COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -2 : தெய்வத்தின் சேவகர்கள்

அத்தியாயம்-6
ஸ்ரீமத் தத்தாத்திரேயரிடம் இருந்து
கார்த்தவீரியன் வரம் பெற்ற கதை

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

குரு வேத தர்மா தன் சீடரிடம் தொடர்ந்து கூறினார் ‘இப்போது நான் கூறப் போவதை நீ ஒருமுகப்பட்ட சிந்தனையுடன் மிகக் கவனமாகக் கேள்; ‘ஸ்ரீமத் தத்தாத்திரேயரைக் குறித்து மேலும் அறிய மிகுந்த ஆர்வம் கொண்ட அந்தணனுக்கு (தன் தந்தைக்கு), அந்தச் சிறந்த மகன்* தொடர்ந்து விளக்கிக் கொண்டிருந்த அதே கதையை நான் இப்போது விரிவாக எடுத்துரைக்கிறேன்
{* அத்தியாயம்-2 ல் ‘மகன் தந்தைக்கு ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் மகிமைக்களைப் பற்றிக் கூறிக் கொண்டு இருந்த கதையின்’ தொடர்ச்சியையே குரு வேத தர்மா தனது சீடர் தீபக்கிற்கு கூறிக் கொண்டு இருந்தார்} ||1||

கர்கா முனிவர் கூறியவாறே அர்ஜுனன் சஹ்யாத்ரி மலையை அடைந்தான்; அங்கே, தான் தேடி வந்த இறைவனின் திருவடித் தடங்களைக் கண்டான்; அந்தத் தடங்களில் வஜ்ராயுதம், அங்குசம், தாமரை மற்றும் கொடி ஆகிய தெய்வீகச் சின்னங்கள் காணப்பட்டன; அவை பூமியிலிருந்து வெளி வந்தது போல் காட்சி அளித்துக் கொண்டு இருந்தன ||2||

தான் காண்பது உண்மையா அல்லது கனவா என்பது தெரியாமல் அர்ஜுனன் பிரமித்தான்; அத்தகைய சின்னங்கள் தெய்வங்களிடம் மட்டுமே காணப்படும் என்பதை அவன் அறிந்திருந்தான்; ஆகவே மிகுந்த பக்தியுடனும்,உடலெங்கும் பரவிய சிலிர்ப்புடனும் அவன் எழுந்து நின்றான்; அவனது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது||3||

அந்த அந்தக் கண்ணீர் அவனது மனதைத் தூய்மைப்படுத்தியது; அவனது ஐம்புலன்களும், அறிவாற்றல் நிறைந்த மனமும் அங்கும் இங்கும் அலை பாயாமல் ஒரே நிலையில் நின்றன; தான் அனைத்து களங்களில் இருந்தும் விடுபட்டு விட்டது போன்ற உணர்வு தோன்றியது; இனி தனது செயலாற்றல் தான் விரும்பியவாறு பயன்படுத்திக் கொள்ள முடிந்த அளவிலான கருவி போல மாறி விட்டதை உணர்ந்தான்||4||

தெய்வத்தின் திருப் பாதங்கள் பூமியின் மீது விட்டுச் சென்று இருந்த சின்னங்களை வெறும் கண்ணால் பார்த்த அடுத்த கணத்திலேயே, அர்ஜுனன் தன்னை முற்றிலும் மறந்தான்; அப்போது அவன் மனதில் அவனைப் பற்றியோ, அவனை சுற்றி நிலவிய சூழலைப் பற்றியோ எதுவும் தோன்றாமல் வெறுமையான நிலையில் இருந்தது; ‘நான்’ மற்றும் ‘நீ’ எனும் இருவகையான பேதங்கள் கூட அவன் மனதில் எழவில்லை; அப்படிப்பட்ட நிலையை மாபெரும் யோகிகள் கூட அனுபவித்து இருக்க முடியுமா என்ற மர்மம் அவனுக்கு புரியவில்லை||5||

விதி வசத்தால் அர்ஜுனன் அந்த இடத்திற்கு வந்திருந்தான்; அந்தப் புண்ணிய மண் தூள்கள் சில அவனது உடலின் மீது படிந்து இருந்தன என்பதைக் கண்டவன் அந்த காலடி சுவடுகள் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்; தன் உடல் முழுவதும் அந்த புண்ணிய திருப் பாதங்கள் விட்டுச் சென்றிருந்த மண் தூள்கள் படட்டும் என்று எண்ணிக் கொண்டு அந்த பாதச் சுவடுகள் மீது வெற்று உடம்புடன் உருண்டான்||6||

அவன் தனக்குள்ளேயே இவ்வாறு கூறிக் கொண்டான் ‘ஆஹா வேறெந்த நிலப் பகுதிக்கும் கிடைக்காத புனித சின்னங்களை இந்த நிலம் பெற்று உள்ளதினால்தான் இங்கு இத்தனை மகிழ்ச்சி நிலவுகின்றது, இத்தனை புனித நிலப்பரப்பாக உள்ளது; இங்குள்ள நிலப் பரப்பு தெய்வத்தின் திருப்பாதங்களை தன்மீது தாங்கிக் கொள்வதின் மூலம் அந்த தெய்வத்திற்கு ஒரு வகையில் தனது சேவையை செய்கின்றது ||7||

இங்குள்ள புற்களும், பிற செடி கொடிகளும் கூட என்னைப் போலவே பரவசமடைந்து, மெய் சிலிர்த்து, நிமிர்ந்து நின்றிருந்தவாறு இங்கு வருகை தருபவர்களுக்கு ‘கேளுங்கள், மக்களே கேளுங்கள், இந்த நிலம் முழுவதுமே தெய்வத்தின் இருப்பிடமாக உள்ளது என்ற உண்மையை அறிந்து கொள்ளுங்கள்’ என்பதாக பறை சாற்றுவது போல உள்ளதாக உணர்கின்றேன். ||8||

மேலும் அங்கிருந்த மரங்களில் கனி வகைகள் கொத்து கொத்தாக தொங்கிக் கொண்டு இருந்தன; அவைகளும் பூமியின் நிலத்தை தொட்டபடி இருக்கும் அளவில் நிறைந்து இருந்தன என்பதைக் காணும்போது உண்மையான பக்தர்கள் கூட இத்தனை பணிவுடனும் அடக்கத்துடனும் தமது பணிவைக் காட்டியவாறு இருக்க முடியுமா என்று அர்ஜுனன் தனக்குள் வியந்து கொண்டான் ||9||

இந்த மரங்கள் தங்கள் கடந்த பிறவிகளில் ஏதோ தவறு இழைத்திருக்க வேண்டும்; அவை அகங்காரத்தால் கண் மூடித்தனமாய் நடந்து கொண்டிருந்திருக்க வேண்டும்; அதனால்தான், இவ்வுலகில் உள்ள பிற தாவரங்கள் மற்றும் உயிரினங்களைப் போலவே, அசைவற்ற நிலையிலான மரங்களாக மறு பிறவி எடுத்திருக்க வேண்டும் ||10||

அதனால்தானோ என்னவோ தெய்வத்திற்கு கனி வகைகளை அர்ப்பணிக்கும் விதமாகத் தங்கள் கிளைகளைத் தாழ்த்தி வணங்குவதை போன்ற நிலையில் அவை இந்த நிலப்பரப்பில் தோன்றி இருக்க வேண்டும் என்று எண்ணியவன், புண்ணிய பூமியில் இருந்த அந்த மரங்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக அவற்றின் முன் தலை வணங்கி வணக்கங்களை தெரிவித்த பின்னர் தன் பயணத்தைத் தொடர்ந்தான் ||11||

அங்கிருந்த மலையைக் கண்டவன் மேலும் சிந்தனை செய்தான்; ‘இந்த மலையும் எத்தனை வசீகரமாக உள்ளது; பக்தி சூழல் மிக்க இந்த இடத்தில் காணப்படும் இந்த மலையும் கூட தெய்வீக மற்றும் புனிதமான ஒரு பக்தனைப் போல தன்னை வைத்துக் கொண்டு தெய்வத்தின் திருவடித் தூளைத் தன் மீது சுமந்து கொண்டு, இடை விடாமல் இறைவனுக்கு சேவை புரிகிறது||12||

அனுதினமும் இந்த மலை, தமது மீது உள்ள மரங்களின் வேர்கள், தளிர்கள் மற்றும் கனிகளை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறது; அத்துடன், இனிய நீரோட்டங்களையும் சுமந்து கொண்டு அதை தெய்வத்திற்கு காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறது; இவற்றைப் பார்க்கும்போது இந்த மலையும் ஒரு புண்ணியாத்மா போலவேதான் தெரிகின்றது ||13||

