COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் – 6 : தெய்வ அவதாரங்கள்
அத்தியாயம் 19
பரசுராம அவதாரம்; அன்னை ரேணுகா மரணம்: புனர் ஜென்மம்
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
குரு வேத தர்மா தன் சீடன் தீபக்கிடம் தொடர்ந்து கூறினார் ‘தெய்வமான சங்கரன் சத்யாவதியின் இல்லத்தில் அவதாரம் எடுத்தபோது, அவருடைய பத்தினியான அன்னை உமாவும் பூமிக்கு வரத் தீர்மானித்து, ரேணு என்ற மன்னரின் மகளாக அவதரித்தாள்||1||
புண்ணியங்களின் இருப்பிடமாகவும், ‘ரேணுகா’ எனும் திருப் பெயர் கொண்டவளாகவும் திகழ்ந்த அந்தப் புனித இளவரசி, இறைவன் சிவனைத் தவிர வேறு யாரையும் தியானித்ததில்லை; இத்தகைய உண்மைகளை அறிந்த ஜமதக்னி முனிவர், அவளுடைய திருப் பாதங்களை போற்றி வணங்கத் தொடங்கினார் ||2||
முனிவரின் இந்தத் தீர்மானத்தை அறிந்த ரேணு மன்னர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்; அவர் ஜமதக்னி முனிவரைத் தன் அரண்மனைக்கு அழைத்து, உரிய மரியாதையுடன் தன் மகளை அந்தச் சிறந்த முனிவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்||3||
அன்னை ரேணுகா வேறு யாருமல்ல, அவளே அன்னை பார்வதி ஆவாள்; ஜமதக்னி முனிவரின் கையைப் பற்றிக் கொண்ட அவள், மிகுந்த பரவசத்துடனும் மகிழ்ச்சியுடனும், அவருக்குச் சிறந்த முறையில் பணிவிடை செய்யத் தொடங்கினாள்||4||
அதன்பின்னர் அந்த முனிவர் ஒரு ஆசிரமத்தை அமைத்து, இருவரும் காட்டின் நடுவே அமைந்திருந்த ஒரு ரம்யமான இடத்தில் வசிக்கத் தொடங்கினர்; அவர் அக்னி ஹோத்ர* யாகத் தீயைப் பேணி வளர்த்து, தனது தவ வாழ்வைத் தொடங்கினார்.
{*அக்னி ஹோத்ரம் (Agnihotra) என்பது சூரிய உதயத்தின் போதும், அஸ்தமனத்தின் போதும் ஒரு செம்பு பாத்திரத்தில், பசுவின் சாணம் மற்றும் நெய்யை கொண்டு செய்யப்படும் எளிய வேத கால சிறு வேள்வியாகும்; இந்த ஹோமத்தை யார் வேண்டுமானாலும் தங்கள் வீட்டில் எளிமையாக செய்ய முடியும்} ||5||
ஒரு சிறந்த பத்தினியாகத் திகழ்ந்த அன்னை ரேணுகா, தன் மனதின் அனைத்துச் சிந்தனைகளையும் தன் தெய்வமான கணவரிடம் ஒரு முகப்படுத்தி, எப்போதும் அவருக்கு மிகவும் பொருத்தமான வகையிலேயே நடந்து கொண்டாள்; மேலும், அவருடைய மேன்மையை உணர்ந்து அடிக்கடி பணிவுடன் தலை வணங்கினாள்||6||
காலப் போக்கில் அவள் ஐந்து புதல்வர்களைப் பெற்றெடுத்தாள்; அவர்கள் அனைவரும் மிகுந்த புனிதத் தன்மை வாய்ந்தவர்களாகவும், எங்கு சென்றாலும் மக்களால் போற்றப்பட்டு வணங்கப்படுபவர்களாகவும் திகழ்ந்தனர்; மேலும், அவர்கள் அனைவரும் தங்கள் தந்தையான ஜமதக்னி முனிவரிடம் மிகுந்த பக்தி கொண்டவர்களாக விளங்கினர் ||7||
முதல் மகன் வசுமந்தன், இரண்டாவது மகன் வசு, மூன்றாவது மகன் சுஷேனன் மற்றும் நான்காவது மகன் விஸ்வவசு; இவர்கள் அனைவரும் அறநெறி வழுவாமல் வாழ்ந்தனர்; மேலும் இவர்கள் அனைவரும் வேத சாஸ்திரங்களில் வல்லமை பெற்றிருந்தனர் ||8||
இப்போது இறைவன் இப்பூவுலகில் அவதரிப்பதற்கான காலம் கனிந்தது; அரசன் அர்ஜுனனைக் கட்டுப்படுத்துவதற்காகத் தேவர்கள் எவருடைய உதவியை நாடியிருந்தார்களோ, அந்தச் சுயம்புவான பரமாத்மன் —பக்தர்களுக்குத் தனிப் பெரும் துணையாக விளங்குபவர்—ஒரு மங்கலமான நாளில், இந்தப் புண்ணிய இல்லத்தில் வந்து அவதரித்தார் ||9||
உள்ளூர் வழக்கப்படி வைசாக மாதத்தின் வளர்பிறை மூன்றாம் நாளில், நண்பகல் வேளையில், பஞ்சாங்கத்தின்படி ‘சிம்ம லக்னம்’ அமைந்திருந்த அந்தச் சுபவேளையில் இந்த அகிலம் முழுமைக்கும் ஆதாரமாகத் திகழும் இறைவன் ஹ்ருஷிகேசன், அந்தப் பக்தத் தம்பதியரின் ஐந்தாவது மகனாக அவதரித்து ‘பார்கவ-ராமன்’ என்று திருநாமம் சூட்டப் பெற்றார் ||10||
பிருகு முனிவரின் திருவுள்ளப்படி அமைந்த நிபந்தனைகளுக்கேற்ப, இந்த அவதாரம் ஒரு மாபெரும் போர் வீரனாகத் திகழ்ந்து, கையில் கோடரியைத் தாங்கியது; இவர் வேத சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்ததுடன், பிரம்மச்சரிய விரதத்தை மேற் கொண்டு வாழவும் தீர்மானித்தார் ||11||
