COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -1 : மங்கல துவக்கம்

அத்தியாயம்-2
யோகப் வழிப் பாதையிலிருந்து விலகிய மகனின் கதை

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா   || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா  பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே  நமஹா  || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய்  நமஹா  || ஸ்ரீமத் குருப்யோ  நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

சீடன் தீபக் தன் குருவின் பாதங்களில் பணிந்து வணங்கி, மிகுந்த மரியாதையுடன் பின்வருமாறு வினவினான்: ‘குருவே, எனக்குள் எழும் பல்வேறு சந்தேகங்கள் எனது மனதை அலைபாய வைக்கின்றன; அதற்கான விளக்கங்களை அளித்து எனது சந்தேகங்களை நீக்கி என்னை அமைதிப்படுத்துமாறு வேண்டுகிறேன் ||1||

சிலர்  பரமாத்மனே  ஸ்ரீமத்  தத்தாத்ரேயர் என்கின்றார்கள்; வேறு சிலர் அவரை ஒரு முனிவரின் மகன் என்று  கருதுகின்றனர்; மற்றும் சிலர் அவரை ஒரு தெய்வமாகப் போற்றுகின்றனர்; ஆனால் வேறு சிலர், அவரது பாதங்களை சரண் அடைவதே  வாழ்க்கையின்  இறுதி இலக்காக உள்ளது என்கின்றார்கள் ||2||

மேலும் சிலர், பரம்பொருளே (பிரம்மத்தின்) ஸ்ரீமத் தத்தர்  என்ற உருவத்தில் வெளியாகி உள்ளார் என்று உறுதியாகக் கூறுகின்றனர்; இப்படிப்பட்ட மாறுபட்ட கருத்துக்களைக் கேட்கும்போது, நான் குழப்பமடைகின்றேன்; கருணை மிக்க குருவே,  இவற்றில் எது  உண்மை என்பதை எனக்குத் தெளிவுபடுத்துவீர்களா||3||

மதிப்பிற்குரிய குருவே,    ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான்   எதற்காக பூமியில் அவதாரத்தை எடுத்தார்?; அவரது ஆனந்த மயமான திருவிளையாடல்கள் என்னெவெல்லாம் இருந்தன; அவருடைய சீடர்கள் எத்தகைய பண்புகளைக் கொண்டவர்களாக இருந்தார்கள்?;  தயவு செய்து அவை அனைத்தையும்  எனக்கு விரிவாக விலக்கிக் கூறுமாறு உங்களை வேண்டிக் கொள்கின்றேன்’ ||4||

சீடன் ஆத்மார்த்தமாக கேட்ட  கேள்விகளால் மனம் மகிழ்ச்சி அடைந்த குரு  கூறினார்   ‘தீபக், நான் கூறப் போவதை  மிகக் கவனத்துடன் கேள்; சற்று  நேரம் உன் செவிகளை நான் கூறும் செய்திகளில்  பதித்து வைத்துக் கொண்டு, உனது  முழு  கவனத்தையும்  அதன் மீது வைத்துக் கொண்டு அவற்றைக் கேள்||5||

முன்னொரு காலத்தில் பிருகு முனிவரின் வம்சத்தில் தோன்றிய, பக்தி சிரத்தை மிக்க  ஒரு அந்தணர் வாழ்ந்து வந்தார். தனக்கு ஒரு மகன் பிறந்தால், தான் இறைவனை முழு மனதுடன் வழிபடுவதாக முதுமை அடைந்திருந்த அந்த பிராமணர் எடுத்துக் கொண்டிருந்த சங்கல்பத்தினால் அவரது விருப்பம் நிறைவேறியது ||6||

அவருக்கு பிறந்திருந்த மகனோ  மந்த புத்தி கொண்டவனாக  இருந்தான்; அது மட்டும் அல்ல பக்தி மார்க்கமான யோகப் பாதையில் இருந்து விலகிச் செல்லத் துவங்கியதினால், அனைத்தையும் கற்றறிந்து இருந்தவரும்,  பக்தி மார்கத்தில் தன்னை முழுமையாக இணைந்து இருந்தவருமான அந்த  பிராமணர்  தன் மகனின் வாழ்க்கைக்கு பயனுள்ள  வகையில் இருக்கும் ஆன்மீக மார்கத்தை  கற்பிக்க பெரும் முயற்சிகளை எடுத்தார்||7||

வேதக் கல்வியை பயில பூணூல் போட்டுக் கொள்வது அவசியம் என்பதினால், தனது மகனுக்கு பூணூல் போட்ட  பின்னர், மேலும் தேவையான வேத பாடங்களை கற்பிக்க முயன்றபோது, அதைக் கேலி  பேசி தடுத்த மகன் ‘எதற்காக எனக்கு வேத பாடங்களை  போதிக்க முயற்சி எடுக்கிறீர்கள்?’ என்று கேட்டான் ||8||

அதற்கு பதில் அளித்த அவனது தந்தை கூறினார் ‘நீ நல்ல கல்வி அறிவைப் பெற்ற பின்னர், உனது சொந்தக் காலில் நின்றவண்ணம் சிறந்த இல்லற வாழ்க்கையை மேற் வேண்டும். அதன் பின்னர் உனது அனைத்து செயல்களும் வாழ்க்கையின் இறுதியில் அடைய  வேண்டிய  நிர்வாண நிலை எனும் முக்தியை அடையும் நோக்கமாக மட்டுமே இருக்க  வேண்டும்’ என்றார்||9||

ஆனால் தந்தையின் அறிவுரையை ஏற்க மறுத்த மகனோ ‘அப்பா, நான் ஏற்கனவே வேத பாடங்களை கற்றறிந்து கொண்ட பின்னர் அவற்றில் கூறப்பட்டு இருந்த நியமங்களையும்  கடுமையாக கடை பிடித்து வந்தேன். அதன் பின்னர் எனக்கு விதிக்கப்பட்டு இருந்த வாழ்க்கையின் இன்பங்களை அனுபவித்தேன்|10||

ஒரு காலத்தில் அமைச்சராகவும், அரசனாகவும் இருந்திருக்கிறேன்; ஒரு கட்டத்தில் அரசாங்க ஊழியனாகவும், இன்னொரு காலத்தில் ராஜ்யத்தின் சாதாரண குடி மகனாகவும் கூட இருந்திருக்கிறேன்; உயர்வான மற்றும் தாழ்ந்த நிலையிலான வாழ்க்கையில் எல்லாம் நான் பயணித்திருக்கிறேன்; ஆகவே அந்தந்த வாழ்க்கையின் தாத்பர்யங்கள் அனைத்தையுமே உணர்வு பூர்வமாக அனுபவித்திருக்கிறேன்||11||

தெய்வ அருளினால்  என்னுடைய அனைத்து  முந்தைய பிறப்புகளையும்  என்னால் என் நினைவில் கொண்டு வர முடிகின்றது; ஆனால் என்னை அறியாமல்  யோக பாதை வழியாக தெய்வீகத்துடன் இணைந்து கொள்ளும் நிலையில் தடுமாறி விட்டேன்; ஆகவே நான் ஏற்கனவே கற்று அறிந்துள்ள  யோக பயிற்சியை  செய்தவாறு என் எஞ்சிய  நாட்களைக் கழிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் எனக்கு  தேவை இல்லை; மேலான கல்வி அறிவை எனக்கு கொடுக்க நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் பயனற்றவை||12||

