COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION
பாகம் -1
மங்கல துவக்கம்

அத்தியாயம்-1
ஒன்பது வகை பக்தி முறைகள்
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
ஒருவரின் செயல்பாட்டையும், அறிவாற்றலையும் பெருக்கி, பிராணன் முதல் ஐம்புலன்களையும் அடக்கி ஆள வைப்பவர், அனைத்து இயக்கத்திற்கும் மூலாதாரமான மஹா கணபதியை முதலில் வணங்குவதை போலவேதான் உங்கள் பாதங்களிலும் நான் வீழ்ந்து வணங்குகின்றேன்; நான் செய்யத் துவங்கி உள்ள இந்த தெய்வீக பணிக்கு உங்களது முழுமையான ஆசிகள் கிடைக்க வேண்டும் என உங்களை வேண்டுகின்றேன். ||1||
ஆதி அம்பாவின் தெய்வ மகன், தெய்வ லோக இசைக் கலைஞர்கள் சூழக் காட்சி தருபவர், வாழ்க்கையின் அனைத்து தடைகளையும் விலக்குபவர் எனப்படும் அவரது கைகளால் காட்டும் முத்திரைகள் அச்சமின்மை மற்றும் அருள் பாலிக்கும் வரங்களை தரும் கோலம் ஆகும் ||2||
அவரே அனைவரையும் இயக்குபவர், அனைத்து படைப்புகளுக்கும் மூலமானவர்; அனைவரையும் காத்து அருள் புரிபவர்; தீயவற்றை அழிப்பவர்; இந்த உலகைக் கடக்க நினைப்பவர்களுக்கு (மோட்ஷ நிலையை அடைய எண்ணுபவர்களுக்கு) அருள் பாலிப்பவர்; அனைத்து விதங்களிலான துன்பங்களையும், துயரங்களையும் விலக்குபவர்; ஒருவரது வாழ்க்கையின் பயணத்திற்கு துணை புரியுமாறு வேண்டப்படுபவர் ||3||
அவரே நமது முதன்மை குரு ஆவார்; அவர் முன் நாம் தலை வணங்கி நிற்கின்றோம். அவரை கைகூப்பி வணங்குகின்றோம்; அவரது பாதங்களில் தலையை வைத்து நமஸ்கரிக்கின்றோம்; அத்தனை ஏன் அனைத்து தெய்வங்களும் அவரையே பிரார்த்திக்கிறார்கள் ||4||
புராண, இதிகாச நூல்களில் மேன்மையாக கூறப்பட்டுள்ளவர்; ஸ்ரீமத் தத்தாத்ரேயர் மற்றும் ஸ்ரீமத் ந்ருசிங்க சரஸ்வதி போன்ற நாமங்களால் அலங்கரிக்கப்பட்டவர்; அவரே பரபிரும்மன்; அழிவற்றவர்; பேரின்பத்தைத் தருபவர் மற்றும் அவருக்கு நிகர் வேறு எவரும் இல்லை ||5||
அவரது மேன்மையை எடுத்து உரைக்கவே இந்த நூலும் எழுதப்பட்டு உள்ளது; இதை எழுதிய ஆசிரியர் ஸ்ரீமத் வாசுதேவ் இந்த பணியில் வெறும் கருவியாக மட்டுமே இருந்துள்ளார்;. எந்த ஒருவர் தூய மனநிலையில் இருந்து கொண்டு இந்த நூலை கேட்பார்களோ அல்லது படிப்பார்களோ, அவர்கள் விரும்பியதை அடைய அந்த மூல தெய்வத்தின் அருளாசி நிச்சயமாக கிடைக்கும் ||6||
உலகத்தை மேன்மைப்படுத்த வேண்டும் என்பதை மனதில் கொண்டு, தனித்தன்மை வாய்ந்தவரும், அனைத்து தெய்வங்களிலும் மேலான அந்த தெய்வம் அத்ரி மஹரிஷியின் வீட்டில் அவதாரம் எடுத்தார்; பல புராணங்களிலும் மேன்மையாக கூறப்பட்டுள்ள அவரது வாழ்க்கை வரலாறே இங்கு சித்தரிக்கப்பட்டு உள்ளது ||7||
அனைத்து புராணங்களில் கூறப்பட்டுள்ள சாராம்சங்களை ஒன்றிணைத்து, சுமார் 3500 வசன பாடல்களாக, அந்த தெய்வத்தின் மகிமையை வெளிப்படுத்தும் ஸ்ரீமத் தத்த புராண உரை எழுதப்பட்டு உள்ளது. ஆனால் அது பெரும்பாலானோர் அறிந்திராத சமிஸ்கிருத மொழியில் விளக்கிக் கூறப்பட்டு உள்ளது என்பதினால் அவற்றின் சாராம்சங்கள் அனைவராலும் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது ||8||
எவருடைய நாபியில் இருந்து உலகத்தை படைத்த தாமரை தோன்றியதோ, எவர் பக்தர்கள் மீது பெரும் அன்பு கொண்டவரோ, எவர் அதீத ஒளிமயமானவரோ, எவர் மனதின் அனைத்து தடுமாற்றங்களையும் களைகின்றாரோ, அவருடைய மேன்மையை வெளிப்படுத்தவே இந்த நூல் எழுதப்பட்டு உள்ளது ||9||
மூல தத்த புராண உரை மூன்று தொகுதிகளாக உள்ளது; இது ஞான யோகம், கர்ம யோகம் மற்றும் உபாசனா யோகம் என மூன்று பிரிவுகளாக எழுதப்பட்டு உள்ளது; இவற்றில், ஆத்ம விடுதலையை அடையும் முறையைக் குறித்துப் பேசும் மூன்றாம் பகுதியே, ஒரு சாதகரின் உள்ளத்தில் இறைவன் மீது உள்ள அன்பை ஊக்கப்படுத்துவதாக அமைந்து உள்ளது. ||10||
இந்த நூல் காத்தவீர்யனின் வாழ்க்கை, அலர்கன் ஆன்மீக அறிவு பெற்ற கதை, மற்றும் ஆயு எனும் மன்னனும், யதுகுல மன்னனும் வாழ்க்கையில் மேன்மை அடைந்த கதைகளை உள்ளடக்கி உள்ளது ||11||
உண்மையிலேயே ஆத்ம விடுதலை எனும் முக்தியை அடைய வேண்டும் எனில் அவர்கள் ஒன்பது* வழிகளில் உள்ள பக்தி மார்கத்தை கடுமையாக கடை பிடித்தால் மட்டுமே மன மகிழ்வைத் தரும் ஆத்ம விடுதலையை அடைய முடியும்
{விளக்கம்:- *உண்மையான ஆத்ம விடுதலை (முக்தி) அடைய, முன்னோர்கள் மற்றும் சாஸ்திரங்கள் காட்டி உள்ள நவ வித பக்தி (ஒன்பது வகையான பக்தி) மார்கத்தைக் கடைப் பிடிப்பது மிகவும் சக்தி வாய்ந்த வழி முறையாகக் கருதப்படுகிறது. நவதா பக்தி என்று அழைக்கப்படும் ஒன்பது வழிகளும் மனதை இறைவனோடு இணைத்து, அகங்காரத்தை ஒழித்து, ஆத்ம ஞானத்தை அளித்து, இறுதி முக்தி எனும் ஆத்ம விடுதலையை அடைய உதவுகின்றன} ||12||
பக்தி மார்க்கத்தின் ஒன்பது வழிமுறைகள் ஸ்ரீமத்மத் பாகவதத்தின் 7வது காண்டத்தில் மன்னர் பிரஹ்லாதாவினால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு: –