இவர் கடும் தவத்தை மேற்கொண்டார்; அதன் வாயிலாகத் தன் தந்தையின் விருப்பங்களையும், சிவபெருமானின் அருளையும் ஒருங்கே பெற்றார்; மேலும், இவர் வில் வித்தை குறித்த ‘தனுர்வேத’ நூலையும் கற்றுத் தேர்ந்து, பல்வேறு ஆயுதங்கள், அஸ்திரங்கள் மற்றும் போர்க் கலை ஆகியவற்றில் நிகரற்ற வல்லமை பெற்றார் ||12||
சிவபெருமானின் அனுமதியைப் பெற்றதும், இவர் தன் பெற்றோரிடம் திரும்பினார்; மீண்டும் மிகுந்த அன்புடனும் பக்தியுடனும் அவர்களுக்குச் சேவை செய்யத் தொடங்கினார்; மேலும், தன் பெற்றோரின் முன்னிலையில் எப்போதும் பணிவுடனே நடந்து கொண்டார் ||13||
இயல்பிலேயே மிகுந்த அறநெறி பூண்டவராகவும், தன் புனிதப் பெற்றோர்களுக்கு உண்மையான சேவகனாகவும் திகழ்ந்த இவர், வெகு விரைவில் மற்ற உயரிய முனிவர்கள் மத்தியிலும் நன் மதிப்பைப் பெற்றார்; மேலும், இவருடைய பகுத்தறியும் ஞானம் நாளுக்கு நாள் விவேக உணர்வு மலர்ந்து பெருகியது ||14||
சாட்சாத் நாராயணப் பெருமானின் அவதாரமான அவரே, ஒரு பக்தி மிக்க மகனின் பாத்திரத்தை ஏற்றுக் கொண்டார்; தன் பெற்றோரின் ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றுவதையே இவர் பெரிதும் விரும்பினார்; ஏனெனில், தன் பெற்றோராகத் தோற்றமளிப்பவர்கள் உண்மையில் சிவபெருமானும் பார்வதி தேவியுமே என்பதை உணர்ந்திருந்தவர் ||15||
தினமும் இவர் காட்டிற்குச் சென்று, யாக குண்டத்திற்கு தேவையான மலர்கள், பலன்கள் மற்றும் சமித்துகளை (விறகுத் துண்டுகளை) பொறுக்கி கொண்டு வருவார். இவர் எப்போதும் தன் பெற்றோர்கள் எளிதில் அவரை அணுகக் கூடிய நிலையிலேயே நடமாடிக் கொண்டு இருந்தார் ; மேலும், அவர்கள் இட்ட கட்டளைகளில் எதையும் இவர் ஒருபோதும் மீறியதே இல்லை ||16||
பக்தியுள்ள ஜமதக்னி முனிவர், அத்தகைய குடும்பத்தையும் பக்தியுள்ள மகனையும் அடைந்ததில் அதிர்ஷ்டசாலியாக இருந்தார், நான்கு மூத்த மகன்களும் அருகிலேயே தனித் தனியாக வாழ்ந்தனர்; அதே நேரத்தில் அக்னிஹோத்ர அக்னி சடங்கையும் கடைப் பிடித்தனர் ||17||
ஒரு நாள் அன்னை ரேணுகா, அருகில் இருந்த ஆற்றில் தனியாக நீராடச் சென்றார், அவரது எண்ணங்கள் தன் தலைவரான கணவரைப் பற்றியே இருந்தன||18||
ஆனால் அந்த ஒரு குறிப்பிட்ட நாளில், பல பெண்களுடன் கூடிய ஒரு கந்தர்வ தேவன் அங்கே வந்திருந்தான்; யானையைப் போன்ற வலிமை கொண்டவனாய், நீருக்குள் களித்து விளையாடிக் கொண்டிருந்த அவர்களை அவள் கண்ணுற்றாள் ||19||
அந்தப் பெண்கள் அனைவரும் மென்மையான தோற்றம் கொண்டவர்களாய், சிறந்த ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்திருந்தனர்; எவ்வித பயமும் இன்றி அவர்கள் அந்த நீரில் விளையாடிக் கொண்டிருந்தனர்; அவர்கள் அனைவரும் மோகத்தின் களிப்பில் திளைத்திருப்பதைப் போலவே தோன்றியது ||20||
நறுமண மலர்கள் தங்கள் வாசனையைப் பரப்பி, அந்தச் சூழல் முழுவதையும் இனிமையாகவும் இதமாகவும் மாற்றின; தேனீக்களும் கூட அந்த மலர்களால் ஈர்க்கப்பட்டு, அந்த விளையாட்டுக் கூட்டத்தைச் சுற்றி ரீங்காரமிடத் தொடங்கின||21||
அந்த மலர்களைத் தங்கள் கூந்தலிலும் பிற இடங்களிலும் சூட்டிக் கொண்டு, அவர்களின் உடலழகு பல்வேறு அலங்காரங்களால் மெருகூட்டப்பட்டிருந்தது; அவர்களின் அணிகலன்களில் ரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன; அந்த அணிகலன்களும் அவர்களின் மென்மையான உடலுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தன ||22||
அவர்கள் சந்தனத்தையும் கஸ்தூரியையும் பூசியிருந்தனர்; அவர்களின் நெற்றியில் மங்கலமான திலகம் அணிந்திருந்தனர்; அவர்களின் ஆடைகள் பளபளப்பாகவும் புதியனவாகவும் தோன்றின; அந்தத் தேவர்கள் தங்களுக்குள்ளேயே ஒரு விதமான சல்லாப கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை போலவேதான் காட்சியளித்தனர் ||23||
அவர்களின் அந்தக் களிப்பான விளையாட்டைக் கண்டதும், அன்னை ரேணுகா உள்ளம் பூரித்தாள்; வழக்கத்தை விட நீண்ட நேரம் அவள் அவர்களை உற்று நோக்கியபோது, ‘ஓ, இவர்கள் உண்மையான இன்பத்தில் திளைப்பவர்களைப் போலவே போல் தோன்றுகிறார்கள்’ என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் ||24||
