மாயவரம் மற்றும் கும்பகோணம் இடையில் உள்ளதே கதிரமங்கலம் வன துர்கை ஆலயம். இது கும்பகோணத்தில் இருந்து 14 கிலோ தொலைவிலும், மாயவரத்தில் இருந்து 7 கிலோ தொலைவிலும் உள்ளது. ஆலயம் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறுகிறார்கள்.
கதிராமங்கலம் வன துர்கை ஆலயம் நவ துர்கா ஆலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் ராகு தோஷம் விலக ராகு காலத்தில் விசேஷ பூஜைகள் செய்கின்றார்கள். மற்ற நாட்களில் மற்ற ஆலயங்களை போலவே இங்கும் தினசரி பூஜைகள் நடைபெறுகின்றன. அதனால்தான் இந்த தேவியை ராகு கால தேவி என்றும் அழைக்கின்றார்கள். இந்த ஆலயத்தின் இன்னும் இரண்டு விசேஷம் என்ன என்றால், இங்குள்ள தேவி கிழக்கு நோக்கி பார்த்தவாறு நின்று கொண்டு இருக்கின்றாள். கிழக்கு நோக்கி ஆலய தெய்வம் அமைக்கப்பட்டால் அதன் சக்தி மிக அதிகமாக இருக்குமாம். மற்ற ஆலயங்களில் காணப்படும் தேவி துர்கையின் சிலை கோபத்துடன் கூடிய முகத்துடனும் சிங்கத்தின் மீது அமர்ந்த நிலையிலோ அல்லது ஒரு அரக்கனின் மீது நின்ற நிலையிலோ காணப்படும். ஆனால் இங்குள்ள தேவியோ சாந்தமான முகத்துடன், தாமரை மீது நின்ற நிலையில் அதாவது பத்ம பீடா எனப்படும் காட்சியில் காணப்படுகிறாள்.
சுமார் 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இந்த ஆலயம் அந்த காலத்தில் சிவவனம் (இப்போது அதை கதிராமங்கலம் என அழைக்கின்றார்கள்) என அழைக்கப்பட்ட காட்டில் அமைந்து உள்ளது. மேலும் ராகு தோஷ பரிகாரத்துக்கு வன துர்க்கை ஆலயத்துக்கு வந்து வேண்டுதல் செய்து ராகுவின் தீமைகளை விலக்கிக் கொள்வதின் காரணம் இங்கு தினமும் ராகு பகவான் வந்து அன்னை துர்கையை பூஜித்து விட்டுச் செல்வத்தினால் இங்கு வருபவர்களுக்கு அவர் தீங்கு செய்வதில்லையாம். ஆகவே ராகு தோஷத்தை விலக்கிக் கொள்ள இந்த ஆலயத்தை விட வேறு சிறந்த ஆலயமே இல்லை என்று கூறுகிறார்கள்.
இந்த ஆலயத்தின் வரலாறு மற்றும் மகிமை குறித்த செய்திகள் பல உள்ளன. அந்த காலத்தில் அந்த சிவ வனத்தில் சிவ பூஜைக்காக தினமும் மல்லிகை மலர்களை பறிக்க வந்து கொண்டு இருந்த ராகு பகவான் ஒருநாள் எதேற்சையாக அங்கு தவத்தில் அமர்ந்து இருந்த வன துர்காவை அடையாளம் கண்டு கொண்டார். உலகில் அனைவரையும் துன்புறுத்திக் கொண்டு இருந்த அசுரன் மகிஷாசுரனை அழிப்பதற்காக பார்வதி தேவியே பூமியில் தேவி துர்கை உருவில் தோன்றி இருந்தாள். அவனை அழித்தப் பின் யுத்தம் மற்றும் அதன் விளைவால் ரத்தம் சிந்தி மரணம் அடைந்தவர்களை பார்த்துப் சோர்ந்து போனவள் தனிமையில் இருந்து மன அமைதி பெற்று மீண்டும் தனது உண்மையான உருவான பார்வதி தேவியாக மாறி தனது நாயகன் சிவபெருமானுடன் இணைய வேண்டும் என விருப்பம் கொண்டு அங்கு தவத்தில் இருந்தாள். அந்த