COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION


பாகம் -11 : அஷ்டாங்க யோக தத்துவம்

அத்தியாயம் 34
திசை திருப்பும் யோக சித்திகளை துறப்பது; தியான நிலையின் பல்வேறு பரிமாணங்கள்

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

குரு வேத தர்மா தன் சீடன் தீபக்கிடம் தொடர்ந்து கூறினார் ‘ மெய் ஞானம் பெற்ற ஒரு குரு தெளிவான, ஆக்க பூர்வ எண்ணங்களை கொண்ட புகலிடமாகத் திகழ்கிறார்; சீடர்களின் கரங்களைப் பற்றிக் கொண்டு, அவர்கள் (சம்சாரக் கடலைக்) கடந்து ஆன்மீகப் பாதையில் செல்வ தாமே முன்னின்று முயற்சி எடுப்பவர் அவரே ஆவர்||1||

தாயார்கள் கூடச் சில சமயங்களில் ஏதேனும் ஒரு சிறு சுயநலத்தை மனதில் கொண்டே கருணை காட்டுகின்றனர்; அவர்கள் செய்யும் அனைத்தும் எப்போதும் தங்கள் குழந்தைகளின் முழுமையான நன்மைக்காகவே அமைவதில்லை; ஆனால், மெய் ஞானம் பெற்ற குருமார்கள் காட்டும் கருணையானது; எப்போதும் தம் சீடர்களின் உண்மையான நன்மைக்காகவே அமைந்திருக்கும்||2||

கேள்விகளின் எண்ணிக்கை எத்தனையாயினும் சரி, அல்லது ஒரே கேள்வியை எத்தனை முறை கேட்டாலும் சரி, ஒரு உண்மையான குரு ஒருபோதும் சலிப்படைவதோ அல்லது அலட்சியம் காட்டுவதோ இல்லை; எந்த வகையிலாவது சரி, என் சீடன் தேடும் தெளிவை அவன் பெற்று விட வேண்டும் என்றே அவர் எப்போதும் விரும்புகிறார்||3||

அத்தகையவரே குருதேவரே ஸ்ரீமத் தத்தாத்ரேயர் ஆவார்; அரசன் அலர்கன் அவனது வாழ்வின் மிக உயர்ந்த நிலையை அடைவதற்கான போதனைகளை தந்து வழி காட்டியவர் அவரே ஆகும்; பக்தி மிக்க அரசி மதாலஸாவின் மகனும், மிகுந்த ஆர்வமும் உண்மையும் கொண்ட அலர்கன், கை கூப்பி வணங்கியவாறு ஸ்ரீமத் தத்தரிடம் இவ்வாறு வினவினான் ||4||

மெய் ஞானம் பெற்ற குருமார்களுக்கெல்லாம் தலைவரே, அற்புதமான யோக ஆற்றல்களின் நோக்கம் என்ன?; தன்பால் இழுக்கும் தன்மையைக் கொண்ட மந்திர தந்திரங்களைக் கொண்ட யோக சித்தி வலையில் சிக்கி, ஏன் இத்தனை பேர் தங்கள் ஆன்மீகப் பாதையிலிருந்து விலகிச் செல்கின்றனர்? சித்துக்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்? ||5||

அவற்றின் தன்மைகளை ஒருவன் அறிந்து கொண்டால், அவை உண்மையில் எத்தகையவை என்பதை அவனால் விரைவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்; அதன் பிறகு, என்னைப் போலவே மற்றவர்களும், ஒரு கணம் கூட யோசிக்காமல் அவற்றை எளிதாகத் துறந்து விட முடியும்’; இவ்வாறு வினவிய அலர்கன், மீண்டும் தெய்வமான ஸ்ரீமத் தத்தரை மிகுந்த பக்தியுடன் வணங்கினான்||6||

தம் சீடனின் அந்த சந்தேகத்திற்கு பதில் அளிக்கும் விதமாக உள்ளத்தில் மகிழ்ச்சி அடைந்த, அத்ரி முனிவரின் திவ்ய புதல்வரான ஸ்ரீமத் தத்த பகவான், கூறினார் ‘இப்போது நான் கூறுவதை மிகக் கவனமாகக் கேள்’ ||7||

முதல் சித்தி ‘அணிமா’ என்றும், இரண்டாவது ‘மகிமா’ என்றும், மூன்றாவது ‘கரிமா’ என்றும், நான்காவது (உடலோடு தொடர்புடையது) ‘லகிமா’ என்றும் அழைக்கப்படுகிறது ||8||

ஐந்தாவது மற்றும் ஆறாவது சித்திகள் முறையே ‘பிராப்தி’ மற்றும் ‘பிராகாம்யம்’ என்று அழைக்கப்படுகின்றன; ஏழாவது சித்தி ‘ஈசித்வம்’ என்றும், எட்டாவது சித்தி ‘வசித்வம்’ என்றும் அறியப்படுகிறது; இவை அனைத்தும் பல்வேறு வகையான தடைகளுக்கு ஒரு புகலிடமாக அமைகின்றன என்பதை முழுமையாக புரிந்து கொள்||9||

உடலை அணுவைப் போல நுண்ணியதாக மாற்றவும், மலையைப் போலப் பெரியதாக மாற்றவும், எடையற்றதாகவோ அல்லது அதிக எடை கொண்டதாகவோ மாற்றவும் உதவும் முதல் ஆற்றலே சித்தியாகும் ||10||

ஒருவர் எத்தகைய சிறிய அல்லது நுண்ணிய வடிவத்தை அடைய விரும்புகிறானோ, அந்த குறிப்பிட்ட வடிவத்துக்குரிய சித்தியை வெற்றிகரமாக தியான முறையில் முடித்துக் கொண்டால், பூத உடல் அவர் விரும்பிய எந்த நுண்ணிய வடிவமாகவும் உருமாறுகிறது||11||

இது ‘அணிமா’ என்று அழைக்கப்படுகிறது; இது உடலை ஓர் அணுவின் அளவிற்கோ அல்லது மிகச் சிறிய அளவிற்கோ மாற்றியமைக்க வல்லது; இந்த சித்திக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, இராமாயணக் காவியத்தில் வரும் அனுமன் ஆவார்; அவர் அரக்க மன்னன் இராவணனின் தலை நகரான இலங்கைக்குள் நுழையும் போது, தனது உடலைச் சுருக்கிக் கொண்டார் ||12||

அதேபோல, ஒருவர் தமது உடலை பிரும்மாண்டமான நிலையில் அமைத்துக் கொள்ள விரும்பி அதற்கான சித்தியை தியானித்து வெற்றி பெறும் போது, அவரது உடலும் பிரம்மாண்டமாக வளரும்; அந்த இரண்டாம் சித்தியையே ‘மகிமா’ என்பார்கள்||13||