விதியின் போக்கை யாராலும் ஊகிக்க இயலாது; அது மிகச் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களையும் மறதிக்கு ஆளாக்கி விடும்; உலகெங்கும் புகழ் பெற்ற, இந்தத் தூய கற்புக்கரசியான ஜமதக்னி முனிவரின் மனைவியின் வாழ்க்கையையே இதற்குச் ஒரு சாட்சியாக உள்ளது||25||
தன் ஆடையையே குடம் போல வைத்துக் கொண்டு அதில் நீரை கொண்டு வந்து, தன் இல்லத்திற்கு எடுத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவள் அவள்; முனிவரின் இருப்பிடமான ஆசிரமத்தை நோக்கி அவள் நடந்து வந்த அந்தப் பாதையில், அவள் சுமந்து வந்த நீரிலிருந்து ஒரு துளி கூட கீழே சிந்தியதே இல்லை ||26|| ‘
அவளுடைய கற்பின் தூய்மை அத்தகைய வல்லமை வாய்ந்ததாகத் திகழ்ந்தது; கனவில் கூடத் தன் கணவனைத் தவிர வேறு ஒரு ஆணின் முகத்தை நிமிர்ந்து பார்த்திராதவள் அவள்; அத்தகைய உயர்ந்த ஒழுக்கச் சீலரான அவள் ஆற்று நீரில் நடைபெற்ற அந்த விளையாட்டை பார்த்துக் கொண்டு அவற்றை ரசித்துக் கொண்டு இருந்த காரணத்தினால், அந்த ஒரு கணத்தில் தற்காலிகமாக தன்னை மறந்து விட்டாள்||27||
அதன் விளைவாக, அவளுடைய கற்பின் தூய்மையில் ஒரு சின்ன கரை ஏற்பட்டது; அந்த உண்மையை அவள் உணர்ந்த கணமே, அவளுக்குள் பெரும் அச்சம் தோன்றியது; அப்போது அவள் தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் ‘ஓ இறைவா, இன்று நான் எதைக் பார்த்து விட்டேன் ? அவர்கள் விளையாடுவதைக் கண்டபோது, என் கண்கள் ஏன் தானாகவே மூடிக் கொள்ளவில்லை?||28||
இப்போது ஞானியான என் கணவர் என்னைத் தள்ளி வைத்து விடுவார் என்பதில் சந்தேகமே இல்லை; அப்படியாயின் என் நிலை என்னவாகும்? இவ்வுலகிலோ அல்லது மேலுலகிலோ, என்னால் என் கணவர் முன்னாள் தலை நிமிர்ந்து நிற்க இயலாதே||29||
இந்த தீய விதிக்கு என்மீது ஏன் இவ்வளவு வன்மம்? ஏன் என்னை இழிவான ஒன்றைக் காணும்படித் தூண்டியது? ஓ தெய்வமே, ஓ சர்வ வல்லமை படைத்த தலைவா, ஓ ஹரனே, ஓ ஹரனே, என் ஞானக் கணவர் சினத்திற்கு நான் ஆளாகி விடாமல் நீதான் என்னை காத்தருள வேண்டும்’ ||30||
இவ்வாறு எண்ணிக் கொண்டே அச்சத்தால் நடுங்கியபடி, தலையில் நீர் சுமந்தவாறு, ரேணு மன்னனின் மகளான அவள் தன் இருப்பிடத்திற்குத் திரும்பினாள்||31||
அவள் வாயிலுக்குள் நுழைய முற்பட்டபோது, அங்கே ஜமதக்னி முனிவர் மிகவும் உக்கிரமான தோற்றத்துடன் காத்திருப்பதைக் கண்டாள்; நடந்தவை அனைத்தையும் அவர் முன்பே அறிந்தவர் போலவும், தன் மனைவியைக் பார்ப்பதற்காக காத்துக் கொண்டு இருந்தவர் போலவும் தோன்றியது||32||
ஜமதக்னி முனிவர் இவ்வாறு கூறினார் ‘இவள் தன் மனவுறுதியையும் பொறுமையையும் இழந்து நிலை தடுமாறி விட்டாள்; அதனால், இவள் உள்ளத்தில் பிரதிபலித்திருந்த ‘பரமாத்மனை அறியும் திறன் (செல்வம்) இவளை விட்டு நீங்கி விட்டது; இப்போது இவள் ஆதரவற்றவளாகவும், ஆன்மீகச் செல்வமற்றவளாகவும் இருக்கின்றாள்||33||
ஜமதக்னி முனிவர் கடும் சினமுற்று, பல இழிவான சொற்களால் அவளைக் கடிந்து கொண்டார்; இறுதியாக அவர் ‘இந்தத் தூய ஆசிரமத்திற்குள் நுழையும் உரிமையை நீ இழந்து விட்டாய்; இனி உன் முகத்தை எனக்குக் காட்டாதே’ என்று கூறினார்||34||
நான் காட்டில் வாழும் ஒரு எளிய முனிவன் மட்டுமே; யாகத் தீயில் இருந்து கிடைக்கும் புனிதச் சாம்பலையே என் உடலெங்கும் பூசிக் கொள்கிறேன்; மிக எளிய ஆடைகளையே அணிந்து கொண்டு, நான் எப்போதும் ஒரு காட்டில் வாழும் துறவியாக இருப்பேன்||35||
இங்கே உனக்கு உணவாகக் கிடைத்ததெல்லாம் வேர்கள், பலன்கள் மற்றும் தளிர்கள் மட்டுமே; அவற்றுள் பெரும்பாலானவை சமைக்கப்படாத பச்சையானவையே உண்ண நேரிடும்; அதுவும் கூட, உரிய காலத்தில் கிடைக்கும்; பல சமயங்களில் நாம் பட்டினி கூட கிடக்க நேரிடும்||36||
‘சம்பகம், மல்லிகை, மகிழம்பூ, செவ்வந்தி போன்ற பலவிதமான மலர்கள் இங்கே பூப்பதில்லை; கனவிலாவது அவற்றை ஒரு முறை கண்டு ரசிக்கலாம் என்ற எண்ணம் கூட உனக்குத் தோன்றாது; இதன் காரணமாக, நீ மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகி விடக் கூடும் ||37||
அரண்மனைகளில் இருப்பதைப் போன்ற வசதியான படுக்கைகளோ, மெத்தைகளோ, தலையணைகளோ இங்கே கிடையாது; நாங்கள் பாறைகளின் மீதோ அல்லது குகைகளுக்குள்ளோதான் உறங்குகிறோம்; இங்கே நறுமணப் பொருட்களோ, சுகந்தத் தைலங்களோ ஏதும் இல்லை; ஒரு ஆசிரம வாழ்க்கையில் இதைத் தவிர வேறு எதைத்தான் நீ எதிர்பார்க்க முடியும்?||38||