நிலையில் அவளை பார்த்து விட்ட ராகு பகவானும் அவள் தவத்துக்கு இடையூறு செய்யாமல் அவளை அங்கேயே பூஜித்து ஆராதனை செய்துவிட்டு அவள் கண் விழிக்கும் வரை அங்கே காத்திருந்தார். தவத்தில் இருந்து கண் விழித்த வனதுர்க்கை காசிக்கு செல்லக் கிளம்பினாள். கண் விழித்தவள் எதிரில் ராகு பகவான் நிற்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்து அவர் அங்கு வந்ததின் காரணம் குறித்துக் கேட்டபோது தான் தினமும் அங்கு வந்து மல்லிகை மலர்களை பறித்துச் சென்று சிவபூஜை செய்வதாகவும், இனி அவளது தவத்துக்கு இடையூறு செய்யாமல் அவளுக்கும் அங்கே பூஜைகளை செய்து விட்டு செல்ல தன்னை அனுமதிக்க வேண்டும் எனவும், அவள் சிவபெருமானுடன் மீண்டும் இணைந்தவுடன் அந்த இடத்திலேயே அவள் அவதரித்து ஆலயம் ஒன்றில் குடி இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அதற்கு முன்னதாக அவர் அவள் அங்கு வந்து தவம் இருக்க காரணமான செய்தியையும் கேட்டு அறிந்தார். அவர் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட வன துர்கை பார்வதி தேவியும் தான் தக்க நேரத்தில் அங்கு வந்து அவதரிப்பதாகவும், அப்போது ராகு பகவான் தனக்கு துணை தெய்வமாக அங்கு இருப்பார் என்றும், ராகு தோஷம் பெற்றவர்கள் அங்கு வந்து தன்னை வணங்கி, அவருக்கு பெருமை தரும் வகையில் அவரையும் பூஜிக்கும்போது அவர்களுக்கு ராகு தசையினால் ஏற்படும் தீமைகளை அவர் விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதாகவும் கட்டளை இட்டாள். இதனால்தான் வன துர்கை தேவியின் ஆலயத்தில் தினமும் ராகு பகவான் வந்து பூஜித்து விட்டுச் செல்வதினால், அங்கு சென்று ராகு தோஷம் விலக வன துர்கை தேவியையும் ராகு பகவானையும் வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற ஐதீகம் ஏற்பட்டதாம்.
அதன் பல காலம் பின்னர் தனது மூல அவதாரமான பார்வதியின் உருவை அடைந்த வன துர்கை தேவி சிவபெருமானுடன் மீண்டும் இணைந்ததும், கதிராமங்கலத்தில் தான் எங்கு தவத்தில் அமர்ந்து இருந்தாளோ அங்கேயே வன துர்க்கையாக வந்து அமர்ந்தாள். அவள் தவத்தில் இருந்தபோதும் அங்கு வந்து தினமும் அவளை பூஜித்துவிட்டு சென்று கொண்டு இருந்த ராகு பகவான் இன்றும் தினமும் இங்கு வந்து அவளை பூஜிப்பதாகவும் நம்பப்படுகின்றது.
ராகு தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்கு மட்டும் அல்ல தமது குல தெய்வம் யார் என்பது தெரியாமல் தவிப்பவர்கள் தமது குல தெய்வம் யார் என்பதை அறிந்து கொள்ளவும் வந்து வேண்டிக் கொள்ள சிறந்த இடம் இந்த ஆலயமே என்பதாக அங்குள்ள பண்டிதர்கள் கூறுகிறார்கள். அதன் காரணம் வன துர்கை தேவி பார்வதி தேவியே என்பதினால் அனைவரது குல தெய்வமும் யார் என்பது அவளுக்கு தெரியுமாம்.
