சக்தியூட்டப்பட்ட மந்திர தந்திர சக்திகளைக் கொண்ட யந்திரங்கள் உலகில் பல்வேறு உள்ளன. பல்வேறு கோரிக்கைகளுக்காக அவற்றை குறிப்பிட்ட முறைகளின்படி சாதகர்கள் உபாசனை செய்து தாம் விரும்பும் பலனைப் பெற்று வருகின்றார்கள். அனைத்து யந்திரங்களையும் சாதாரண நிலையில் வழிபட முடியாது, வழிபடக் கூடாது. அதன் காரணம் அதில் உள்ள தாந்த்ரீக, மந்திர சக்திகளே. சில யந்திரங்கள் தாந்த்ரீக சக்தி கொண்டவை, தாந்தீரீக வழிபாட்டுடன் சம்மந்தப்பட்டவை. அவற்றை வீடுகளில் வைத்து வழிபடக் கூடாது. ஏன் எனில் அவற்றை வழிபட பல விதமான ஆசாரங்கள், நியமங்களை  அனுஷ்டிக்க வேண்டும். ஒரு குருவின் உபதேசம் பெற்றோ, ஒரு குருவின் மூலமோ யந்திரங்களை பூஜை செய்ய வேண்டும். சக்தியூட்டப்பட்ட  எந்திரங்களில் பல தேவதைகள் குடி கொண்டு  இருக்கின்றார்கள் என்பதினால் தவறான பூஜா முறைகள் விபரீதமான விளைவுகளை குடும்பத்தில் ஏற்படுத்தி விடும்.  

யந்திரங்களில் மிகவும் உயர்ந்ததும், சாமான்யங்களினால் எளிதில் வணங்கப்படக் கூடிய யந்திரம்  ஸ்ரீ சக்ரம் எனப்படும் ஸ்ரீ சக்ர பூர்ண மகாமேரு ஆகும். சில குறிப்பிட்ட காரண காரியங்களுக்காக அதையே  ஸ்ரீ வித்யா பூஜை என்ற பெயரில் விஸ்தாரமாக செய்வதும் உண்டு. 

ஸ்ரீ சக்கரம் என்பது ஆதிபராசக்தியின் சூட்சும ரூபமாகும். ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் உள்ள பிந்துவில் அவள் சூட்ஷம வடிவில், ஸ்தூல ரூபமாக அமர்ந்திருக்க, அவளை காரண வடிவத்தினால் அதாவது மந்திர ஒலியினால் பூஜிக்க வேண்டும். பொதுவாக ஸ்ரீ சக்கரம் என்பது  பரமேஸ்வரனும், பார்வதி தேவியும் இணைந்து அமர்ந்து உள்ள இடமாகும்.  

அப்படிப்பட்ட  சக்தி வாய்ந்த தேவியை உபாசித்தோ அல்லது முறையான பூஜை செய்தோ அந்த தேவியின் அருளை பெறுகின்றவர்கள் வெகு காலம் ஜீவித்து இருப்பார்கள். கல்பத்துக்கு முடிவு ஏற்பட்டாலும், அவர்களுடைய ஆத்மாவுக்கு (ஜீவனுக்கு) முடிவில்லை. கல்ப ஜீவிகள் என்றே அவர்களை கூற வேண்டும். உருவமுள்ள எந்த பொருளுக்கும் அழிவு உண்டு.  ஆனால் உபாசகர்கள் சரீரம் என்ற உருவத்துடன் இருந்தவாறு அவளை உபாசித்து அவளது அருளை பரிபூரணமாக பெற்று விட்டால், அவர்களுடைய சரீரம் அழியலாம், ஆனால் அவர்கள் ஆத்மாவுக்கு அழிவில்லை என்பதே  ஸ்ரீ சக்கர உபாசனையின்  மகிமை ஆகும் என்பது  ஐதீகம். அதையே சௌந்தர்யலஹரி சுலோகம் 99 தின் தாத்பர்யத்திலும் கூறப்பட்டு உள்ளது. 