இங்கு வாழ்வது, நிச்சயமாக மெத்த கடினமானது ; ஏனெனில், பலி பீடங்களிலிருந்து புகை இடை விடாமல் எழும்பிக் கொண்டிருக்கும்போது, அதன் சூட்டினால் உனது கண்களிலிருந்து கண்ணீரும் இடை விடாமல் பெருகிக் கொண்டிருக்கிறது ||39||
இத்தகைய தேவையற்ற துயரத்தை நீ ஏன் தாங்கிக் கொள்ள வேண்டும்?; எந்த இடத்தில் நீ மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்க முடியும் என்று நினைக்கிறாயோ அவ்விடத்திற்கு நீ மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் செல்லலாம்; இங்கு நிகழ்ந்த அனைத்தையும் ஆழ்ந்து சிந்தித்து விட்டு, இங்கிருந்து விடை பெற்றுச் செல்வாயாக||40||
நீ உன் அரண்மனைக்குத் திரும்பியதும், மன்னர் உனக்குப் பிடித்தமான அறுசுவை உணவுகளைப் படைப்பார்; உன் கைகள் விலை மதிப்பற்ற ஆபரணங்களாலும் வளையல்களாலும் அலங்கரிக்கப்படும்; இனி ஆற்றங்கரையிலிருந்து நீர் சுமந்து வரும் வேலை உனக்கு இருக்காது||41||
ஆகவே, நீ உன் தந்தையுடன் தங்கியிருந்தால், சாத்தியமான அனைத்து இன்பங்களையும் மீண்டும் பெறுவாய்; களியாட்டங்கள் குறித்த உன் கற்பனைகள் அனைத்தும் நனவாகும்; இக் காடுகளில் உனக்கு என்ன வேலை இருக்கிறது? ||42||
எனவே, நீ வந்த வழியே திரும்பிச் செல்லலாம்; இந்த வாசற்படியைத் தாண்டி உள்ளே வராதே; இனி இங்கு உனக்கு என்னிடம் இடமில்லை; அங்கு சென்று நீ காண விரும்பும் ஒவ்வொரு பொருளையும் கண்டு மகிழ்வாயாக ||43||
ஆகவே, மனைவி என்பவள் மனைவியாகவே இருக்க வேண்டும்; கணவன் மனைவி என்பது தற்காலிக உறவல்ல; அது கணவன்-மனைவி இருவர் உள்ளத்திலிருந்தும் வெளிவரும் சுய-அன்பினாலேயே ஒருவருக்கொருவர் பாசம் கொள்கிறார்கள்; இதுவே சாஸ்திரங்கள் கூறும் உண்மையாகும் ||44||
நமக்கிடையிலான பிணைப்பு இன்று அறுந்து விட்டது ; உன் மனம் ஒரு முகப்படாமல் அலை பாய்கிறது; நீ என்னை விட்டு விலகி விட்டாய்; உன் மனம் இப்போது பல்வேறு நிலைகளில் சென்று விட்டது ||45||
இவ்விதம் தடுமாறும் எந்தவொரு பெண்ணையும், உடனடியாகத் தள்ளி வைக்க வேண்டும் என்பதாக இந்த விஷயத்தை அறிந்துள்ள ஞானிகள் அன்றே கூறியுள்ளனர்; அதை விட்டு வைத்தால் அது பேரழிவை விளைவிக்கும் ||46||
ஆகவே, நீ இங்கிருந்து விலகிச் செல்வதே சிறந்தது; உனக்கு உகந்த பாதையை நீயே தேர்ந்தெடுத்துக் கொள்; உனக்கு ஏற்றவர் என்று நீ கருதும் எவருக்கும் சென்று பணிவிடை செய்; நான் கூறும் இந்த வார்த்தைகளை உன் முழு உள்ளத்தோடு புரிந்து கொள் ||47||
ஒரு கணப் பொழுதேயான கவனக் குறைவு எத்தனை பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொண்ட ரேணுகாதேவி, ஒருபோதும் கூறக் கூடாத அத்தகைய கடுஞ் சொற்களைக் கேட்டதும் உடல் நடுங்கினாள்; தன் கணவராகிய அந்த முனிவரின் கம்பீரமான தோற்றத்தைக் கண்டதும் அவள் உள்ளுக்குள்ளேயே நடுங்கிப் போனாள்; அடுத்து என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நின்றாள்; அவள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள் ||48||
அவள் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது; அவள் வாய் வறண்டு போனது; அவள் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்தது; அவள் சுமந்து வந்த குடத்திலிருந்து வழிந்த நீரால் அவள் ஆடைகளும் நனைந்து போயின ||49||
அவள் ஏதேனும் பேச முயன்றாலும், வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வெளி வரவில்லை; அவளது கூர்மையான அறிவும் சிந்திக்கும் திறனும் தடுமாறி நின்று இருந்தன; உணர்ச்சி பெருக்கினால் அவளது குரல் அடைத்துப் போனது; அவளது உடலில் அணிந்திருந்த ஆடைகள் நழுவி விழுவது போன்றதொரு நிலையை அவள் அடைந்தாள் ||50||
அவள் நின்ற இடத்திலிருந்து ஒரு அடி கூட முன்னெடுத்து வைக்க இயலவில்லை; ஆழ்ந்த துயரம் அவளது உள்ளத்திற்குள் அவளை சுட்டெரித்தது; அவளால் மேலும் பொறுமை காக்க முடியவில்லை; அவளது அக மற்றும் வெளிப்புற அழகுகள் அனைத்தும் திடீரென அவளை விட்டு நீங்கி விட்டதைப் போல உணர்ந்தாள் ||51||