அப்படி என்றால் இங்கு வந்து வேண்டிக் கொண்ட உடனே அவர்களது குல தெய்வம் யார் என்பதை தேவி அவர்களுக்கு மறைமுகமாகவோ அல்லது கனவிலோ வந்து உடனடியாக உணர்த்துவது இல்லை என்பதற்கு ஒரு அடிப்படை காரணமுள்ளதாம். குல தெய்வம் யார் என்பதை அறிந்திட முடிந்திடாத குடும்பங்களில் அவர்களது மூதையோர் தமது குல தெய்வத்தை நினைக்காமல், அவர்களது குடும்பத்தில் நடைபெற்று இருந்த எந்த சுப காரியங்களிலும் குல தெய்வத்துக்கு உரிய மரியாதை தராமலும் இருந்ததினால் அவர்கள் சந்ததியினர் மன உளைச்சலும், குடும்ப அமைதியும் இன்றி தவிப்பார்கள் என்ற சாபத்தைப் பெறுகிறார்கள். அப்படி அவர்களது சந்ததியினர் மன அமைதி இன்றி வாழும்பொழுது அவர்களது மூதையோருக்கு செய்யும் கர்மாக்கள் நிறைவுடன் அமைவதில்லை என்பதினால் முன்னோர்களின் ஆத்மாக்களும் பசியுடன் அலைந்தபடி, மேலுலகில் சாந்தி அடையாமல் மன சங்கடத்துடன் தவித்தபடி இருக்குமாம். மூதையோர் செய்த தவறுக்கு சந்ததியினர் எப்படி பொறுப்பு ஏற்க முடியும் என்பதின் காரணம், சந்ததியினர் தவிக்கும்போது முழுமை இல்லாமல் செய்யப்படும் கர்மாக்களின் பலன்கள் மறைந்து போன அவர்களது மூதையோரின் ஆவிகளுக்கு நிறைவாகக் கிடைப்பது இல்லை. ஆகவே அந்த ஆதன்மாக்கள் செய்த தவறுக்கு தண்டனையாக அடுத்த ஜென்மத்தில் ஈனப் பிறவி எடுக்குமாம். ஆகவேதான் அடுத்த பிறவியிலாவது அப்படிப்பட்ட தவறுகளை தாம் செய்ய கூடாது என்ற மன நிலையை ஆத்மாவுக்குள் அடக்கிக் கொண்டு அடுத்த பிறவியை எடுக்கவே இந்த தண்டனை அவசியமாகிறதாம். அதே சமயம் தம்மை உதாசீனப்படுத்திய குடும்பத்தை சேர்ந்த முதல் நிலை சந்ததியினருக்கு மட்டுமே குல தெய்வங்கள் சில காலத்துக்கு மட்டுமே தண்டனையை தந்துவிட்டு, தம்மை அடையாளம் கண்டு கொண்டு வணங்கத் துவங்கியதும் அவர்களது வாரிசுக்களின் வாழ்க்கையை மேன்மை பெறச் செய்து, அவர்களைக் காத்தருளுமாம். ஆகவேதான் வன துர்கா தேவி தண்டனை காலம் முடியும்வரை அவர்களது குல தெய்வம் யார் என்பதை எடுத்துக் காட்டாமல் அதே சமயம் மறைமுகமாக அவர்களை தானே காப்பாற்றியபடியே இருப்பாளாம்.
யார் ஒருவருக்கு அவர்களது குல தெய்வம் யார் என்பது தெரியவில்லையோ, அவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து வேண்டிக் கொள்ளும்போது, அவர்களது கோரிக்கையை வன துர்கா தேவி அவர்களது குல தெய்வத்திடம் கொண்டு சேர்த்து விடுகின்றாளாம். இப்படியாக குல தெய்வத்தை அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல் தவிக்கும் குடும்பத்தினரின் தொடரும் தேடுதலை வன துர்கா தேவி அவர்களது குல தெய்வத்திடம் தெரிவிக்கும்போது, அந்த தெய்வங்களின் கோபமும் மறையத் துவங்கி, மனமும் இளகி தம்மை ஆராதிக்க வேண்டிய சந்ததியினருக்கு அந்த குலதெய்வங்கள் அருள் புரியாத துவங்குமாம். தக்க நேரத்தில் தம்மைத் தேடித் கொண்டு இருக்கும் குடும்பங்களுக்கு தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளுமாம்.
திருக்கடையூருக்கு சென்று தமது 60 அல்லது 80 தாவது பிறந்த நாளைக் கொண்டடி சாந்தி பூஜைகளை செய்த பின் அருகில் உள்ள மார்க்கண்டேயர் ஆலயத்துக்கும் மற்றும் வன துர்கை தேவி ஆலயத்துக்கும் சென்று வழிபடாவிடில் திருக்கடையூரில் செய்து கொண்ட சாந்தி பூஜையின் பலன் முழுமையாக கிடைக்காது என்பதாக பண்டிதர்கள் கூறுகிறார்கள். அதன் பின்னணிக்கு காரணமாக கீழ் உள்ள கதையையும் கூறுகிறார்கள்.