பகவானின் கதைகள், மகிமைகள் மற்றும் வேதங்களைக் முழு மனதுடன் ஆழ்ந்து கேட்பது; படித்தவற்றை நினைவாற்றலில் வைத்து இருத்தல்; தெய்வங்களுக்கு பாத சேவை செய்வது; தெய்வங்களுக்கு முறையான சடங்குகளை செய்வது; தெய்வ வழிபாட்டில் ஈடுபடுதல்; தெய்வ மகிமைகளை பரப்புதல்; பிரார்த்தனைகள் செய்வது; தான் தெய்வத்தின் சேவகர் என்ற நிலையில் தன்னை வைத்துக் கொள்வது; இறைவனிடம் முழுமையான சரணாகதி அடைதல் போன்றவை ஆகும் II13II
மன்னர் கார்த்தவீரியன் பல்வேறு புராண மற்றும் வேத நூல்களை ஆழமாக படித்தார்; மன்னர் அலர்கன் என்பவர் தெய்வ வழிபாட்டில் தன்னை தீவீரமாக ஈடுபடுத்திக் கொண்டார்; மன்னன் ஆயு என்பவர் தெய்வத்தின் மேன்மையான பக்தரானார்; ஸ்ரீமத் பரசுராமரோ, ஸ்ரீமத் தத்தாத்ரேயருக்கு நெருக்கமானவராக தன்னை மாற்றிக் கொண்டார் ||14||
ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பக்தனான விஷ்ணுதத்தர் இறைவன் சேவையில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார்; யதுகுல மன்னன் தெய்வ வழிபாட்டில் முழுமையாக மூழ்கினார்; வேத தர்மா எனும் பக்தர் அனைத்திற்கும் மேலான தெய்வத்தின் (ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான் ) புகழைப் பரப்பி வந்தார்; வேத தர்மாவின் சீடனான தீபக், அனைத்திற்கும் மேலான தெய்வத்தின் லீலைகளை ஆழமாக கேட்டறிந்தார் ||15||
இப்படியாக பல்வேறு வழி முறைகளில் அவரவர் தாம் தேடி அலைந்த தெய்வத்திடம் சரணாகதி அடைந்தார்கள். இருமை* இன்றி, ஒரு முகத் தன்மையோடு ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் தெய்வீக பாதங்களில், தம்மை இணைத்துக் கொண்டு, நிர்வாண நிலையை அடைந்தார்கள்
{* விளக்கம் :- Non-duality- அதாவது அத்துவைதம், அதாவது இரண்டாவது இல்லாது என்று பொருள் ஆகும்; இது “இரண்டு அல்ல” (Not two) என்ற கருத்தைக் குறிக்கிறது, அதாவது, பிரபஞ்சம், கடவுள் மற்றும் ஆத்மா ஆகியவை தனித் தனியானவை அல்ல, அனைத்தும் ஒரே பரம்பொருளின் வெளிப்பாடே என்பது இதன் அடிப்படைத் தத்துவம் } ||16||
அறிவாற்றலின் அடிப்படை தாயைப் போன்ற நிலையிலான பக்தி மார்க்கம் ஆகும். ஆகவே எவர் ஒருவர் தம்மை ஒன்பது வழி முறைகளிலான பக்தி மார்கத்தில் முழுமையாக இணைத்துக் கொள்கின்றார்களோ, அவர்கள் எந்த வித சிக்கல்களும் இன்றி உச்ச நிலையான பிரும்ம நிலையோடு ஐக்கியமாகி விடுவார்கள் ||17||
பரப்பிரம்மம் அனைத்திற்கும் மேலானது; இந்த உண்மையை முழுமையாக உணர்பவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் புத்துணர்வு பெறுகின்றன, அவர்கள் மனதில் உள்ள தவறான நம்பிக்கைகளும் விலகுகின்றன ||18||
தூய்மையான தெய்வீக மனநிலையில் இருந்தவாறு தியானிக்கையில், மெல்ல மெல்ல அவர்கள் முழுமையான அமைதி நிலையில் சென்று விடுவார்கள் ; அப்போது அவர்கள் மனதில் ஊஞ்சலாடும் அனைத்து கற்பனைகளும், நினைவுகளும் அழியத் துவங்கி விடும்; அந்த அமைதியான நிலையில், தன்னுடைய உண்மையான சொரூபத்தை உணர்கிறான் ||19||
ஆத்ம உண்மையை அறிந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், மேன்மையான ஒன்பது வழி முறைகளிலான பக்தி மார்கத்தில் இணைந்து பயணிக்கத் துவங்கி விடும்போது, அவர்கள் பயணிக்க வேண்டிய பாதை என்ன என்பது தெளிவாக புரியத் துவங்கி விடும் II 20 II
ஒன்பது வகைகளிலான பக்தி மார்கத்தில் முதன்மையானதும், மிகவும் எளிதானதும், என்ன எனில், முழுமையான தெய்வ நினைவோடு வாழத் துவங்குவதுதான்; அந்த நிலையில் வாழத் துவங்கி விட்டால், மீதமுள்ள எட்டு மார்கங்களிலும் அது தன்னால் விரிவடைந்து விடும் என்ற உண்மையை பக்தர்கள் உணர்ந்து உள்ளார்கள் II 21 II
மேலான தெய்வத்தின் (ஸ்ரீமத் தத்தாத்திரேயரின்) வடிவங்களும், தோற்றங்களும் ஆயிரத்திற்கும் மேல் உள்ளன; ஒவ்வொரு வடிவத்திற்கும் தோற்றத்திற்கும் ஒவ்வொரு பெயர்கள் உண்டு என்பதினால் அந்த பெயர்களும் ஆயிரக்கணக்கில் உள்ளன; அவரது லீலைகளும் அல்லவா ஆயிரத்திற்கும் மேல் உள்ளன ||22||
ஒவ்வொரு கணமும் அவை அனைத்தையும் எந்த ஒருவன் நினைவில் வைத்துக் கொண்டு, பக்தி மார்கத்தில் இருக்கத் துவங்குவானோ, அந்த தெய்வத்தைக் குறித்த அனைத்தையும் தனது மனதில் கிரகித்துக் கொள்ள அவன் எடுத்த முயற்சிகளினால் சோர்வடைந்து இருந்த அவயங்கள் அனைத்தும் புத்துயிர் பெற்று, அவன் விரும்பும் நிர்வாண நிலையை எளிதில் அடைய வழி வகுக்கின்றது II23||
எந்த ஒருவன் பிற எந்த எண்ணங்களும் மனதில் இன்றி, முழுமையான தெய்வ நினைவில் மட்டுமே இருந்தவாறு பயணிக்கத் துவங்குவானோ, அது முதல் உண்பது, உடுத்துவது போன்ற வேறெந்த செயல்களுக்கும் அவன் அடிமையாவது இல்லை ||24||
ஒன்பது வழி பக்தி முறைகளில் நினைவாற்றல் என்பதே முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும். தெய்வங்களின் துதிப் பாடல்களையும், மேன்மைகளையும் கேட்டவாறு இருக்கும்போது இதயம் தூய்மையுடன் இருக்கும்; அவற்றைக் கேட்டுக் கொண்டே இருப்பதின் மூலம் பலர், சம்சாரக் கடலைக் கடந்து கரை சேர்ந்துள்ளனர். ||25||