மரம் அல்லது கல்லால் செதுக்கப்பட்ட ஒரு சிலையைப் போல, அவள் நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றாள்; அவளால் கதவுகளைப் பார்க்க முடிந்ததே தவிர, அவற்றைச் சென்றடைய இயலவில்லை; எனவே, ஜமதக்னி முனிவர் மீண்டும் அவளை நோக்கிக் கூறினார் ||52||
‘; ஓ பிடிவாதம் பிடித்த பெண்ணே! நீ இப்போது இங்கிருந்து அகலாவிடில், உன் உயிரையே இழக்க நேரிடும்’ என்று அந்தச் சீற்றமிக்க முனிவர் கர்ஜித்தார்; ‘என் கோபத்தின் முழு வீரியத்தை நீ இன்னும் காணவில்லை; என் மனம் எவ்வித இரக்கமும் காட்டாது என்பதை நீ அறியாமல் இருக்கிறாய் போலும் ||53||
போ,இங்கிருந்து உடனே கிளம்பிச் செல்; என் கோபத்தை என்னால் அடக்கிக் கொள்ள இயலாது’ என்று அந்தச் சினமுற்ற முனிவர் கூறினார். ஆனால், அன்னை ரேணுகா தேவி ஏதோ ஒன்றைச் சிந்தித்துத் தன் பதிலைக் கூறத் தொடங்கினாள் ||54||
‘ஓ என் நாதனே, நான் ஒரே ஒரு முறை மட்டுமே என் கடமையை மறந்தேன்; நான் தவறிழைத்திருக்கலாம்; ஆயினும், என் கணவராகிய உமது திருவடிகளை விட்டு நான் ஒரு போதும் விலகி செல்ல மாட்டேன்; நீங்கள் என்னை எத்துணை துயரங்களுக்கு ஆளாக்கினாலும் சரி, அல்லது வேறு எவ்விதம் நடத்தினாலும் சரி, இந்த ஆசிரமத்தை விட்டு நான் ஒரு அடி கூடப் பின் வாங்கி செல்ல மாட்டேன் ||55||
என் கணவராகிய நீர் என்னை அடித்தால், என் பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும்; அதன் பிறகு எனக்கு எவ்விதத் தீங்கும் நேராது’ என்பதே அவள் தன் மனதிற்குள் உறுதியாகக் கொண்டிருந்த எண்ணமாகும் ||56||
முனிவர் அவளிடம் எத்தனை விதங்களில் எடுத்துரைத்தும், அவள் அங்கிருந்து செல்ல மறுத்து விட்டாள்; எனவே, அவர் தன் மூத்த மகனான வசுமந்தனை அழைத்தார்; அந்த முனிவர் அப்போது கடும் கோபத்தில் இருந்தார்||57||
தன் தந்தையின் குரலைக் கேட்டதும், வசுமந்தன் அங்கே விரைந்து வந்தான்; அப்போது, அந்த பெரும் கோபத்துடன் இருந்த முனிவர் அவனிடம் இவ்வாறு கூறினார்||58||
ஓ மகனே; உன் தாய் பெரும் பாவம் செய்துள்ளாள்; அதன் விளைவாக, நான் மிகுந்த மனத் துயருக்கு ஆளாகியுள்ளேன்; ஆகவே அவளது தலையை வெட்டி வீழ்த்து; கைகள் நடுங்காமல் எனது கட்டளையை நிறைவேற்று; சற்றும் தயங்காதே ||59||
தன் தந்தையின் அந்தக் கடுமையான கட்டளையைக் கேட்டதும், வசுமந்தன் விரைந்து சென்று அந்த முனிவர் பெருமானின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு வேண்டிக் கொண்டான்; தந்தையே தயவு செய்து உமது கோபத்தை அடக்கிக் கொள்ளுங்கள்; அளவற்ற சினம் ஒருபோதும் நன்மை பயக்காது ||60||
புனிதமான அன்னையை விடச் சிறந்த தெய்வம் வேறெதுவும் இல்லை; இவ்வாறே சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளது; எனவே, நான் என் அன்னையை கொன்று விட்டால், நான் நிச்சயம் பெரும் பாவத்தை செய்தவன் ஆகி விடுவேன்||61||
தன் மூத்த மகனின் அறிவுரையைக் கேட்டதும்,ஜமதக்னி முனிவர் இன்னமும் கோபம் அடைந்து இவ்வாறு எண்ணினார் ‘இவனுக்கு அகம்பாவமும் ஆணவமும் ஏற்பட்டு விட்டது; நீதி என்றால் என்னவென்று இவன் எனக்கு பாடம் எடுக்கிறான் ||62||
ஒரு மகன் தந்தையின் மீது உண்மையான பக்தி கொண்டவனாக இருந்தால், அவனது நடத்தை தந்தையின் அறநெறி சார்ந்த கட்டளைகளுக்கு இணங்கி இருக்க வேண்டும்; ஆனால் இங்கு ஏதோ ஒரு காரணத்தினால், என் கட்டளையை மீற நினைக்கின்றான்; எனவே, இவனை நான் முதலில் எரித்து சாம்பலாக்கி விடுகின்றேன்’ என்று அந்த முனிவர் உறுதி கொண்டார் ||63||
ஆகவே, அவனை நோக்கி அந்த முனிவர் இன்னும் அதிக கோபம் கொண்டு சாபமிட்டார் ‘ நீ சாம்பலாகிப் போ’; அவ்வாறு கூறிய பின்னர் அந்த முனிவர் அவனை கோபத்துடன் பார்த்துக் கொண்டே நின்றார் ||64||
அடுத்த கணமே அவன் சாம்பலாகிப் போனான்; பின்னர் அவர் தன் அடுத்த மகனான வசுவை அழைத்து, அவனுக்கு கட்டளையிட்டார்; ‘மகனே எந்த விதமான தயக்கமும் இன்றி உடனே உன் தாயின் தலையை வெட்டி வீழ்த்து||65||
மகன் வசுவும் தனது மூத்த சகோதரனைப் போலவே வேண்டிக் கொண்டான் ‘தந்தையே ஒரு தாயின் பாசம் தந்தையின் பாசத்தை விட நூறு மடங்கு மேலானது என்று சொல்லப்படுகிறது; சாஸ்திரங்களிலும் அவ்வாறே போதிக்கப்பட்டுள்ளது; அத்தகைய அற நெறிகளை நான் எவ்வாறு மீற முடியும்||66||