அதை போலவேதான் ஸ்ரீ சக்கர தேவியின் பெருமையையும், மேன்மையையும் கூறும் லலிதா சஹஸ்ரநாமத்தின் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் அனுதினமும்  படித்து, தேவியை பூஜிக்கும் சாமானியர்களுக்கு சர்வ சௌபாக்கியமும் கிட்டும் என்பதும் உண்மை ஆகும். அவர்களது வீடுகளில் உள்ள துர்தேவதைகள் ஓடி ஒளிந்து கொள்ளும், வியாதிகள் விலகும், சத்ருக்கள் அழிவார்கள், மன அமைதி கிடைக்கும். ஸ்ரீ சக்கரத்திற்கு மேலான யந்திரமோ, ஸ்ரீ வித்யாவுக்கு நிகரான மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மேலான தெய்வமோ இல்லை என்பது அனைத்து மகான்களாலும், பண்டிதர்களினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து ஆகும். 

பலருக்கும் ஒரு சந்தேகம் உண்டு. ஸ்ரீ சக்கரமும், ஸ்ரீ மஹா மேரு எனப்படும் யந்திரமும் ஒன்றேதானா இல்லை வெவ்வேறானவையா என்பதே அந்த சந்தேகம். உண்மை என்ன என்றால் இரண்டுமே ஒன்றுதான். ஸ்ரீ மஹா மேருவின் சமதளப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீ சக்கரம் என்பதாகும். ஸ்ரீ சக்கர யந்திரத்தை கோடுகளாக வரைந்தால் அது ஸ்ரீ சக்ரம் எனவும் அதற்கு மலை போன்ற அடுக்கடுக்கான நிலையிலான முப்பரிமாண உருவ வடிவம் கொடுத்தால் அது ஸ்ரீ மஹா மேரு எனவும்  கூறப்படும். பார்வைக்கு சாதாரணக் கோடுகளும் முக்கோணங்களுமாகத் தெரியும் ஸ்ரீசக்கரம் ஆதிபராசக்தியின் இருப்பிடம் மட்டுமல்ல, சர்வசக்தியும் இதில் அடக்கம் என்பதே இதன் மகிமை.

பண்டாஸுர வதத்திற்குப் பிறகு ஸ்ரீபுரம் என்னும் நகரத்தில் அவளுடைய அரண்மனையில் எல்லா தேவதைகளும் சூழ்ந்திருக்க தன்னுடைய கணவர் காமேஸ்வரருடன் லலிதாம்பிகை வீற்று இருக்கையில் ஒரு சிறிய விஷயத்திற்காக உக்கிரம் அடைந்த தேவியின் முகத்தில் இருந்து வாசினிகள் என்ற தேவதைகள் வெளிவந்து அவள் முன் நின்றபோது அந்த தேவதைகளை நோக்கி தான் யார், தன் சக்தி எப்படிப்பட்டது என்பதை அனைவருக்கும் கூறுமாறு தேவி கூற அதன்படி வசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகள் மிக ரகசியமான மந்த்ரமாக ஆயிரம் நாமங்களைக் கொண்ட ‘லலிதா சகஸ்ரநாமம்’ ஸ்லோகத்தினை உருவாக்கினர். அம்பிகையானவளின் உக்கிரத்தைத் தணிக்க சர்வேஸ்வரன் அந்த உக்கிரக் கலையையே ஸ்ரீசக்கரமாக ஸ்தாபித்து, ஆகர்ஷித்து அம்பிகைக்கு எதிரில் வைத்து அவளை சாந்தப்படுத்த, பார்வதி தேவி, அன்னை லலிதாம்பிகையாக உருமாறி உலகிற்கு காட்சி தந்தாள். சிவபெருமானால் சாந்தம் அடைந்த தேவியானவள் அந்த ஸ்லோகத்தை முறைப்படி கூறி தன்னை துதிப்பவர்களுக்கு, அந்த ஸ்லோகமே தன்னிடம் வந்தடையும் பாதையாக அமையட்டும் எனக் கூறி “என் கட்டளைக்கு ஏற்பவே இந்த தோத்திரத்தை வாக்கு தேவிகள் செய்துள்ளார்கள். என்னுடைய அருளை வேண்டி இதை படிப்பதுடன் பிற பக்தர்களிடமும் பரவும்படி செய்யுங்கள். பூஜையும் ஜபமும் செய்தாலும் செய்யாவிட்டாலும் எனது அருளை பெறுவதற்கு இந்த சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால் போதுமானது” என்பதாக கூறினாளாம். அதனால்தான் அம்பிகையின் பேரருளை பெற வேண்டும் என என்று யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் லலிதா சஹஸ்ரநாமத்தைக் கூற வேண்டும் என்பதாக கூறப்படுகின்றது.