ம்ரிகுண்டு ரிஷி மற்றும் அவரது மனைவி மருதமதிக்கு வெகு காலம் குழந்தையே பிறக்கவில்லை. ஆகவே அவர்கள் சிவபெருமானிடம் குழந்தை வரம் வேண்டி தவம் இருந்தபோது அவர்களுக்கு காட்சி தந்த சிவபெருமான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் தர இரண்டு நிபந்தனைகள் போட்டார். அதி ஞானமுள்ள குழந்தை ஆனால் அதன் வாழ்வு 12 ஆண்டுகள்தான், அதே சமயம் ஞானமே இல்லாத குழந்தை, அதன் வாழ்வோ வெகு காலம் இருக்கும். அப்படிப்பட்ட குழந்தைகளில் எது வேண்டும் எனக் கேட்க ஞானமுள்ள குழந்தை பிறக்க வேண்டும் என தம்பதியினர் வேண்டிக் கொள்ள அவர்களுக்கு மார்க்கண்டேயர் பிறந்தார்.
மார்க்கண்டேயர் பன்னிரண்டு வயதானபோது அவர் சிவபெருமான் பூஜை செய்தபடி திருக்கடையூரில் இருந்தார். அந்த காலங்களில் திருக்கடையூர் ஆலயம் அமைந்திருக்கவில்லை. சிவலிங்கமாக சிவபெருமான் தற்போது திருக்கடையூர் ஆலயம் உள்ள இடத்தில் எழுந்தருளி இருந்தார். அப்போது அவரது வாழ்க்கையின் காலம் முடிந்துவிட அவரை அழைத்துக் கொள்ள வந்த யமபெருமானின் கணங்களினால் மார்கண்டேயரை நெருங்க முடியவில்லை. அதன் காரணம் சிவபெருமான் எழுந்தருளி உள்ள இடத்தின் ஒரு குறிப்பிட்ட தூரம்வரை யாரும் தன் இச்சையாக நுழைய முடியாது. அடந்த இடம் ஆலயத்தின் கருவறை போன்ற இடமாக அமைந்திருக்கும். ஆகவே யமபெருமான் மார்க்கண்டேயரின் உயிரை பிடித்துச் செல்ல தானே அங்கு செல்ல முடிவு செய்து கிளம்பினார்.
அப்போது ம்ரிகுண்டு முனிவர் கதிராமங்கல காட்டில் தங்கி இருந்தார். யமபெருமானின் மன நிலையை அறிந்து கொண்ட ம்ரிகுண்டு முனிவர் தனது மகனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என எண்ணி அங்கிருந்த வன துர்கை தேவியின் சிலையை, அவள் யார் என்பதை அறியாமல் வேண்டி வணங்கினார். தனது மகனின் உயிரைக் காப்பாற்றுமாறு அந்த சிலையின் தேவியிடம் வேண்டிக் கொள்ள அவர் முன் பார்வதி பிரசன்னமானாள். அவள் அவரிடம் திருக்கடையூருக்கு சென்று சிவபெருமானை வேண்டிக் கொள்ளுமாறு கூற அந்த முனிவரும் திருக்கடையூருக்கு சென்று சிவபெருமானிடம் வேண்டிக் கொள்ள மார்கண்டேயருக்கு உயிர் பிச்சைக் கிடைத்தது. மார்கண்டேயரின் கதை திருக்கடையூர் புராணத்தில் உள்ளது. அது முதல் தமது 60 அல்லது 80 தாவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக திருக்கடையூருக்கு சென்று பிரார்த்தனை செய்பவர்கள் மார்க்கண்டேயர் மற்றும் கதிராமங்கல வன துர்கா தேவி ஆலயத்துக்கும் சென்று வழிபடாவிடில் அந்த பிரார்த்தனையின் முழு பலனும் கிடைக்காது என்ற ஐதீகம் தோன்றியது.
வன துர்கா தேவி யார்? அவள் அங்கு எப்படி அவதரித்தாள்?