இவ்வாறே, ஒரு சாதகன் மிகக் கடினமான கனமான மலை போன்ற அசைவற்ற (ஜடப்) பொருட்களைத் தியானிக்கும் போது, அவனது உடலும் அந்தப் பொருளின் தன்மையை அடைகிறது; ‘கரிமா’ எனப்படும் மூன்றாவது சித்தியை வெற்றிகரமாக அடைவதன் விளைவு இதுவேயாகும் ||14||

தான் மக்களிடையே பிரபலமானவராக ஆக வேண்டும் என்ற விருப்பத்துடன், ஒரு சாதகன் மக்களால் வணங்கப்படும் தெய்வங்களை தியானிக்கும் போது, அவனும் பிறரிடமிருந்து மதிப்பையும் மரியாதையையும் பெறத் தொடங்குகிறான். ‘மகிமா’ எனப்படும் அதே சித்தியை வெற்றிகரமாக அடைவதன் விளைவில் இதுவும் ஒன்றாகின்றது||15||

அனைவருக்கும் குருவாகத் திகழ்பவர் அந்தப் பரம்பொருளே (இறைவனே) ஆவார். அந்தப் பரம் பொருளை தியானிப்பதன் மூலம், ஒரு சாதகனும் உலகிற்கே வழிகாட்டும் ஆசானாக (குருவாக) உயர்கிறான். ‘கரிமா’ சித்தியை அடைவதினால் கிடைக்கும் பலன்களில் இதுவும் ஒன்றாகும்||16||

பஞ்சுத் துணுக்குகள் போன்ற எடை அற்ற சிறிய வடிவங்களை ஏற்கும் ஆற்றல் கொண்ட ஒன்றை, யோகி தன் சிந்தையில் ஆழ்ந்து தியானிக்கும் போது, அவரது உடலும் அதே போலச் பஞ்சு போன்ற எடை குறைந்ததாக மாறி விடுகிறது; இதுவே ‘லகிமா’ (Laghima) எனப்படும் சித்தியின் வெற்றியாகும். மேலே குறிப்பிடப்பட்ட அனைத்துச் சித்திகளும், அந்த யோகியின் பூத உடலோடு தொடர்புடையவையாகும் ||17||

கையில் மிகக் குறைந்த அளவு உணவே இருந்தாலும், அங்கிருக்கும் பலருக்கும் அதை விநியோகித்த பிறகும், அதன் மூல அளவு சற்றும் குறையாமல் அப்படியே நிலைத்து இருக்கும் சக்தியை கொடுப்பதே ‘பிராகாம்யம்’ (Pranayama) எனப்படும் சித்தி ஆகும்; அந்த சக்தியானது நினைத்ததை முடிக்கும் ஆற்றலைத் தருவதாகும்||18||

இருந்த இடத்தில் இருந்தே தொலைவில் உள்ள பொருட்களைத் தொடும் ஆற்றல் பெறுவது; அல்லது தொலைவில் உள்ள பொருட்களை, கைகளால் தொடும் அளவிற்கு அருகிலேயே வரவழைக்கும் ஆற்றல் ‘பிராப்தி’ (Praapti) எனப்படும் சித்தியின் மூலம் கிடைப்பது ஆகும்; அத்தகைய சித்தி பெற்ற யோகிகள், தங்கள் விரல்களால் நிலவையே தொடும் ஆற்றல் பெற்றிருப்பார்கள||19||

மனதின் ஆழமான, உண்மையான விருப்பத்தின் மூலமாகவே, பூத உலகைச் சார்ந்த அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து காக்கும் ஆற்றல் பெறுவது யோகப் பாதையின் மூலம் அடையப்படும் ‘ஈஷித்வம்’ (Ishitva) என்று அழைக்கப்படுகிறது; இது தேவர்களுக்கு இணையான இறைத் தன்மையை பெறுவதற்கு சமமானதாகும்||20||

மனித இனம் உட்பட நிலம், நீர், ஒளி, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களால் ஆக்கப்பட்டுள்ள படைப்புகள் அனைத்தையும், தனது மன விருப்பத்திற்கு ஏற்ப கட்டுப்படச் செய்யும் ஆற்றலை ‘வஷித்வம்’ (Vashita) எனும் சித்தி சக்தி மூலம் பெற முடிகின்றது||21||

சிங்கம் அல்லது புலி போன்ற காட்டு விலங்குகளைத் தன் வாகனங்களாகப் பயன்படுத்தும் ஆற்றல், பாம்புகளையும் நாகங்களையும் தன் அணிகலன்களாக மாற்றிக் கொள்ளும் வல்லமை, தன் தலையில் அக்னி கிரீடத்தைச் சூடிக் கொள்ளும் திறன் இவையனைத்தும் ‘வஷித்வம்’ (Vashita) எனும் யோக சித்தியின் மூலம் பெறப்படும் ஆற்றல்களே ஆகும் ||22||

நீரின் மீது நடக்கும் திறன், தீயினுள் புகுந்து செல்லும் ஆற்றல், உயிரற்றப் பொருட்களைத் தன் விருப்பப்படி நகர்த்தும் வல்லமை, போன்ற ஆற்றல் ‘வஷித்வம்’ (Vashita) எனும் யோக சித்தியின் வகையிலேயே அடங்கும்||23||

மேற் கூறிய எட்டும் முதன்மையான யோக சித்திகளாகும்; இவற்றுடன் பத்து வகையான துணைச் சித்திகளும் (secondary accomplishments) உள்ளன; ஒரு தேர்ந்த யோகிக்கு இவை பயனற்ற, வீணான தன்மைகளாகவே கருதப்படுகின்றன; எனவே, ஒருவன் தன் அறிவை அப்படிப்பட்ட சித்திகளின் மீது நாட்டம் கொள்ள அனுமதிக்கக் கூடாது||24||

தன் ஸ்தூல உடலுடனேயே ஆகாயத்தில் பறந்து செல்லும் திறன்; பிறருடைய உடலினுள் புகுந்து வாழும் ஆற்றல் இவை துணை நிலை யோக சித்தி சக்தி மூலம் கிடைக்கின்றது; வெறும் செவி வழிச் செய்திகளின் அடிப்படையில், அந்த சித்திகளின் மீது உன் மனம் அலைபாய அனுமதிக்காதே||25||

பறவைகள் ஆகாயத்தில் பறப்பதும், மீன்கள் நீரில் நீந்திச் செல்வதும் அவற்றுக்கு இயல்பாகவே, பிறப்பின் போதே அமைந்திருக்கும் தன்மைகளாகும்; அத்தகைய இயல்பான ஆற்றல்களை, ஒரு யோகி யோக சித்தி பாதையின் உதவியால் அடைய முடியும் ||26||

உடலில் ஒரு குறிப்பிட்ட மூலிகை மருந்தைப் பூசுவதன் மூலம், தீக் காயங்கள் ஏதும் ஏற்படாமல் தடுத்துக் கொள்ளும் ஆற்றலும், யோகப் பாதையில் அடையும் வெற்றியின் வாயிலாகவே சாத்தியமாகிறது; இது ‘மருத்துவ சித்தி’ (Medicinal Accomplishment) என யோக சாஸ்திரங்களில் அழைக்கப்படுகிறது||27||

