முயல்வார்கள்; அது தேடுபவரின் புலன் இன்பங்களில் கழியும் நேரத்தை கூட்டிக் கொண்டே போகும்||58||

இதுபோன்ற பல்வேறு ஆசைகள் எழும்போது, அவற்றின் பலன்களை வழங்கும் சக்தி கொண்ட அந்தந்த தெய்வங்கள் திருப்தி படுத்தப்படுகின்றன; உலக இன்பங்களுக்கு அடிமையாகி, அந்த தேவதைகள் கொடுக்கும் பலன்கள் மூலம் உலகப் பொருட்களின் மீதான ஆசைகளை தாராளமாக அனுபவிக்க முடிகிறது ||59||

அவன் செல்வத்தை விரும்பினால், அது விரைவிலேயே அவனுக்கு கிடைத்து விடுகின்றது; அவன் ஒன்றைச் செய்யத் தீர்மானித்தால், அதன் பலன் உடனே கிடைக்கின்றது ; அவன் அதிக முயற்சி செய்யாமலேயே தான் விரும்பும் அறிவாற்றலை பெறுகின்றான்; அவன் எங்கு சென்றாலும், எதைச் செய்தாலும் வெற்றி அவனைத் தொடர்ந்து கொண்டே செல்லும்||60||

அவன் மாயா ஜால வித்தைகளான ‘இந்திரஜால’க் கலைகளைக் கற்றுத் தேர்கிறான்; அது மட்டுமின்றி, மந்திரங்கள் மற்றும் சில தந்திரக் கலைகளிலும் அவன் வெற்றி பெறுகிறான்; மேலும், தெய்வ சின்னங்களையும், தாயத்துகளையும் உருவாக்கும் ஆற்றலை பெறுகிறான்; அவற்றின் மூலம் மிக விரைவிலேயே மக்களிடையே பெரும் புகழையும் அடைகிறான் ||61||

சாஸ்திரங்களின் வழிகாட்டுதலின்படி தெய்வங்களுக்கு யாகங்கள் செய்வதற்காக மட்டுமே அவன் ஒரு அரசை (நாட்டை) ஆள விரும்பினால் அந்த சாதனைகள் கூட அவனது ஆன்மீக முன்னேற்றத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படும்; அத்தகைய சூழலில், அவன் தான் விரும்பிய அந்த இலக்கை அடையவும் கூடும்||62||

அவன் அளவற்ற அதிகாரங்களை விரும்பி அல்லது ரசவாத கலையில் வெற்றியை அடைய விரும்பி அவற்றை தரும் பாதைகளில் பயணிக்கத் தொடங்கினால், அப் பாதைகளில் தொடக்க நிலையில் அவனுக்குச் சில வெற்றிகள் கூட கிடைக்கும் ||63||

உலகத்தோர் அனைவரும் என்னை மதித்துப் போற்ற வேண்டும்; அனைவரும் என்னை வணங்க வேண்டும் போன்ற தேவை அற்ற கற்பனைகள் அவனது மனதை ஆட் கொண்டு விடும்போது அவனுக்கு லாபகரமாக இருப்பதை தேடிக் கொண்டிருப்பான்||64||

இல்லையேல், அவன் ஒருமுறை உணவருந்தி விட்டு, மீண்டும் மீண்டும் வயிறார உண்டு விட்டும் கூட, மக்களிடம், ‘நான் விரதம் இருக்கிறேன்; என்னால் எதையும் மிக விரைவாகச் செரித்து விட முடியும்’ என்று பறை சாற்றிக் கொள்ளக் கூடும்.
{இதன் அர்த்தம் என்ன என்றால் மீண்டும் மீண்டும் உணவருந்துவது, பசியின்மையை குறிக்கவில்லை; அது அவனது, பேராசையை அல்லது கட்டுப்பாடற்ற தன்மையை குறிக்கிறது; வயிறார மீண்டும் மீண்டும் உண்டு விட்டு, ‘என்னால் எதையும் மிக விரைவாகச் செரித்து விட முடியும்’ என்று கூறுவது, தன் உடல் வலிமையை மற்றவர்களிடம் பறை சாற்றிக் கொள்ளும் தற்பெருமையைக் குறிக்கிறது} ||65||