மேரு மலையின் மீது இருந்த ஸ்ரீ புஷ்பதந்தர் எனும் மாபெரும் சித்த கணமே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு வடிவம் கொடுத்தார் என்றும், அதையே ஆதிசங்கரரின் குருவான கௌடபாதர் (பதஞ்சலி முனிவரின் சீடர்) மனதில் கிரஹித்து ஸ்ரீ ஆதிசங்கரருக்கு அதை உபதேசித் தருளினார் என்று  புராணச் செய்தி குறிப்பிடுகிறது.  ஸ்ரீ புஷ்பதந்தர் தெய்வீக கணங்களின் சக்தியை கொண்டவர், சிறந்த சிவ பக்தர்.  

ஸ்ரீ ஆதி சங்கரர் காஷ்மீரில் தங்கி இருந்தபோதுதான் தான் ஸ்ரீ சக்கரத்தை வடிவமைத்து சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை இயற்றினார் என்பதற்கு கூறும் கிராமியக் கதை இது. ஸ்ரீ ஆதி சங்கரர் காஷ்மீரத்துக்கு சென்று இருந்தபோது அவர் ‘விசார்னாக்’ எனும் இடத்தில் தமது சிஷ்யர்களுடன் தங்கி இருந்தார். அவருக்கு தங்க ஏற்பாடுகள் செய்திருந்தவர் சமையல் செய்துகொள்ள அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்திருந்தாலும் அடுப்பை எரிக்க எந்த சாதனமும் (தீப்பெட்டி, எரியும் விளக்கு போன்றவை) வைத்திருக்கவில்லை என்பதினால் அவர்களால் இரவு அடுப்பை மூட்டி சமையல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மறுநாள் அவர்களுக்கு சமையல் செய்து கொடுக்க ஒரு பெண்மணியை அனுப்பி இருந்தார்கள். சமையல் செய்ய வந்த பெண்மணி அடுப்பை எரிக்க எந்த சாதனம் அங்கு இல்லை என்பதினால் அடுப்பை மூட்டித் தருமாறு விருந்தாளிகளை வேண்டிக் கொள்ள, ஸ்ரீ ஆதி சங்கரர் முதல் யாராலும் தீப்பெட்டி இல்லாமல் அடுப்பை எரிய வைக்க முடியவில்லை. அதைக் கண்ட பெண்மணி இரு குச்சிகளை எடுத்து உரசினாள். அதில் இருந்து வெளியான தீப்பொறி மூலம் சமையல் அடுப்பை பற்ற வைத்து  சமையல் செய்தாராம். அவளது செயலைக் கண்ட ஸ்ரீ ஆதி சங்கரர் திகைத்தார். அது மட்டும் அல்ல. அந்தப் பெண்மணி நன்கு கற்றறிந்தவர், தன்னுடன் ஆன்மீக தர்க்கம் செய்ய விரும்பினாள் என்பதினால் அவளுடன் சுமார் பதினேழு நாட்கள் சக்தியின் மகிமை மற்றும் பிற ஆன்மீக விஷயங்கள் குறித்து தர்க்கம் செய்தார். அந்தப் பெண்மணி சக்தியின் மேன்மை குறித்து எழுப்பிய  பல விளக்கங்களுக்கு ஸ்ரீ ஆதி சங்கரரால் பதில் கூற முடியவில்லை.  இறுதியில் அவளே சக்தி என்பதை உணர்ந்து கொண்டவர், சக்தியின் மகிமையை புரிந்து கொண்டு,  சக்தி தேவி இன்றி சிவனுக்கு தனி சக்தி இல்லை என்பதையும்  உணர்ந்தார் என்பதாகவும் கூறுகின்றார்கள். அதை அவருக்கு புரிய வைக்கவே பார்வதி தேவி ஒரு பெண் உருவில் அங்கு வந்து அப்படி ஒரு நாடகத்தை நடத்தினார் என்பதாக பண்டிதர்கள் நம்பினார்கள். அதன் பிறகே ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரத்தை வடிவமைத்து சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை இயற்றினாராம்.