வேத வியாசர் போன்ற மாபெரும் முனிவர்கள், தங்கள் கடும் தவத்தின் வாயிலாகப் பல அற்புதங்களை நிகழ்த்தி உலகத்தையே வியக்கச் செய்தனர் அல்லவா?; ஓ அலர்கனே, அப்படிப்பட்ட அற்புதங்களையும் யோகப் பாதையின் வாயிலாகவே ஒருவனால் அடைய முடியும் என்பதை நீ அறிந்துகொள்||28||

விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்கள், புனிதமான மந்திரங்களையும் அட்ஷரங்களையும் (எழுத்துக்களையும்) கையாள்வதில் வல்லமை பெற்று, உலகத்தையே பிரமிக்கச் செய்தனர்; அந்த மந்திரங்களின் வலிமையையும், அவற்றின் ஆற்றலையும் சித்தி சக்திகளை பெற்ற ஒரு யோகியாலும் அடைய முடியும் ||29||

ஒரு யோகி எப்பொருளைப் பற்றிச் சிந்தித்தாலும், அது அவர் விரும்பியவாறே அது உருமாறும்; அல்லது, ஏதேனும் ஒரு பொருளின் அளவைச் சுருக்கவோ, சிறிதாக்கவோ அவர் விரும்பினால், அதுவும் இதன் மூலம் சாத்தியமாகும்; ஆயினும், அப்படிப்பட்ட சித்திகள் அனைத்தும், ஒருவனை அவனது இறுதி இலக்கிலிருந்து திசை திருப்பும் தடைகளாகவே நீ கருத வேண்டும் ||30||

‘தாரணை (Dharana) எனும் நிலைக்கு அடுத்தபடியாக அமைவது, ‘தியானம்’ (Meditation) எனும் அடுத்த கட்டமாகும்; இது ஒருவனை அனைத்து விதமான குறைகளிலிருந்தும் விடுவிப்பதுடன், உலக பந்தங்கள் எனும் பெருங் கடலைக் கடந்து முக்தி நிலையை அடைய துணை புரிகிறது||31||

ஆரம்பத்தில் ஒருவர் தெய்வ பண்புகளுடன் தெய்வத்தை தியானிக்க வேண்டும், ஒரு சாதகருக்கு எந்த வடிவம் மனதில் பிடித்து உள்ளதோ அதை தேட வேண்டும்; அதை உள்ளே நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்; அதன் பிறகு ஒருவர் அனைத்துப் பண்புகளுக்கும் அப்பாற்பட்ட தெய்வீகத்தை அறிவதற்கு முன்னேறலாம்’ என்று ஸ்ரீமத் தத்தர் கூறினார் ||32||

பக்தியுள்ள மதாலஸாவின் மகனான அரசன் அலர்கன் கேட்டான் ‘ஓ இறைவா, தெய்வீகப் பண்புகளுடன் கடவுளைத் தியானிப்பது எப்படி என்று எனக்குக் கற்றுக் கொடுங்கள், அதனால் என் மனம், அதிக முயற்சியின்றி அந்தத் தெய்வத்துடன் நிலைத்திருக்க முடியும் ||33||

ஸ்ரீமத் தத்தாத்ரேய பகவான் பதிலளித்தார் ‘மன்னா, நீ இப்போது என்னைக் காணும் பண்புகளுடன் என்னைத் தியானிப்பது, உன்னை முழுமையான அச்சமற்ற நிலைக்கு கொண்டு செல்லும் ||34||

நானே சிதைக்கப்படாத ஆதிமூலம்; நானே அனைத்துப் பண்புகளுக்கும் அப்பாற்பட்ட உயர்ந்தவற்றில் உயர்ந்தவன்; நானே எங்கும் நிறைந்தவன்; இருப்பவை அனைத்திற்கும் ஆதாரம்; அதன் பிறகுதான் நான் அத்ரி முனிவரின் மகனாக இந்த வடிவத்தை எடுக்கத் தேர்ந்தெடுத்தேன் ||35||

புனிதர்களைக் காக்கவும், எளியோரைத் தண்டிக்கவும், மனவுறுதியுடன் கூடிய பொறுமையை நிலை நாட்டவும், நான் இவ்வுலகில் இந்த வடிவத்தை எடுத்திருக்கிறேன் ||36||

இது பக்தர்கள் எனக்குச் சேவை செய்வதை எளிதாக்குகிறது; எனவே எனது அவதாரத்தின் நோக்கம் நிறைவேறுகிறது; நான் எனது சொந்த இயல்புடன் வந்துள்ளேன்; மேலும் மாயை எனப்படும் எனது தெய்வீக சக்தியால் இந்த வடிவத்தை எடுத்துள்ளேன் ||37||

புகழ் பெற்ற 16 திறன்கள் வெளிப்படையாக தெரியா விட்டாலும், அத்தகைய திறன்கள் அனைத்திலும் ஒன்றாகத் தோன்றுவது எதுவோ, அதுவே எனது தெய்வீக வடிவமான சத்-சித்-ஆனந்தம் ஆகும்; அது இருப்பு, உணர்வு மற்றும் ஆனந்தத்தின் தனித் தன்மை என்று அறியப்படுகிறது ||38||
எவர் ஒருவர் என்னை அன்புடனோ, பகைமை மற்றும் வெறுப்புடனோ, அல்லது பயத்துடனோ தியானித்தால் கூட தங்கள் உணர்ச்சியுடனும் அவர்கள் என்னிடம் வருகிறார்கள் ||39||

அவர்கள் அனைவரும் உயர்ந்த நிலைகளை அடைகிறார்கள், அதுவே என் இயல்பு, அதை அறிவால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது; ஆனால் உணர்வு பூர்வமான புலன்களால் அறிந்து கொள்ள முடியும் ||40||

ஒரு வேளை, அறியாமல் ஒருவன் தன் பாதங்களை நெருப்பில் வைத்தால், எந்த நேரத்திலாவது அந்தப் பாதங்கள் தீக் காயமடையாமல் இருப்பது சாத்தியமா?||41|

ஒருவன் அமிர்தத்தை சாதாரண நீர் என்று கருதியே பருகினாலும், அவன் மரணமடைய மாட்டான் என்பது எத்துணை உண்மையோ, அத்தகையதே நான் முன்னரே விளக்கிய எனது இயல்பும் ஆகும்||42||

ஒருவனது தந்தை, மகன் போன்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அந்தப் பரம்பொருளே பல்வேறு வடிவங்களில் எடுத்த அவதாரங்கள் என்றாலும், அவர்கள் ஒவ்வொருவரும் அறியாமை எனும் பல அடுக்குகளால் மூடப்பட்டே உள்ளனர்; இந்த உண்மையை ஒரு போதும் மறந்து விடக் கூடாது ||43||