வான வழியே பறந்து செல்லவோ, எவரையேனும் அல்லது எப்பொருளையேனும் தன் வசப்படுத்தவோ, தான் விரும்பிய இடமெல்லாம் தடையின்றிச் சுற்றித் திரியவோ, அல்லது பிறர் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களை அறிந்து கொள்ளவோ அவன் விரும்பினால்,அவனால் அவற்றையும் செய்ய முடியும் ||66||

மந்திரங்களுக்குக் கட்டுப்பட்ட தெய்வங்களை வரவழைக்கவோ, முற்றிலும் புதிய செயல் முறையை உருவாக்கவோ, அல்லது தன் அறிவாற்றலை அதன் உச்ச பட்சத் திறனுக்கு பயன்படுத்தவோ முடியும்; அவை அனைத்தும் யோக சித்துக்களின் துணையால் சாத்தியமாகின்றன ||67||

கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் அறியும் ஆற்றலைப் பெறுவதும், நிகழ் காலத்தின் தற்போதைய சூழல்களை உணர்வதும், எப்போதும் பிறரின் புகழ்ச்சியைப் பெறுவது ஆகியவைகளை, நெறி தவறும் ஒரு சாதகன் எப்போதும் விரும்புவதாக அமைகின்றன ||68||

மேற் கூறிய அனைத்துமே யோக வழிக்கான தடைகளை ஏற்படுத்துபவை; ஒரு சாதகன் பற்றின்மையுடன் இருந்தவாறு அவற்றை எல்லாம் முழுமையாகத் துறக்க முடிந்தால் மட்டுமே, போதிக்கப்பட்ட வழி முறைகளை கடை பிடித்துக் கொண்டு அவன் தன் பாதையில் தொடர்ந்து பயணிக்க இயலும் ||69||

அப்படி இல்லாமல், அவன் தற்பெருமைகளுக்கு ஆட்பட்டு, அவற்றால் விளையும் இன்பங்களில் மூழ்கி கிடந்தால், யோக வழிப் பாதையின் பயனை அடைவதில் அவன் தோல்வியுறுவான்; அவனது தவமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, ஈடு செய்ய முடியாத வகையில் சிதைந்து விடுகிறது ||70||

ஆழ்ந்து சிந்திக்கும் எவரும், அவர்களது மனதிற்குள்ளேயே, நிலை இல்லாத, வரைமுறை காலத்துக்கு உட்பட்ட அவை அனைத்தையும் சீர் தூக்கிப் பார்த்து, அவை அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு தியானத்தில் முழுமையாக, அதிக நேரத்தைச் செலவிட வேண்டும் ||71||

அப்படிப்பட்டவர்கள் தெய்வத்திடம் மெத்த பக்தி உணர்வு கொண்டவனாக இருக்க வேண்டும்; ஏனெனில், அதன் மூலமாகவே அவனுக்கு ஏற்படக் கூடிய அனைத்து தடைகளும் விலகிச் செல்கின்றன; அப்படிப்பட்ட பக்தி உணர்வுகள்தான் அவனது இயல்பையும் செயல்களையும் நெறிப்படுத்தும் முயற்சிகளுக்கு வெற்றியைக் கொடுக்கும்||72||

அவனுக்கு யோக சித்தி கை கூடும் போது, வேத சாஸ்திரங்களில் பாண்டித்தியம் கிடைத்து விடும் ; சாதகன் குறிப்பிட்ட தாளம், இசைவு, ஓசை நயம் போன்றவற்றுடன் எழுதப்படும் கவிதை இயற்றும் திறனையும், சிற்பக் கலை மற்றும் கட்டிடக் கலையில் தேர்ச்சியையும் பெறுகிறான் ||73||