கடந்த காலங்களில் (வாழ்க்கையில்   என்பது பொருள்) நான் கற்றுக் கொண்ட அனைத்தையும் எனது  நினைவில் மறக்காமல் வைத்துக் கொண்டுள்ளேன் என்பதினால் இனி மீண்டும் அவற்றில்  ஈடுபட விரும்பவில்லை; எனது உள் மனதை தூய்மைபடுத்திக் கொள்ள வேண்டியது மட்டுமே மீதம் உள்ளது; அதற்கு அடிப்படை தேவையான உலக பற்றுக்கள் அனைத்தில் இருந்தும் விடுதலை பெற்றுக் கொண்டு வாழும் மன வலிமையையும் எனக்கு உள்ளது ||13||

பூர்வ ஜென்மத்தில்  நான் ஒரு பிராமணனாக இருந்திருக்கிறேன்; உண்மையை தேடி அலையும் சத் சங்க விவாதங்களில் கலந்து கொண்டுள்ளேன்; அவற்றின் மூலம் வாழ்விற்குத் தேவையானதை   கற்றுக் கொண்டேன்; சிதறிக் கிடந்த மன  எண்ணங்களை ஒன்றிணைத்து முழுமையான தியானத்திலும் அமர்ந்து இருக்கின்றேன் ||14||

ஆனால் நான் எண்ணி இருந்த  இறுதி இலக்கை அடைவதற்கு முன்னரே, விதியினால்  என் வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டு திடீரென எதிர்பாராத வகையில்  இறந்து விட்டேன்;  தந்தையே, கடந்த காலத்தில் நான் பிராமணனாக  இருந்தபோது நடந்தவை அனைத்தும் இப்போதும் நினைவில் உள்ளன என்பதினால் நான் வேண்டும் என்றே எந்த வித  தவறையும் செய்யவில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றேன்||15||

நீங்கள் வாழ்க்கையின்  மூன்று நிலைகளையும்* கடந்து  இன்னொரு பிறவி எடுக்க வேண்டியிருந்தால், நீங்கள் கற்றுக் கொண்டதை மறக்க மாட்டீர்கள் என்று நமது வேத புராண  நூல்களில் கூறப்பட்டுள்ளது; நான் இப்போது ஐந்தாவது நிலையில்** இருக்கிறேன் என்பதினால் எனது வாழ்க்கையின் ஆன்மீக முன்னேற்றத்திற்கான  வழி முறையில்  என்னை ஈடுபடுத்திக் கொள்ள  நானே  முயல்கிறேன்.
{(i)  {*வாழ்க்கையின் மூன்று முக்கிய நிலைகளாக நனவு நிலை (விழித்திருப்பது), கனவு நிலை, மற்றும் ஆழ்ந்த தூக்க நிலை ஆகியவை மாண்டூக உபநிஷதத்தின் அடிப்படையில் குறிப்பிடப்படுகின்றன. இவை மனித மனம் செயல்படும் விதம், அனுபவங்கள் மற்றும் உணர்வு நிலைகளை உணர்த்துகின்றன}; (ii) ** வாழ்க்கையின் ஐந்து முக்கிய நிலைகளாக குழந்தை பருவம் (Childhood), இளமைப் பருவம் (Youth/Adolescence), முதிர்ச்சி பருவம் (Adulthood), முதுமைப் பருவம் (Mid-life to Old age) மற்றும் இறுதிக்கட்டம் (End of Life) என்பதாக கூறுகின்றார்கள்} ||17||

இப்போது அலைபாயும் எண்ணங்கள் அனைத்தும்  என்னுள் இருந்து அழிந்து  பற்றின்மை தோன்றி விட்டது;  அனைத்து எண்ணங்களும் என்னுள் இருந்து வெளியேறி விட்டதினால்  இப்போது என் மனம் அலைபாயும், சிதறிக் கிடைக்கும் எந்த எண்ணங்களும் இல்லாமல் ஒரே சீரான சம நிலையில் உள்ளது என்பதினால் எனக்கு எங்கிருந்து மறு பிறவி இருக்க  முடியும்?||18||

நான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துவிட்டேன்; எதை அடைய வேண்டுமோ அதையும் அடைந்து விட்டேன்; ஆகவே இனி வேறு தேவை எதுவும் எனக்கு இல்லை; தந்தையே, அனைத்து   உண்மைகளையும்  உங்களிடம் நம்பிக்கையுடன் தெரிவித்து விட்டேன்’||19||

தன் மகன் கூறிய அனைத்தையும்  கேட்ட பின்னர், தன் மகன் மீது நம்பிக்கை வைத்த தந்தை, அமைதியோடு கூறினார்  ‘மகனே, உன்னை நான் மனதார பாராட்டுகின்றேன்; உனக்கு எனது பரிபூரண ஆசீர்வாதங்கள் ||20||

நீ நமது வம்சத்தின் தூய்மையை மேம்படுத்தி விட்டாய்; நம் முன்னோர்களுக்கு மேலும் பெருமையை சேர்த்து விட்டாய்; நீ அடைந்துள்ள  ஆன்மீக ஞானத்தை எனக்கும்  எடுத்துரைப்பாயாக||21||

நானும் எங்கே உலகப் பற்றின் வலையில் சிக்கிக் கொள்வேனோ என்று பயந்து கொண்டுள்ளேன்; இவ்வுலகில் அல்லது மறுவுலகிலோ கிடைக்கும் இன்பங்களுக்கு நான் ஆசைப்படவில்லை; ஆன்மீக முதிர்ச்சி பெற்று, ஆழ்ந்த ஆன்மீகப் புரிதலை  அனுபவபூர்வமாக உணர வேண்டும்  என்ற எண்ணத்தில்தான் அந்த பேரானந்த நிலையை தேடி அலைந்தேன்’||22||

அதற்கு அந்த மகன் பதிலளித்தான்  ‘தந்தையே, உங்கள் விருப்பம் புரிகின்றது; ஆனால் இன்னமும் நான் அறியாமை எனும் கறையில் இருந்து முழுமையாக விடுதலை அடையவில்லை; அதற்கு முன் விதி வகுத்துள்ளபடி  நான் உங்கள் மகனாகப் பிறந்திருக்கிறேன், அவ்வளவுதான்’ ||23||

அவருடைய  மகன் தொடர்ந்து கூறினான்  ‘மேன்மையான தெய்வமான    ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான்   தனது  சீடனான சஹஸ்ரார்ஜுனனுக்கு* யோக மார்க்கத்தை உபதேசித்தார். சஹஸ்ரார்ஜுனனும் அதனைப் பின்பற்றி, மேன்மையான ஞானத்தை பெறுவதற்காக  கடுமையான பயிற்சியை மேற்கொண்டான். நீங்களும் அது போன்ற முயற்சியை மேற்கொள்ள வேண்டும்
{* தத்த சரித்திரங்களில் சஹஸ்ரார்ஜுனன் பெரும்பாலும் ‘அர்ஜுனன்’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டுள்ளார்; ஆகவே, மகாபாரத இதிகாசத்தில் வரும் பாண்டவ சகோதரர்களில் ஒருவரான  அர்ஜுனனுடன் சஹஸ்ரார்ஜுனனை ஒப்பிட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது).  ||24||

மகன் கூறியதைக் கேட்ட தந்தை அவரிடம் கேட்டார்  ‘மகனே, நீ போற்றிப் புகழும்   ஸ்ரீமத்  தத்தாத்ரேயர் எனும் அந்த தெய்வம் யார்? அர்ஜுனன் என்பவன் யார்? அவன் யாருடைய மகன்? அவன் ஆத்ம ஞானத்தை எவ்வாறு அடைந்தான்?  அவற்றைக் குறித்த அனைத்து விவரங்களையும்  எனக்கு விவரமாக எடுத்துரைக்கின்றாயா?’ ||25||