ஒருவர் செய்யும் வேத வேள்விகளில், சடங்குகளில் மற்றும் நோம்புகள் மற்றும் விரதங்களில் சிறு சிறு குறைபாடுகள் ஏற்பட்டாலும், உண்மையான தெய்வ நினைவோடு, தெய்வத்தை மனதார போற்றி, ஆராதித்து செய்யப்படும் எதுவுமே பலன் தராமல் போவது இல்லை ||26||
தான் ஆராதிக்கும் தெய்வத்தை நேரடியாக காண முடியவில்லை என்றாலும், அதே தெய்வத்தை, எவர் ஒருவர் ஒரே நிலையிலான மனதோடு பூஜித்து, ஆராதித்து வருவாரோ, அவர் பற்றற்ற நிலையை அடைந்து, ஜனன, மரணம் எனும் சக்கரத்தின் ஆணி வேரை அழித்துக் கொள்வார் ||27||
மனதில் முழுமையான பக்தியோடு தொடர்ந்து தெய்வ ஆராதனை செய்து வரும்போது, ஒரு கட்டத்தில் இதயம் பக்தி பிரவாகத்தில் மூழ்கி மன மகிழ்ச்சியைத் தரத் துவங்கும், தம் பிறவியின் பலனை அடைந்து விட்ட மன திருப்தியால் வாழ்க்கையின் பிற நிகழ்வுகள் அனைத்துமே ஒன்றுமற்றவைகளாக தோன்றத் துவங்கி விடும் ||28||
தெய்வ ஆராதனையின்போது, தெய்வீக உணர்வினால் உந்தப்பட்டு ஒரு ஷணமாவது நீங்கள் உணர்ச்சி வயப்படாமல் இருந்தால், உங்கள் பேச்சும் மூச்சும் தழுதழுக்காமல் இருந்தால், உங்களுக்கு மயிர்க் கூச்சல் எடுக்காமல் இருந்தால், உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டுக்கள் விழவில்லை என்றால் ||29||
அவர்களது உள்ளுணர்வில் தெய்வீகத் தன்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படவில்லை, தான் மற்றும் தனது உடல் என்ற மன நிலையை கடந்து அவர்கள் நிற்கவில்லை என்பதே அர்த்தம் ஆகும்; அவர்கள் தெய்வத்தைக் குறித்து பேசுவதும், கூறுவதும் அர்த்தம் அற்றவைகளாகவே இருக்கும்; அவர்கள் எத்தனைதான் அறிவாளிகளாக இருந்தாலும் தெய்வத்தைக் குறித்து அவர்கள் பேசுபவை மதிப்பற்றவைகளாகவே இருக்கும் ||30||
தெய்வத்தின் மேன்மையைக் குறித்து கூறுபவற்றைக் கேட்கும் அன்பர்களுக்கும் அதே மனநிலை இருக்கும். எவர் ஒருவர் எந்த நிலையிலும் சஞ்சலம் அடையாத மன நிலையில் உள்ளாரோ, எவருடைய மனதும் செயலும் தெய்வ ஆராதனையில் ஒரு முகத்தோடு உள்ளதோ II31II
எவர் ஒருவர் மற்றவர் வளர்ச்சியால் பொறாமை கொள்ள மாட்டார்களோ, எவர் ஒருவர் மற்றவர்களுடன் போட்டி போட்டவண்ணம் இருக்க மாட்டார்களோ, தான் ஆராதிக்கும் தெய்வத்தின் மீது முழுமையான நம்பிக்கைக்கு கொண்டு உள்ளார்களோ, தான் உண்மையுள்ளவராக உள்ளனரோ, தெய்வ மேன்மைகளைக் கேட்கும்போது உறங்காமல், சலிப்படையாமல் அவற்றை கவனத்துடன் கேட்டவாறு இருப்பார்களோ, அவர்களுக்கு தெய்வத்தின் மேன்மையைக் குறித்து கேட்பது அனைத்தும் அமிர்தம் போன்று இருக்கும் II32II
பிரசங்கங்களில் கூறப்படும் தெய்வங்களின் மேன்மையை ஏற்கனவே பூரணமாக அறிந்து இருந்தாலும், மீண்டும் அதே தெய்வத்தின், அதே மேன்மைகளை கேட்கும் போது, சற்றும் சலிப்படையாமல் பக்தி பூர்வமாக இருந்தவாறு கேட்டு ஸ்திரமாக அவற்றை மனதில் வைத்துக் கொள்பவரது பக்தியே சிறந்த ஒன்றாக கருதப்படும் II33II
தெய்வத்தின் மீதான பிரசங்கங்களுக்கு செல்பவர்கள், அங்கு சென்று வீணான வம்புப் பேச்சுக்களில் ஈடுபட்டுக் கொண்டும், சலிப்படைந்து கொண்டும், எவ்வித கவனமும் செலுத்தாமல் பாதி உறக்க நிலையில் இருப்பது முறையல்ல II34II
அப்படிப்பட்ட விழாக்களுக்கு செல்வதினால் அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவது இல்லை. அப்படிப்பட்ட நிலையில் இருந்து கொண்டு செவிமடுப்பானாயின், அவனது அனைத்துத் தவறான புரிதல்களையும் அவன் எவ்வாறு போக்கிக் கொள்ள இயலும்?II35II
எனவேதான் நேர காலத்திற்கு மதிப்பு அளித்து, தான் செல்லும் அந்த சிறிய அளவிலான காலத்தில், அங்கு கூறப்படுவதை பக்தியுடன் கேட்பதே முழு பக்திக்கான அடையாளம் ஆகும். இப்போது ஒருவர் தெய்வ ஆராதனையில் தன்னை எவ்வாறு இணைத்துக் கொள்கின்றார் என்பதைக் கேளுங்கள் II36II
பிரபஞ்சம் முழுவதும் ஒரே தெய்வம் மட்டுமே உள்ளபோது, வழிபடுபவன் மற்றும் வழிபடப்படுபவர் எனும் இருமை எங்கிருந்து இருக்க முடியும்? அந்த எண்ணம் ஒருவரின் உணர்வு சார்ந்தவை; அப்படிப்பட்ட எண்ணங்கள் எவ்வாறு விமர்சிக்கப்பட்டாலும், உலகம் இருமையில் வாழ்கிறது என்பதே உண்மை ஆகும் ||37||
உலகத்தின் படைப்பும், அவற்றில் நடந்தேறிய நிகழ்வுகளும் காலம் தெரியாத காலத்திலிருந்தே இருந்தே கூறப்பட்டு வந்துள்ளன; அவை அனைத்தும் புராண இதிகாசங்களில் விவரமாக கூறப்பட்டு உள்ளன என்பதினால் ஒருவர் தமது வாழ்வில் கடந்து செல்ல வேண்டிய பாதையை வழி வகுத்துக் கொள்வது எளிதாக உள்ளது ||38||
கொடி, அங்குசம், தாமரை, கைகளில் பல்வேறு வகைகளிலான பொருட்கள் மற்றும் கைகளால் காட்டப்படும் சின்னங்களை கொண்டு தோற்றம் தரும் தெய்வங்களின் திருப் பாதங்களில் எந்த ஒரு துறவி தம்மை முழுமையாக இணைத்துக் கொண்டு விடுகின்றாரோ அவர் எந்த விதமான சந்தேகமும் இன்றி ஆத்ம விடுதலை அடைகின்றார்||39||
இப்போது தெய்வ ஆராதனை அல்லது வழிபாடு எவ்வாறு செய்யப்படுகின்றது என்பதைக் பாருங்கள்; ஒருவர் தனது மனதிற்கு உகந்த தெய்வத்தின் தோற்றம் இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டு ஆராதிக்க விரும்பினால், அதற்கான வழிமுறைகளும் புராண இதிகாசங்களில் காணப்படுகின்றன||40||