இவ்வாறு தனக்குள் பலவாறு சிந்தனை செய்தவண்ணம் சென்று கொண்டிருந்த அர்ஜுனன், இரவு நேர நிலவின் கதிர்களைக் கண்ட மாத்திரத்திலேயே, புராணங்களில் போற்றப்படும் சகோரப் பறவை* (Chakor bird) எத்துணைப் பரவசமடையுமோ, அதே போன்ற ஒரு பரவச நிலையை அர்ஜுனனும் அடைந்தான்
{* சகோரப் பறவை (Chakora bird) என்பது இந்திய இலக்கியங்கள் மற்றும் புராணங்களில் குறிப்பிடப்படும் ஒரு அதிசயப் பறவை; அது நிலவைக் கண்டால் மகிழ்ச்சி அடையும் ஏன் என்றால் அது நிலவொளியை மட்டுமே உணவாக அருந்துவதாகக் கருதப்படுகிறது} ||14||

சிறிது நேரத்திலேயே அவன் ஸ்ரீமத் தத்தரின் ஆஸ்ரமத்தை கண்டார்; தொலைவிலிருந்தே வேத மந்திரங்களின் ஒலியை அவரால் கேட்க முடிந்தது; அர்ஜுனன் தொடர்ந்து நடந்து சென்று, இறுதியில் ஸ்ரீமத் தத்தாத்ரேயரைத் தன் சொந்தக் கண்களால் தரிசித்தான்||15||

பத்துக் கோடி மன்மதர்களின் (காமதேவனின்) உருவை ஒரு சிற்பமாக வடிவமைத்து அந்தச் சிற்பத்திற்கு உயிரூட்டியது போல ஸ்ரீமத் தத்தர் காட்சியளித்தார்; அவரது தெய்வ முகத்தில் மென்மையான புன்னகை தவழ்ந்தது; அவரை உற்று நோக்கிய உடனேயே அர்ஜுனனின் உள்ளமும் மனமும் பேரானந்தத்தில் பொங்கி வழிந்தது||16||

அவரது கச்சிதமான கரங்கள் முழங் கால்கள் வரை நீண்டிருந்தன; அவரது பேரழகு கண்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்து இருந்தது; அந்தத் தூய, அமுதமயமான பேரொளியை அனுபவித்துப் பார்ப்பதற்காகவேதான் தமது கண்கள் தாமாக அவர் மீது நிலையாக நின்று இருந்ததை போலத் தோன்றியது||17||

முழுமையாக மலர்ந்த தாமரையைப் போன்ற அவரது முகத்தை கண்டபோது அவரைக் கட்டி அணைத்து அந்த முகத்தில் முத்தமிடவோ அல்லது அந்த முகத்தில் இருந்து முத்தத்தைப் பெறவோ வேண்டும் என்ற வகையிலான ஏக்கத்தை ஏற்படுத்தியது; அவரது முழுத் திருமேனியும் பேரொளியின் வடிவமாகத் திகழ்ந்தது, அவரைத் தழுவி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று மனம் துடித்தது ||18||

ஆடையின்றி அவர் பேரழகுடன் திகழ்ந்தார்; அவரது வடிவம் ஆனந்தத்தின் உருவமாகவே விளங்கியது; ஒருமுறை அவர் மீது பற்று ஏற்பட்டு விட்டால், பின்னர் வேறு எதன் மீதும் மனம் நாட்டம் கொள்ளாது; யோகிகள் கடும் தவத்தின் மூலம் எட்டும் உயர்ந்த நிலையை மனம் அடைந்து விடும்||19||

அவரிடத்தில் உள்ள அளவற்ற மாயை, சில நேரங்களில் மங்கையின் உருவத்தில் அவரோடு களிப்புடன் விளையாடுவது போல ஒரு தோற்றத்தை அளிக்கும்; அந்த மாயையான ரூபத்தை காணும் முனிவர்கள் பலர், அந்த தூய்மையை புரிந்து கொள்ள முடியாமல் அவரை விட்டு விலகிச் சென்று விடுவர் ||20||

ஆனால் அதே காட்சியைக் கண்ட அர்ஜூனனோ, கர்கா முனிவரின் அறிவுரையை நினைவு கூர்ந்து, தான் காணும் அத்தகைய காட்சி ஸ்ரீமத் தத்தரின் திருவிளையாடல் என்பதை உணர்ந்தான்; அதனால் அவன் மனம் மாறாமல் முழுமையான பக்தி மற்றும் அவரிடத்தில் கொண்டிருந்த நம்பிக்கையினால் தான் நின்ற இடத்திலேயே அசைவற்று நிலைத்து நின்றான் ||21||

ஸ்ரீமத் தத்தர் அவனை நோக்கி ‘இங்கிருந்து கிளம்பிச் செல்; இல்லையேல் பலத்த ஆதி வாங்கி கொண்டு ஓடுவாய்’ என்றார்; அதைக் கேட்ட அர்ஜுனன், ‘நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், இங்கிருந்து போக மாட்டேன்’ என்று கூறி விட்டு அவருடைய திருவடிகளைப் பணிவுடன் பிடித்து விடத் தொடங்கினான்||22||

அவர் அருகில் சென்றவன் ஸ்ரீமத் தத்தரின் திருவடிகளைத் தன் மடியில் வைத்துக் கொண்டு கொண்டு, பக்தியுடனும் மென்மையுடனும் அவற்றை வருடி விடத் தொடங்கினான்; அவர் எத்தனைதான் அவனை உதைத்து, அவமானப்படுத்தும் விதத்தில் நடத்தினாலும் அவற்றை எல்லாம் அவன் சற்றும் பொருட்படுத்தாமல் அவரது கால்களை வருடி விட்ட வண்ணமே அமர்ந்து இருந்தான். ||23||

கணவரிடம் பக்தி கொண்ட மனைவி, கடும் கோபத்தில் உள்ள தன் கணவனிடம் இருந்து எத்தனை அடி வாங்கினாலும், அவனை விட்டுப் பிரியாமலும், அவன் அடித்ததிற்காக கோபம் அடையாமலும் இருந்து கொண்டு அவனுக்கு தொடர்ந்து சேவை செய்து வந்ததை போல, அர்ஜுனனும் ஸ்ரீமத் தத்தருக்கு தொடர்ந்து சேவை செய்தான்|24||

அர்ஜுனன் அவ்வாறு சேவை செய்து வந்தபோது ஸ்ரீமத் தத்தரின் நகங்களின் மாணிக்கம் போன்ற பிரகாசத்தையும் ஒளி வட்டத்தை கவனித்தான்; அந்த ஒளி வட்டத்தை கவனிக்க, கவனிக்க தன்னுடைய இதயத்தின் இருள் அனைத்தும் குறையத் தொடங்கியதையும், தனது சிந்தனைகள் அனைத்தும் ஒருமுகப்பட்டதையும் உணரலானான்||25||

அர்ஜுனன் தன்னால் இயன்றவரை ஸ்ரீமத் தத்தருக்கு தொடர்ந்து சேவை செய்து கொண்டிருக்கையில் தன்னுடைய அறியாமையின் தடயங்கள் அனைத்தும் படிப்படியாக வேரோடு பிடுங்கி எறியப்படுவதையும், தன்னுடைய தெய்வீக அறிவாற்றல் பெருகிக் கொண்டே செல்வதையும், அந்த தெய்வத்தின் மீதான தனது பக்தி பிரிக்க முடியாத அளவில் ஆழமாக வேரூன்றிக் கொண்டு செல்வதையும் தானே உணர்ந்தான்||26||

பலமுறை ஸ்ரீமத் தத்த பகவான் அவரை காலால் உதைத்துத் தள்ளுவார்; ஆனாலும் அர்ஜுனன் மனம் தளரவில்லை, அவனது மனம் புண்படவில்லை; மாறாக காந்தத்தை நோக்கி இரும்பு ஆணிகள் பாய்ந்து சென்று ஒட்டிக் கொள்வதை போலவே, ஸ்ரீமத் தத்தர் எத்தனைதான் தன்னை உதைத்துத் தள்ளினாலும் மீண்டும் அதே உத்வேகத்துடன் அவரிடம் சென்று அவருக்கு சேவை செய்தான்; தான் தேடி வந்த பரமாத்மனால் அர்ஜுனன் முழுமையாக கவரப்பட்டான் ||27||

தான் தேடி வந்த தெய்வத்தின் பாதங்களுக்கு தேவையான சேவைகள் செய்தான்; ஸ்ரீமத் தத்தர் விரும்பிக் கேட்ட மது மற்றும் இறைச்சிகளை வாங்கி வந்து தந்தான்; அது போல அவர் கேட்ட நறுமண திரவியங்கள், சந்தனம் போன்றவற்றையும், உண்பதற்கு புதிய, புதிய பழங்களையும் சற்றும் சளைக்காமல் கொண்டு வந்து கொடுத்தபடி இருந்தான் ||28||