அதற்கு மகன் பதிலளித்தான் ‘எப்போது  நாம் மீளாத் துயரத்தில் ஆழ்ந்து விடுவோமோ, அப்போது அதிலிருந்து நம்மை மீட்டு, கரை சேர்த்து, நமது ஆத்மா அமைதியாக எங்கு செல்ல வேண்டுமோ, அங்கு செல்லும் வழி முறைக்கான யோக மார்கத்தை  நமக்கு அளித்துள்ள தெய்வமே ஸ்ரீமத்  தத்தாத்ரேயர் என்பவர் ஆவார் ||26||

அந்த கதையை   நான் உங்களுக்கு  விரிவாக எடுத்துரைக்கின்றேன்; ஆகவே இந்தக் கதையை தயவு செய்து கவனத்துடன்  கேட்பீர்களாக; முன்னொரு காலத்தில் பிரதிஷ்டாபுரம் என்னும் நகரில், கௌசிக முனிவரின் வம்சாவளியில் பிறந்த ஒரு அந்தணர் வாழ்ந்து வந்தார்||27||

திருமணம் ஆகி இருந்த அவர், விதி வசத்தால்  தீய பழக்கங்களுக்கு அடிமையாகி, ஒரு விலைமகளோடு  வாழத் தொடங்கினார்; நாள்தோறும் அவளோடு காமக் களியாட்டங்களில் மூழ்கிக் கொண்டிருந்த  நிலையில், ஒரு கட்டத்தில்  அவருக்கு குஷ்டநோய் (தொழுநோய்) ஏற்பட்டு விட்டது; அது முதல் அவருக்கு  துன்பங்கள்  துவங்கின ||28||

வாடிக்கையாளர்களை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்திருந்த  விலைமகள்,  அவருடைய உடல் உருக்குலைந்து போனதைக் கண்டதும்,  அவரைத் தன் வீட்டிலிருந்து  துரத்தி விட்டாள்; அப்போதுதான் அவருக்கு தான் முறைப்படி மணந்து கொண்ட மனைவியின் நினைவு  வந்தது; உடனே, அங்கிருந்து கிளம்பி  தன் வீட்டிற்கு  சென்று அவளுடன் வாழ அவர் முடிவெடுத்தார்||29||

நமது சமூகத்தில் இத்தகைய நிகழ்வுகளே நடைபெறுகின்றன; அவற்றுக்கான காரணங்களை சற்றே அறிவாற்றல் பெற்றவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்; ஆனாலும் தனது கணவர் வீட்டிற்கு திரும்பி வந்ததைக் கண்ட  அந்த பதிவிரதை  உடனே எழுந்து நின்று அவரை அன்புடன் வரவேற்றாள்; மிகுந்த பக்தியுடனும் மரியாதையுடனும் அவர் பாதங்களில் விழுந்து வணங்கினாள்||30||

அதன் பின் அவள் கூறினாள்  ‘பொன் மழை  பொழிவதை போல, இன்றைய நாள்  எனக்கு  மங்களகரமான நாளாக அமைந்துள்ளது; தெய்வத்திற்கு சமமானவராகவே நான்  கருதி வரும்  எனது கணவரை  இன்று  நான் மீண்டும்  பார்ப்பதில் என் மனம் எல்லையற்ற மகிழ்ச்சியில் மூழ்குகின்றது’ ||31||

திரும்பி வந்தவரை வரவேற்றவள்  அவரை வசதியாக அமரச் செய்தாள்;  ஒரு தெய்வத்தையே வழிபடுவது போல அவரைப் பூஜித்து, தன் இதய பூர்வமான உணர்வுகள் அனைத்தையும் அவருக்கு அர்ப்பணித்து அவருக்குப் பணிவிடை செய்யத் துவங்கி  மெத்த அன்புடன் அவரை நீராட்டி, தூய்மைப்படுத்தினாள் ||32||

பிறகு, அவர் பாதங்களைக் கழுவிய நீரை மிகுந்த மரியாதையுடன் ஒரு துளி பருகினாள்; எஞ்சியிருந்த அந்த நீரை  தன் உடலின் மீது  தெளித்துக் கொண்டாள்; பின்னர், சுவையான உணவைச் சமைத்து, மிகுந்த பணிவுடனும் மரியாதையுடனும் அவருக்குப் பரிமாறினாள்||33||

சீழும் இரத்தமும் கசிந்ததால் அவரது முகம் உருக் குலைந்திருந்தது; ஆனாலும்  அவள் நாள்தோறும்  அந்த காயங்களைச் சுத்தம் செய்து, அவருக்குப் புதிய ஆடைகளை அணிவித்து, அவருக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து அவரை மகிழ்ச்சியோடு இருக்க வைத்தாள்||34||

அது மட்டும் இல்லாது அவருடன் இனிமையாக பேசிக் கொண்டு இருந்தவாறும், அவரது  உடலில் ஏற்பட்டு இருந்த நோய்க்கான மருந்துகளை போட்டு வந்ததும் இல்லாமல், தனது  முகத்தில் எவ்விதமான வெறுப்பையும் காட்டாமல், அவரது சிறுநீர் மற்றும் மலத்தைச் சுத்தம் செய்து வந்தாள்||35||

கணவர் மீது அத்தகைய மரியாதையும் மதிப்பையும் காட்டாமல், அவருக்குப் பணி விடையையும் செய்யாது இருந்திருந்தால், பத்தினி தெய்வமான அவரது மனைவி அவரது கோபத்திற்கு உள்ளாகி, அவரால் பெரும்   அவமதிப்பிற்கு  உள்ளாகி இருப்பாள் ||36||

இத்தனை பணிவிடைகளை அவரது பத்தினி செய்து வந்திருந்தாலும் அவரால் அந்த விலைமகளை மறக்க முடியவில்லை; அவளது நினைவு வந்தபோதெல்லாம், அவள் கூறும் நல்ல அறிவுரைகளை  ஏற்காமல்,  தனது பத்தினி மனைவியை கோபத்தோடு கண்டபடி திட்டுவார்||37||

அவர் பழகி வந்திருந்த  விலைமகள் அவரது உடல்  முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டு அவரை தழுவினாள்; அதை அவர் விரும்பி ஏற்றுக் கொண்டார்; ஆனால் இங்கேயோ அவரது மனைவி அவரது கால்களைத் தொட்டு அவற்றைத் தூய்மைப்படுத்தும் போது, அவமானத்தினால் அவரது  மனதில்  அவள் மீது  ஆழ்ந்த வருத்தமும் ஏற்பட்டது  ||38||

ஒரு கணவன் தனது மனைவி  குறித்து என்னதான் நினைத்தாலும், கணவரை தெய்வமாக நினைக்கும் மனைவி அந்த மன நிலையில் இருந்து மாறாமல் இருந்து கொண்டு அவருக்கு பணிவிடை செய்து வந்தால் அதுவே போற்றப்பட வேண்டிய ஒன்றாகும்;  இப்படி வாழ்ந்து கொண்டு இருக்கையில்தான் ஒருநாள் நோயினால் அவதிக்கு உள்ளாகி இருந்த அவளது கணவர்  (கௌசிக முனிவர் வம்சத்தில் பிறந்து இருந்த அந்தணர்) மற்றொரு விலைமகளை  காண நேரிட்டது||39||

ஒரு வேட்டைக்காரன் தனது  வில்லில் அம்பை பூட்டி தான் விரும்பும் பிராணி மீது எறிவதை போல, தன் கண்களினாலும் முக பாவனைகளினாலும்  அந்த பிராமணனை  நோக்கி மறைமுகமாக அந்த விலைமகள் தனது பார்வைகளை வீசினாள்; அதன் விளைவாக, மான் போன்ற மெல்லிய மனதை கொண்டிருந்த அந்த பிராமணனை   இழுப்பதில் அவள் வெற்றி அடைந்தாள்||40||