அவன் பிரதிபா’ (Pratibha)* எனும் சித்தி மூலம் அனைவரையும் தெய்வீகத் தன்மையுடன் காணும் ஆற்றலைப் பெறுகிறான்; ஆயினும், யோகிகள் இந்த சித்தியைப் பெறுவது ஆபத்தான ஒன்றாகக் கருதுகின்றனர்; ஏனெனில் இது யோகப் பாதையில் பெரும் தடைகளை கொடுக்கும்.
{* பிரதிபா சித்தி’ (Pratibha Siddhi) என்பது பதஞ்சலி யோக சூத்திரம் மற்றும் இந்திய ஆன்மீகத் தத்துவங்களின்படி, ஒரு யோகி உள்மன உணர்வு (Intuition) அல்லது ஞான ஒளி என்ற அமானுஷ்ய சக்தியை பெறுகின்றார்} ||74||

அத்தகைய சித்தியை பெரும் சாதகன் அனைத்துச் சொற்களின் பொருளையும் அறியும் ஆற்றலைப் பெறுகிறான்; வெகு தொலைவில் நடைபெறும் உரையாடல்களை கேட்கும் திறனையும் பெறுகிறான். இது ‘செவிப்புலச் சித்தி’ என்று அழைக்கப்படுகிறது; இதுவும் யோகப் பாதையில் ஒரு தடையாகவே அமைகிறது ||75||

இத்தகைய செவிப் புலச் சித்திகளின் துணையால், அவன் தேவதைகளைக் காணும் ஆற்றலைப் பெறுகிறான்; செவிப்புலச் சித்தி என்பது காது கேட்பது மட்டுமல்ல, கேட்ட ஒலியை மூளை உணர்ந்து, அர்த்தப்படுத்துவது ஆகும்; இந்த சக்தியானது ஒரு யோகியை அவனது யோகப் பாதையிலிருந்து திசை திருப்பி விடும் வல்லமை கொண்டது; இதன் விளைவாக, அவனால் எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருளைத் தேடிச் செல்லும் பயணத்தைத் தொடர இயலாமல் போகிறது||76||

அத்தகைய சித்திகளை பெற்ற சாதகன் எவருடைய துணையும் இன்றித் தனித்துச் சுற்றித் திரிய முடியும்; அவன் தன் விருப்பப்படி எங்கும் சென்று வர முடியும் ; மிகுந்த முயற்சிக்குப் பின்னரே அவனால் மீண்டும் யோகப் பாதையில் முன்னேற முடிகிறது; இது ‘விப்ரமம்’ (Vibram)* அல்லது ‘மயக்கத்தால் விளையும் அலைச்சல் மற்றும் செயல்பாடு’ என்னும் சித்தியாக அறியப்படுகிறது.
{*‘விப்ரமம்’ (Vibram) சித்தி என்பது தாந்த்ரீக சாதனை முறைகளில் ஒன்றான யக்ஷிணி சாதனாவில் (Yakshini Sadhana) வரும் ஒரு குறிப்பிட்ட சித்தி ஆகும். இது விரும்பிய வடிவத்தை எடுக்கும் திறன் என்றும் சில இடங்களில் குறிப்பிடப்படுகிறது} ||77||

அவன் அனைத்தையும் அறியும் ஆற்றலைப் பெற்றிருந்தாலும், தன் மனதை அதன் அலைபாயும் தன்மையிலிருந்து கட்டுப்படுத்த இயலாதவனாக இருக்கிறான்; இதுவும் உண்மையை அறிய விரும்பும் தேடலுக்கு ஒரு பெரும் தடையாகவே அமைகிறது; சாஸ்திர மரபின்படி இது ஆவர்தகம்’ (Alverta) என்று அழைக்கப்படுகிறது’ ||78||

தேவதைகள் ஒரு சாதகனுக்கு இத்தகைய சித்திகளை அருளும் போது, அவன் அதில் மயங்கி விடுகின்றான்; அவ்வாறு மயங்கிய நிலையில், ஏதேனும் ஒரு சிக்கலில் அவன் அகப்பட்டுக் கொண்டால், அடுத்து என்ன செய்வது என்றோ, எந்த திசையில் தன் பயணத்தைத் தொடர்வது என்றோ அவனால் முடிவெடுக்க முடியாமல் தவிப்பான் ||79||