வேத காலத்தில் மகிஷாசுரன் என்றொரு அசுரன் இருந்தான். அவன் பகவான் பிரம்மாவிடம் இருந்து பெற்றிருந்த அரிய வரத்தினால் பூமியில் பிறந்த எவரும் அவனைக் கொல்ல முடியாது என்ற நிலை இருந்தது. அவனோ பூலோகத்திலும் தேவலோகத்தில் இருந்த அனைவரையும் துன்புறுத்தினான். அவனுக்கு துணையாக ஸும்பா மற்றும் நிஸும்பா எனும் இரு அசுரர்களும் துணை நின்றார்கள். அவனுடைய தொல்லைகளைத் தாங்க முடியாமல் போன அனைவரும் பகவான் பிரம்மாவிடம் சென்று அடைக்கலம் ஆனார்கள். ஆனால் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதினால் அவர்களை அழைத்துக் கொண்டு விஷ்ணு பகவானிடம் சென்றார்கள். அப்போது விஷ்ணு பகவானும் சிவபெருமானும் பேசிக் கொண்டு இருந்தார்கள். தேவர்களுடைய முறையீட்டைக் கேட்ட இருவரும் கோபம் கொண்டார்கள். அப்போது அவர்கள் முகத்தில் ஏற்பட்ட கோபத்தினால் பெரிய ஒளி மேல் எழும்பியது.
அடுத்த வினாடி அந்த ஒளியில் இருந்து ஒரு பெண் தெய்வம் வெளி வந்தது. ஒளியில் இருந்து வெளிவந்தவள் தன்னை துர்கை தேவி என்று அறிமுகம் செய்து கொண்ட பின்னர், தான் பார்வதி தேவியின் சக்தியில் இருந்து வெளியானவள் என்றும் பூமியில் பிறந்தவர்களினால் தன்னை அழிக்க முடியாது என பிரும்மதேவரிடம் இருந்து பெற்று இருந்த என்ற வரத்தினால் அழிக்க முடியாமல் இருந்த மகிஷாசுரனை அழிக்கவே ஒளி வெள்ளத்தில் இருந்து பார்வதி தேவி தன்னைப் படைத்து அனுப்பி உள்ளதாகவும் கூறினாள். மேலும் அவள் தான் மகிஷாசுரனை அழித்து அனைவரையும் காப்பேன் என்று சூளுரைக்க மனம் அமைதி மகிழ்ந்து போன தேவர்கள் மகிழ்ச்சியினால் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
அனைத்துக் கடவுட்களிடம் இருந்தும் அரிய சக்திகளை பெற்றுக் கொண்டு அவற்றை தன்னுள் அடக்கிக் கொண்ட தேவியானவள் வேண்டும் என்றே அழகான பெண் உரு எடுத்து அங்குள்ள நந்தவனத்தில் சுற்றித் திரியத் துவங்கினாள். அவளைத் தேடி அசுரர்கள் வருவார்கள் என்பது அவளுக்கு தெரியும். பேரானந்தம் தரும் அழகிய பெண்ணைக் கண்ட அசுரர்களுக்கு தலைகால் புரியவில்லை. அவளை அடைய வேண்டும் என நினைத்து மகிஷாசுரனை அழைக்க அவனும் அங்கு வந்து அவள் கைகளை பிடித்து இழுத்துச் செல்ல முயன்றான். கோபமுற்ற அந்தப் பெண் உருவில் இருந்த துர்கா தேவியானவள் தன் படையை அழைத்து, மகிஷாசுரனுடன் போர் தொடுத்தாள். சிங்கத்தின் மீது ஏறி அமர்ந்து தனது பல்வேறு கைகளிலும் ஆயுதங்களை ஏந்தி போர் புரிய, ஒன்பது நாட்கள் நடந்த போரில் ஒன்பதாம் நாளன்று மஹிஷாசுரனையும் அவனது படையினரையும் ஒட்டு மொத்தமாக அழித்து உலகைக் காத்தாள். மஹிஷாசுரனை அழித்ததினால் அவளை மஹிஷாசூரன் + மர்த்தினி (அழித்தவள்) என்ற இரு வார்த்தைகளும் சேர்ந்த பெயரான மஹிஷாசுரமர்த்தினி என அழைத்தார்கள்.