ஒருவர் தாம் தாம் பெரிதும் விரும்பிப் போற்றும் தெய்வத்திற்கு ஒரு திருவுருவத்தைக் செய்து வழிபடலாம்; தனது உடலையே ஒரு ஆலயமாக கருதி அதற்குள் தான் விரும்பும் அதே தெய்வத்தை தான் விரும்பும் வகையில் உள்ளதாக மனதார எண்ணிக் கொண்டு அந்த தெய்வத்தை ஆராதனை அல்லது துதி செய்து வழிபடலாம்; அது மிகவும் ஒரு எளிதான முறை ஆகும் ||41||
அப்படிப்பட்ட வழிபாட்டை அனுதினமும் மூன்று முறை, அதாவது விடியற்காலை, நண்பகல் மற்றும் அந்தி வேளையில் செய்ய வேண்டும். விடியற்காலையில் செய்யப்படும் வழிபாடானது 16 நிலைகளைக்* கொண்டது. அது குறித்து வேத புத்தகங்களில் விளக்கப்பட்டு உள்ளது; அதே போல நண்பகலில் செய்யப்படும் வழிபாட்டு முறை ஐந்து நிலைகளிலானது**, மற்றும் அந்தி வேளையில் செய்யப்படும் வழிபாடு நீராஜனம் ***எனப்படும்
{* 16 வகை வழிபாடு என்பது ஒன்றன் பின் ஒன்றாக கீழ் கண்டவற்றை செய்வது ஆகும்; கடவுளை தியானித்தல்;ஆவாஹனம் (தெய்வத்தை அழைத்தல்); ஆசனம் (ஆசனம் அளித்தல்); பாத்யம் (பாதம் கழுவுதல்); அர்க்கியம் (கை கழுவுதல்); ஆசமனீயம் (குடிக்க நீர் தருதல்); ஸ்நானம் (நீராட்டுதல்); வஸ்திரம் (ஆடை சாற்றுதல்); யக்ஞோபவீதம் (பூணூல் அணிவித்தல்);சந்தனம் (சந்தனம் பூசுதல்); புஷ்பம் (மலர்கள் தூவுதல்); தூபம் (தூபம் காட்டுதல்); தீபம் (விளக்கு காட்டுதல்); நைவேத்தியம் (உணவு படைத்தல்); தாம்பூலம் (பாக்கு, வெற்றிலை); நீராஜனம் (கற்பூர ஆரத்தி) போன்றவை ஆகும்/ ** 5 நிலை வழிபாடானது பெரும்பாலும் வைணவ சமயத்தில் திருமாலின் (பெருமாளின்) ஐந்து நிலைகளை வழிபடுவதைக் குறிக்கிறது; பரநிலை (Para): முக்தி அடைந்தவர்களுக்கு வைகுண்டத்தில் காட்சி தரும் பரம்பொருளின் மிக உயர்ந்த நிலை; வியூஹ நிலை (Vyuha): வைகுண்டத்தில் க, நாராயணன், பிரத்யும்னன், அநிருத்தன் என நான்கு வியூகங்களாக காட்சி அளிக்கும் நிலை; விபவ நிலை (Vibhava): ராமர், கிருஷ்ணர் போன்ற அவதார நிலைகள்;அந்தர்யாமி நிலை (Antaryami): அனைத்து உயிரினங்களிலும் ஆத்மாவாக உறைந்திருக்கும் நிலை; அர்ச்சை நிலை (Archa): ஆலயங்களில் சிலாரூபமாக (சிலையாக) எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தரும் நிலை / ***நீராஜனம் என்பது கற்பூரம் அல்லது எண்ணெய் விளக்கைப் பயன்படுத்தி தெய்வம் மற்றும் குருவின் படங்களுக்கு முன் காட்டப்படும் சடங்கு ஆகும். அதன் தாத்பர்யம் என்ன என்றால் அவ்வாறு செய்யப்படும்போது ஒருவரை சுற்றி உள்ள மன இருள் அகற்றப்படுகிறது} ||42||
தமக்கு பிடித்தமான அனைத்தையுமே, முக்கியமாக உணவுப் பொருட்களை முதலில் தாம் விரும்பும் தெய்வத்திற்கு சமர்ப்பித்த பிறகே, அதை பிரசாதமாக உட்கொள்ள வேண்டும்; அப்படி ஒரு வாழ்வை மேற் கொள்வதில் மூலம் சம்சாரம் என்ற பெருங் கடலில் எளிதாகப் பயணிக்க முடியும் ||43||
தம்மைப் போலவே இன்னொருவரும் செய்யும் தெய்வ வழிபாட்டு முறையை கவனிக்க வேண்டும்; அவருடைய தெய்வ ஆராதனை தாம் செய்வதை விட மேன்மையாக இருக்குமானால் அதை தம்முடைய மனதில் பதிய வைத்துக் கொண்டு அந்த வழி முறையை பின்பற்ற முயல வேண்டும்; அதுவே தெய்வத்துடன் ஒன்றிணையும் நிலை (Oneness) என்று பொருள்படும். (இதன் தாத்பர்யம் என்ன என்றால் இறைவனை அடைவதற்கு ‘முறை’களை விட, அந்த முறையில் நாம் வைக்கும் ‘முழுமையான ஈடுபாடு’ முக்கியம். மற்றவரின் சிறந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம், நாமும் இறைவனோடு நெருக்கமாக இணைய முடியும்||44||
இப்படியாக தெய்வத்திற்கு அனைத்தையும் மனதார சமர்ப்பணம் செய்த பின், அமைதியாக அமர்ந்து கொண்டு, அதே தெய்வத்தின் மீது தனது முழு கவனத்தையும் வைத்துக் கொண்டு அவரவர்களுக்கு தெரிந்த மந்திரங்களை மனதிலேயே உச்சரிக்க வேண்டும்; மந்திரங்கள் தெரியவில்லை என்றால் ‘குரு தத்தா’ என்ற நாம ஸ்மரணத்தை செய்தவாறு இருக்க வேண்டும் ||45||
வழிபாட்டு செயல் முறை இதுதான்; இப்போது நான் மனதார நேசிக்கும் தெய்வ வழிபாட்டு முறையை விவரிக்கிறேன்; அதில் மனதார ஈடுபடும்போது மனம் முற்றிலும் சாந்தம் அடைந்து மற்றவர்களால் அழிக்க முடியாத நிலையில் சென்று விட முடியும்||46||
பிராமணராக இருந்தாலும் சரி, சண்டாளனாக இருந்தாலும் சரி, பசுவாக இருந்தாலும் சரி, குதிரையாக இருந்தாலும் சரி, நாயாக இருந்தாலும் சரி, கழுதையாக இருந்தாலும் சரி, இந்த உலகில் படைக்கப்பட்டு உள்ள புலனறிவு மற்றும் புலனறிவு இல்லாத அனைத்துமே தெய்வீகத்தின் பிரதிபலிப்பே என்பதினால் அவை அனைத்திற்குமே மரியாதை கொடுக்க வேண்டும் ||47||
ஒவ்வொரு வார்த்தைகளிலும் புதைந்துள்ள உள் அர்த்தங்கள், வெளித் தெரியும் உடலுக்குள் மறைந்துள்ள உள் பாகங்கள் போன்றவை ஆகும்; அதன் உள்ளார்ந்த பொருள், பண்புகளுக்கு அப்பாற்பட்ட தெய்வத்தின் மீது கவனம் செலுத்த ஒருவரைத் தூண்டுகிறது; தெய்வம் முழுமையானது; இருப்பவை அனைத்திலும் உத்வேகம் அளிப்பதும், வெளிப்படுத்துவதும் அந்த தெய்வமே ஆகும்||48||