வரவிருக்கும் பேரழிவிற்கு வகை செய்யும் வகையில், ஏற்கனவே  தடுமாறிக் கொண்டிருந்த பிராமணனின் உடலை தனது பார்வையினால் காயப்படுத்தி அவரை தன் மீது ஆசைக் கொள்ள வைத்ததில்   அந்த விலைமகள் வெற்றி அடைய, எந்த விதமான கூச்சமும் இல்லாமல் அந்த பிராமணர் தனது மனைவியிடம் கூறினார் ||41||

‘அன்பானவளே,  நீ தர்மத்தை நன்கு அறிந்திருக்கிறாய்; நான் உன்னிடம் கூற உள்ள, உன்னை வருத்தமடையச் செய்யும் வகையிலான வார்த்தைகளை   நீ தாங்கி கொண்டால் என் மனக் கஷ்டத்தை விரைவாக உன்னால்  நீக்க முடியும்||42||

ஒருவன் தனது மனத் துயரங்களை களைந்து கொண்டு மகிழ்சியாக  இருக்க  வேண்டும் எனில், சகோதரத்துவ உணர்வு கொண்ட நெருங்கிய நண்பரிடமோ, அன்பு கொண்ட மனைவியிடமோ, அல்லது  மேன்மையான  துறவிகள் முன்னிலையிலோ தமது மனதில் உள்ளவற்றை மறைக்காமல் கூறி விட வேண்டும் என்பதாக வேதங்கள் கூறுகின்றன ||43||

அழகிய மார்பகங்களைக் கொண்ட அந்த விலைமகள், எத்தனை தொலைவில் இருந்தாலும் எப்படி தனது வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து விடுவாளோ  அப்படியே எனது மனதையும் ஆக்ரமித்துக் கொண்டு போய் விட்டாள்’;  தனது பத்தினியிடம் அந்த பிராமணன் தொடர்ந்து  கூறினார்||44||

‘நான் இப்போது நோயினால் உடல் தளர்ந்து போயிருந்தாலும், என் மனம் இன்னும் பற்றற்ற நிலையை அடையவில்லை; அவளது தோற்றத்தின் மீது நான் மோகம் கொண்டு விட்டேன்; ஆகவே விரைவாக என்னை இந்த பந்தங்களிலிருந்து விடுவிப்பாயாக ||45||

என்னை இயன்றவரை விரைவாக அந்த விலை மகளின் இல்லத்திற்கு அழைத்துச் செல்; இல்லையேல், நான் இந்த உடலைத் துறந்து விடுவேன்; என் உள்ளத்தில் நான் அனுபவிக்கும் வேதனைக்கு வேறு எந்தத் தீர்வும் எனக்குத் தென்படவில்லை; என் மீது கருணை காட்டுமாறு உன்னைக் கேட்டுக்கொள்கிறேன்’ ||46||

காமதேவனின் (மன்மதனின்) சில  லீலைகள் விசித்திரமானவை; படைப்புக் கடவுளான பிரம்ம தேவனே அவற்றைக் கண்டு போய் இருக்கின்றார்; நானோ நாதியற்ற, மந்த புத்தி கொண்ட நோயாளி மட்டுமே என்பதினால் என்னால் என்  மனதை எப்படிக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருக்க முடியும்?’ ||47||

தனது கணவனின் வார்த்தைகளைக் கேட்ட, அந்தப் பதிவிரதை  அதிர்ச்சி அடைந்தாள் என்றாலும் உடனடியாக எழுந்தாள், தன் சக்தியை எல்லாம் திரட்டிக் கொண்டு கூறினாள்  ‘உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்’||48||

அந்த விலைமகள் தன் கணவனுக்கு இணங்கி நடப்பதற்காகவும், அவரை அந்த விலைமகள் இன்பமாக வைத்திருக்கவும் அவளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதினால் அந்தப் பதிவிரதை தன் சொந்தச் சேமிப்பிலிருந்து வாங்கிய சில நகைகளை எடுத்துத் தன் ஆடையின் முந்தானையில் முடிந்து வைத்துக் கொண்டாள்; பின்னர், நோயுற்றிருந்த தன் கணவனை மெல்ல எழுப்பி தன் தோள்களில் தாங்கிப் பிடித்துக் கொண்டாள் ||49||

நோயினால் பாதிக்கப்பட்டு உள்ள தன் கணவன் மேலும் வலியினால் அவஸ்தைப்படக் கூடாது  என்று எண்ணிக் கொண்டு மிகுந்த கவனத்துடன், மெதுவாக, ஆனால் உறுதியோடு அடி எடுத்து வைத்தபடி நடந்தாள்; பயணம் முழுவதிலும் தனது  கணவன் எந்த விதத்திலும் அசௌகரியம் படக்கூடாது என்பதினால் மெதுவாக நடந்தாள்; அப்படி நடந்து கொண்டு செல்கையில் இரவு நேரம் வந்து விட்டது ||50||

மின்னல் ஒளிகளின் உதவியுடன் அந்த விலை மாதுவின் வீட்டை நோக்கிச் சென்று கொண்டு இருந்தபோது, விதியின் விளைவினால் அவர்கள் சென்று கொண்டிருந்த பாதையை வழிமறிக்கும் வகையில்  எதிர்பாராத ஒரு  நிகழ்வு நடைபெற்றது||51||

அந்த நேரத்தில்தான் அந்த நிகழ்ச்சி நடந்தது; தூக்கிலிடப்படவிருந்த ஒரு கைதி  எப்படியோ தப்பித்து ஓடி விட்டான்; அந்த கைதியை  தேடிக் கொண்டு வந்திருந்த அரசாங்க காவலர்கள், அந்த கைதியைப் போலவே இருந்த ஒருவனை  அங்கே    கண்டனர் ||52||

அவனைத் தப்பி ஓடிய தங்கள் கைதி என்று கருதிய வீரர்கள், அவனைப் பிடித்தனர்; பின்னர் மன்னரின் அனுமதி பெற்றதும், அவனைத் தூக்கிலிட்டனர்; இவ்வாறு தங்கள் பணியை முடித்துக்கொண்டு, அவர்கள் தங்கள் தலை நகருக்குத் திரும்பிச் சென்று விட்டார்கள் ||53||

அவ்வாறு  தூக்கிலிடப்பட்டவர் வேறு யாருமல்ல; அவரே மாண்டவ்ய முனிவர் ஆவார்; தூக்கு மேடையில் தொங்கிக் கொண்டிருந்த நிலையிலும், அவர் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி இருந்தார்; அதே வேளையில், நோயுற்ற தன் கணவனைத் தாங்கிக் கொண்டு சென்ற அந்தத் தர்ம பத்தினி,  இருளில் மெல்ல மெல்ல தட்டுத் தடுமாறியவண்ணம்  அதே பாதையில் சென்று கொண்டிருந்தாள் ||54||

அப்போது தற்செயலாக அவளது கணவன், தூக்கு மரத்தில்  தொங்கிக் கொண்டிருந்த முனிவர் மீது மோத நேர்ந்தது; அப்படி அந்த அந்தணரின் உடல் மோதியதால், மாண்டவ்ய முனிவர்  ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருந்த வேதனை  மேலும் அதிகரித்தது; இதனால் கடும் சீற்றமடைந்த மாண்டவ்ய முனிவர்  விவேகத்திற்குச் சிறிதும் இடமளிக்காமல், நோயாளியான அந்த அந்தணருக்கு சாபத்தை கொடுத்தார் ||55||

‘எவன் ஒருவன் எனது வேதனையை மேலும் அதிகரிக்க வைத்து விட்டானோ, அவன் சூரியன் உதித்த அடுத்த கணமே தன் உயிரை இழப்பான்’ என்று  முனிவர் ஆவேசமாக கத்தினார்; அந்தப் பேரழிவு மிக்க சொற்களைக் கேட்டதும், கற்புக்கரசியான அந்தணரின் மனைவி  கலங்கிப் போனாள்||56||