சோம்பேறித்தனத்தையும், உறக்கத்தையும் துறந்து, ஸ்ரீமத் தத்தர் கேட்காமலேயே, தனது தெய்வத்தின் பாதங்களுக்கு பல்வேறு வகைகளில் சேவை செய்தபடியே அர்ஜுனன் இருந்து வந்தான்; சில சமயங்களில் அவன் கேட்காமலேயே அவரிடம் இருந்து அருளாக கிடைத்த வெற்றிலைப் பாக்கையும் பிரசாதமாக பெற்றான் ||29||

அர்ஜுனனையும் அவனது பக்தியையும் உள்ளும் புறமும் கவனித்த அந்த தெய்வம் வியக்கத் தக்க ஒன்றைச் செய்ய நினைத்தார்; அவர் பூமியின் மீது தனது கைகளால் தட்டுவதை போல எதையோ செய்வார்; அடுத்த வினாடி அவரது கைகள் உடலில் இருந்து வெளி வந்து இருக்கும்*.
{*இது ‘கண்ட-யோகம்’ (Khanda-Yoga) என்று அழைக்கப்படும் மிக உயர்ந்த ஒரு யோகப் பயிற்சியாகும்; இதன் மூலம் ஒருவர் தனது உடல் உறுப்புகளைத் தனித்த தனியே வெளியில் எடுத்து வைத்து, தான் விரும்பும் நேரத்தில் அவற்றை மீண்டும் தன உடலில் இணைத்துக் கொள்ள முடியும். ஷீரடி சாய்பாபா தனது பெருங் குடலைச் சுத்தம் செய்வதற்காக இத்தகைய பயிற்சியைச் செய்ததாகக் கூறப்படுகிறது; அவர் தனது குடலைத் வெளியில் எடுத்து , துணிகளை உலர்த்தப் பயன்படும் கயிற்றில் தொங்க விட்டுச் சுத்தம் செய்வதுண்டு என்பதாக கூறுவார்கள்}||30||

அதை பார்த்துக் கொண்டு இருக்கும் அர்ஜுனனை நோக்கி புன்னகையுடன் ஸ்ரீமத் தத்தர் கூறுவார் ‘ஓ அரசனே! இங்கே ஏதோ பெரும் விபத்து நடந்திருப்பதாக தோன்றுகிறது; மரணம் உனது மிக அருகில் வந்து விட்டதினால் நீ இங்கிருந்து விரைவாக விலகிச் செல்வதே உனக்கு சிறந்தது||31||

தீயவர்களுடன் சேர்ந்து கொள்வதினால் கிடைக்கும் பலன் இதுவே ஆகும்; நான் அத்தகைய நபர்களில் ஒருவன்; வேதங்கள் விதித்துள்ள நெறி முறைகளில் இருந்து விலகி நின்று கொண்டு, எதை உண்ண வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்ற கவலை இன்றி இருப்பதினால் வீண் பாபங்களை சேர்த்துக் கொள்கின்றேன் ||32||

இந்த நிலத்தை ஆளும் மன்னனே, நானோ உடலில் ஆடையின்றி, போதை மயக்கத்திலேயே இருந்து கொண்டிருந்தவாறு, என்னைப் போலவே குறைந்த ஆடையணிந்த பெண்ணுடன் , இரவும் பகலும் சல்லாபமாக இருக்கின்றேன்||33||

‘என்னுடன் நெருங்கிப் பழகியதாலும், பாவப்பட்ட எனது உடலைத் தீண்டிக் கொண்டு இருப்பதினால், நீயும் களங்கப்படுகின்றாய்; எனவே, நீ விரைவாக இங்கிருந்து கிளம்பிச் சென்று விடு; அவர் கூறியதைக் கேட்ட அர்ஜுனன், அவரை பணிவுடன் வணங்கி, சற்றே துணிச்சலுடன், தான் தேடி வந்த அந்த தெய்வத்திடம் இவ்வாறு கூறினான்||35||

‘சர்வ வல்லமை படைத்தவரே, என்னை ஏன் வீணாக மாயை என்னும் மயக்கத்திற்கு ஆளாக்க விரும்புகின்றீர்கள் ?; சமூக நியதிகளை மனதில் கொண்டே நீங்கள் இவற்றை எல்லாம் கூறுகின்றீர்கள் என்பதை நான் நன்கே அறிந்து கொண்டு விட்டேன்; இவை அனைத்துமே உங்கள் திருவிளையாடல்களில் ஒன்றாகும்||36||

தெய்வமே, இவ்வுலகில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் நீங்களே அந்தராத்மாவாக (உயிராக) உள்ளீர்கள்; உங்களது சக்தியான மாயையின் துணையோடு, இந்த மனித வடிவத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்; நீங்கள் அனைத்து பண்புகளுக்கும்,அடைமொழிகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதினால் இந்த கோலத்தையும் வேண்டும் என்றேதான் நீங்கள் தேர்ந்து எடுத்து உள்ளீர்கள்||37||

நீங்கள் என்றும் தூய்மையானவர்; எவ்வித களங்கமும் அற்ற அனக (Anagha) என்னும் தெய்வம்; உங்களது பெண் சக்தியான தேவி அனகாவும் (Anaghaa) அதே அளவிலான தூய்மை வாய்ந்தவளாவாள்; இந்த பிரபஞ்சத்திற்கே அதிபதியான நீங்கள், வேண்டும் என்றேதான் பிறர் நெருங்கத் தகுதியற்றவராக உங்களை காட்டிக் கொள்ள விரும்புகின்றீர்கள் ||38||

நான் உள்ள இந்த உலகம் எங்களுக்கு அனுபவத்தைக் கொடுக்கும் நிலமாக உள்ளது என்றால் அதில் நீங்களும் இருக்கின்றீர்கள்; நாங்கள் காணும் இந்த உலகத்தின் நிலைமை கானல் நீரைப் போன்றது, தற்காலிகமானது; அவற்றில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும்; ஆகவே அவற்றை பரம்பொருளாகிய உங்களோடு ஒப்பிட முடியாது ||39||

நீங்களும், உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்தையும் உள்ளடக்கிய இந்த உலகத்திற்குமான வேறுபாட்டை எவன் ஒருவன் அறியவில்லையோ, எவன் அவற்றில் வேறுபாட்டை தேடுகின்றானோ, எவன் உண்மையில் தூய அத்வைத நிலையை புரிந்து கொள்ளாமல் உள்ளானோ(இரண்டற்ற நிலை), அவனே சமூக மற்றும் சாஸ்திர நெறிகளின் கீழ் வரும் ‘செய்யத்தக்கவை, செய்யத்தகாதவை’ எனும் விதிகளுக்கு கட்டுப்பட்டவன் ஆகின்றான் ||40|| ‘

உங்களை விடாத தூய்மையானது எதுவும் இல்லை, தூய்மையானவர்களும் கிடையாது; ஆனாலும் வேண்டும் என்றேதான் உங்களை தூய்மை அற்றவராகவே காட்டிக் கொள்ள விரும்புகின்றீர்கள்; ஆனால் உங்களுடைய உண்மையான ஸ்வரூபத்தை (இயல்பை) அறிந்தவர்களே மெய் ஞானிகள் ஆவார்கள்; ஆனால் உங்களின் கூற்றின்படி அவர்களும் உங்களை போன்றே தூய்மையற்றவர்கள் என்று கருதப்படுவர்’ ||41||

அறியாமையில் உள்ளவர்களே இருமை நிலை (பேதத்தை) காண்கிறார்கள்; அவர்கள் வேத, சாஸ்திரங்களின்படி வகுக்கப்பட்ட தர்ம நெறிகளுக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்கள்; இதைச் செய்ய வேண்டும், இதைத் தவிர்க்க வேண்டும் எனும் விதிகளுக்கு உட்பட்டவர்கள்; ஆனால் நீங்களோ இந்த உலகிற்கே ஆதாரமானவர், அனைத்து எல்லைகளுக்கும் அப்பாற்பட்டவர் ||42||

அர்ஜுனன் கூறினான் ‘பரமாத்மனே, என்னுடைய இந்த உடல் நிலைத்திருந்தாலும் சரி, அழிந்து போனாலும் சரி, எனது மனம் உங்கள் மீதே உறுதியாக நிலைத்திருக்கட்டும்; எக் காலத்திலும், எந்த நிலையிலும், என் மனதில் உங்களுக்கு எதிரான மாறுபட்ட உணர்வுகள் ஏதும் எழாதிருக்கட்டும்; இதுவே எனது உறுதியான சங்கல்பம் ஆகும்’ என்றான்||43||