சுயத் தன்மை மற்றும் தூய விழுப்புணர்ச்சி கொண்டவரே பரபிரும்மன், அவருக்கு நிகர் வேறு எவரும் அல்ல; அது (பரபிரும்மன்) அறியப்படக் கூடியதாகவும், அன்பு செலுத்தத் தக்கதாகவும் இருப்பதே அதன் இருப்பிற்கான சான்றாகும். ஆகவே அவரை முழுமையான மனதுடன் வணங்கி அது இருப்பதற்கான சான்று ஆகும்; ஆகவே அந்த தெய்வத்தை துதித்து வந்தால் நாமும் அவர் வாழும் வானுலகிற்கு சென்று விட முடியும்||49||
அனைத்திலும் வியாபித்துள்ள தெய்வம் இல்லாத இடமே இல்லை என்பதினால் நமக்கு தெய்வத்தினால் படைக்கப்பட்டுள்ள யாரையும் விமர்சிக்கவோ அல்லது கேலி செய்யவோ உரிமை கிடையாது; நாம் எவருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது; யாரும் வருத்தப்படவோ அல்லது துக்கப்படவோ நாம் காரணமாக இருக்கக்கூடாது. நம்மைப் பொருத்தவரை, இந்த பிரபஞ்சத்தையே படைத்துள்ள அந்த தெய்வத்தை பக்தியோடு ஆராதனை செய்து வர வேண்டும், அவ்வளவே ||50||
இங்கே மேற்கோள் காட்டப்பட்டுள்ள பக்தி வழிபாட்டு முறை ‘ருத்ர அத்யாய’* என்ற சிவபெருமானின் பாடலின் குறிப்பில் இருந்து எடுத்துக் கூறப்பட்டவை ஆகும். தெய்வங்களின் ஊழியர்களாக இருந்து கொண்டு நாம் எப்படி பக்தி பூர்வமாக தெய்வத்தை ஆராதிக்க வேண்டும் என்பதை இப்போது நான் எடுத்துரைக்கின்றேன்
{*ருத்ர அத்யாயம் (அல்லது ருத்ராஷ்டத்யாயி) என்பது யஜுர் வேதத்தில் சிவபெருமானைப் போற்றும் மிக முக்கிய வேதப் பகுதியாகும்; இது ஸ்ரீமத் ருத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது; முக்கியமாக 10 அத்தியாயங்களைக் கொண்ட இதில், சிவபெருமானின் 11 அவதாரங்கள் (ஏகாதச ருத்ரர்) மற்றும் அவருடைய நற்குணங்கள் போற்றப்படுகின்றன; ருத்ர அஷ்டத்யாயி சமஸ்கிருதத்தில் ருத்ரனின் 100 பெயர்கள் மற்றும் சிறப்புகளைக் கூறுகிறது, இது சிவபெருமானின் சக்தியை உணர்த்தும் ஒரு சக்தி வாய்ந்த ஸ்தோத்திரமாகும் } ||51||
எப்படி ஒரு வேலையாள் தனது எஜமானனுக்கு பரிபூரணமாக அடி பணிந்து பணிவிடை செய்து வருவானோ, அதை போலவேதான் நாமும் அலட்சியம் இல்லாமல், சோம்பேறித்தனம் இல்லாமல், பாராட்டு அல்லது கண்டனத்தால் பாதிக்கப்படாமல் இருந்தவாறு, நாம் செய்ய வேண்டிய தெய்வ ஆராதனையை தொடர்ந்து செய்து கொண்டு வர வேண்டும்; அதுவே தெய்வத்திற்கு உண்மையாக ஒருவர் செய்யும் சேவை ஆகும்||52||
தெய்வ வழிபாட்டில் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டு விட்ட உண்மையான பக்தர் தமது பசியைக் குறித்தோ அல்லது சேமிப்பை பற்றியோ அல்லது சேமித்து வைத்துள்ளதை எப்படி காப்பாற்றுவது என்பதைக் குறித்தோ கவலை கொள்ளத் தேவை இல்லை; அவை அனைத்தையும் கொடுக்கும் அதே தெய்வம் அவற்றை அந்தந்த நேரத்தில் பார்த்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்||53||
இப்படி எல்லாம் இருக்கப் பழகிக் கொண்டு விட்டால் நாமும் தெய்வத்திற்கு உண்மையாக சேவை செய்யும் சேவகனாக மாறி விடுவோம்; இனி ஸ்ருதி மற்றும் உபநிஷத் நூல்களிலிருந்து குறிப்புகளை மேற்கோள் காட்டி தெய்வத்திற்கு பணிவிடை செய்வது குறித்து மேலும் விவரிக்கிறேன்||54||
நாம் பல்வேறு பிறவிகளை எடுக்கலாம், கல்ப காலங்கள் கூட கடந்து செல்லலாம், ஆனாலும் ஒரு இதயத்தில் குடி கொண்டு விட்ட தெய்வம் அந்த உள்ளங்களை எந்த நிலையிலும், ஒரு க்ஷணம் கூட மறப்பதும் இல்லை, கை விடுவதும் இல்லை||55||
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஸ்தோ’ அதாவது ‘அனைவரின் இதயத்திலும் வசிப்பது நான்தான்’ என்று கீதையில் கிருஷ்ணர் கூறுகின்றார்; அந்த உயர்ந்த கூற்றை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள்; ஏனென்றால் அனைவரது உள்ளத்திலும் இருப்பது அனைத்து இடங்களிலும் வியாபித்து உள்ள உயர்ந்த அந்த தெய்வத்தைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது||56||
எனவே தெய்வத்தின் உண்மையான பக்தராக என்றும் இருங்கள்; அனைத்து எதிர்பார்ப்புகளில் இருந்தும் விடுபட்டு, பட்டற்று இருக்கும்போது மட்டுமே பிரும்மத்துடன் ஒன்றிணைய இருக்க முடியும்; அதையே யோகங்கள் மற்றும் சாங்கியம்* போன்றவையும் வலியுறுத்துகின்றன
{*(சாங்கியம் என்பது கடவுள் வெளியே இல்லை உனக்குள்ளே இருக்கிறான் எனும் தத்துவக் கொள்கையை போதிப்பது ஆகும்) }||57||
ஒரு உண்மையான நண்பனைத் தவிர மற்ற அனைவர் மீதும் அக்கறையை இழக்கும்போது, எவரையும் நம்பாத மன நிலையில் உள்ளபோது, எவருடனும் மன எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில், உண்மையான நண்பனைத் தவிர வேறு எவரையும் புகழ்ந்து பேச மனம் இடம் தராத நிலையில் ||58 ||
அப்படிப்பட்ட சுயநலத்தை நட்பில் கூட காட்டினால், உலகப் பந்தத்தின் பிடியில் இருந்து எப்படி மீண்டு வர இயலும் ?; ஒரு தெய்வத்தின் மீது உண்மையான, முழுமையான பக்தி இருந்தால் எதற்காக வேறு பிறப்பு எடுக்க பிரார்த்திக்க வேண்டும்?