உதாரணமாக, அவன் அரசர்களை சந்திக்கச் செல்லும் போது, அங்குள்ள பல விதமான பொருட்கள் மற்றும் அலங்காரங்களைக் கண்டு மயங்கி விடுகிறான்; அவற்றை ரசித்துக் கொண்டே நின்றிருப்பான்; அது அவன் சந்திக்கச் சென்ற விருந்தாளிகளை சந்திக்கும் முதல் நோக்கத்திலிருந்து அவனைத் திசை திருப்புகிறது; அதன் விளைவாக, அவனால் தான் குறித்த நேரத்தில் அவர்களைச் சந்திக்க இயலாமல் போகிறது ||80||

இங்கும் அதே போன்றதொரு நிலையே ஏற்படுகிறது: யோக சித்திகளின் கவர்ச்சியில் யார் மயங்கி விடுகிறார்களோ, அவர்கள் யோகப் பாதையில் தொடர்ந்து முன்னேறத் தவறி விடுகிறார்கள்; மேலும் ஆத்மாவைக் காண வேண்டும் எனும் உயர்ந்த பேறை பெறுவதற்குப் பதிலாக, தமக்கு பெரிய சித்தி கிடைத்து விட்டது எனும் மயக்கத்திலேயே முழுமையாக மூழ்கிப் போய் விடுவார்கள்||81||

அத்தகைய மயக்கங்களை வெல்லும் ஆற்றல் பெற்றவர்கள், அனைத்துத் தடைகளையும் ஏற்படுத்தும் சித்திகளை வெளிப் புறந்தள்ளி வைத்து விட்டு தமது நோக்கத்தில் நிலையாக உள்ள ஒரு முகப்பட்ட சாதகர்களிடமே யோகாவின் அடிப்படை நோக்கத்திற்கான எண்ணம் குடி கொண்டிருக்கும்||82||

தெய்வத்திடம் மீது முழு நம்பிக்கை கொண்டு, யோக பயிற்சியில் ஈடுபடும் உண்மையான சாதகர்கள் தங்கள் ஆன்மீகப் பயிற்சிகளில் முழுமையாக ஈடுபடுகின்றனர்; அவர்கள் சாதாரண மனிதர்களைப் போல பந்தங்களில் உலக சிக்கிக் கொள்வதில்லை; பொதுவாக, அத்தகைய பந்தங்களில் சிக்கிக் கொள்பவர்கள் தெய்வத்திடம் முழு அளவினான பக்தி கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள் ||83||

யோகக் கலையில் ஒரு யோகி தனது ஐம்புலன்களின் ஆதிக்கத்தையும் முழுமையாக விலக்கி வைத்து விட்டு, ‘பிரத்யாஹாரம்’* எனும் ஐந்தாம் படி யோக நிலையை அடைந்த பிறகு, அவர் அடுத்த நிலையான ‘தாரணை’க்கு (மனதை ஒருமுகப்படுத்துதல்) முன்னேற வேண்டும்; அப்போது தாம் அடைய விரும்பும் ஆன்மீக இலக்கை அவர் இடை விடாமல் மனதில் கெட்டியாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்’
{*பிரத்யாஹாரம் (Pratyahara) என்பது பதஞ்சலி யோக சூத்திரத்தின் அஷ்டாங்க யோகத்தில் (Ashtanga Yoga) ஐந்தாவது நிலையாகும்; இது புலன்களை (கண், காது, மூக்கு, நாக்கு, மெய்) வெளி உலக விஷயங்களில் இருந்து விலக்கி, உள்முகமாக திருப்புவதாகும்} ||84||

ஒரு சாதகன் ‘நிலம்’ எனும் பூதத்தின் மீது தன் கவனத்தைச் செலுத்தும் போது, அவனது உள் மனம் அந்தப் பூதத்தின் பரந்த தன்மையோடு ஒன்றிணையத் துவங்கும்; அப்போது அவன் அந்தப் பூதத்திற்குரிய ‘மணம், சுவை, ஒளி, காற்று மற்றும் ஆகாயம்’ ஆகிய பண்புகளின் மீது தன் கவனத்தைச் செலுத்த வேண்டுமே தவிர, அவற்றினால் விளையும் பிற உலகியல் பொருட்கள் மீது பற்று வைக்கக் கூடாது||85||