அந்த அறிவுரையைக் கேட்டதும், முனிவர் ஜமதக்னி மேலும் சினமுற்றார்; அவர் வசுவை நோக்கி ‘நீயும் எரிந்து சாம்பலாகிப் போவாய்; உன் மூத்த சகோதரனின் கதியையே நீயும் அடைவாய்’ என்று சபித்தார்||67||
அந்தச் சொற்களைக் கேட்ட அடுத்த கணமே வாசுவும் சாம்பலாகிப் போனான்; அதே போல முனிவரின் மற்ற மகனான விஸ்வவசுவும், சுஷேனனும் அழைக்கப்பட்டு அவ்வாறே கட்டளை இடைப்பட்ட அவர்களும் மறுத்து விட அந்த முனிவர் அவர்கள் இருவரையும் கூட எரித்துச் சாம்பலாக்கினார்; அந்த நால்வரின் சாம்பலும் ஒரு மேடாகியது ||68||
தம் நான்கு புதல்வர்களையும் இழந்தபோதிலும், அந்த முனிவரின் மனம் துயரம் அடையவில்லை; மாறாக பரசுராமன் ஏன் இன்னும் காட்டிலிருந்து திரும்பவில்லை? என்று அவர் வியப்புடன் சிந்தித்தார்||69||
அவர் சிந்தனை செய்து கொண்டிருந்த நேரத்தில் காய்ந்த விறகுத் துண்டுகளையும் புற்களையும் கையில் ஏந்தியவாறு, தம் கோடரியுடன் தெய்வமான பரசுராமர் அங்கு நுழைந்தார்; தந்தையிடம் மிகுந்த பக்தி கொண்ட அவர், நால்வரிலும் இளையவர் என்பதால், முனிவருக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார்||70||
அப்போது முனிவர் அவரை நோக்கி ‘ராமா’ இவள் உன் தாய்; இவள் மிகக் பெரியதொரு பாவத்தை செய்து விட்டாள்; இவளது தலையை வெட்டி வீழ்த்து; உன்னுடைய மூத்த சகோதரர்கள் எவரும் என் கட்டளைக்கு செவி சாய்க்கவில்லை’ ||71||
ஆகவே, நான் அவர்களைச் சபித்து எரித்து விட்டேன்; அங்கே சாம்பலாகக் கிடப்பவர்கள் உன் சகோதரர்களே; உன் தந்தையின் மீது நீ கொண்டுள்ள அளவற்ற அன்பை நான் நன்கு அறிவேன்; எனவே, நான் இப்போது கூறப் போவதை கவனமாகக் கேட்பாயாக ||72||
இந்தக் கோடரியை எடுத்துக் கொள்; இவளது தலையை வெட்டி வீழ்த்தி என் மனதை அமைதிப்படுத்துவாயாக; அவ்வாறு செய்வதன் மூலமே, எனக்குத் தேவையான மனத் தெளிவும் நிம்மதியும் கிட்டும்||73||
தம் தந்தையின் சொற்களைச் கேட்டதும், பரசுராமர் தம் கையில் இருந்த கோடரியுடன், தந்தை இட்ட கட்டளையைச் சிறிதும் தயங்காமல் நிறைவேற்றினார்; அவருக்கு இடப்பட்ட அந்த மிகக் கொடுமையான கடமையிலிருந்து அவரது மனம் ஒருபோதும் சற்றும் விலகவில்லை ||74||
எத்தகைய மனவுறுதி அவருக்கு இருந்திருக்க வேண்டும்; அவரது இதயம் கல்லையோ அல்லது உலோகத்தையோ போலக் கடினமானதாக இருந்ததோ? தம் தாயின் தலையை வெட்டி வீழ்த்துமாறு கட்டளையிடப்பட்டபோது, அவர் எவ்வித சலனமும், இரக்கமும் இன்றி தந்தையின் கட்டளையை முழுமையாக நிறைவேற்றினார்||75||
ஆகவே, வெகு விரைவில் பூவுலகிலிருந்து போரிடும் இயல்புடைய ஷத்ரிய குலங்கள் அனைத்தையும் அவர் வேரறுப்பார் என்பதில் எவ்வித வியப்பும் இல்லை; தம் சொந்தத் தாயையே வெட்டி வீழ்த்தும் துணிவு கொண்ட ஒருவரின், அசைக்க முடியாத மனவுறுதியையும் பொறுமையையும் நாம் எப்படிக் கேள்விக்குள்ளாக்க முடியும்? ||76||
அவர் தம் தாயின் தலையை வெட்டி வீழ்த்த, ஒரு கணப் பொழுதை விட அதிக நேரம் தேவைப்படவில்லை; வெட்டப்பட்ட தலை தரையில் வீழ்ந்து, அது விழுந்த இடத்திலேயே நிலைத்து நின்றது ||77||
தலை உடலிலிருந்து துண்டிக்கப்பட்டதும், இரத்தம் எங்கும் பீறிட்டுப் பாய்ந்தது; தாம் செய்து முடித்த அந்தச் செயலை அவர் கண்ட போதும் கூட, உணர்ச்சிப் பெருக்கால் அவரது தொண்டை அடைத்துப் போகவோ, கலங்கி நிற்கவோ இல்லை ||78||
அவரது அந்த வியக்கத்தக்க செயலையும், தந்தையிடம் அவர் கொண்டிருந்த அளவற்ற பக்திப் பெருக்கையும் நேரில் கண்ட அந்த முனிவர், இவ்வாறு நினைத்தார் ‘இவன் ஒரு கோழை அல்லன்; ஒரு சிறந்த ஆரிய வீரன் தன் கடமையை எவ்விதம் நிறைவேற்றுவானோ, அவ்விதமே இவனும் செயல்பட்டுள்ளான்’ ||79||
அதன்பின் சாந்தம் அடைந்த அந்த முனிவர் பரசுராமனை தழுவிக் கொண்டு ‘நல்ல காரியத்தை செய்துள்ளாய் ; உன் தந்தையின் விருப்பங்களை நிறைவேற்றி விட்டாய்; உன் தந்தையின் சொற்கள் மீது நீ முழு நம்பிக்கை கொண்டிருக்கிறாய்’ என்று கூறினார் ||80||