{இதன் தாத்பர்யம் என்ன என்றால் நான் அடுத்த பிறவியில் இப்படி பிறக்க வேண்டும், அப்படி பிறக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு இல்லாமல், மறு பிறப்பு இல்லாமல், வாழும் பிறவியிலேயே தெய்வத்தின் கால்களில் முழுமையாக கலந்து விட வேண்டும் என்றல்லவா வேண்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதாகும்}||59||
உண்மையான, மேலான பக்தி என்பது என்ன என்றால் தனது மனம் உட்பட தம்மிடம் உள்ள, செல்வம், குடும்பம், நிலம் மற்றும் வீடு என அனைத்தையும் மனதார தான் ஆராதிக்கும் தெய்வீகத்திற்கு அர்பணித்து விட வேண்டும்; அது மட்டும் அல்ல தன்னையும் அந்த தெய்வத்திடம் சமர்ப்பித்து விட வேண்டும். ||60||
ஒருவரது உள்ளத்தில் உள்ள ஆத்மா மட்டுமே தூய்மையானது, அறிவாற்றல் மிக்கது, ஒருவர் உடலுக்குள் உள்ள ஆத்மா அனைத்தையும் பார்க்கின்றது, அதற்கு நிகர் அது மட்டுமே ஆகும், அது எவருக்கும் கட்டுப்பட்டது அல்ல, சுதந்திரமானது, தூய்மையானது; அது தங்கி உள்ள உடல் செய்யும் தீமைகளுக்கும் அது பொறுப்பல்ல என்பதினால் அது எந்த விதமான கர்ம வினைகளினாலும் பாதிக்கப்படுவது இல்லை||61||
ஒருவரது உடலின் உள்ளிருக்கும் ஆத்மா சுதந்திரமானது; சாட்சி போலவே மட்டுமே நிற்கின்றது என்பதினால் உடலின் இன்ப துன்பங்களை அது அனுபவிப்பது இல்லை; அவற்றினால் ஏற்படும் விளைவுகளுக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது ||62||
அந்த உண்மை நிலையை முழுமையாக புரிந்து கொண்டு தனது எண்ணங்களை ஆத்மாவுடன் இரண்டறக் கலந்து விட்டால் தாம் விரும்பும் ஆத்ம விடுதலையை அடைய முடியும்; அதற்கான முதல் அடித்தளமான பட்டற்ற நிலைக்கு தம்மை கொண்டு செல்ல வேண்டும், என்ற உண்மையை துறவிகள் நன்கே உணர்ந்து உள்ளார்கள் ||63||
அப்படிப்பட்ட பக்தி வழி முறைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு பக்தி மார்க்கத்தின் உச்ச நிலையை அடைந்ததினால்தான் மகரிஷி அத்ரி முனிவர், அனைத்து தெய்வங்களின் அன்பையும் பெற்றதும் இல்லாமல், ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான் எனும் பெரும் தெய்வத்தையே தனது மகனாக பிறவி எடுக்க வைத்துக் கொள்ள முடிந்தது||64||
அந்த பெரும் தெய்வமே தான் விரும்பியவாறு இந்த பிரபஞ்சத்தை படைத்து, தன்னிடம் இருந்தே பிரும்மா எனும் தெய்வத்தையும் தோற்றுவித்து, வேதங்களை கற்பித்து, அவரையே படைப்புக் கடவுளாக்கி, அவர் மூலம் பல்வேறு வகைகளிலான படைப்புக்களை வெளிப்படுத்தினார்||65||
அப்படி வெளி வந்த பிரும்மா தனது தெய்வீகம் நிறைந்த மனதின் உதவியுடன், தம்மிடம் இருந்து ஏழு பெரும் மகரிஷிகளை படைத்தார்; அவர்களில் இரண்டாமவர் உலகம் போற்றும் மகரிஷி அத்ரி என்பவர் ஆவார்||66||
நாம் காணும் இந்த பூத உடல் (ஸ்தூல), மனம் மற்றும் புத்தி அடங்கிய நுண் உடல் (லிங்க/சூட்சும), மற்றும் வினைகளின் இருப்பிடமான காரண உடல் (கரண) ஆகிய மூன்றையும் கடந்து , விழிப்பு (ஜாக்ரத்), கனவு (சொப்பன), ஆழ்ந்த உறக்கம் (சுழுத்தி) ஆகிய நிலைகளுக்கு அப்பாற்பட்ட துரிய நிலையையும் கடந்து, சத்துவ (அமைதி/தூய்மை), ரஜஸ் (வேகம்/செயல்), தமஸ் (சோம்பல்/இருள்) ஆகிய முக்குணங்களையும் வென்று நின்ற உண்மையான தேவலோக மஹரிஷியாக விளங்கினார் மகரிஷி அத்ரி||67||
படைப்பு தெய்வமான பிரும்மா களங்கமற்ற முறையில் தவத்தில் அமர்ந்து கொண்டு இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார். அப்படியான தவத்தில் அமர்ந்திருந்தபோதுதான் அவரது கண்களின் வழியே மகரிஷி அத்ரி வெளி வந்தார் (இது அத்ரி முனிவர் ஒரு பெண்ணின் கருவில் வளர்ந்து பிறக்காமல், நேரடியாக பிரும்மாவின் கண்களில் இருந்து வெளி வந்த கதையைக் கூறுகின்றது) ||68||
உலகம் தோன்றிய பின்னர் முதன் முதலாக தோன்றிய சூரிய கிரகணத்தின் காரணம் எவருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், அதன் காரணத்தை அறிந்து கொண்ட அத்ரி மகரிஷி அதை பிரபஞ்சத்தில் இருந்த அனைவருக்கும் தெரியப்படுத்தினார் ||69||
ரிக் வேத உரையின் ஐந்தாவது மண்டலம் பெரும்பாலும் அக்னி மற்றும் பிற தெய்வங்களின் வலிமை மற்றும் அருளைப் புகழ்ந்து பாடப்பட்ட சூக்தங்களை கொண்டுள்ளது; அதில் கூறி உள்ளபடி அவர்களை போற்றி வழிபடும்போது விரைவில் கிடைக்கும் பலன்களையும் அது விவரிக்கின்றது; அந்த சூத்திரத்தை முதன் முதலில் அத்ரி மகரிஷியே அனைவருக்கும் தெரியும் வகையில் வெளிப்படுத்தினார்||70||
பொற்காலம் எனப்பட்ட சத்ய யுகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த பல்வேறு ஆத்மாக்களும், நோய் நொடிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு அவதியுற்றபோது, அத்ரி மகரிஷி ஒரு திறமையான மருத்துவராக இருந்து அனைவரது நோய்களையும் குணப்படுத்தி, அவர்களை மீண்டும் மகிழ்ச்சியோடு வாழ வழி செய்தார் ||71||
இன்றைக்கும் நடைமுறையில் உள்ள, ஒழுக்க விதிமுறைகளை வரை படுத்திக் கூறும் நூலான மனு ஸ்மிருதி* என்பது அன்றைய காலகட்டத்தில் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டபோது, அதற்கு மாறாக இன்னொரு ஸ்மிருதியை (நூலை) அத்ரி மகரிஷி எழுதினர். மனு என்ற மன்னன் எழுதியதாக கூறப்படுவதே மனு ஸ்மிருதி என்பதாகும்.