பாதங்களிலிருந்து முழங்கால்கள் வரை, மஞ்சள் நிறத்திலான சதுர வடிவமாக (இந்த நிறம், மற்றும் தோற்றம் பிருத்வி தத்துவத்தின் சின்னம் ஆகும் லம்* (Lam) எனும் பீஜ மந்திரத்துடன், ஒரு யோகி ‘நிலம்’ எனும் பூதத்தின் (பிருத்வி தத்துவம்) மீது தன் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
{*லம்’ (Lam) என்பது நிலம் அல்லது பூமி என்பதாகும்; இது பூமி தத்துவத்தைக் குறிக்கும் பிருத்வி பீஜ மந்திரம் ஆகும்; இது ஸ்திரத்தன்மை, உடல் பலம், மன அமைதி மற்றும் உறுதிப்பாட்டை அளிக்கும் மந்திரமாக யோக மற்றும் தியானத்தில் பயன்படுத்தப் படுகிறது. } ||86||

முழங்கால்களிலிருந்து தொப்புள் வரை, வெண்மை நிறத்திலான ஒரு வில்லின் வடிவமாக, ‘வம்’ (Vam) எனும் பீஜ மந்திரத்துடன், ஒரு யோகி ‘நீர்’ எனும் பூதத்தின் மீது தன் கவனத்தைச் செலுத்த வேண்டும்
{இது பூத சுத்தி (Pancha Bhooti Shuddhi) அல்லது தாரணை பயிற்சியின் ஒரு பகுதியாகும்; முழங்காலிலிருந்து தொப்புள் வரை உள்ள பகுதி நீரின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது; இந்த தாரணையை முறையாகப் பயிற்சி செய்யும் யோகி, தண்ணீரால் பாதிக்கப்பட மாட்டார் என்றும், ஆழ்ந்த அமைதியைப் பெறுவார் என்றும் கூறப்படுகிறது} ||87||

தொப்புளிலிருந்து இதயப் பகுதி வரை, சிவப்பு நிறத்திலான ஒரு முக்கோண வடிவமாக, ‘ரம்’ (Ram) எனும் பீஜ மந்திரத்துடன், ஒரு யோகி ‘நெருப்பு’ அல்லது ஒளி மயமான பூதத்தின் மீது தன் கவனத்தைச் செலுத்த வேண்டும்
{இது மணிபூர சக்கர (Navel Chakra/Manipura Chakra) தியானத்தின் ஒரு பகுதியாகும்; இது உடலின் நெருப்பு தத்துவத்தைக் குறிக்கிறது; யோகாவில் ‘ரம்’ (Ram) என்பது சக்தி வாய்ந்த பீஜ மந்திரம் ஆகும்; யோக சாஸ்திரத்தில் நெருப்பு தத்துவத்தை (Agni Tattva) தூண்டி, உடலின் ஆற்றலை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், ஆன்மீக சக்தியை வளர்க்கவும் பயன்படுத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த நுட்பமாகும்} ||88||

இதயத்திலிருந்து இரு புருவங்களுக்கு இடைப்பட்ட பகுதி வரை, புகை போன்ற நிறத்தையுடைய ஒரு கொடியின் வடிவமாக, ‘யம்’ (Yam) எனும் பீஜ மந்திரத்துடன், ஒரு யோகி ‘காற்று’ எனும் பூதத்தின் மீது தன் கவனத்தைச் செலுத்த வேண்டும்
{இது அனாஹத சக்கரம் (இதயச் சக்கரம்) சார்ந்த தியான முறை மற்றும் வாயு தத்துவத்தை (காற்று பூதம்) கட்டுப்படுத்தும் யோக வித்தையை விவரிக்கிறது; ‘யம்’ (Yam) என்பது இதய சக்கரத்தின் (Anahata Chakra) சக்திவாய்ந்த பீஜ மந்திரமாகும்; காற்றுத் தத்துவத்துடன் (Air Element) தொடர்புடைய இது இந்த தியானம் இதயச் சக்கரத்தை சம நிலைப்படுத்தி, அன்பு, கருணை மற்றும் மன்னிப்பு குணங்களை மேம்படுத்துகிறது. மேலும், இது சுவாசத்தை சீராக்கி, பதற்றத்தைக் குறைத்து, மன அமைதியைத் தருகிறது } ||89||