எளிமையும் பணிவும் நிறைந்த அர்ஜுனன் உரைத்த இம் மொழிகளைக் கேட்டதும், ஸ்ரீமத் தத்த பகவான் பெரிதும் மகிழ்ந்தார். அவர் கூறினார் ‘மிக மகிழ்ச்சி ஓ இளவரசனே, இப்போது என்னிடம் நீ வேண்டிய வரங்களை அருளுகிறேன்’ என்று கூறி விட்டு தொடர்ந்தார்||44||

பக்தியின் சாராம்சமும் மூலப் பொருளும் என்ன என்பதை நீ நன்கு உணர்ந்திருக்கிறாய்; அதனால்தான் என்னை விட்டுப் பிரிய நீ தயங்குகிறாய்; பக்தனே, என் மனதிலும் நீ அமர்ந்து கொண்டு விட்டாய்; நிச்சயமாக நீ எனது தலை சிறந்த பக்தனாகத் திகழ்வாய் ||45||

என்னிடத்தில் எவர் ஒருவர் அசைக்க முடியாத பக்தி வைத்துள்ளார்களோ, அவர்களுக்கு நான் எப்போதும் எளிதில் அணுகக் கூடியவனாகவும், மிக அருகிலேயே இருப்பவனாகவும் விளங்குகிறேன்; மாறாக, எவர் ஒருவர் என்னை இகழ்கின்றார்களோ அவர்கள் எப்போதுமே துன்பங்களிலும், துயரங்களிலும் உழல்பவர்களாகவே இருப்பார்கள் ||46||

உடலாசைகளையும், மன ஆசைகளையும், உலகின் மீதான அனைத்து பற்றுக்களையும் நீ விலக்கி வைத்துக் கொண்டு, இத்தனை காலமும், அப்பழுக்கில்லாமல் எனக்கு சேவை செய்து, என்னை வழிபட்டு வந்துள்ளாய்; இதன் மூலம் நீ இந்த ஜென்மத்தில் ஒரு மன்னனின் மகனாக பிறப்பு எடுத்து இருந்தாலும், அந்த வாழ்க்கையையும் வெற்றிகரமான ஒன்றாக மாற்றி அமைத்துக் கொண்டு விட்டாய்’ ||47||

ஒரு தூய தெய்வத்தின் வாயில் இருந்து எழுந்து வந்த அந்த வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன் பரவசம் அடைந்து நின்றான்; தெய்வீக அலைகளால் தான் சூழப்பட்டு இருந்ததையும், தனக்கு தான் வேண்டியது அனைத்துமே கிடைத்து விட்டதை போன்ற மன நிலைக்கு சென்று விட்டதை உணர்ந்தான்; உண்மையில் அவன் தனக்கென எதையும் கேட்டுப் பெறும் நிலையைக் கடந்திருந்த போதிலும், விதியின் வலையில் சிக்கிக் கொண்டு இருந்த அவன், பின்வருமாறு ஸ்ரீமத் தத்தரிடம் கூறினான்||48||

‘பரமாத்மனே, என் பக்தி உண்மையிலேயே உங்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது என்றால், இவ்வுலகின் செல்வங்கள் அனைத்தையும் நீங்கள் எனக்கு தர வேண்டும்; அதைக் கொண்டு என் குடிமக்கள் அனைவரின் வாழ்வாதாரத்தையும், பராமரிப்பையும் கவனித்துக் கொள்ளும் ஆற்றலையும் எனக்கு நீங்கள் தர வேண்டும்||49||

நான் தர்மத்தை நிலை நாட்டுபவனாக இருந்து கொண்டு, பல்வேறு வகைகளிலான செல்வத்தையும், வளத்தையும் பெற வேண்டும் ; நான் எல்லையற்ற புகழ் பெற வேண்டும்; மன உறுதி மிக்கவனாகவும், துணிச்சல் மிக்கவனாகவும் இருந்து கொண்டு வலிமைக்கு பெயர் பெற்றவனாகவும் இருக்க வேண்டும்; எந்த ஒருவர் துயர காலத்தில் என் பெயரை உச்சரிப்பார்களோ, அவர்கள் இழந்த அனைத்தையும் பெறும் வகையிலான வரத்தை நீங்கள் எனக்கு தர வேண்டும்||50||

அற நெறிகளின் வழி முறையில் என் மக்களைப் பரிவுடன் காக்கும் சக்தியை அடைய எனக்கு நீங்கள் அருள வேண்டும் ; பிறர் மனதிலிருப்பதை அறிந்து கொள்ளும் வகையிலான ஆற்றலை எனக்கு நீங்கள் தர வேண்டும்; என்னை நினைப்பவர் அனைவருக்கும் முன் நான் சென்று நிற்கும் வகையிலான ஆற்றலும் எனக்கு இருக்க வேண்டும்; அனைத்து வகையிலான யோக சித்தி ஆற்றல்களும் என்னுள் தானாகவே வந்து அமர்ந்து கொண்டு விட வேண்டும் ||51||

நான் விரும்பும் நேரங்களில் எல்லாம் நான் ஆயிரம் கைகளைக் கொண்டவனாக மாற வேண்டும் ; நான் எவராலும் வெல்லப்பட முடியாதவனாக இருக்க வேண்டும் ; நான் விரும்பும் இடங்களுக்கெல்லாம் தடையின்றி செல்லும் வகைக்கான சக்தியை நீங்கள் எனக்கு அருள வேண்டும் ||52||

நான் அனைத்தையும் அறிந்தவனாகவும், விரும்பும் போதெல்லாம் நான் விண்ணுலகிற்கும், பாதாள உலகிற்கும் செல்லும் சக்தி கொண்டவனாகவும் இருக்க வேண்டும்; நான் நல் வழிப்பாதையில் இருந்து விலகிச் செல்லாமல் இருக்க நீங்கள்தான் எனக்குத் துணை புரிய வேண்டும்; நான் எப்போதும் அறம் சார்ந்த வழியில் செல்ல வேண்டும்; ஆன்மீகத்தில் மேல் நிலையில் உள்ளவர்கள் மற்றும் தூய்மையான மன நிலையில் உள்ளவர்களுடன்தான் நான் எப்போதும் தொடர்ப்பு கொண்டவனாக இருக்க வேண்டும் போன்ற அனைத்தையும் நான் அடைய எனக்கு உங்கள் அருள் வேண்டும் ||53||

என்றுமே வற்றாத செல்வம் என்னிடத்தில் இருக்க வேண்டும்; என்னைத் தேடி வரும் விருந்தாளிகள் பசி இன்றி செல்லும் வகையிலான வசதிகள் எனக்கு இருக்க வேண்டும்; இவ்வுலகில் எனக்கு பகைவர்களே இருக்கக் கூடாது ; நான் இந்த பூவுலகில் மாபெரும் சக்ரவர்த்தியாக திகழ வேண்டும் ||54||

நான் ஆரோக்கியமான, நீண்ட ஆயுளை கொண்டவனாக இருக்க வேண்டும்; எனக்கு இணையான அல்லது என்னை விடச் சிறந்த ஒரு வீரனின் கையால், மட்டுமே நான் வீர மரணம் அடைய வேண்டும் என்பதற்கான வரத்தை அருளுங்கள்; என் மனம் எப்போதும் உங்கள் நினைப்புடனேயே இருந்து கொண்டு இருக்க வேண்டும்||55||

உங்கள் திருவடிகளிலேயே சரண் அடைந்தவனாகவும், உங்கள் மீது அசைக்க முடியாத பக்தி கொண்டவனுமாகவே நான் என்றும் இருக்க வேண்டும் என்பதற்கான அருள் வேண்டும்; இவைகளே நான் பெரிதும் விரும்பும் வரமாகும்’; இவ்வாறு கூறி விட்டு ஸ்ரீமத் தத்தரின் கால்களில் அர்ஜுனன் பணிவுடன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான் ||56||

அவன் கூறியதைக் கேட்ட ஸ்ரீமத் தத்த பெருமான் கூறினார் ‘நீ வேண்டிய வரங்கள் அனைத்தையும் நான் உனக்கு அருளுகிறேன்; ஏழு தீவுகளைக் கொண்ட பூவுலகம் முழுவதற்கும் நீ சக்கரவர்த்தியாகத் திகழ்வாய்’; இவ்வாறு, யோகிகளுக்கெல்லாம் தலைவரான ஸ்ரீமத் தத்தர் கூறியதும், அவரது திவ்யத் திருமேனியிலிருந்து மேலும் இரண்டு திவ்யக் கைகள் முளைத்து எழ, அவர் நான்கு கைகளைக் கொண்ட மூர்த்தியாக காணப்பட, அது அவரது அழகை மேலும் அதிகரித்தது||57||