{*மனு என்பவரே பிரபஞ்சம் தோன்றியவுடன் வெளிப்பட்ட முதல் மனிதர் என்பதாக கூறுவார்கள்; இதில் தனி மனித வாழ்க்கை மற்றும் சமுதாய வாழ்க்கையை நெறிப்படுத்திக் கூறும் விதிகள் மற்றும் இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள் மற்றும் ஒழுக்க விதிகள் போன்றவை விளக்கிக் கூறப்பட்டு உள்ளன}II72||
வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும் அப்பாற்பட்டவராக, உண்மையான பிரும்மன் (நானே உண்மை என்பது பொருள்) எனும் நிலையில் அத்ரி மகரிஷி வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவரது தந்தை பிரும்மாவின் கட்டளைக்கு உட்பட்டு, பக்தி ஸ்ரத்தை கொண்டிருந்த அன்னை அனுசூயாவை மணம் செய்து கொள்ள சம்மதித்தார் II73||
அதேபோல், தூய தவத்தின் உருவகமான கர்தம் முனிவர், அன்னை தேவஹுதி என்பவரை மணந்து கொண்டு, தூய்மையின் உருவான அனுசூயாவை பெற்றெடுத்தார்; ஒரு தூய்மையான துறவி மானிட உருவை எடுக்க முடிவு செய்ததை போல பிறந்தவர், திருமணம் எனும் சடங்கில் அத்ரி முனிவரின் கரங்களை பற்றினார் ||74||
கனவில் கூட, அவர்களது ஆஸ்ரமத்திற்கு வருகை தந்த எந்த ஒரு விருந்தினரும் உபசரிக்கப்படாமல் இருந்ததில்லை; அத்தனை ஏன் மும்மூர்த்திகளுக்கும் கூட அனுசுயாவிடம் கேட்ட பிட்ஷையை பெறாமல் இருக்கவில்லை ||75||
அனுசூயாவின் கற்பைக் குறித்து கேள்விப்பட்ட பெண் தெய்வங்களான சாவித்ரி, லட்சுமி மற்றும் பார்வதி தேவி எனும் மூவரும் பொறாமை மிகுதியால் அவளது கற்பின் வலிமையை சோதிக்க எண்ணி தத்தமது கணவர்களை அனுசூயாவிடம் அனுப்பினார்கள்||76||
‘நீங்கள் மூவரும் பசியோடு உள்ள துறவிகள் உருவில் அவளது ஆஸ்ரமத்திற்கு சென்று, அவளை சோதனை செய்து, அவளது முகத்தில் கரியைப் பூசி விட்டு வாருங்கள்’ என அனுப்ப, அங்கு சென்ற மும்மூர்த்திகளும் அனுசூயாவின் கற்பின் வலிமையினால் மூன்று குழந்தைகளாக மாறும் வகையில் காட்சிகள் நடந்தேறின ||77||
இப்படியாக மூன்று பெண் தெய்வங்களின் பொறாமை உணர்ச்சியும், அகம்பாவமும் தகர்ந்த உடன் அவர்கள் அன்னை அனுசூயாவிடம் சென்று தத்தமது கணவர்களை திருப்பித் தருமாறு கெஞ்சினார்கள், அதற்குப் பதிலாக அவள் அந்த மூன்று குழந்தைகளையும் அவர்கள் முன் வைத்தாள்; ஆனால் அவர்களால் அந்தக் குழந்தைகளின் குணாதிசயங்களிலிருந்து தங்கள் சொந்த கணவர்கள் யார் என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை||78||
அதைக் கண்ட அன்னை அனுசுயா சிரித்தபடி அவரவர்களது கணவர்களை அடையாளம் காட்டி அவர்களை அவர்களது சுய உருவத்திற்கு கொண்டு வந்தாள்; தான் திருமணம் செய்து கொண்ட கணவருக்கு உண்மையாகவும், நேர்மையாகவும், நெறி தவறாமலும் வாழ்ந்து கொண்டு இருந்ததால் அவள் அப்படிப்பட்ட சக்தியை பெற்று இருந்தாள்||79||
கௌசிக முனிவரின் மனைவி சதி சாண்டிலி என்பவள் சூரியன் உதிக்கக் கூடாது என்று சாபமிட்டு விட, அவள் கட்டளைக்கேற்ப சூரியன் உதிக்காமல் போனது; அதனால் உலகை இருள் சூழ்ந்து கொள்ள பல உயிரினங்களும் மடிந்தன; அன்னை அனுசுயா அவளை சந்தித்து சமாதானப்படுத்தி, அவளது கணவரின் உயிருக்கு உத்திரவாதம் அளித்து மீண்டும் சூரியனை உதிக்க வைத்தாள்||80||
மாண்டவ்ய முனிவரின் சாபத்தின்படி சூரியன் உதித்ததும் உடனடியாக கௌசிக முனிவர் மரணம் அடைந்து விட, தான் வாக்கு கொடுத்தபடி தனது தவ வலிமையினால் ஒரு ஷணத்தில் அன்னை அனுசூயா அவரை உயிர் பிழைக்க வைத்தாள்||81||
அன்னை அனுசூயாவின் கற்பின் வலிமையினால் நடந்தேறிய நிகழ்வுகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்த தெய்வங்கள் அவளுக்கு பல வரங்களை வழங்கின. படைத்தல், காத்தல் அழித்தல் என்ற மூன்று தொழில்களின் தெய்வங்களான மும்மூர்த்திகள் மூவரும் அவளுடனேயே மூன்று குழந்தைகளின் வடிவில் தங்கி அவளை மகிழ்வித்தார்கள்||82||
அவளுக்காக பூமியானது மென்மையான பூமியாயிற்று; காற்று இதமாக வீசியது; சூரியனோ வெப்பம் அதிகம் தராமல் வெளிச்சம் தந்தவாறு இருந்தது, மற்றும் அனைத்து தேவர்களும் அவளைக் கண்டு பயந்து நின்றார்கள்||83||
நிலவு கூட அனுசூயாவின் அழகோடு ஒப்பிட முடியாத அளவில் இருந்தது; தெளிவான நிலவில் கூட சில கறைகள் தென்படும்; நிலவு தேயும், வளரும், ஆனால் அனுசூயாவிடம் எந்த குறைகளும் கிடையாது; எந்த மாற்றமும் நிகழ்ந்தது இல்லை ||84||
அனுசூயாவின் பக்தியை நிலவோடு ஒப்பிடலாம் என்றால் அதுவும் இயலாது உள்ளது, காரணம், முழு நிலவின் போது பிரகாசமாக ஒளிரும் நிலவின் ஒளி, இரவு முடிந்து காலை வந்தவுடன் மறைந்து விடும்; ஆனால் அனுசூயாவின் தெய்வ பக்தி அப்படியானது அல்ல; அது எந்த நிலையிலும் நிலையாக இருந்த பக்தியாகும் ||85||
சரி அனுசூயாவின் பக்தியின் மேன்மையை சூரியனோடு ஒப்பிடலாம் என்றால் அதுவும் அதுவும் இயலாது உள்ளது; காரணம் சூரியனும் காலையில் உதித்து மாலையில் மறைபவர்; ஆனால் அன்னை அனுசூயாவின் மேன்மை என்றுமே மாறாமல் அப்படியே இருந்தது||86||
கௌசிக முனிவரின் மனைவியான அன்னை சதி சாண்டிலி, சூரியனை சபித்தபோது, அவளுடைய தவத்தின் வலிமை எல்லா இடங்களிலும் தெளிவாகத் தெரிந்தது; சூரியன் பத்து நாட்கள் வெளி வர முடியாமல், உறங்கியவாறு இருக்க வேண்டியதாயிற்று ||87||
ஆனால் அன்னை அனுசூயாவோ இன்னலோ அல்லது இடர்பாடுகளோ இல்லாமல், அதே சூரியனை, மீண்டும் உதிக்க வைத்து பிரபஞ்சத்திற்கு உயிர் கொடுத்தாள்; ஆகவே சூரியனைக் கூட அவளது பக்திக்கு இணையாக கூற இயலாது||88||
இரக்கத் தன்மை கொண்டவர், அமைதியானவர் மற்றும் கருணையின் உருவமானவர் என்பவைகளுக்கு உதாரணமாக விஷ்ணு பகவான் காணப்படுகின்றார்; அவர் அத்தகைய தன்மை கொண்டவர் என்பதினால்தான் அவரை அதிக அளவில் வணங்கி ஆராதிக்கின்றார்கள் என்பது மட்டும் அல்ல, பிரபஞ்சத்தை காப்பாற்றும் பொறுப்பை கொண்ட தெய்வமாகவும் அவர் நியமிக்கப்பட்டு உள்ளார்||89||
அப்படிப்பட்ட ஆற்றல் கொண்ட விஷ்ணுவையே தன்னுடைய குழந்தையாக மாற்றி, அவருடைய தெய்வ தாயாக மாறிய அனுசூயாவின் மேன்மையை எதனுடன் ஒப்பிட முடியும்? இதற்கு மேல் எதையும் கூற எனக்கே சங்கடமாக உள்ளது||90||