இரு புருவங்களுக்கு இடைப்பட்ட மையப் பகுதியிலிருந்து, தலையின் உச்சியில் அமைந்துள்ள பிரம்மரந்திரம் வரை, நீல நிறத்திலான ‘ஆகாயம்’ எனும் வடிவமாக, ‘ஹம்’ (Ham) எனும் பீஜ மந்திரத்துடன், ஒரு யோகி ‘ஆகாயம்’ எனும் பூதத்தின் மீது தன் கவனத்தைச் செலுத்த வேண்டும்’
{‘ஹம்’ (Ham) என்பது தொண்டை பகுதியில் உள்ள விசுத்தி சக்கரத்தின் (Vasudha Chakra) சக்தி வாய்ந்த பீஜ மந்திரம் (விதை மந்திரம்) ஆகும்; இது நீல நிறத்துடன் தொடர்புடையது மற்றும் ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கிறது; இவ்வாறு தியானிப்பதன் மூலம் ஒரு யோகி மரணத்தை வெல்லும் ஆற்றலையும், பேரானந்தத்தையும் பெறுவார் என யோக சாஸ்திரங்கள், குறிப்பாக ‘கெரண்ட சம்ஹிதை’ எனும் நூல் குறிப்பிடுகின்றன} ||90||

இத்தகைய முறையில் பஞ்ச பூதங்களின் மீது தன் கவனத்தைச் செலுத்தி ஒருமுகப்படுத்தும் போது, ஒரு யோகியால் தனது உடலைச் சூட்சுமமான நிலைக்கு மாற்றிக் கொள்ள முடிகிறது; அதன் பிறகு, ஆன்மீகப் பாதையில் தடைகளை ஏற்படுத்தும் அனைத்து எதிர் மறைச் சக்திகளிலிருந்தும் விடுபடுவது, அந்த யோகிக்கு மிகவும் எளிதாகி விடுகிறது ||91||

மேற் கூறிய ஐந்து நிலைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்த பிறகு, ஒரு யோகி சந்திர தேவன் மீது தனது கவனத்தைச் செலுத்த வேண்டும்; அவ்வாறு அவர் தனது முழுமையான மன ஒருமைப்பாட்டுடன் தியானிக்கும்போதே, சத்துவம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்று இயற்கை குணங்களையும் கடந்து செல்லும் ஆற்றலைப் பெறுகிறார்
{சந்திரன் குளிர்ச்சி மற்றும் மனதின் அதிபதியாகக் கருதப்படுபவர்; அவர் மீது தியானம் செய்வது மனச் சலனங்களை அடக்கி, பேரமைதியை வழங்குகிறது; யோக மார்க்கத்தில், சத்துவம் (அமைதி), ரஜஸ் (செயல்பாடு), மற்றும் தமஸ் (மந்த நிலை) ஆகிய முக்குணங்களே மனிதனை உலகியல் பந்தங்களில் பிணைக்கின்றன; சந்திரன் மீது முழுமையாக இணைந்து இருக்கும்போது, மனம் தன் எல்லைகளைக் கடந்து, அந்த மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்ட குணாதீத நிலையை அடைகிறது} ||92||

அறிவுத் திறன்களுக்கான ஆற்றலை தரும் தேவதையாக குரு பிரகஸ்பதி (வியாழன்) திகழ்கின்றார்; முடிவுகளை எடுக்க உதவும் அந்த அறிவுத் திறன் மீது ஒரு யோகி ஆழ்ந்து தியானிக்கும் போது, பலவிதமான மனக் குழப்பங்களை கடந்து செல்லும் திறனை அவர் பெறுகிறார்||93||