உன் தாயின் மீது வைத்து இருந்த பாசம், உன் கடமையை செய்வதில் இருந்து உன்னைத் தடுக்கவில்லை; நீ புண்ணியம் அல்லது பாவம் பற்றி சற்றும் சிந்திக்கவில்லை; இதன் விளைவாக நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்; உன் புனிதத்தன்மை மூன்று உலகங்களிலும் அறியப்படும் ||81||
நான் உண்மையாகவே மகிழ்ந்திருக்கிறேன்; உனக்கு வேண்டிய வரங்களை அளிக்க விரும்புகிறேன்’; அந்தச் சொற்களைக் கேட்ட இராமன், பணிவுடன் வணங்கிப் பின்வருமாறு வேண்டினான் ||82||
‘தந்தையே, என் தாயை மீண்டும் உயிர் பிழைக்க வைக்க வேண்டும்; என் நான்கு மூத்த சகோதரர்களையும் உயிர் பிழைக்க வைத்து இளமையை தர வேண்டும்; நான் என்றும் நிலைத்திருப்பவனாகவும், வெற்றியாளனாகவும் திகழ வேண்டும்; இன்று இங்கு நிகழ்ந்தவற்றை எவரும் நினைவு வரக் கூடாது||83||
நான் எப்போதும் வெற்றி பெற வேண்டும்; என்ன செய்வது என்று அறியாமல் நான் ஒருபோதும் திகைக்கச் கூடாது; வெல்லப்பட முடியாதவர்களில் ஒருவனாக நான் திகழ வேண்டும்; மேலும் நான் நீண்ட ஆயுளைப் பெற்றிருக்க வேண்டும் ||84||
முனிவர் ‘அப்படியே ஆகட்டும்’ என்று பரசுராமர் விரும்பி கேட்ட வரங்களைக் கொடுத்ததும் மேலும் கூறினார் ‘நீ என்றும் நிலைத்திருப்பவனாகவும், மகிழ்ச்சியுடனும் வாழ்பவனாகவும் இருப்பாய்; கலியுகத்தின் தீய தாக்கங்கள் உன்னை ஒருபோதும் எவ்விதத்திலும் பாதிக்காது ||85||
பரசுராமன் தன் தாயின் தலையை, தலையற்ற உடலின் அருகே வைத்ததும், அவள் உடனடியாக உயிர் பிழைத்து எழுந்தாள்; அதேபோல அவனது நான்கு மூத்த சகோதரர்களும் உயிர் பிழைத்து எழுந்தார்கள்; அந்தச் சூழல் முழுவதும் மகிழ்ச்சியும் பரவசமும் நிறைந்திருந்தது ||86||
தன் தாய் உயிர் பிழைத்து எழுந்ததை கண்ட பரசுராமன், அந்தப் புனிதத் தாயின் பாதங்களைப் பற்றிக் கொண்டார்; அவள் பரசுராமர் மீது தான் கொண்டிருந்த அன்பின் காரணமாக, அன்னை ரேணுகாதேவி அவரைத் தழுவிக் கொண்டாள்; மேலும் அவருக்கு ஆசியும் வழங்கினாள் ||87||
அச்சமயத்தில் அன்னை ரேணுகாதேவி கூறினாள் ‘ ஓ பரசுராமா; நீ இன்று என் மீது மெய்யாகவே பெருமளவிலான அன்பை வைத்து உள்ளாய் என்பது தெரிகின்றது; இனி உன் உள்ளத்தில் எவ்விதத் துயரமும் கொள்ளாதே’ ||88||
கற்பு நெறி தவறாத பத்தினிப் பெண்களுக்குரிய விரதங்களை அனுசரிப்பவர்கள், இந்த நிகழ்வை தங்கள் மனதின் ஆழத்தில் பதித்துக் கொள்ள வேண்டும்; தங்கள் கண்களும் எண்ணங்களும் நெறி தவறி அலை பாய்ந்தால், இத்தகைய துயரமான நிலையையே தாங்களும் சந்திக்க நேரிடும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் ||89||
உணர்ச்சி பூர்வமான காம இச்சைகளுக்கு இகழ்ச்சி உண்டாகட்டும்; துறவிகள் என்று தங்களை எண்ணிக் கொண்டிருக்கும் நம்மை, இச்சைகள் எவ்வளவு விரைவாக படு குழியில் தள்ளி விடுகின்றன?; இந்த உலக இருப்பின் மீது உனது ஆதிக்கம் எவ்வளவு பரந்து விரிந்திருக்கிறது; ஓ மனமே, நீ சற்று அமைதியடைவாயாக ||90||
காமம் எப்போதுமே விளையாட்டுத்தனமான குறும்புத்தனம் கொண்டது; மாபெரும் மனிதர்களால் கூட அதன் தாக்குதலை அடக்க முடியவில்லை; எந்தவொரு கண்ணியமானவர்களும் மூன்று உலகங்களையும் கொடூரமாகத் துன்புறுத்தும் தமது காமத்தை ஒழிக்கட்டும்||91||
அடங்காத காமம், அது ஏன் உணர்வுள்ள புலன்களில் தங்க அனுமதிக்கப் படுகிறது?; இப்போது அதன் சாராம்சத்தையும், சாரமற்றதையும் பற்றி சிந்தியுங்கள், சிந்தித்து முடிவு செய்யுங்கள்||92||
உமது மனம் ஏன் காமத்திற்கு அடி பணியவில்லை, நீர் தொடர்ந்து அதை அடக்கி வந்தால், பேரானந்தம் என்பது வெகு தூரம் சென்று விடும்; நீர் அற்ப ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபடும் போது, பேரானந்த நிலை உங்கள் அருகில் வரும்||93||
ஒருவேளை உம்மால் என்னை இதிலிருந்து விடுவிக்க முடியா விட்டால், குறைந்தபட்சம் இவ்வளவாவது செய்யுங்கள்; என் கணவரின் புனித பாதங்கள் தெய்வத்திடம் இருந்து வேறுபடாதவை என்று அறிந்து கொண்டு நான் சேவை செய்யட்டும், ஆசையோ காமமோ அவசியமானால், அதை எனது கணவரின் பாதங்களில் மட்டுமே நான் வைத்துக் கொண்டிருக்கும் இருக்கும் மன நிலை வேண்டும் ||94||