ஒருவன் உறவினர்களை தனது மனதில் சிந்தித்துக் கொண்டு என்னை நோக்கி தியானிப்பானாயின், அவனால் சம்சார சாகரத்தைக் (உலகப் பற்றுக் கடலை) கடக்கவே இயலாது; நானோ, அனைத்துத் திரைகளுக்கும், மாற்றங்களுக்கும், திரிபுகளுக்கும் அப்பாற்பட்டவன்; இத்தகைய உறுதியான புரிதலோடு, மட்டுமே ஒருவன் என்னை தேடி அடைய வேண்டும் ||44||

ஒருவன் தனது தியானத்தை இறைவனின் திருவடிகளிலிருந்து தொடங்கி, படிப்படியாக மேலுள்ள உறுப்புகளை நோக்கி உயர்ந்து, அந்த இறைவனின் முழு வடிவத்தையும் தியானிக்க வேண்டும் ||45||

தியானத்தில் ஒருமைப்பாடு (நிலைத் தன்மை) கை கூடிய பிறகு, ஒருவனது மன ஆற்றல்கள் அனைத்தும் இறைவனின் திரு முகத்தின் மீது குவிய வேண்டும்; அதன்பிறகு, அந்தத் திரு முகத்தில் தவழும் புன்னகையின் மீது மட்டுமே முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்த வேண்டும்||46||

தியானத்தில் முழுமையான ஈடுபாடு ஏற்படும்போது, வெளிப்புற உலகையும் கவலைகளையும் அறவே மறந்து நிற்கும் நிலையில், பேரின்பத்தின் நேரடி அனுபவம் உள்ளத்தில் உதயமாகிறது; தியானிக்கப்படும் அந்தப் பரம்பொருளோடு முழுமையாக ஒன்றி விடுவதின் விளைவே இந்த அனுபவமாகும்||47||

அத்தகைய தியானம், தெய்வீகமானது போல் தோன்றினாலும், அது உள்ளுக்குள் நிலை பெறும் போது, அதுவே அனைத்துப் பண்புகளுக்கும் அப்பாற்பட்ட தெய்வீகத்திற்கு ஒருவரை அழைத்துச் செல்கிறது ||48||

தியானிப்பவர், தியானம் மற்றும் தியானிக்கப்படுவது, இதுவே இங்கு ஒருவன் உணரும் மும் மூர்த்தியாகும்; இந்த உணர்வு இருக்கும் வரை, ஒருவன் தியான நிலையில்தான் இருக்கிறான்||49||

தியானிப்பவர், தியானம் மற்றும் தியானிக்கப்படுவது, இதுவே இங்கு ஒருவன் அறியாத மும் மூர்த்தியாகும்; தியானிக்கப்படும் சாராம்சத்தில் முழுமையாக மூழ்குவதால், மனம் முற்றிலும் அமைதியாகி, அனைத்துக் களங்கங்களிலிருந்தும் விடுபடுகிறது||50||

அங்கிருந்து வேறு எந்த எண்ணங்களும் எழுவதில்லை; காற்றற்ற இடத்தில் வைக்கப்பட்ட எரியும் விளக்கைப் போல, அத்தகைய அமைதியில் மூழ்கி இருப்பான்; அப்படிப்பட்ட முழுமையான ஒன்றிணைப்பே முழுமையான பக்தி தியானத்தின் சமாதி நிலையாகும்||51||

சமாதி நிலையை அடையும்போது, புத்தியும் அதன் அனைத்து செயல்பாடுகளையும் விலக்கி நிற்கும்; மனதைத் தலைவனாகக் கொண்ட எல்லாப் புலன்களும், தியானிக்கப்பட்ட உருவத்திலேயே ஒன்றி விடும்||52||

சமாதி எனும் மூழ்கும் நிலையை அடையும்போது, மற்ற எல்லா குணங்களும் இரண்டாம் நிலைக்கு சென்று விடுகின்றன; மனம், மன அலைச்சல் அல்லது உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தோன்றினாலும் தியானத்திற்கு அவை எந்தத் தடையையோ அல்லது இடையூறையோ ஏற்படுத்துவதில்லை||53||

சமாதி நிலையை அடையும்போது, மனம் இங்குமங்கும் அலையும் நாட்டங்களையும் அவற்றின் அனைத்து செயல்பாடுகளையும் துறந்து விடும்; தேவை அற்ற அனைத்து புலன் ஆசைகளும் மறைந்து, தியானிக்கப்பட்ட உருவத்திலேயே ஒன்றி, ஜீவ ஞானத்தை அடைவது போன்ற நிலைக்கு சென்று விடும் ||54||

அவர்களுக்கு பிறப்பு இல்லை, அதனால் வளர்ச்சி, மாற்றம் அல்லது சிதைவு இல்லை, அதனால் அவர்களுக்கு மீண்டும் இறப்பு இல்லை, மறு பிறப்பின் சுழற்சி இல்லை ||55||

அதன் விளைவு என்ன, ஒன்றுமில்லை; பூத உடலோடு இயற்கையாக பிறந்த அனைத்திற்கும் என்ன ஆகிறது?; எந்த உறவும் எஞ்சுவதில்லை; அனைத்து உலகப் பற்றுகளும் வெல்லப்படுகின்றன; அத்தகைய யோகியின் மனதில் ஒரு துளி மோகமும் பரவுவதில்லை||56||

அத்தகைய யோகியை நீரால் நனைக்கவோ, தீயால் எரிக்கவோ முடியாது; வெப்பக் காற்றால் உலர்த்தவோ, ஆயுதங்களால் சிதைக்கவோ முடியாது ||57||

யுகங்கள் பல கடந்து சென்றாலும், அல்லது புதிய யுகங்கள் தோன்றினாலும், ஏன் எண்ணற்ற யுகங்கள் தொடர்ந்து வந்தாலும், அத்தகைய யோகிகள் மீண்டும் மீண்டும் பிறப்பு-இறப்புச் சுழற்சிக்கு ஆளாவதில்லை||58||

அத்தகைய யோகி தனது பந்தங்கள் அனைத்தையும் அறுத்து எறிந்து விடுவார்; சாதாரண உலகியல் உறவுகளுடனான தொடர்புகளும் அவரிடம் இருக்காது; அவர் மூல, களங்கமற்ற பேரறிவு வடிவத்தில் மட்டுமே நிலைத்து இருப்பார்||59||

அப்படிப்பட்ட யோகியை எவராலும் அவரை விழுங்கவோ, எளிதில் புரிந்து கொள்ளவோ இயலாது; அவர் எவருக்கும் அடிபணிந்து நடக்க மாட்டார்; அனைத்து மாற்றங்களிலிருந்தும், திரிபுகளிலிருந்தும் விடுபட்டு, அனைத்தையும் சாட்சியாக நின்று காணும் ஆற்றலைப் பெற்று விடுவார் ||60||