இங்கே விவரிக்கப்பட்டுள்ள இந்த ஏழு வகையான தாரணை (மன ஒருமைப்பாடு) நிலைகளும், திட்டமிட்டபடியே கை கூடும் போது, ஒரு யோகியின் கூர்மையான அறிவுத் திறனையும் கடந்து, அவர் விரும்பிய முழுமையான பற்றற்ற நிலையையும், துறவு நிலையையும் அடைவதற்கு உதவுகின்றன||94||

ஐம் புலன் சார்ந்த ஈடுபாடுகள் மீது தனக்குள்ளே மறைந்திருக்கும் அனைத்து விருப்பங்களும் அல்லது நாட்டங்களும் முற்றிலுமாக நீங்குகின்றன; ஒரு யோகி தனது சொந்தப் புலன்களின் அதிபதியாக திகழ்கிறார்; அவர் எப்போதும் ஒரு விதமான ஆனந்தத்தை அனுபவிக்கிறார்; அது தூய்மையானதும், எந்தவிதமான குற்றவுணர்வோ அல்லது களங்கமோ அற்றதுமான ஓர் ஆனந்த நிலை ஆகும் ||95||

யோக சூத்திரங்களின்படி, ஒரு யோகி ஏழு நிலைகளை (சப்த பூமிகா) நாள்தோறும் பயிற்சி செய்து கடக்கும்போது நற்பலன்கள் கை கூடுகின்றன; அதனால் அந்த யோகி அசைக்க முடியாத மனச் சம நிலையைப் பெறுவான் ||103||

ஆசன நிலைகளையும், பிராணாயாமம் பயிற்சியையும் ஒரு சாதகன் முழுமையாக வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நற்பயன்களை அடைந்து விட்டாலும் கூட, யோகவின் அற்புத ஆற்றல்களின் கவர்ச்சியை காணும்போது, அதில் சிக்கிக் கொள்கிறான்||104||

ஐம்புல இச்சைகளுக்கு அடிமையான ஒருவன், எதிர் பாலினத்தவரைத் தேடி அலைவது போலவே, தன் மனக் கற்பனைகளுக்கு இரையாகும் சில சாதகர்களும் தங்கள் தீவிரப் பயிற்சிகளைப் புறக்கணித்து விட்டு, அந்த மாய வலையில் சிக்கிக் கொள்கிறார்கள் ||105||

காயத்ரி மந்திரம் தரும் பலன்களை நேரடியாக தரிசித்த பெருமை கொண்ட விஸ்வாமித்திர முனிவரே, மேனகை எனும் தேவ மங்கையின் அழகில் மயங்கி வீழ்ந்தார்; அத்தகைய கொடிய கவர்ச்சி கொண்டதுதான் யோக சித்துக்களின் தாக்கம் ஆகும்; தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் இருப்பதாக உறுதியாக நம்புபவர்களையும் அது தன் மாய வலையில் சிக்க வைத்து விடுகிறது||106||

ஆகவே, யோகக் கலையில் ஈடுபடும் சாதகன் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்; தமது குறிக்கோளிலிருந்து திசை திருப்பும் யோக சித்துக்களைப் ஒதுக்கித் தள்ள வேண்டும் ; அந்த தருமணங்களில் ஒரு சாதகன் தவறாமல் கூடுதல் விழிப்புணர்வுடன் இருந்து, அதுவரை தான் பெற்ற ஆன்மீகச் செல்வங்களை இழந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்||107||

திசை திருப்பும் யோக சித்துக்களினால் கவரப்படும் சாதகன் யோக ஆற்றலால் கிடைத்த அனைத்துப் பலன்களையும் நல்ல விளைவுகளையும் இழந்து விடுவான்; எனவே, உலக பந்தங்களில் பட்டற்று இருந்து கொண்டு தியானத்தில் உறுதியுடன் இருக்க வேண்டும் ||108||

II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் முப்பத்து மூன்றாம் (33) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை:108
முதலாவது அத்தியாயம் முதல் முப்பத்து மூன்றாம் (33) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 3463 = 3571

*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}

……இதோடு பாகம் -11, அத்தியாயம் – 33 முடிவடைந்தது
அத்தியாயம் -34 தொடர்கின்றது