வாய்மொழிக் கதையாக வரும் கதையின்படி துர்கை தேவியும் மகிஷாசுரமர்த்தினி தேவியும் பார்வதியின் அவதாரங்களே. உலகை துன்புறுத்தி வந்த மகிஷாசூரனை அழிப்பதற்காகவே சிவபெருமானின் சக்தியின் மூலமாக வெளி வந்தவள். மகிஷாசுரனை வதம் செய்தபின் பல்வேறு இடங்களிலும் சிங்கத்தின் மீது அமர்ந்தவண்ணம் கோபத்துடன் சென்று கொண்டு இருந்தவளை அதே ரூபத்தில் அனைவரும் வணங்கி வரலானார்கள். காலம் சென்றது. கால ஓட்டத்தினால் மெல்ல மெல்ல மஹிஷாசுரமர்தினியின் கோபமும் அடங்கத் துவங்கியது. யுத்தத்தையும் ரத்தத்தையும் பார்த்து சளித்துப் போனவள் தனிமையில் சென்று அமர்ந்து கொண்டு சிவபெருமானுடன் மீண்டும் இணைய முடிவு செய்தாள். அதனால்தான் கதிராமங்கல வனத்துக்கு சென்று அமர்ந்து தவம் செய்தாள். மல்லிகை மலர் கொடி அடர்ந்து இருந்த அந்தக் காட்டை சிவமல்லிகை வனம் என்று அழைத்தார்கள். இப்படியாக அவள் அங்கிருந்தபோது தினமும் இரவில் காசிக்குச் சென்று கங்கையில் குளித்துவிட்டு காலையில் திரும்ப வந்து மீண்டும் தவத்தில் இருந்தாள்.
வன துர்கை தேவியின் மகிமையை எடுத்துக் காட்டும் இன்னொரு கதை தமிழ்ப் புலவரான கம்பருடனானது. கம்பன் அந்த காட்டின் அருகில் இருந்த கிராமத்தில்தான் வாழ்ந்து கொண்டு இருந்தார். அவர் ஏழை என்பதினால் சிறிய குடுசையில் வாழ்ந்து வந்தார். ஒருநாள் கடும் மழையும் சூறாவளியும் வீசாத துவங்க மேற்கூறை பிய்த்துக் கொண்டு செல்லத் துவங்கியது. வேறு வழி கிடைக்காத கம்பர் தன் குடுசையை காப்பாற்றுமாறு இந்த வன தேவியை மனதார வேண்டிக் கொண்டு மனது துயரத்தினால் அப்படியே படுத்து உறங்கி விட்டார். மறுநாள் என்ன ஆச்சர்யம், அவர் குடுசையின் மேற்கூறை நெல் பயிரினால் வேயப்பட்ட கூறையினால் போடப்பட்டு இருந்தது. அது அந்த தேவியின் திருவிளையாடல் என்பதை புரிந்து கொண்டவர் அந்த தேவியை தினமும் வழிபடலானார். அவளை கதிரால் வேயப்பட்ட கூரையை அமைத்து தன்னைக் காத்தவள் என்பதை குறிக்கும் வகையில் கதிராமங்கல தேவி என அழைக்கத் துவங்க அந்த இடத்தின் பெயர் கதிராமங்கலம் என ஆயிற்று.