அதன்பின், ஸ்ரீமத் தத்தர் தன் பக்தனை ஆரத் தழுவிக் கொண்டார்; அப்படி அவர் தழுவிக் கொண்டபோது இருவருக்கும் இடையிலான இருமை (இருவர்) எனும் பேத உணர்வு மறைந்தது மட்டும் அல்ல தூய, களங்கமற்ற ஒற்றுமையின் சாராம்சம் அங்கே மேலோங்கி நின்றது||58||

அர்ஜுனனை ஆராத் தழுவியபோது அவனது உள்ளத்தில் இருந்த ஆசைகளை உணர்ந்தார்; அவன் பட்டியலிட்டுக் கேட்ட வரங்கள் அனைத்தையும் அவனது இதயத்தில் நிலை பெறச் செய்தார்; அதன்பின், மாயை எனும் சக்தியால் அந்த அனுபவம் முழுவதையும் வெளித் தெரியாமல் இருக்க வைத்து, அவனை இயல்பான விழிப்புணர்வு நிலைக்கு வருமாறு செய்தார் ||59||

அதன்பின் ஸ்ரீமத் தத்த பகவான் அர்ஜுனனிடம் கூறினார் ‘இப்பொழுதே உன் தலை நகரான மஹிஷ்மதிக்கு சென்று வேத விதி முறைகள் அனைத்தையும் பின்பற்றி, நீ மன்னனாக முடி சூட்டிக் கொள்’ ||60||

இறைவன் கூறியதைக் கேட்ட அர்ஜுனன் அவரிடம் கூறினான் ‘பிரபோ, தாங்கள் விரும்பியபடியே அனைத்தும் நடக்கட்டும்’; இப்படியாகக் கூறிய பின்னர் மீண்டும் பக்திப் பெருக்குடன் இறைவன் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். ‘தங்கள் கட்டளைகள் அனைத்தையும் நான் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்; நான் ஒருபோதும் உங்களை மறக்காதவனாகவும், உங்கள் நினைவிலிருந்து விலகாதவனாகவும் இருக்கும் வரத்தையும் நீங்கள் எனக்கு அருள வேண்டும்’ என்று மெத்த பணிவுடன் கேட்டான்||61||

உங்கள் திருப்பாதங்களுக்கு சேவை செய்து கொண்டிருந்த பாக்கியம் என்றும் எனது நினைவில் இருக்க வேண்டும். ஏன் என்றால் நான் இங்கிருந்த நாட்களில் அவைகளே எனக்கு உயிர் நாடிகளாக திகழ்ந்தன; நான் தேடி அலைந்த அனைத்துத் தாரக மந்திரங்களையும் அதில் கண்டு அதில் அடைக்கலம் அடைந்தேன் ||62||

ஒரு பெண் ஆமையானது, தன் குஞ்சுகளைக் கடற்கரையிலேயே விட்டு விட்டுச் சென்றாலும், தான் செல்லும் இடங்களில் எல்லாம் அவற்றை மனதிலேயே நினைத்துக் கொண்டே இருந்தவாறு , அதன் மூலம் அவற்றுக்கு மன ரீதியான ஊட்டத்தை அளிப்பது போலவே, என் வாழ்வும் அமையட்டும்; உங்கள் திருப்பாதங்கள் என் நினைவில் என்றும் இருக்கட்டும் ||63||

ஒரு தாய் ஆமையானது தன் குஞ்சுகளை பற்றிய நினைவை மறந்து விட்டால் விரைவில் அதன் குஞ்சுகள் மடிந்து விடும் என்பதை போலவே, உங்களது பக்தர்களும் தங்கள் மனதை உங்கள் மீதே வைத்துக் கொள்ளும் வரைதான் அவர்கள் வாழ்வதற்கான ஊக்கத்தைப் பெறுகிறார்கள் ||64||

ஒரு பெண் ஆமையானது அதன் அறியாமையாலோ அல்லது கவனக் குறைவாலோ ஏமாற்றத்திற்கு ஆளாகக் கூடும்; ஆனால், எந்த ஒருவரும் உங்கள் மீது எந்த ஒரு பழியையும் போடவோ அல்லது ஏமாற்றவோ முடியாது, தெய்வமே நீங்கள் முற்றிலும் சுதந்திரமானவர்; ஏன் என்றால் வேதங்களே இந்த உண்மைக்குச் சாட்சியாகத் திகழ்கின்றன ||65||

உமது கட்டளைப்படித்தான் பிறப்பு எடுக்கும் உயிரினங்களின் உடல் அனைத்தும் மாயை எனும் உங்களது சக்தியினால் மட்டுமே இயங்குகின்றன என்பதினால்தான் உங்களது வல்லமையை வெல்லவே முடியாது, அதனால்தான் உங்களிடம் அடைக்கலத்தை தேடி, ஒவ்வொரு உயிர்களும் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கோ அல்லது ஒரு பிறவியிலிருந்து மற்றொரு பிறவிக்கோ மாறி மாறி சென்று கொண்டே இருக்கின்றன’ ||66||

அந்த மாயை எனும் சக்தியானது எப்போதுமே உங்களிடத்தில்தான் இருக்கிறது; நீங்கள் விரும்பினால் மட்டுமே அந்த மாயத் தோற்றத்தினால் உங்களை மறைக்க இயலும்; அந்த நிலையை ஒப்பிட்டுக் காட்டுவதற்காகக் கூறப்படும், கண்கட்டு வித்தையான இந்திரஜாலம் கூட ஒரு விதத்திலான மாயத் தோற்றத்தையே காட்டுகின்றது ||67||

உங்களிடம் உள்ள அந்த மாயை உங்களுக்கு கட்டுப்பட்டு உள்ளவர்களிடமும், ஆத்ம ஞானம் பெற்றவர்களிடமும் எந்த விளைவையும் ஏற்படுத்துவது இல்லை; ஆனால் மற்றவர்களை கற்பனைகளுக்குள் சிக்க வைத்து ஆட்டிப் படைக்கிறது; மூவுலகங்களையும் மறைக்கும் வல்லமை அதற்கு மட்டுமே உண்டு என்றாலும், அது உங்களது பக்தர்களை தேவையின்றி குழப்பத்திலோ, மயக்கத்திலோ ஆழ்த்துவதில்லை||68||

ஒரு வீட்டின் செல்லப் பிராணியான நாய், தன் எஜமானரின் கட்டளைப்படி அத்து மீறி நுழைபவர்கள் தப்பிச் செல்ல முடியாமல் பிடித்து வைத்துள்ளதை போலவும் ஆனால் அதே நாய் தன்னை வளர்ப்பவரின் இல்லத்திற்குள் இருக்கும்போது அவரைத் தாக்காமல், அச்சுறுத்தும் வகையில் குரைக்காமல் இருப்பது போலவேதான் உங்களது மாயை எனும் சக்தியும் செயல்படுகிறது’ ||69||

உங்கள் பக்தர்கள் அனைவரும் அனைவரும் அந்த மாயையின் பிடியினால் எந்த விதத்திலான பாதிப்புக்களையும் அடையாமல் இருக்கையில் உங்கள் பக்தனான என்னை எப்படி அந்த மாயை சங்கடப்படுத்த முடியும்? ||70||

உங்களது பக்தர்களாகிய நாங்கள் எவருமே அந்த மாயையினால் எந்த பாதிப்பையும் அடையவில்லை; காலத்தைக் கண்டும் நாங்கள் அச்சப்படுவது இல்லை; காலத்தினால் எங்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தி விட முடியும்?; எங்களுடைய விதி உங்கள் கைகளில் உள்ளது ; இந்த உடலை துறக்கும் போதும் நாங்கள் உங்களை துதித்தவாறு இருந்தே உடலை துறப்போம்||71||

எனவே எனது கண்கண்ட தெய்வமே, உங்களுடனான உணர்ச்சி பூர்வமான என்னுடைய இணக்கத்தை மேலும், மேலும் அதிகமாக்கி அதை தொடர்ந்து வலுப்படுத்துவது உங்கள் அருளை பொறுத்தே உள்ளது; அதைக் குறித்து இனி நான் ஏன் கவலை கொள்ள வேண்டும்?; நான் செல்லும் இடமெல்லாம் உங்கள் மீதான பெருமைகளைப் பாடியும், உங்களது உபதேசங்களை எடுத்துரைத்தும் வருவேன்; மேலும், என் சிரம் தாழ்ந்து உங்களை வணங்கியவாறு உங்களை போற்றி துதித்து வருவோம்||72||