அப்படிப்பட்ட யோகி அடைந்த அந்தப் பேரறிவு சார்ந்த ஒருமை நிலையை எவராலும் மாற்றியமைக்க இயலாது; இதுவே யோகப் பாதையின் இயல்பாகும்; இது மறு பிறப்புச் சுழற்சியை வெல்வதற்கான வல்லமையை வழங்குகிறது||61||

யோகத் தீ மூண்டெழும்போது, பாரபட்ஷம் அல்லது விருப்பு, வெறுப்பு போன்ற வடிவங்களில் உள்ள அனைத்தும் கணப் பொழுதில் எரிந்து சாம்பலாகின்றன; அதன் விளைவாக, அந்த யோகி தனது தூய, இயல்பான களங்கமற்ற தன்மையை மீண்டும் பெறுகிறார் ||62||

இவ்வாறு எரிந்து மறைந்த அனைத்துக் களங்கங்களையும் அவர் மீண்டும் அனுபவிப்பதில்லை; பந்தங்களை உருவாக்கும் அனைத்துச் செயல்களையும் அவர் கடந்து விடுகிறார்; துயரமும், உலகியல் மயக்கமும் அவரிடமிருந்து வெகு தொலைவில் விலகி நிற்கின்றன||63||

அந்த நிலையில் உள்ள அவர் பிரம்மப் பரம் பொருளிலிருந்து வேறானவர் அல்ல; அவருக்கு இனி தோற்றமோ (பிறப்போ), மறைவோ (இறப்போ) இருக்காது; அவர் அந்தப் பரம்பொருளுடன் பேரறிவு சார்ந்த ஒருமைப்பாட்டை அடைந்து விட்டார்; அத்தகைய யோகி தனது பரம்பரையில் வரும் 42 தலைமுறையினரையும் உயர்வு பெறச் செய்கின்றார் என்று கூறப்படுகிறது ||64||

ஆற்றின் நீர் கடலுடன் சங்கமிப்பதைப் போலவும், அல்லது ஒரு வெற்றுப் பானைக்குள் இருக்கும் ஆகாயம் பரந்த வானத்துடன் ஒன்றி விடுவதைப் போலவும், அந்தச் சாதகரின் ஆத்மா பரம்பொருளுடன் ஒன்றி விடுகிறது; அதன் பின்னர் அந்த இருவரையும் பிரித்து பார்க்க இயலாது||65||

ஆகவே, அத்தகைய யோகிகள் பெரிதும் போற்றப்படுகிறார்கள்; வெறும் படிப்பு அறிவு கொண்ட சாதகர்களை விட, அல்லது கடுந் தவம் இயற்றுபவர்களை விட அவர்கள் மிகச் சிறந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்; அந்தப் பரிபூரணப் பரம் பொருளுடனேயே ஒன்றி விட்டவரை வேறு எவருடன் ஒப்பிட்டுப் பேச இயலும்? ||66||

உலகப்பற்று என்பது காட்டுத் தீ போன்றது; ஆனால் யோக நெறியின் மாட்சிமை உள்ளத்தில் நுழையும்போது, அனைத்து இருமைகளும் கடக்கப்படுகின்றன; அப்போது விவரிக்க இயலாத குளிர்ந்த அமைதி நிலை பெறுகிறது; நீயும் இத்தகைய மன நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்||67||

ஸ்ரீமத் தத்தாத்ரேயர் மேலும் கூறினார் ‘மன்னர்களுள் சிறந்தவனே, இப்போது மற்ற அனைத்துக் கடமைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, இந்த யோக நெறியை முழுமையாக அறிந்து கொண்டு, அதைச் சிரத்தையுடன் கடைப் பிடி; இந்த நெறியின் ஒவ்வொரு நிலையிலும், ஆழ்ந்த அறிவாற்றல் உனக்கு வழி காட்டியாக அமையட்டும்’ ||68||

மன்னன் அலர்கன் பதிலளித்தான் ‘குருமார்களுள் சிறந்தவரே, உன்னத யோகிகளின் நன்னடத்தை எனும் செல்வம் எத்தகையது? தாங்கள் எனக்கு எதை உபதேசிக்கிறீர்கள் என்பதைப் பற்றி, எனக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டுகிறேன்; கடந்த கால உன்னத யோகிகளால் பெரிதும் போற்றப்பட்ட அந்த நன்னடத்தைதான் எத்தகையது?’ ||69||

மன்னன் அலர்கனின் வேண்டுகோளைச் ஏற்றுக் கொண்ட அத்ரி முனிவரின் புனிதத் திருமகன் பின்வருமாறு பதிலளித்தார் ‘இப்போது அந்த நன்னடத்தையின் சிறப்பியல்புளை நான் உனக்கு விரிவாக எடுத்துரைக்கிறேன்; உன் முழு உள்ளத்தோடும் அதைக் கூர்ந்து கேள் ||70||

இந்த வழிமுறையை நீ ஒருமுறை விரிவாக அறிந்து கொண்டால், உன் உணர்வு நிலை இனி ஒருபோதும் துன்பத்திற்கு ஆளாகாது; நீ எப்போதும் ஆரோக்கியத்துடனும் மன ஒருமைப்பாட்டுடனும் திகழ்வாய்; நான் குறிப்பிட்ட அனைத்துச் சித்திகளும் உனக்கு மிக எளிதாகவே வந்து சேரும்||71||

ஒருவன் பிறரிடமிருந்து மரியாதை பெறும் போது, அவன் உள்ளம் பாசத்தாலும் மகிழ்ச்சியாலும் நிரம்பி வழிகிறது; அதேபோல, அவன் அவமதிக்கப்படும்போது, வெறுப்பிற்கும் துன்பத்திற்கும் ஆளாகிறான்; இதுவே சிறிய புத்தி கொண்டவர்களின் இயல்பாகும்; அவர்களை மூடியுள்ள அறியாமையின் திரைகளுக்கு ஏற்பவே அவர்கள் எதிர் வினையாற்றுகின்றனர்||72||

ஆன்மீகத் தேடலில் உள்ள ஒரு யோகி, இதற்கு நேர் மாறான மன நிலையை ஏற்றுக் கொண்டு, அதையே தன் உள்ளத்தில் உறுதியாகப் பின் தொடரத் தீர்மானித்தால், அவன் நிச்சயமாகச் சித்திகளை அடைவான்; ஏனெனில், அவன் தன் அகத்தை (உள்ளத்தை) உறுதியாகப் பாதுகாத்துக் கொண்டுள்ளான் ||73||

மரியாதை பெறுவதை அமுதமாகவும், அவமதிக்கப்படுவதை நஞ்சாகவும் கருதுபவர்களே, தங்கள் விருப்பு வெறுப்புகளால் கட்டுண்டு கிடப்பார்கள்; இது முற்றிலும் உறுதியான உண்மையாகும்||74||