கலங்கிப் போன அந்த பத்தினிப் பெண் அந்தத் துயரமான சூழ்நிலையிலும், வானத்தை பார்த்துக் கத்தினாள் ‘நான் என்றும் தூய்மையான கற்பு ஒழுக்கம் மிக்கவளாகவே இருந்துள்ளேன்; ஒரு கணவன் இன்றி மனைவி மட்டும் எதற்காக தனியே வாழ வேண்டும்?; எனவே சூரிய பகவானே,  கற்பொழுக்கம் மிக்க என்னுடைய  சொற்களைக் கேட்பாயாக,   நீ இனி உதிக்கவே கூடாது;  உனது ஒளிக் கதிர்கள் பூமியில் எங்கும் விழக் கூடாது ||57||

பண்டைய காலத்தைய  பத்தினிகள் வாழ்ந்தது போலவேதான், நானும் ஒரு  கற்பு நெறி தவறாத வாழ்வை மேற்கொண்டு வந்துள்ளேன் என்பது சத்தியம் என்றால் நான் கூறியதை ஏற்றுக் கொண்டு நடப்பாயாக;  இல்லை என்றால்  ஓ, சூரிய தேவனே, நீங்களும் எரிந்து சாம்பலாகி விடுவீர்கள் என்பதினால் எனது வேண்டுகோளை நிராகரிக்காதீர்கள்’ என்றாள் ||58||

இப்படியாக  மாண்டவ்ய முனிவரின் சாபத்திற்கு எதிர்வினை சாபத்தைக் கொடுத்த பின்னர், அந்தப் பத்தினித் தெய்வம் தன் கணவனை  விலைமகளிடம் அழைத்துச் சென்று, அவனது காம இச்சையை தணிய  வைத்தாள்; அவன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வரை காத்திருந்து, பின்னர் மீண்டும் அவனுக்குத் துணையாக இருந்து, அதே அளவிலான எச்சரிக்கையுடன் இருந்தவாறு  அவரை அழைத்துக் கொண்டு தனது இல்லத்திற்குத் திரும்பினாள் ||59||

காம இச்சைக்கு அடிமையானவன் சிந்திக்கும் திறனை இழந்து விடுகின்றான்; தான் செய்வது தவறா இல்லையா என்பது அவனுக்கு விளங்குவது இல்லை; அதனால் பாவங்கள் ஏற்படுகின்றன என்பதையும் அவன் உணர்வதில்லை என்றும் கூறப்படுகிறது; அந்த நிலையில் உள்ளவர்கள்  அமைதியற்ற நிலையிலேயே உழன்று  கொண்டிருப்பார்கள்||60||

விபச்சாரிகள் நெருப்பு சுடர்களைப் போல தமக்குள்ள அழகால் காமத்தை வெளிப்படுத்துபவர்கள்; எப்படி நெருப்புக்  கதிர்கள் ஒளியை வெளி விடுமோ அப்படி காமத்தையும் வெளியிடுவதினால் அதன் செல்வாக்கில் வீழ்ந்து விடுபவர்கள் கைகளை கட்டிக் கொண்டு நிற்பதை போன்ற நிலையில் இருந்தவாறு   தம்மிடம் உள்ள  இளமை, செல்வம் மற்றும் திறமையின் வலிமையை இழந்து விடுகின்றார்கள்||61||

இன்பம் அளிக்கும் பெண் இனப் பெருக்க உறுப்புகள் துர்நாற்றம் தரும் சாக்கடை போன்றவை  என்றாலும் அதில் இன்பமடைவர்களினால் அதன் தாக்கத்தில் இருந்து வெளிவர முடியவில்லை; அதன் கட்டுப்பாட்டில் இருந்து வெளி வருபவர்கள் அரிதே என்பதினால் அந்த துர்நாற்றத்தில் இன்பத்தை அடைய துடிப்பவர்களுக்கும்,  துர்நாற்றம் கொண்ட இடங்களில்  வசிக்கும்  சிறிய பூச்சிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?||62||

துர்நாற்றம், இருமல் மற்றும் கபம் போன்றவைகள் அந்த பெண்களின் வாயை நிறப்பி இருந்தாலும் ,  அவர்களின் கவர்ச்சிகரமான முகங்கள் சந்திரனைப் போல தெரிகின்றது என்பதினால் அவர்களிடம் செல்பவர்கள், அந்த மாயையின் வலிமையில் வீழ்ந்து அவர்களிடம் (விலைமாதுவிடம்) செல்கின்றார்கள்||63||

ஏரிகள் நிரம்பியிருந்தாலும், காகங்கள் பள்ளங்களில் உள்ள நீரையே குடிக்கும்  என்பதை போலவேதான்,  விலைமாதுவை நாடிச் செல்பவர்கள் வீடுகளில் அவர்களுக்கு மனைவிகள் இருந்தாலும், பிற பெண்கள் மீது மோகம் கொண்டு அவர்களிடம்  சென்று இன்பம் பெற நினைப்பவர்கள் சமுதாயத்தில் இழிவானவர்கள்||64||

தொடர்ந்து தங்கள் இனப் பெருக்க உறுப்புகளை அப்படிப்பட்ட சாக்கடைகளில் வைத்துக் கொள்வதின் மூலம்  அவர்கள் இறுதியில் நோய் வாய்ப்படுகிறார்கள் என்பதை போலவேதான் இந்த பிராமணருக்கு அவரது புலன்களை அடக்கிக் கொள்ள முடியவில்லை; அதை புரிந்து கொண்டு செயல்பட்ட அந்த பத்தினியை பாராட்டியே ஆக வேண்டும் ||65||

தமது கணவர்கள் நாடிய பிற பெண்கள் மீது ஏற்பட்ட பொறாமையினால் பல பெண்கள் தமது உயிரைக் கூட இழந்து உள்ளார்கள்; ஆனால்   இங்கே  தனது கணவர் மீது பக்தி கொண்டிருந்த மனைவியோ, அவன் விரும்பிய விபச்சாரியின் வீட்டிற்கு தானே அழைத்துச் சென்று, அதற்கான கட்டணமாக  அவளுக்கு  தனது நகைகளையும் கொடுத்து, தனது கணவனின்  காம ஆசையை  பூர்த்தி செய்த துணிச்சல் வேறு  யாருக்கு வர முடியும்?||66||

அவள் சூரியனுக்கும் சாபம் கொடுத்ததினால், தனக்கு மீண்டும்  உதிக்க அனுமதி தரும் வரை காலையில் உதிக்க  பயந்து கொண்டு சூரியனும் மறைந்து கொள்ள, பிரபஞ்சத்தையே இருள் சூழ்ந்து கொண்டு அனைத்து ஜீவராசிகளையும் பயமுறுத்தியது ||67||

பலர் பல்வேறு சங்கடங்களுக்கு உள்ளாயினர்; விலங்குகளும் பறவைகளும் பதட்டத்தில் நடுங்கின; எவராலும் கால நேரத்தைப் அறிந்து  கொள்ள முடியவில்லை.  அறிவுள்ள பிராமண குருமார்கள்  கூட அதன் தாக்கத்தை உணரத் துவங்கினர்||68||

தொடர்ந்து பிரபஞ்சமே இருளில் மூழ்கிக் கிடந்ததினால் கால நேரங்களை தெரிந்து கொள்ள முடியாமல் போயிற்று என்பதினால் விடியற் காலை , நண்பகல் மற்றும் அந்தி வேளை வழிபாட்டு முறைகளை எவராலும் கடை பிடிக்க முடியவில்லை; காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு என உணவருந்தும் நேரம் கூட விளங்காமல் இருந்தன||69||