இப்போது உங்களை நான் வேண்டுவதெல்லாம் என்ன எனில், எங்கள் மீது கருணை காட்டுங்கள், எங்களை தள்ளி வைத்து விடாதீர்கள்; எங்களை மறந்து விடாமல் இருந்து கொண்டு எங்களைப் பாதுகாத்தருளுங்கள். இதுவே நான் உங்களிடம் மீண்டும், மீண்டும் நம்பிக்கையுடன் வைக்கும் ஒரே வேண்டுகோளாகும்’ ||73|

இப்படியாக ஸ்ரீமத் தத்த பகவானிடம் விண்ணப்பித்து விட்டு, அர்ஜுனன் விடை பெற்றுக் கொண்டு செல்லத் துவங்கினான்; புது மணப்பெண் தன் தாய் வீட்டை துறந்து விட்டு, புகுந்த வீட்டை நோக்கிச் செல்லும்போது, எப்படி தனது தாய் வீட்டை ஏக்கத்துடன் மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்தபடி செல்வாளோ அதே போன்ற நிலையில்தான் அர்ஜுனனும் ஸ்ரீமத் தத்தரை மீண்டும் மீண்டும் பார்த்தவாறு பின்னோக்கி நடந்து சென்றான் ||74||

தெய்வமான ஸ்ரீமத் தத்தரையே தன் சிந்தையில் வைத்துக் கொண்டு இருந்தவாறு, மன்னன் அர்ஜுனன் புனித ரேவா நதிக்கரையை அடைந்தான்; அங்கிருந்து தன் தலை நகரான மஹிஷ்மதிக்குள் நுழைந்தான்; அங்கே சென்றவனை அவன் மீது விசுவாசம் கொண்டிருந்த அமைச்சர்களும் குடி மக்களும் முறைப்படி வரவேற்றனர் ||75||

அவனுக்காக காத்துக் கொண்டிருந்த தேவர்கள், முனிவர்கள் மற்றும் மகரிஷிகள் அனைவரும், மன நிறைவுடன் அவனை தலை நகரில் வரவேற்றனர்; மங்கல இசைக் கருவிகள் முழங்கின; வேத மந்திரங்கள் ஓதப்பட்டன; பல்வேறு புண்ணியத் தலங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட புனித நீர் அவன் மீது தெளிக்கப்பட்டது; முடிவாக அவனுக்கு முடி சூட்டப்பட்டது ||76||

தூய தங்கத்தைக் கொண்டு மங்களகரமான கோலங்கள் போடப்பட்டு இருந்தன; அத்தி மரத்தின் பசுமையான கிளைகளைக் கையில் ஏந்திக் கொண்டு, வேதங்களின் பல்வேறு பிரிவுகளிலிருந்து மந்திரங்களை ஓதியவாறு, புனித நதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட புனித நீரை அவன் மீது தெளித்து, அவனுக்கு முடி சூட்டினார்கள் ||77||

முடிசூட்டு விழா நிறைவடைந்ததும், அர்ஜுனன் அந்த விழாவை நடத்தி வைத்த அனைவருக்கும் நிலம், தங்கம் மற்றும் பசுக்களைப் பரிசாக அளித்து முறைப்படி கௌரவித்தான்; மேலும், மாற்றுத் திறனாளிகள், பார்வையற்றோர் மற்றும் ஏழை எளியவர்களுக்கும் அந்த விழாவில் கலந்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததோடு அவர்கள் அனைவருக்கும் இலவசமாக அவரவர் தேவைகளுக்கு ஏற்ப உணவுப் பொருட்கள் மற்றும் தானியங்கள் வழங்கப்பட்டன||78||

எட்டு வசு தேவர்கள், பன்னிரு ஆதித்ய தேவர்கள், பதினொரு ருத்ர தேவர்கள், நாற்பத்தெட்டு வாயு தேவர்கள் மற்றும் விஸ்வதேவ தேவர்கள்* ஆகிய அனைவரும் அர்ஜுனனின் முடி சூட்டு விழாவில் கலந்துகொண்டனர்; அந்த மங்கல நாளில் ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்டம் நடைபெற்றது
{*விஷ்வ தேவர்கள் என்பவர்கள் வேதங்களில் இடம் பெற்றுள்ள பல்வேறு தெய்வங்களின் கூட்டம் ஆகும். விஸ்வ தேவர்கள் சில சமயங்களில் தெய்வங்களை சுற்றி காணப்படும் தேவர்களின் கூட்டத்தினர் என்பதாக கருதப்படுகிறார்கள்} ||79||

மன்னன் அர்ஜுனன், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தேவர்களையும் அவரவருக்குரிய முறைப்படி வழிபட்டான்; அதே போல அங்கு வருகை தந்திருந்த அனைத்து தேவர்களும் ‘நீண்ட ஆயுளுடனும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் வாழ்வாயாக’ என்று அர்ஜுனனை வாழ்த்தினர்||80||

அர்ஜுனனுக்கு கட்டுப்பட்டிருந்த பல்வேறு சிற்றரசர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த வரிப் பணங்களை எடுத்துக் கொண்டு வந்து, அவற்றை அர்ஜுனனிடம் தாங்களாகவே கொடுத்தார்கள்; சற்று நேரத்திலேயே, பறைகளையும், முரசுகளையும் அடித்து ‘இந்த ராஜ்யத்து குடிமக்களே, அனைவரும் மன்னனின் செய்தியை கேளுங்கள்’ என்று மக்களுக்கு ஒரு அறிவிப்பு தரப்பட்டது ||81||

இந்த நாட்டில் மன்னன் அர்ஜுனனைத் தவிர வேறு எவரேனும் ஆயுதங்களை ஏந்தியிருப்பதைக் கண்டால், அது விளையாட்டாகவே இருப்பினும் சரி, அல்லது எவரேனும் திருட்டிலோ, வன்முறையிலோ ஈடுபட்டிருப்பதைக் கண்டால், அவர்களது உயிர் பறிக்கப்பட்டு விடும்||82||

அந்தக் கடுமையான சட்டத்தைக் கேட்ட மக்கள், தங்கள் ஆயுதங்களை ஆயுதக் கிடங்கில் ஒப்படைத்தனர்; அச்சத்தின் காரணமாக அர்ஜுனனின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து, பொறுப்புள்ள குடிமக்களுக்குரிய கண்ணியத்துடன் நடந்து கொள்ளத் துவங்கினார்கள்||83||

தான் விரும்பியவாறு மன்னன் அர்ஜுனன் தனது நாட்டில் இருந்த நிலங்கள், விலங்குகள், கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெரு நகரங்கள் என அனைத்தையுமே பாதுகாக்கும் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டான்; மேலும் அவன் தனது படை வீரர்களின் நலன்கள், தானியக் கிடங்குகள், கருவூலங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு, அந்தண குருமார்கள் உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் போன்ற அனைத்தையும் பேணி பாதுகாக்கும் பொறுப்பையும் தன்னிடத்தில் வைத்துக் கொண்டான் ||84||

அத்தனை கட்டுப்பாட்டையும் மீறி, அவ்வப்போது மக்கள் தீ விபத்துகள், திருடர்கள், பகைவர்கள் மற்றும் பாம்பு போன்ற ஜந்துக்களினால் தொடர்ந்து துன்பங்களுக்கு ஆளாயினர்; ஆனால் அர்ஜுனனோ, தான் பெற்ற யோக சக்தியினால் பல்வேறு வடிவங்களை எடுத்துக் கொண்டு அவற்றை எல்லாம் முறியடித்து, மக்களின் துயர்களை தீர்த்து வந்தான் என்பதினால் மக்களிடையே நல்ல பெயரை பெருமளவில் சம்பாதித்து வந்தான் ||85||

அர்ஜுனன் ஸ்ரீமத் தத்தரிடம் பெற்று இருந்த வரத்தினால், மக்கள் எதையாவது தொலைத்து விட்டால், அர்ஜுனனின் பெயரை உச்சரித்த மாத்திரத்திலேயே அவை திரும்பப் கிடைத்தன, மக்கள் அவனைத் தியானித்தால், அவர்களுக்கு எதிரில் அவன் சென்று நின்றான்; அவனது ராஜ்யத்தில் குடிமக்கள் எந்த வியாதிகளும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் இருந்து வந்தார்கள்; மழையும் குறித்த காலத்தில் தவறாமல் பொழிந்தது||86||