ஆகவே, ஆன்மீகத் தேடலில் உள்ள யோகிகள், மரியாதை பெறுவதை நஞ்சாகவும், அவமதிக்கப்படுவதை அமுதமாகவும் கருதுகின்றனர்; அந்த மனநிலையுடனேயே அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர் ||75||

ஒரு யோகி, தனக்கு மரியாதை அளிக்கப்படும் அனைத்துச் சூழல்களையும் நஞ்சாகவே கருத வேண்டும்; மாறாக, தான் அவமதிக்கப்படும் அனைத்துச் சூழல்களையும் அமுதமாகவே கருத வேண்டும் ||76||

இவ்விதமாகவே யோகத்தின் சித்தி (வெற்றி) அடையப்படுகிறது; ஒருவன் தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டால், அவன் பந்தத்திற்குள்ளாகிறான்; ஆகையால், அலர்கனே, உனது இதயம், உன்னதமான ஆன்மீகத் தேடலில் ஈடுபடும் யோகிகளுக்கு ஏற்றவாறு தூய்மையடையட்டும் ||77||

சமஸ்கிருதச் செய்யுள்: த்ருஷ்டிபூதம் வின்யஸேத்பாதம், வஸ்த்ரபூதம் பிபேஜ்ஜலம்,
சாஸ்த்ரபூதாம் வதேத் வாணீம், மநபூதம் ஸமாசரேத்
இதன் விளக்கம் என்ன என்றால் ‘பாதை சுத்தமாக இருப்பதை உறுதி செய்த பின்பே அடியெடுத்து வைக்க வேண்டும். (நடக்கும்போது கவனம் தேவை)* தூய்மையான துணியால் வடிகட்டிய பிறகே நீரைக் குடிக்க வேண்டும். (ஆரோக்கியத்திற்கு சுத்தம் தேவை)**; சாஸ்திரங்களுக்கும் அறநெறிகளுக்கும் உட்பட்ட, உண்மையான மற்றும் நன்மையான வார்த்தைகளையே பேச வேண்டும்.***; நம்முடைய மனசாட்சிக்கு தூய்மையாகத் தோன்றும் செயல்களையே செய்ய வேண்டும்.
{இந்த ஸ்லோகம் சாணக்கிய நீதி (Chanakya Niti) மற்றும் மனுஸ்மிருதி (Manu smriti) ஆகிய இரண்டு முக்கிய சமஸ்கிருத நூல்களிலும் காணப்படுகிறது} ||78||

‘தூய்மையான, சுத்தமான இடத்தை தேடித் தேர்ந்தெடு; அதன் பின்னரே அங்கு உன் காலடிகளை எடுத்து வை; தேவைப்பட்டால், துணியைக் கொண்டு நீரை வடிகட்டிய பின்னரே, உன் தாகத்தைத் தணித்துக் கொள் ||79||

எதையும் பேசத் தொடங்கும் முன், அது சாஸ்திரங்களைப் போலவே புனிதமானது என்பதை ஆராய்ந்து பார்த்து விடு; உன் மனம் மற்றும் பிற புலன்கள் அனைத்தும் தூய்மையடையும் வகையில் உன் சிந்தனையை அமைத்துக் கொள்’ ||80||

எந்நேரமும் ஐம்புலன்களின் தூண்டுதலால் உடலில் தோன்றும் புலன் இன்ப உணர்வுகளை சிந்தித்துக் கொண்டிருப்பது, பந்தத்தின் மீதான பிணைப்புகளை அதிகரிக்கச் செய்யும்; மாறாக, இறைவனைப் பற்றிய தியானம், வெளி உலக பிணைப்பினால் ஏற்படும் மன உணர்வுகளை தூய்மை அடைய வைக்கின்றது ||81||

பிக்ஷை எடுத்து உண்ணும் யோகி நீ, உனக்கு மிகுந்த மரியாதை கிடைக்கும் வீடுகளிலோ, அண்மையில் மரணம் நிகழ்ந்த வீடுகளிலோ யாசகம் தேடிச் செல்லாதே; மேலும், அந்த வீட்டில் உள்ள பெண்கள் மாத விடாய் காலத்திலோ அல்லது மகப்பேறு சார்ந்த உடல் நலச் சிக்கல்களிலோ இருப்பதாகத் தெரிந்தால், அத்தகைய வீடுகளிலும் பிட்ஷை கேட்கச் செல்லாதே ||82||

ஒரு யோகி, தெய்வ சம்மந்தப்பட்ட யாகங்கள் அல்லது ஆலயத் தேரோட்ட விழாக்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்லக் கூடாது; மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்வதை யோகி தவிர்க்க வேண்டும்; எங்கு யாசகம் பெறலாம் என்பது குறித்து மிகுந்த விவேகத்துடனும் பகுத்தறிவோடும் செயல்பட வேண்டும்||83||

ஒரு பெண் அண்மையில் குழந்தையைப் பெற்றெடுத்திருந்தாலோ, அல்லது மரணம் போன்ற காரணங்களால் ஏற்படும் ‘சூதகத் தீட்டு’ காலம் நிலவினாலோ, அல்லது வேறு ஏதேனும் சடங்குகள், சம்பிரதாயங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலோ, பிட்ஷை எடுப்பவர்கள் அத்தகைய வீடுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும் ||84||

ஒரு ஆண் குழந்தை பிறந்த பின் ஒரு மாதம் வரையிலும், ஒரு பெண் குழந்தை பிறந்த பின் நாற்பது நாட்கள் வரையிலும், ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் இருக்கும்போது நான்கு நாட்கள் வரையிலும், அந்த வீடுகளில் ‘தீட்டு’ காலம் நிலவும்; அத்தகைய வீடுகளை பிட்ஷை எடுப்பவர்கள் தவிர்க்க வேண்டும்||85||

தந்தை இறந்த வீட்டில் ஓராண்டும், தாய் இறந்த வீட்டில் ஆறு மாதங்களும், மூன்று தலைமுறையைச் சேர்ந்த எவரேனும் இறந்த வீட்டில் மூன்று மாதங்களும், ஒரே குலத்தைச் சேர்ந்தவர் இறந்த வீட்டில் ஒரு மாதமும் பிட்ஷை ஏற்கச் செல்லாமல் தவிர்க்க வேண்டும்||86||

ஒரு வீட்டில் திருமணம், கருத்தரிப்புச் சடங்கு அல்லது திருமண விழா போன்ற மங்கல நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தால், அத்தகைய வீடுகளைப் பதினாறு நாட்களுக்குத் தவிர்க்க வேண்டும்; மேலும், முன்னோர்களுக்கான நாந்தி சிராத்தம்* என்னும் சடங்கு நடைபெறும் குறிப்பிட்ட அந்த ஒரு நாளையும், பிட்ஷை ஏற்பவர்கள் தவிர்க்க வேண்டும்
{*நாந்தி சிராத்தம் என்பது திருமணம், உபநயனம் (பூணூல் கல்யாணம்) போன்ற சுப நிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடைபெறவும், குடும்பத்தில் மங்களம் நிலைக்கவும் வேண்டி, முன்னோர்களை (பித்ருக்களை) வழிபட்டு ஆசி பெறும் ஒரு மங்களகரமான சடங்கு ஆகும்} ||87||