அது மட்டும் அல்ல, வேள்விகள் நடைபெறவில்லை என்பதினால்  அந்தந்த தெய்வங்களுக்கு கிடைக்க வேண்டிய பலிகள் (உணவுப் பொருட்கள்)  மற்றும் காணிக்கைகள் சரியான நேரத்தில் கிடைக்கவில்லை; அதன் விளைவாக தெய்வங்களும் துன்புற்று பட்டினி கிடைக்க வேண்டியிருந்தது; உலகில்  அனைவருமே குழப்பத்தில் ஆழ்ந்து, என்ன செய்வது என்று விளங்காமல் வருத்தத்தில் ஆழ்ந்தார்கள்||70||

யாக பலிகள் தமக்கு சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்பதினால் பசியோடு   இருள் சூழ்ந்த தேவலோகத்தில் இருந்த  தேவர்கள் மற்றும் தேவ கணங்கள் தமக்குள்ள கூறிக் கொண்டார்கள்  ‘பூமியில் உள்ள மானிடர்கள் நமக்கு பலிகள் என்ற பெயரில் நெய், அரிசி, தானியங்கள் போன்றவற்றை யாக குண்டங்கள் மூலம்  தருகின்றார்கள்; அதற்காக நாமும்  மழை போன்றவற்றை பொழிய வைத்தும், சூரிய ஒளி மற்றும் சந்திர ஒளி போன்றவற்றை தந்தும், தானியங்கள் விளைய உதவுகின்றோம்;  இப்படியாக நாம் ஒருவருக்கொருவர் உதவிக்  கொண்டுதான் இருக்கின்றோம்||71||

நாம் உணவிற்காக அவர்களது தானியங்கள் விளைய மழையை பொழிய வைத்து உதவுகின்றோம். அவர்கள் நமக்கு தேவையான உணவுப் பொருட்களை பலி எனும் பெயரில் வழங்கவில்லை என்றால்  நாமும் அவர்களுக்கு உதவாமல் இருக்கலாம்; ஆனால் இப்போதோ  நம்மால் இந்த விஷயத்தில் பழி வாங்கும் விதத்தில் கூட  எதுவுமே செய்ய முடியாமல் உள்ளது ||72||

மானிடர்களை பழி வாங்கும் விதத்தில் பெரும் மழையை பொழிய வைக்கலாம்;  மழை பொழியாமல் வறட்சியை ஏற்படுத்தலாம்;  எலிகள் அல்லது வெட்டுக் கிளிகளின் படையெடுப்பை அல்லது பெருக்கத்தை அதிகப்படுத்தி பயிர்களுக்கு சேதத்தை விளைவிக்கலாம்; உள்நாட்டு பகை மற்றும் வெளி நாட்டுப் பகைவர்களால் பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்; இந்த ஏழு வழி முறைகளில்தான் நம்மால் மனிதர்களுக்கு ஒரு பாடம் புகட்ட முடியும் ||73||

வழக்கமாக நாம்  இந்த ஏழு நிலையையும்  ஏவி விட்டு பாடம் புகட்டுவது உண்டு; ஆனால் இப்போது உள்ள சூழ்நிலை வேறானது என்பதினால் அவ்வாறு செய்வது  அறமாகாது;  காலத்தைப் பற்றிய தெளிவில்லாமல் அவர்களும்  இருக்கின்றார்கள்; எப்போது யாகங்களைச் செய்ய வேண்டும் என்பதையும் அறியாதிருக்கிறார்கள்; ஏற்கனவே அச்சத்தில் உறைந்துள்ள அவர்களை, மேலும் எதற்காக  அச்சுறுத்த வேண்டும்?||74||

யாக பலிகள் தமக்கு சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்பதினால் பசியோடு இருந்த தெய்வங்கள்  ‘நாம் படைப்புக் கடவுளான பிரம்மதேவரிடம் சென்று, நாம் எதிர் கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை அவரிடம் எடுத்துரைப்போம். அவரே இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வை கொடுக்கட்டும். இந்த சிக்கலை எவ்வாறு தீர்ப்பது என்பதை அவர் நிச்சயமாக அறிந்திருப்பார்’ என்று எண்ணினார்கள்  ||75||

தேவலோகத்தில் இருந்த  தேவர்கள் மற்றும் தேவ கணங்கள்  தங்களுக்குள் இவ்வாறு தீர்மானித்து,  பிரும்ம தேவர்  இருந்த சத்ய லோகத்திற்கு சென்று அவரை போற்றி வணங்கிய பின்னர்  முழுச் சூழ்நிலையையும் அவருக்குத் தெரிவித்தனர்||76||

அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார் ‘ஒரு உண்மையான கற்புக்கரசி (சதி) சினம் கொண்டால், அச்சத்தின் காரணமாக சூரியன் உதிப்பதே நின்று விடும்; முழுப் பிரபஞ்சமும் நடு நடுங்கிப் போகும்;  இச் சூழ்நிலையும் அத்தகைய ஒரு கற்புக்கரசியின் சாபத்தாலேயே ஏற்பட்டு உள்ளது ||77||

இச்சிக்கலுக்கான தீர்வு என்று பார்த்தால், ஒரு ஒளியை மற்றொரு பேரொளியால் மட்டுமே வெல்ல முடியும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளன; சூரியனுக்கு முன்னால் ஒரு எண்ணெய் விளக்கு எரியும்போது அதன் ஒளி மங்கி விடுவதை போல, அனைத்துக் கற்புக்கரசிகளும், சூரியனைப் போன்ற பேரொளி கொண்ட அனுசூயாவின் கற்பிற்கு முன்னால் தாம் எவருமே நிகரல்ல என்பதை மனதில் கொண்டு  அன்னை அனுசூயாவையே  தங்கள் தலைவியாக கருதுகின்றனர் ||78||

ஆகவே கற்புக்கரசிகளிலேயே இணையற்றவளும், தூய்மையான மனதையும்  கொண்ட அன்னை அனுசூயா வசிக்கும் பைத்தான்  நகருக்குச் செல்லுங்கள்; அங்கு சென்று அவளிடம்    பிரச்சனைகளை கூறி, அந்த பிரச்னையை நல்ல விதத்தில் முடித்து வைக்குமாறு வேண்டிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார் ||79||

மேலும் கூறினார் ‘மனம் கலங்கி, தடுமாற்றத்தில்  நிற்கும் அந்த கற்புக்கரசியான கௌசிகா எனும் அந்தணரின் மனைவியை சமாதானப்படுத்தி,  தக்க அறிவுரை வழங்க அன்னை அனுசூயாவால் மட்டுமே இயலும்; அவள் உங்களுக்கு நிச்சயம் துணையாக வருவாள் என்பதாக நான்  உறுதியாக நம்புகின்றேன்; ஒரு கற்புக்கரசியினால்  ஏற்பட்டு உள்ள இந்தச் சிக்கலான நிலைக்கு  அனுசூயாவைத்  தவிர வேறு யாராலும் தீர்வு காண இயலாது’ ||80||

அதைக் கேட்ட தேவலோக  தேவர்கள் மற்றும் தேவ கணங்கள்  பிரம்ம தேவரையும் தங்களுடன் வருமாறு வேண்டிக் கொண்டனர்;  பிரம்மதேவரும் அதற்குச் சம்மதித்துத் தலையசைத்தார்; உடனடியாக அவர்கள் அனைவரும் பைத்தான் நகருக்கு  புறப்பட்டுச் சென்று அன்னை அனுசூயாவின் ஆசிரமத்தை அடைந்தனர் ||81||

தங்கள் இருப்பிடத்திற்கு  அத்தகைய பெருமை வாய்ந்த தேவ, தேவர்கள் பிரும்ம தேவரின் தலைமையில் கூட்டமாக வந்ததைக் கண்ட அத்ரி முனிவரும், அன்னை அனுசூயாவும் அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று விருந்தோம்பல் செய்து உபசரித்த பின்னர்  அவர்களுடைய  எதிர்பாராத வருகைக்கான காரணத்தை குறித்து வினவினர்||82||