விழிப்புணர்வின் அடிப்படை குணங்களான அன்பு, புத்திசாலித்தனம், படைப்பாற்றல், பச்சாதாபம், நுண்ணறிவு மற்றும் பரிணாமம் ஆகியவற்றைப் புரிந்து கொண்டு செயல்பட்டுள்ள, கற்புக்கரசி அனுசூயா அரங்கேற்றிய அந்த நாடகத்திற்கு இணையாக உலகில் வேறு எந்த நிகழ்வுமே இருக்க முடியாது என்பதினால் அவளை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது ||91||
அனுசூயாவிற்கு சமமான வலிமைக் கொண்டவர் அத்ரி முனிவர். அவரது தூய்மையான தவ வலிமை அவருடைய வற்றாத பெரும் செல்வம் ஆகும்; அவருக்கு உலகின் வேறு எந்த அற்ப நலன்களும், நாட்டங்களும் கிடையாது; அவரது அனைத்து செயல்பாடுகளும் பிரபஞ்சத்தின் நன்மைக்காகவே இருந்து வந்தன||92||
அத்ரி முனிவரை திருமணம் செய்து கொண்ட அன்னை அனுசூயாவோ, கருணை மற்றும் பிறரை மன்னிக்கும் குணம் கொண்டவள்; கணவரிடம் தூய பக்தியுள்ள மனைவி எப்படி வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டும் உண்மையான பதிவிரதை அவள்||93||
மூவுலகிலும் தேடிப் பார்த்தாலும், இவரைப் போலச் உயரிய நற்பண்புகள் மிக்கவர் வேறு எவரும் காணப்படவில்லை; ஏனெனில், அனைவருக்கும் எளிதில் கிடைக்க கூடிய மிகச் சிறந்த வழியாகத் தவம் அமைந்திருந்த போதிலும், இவரைப் போன்ற தவ வலிமை பெற்றவர்கள் எவரும் கிடையாது ||94||
பல்வேறு வடிவங்களை எடுக்க முடிவு செய்த மூல தெய்வம், முதலில் அதற்கு உதவியாக இருக்க மாயா எனும் மாய உருவை படைத்த பின்னர், அதன் மூலம் தாம் விரும்பிய பல்வேறு தோற்றங்களை வெளிப்படுத்தினார்||95||
ஒரு தூய்மையான மானிட உருவத்தை, அற்புதமான இடத்தில் எடுக்க முடிவு செய்தபோது அவருக்கு அனுசூயா எனும் மானிடப் பிறவியின் தோற்றம் மனதில் எழுந்தது||96||
தெய்வம் தோற்றுவித்த தூய்மையான மாயா எனும் உருவத்தின் தன்மையோடு, உண்மையான மானிட உருவில் இருந்த தூய்மையான அனுசூயாவை, அதாவது நிழல் உருவத்தோடு நிஜ உருவத்தை எப்படி ஒப்பிட்டுப் பார்க்க முடியும் என்ற கேள்வி எழுவது நியாயம்தான் ||97||
இவ்வாறு எதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாத, கர்தம் முனிவர் மற்றும் தேவஹுதியின் இரண்டாவது மகளான அனுசூயா, படைக்கும் தெய்வமான பிரும்மாவின் இரண்டாவது மகனான அத்ரி முனிவருக்கு மனைவியாக மாறியதில் வியப்பு இல்லை||98||
அதனால்தான் எந்த தயக்கமும் இல்லாமல் பெரும் தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயர் அவர்களது குழந்தையாக பிறப்பு எடுத்தார்; நவீன காலத்தில் குழந்தைகளைத் தத்தெடுப்பவர்கள் உள்ளனர்;அதனால் அந்த குழந்தைகளுக்கு இரண்டு தந்தைகள் இருப்பார்கள் என்பது இயற்கை ||99||
ஆனால் தாயோ தந்தையோ, ஒரு குடும்ப வம்சாவளியோ அல்லது பரம்பரையோ இல்லாத தெய்வம் தன்னை தெய்வீக ஜோடிகளான அத்ரி முனிவருக்கும் அன்னை அனுசூயாவிற்கும் பரிசாக அளிக்க முடிவு செய்தார் என்பதினால் பூமியிலே பிறப்பு எடுத்திருந்த ஸ்ரீமத் தத்தாத்திரேயருக்கு இரண்டு தந்தைகள் கிடையாது||100||
அதனால்தான் தூய்மையான மஹரிஷியின் தம்பதியினருக்கு, வேத புராணங்களில் பெருமளவு போற்றி துதிக்கப்படும் மற்றும் வேதங்களுக்கு அப்பாற்பட்ட நிலையிலான தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான் , தானே தன்னை தானமாக கொடுத்தார்||101||
அவரது தன்மைகள் எல்லையற்றவை, வேத புராணங்கள் கூட அவரது முழுமையான லீலைகள் எத்தனை இருக்கும் என்பதைக் கணக்கிட முடியாமல் சோர்வடைந்தன. அதனால்தான் நமது உணர்வுகள் மற்றும் திறமைகளைக் கொண்டு அவருடைய தெய்வீக தன்மையின் ஒரு சிறு துளிகளைக் கூட நம்மால் முழுமையாக உணர முடியவில்லை ||102||
தம்மை போற்றி புகழ்ந்து பேசுவதற்கு தெய்வங்கள் கூட சில கவிஞர்களை உருவாக்குகிறார்கள். அதிர்ச்சி அளிக்கும் வகையில் தெய்வீக கவிஞரான பிருஹஸ்பதி முனிவரின் திறமையும் கூட அனுசூயா தம்பதியினரின் மேன்மைக்கு சமனாக இருக்கவில்லை என்ற உண்மை ஆச்சர்யத்தை அளிக்கின்றது. ||103||
ஆகவே அனுசூயா -அத்ரி முனிவரின் மேன்மையோடு ஒப்பிட்டுக் கூறும் அளவிலான எவருமே கிடையாது என்ற அளவில் அவர்கள் இருந்தார்கள்; ஒரு காகிதத்தில் தடைகள் இன்றி சரளமாக எழுதிக் கொண்டே செல்லும் எழுது கோலை போல, மன உத்வேகத்தோடு அவர்கள் செயல்பட்டு வந்து கொண்டிருந்தாலும் எந்த விதமான ஆணவமும் அவர்களிடம் இருந்தது கிடையாது ||104||
கோதாவரி நதிக்கரையில் தங்கியிருந்த வேததர்மன் என்ற பிராமணன், அனைத்து உலக பந்தங்களைம் அறுத்துக் கொண்டு, தன்னுடைய செயல்பாடுகளினால் ஏற்பட்டு இருந்த அனைத்து பாவங்களிலும் இருந்து விடுதலை பெற்று மோட்க்ஷம் அடைய எண்ணி புனித யாத்திரை நகரமான காசியில் தங்க முடிவு செய்தார்||105||
அவருக்கு தீபக் என்ற சீடர் மிகவும் சிறப்பான முறையில் சேவை செய்து வந்தார்; அவரது செயல்பாடுகளிலும் நோக்கத்திலும் தூய்மை இருந்ததினால் அவர் அவருடைய சிறந்த சீடராக உருவாகி இருந்தார்; இருபத்தொரு ஆண்டுகள் தொடர்ந்து வாழ்க்கையின் பல்வேறு வேதனைகளையும் வலிகளையும் சுமந்து கொண்டு இருந்தாலும் குருவிற்கு சேவை செய்து வந்திருந்தபோது தீபக் ஒரு சிறு அளவிலான வெறுப்பையும் காட்டாமல் சேவை செய்து வந்தார்||106||
அவரை சோதனை செய்ய விரும்பிய ஹரியும் ஹரனும் தீபக்கிற்கு பல வரங்களை தந்து அவற்றை ஏற்றுக் கொள்ளுமாறு எவ்வளவோ கட்டாயப்படுத்தியும், குரு சேவையின் மீதான தூய்மையான பணியில் இருந்து தீபக் விலக மறுத்து விட்டு சத்தியத்தின் பாதையில் நடந்தார் ||107||
இறுதியாக அவரது குருவே அவரது சத்தியமான சேவையின் தனித்துவத்தில் மகிழ்ச்சியடைந்து, தன்னிடம் ஒரு ஒரு வரம் கேட்குமாறு கூறியபோது தீபக் தனக்கு ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் வாழ்க்கை சரித்திரத்தை விளக்கிக் கூறுமாறு வேண்டினார். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்து போன அவருடைய குரு ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் அவதாரம் குறித்த தெய்வீக மற்றும் புனிதமான தெய்வீகக் கதையை கூறலானார்||108||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் முதல் அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு அத்தியாயம் -1 முடிவடைந்தது
அத்தியாயம் -2 தொடர்கின்றது