வீட்டின் வெளிப் புறத்திலிருந்து பார்க்கும்போது சமையல் புகை ஏதும் எழாமல் இருந்தாலோ, அல்லது சமையலறைத் தீ அணைக்கப்பட்டிருந்தாலோ, மற்றும் அவ்வீட்டில் உள்ள அனைவரும் தங்கள் உணவை முடித்திருந்தாலோ மட்டுமே, ஒரு யோகி பிட்ஷை ஏற்க அங்கு செல்ல வேண்டும்||88||

இந்த வீடு எனக்கு அதிக உணவைத் தருகிறது; அந்த வீட்டின் உறுப்பினர்கள் என்னைத் தவிர்க்கிறார்கள் அல்லது குறைவான உணவே தருகிறார்கள்; இந்த வீடு எனக்கு உரிய மரியாதையை அளிக்கிறது; அந்த வீட்டின் மக்கள் என்னை அவமரியாதையாக நடத்துகிறார்கள் என்று எண்ணாதே ||89||

அத்தகைய எண்ணங்கள் ஒரு துறவியின் மனதை ஆட் கொள்ளக் கூடாது; பிட்ஷை ஏற்க வெளியே செல்லும் போது சாலையில் மனம் இங்கும் அங்கும் அலை பாயக் கூடாது; ஒரு யோகி செல்லும் பாதையில் ஏதேனும் ஒரு வீடு அமைந்திருந்தால், விருப்பு வெறுப்புகள் அல்லது கடந்த கால அனுபவங்களின் காரணமாக மட்டும் அந்த வீட்டைத் தவிர்த்து விடக் கூடாது||90||

ஒரு யோகி பிட்ஷை கேட்கும்போது உரக்கக் கூவக் கூடாது; வீட்டின் கதவுகளைத் தட்டவும் கூடாது; வீட்டின் சாவித் துளைகள் வழியாகவோ அல்லது கதவிடை வெளி வழியாகவோ உள்ளே எட்டிப் பார்க்கக் கூடாது; ஒரு சிறு கவளம் பிட்ஷை உணவு கிடைத்தாலும், அது தனக்குத் தேவையான அளவை விட மிகக் குறைவாக உள்ளது என்று குறை கூறக் கூடாது||91||

ஒரு யோகி தனது சிறப்பம்சங்கள் பற்றித் தானே புகழ்ந்து பேசிக் கொள்ளக் கூடாது; தனது ஆற்றல்களைப் பற்றியோ திறமைகளைப் பற்றியோ எவ்விதமான குறிப்புகளையும் வெளிப்படுத்தக் கூடாது; ஒருமுறை ஒரு வீட்டிற்குச் சென்று பிட்ஷை பெற்ற பிறகு, மீண்டும் அதே வீட்டிற்கே திரும்பச் செல்லக் கூடாது ||92||

ஒரு யோகிக்கு ஒரு குறிப்பிட்ட வீட்டிலிருந்து ஒரு வாரம் முழுவதும் எவ்வித உணவும் பிட்ஷை கிடைக்கவில்லை என்றால், இழிவான நடத்தையுடையவர்களை விலக்குவது போலவே அந்த வீட்டையும் விலக்கி விட வேண்டும்; அத்தகைய வீட்டை எப்பாடுபட்டாவது முற்றிலுமாகத் தவிர்த்து விட வேண்டும் ||93||

ஒரு யோகிக்குத் தனது உடலைத் தாங்குவதற்குப் போதுமான உணவு, மூன்று வீடுகளிலிருந்தே கிடைத்து விட்டால், அதுவே போதுமானது என்று கருத வேண்டும்; ஒரு யோகி தனக்குத் தேவையான அளவை விட அதிகமாக உணவை எடுத்துக் கொண்டால், அது திருட்டுச் செயலாகவே கருதப்பட்டு, அதற்கேற்பவே தீய பலன் அடைவார்கள் ||94||

பிட்ஷையானது மூன்று, ஐந்து அல்லது ஏழு வீடுகளிலிருந்து மட்டுமே கேட்கப்பட வேண்டும்; இதுவே தொன்று தொட்டுச் சொல்லப்பட்டு வரும் ஒழுக்க நெறியாகும்; ஒரே பகுதியில் பல வீடுகள் இருக்கும்போது, ஒரே வீட்டிற்கே திரும்பத் திரும்பச் சென்று பிச்சை கேட்கக் கூடாது ||95||

ஒரு யோகி துறவிகளுக்குரிய தர்ம நெறிகளை ஒரு போதும் கை விட்டு விடக் கூடாது; ஒரு யோகி தனது உடல் சார்ந்த செயல்பாடுகள் மூலமாகவோ அல்லது நடத்தைகள் மூலமாகவோ பிறரால் அவமதிக்கப்படும் சூழலை ஒரு போதும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது; அத்தகைய இழிவை விளைவிக்கும் நுணுக்கமான செயல்கள் அனைத்தையும் அவர் முற்றிலுமாகத் தவிர்த்து விட வேண்டும் ||96||

எவர் ஒருவர் பிட்ஷை கேட்டு வாங்கி கொள்ளும் அந்த உணவைக் கொண்டே ‘அக்னி ஹோத்ரம்’ எனும் வேள்வியை (ஐம்பெரும் வேள்விகளை)* நிறைவேற்றுகிறார்களோ, அவர்கள் பிட்க்ஷையாக பெற்ற அந்த உணவு தூய்மையானதாகக் கருதப்படுகிறது; அவ்வாறு பிட்ஷையாக பெற்றுக் கொண்ட உணவைக் கொண்டு, சாஸ்திரங்களில் வலியுறுத்தப்பட்டுள்ள ஐந்து வேள்விகளையும் நிறைவேற்ற இயலவில்லை என்றால், அந்த உணவு முழுவதுமே தூய்மையற்றதாகவே கருதப்படும்; இந்த உண்மையை எக்காலத்திலும் நினைவில் கொள்ள வேண்டும்
{*இந்து சமய அற நெறிகளின்படி, ஒவ்வொரு இல்லறத்தானும் தினமும் செய்ய வேண்டிய ஐந்து கடமைகள் அல்லது வேள்விகள் ‘ஐம்பெரும் வேள்விகள்’ (பஞ்ச மகா யக்ஞங்கள்) என அழைக்கப்படுகின்றன.; அவை (i) தேவயக்ஞம் (கடவுள் வேள்வி):- கடவுளை வழிப்படுதல், ஓமம் வளர்த்தல் மற்றும் இறைவனுக்கு நன்றி செலுத்துதல்(ii) ரிஷியக்ஞம் (பிரம்ம வேள்வி):- வேதம், உபநிடதம் மற்றும் ஞான நூல்களைக் கற்பது, கற்பிப்பது மற்றும் ரிஷிகளுக்கு நன்றி செலுத்துதல் (iii) பித்ருயக்ஞம்:- பெற்றோர், முன்னோர்களுக்கு நீர்க் கடன் (தர்ப்பணம்) அளித்தல் மற்றும் மூத்தோர்களை மதித்து உதவுதல்.(iv) பூதயக்ஞம் (பூத வேள்வி):- பஞ்ச பூதங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் பிற உயிரினங்களுக்கு உணவளித்தல், இயற்கையைப் பாதுகாத்தல் (v) நரயக்ஞம் (மானுட வேள்வி/விருந்தோம்பல்):- விருந்தினர்களை உபசரித்தல், பசித்தவருக்கு உணவிடுதல், சக மனிதர்களுக்கு உதவுதல்}||97|