அவனது ராஜ்யத்தில் பழங்களும் பூக்களும் செழித்து வளர்ந்தன; அர்ஜுனன் பல்வேறு வேத யாகங்களைச் செய்து அந்தணர்களையும் தேவர்களையும் மகிழ்வித்தான்; அவன் விரைவாக கொடுத்த தீர்ப்புக்களினால், நீதி நிலை நாட்டப்பட்ட, குடி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்; இவ்வாறு அனைத்து நிலைகளிலும் நன்கு ராஜாங்கம் செய்து அர்ஜுனன் மக்களை பாதுகாத்து வந்ததினால் மூவுலகிலும் அவனால் தடையின்றிச் சஞ்சரிக்க முடிந்தது||87||

‘மக’ (Magh) மாதத்தின், கிருஷ்ண பட்ச, அதாவது தேய்பிறையின் எட்டாம் நாளில், அவன் அனகா (Anaghaa) தேவி (ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பெண் சக்தி) விரதத்தை மேற் கொண்டு வரலானான்; விரதத்தின் மறுநாள் அந்தணர்களை அழைத்து அவர்களுக்கு விருந்தளித்தான்; இப்படியாக அந்த விரதத்தை தனது வாழ்நாள் முழுவதும் தவறாமல் கடைப்பிடித்து வந்தான்||88||

இந்த விரதத்தை எவர் ஒருவர் முழுமையான நம்பிக்கையுடன் கடைப் பிடித்து தேவி அனகாவை மனதார வழிபடுவார்களோ, அவர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்கும், வளங்கள் கிடைக்கும், அவர்கள் விருப்பங்கள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேறும் என்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன||89||

மேலும் அந்த விரதத்தை பெரிய அளவில் நாடு முழுவதும் கொண்டாட மன்னன் அர்ஜுனன் ஏற்பாடு செய்தான்; தான் விரும்பிய வரங்களை ஸ்ரீமத் தத்தரிடம் இருந்து பெற்ற நாளையும் கொண்டாடும் விதமாகவும், மீண்டும் புத்துணர்ச்சி பெறவும், அந்த தெய்வத்தின் தரிசனத்தைப் பெறவும் அவன் ஆண்டு தோறும் ‘சஹயாத்ரி’ மலைக்கு புனித யாத்திரையை மேற்கொண்டான்||90||

‘வெல்லப்பட முடியாதவன் என்றும், ஒளிமயமாக ஜொலிப்பவன் என்றும் அவன் போற்றப்பட்டான்; ஆயிரக்கணக்கான ஒளிக் கதிர்களைக் கொண்ட சூரியனைப் போல, அர்ஜுனனும் தனது ஆயிரம் கரங்களுடன் காட்சி அளித்து வந்தான்; அவனது புகழ் பரந்து விரிந்தது; அவன் துன்பங்களைப் போக்கும் வல்லமை கொண்டவன் என்று அனைவரும் போற்றினார்கள்||91||

சகல ஐஸ்வரியங்களையும், இன்பங்களையும் தருபவரும், தம்மைச் சரணடைந்தோரைக் காப்பதில் ஈடு இணையற்றவரும், தனது பக்தர்கள் எவரையும் கைவிட்டு விடாமல் இருந்தவாறு அருள் பாலிக்கும் ஸ்ரீமத் தத்தர் அர்ஜுனனின் புகழ் உச்சத்தை ஏற்றம் அளவில் அருள் பாலித்தார்||92||

யாகங்கள், தானங்கள், தவங்கள், யோகப் பயிற்சிகள், வேத ஞானம், வீரம் மற்றும் வெற்றி ஆகியவற்றில், கார்த்தவீரிய அர்ஜுனனுக்கு இணையாக வேறு எந்த மன்னரும் திகழ முடியாது என்பதைக் குறிக்கும் விதத்தில் இங்கே ஒரு சமஸ்கிருதச் செய்யுள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது- அந்த ஸ்லோகம் என்ன எனில் ந நூநம்கார்த்வீர்யஸ கதிம் யாஸ்யந்திபார்திவ:, யக்ஜ்ஞ- தாந்-தபோ-யோக் ஷ்ருத்வீர்ய-ஜயாதிபி.: என்பதாகும்; அதன் அர்த்தம் என்ன என்றால் ‘யாகங்கள், தானங்கள், தவம், யோக சக்தி, கல்வி (வேத அறிவு), பராக்கிரமம் மற்றும் வெற்றிகள் ஆகிய எவற்றிலும், மற்ற அரசர்கள் எவராலும் கார்தவீர்ய அர்ஜுனனின் நிலையை ஒருபோதும் அடைய முடியாது’ ||93||

ஒரு நாள், அர்ஜுனன் ஆயிரம் பெண்களைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு, ரேவா நதிக்கரைக்குச் சென்றவன் அங்கே அவன் தான் விரும்பியவாறெல்லாம் அந்தப் பெண்களுடன் சல்லாபித்து மகிழ்ந்தான்; அப்போது தற்செயலாக, இராமாயண இதிகாசத்தில் காணப்படும் மன்னனான இராவணனும் அங்கே வந்து சேர்ந்தான்||94||

இலங்கை மன்னன் இராவணன், தேவ முனிவர் நாரதரின் மூலம் அர்ஜுனன் ஒரு மாபெரும் வீரன் என்பதாக கேள்விப்பட்டிருந்தான்; எவராலும் வெல்ல முடியாதவன் என்று கூறப்பட்டு வந்திருந்த ராவணனைக் கண்ட, ரேவா நதிக்கரைக்கு அர்ஜுனனுடன் வந்திருந்த அழகிய பெண்கள் அச்சத்தால் உறைந்து போயினர்||95||

ஆனால் இலங்கை மன்னனான ராவணன் அர்ஜுனனுக்குச் சற்றும் ஈடாகவில்லை; அர்ஜுனன் தன் கண்களால் தன் பரிவாரங்களுக்கு ஒரு சைகை கட்ட, அவனுடன் வந்திருந்த பெண்கள் ராவணனைக் கட்டிப் போட்டனர்; அதன் பின்னர் ராவணன் அர்ஜுனனின் அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அந்த நாட்டின் குழந்தைகள் அவனுடன் பயமின்றி விளையாடும் வகையில் ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டான்||96||

கைகள் கட்டப்பட்டு இருந்த ராவணனை குழந்தைகள் இங்கும் அங்கும் இழுத்துச் சென்று கேலியாக விளையாடினார்கள்; தேவலோகத்தின் கருவூலக் காப்பாளரான குபேரன் இதைப் பற்றிக் கேள்விப்பட்டார்; அவர் ஓடோடி வந்து அர்ஜுனனிடம் பல முறை மன்றாடிய பிறகு, ராவணனை விடுவித்தார்||97||

அர்ஜுனன் அத்தகைய வலிமை வாய்ந்த மன்னனாக விளங்கி வந்தான்; அவன் எப்போதும் தன் தலை நகரிலேயே தங்கியிருந்தான்; பல்வேறு ரூபங்களில் உலாவிக் கொண்டு இருந்தவாறு தன் ராஜ்யத்தை நீதி நெறி முறைகளுடன் ஆட்சி செய்து வந்தான்; மேலும், எந்த விதத் தடைகளும் இன்றி ஏழு தீவுகளுக்கும் எப்போது வேண்டுமானாலும் சென்று கொண்டு இருந்தான் ||98||

‘நமஸ்தே கார்த்தவீர்யாய’ எனும் மந்திரத்தை அதாவது ‘ஓ அர்ஜுனா, உன்னை நாங்கள் தலை குனிந்து நமஸ்கரிக்கின்றோம்’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தால் பகைவர்கள் விலகி ஓடுவார்களாம்||99||

மேற் கூறிய மந்திரத்துடன் பிரணவ மற்றும் பீஜ மந்திரமான ‘ஓம்’ (Aum) என்னும் பீஜ மந்திரத்தையும் (மூல மந்திரத்தையும்) சேர்த்து ‘ஓம் நமஸ்தே கார்த்தவீர்யாய’ என்று உச்சரித்து வந்தால் உலகின் மீதான பற்று என்னும் பந்தங்கள் நீங்கி விடுமாம்; அதே போல ஓம் (Aum) என்ற பீஜ மந்திரத்திற்கு மாற்றாக ஹ்ரீம் (Hreem) என்னும் பீஜ மந்திரத்தைச் சேர்த்து ‘ஹ்ரீம் நமஸ்தே கார்த்தவீர்யாய’ என்று உச்சரித்து வந்தால், அவன் அனைத்து விதங்களிலான செல்வங்களையும் பெருமைகளையும் பெறுவான் என்பதில் சந்தேகம் கிடையாது என்றும் நம்பினார்கள்||100||