அதற்குப் பதிலளிக்கும் விதமாக, தேவர்கள் மீண்டும் அந்தப் தெய்வீகமான தம்பதியினரை வணங்கிய பின்னர் பின்வருமாறு கூறினர்  ‘ஓ அன்னை அனுசூயா தேவியே,   உமது மேலான புகழைப் பற்றிக் கேள்விப்பட்ட நாங்கள், எங்களுக்கு தற்போது ஏற்பட்டு உள்ள அனைத்து துயரங்களுக்குமான தீர்வை  உங்களால் மட்டுமே தர முடியும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்துள்ளதினால்   எங்களுக்குத் நீங்களே துணை புரிய  வேண்டும் என்று உங்களிடம் வேண்டிக் கொள்கின்றோம் ||83||

ஒரு கற்புக்கரசி சூரிய பகவானை சபித்ததின் விளைவாக, அவர் வானில் மறைந்து இருக்க நேரிட்டுள்ளது; அதன்  காரணமாக வேத நெறி சார்ந்த நற்செயல்கள் மற்றும் யாக  வழிமுறைகள் அனைத்தும் சீர்குலைந்து வீழ்ச்சியடைந்து உள்ளன;  பூமி முழுவதுமே துரதிர்ஷ்டத்தாலும் இன்னல்களாலும் சூழப்பட்டுள்ளது ||84||

இத்தகைய இக்கட்டான சூழல் ஏற்பட்டு உள்ளதின் காரணமாக, தாங்கள் எங்கள் மீது கருணை கொண்டு, கௌசிக முனிவரின் கற்புக்கரசியான மனைவியைச் சாந்தப்படுத்தி, மீண்டும் சூரியனை உதிக்க வைக்க வேண்டும் என்று உங்களிடம் வேண்டிக் கொள்கின்றோம்;  இப்பணியை நிறைவேற்றத் தேவையான தவ வலிமை தங்களைத் தவிர வேறு எவருக்கும் இல்லை’ என்றார்கள்  ||85||

அதைக் கேட்ட அன்னை அனுசூயா பதிலளித்தாள் ‘நீங்கள் அனைவரும் போற்றுதலுக்குரிய தேவர்கள்; உலகைக் காப்பவர்களாகவும் ரட்ஷிப்பவர்களாகவும் என்றும் வணங்கப்படுபவர்கள்; அப்படிப்பட்ட வலிமை  கொண்ட அத்தகைய நீங்கள் இன்று என்னிடம்  உதவி கேட்டு வந்துள்ளது எனக்கு  பெரும் ஆச்சர்யத்தையும்,  திகைப்பையும் அளிக்கிறது ||86||

கவலைப்படாதீர்கள்  நீங்கள் கேட்டுக் கொண்டபடியே  நான்  புறப்பட்டுச் சென்று, அந்த கற்புக்கரசியை சமாதானப்படுத்துவேன்; இந்த சூழ்நிலையை நான் மிகுந்த சாமர்த்தியத்துடன் கையாள்வேன்’ என்று கூறி விட்டு  அந்த சிக்கலான சூழ் நிலைமையை  கையாள அவர்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு சென்றாள். ||87||

அன்னை அனுசூயா அத்ரி முனிவருடன் நடந்து சென்றாள்; தேவர்கள் அனைவரும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றனர். அவர்கள் கௌசிக முனிவரின் இல்லத்தை அடைந்ததும், அத்தகைய ஒரு தெய்வீகமான இல்லத்தை அடைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்||88||

கௌசிக முனிவரின் மனைவி அனைவரையும் முறைப்படி வரவேற்றாள்; அன்னை அனுசூயாவை ஆரத் தழுவிக் கொண்டாள்;  வந்திருந்த அனைவரையும் உபசரித்த பின்னர்    அவர்கள் நலன்களையும் விஜாரித்த பின்னர் அவர்கள் தமது இல்லத்திற்கு வந்ததற்கான வந்ததற்கான காரணத்தை  குறித்தும் கேட்டாள் ||89||

அதன் பின்னர் கௌசிக முனிவரின் மனைவியிடம் அன்னை அனுசூயா  கூறினாள் ‘ஓ கற்புக்கரசியே, உனது  இனிமையான, மென்மையான பேச்சைக் கேட்பதற்கு மிகவும் இதமாக உள்ளது. இவ்வுலகில் உன்னைப் போன்ற கற்புக்கரசி  எங்கு வாழ்ந்தாலும், அவர்களின் பெருமையையும், புகழையும் கேட்பதில்  உள்ளத்திற்கு இதமாக இருக்கிறது ||90||

எந்த ஒருவளுக்கு தன்னுடைய கணவரே  தேவர்களை விட  மேலானவராகத் தெரிவாரோ, எவள் ஒருவள் தனது  கணவரின்  முகத்தைப் பார்க்கும்போதே அவருக்குள்  பிரம்மத்தை காணும் ஆற்றல் பெற்றிருக்கிறாளோ, அவளுக்கு அவற்றை விட பெரும்  மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்?  ||91||

எவள் ஒருவள் தன் கணவரை   தனது மனத்தால், உடலால், பேச்சால் மகிழ்ச்சியுடன் இருக்க வைத்து அவருக்கு  ஒரு முகப்பட்ட பக்தியுடன் சேவை செய்தபடி இருப்பாளோ அவள் தன்னை மட்டுமல்லாமல், தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் தூய்மை படுத்துகிறாள்||92||

ஒரு பெண்ணின் தூய்மையான கற்பு என்பது ஒரு புண்ணியத் தலத்திற்கு சமமானது என்பதே அனைவருடைய ஒருமித்த கருத்தாகும்; அத்தகைய பெண்  தன் கணவருக்கு பணிவிடை செய்வதன் மூலம் தனது கர்ம வினைகள் அனைத்தையும் நீக்கிக் கொண்டு விடுகிறாள் ||93||

மனித வாழ்வின் நான்கு முக்கிய லட்சியங்களாக (புருஷார்த்தங்கள்) அறம் (தர்மம்), பொருள் (அர்த்தம்), இன்பம் (காமம்), வீடு (மோட்சம்) ஆகியவை போற்றப்படுகின்றன; ஒரு கற்புக்கரசி அவை அனைத்தையும் அடைகிறாள் என்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன; அவளுக்குக் கால தேவனைக் குறித்த அச்சமோ, பிற்காலத்தில் ஏற்படக் கூடிய தண்டனைகள் குறித்த கவலையோ ஒருபோதும் இருப்பதில்லை ||94||

ஆனால் கற்புக்கரசிக்கான  நன்னடத்தைகளின்படி வாழ்வதென்பது, தாங்கவொண்ணா ஒரு பெரும் சுமை என்பதாக பெரும்பாலான பெண்களுக்கு  தோன்றும்; அத்தகைய எண்ணம் கொண்டு வாழ்பவர்கள் துரதிர்ஷ்டவசமான பெண்கள் ஆவார்கள்; அவர்கள் தமது வாழ்நாளில் மிகுந்த துன்பத்தையே அனுபவிக்கின்றனர்  ||95||

தனக்குப் பிடித்த ஆடைகளை தனது  கணவர் வாங்கி கொடுக்க மறுத்தால், உடனடியாகத் சண்டை போட்டுக்கொண்டு  தன் தாய் வீட்டிற்கு  சென்று விடுவாள்; தனக்கெனத் தனி வீடோ அல்லது பிற வசதிகளையோ செய்து தாராவிடில் அவற்றை பெற வேண்டும் என்பதற்காக  தன் கணவனிடம் சண்டை இட்டவண்ணமே  இருக்கிறாள்||96||