எவர் தினமும் பல வீடுகளுக்குச் சென்று பிட்ஷை கேட்டு உணவைப் பெறுகிறார்களோ, அத்தகைய பிட்ஷை தேடும் முறையே சாஸ்திரங்களில் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது; மேற் கூறிய முறையைத் தவிர்த்து, வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிற வழிகள் மூலம் பிட்ஷை தேடுபவர்களின் முறை, இரண்டாம் தரமானதாகவே கருதப்படும் ||98||

மேற்கூறிய முறைகளைத் தவிர்த்து, வேறு வழிகளில் பிட்ஷை தேடுபவர்களின் முறை, மிகக் கடைசியான தர வரிசையிலேயே வைக்கப்படுகிறது; ஒரே வீட்டிலிருந்தே தனக்குத் தேவையான முழுமையான உணவு கிடைத்து விட்டாலும் கூட, அவ்வாறு ஒரே வீட்டையே சார்ந்திருக்கும் முறையை மேற் கொள்ளக் கூடாது என்றே சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன ||99||

முன்னர் குறிப்பிடப்பட்ட ‘யவாகு’ (கஞ்சி) மற்றும் உண்ணத் தக்க பிற தானியங்கள்; ‘சத்து’ (மாவு) உணவு, யவாகு மற்றும் ‘யவ’ (வாற்கோதுமை) தானியங்கள், கிழங்குகள், தளிர்கள், பழுத்த பலன்கள் , பால் மற்றும் மோர் ஆகியவற்றை (பிட்ஷையாக) பெற்றுக் கொள்ள வேண்டும் ||100||

ஒரு சாதகன் (ஆன்மீகத் தேடுபவன்) ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பிட்ஷை ஏற்கச் செல்ல வேண்டும்; அவ்வாறு கிடைத்த உணவை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்; அதைச் சுவைக்காக உண்ணாமல், உடலைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உண்ணும் ஒரு மருந்தாகவே கருத வேண்டும் ||101||

ஒருவன் தன் வயிற்றின் கொள்ளளவில் பாதியளவு மட்டுமே உணவை உண்ண வேண்டும்; அதுவும் சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்பட்ட உணவை மட்டுமே உண்ண வேண்டும்; பிட்ஷை பாத்திரத்தில் எஞ்சிய பாதியளவில், கால் பகுதியை நீரால் நிரப்ப வேண்டும்; மீதமுள்ள கால் பகுதியை காற்று செல்வதற்காக காலியாகவே விட்டு விட வேண்டும்||102||

உணவு என்பது உயிர் வாழ்வதற்காக மட்டுமே; ஒருவன் சுவைக்காகவும் நாவிற்குப் பிடித்த உணவுகளுக்காகவும் ஏங்கினால், அது உடலுக்குத் தீங்கையே விளைவிக்கும்; எனவே, சுவைக்காக ஏங்குவதற்குப் பதிலாக, உணவை ஒரு மருந்தைப் போலவே விரைவாக உண்டு முடிக்க வேண்டும் ||103||

ஒருவன் இரவு உணவிற்காகவோ அல்லது மறுநாள் உணவிற்காகவோ உணவைச் சேமித்து வைக்கக் கூடாது; உடன் பயிலும் சக மாணவர்களுக்காகப் பிட்ஷை ஏற்கச் செல்லக் கூடாது; பிட்க்ஷையாக என்ன கிடைத்தது என்பது குறித்துப் பேசிக் கொள்வதையும் ஊக்குவிக்கக் கூடாது||104||

அகிம்சை (வன்முறையின்மை), பற்றின்மை, பிரம்மச்சரியம், குரு சேவை, மன அமைதி, கள்ளத்தனம் இல்லாமை, மிதமான உணவு உட்கொள்ளல், தூய்மை, பணிவு, ஒழுங்குமுறை மற்றும் சுய ஆய்வு ஆகிய நற்பண்புகளே, இந்த ஆன்மீகப் பாதையில் வெற்றிகளை ஈட்டித் தருவனவாகும் ||105||

பிட்க்ஷையாக கிடைத்த உணவில் எது சத்தானதோ, சாராம்சமானதோ அதை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்; அறிவைத் தேடும் விஷயத்திலும் இம் முறையையே பின்பற்ற வேண்டும்; அளவுக்கு அதிகமாகப் படிப்பதோ, தேவையற்றவற்றைச் சேகரித்து வைக்கும் மனப்பான்மையை தவிர்க்க வேண்டும்; அற்பமான விஷயங்கள் மீது பற்றின்றி, அவற்றை அலட்சியப்படுத்தும் மனப்பான்மை ஊக்குவிக்கப் படவேண்டும் ||106||

உலகியல் சார்ந்த அனைத்துப் பற்றுக்களையும் முற்றிலுமாகத் துறக்க வேண்டும்; தான் அடைய விரும்பும் மெய் ஞானம் எப்போதும் தன் நாவினில் (நினைவில்) நிலைத்திருக்க வேண்டும்; இத்தகைய சாராம்சமான அறிவையே ஒருவன் தேட வேண்டும்; இந்த உயர்ந்த நோக்கத்தை அடைவதற்காகவே, மனதின் அனைத்துச் சலனங்களையும், புலன்களின் செயல்பாடுகளையும் ஒருவன் அமைதிப்படுத்த வேண்டும் ||107||

யோகப் பாதையில் பின்பற்ற வேண்டிய இந்த நன்னடத்தைகள் உனக்கு அறிவுறுத்தப்படுகின்றன; உன் மனம் இந்த நன்னெறிகளையே உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கட்டும்; இதன் மூலமாகவே உன்னால் தியானத்தில் ஆழ்ந்து ஈடுபட முடியும்; அதன் விளைவாக, நீ ஒரு உன்னதமான, தூய ஆன்மீக அரசனாகத் திகழ்வாய்||108||

II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் முப்பத்து நான்காவது(34) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் முப்பத்து நான்காவது(34) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 3571 = 3679

*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}

……இதோடு  பாகம் -11, அத்தியாயம் -34 முடிவடைந்தது
அத்தியாயம்
-35  தொடர்கின்றது