அதற்கு மேலும் ‘ஐம்’ (Aiim) என்னும் பீஜ மந்திரத்தைச் சேர்த்து ‘ஐம் நமஸ்தே கார்த்தவீர்யாய’ என்று உச்சரித்து வந்தால் அவன் கூறுவது அனைத்தும் பலிக்குமாம்; மேலும், வேதங்களின் அனைத்துக் கிளைகளையும் சார்ந்த அறிவை அவன் பெறுவானாம்; இதே மந்திரத்தை அவன் ஒரு லட்சம் முறை உச்சரித்தால், சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட முறைப்படி உச்சரிக்கப்பட்ட அந்த மந்திரத்தின் வலிமையால் அனைத்துக் காரியங்களும் வெற்றிகரமாக நிறைவேறுமாம் ||101||

ஷ்ரீம் (Shreem) எனும் பீஜ மந்திரத்தைச் சேர்த்து, ‘ஷ்ரீம் நமஸ்தே கார்த்தவீர்யாய’ என்று கூறியவாறு ஜபம் செய்து வந்தால் செல்வம் பெருகுமாம்; ‘த்ராம்’ (Draam) எனும் பீஜ மந்திரத்தை சேர்த்து ‘த்ராம் நமஸ்தே கார்த்தவீர்யாய’ என்று ஜபம் செய்து வந்தால் அகால மரணம் ஏற்படாதாம்; மேலும் துன்பங்களும் நோய்களும் விலகி நல்ல ஆரோக்கியம் கிடைக்குமாம்||102||

‘வஷட்’ (Vashat) எனும் பீஜ மந்திரத்தைச் சேர்த்து, ‘வஷட் நமஸ்தே கார்த்தவீர்யாய’ என்று ஜபித்து வந்தால் ஒருவரை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு விடலாம்; ‘வௌஷட்’ (Voushat) எனும் பீஜத்தைச் சேர்த்து, ‘வௌஷட் நமஸ்தே கார்த்தவீர்யாய’ என்று ஜபித்து வந்தால் பிறரை தன் வயப்படுத்தலாம்; ‘ஹூம்’ (Huum) எனும் பீஜத்தைச் சேர்த்து, ‘ஹூம் நமஸ்தே கார்த்தவீர்யாய’ என்று உச்சாடனம் செய்து வந்தால் பகைமையை வளர்க்க விடலாம் (அதாவது பிற நாட்டில் உள்ள மன்னர்களுக்குள் பகைமையை வளர்க்க விடலாம்); ‘ஃபட்’ (Phat) எனும் பீஜத்தைச் சேர்த்து, ‘ஃபட் நமஸ்தே கார்த்தவீர்யாய’ என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்து வந்தால் ஒரு நாட்டில் குழப்பத்தை விளைவிக்கலாம். ||103||

‘தா: தா:’ (Tha: Tha:) எனும் பீஜத்தைச் சேர்த்து, ‘தா: தா: நமஸ்தே கார்த்தவீர்யாய’ என்று உச்சாடனம் செய்து வந்தால் ஒருவரது உருவத்தை அப்படியே சிலையில் வடிவமைக்கலாம்; ‘க்ஹென் க்ஹென்’ (Khen Khen) எனும் பீஜத்தைச் சேர்த்து, ‘க்ஹென் க்ஹென் நமஸ்தே கார்த்தவீர்யாய’ என்று உச்சாடனம் செய்து வந்தால் தாம் விரும்புபவர்களுக்கு மரணத்தை விளைவிக்கலாம்; ‘நம:’ (Nam:) எனும் பீஜத்தைச் சேர்த்து, ‘நம: நமஸ்தே கார்த்தவீர்யாய’ என்று ஜபித்து வந்தால் செல்வந்தராகலாம்; ‘ஸ்வாஹா’ (Swaha) எனும் பீஜத்தைச் சேர்த்து, ‘நமஸ்தே கார்த்தவீர்யாய ஸ்வாஹா’ என்று உச்சாடனம் செய்து வந்தால் ஊட்டச் சத்து பெற்று, நல்ல ஆரோக்கியம் பெறுவார்’ ||104||

‘சௌ:’ (Sou:) எனும் பீஜத்தைச் சேர்த்து, ‘சௌ: நமஸ்தே கார்த்தவீர்யாய’ என்று உச்சரித்து வந்தால் ஒருவருக்கு துயரத்தை உண்டாக்கும் சக்தியை பெறலாம் (‘க்ஷோப’ (Kshobha) என்பதையே ‘சௌ’ என்பதாக உச்சரிக்கும்போது அந்த சொல்லுக்குத் தமிழில் அசைவு, கலக்கம், பரபரப்பு, குழப்பம், அல்லது தொந்தரவு என்று பொருள்); ‘க்லீம்’ (Kleem) எனும் பீஜத்தைச் சேர்த்து, ‘க்லீம் நமஸ்தே கார்த்தவீர்யாய’ என்று உச்சரித்து வந்தால் பிறரைத் தன் கைப் பாவையாக ஆட்டிப் படைக்கலாம்; ‘ஹூம் ஃபட்’ (Huum Phat) எனும் பீஜத்தைச் சேர்த்து, ‘ஹூம் ஃபட் நமஸ்தே கார்த்தவீர்யாய’ என்று உச்சரித்து வந்தால் பேய் மற்றும் தீய ஆவிகளின் பிடியிலிருந்து விடுபடும் சக்தி கிடைக்கும் ||105||

எலும்பு நோய்கள், நீரிழிவு நோய் , சித்தப்பிரமை [கண் நோய்கள்], காய்ச்சல், பித்தம், தொழுநோய், காசநோய்; (சிலேத்துமம்) வாதம் (வாயு), அமிலத் தன்மை, கட்டிகள் (குல்மம், பித்தம், வாதம்) போன்ற நோய்கள், இடம், காலம் மற்றும் சூழ்நிலை போன்றவற்றால் ஏற்படுகின்றன ||106||

அனைத்து நோய்களுமே உடல், மனம் மற்றும் பிராரப்த கர்ம வினைகளினால் ஏற்படுபவை என்பதினால் ‘ஓம்’ (Aum) பீஜாட்சர மந்திரத்தைக் கொண்டு அவற்றின் தாக்கங்களை குறைத்துக் கொள்ளலாம்; ஆகவே ‘ஓம் நமஸ்தே கார்த்தவீர்யாய’ (Aum Namaste Kaartveeryaay) என்று ஜபம் செய்து வந்தால் பிறரால் ஏவப்பட்ட சாபங்களையும், தீய சக்திகளையும் அழித்து விடலாம்||107||

தனிமையான இடத்தில் அமர்ந்து கொண்டு, நெய் தீபம் ஏற்றி வைத்துக் கொண்டு, மேற் கூறிய மந்திரங்களை உச்சாடனம் செய்து வந்தால், அதன் விளைவாக ஏற்படும் ஒவ்வொன்றுக்கான பலனையும் நாமே அனுபவபூர்வமாக பார்க்க இயலுமாம்; ஒருவர் ஏதேனும் ஒரு பொருளைத் தொலைத்திருந்தாலோ, அல்லது பிறரிடம் பாதுகாப்பிற்காக ஒப்படைத்த அப் பொருள் காணாமல் போயிருந்தாலோ, அதனை மீண்டும் பெற மந்திரம் உள்ளது ||108||

ஆயிரம் கரங்களைக் கொண்டவரும், ஸ்ரீமத் தத்தரின் மாபெரும் பக்தருமான கார்த்தவீர்யனின் மந்திரமான ‘கார்த்தவீர்ய அர்ஜுனா’ (Kaartveerya Arjuna)’ என்பதை உள்ளடக்கிய சமிஸ்கிருத ஸ்லோகமான ‘கார்த்தவீர்யார்ஜுனோ நாம ராஜபாஹுசஹஸ்ரவான், தஸ்மை ஸ்மரணமாத்ரேண கதம் நஷ்டம் ச லப்யதே’ என்பதை மனப்பூர்வமாக ஜபித்தபடி , தியானம் செய்து வந்தால் ஒருவர் தாம் தொலைத்த அல்லது தவற விட்ட பொருட்களை மீண்டும் அடைய முடியும்||109||

|| இத்துடன், பி. தெம்பே மகாராஜ் (P. Tembe Maharaj) அவர்களால் இயற்றப்பட்ட இந் நூலின் ஆறாவது அத்தியாயம் நிறைவு பெறுகிறது ||
இது கடவுள் தத்தாத்ரேயரின் திருவடிகளில் பணிவுடன் சமர்பிக்கப்படுகிறது.
OVI* பாடல்களின் விளக்க உரை: 109
முதலாவது அத்தியாயம் முதல் ஆறாம் அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
109 + 540 = 649

……இதோடு  பாகம் -2, அத்தியாயம் -6 முடிவடைந்தது
அத்தியாயம் -7 தொடர்கின்றது