உண்பதற்கு சுவையான உணவுப் பண்டங்கள், அலங்கரித்துக் கொள்ள ஆபரணங்கள்,  ஆடம்பரமாக இருக்கத் தேவையான பொருட்கள்  என அனைத்தையும்  எவள் ஒருவள் துறந்து  நிற்கின்றாளோ அவளே பாராட்டிற்கு உகந்தவள் ஆவாள்  ||97||

தனது கணவர் எப்படிப்பட்டவராக  இருந்தாலும், அவர் மீது உள்ள தனது  அன்பை சற்றும் குறைத்துக் கொள்ளாமலும் மாற்றாமலும் வைத்துக் கொண்டு அவருக்கு பணிவிடை செய்பவளே, பக்தி மிக்க தம்பதிகள் வசிக்கும், தேவலோகங்களில் சென்று வசிப்பவளாக இருப்பாள் என்பதாக நம்பப்படுகின்றது ||98||

ஒரு மனைவி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு வழி காட்டும் வேத நெறி முறைகள் கிடையாது; அவர்கள் தமது கணவன்மார்கள் பெறும் தர்மத்தில் பாதி பலனை அடைகின்றார்கள்; அந்த நிலை மண் உலகில் மட்டும் அல்ல வான்  உலகங்களிலும் அவளுக்கு கிடைக்கின்றது||99||

எனவே உங்களை பொறுத்தவரை  ஒரு மேன்மையான பக்தி மற்றும் கற்பு நெறி தவறாத மனைவியாக வாழ்ந்து கொண்டு வந்துள்ளதினால்  இந்த லோகத்திலும் சரி மறு லோகத்திலும் சரி  உங்களுக்கு மகிழ்ச்சிகரமான வாழ்க்கை  காத்திருக்கின்றது   அம்மா||100||

நானும் அது போலவேதான் இதுவரை வாழ்ந்து கொண்டு  உள்ளதினால் எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு இருக்கின்றேன்; நான் எப்போதுமே என் தெய்வத்தின் (கணவரின்)  பாதத்தில் சரண் அடைந்தவளாகவே  இருக்கிறேன் ||101||

என்னைப் பொறுத்தவரை எனக்கு  தெய்வமும் எனது கணவரும் ஒன்றேதான்;அவர்கள் இருவரும் வெவ்வேறானவர்கள் அல்ல; எனது கணவர்தான் என்னை அனைத்து உலக பந்தங்களிலும் இருந்து விடுதலை பெறவும்,  உடல், உணர்ச்சி, மன அழுத்தம்   போன்றவற்றுடன் தொடர்புடைய துயரங்களின் சுமையை என்னுள் இருந்து  இறக்கி விடவும் உதவியவர்’ என்றாள்  ||102||

இப்படியாக அன்புடனும் ஸ்னேகத்துடனும் அனுசூயா கூறிய  வார்த்தைகளைக் கேட்ட கௌசிக முனிவரின் கற்புக்கரசியான மனைவி மிகவும் மகிழ்ச்சியடைந்து, அனுசூயாவின்  பாதங்களில் சட்டென்று  விழுந்து வணங்கிய பின்னர்,  கடமையுணர்வு மிக்கவளாகவும், அன்பு மிக்கவளாகவும் உள்ள நிலையில் இருந்தவாறு கூறினாள்||103||

வலிமையுள்ள அன்னையே, ஓ, அனுசூயா மாதாவே, கற்பு நெறிக்கு உதாரணமாகத் திகழும் அனுசூயா அன்னையே, நீங்கள் தெய்வ கணங்களில் இருந்து வேறுபட்டவர் அல்ல; உங்களுக்கு மனமார்ந்த நன்றி, உங்களுக்கு நன்றி;  அத்ரி முனிவரின் அன்புக்குப் பாத்திரமானவளே, நீங்கள் வேத புராண உபநிட நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள  நீதி நெறி முறைகளோடு   வாழ்பவர்கள்  என்பதினால் உங்களை வணங்குகிறேன் ||104||

என்னைப் பற்றி கூற வேண்டுமானால் எனக்கான கர்மா எது, தர்மம் எது, எனது கடமைகள் என்ன என்பதைக் குறித்த முழுமையான விழிப்புணர்வு எனக்கு இல்லை; எனக்கு பேரருளை பெற்றுத் தரக்கூடியது எது என்பது கூட எனக்குத் தெரியாது; எனது அகத்தின் சாராம்சம்  எங்கு குடி கொண்டிருக்கிறது என்பதைக் கூட நான் அறியேன் ||105||

என்னைப் பொறுத்தவரை எனது கணவருக்குப் பணிவிடை செய்வதை மட்டுமே முதன்மையானதும் முக்கியமானதுமான பணியாக வைத்துக் கொண்டுள்ளேன்; அதையும் கூட உங்களுடைய வாழ்க்கையை பார்த்தே கற்றுக் கொண்டேன்;  இந்த பூமியில்  எனது மூச்சும், உயிரும், முழுமையான வாழ்வாதாரமும் யாரைச் சார்ந்திருக்கிறதோ, அந்த கணவரை  தவிர வேறு யார் எனக்கு வாழும் தெய்வமாக  இருக்க முடியும்?||106||

கடுந் தவங்கள் செய்தும்  கூடப் பெற இயலாத ஒரு பேறு எனக்கு கிடைத்து உள்ளது என்னவென்றால் அது  உங்கள் வருகைதான்.   எந்த விதத்திலான அகங்காரமோ, செருக்கோ இன்றி, அனைவரையும் அன்போடு தங்களுக்கு அருகிலேயே அரவணைத்து வைத்துக் கொள்கிறீர்கள் ||107||

தங்களது இனிய அறிவுரைகளைக் கேட்ட மாத்திரத்தில்  எனது உள்ளமும் உயிரும் பெறும் மகிழ்ச்சி அடைந்து விட்டது;  தாங்கள் இங்கே எழுந்தருளியிருப்பதே  கணவரின் பக்தி நெறியில் நான்  ஈடுபட்டிருப்பதன் விளைவாகக் கிடைத்த மிகச் சிறந்த பலனும், பெரும் நன்மையும் போன்றது ஆகும் ||108||

பல்வேறு தெய்வங்களுடனும் இணைந்து வந்துள்ள உங்கள் அனைவரையும்   நேரில் தரிசிக்கும் பேறு எனக்குக் கிட்டியுள்ளது; அதுவும், எனது தரப்பிலிருந்து எவ்வித முயற்சியோ, வேண்டுதலோ இல்லாமலேயே இது சாத்தியமாகியுள்ளது; உங்கள்  அனைவரது வருகையினால் இந்த இல்லத்தைப் புனிதப்படுத்தி உள்ளீர்கள்; ஆகவே இன்றைய   நாள் மிகவும் மங்களகரமானதொரு நாளாகும் ||109||

தங்கள் விருப்பங்கள் அனைத்தும் ஏற்கனவே முழுமையாக நிறைவேறிய நிலையில் இருப்பவர் தாங்கள்; அப்படியிருக்க, தாங்கள் இங்கே எழுந்தருளியதற்கான காரணம் என்ன என்பதைத் தயவு செய்து எனக்கு கூற வேண்டும்; அதன் மூலம், என் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் தவறான நம்பிக்கைகள் அனைத்தும் அகன்று, நான் மீண்டும் நிம்மதியுடன் அமைதியுடன் இருக்க இயலும்’||110||

II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் முதல் அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது
OVI* பாடல்களின் விளக்க உரை: 110
முதல் மற்றும் இரண்டாம் அத்தியாயங்களின் மொத்த பாடல்கள்:108+110 = 218

*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}

……இதோடு அத்தியாயம் -2 முடிவடைந்தது
அத்தியாயம் -3தொடர்கின்றது