அதன்பிறகு தானாகவே மற்ற எல்லா அத்தியாவசியமற்ற ஆசைகளிலிருந்தும் நீ விடுபடுவாய்; நீயும் ஆத்மாவில் திளைக்க முடியும், இதைத் தவிர வேறு எங்கும் உனக்கு ஓய்வு கிடைக்காது, ஏனெனில் உன் இருப்பிடமும் நித்தியமானது ||95||
இவ்வாறு அவள் தனது உணர்வு பூர்வமான புலன்களை உள்ளிழுத்துக் கொள்ளவும், மீண்டும் அவற்றை அடக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தவளாகவும் ஆக்கப்பட்டாள்; அன்னை ரேணுகா தேவி இரவும் பகலும் தெய்வீக சமநிலையுடன் இருந்த ஜமதக்னி முனிவருக்கு சேவை செய்யத் தொடங்கினாள் ||96||
அவள் அவருடைய பாதங்களைப் பற்றிக்கொண்டு கூறினாள் ‘நான் பாவம் செய்தவள்; ஏனெனில், காமச் செயல்களைக் காண்பதன் மூலமாகவே, எப்படி காமம் என் உள்ளத்தில் புகுந்து விட்டது என்பது தெரியவில்லை ||97|
எத்தனை பெரிய அளவிலான பேரழிவு நிகழ்ந்தது; அதை எப்படியோ தாங்களே தணித்தீர்கள்; நாங்கள் பிராயச்சித்தம் செய்து கொள்ள ஓர் அழகிய வழியை அருளியுள்ளீர்கள்; என் உயிர் இந்த உடலை விட்டு நீங்கும் காலம் வரை, இது நிச்சயமாக என் பாவங்களை அகற்றி விடும் ||98||
நடந்தவை அனைத்தும் உங்களது கோபத்தினால் விளைந்தவை அல்ல; என் உள்ளத்தில் நான் அடைந்துள்ள துயரமும் வருத்தமும் மிக ஆழமானவை; என் பாவங்கள் அனைத்தும் இப்போது நீங்கி விட்டன; என்னை விட்டு அனைத்து பாபங்களும் விலகி விட்டன என்றே நினைக்கின்றேன் ||99||
உங்களைத் தவிர வேறு யார் இத்துணை இரக்கம் காட்டி இருக்க முடியும்; இவ்வுலகில் உள்ள அனைத்தையும் நிலை நிறுத்திப் பாதுகாப்பவர் நீரே; அனைவரையும் மிகச் சிறந்த முறையில் காத்தருளியவரும் நீரே ||100||
அறம் சார்ந்த அறிவுரைகள், மூடர்களுக்குச் சினத்தையே ஊட்டுகின்றன; தொடக்கத்தில் நஞ்சு போலத் தோன்றும் அவை , இறுதியில் அமுதமாக மாறி விடக்கூடும் ||101||
இன்று நீங்கள் எனக்குப் பேருதவி செய்துள்ளீர்கள்; என்னை மீண்டும் நற்பண்புகளின் பாதையில் பயணிக்க வைத்து உள்ளீர்கள்; நான் எத்தனை பிறவிகள் எடுத்தாலும், அப் பிறவிகள் அனைத்திலும் உங்கள் திருவடிகளைக் மட்டுமே சேவை செய்து கொண்டிருக்க அருளுங்கள்||102||
நாங்கள் கற்புடைய மனைவியர்; எங்கள் கணவர்களை தவிர வேறு யார் எங்களை மேன்மை அடையச் செய்ய வைக்க முடியும்?; இதுவே எங்கள் உள்ளத்தின் உறுதியான சங்கல்பம் ஆகும் ; அனைத்து உலகங்களிலும் என்னை காப்பாற்றுபவர் நீங்கலாக மட்டுமே இருக்க வேண்டும் ||103||
அத்தகைய வேண்டுகோளைக் கேட்டதும், ஜமதக்னி முனிவர் பெரிதும் மகிழ்ந்தார்; ஆனந்தத்துடன் இவ்வாறு கூறினார் ‘உன் மனம் உண்மையில் தூய்மையானது||104||
அதன்பின், அன்னை ரேணுகாதேவி ஜமதக்னி முனிவருடன் என்றும் அன்புடன், மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாள்; தன் கணவருக்கும் இறைவனுக்கும் இடையே வேற்றுமை இல்லை என்ற அவளது அத்வைத உணர்வு, முழுமையான ஆன்மீக ஒருமைப்பாடாகவே ஒன்றிணைந்து விட்டது ||105||
உண்மையில், கோடரியைத் தாங்கிய பரசுராமராக அவதாரம் எடுத்தவர் அந்த விஷ்ணு பகவானே ஆவார். அவர் வைகுண்டம் என்னும் திவ்ய லோகத்தில் தனித்து வீற்றிருப்பவர்; அனைத்து ஆசைகளையும் துறந்து, சிவபெருமானுக்கும் கடமையுணர்வுடன் தொண்டு செய்பவர் ||106||
இவ்விதமாக, பகவான் தத்தர் அர்ஜுனனுக்கு அளித்த வரங்கள், செல்வத் தேவியான லக்ஷ்மியின் தூய்மையான கணவரால் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டன; அவரே, பிராமண குருமார்களின் அவதாரமாகிய பகவான் பரசுராமராகத் தோன்றினார் ||107||
இதன் காரணமாகவே, அர்ஜுனனுக்கு எதிராகப் போர் தொடுப்பதற்கு ஒரு பசுவை ஒரு சாக்காகக் கொண்டு, அதனை அபகரிக்கும் நிகழ்வு அரங்கேறியது; அப் போரில் அர்ஜுனன் கொல்லப்பட்ட பிறகு, அவனுக்கு முக்தி அருளப்பட்டது||108||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் பத்தொன்பதாவது (19) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 109
முதலாவது அத்தியாயம் முதல் பத்தொன்பதாவது (19)அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108+1984=2056
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -6, அத்தியாயம் -19 முடிவடைந்தது
அத்தியாயம் -20 தொடர்கின்றது