இன்னொரு கதை அகஸ்திய முனிவருடன் சம்மந்தப்பட்டது. துர்க்கையாக அவதரித்து மகிஷாசுரனை வதம் செய்த பின் கதிராமங்கலத்தில் தவம் இருந்து தனது பழைய உருவை அடைந்த பார்வதி தேவியை சிவபெருமான் மீண்டும் மணந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திருமண வைபவத்தை நேரில் காண அகஸ்திய முனிவர் சென்று கொண்டு இருந்தார். அப்போது கதிராமங்கல வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து மேலே செல்ல விடாமல் பெரிய அசுரன் ஒருவன் அவரை தடுத்து நிறுத்தினான். மாபெரும் உருவம் கொண்டிருந்தவனை அவரால் ஒதுக்கித் தள்ளிவிட்டு மேலே செல்ல முடியவில்லை என்பதின் காரணம் அவன் பல அரிய வரங்கள் பலவற்றையும் பெற்று அசுர பலம் கொண்டிருந்தான். அவனை அழிக்க வேண்டும் எனில் அவனைப் போலவே அதே சக்தியைப் பெற்று இருக்க வேண்டும் என்பது விதி. ஆகவே அவனை எதிர்க்கும் சக்தி இல்லாத அகஸ்திய முனிவர் அந்த காட்டில் இருந்த பெயர் தெரியாத தேவியின் சிலையை துர்கை தேவியாக கருதி தனக்கு அந்த அசுரனை வெல்லும் சக்தியைக் கொடுக்குமாறு வணங்கித் துதித்தார். என்ன அதிசயம் அடுத்த நொடியில் அவருக்கு அசுர பலம் வந்தது. தன்னை வழிமறித்து தடுத்த அந்த அசுரனை நொடிப் பொழுதில் அடித்து விரட்டிவிட்டு தனக்கு இத்தகைய பலம் எங்கிருந்து வந்தது என பிரமித்து நின்றார். அப்போது துர்கை தேவி அவர் முன் காட்சி அளித்து தானே அவருக்கு அத்தகைய சக்தியைக் கொடுத்ததாகவும், தன்னுடைய திருமணத்தைக் காண வந்து சேருமாறும் கூறிவிட்டு மறைந்து விட்டாள். அதற்குப் பிறகுதான் கதிராமங்கல வனத்தில் இருந்த சிலை துர்கையின் சிலை என்பதும், அவள் பார்வதி தேவியின் அவதாரம் என்பதும் அகத்திய முனிவருக்குப் புரிந்தது. அடுத்து அவர் அந்த சிலையை முறையாக அங்கு பிரதிஷ்டை செய்து வழிபாட்டுத் தலம் அமைத்தப் பின்னர் அவளே வன துர்கா தேவி என அவளுக்கு பெயர் சூட்டிவிட்டு சென்றாராம். அதனால்தான் அவளுக்கு வன துர்கா தேவி என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள்.
நாளடைவில் அங்கு வந்து அந்த தேவியை வணங்காகத் துவங்கிய கிராமத்தினர் கோரிக்கைகள் நிறைவேறின. அவர்களும் வாழ்க்கையில் பெரும் நன்மைகளை பெறத் துவங்கினார்கள். ஆலய விழாக்கள் நடைபெறலாயின. அதில் சாமியாடிகள் மூலம் அவளே வன துர்கை தேவி என்பதும், அவளது அவதாரத்தின் காரணமும், அவளது மகிமைகளும் வெளித் தெரியத் துவங்கின. அப்படி வெளி வந்ததுதான் கம்பர், அகஸ்த்திய முனிவர் மற்றும் ம்ரிகுண்டு முனிவர் போன்றவர்களின் கதைகளும். அந்த ஆலயத்தின் மேற்கூறையும் நெல் தானியத்தினால் வேயப்பட்ட கூறையாக அமைக்கப்பட்டது. மெல்ல மெல்ல ஆலயமும் பெரியதாக கட்டி முடிக்கப்பட்டது.
இன்றும் ஆலயத்தின் மேற்கூறையில் ஒரு இடைவெளி விடப்பட்டு அதை நெல் கதிரால் மூடி வைத்து உள்ளார்களாம். அதன் காரணம் தினமும் அந்த தேவி காசிக்கு சென்று கங்கையில் குளித்து விட்டு திரும்ப வருவதாக உள்ள ஐதீகமே ஆகும். இந்த ஆலயத்தில் மற்ற ஆலயங்களை போல வினாயகப் பெருமானுக்கு தனி சன்னதி கிடையாது. அதன் காரணம் பார்வதியின் மகனான அவர் தனது தாயார் பார்வதி தேவியானவள், துர்க்கையாக அவதரித்து அங்கு தவம் இருந்து அந்த பூமியை புனிதப் பூமியாக்கி உள்ளதால், அவளுக்கே முதல் பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காக அவளுடன் ஐக்கியமாகி அங்கு உள்ளாராம். வன துர்கை தேவிக்கு செய்யப்படும் பூஜையை தானும் அவளுக்குள் இருந்து கொண்டு ஏற்றுக் கொள்கிறாராம்.