தேவி லலிதாம்பிகையை போற்றி வாக்கு தேவதைகள் துதித்தவைகளே லலிதா சஹஸ்ரநாமம் ஆயிற்று. ஸ்ரீ சக்கரத்தை வடிவமைத்தால் மட்டும் போதுமா? அதற்குள் உள்ள தேவி யார், அவளது மேன்மை என்ன என்பதை பூவுலகிற்கு யார் மூலம் தெரியப்படுத்துவது என்ற நிலை எழுந்தபோது அதற்கு ஹயக்ரீவரும், அகஸ்திய முனிவரும் தேவைப் பட்டார்கள். லலிதா சஹஸ்ரநாமத்தை அகஸ்திய முனிவருக்கு ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரமான பகவான் ஹயக்ரீவர் ஒரு சம்பாஷணை வடிவில் ரகசியமாக உபதேசித்தார் என்பதாக திருமயிச்சூர் ஆலய வரலாற்றில் கூறப்பட்டு உள்ளது. பகவான் ஹயக்கிரீவர் அகஸ்திய முனிவரிடம் லலிதமகா திரிபுர சுந்தரியின் மகிமைகளையும் விளையாடல்களையும் கூறினார். ஸ்ரீ சக்கரத்தில்அமர்ந்து உள்ள அம்பிகையின் இருப்பிடமான ஸ்ரீபுறத்தின் மேன்மையை விவரித்தார், அம்பிகையை உச்சரிக்கும் மந்திரங்களின் மகிமையை கூறினார், அந்த ஸ்ரீசக்கரத்தில் உள்ள தெய்வ, தேவதைகளைப் பற்றி கூறினார். அந்த சம்பாஷணையில் அகஸ்திய முனிவர் பகவான் ஹயக்கிரீவரிடம் மீண்டும் மீண்டும் லலிதாம்பிகையின் ஆயிரம் நாமங்களை குறித்த மேன்மையை கேட்டு அறிந்து கொண்டார். ஞானத்தின் அடையாளமான பகவான் ஹயக்ரீவர் நேரடியாக அகஸ்திய முனிவருக்கே லலிதா சகஸ்ரநாமத்தை உபதேசம் செய்திருக்கிறார் என்பதில் இருந்தே அது எத்தனை மகிமையான சுலோகம் என்பது விளங்கும். லலிதா சஹஸ்ரநாமம் என்பது என்ன என்றால் அம்பிகையின் ஆயிரம் நாமங்களைக் கொண்ட ஸ்லோகங்கள். ‘சஹஸ்ர’ என்றால் ஆயிரம் மற்றும் நாமம்’ என்றால் பெயர்கள் என்பதினால் லலிதாம்பிகையின் ஆயிரம் பெயர்களை சொல்லி அர்ச்சனை செய்வதை லலிதா சகஸ்ர நாம பூஜை என்கின்றார்கள்.

இன்னொரு செய்தியின்படி ஸ்ரீ சங்கர பாகவத பாதாள் எனும் உருவில், பரமசிவனே  பூவுலகில் வந்து, கிரந்த வடிவில் ஸ்ரீ சக்கர ஸ்லோகத்துடன் கூடிய ஸ்ரீ சக்கரத்தை பூலோகத்தில் ஸ்தாபனம் செய்தார் என்பதாகவும் கூறுகின்றார்கள். காஞ்சி காமாட்சியம்மன் கோயில், திருவானைக்காவல், திருவொற்றியூர் போன்ற ஆலயங்களில்   ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதை போலவே சிதம்பரத்தில் சிவ சக்கரமும், சக்தி சக்கரமும் ஒருங்கிணைந்த வடிவமாக இருக்கும் ஸ்ரீசக்கரம் வழிபடப்படுகிறது. ஒற்றைக்காலில் நின்றபடி அம்பிகை தவம் செய்யும்  மாங்காடு தலத்திலும் அர்த்த மேரு அமைப்பில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ சக்கரம்  என்பது கயிலாய பிரஸ்தாரம், மஹாமேரு பிரஸ்தாரம், அர்த்தமேரு பிரஸ்தாரம், பூபிரஸ்தாரம் என்று பலவகைகளில் இருப்பதாக கூறப்படுகின்றது.  ஸ்ரீ சக்கரம், எங்கு உள்ளதோ, எங்கு முறையாக ஆராதிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் லட்சுமி கடாட்சம் பெருகுவதாக ஐதீகம் உள்ளது. பலரது  வீடுகளிலும் இந்தச் ஸ்ரீ சக்கரம் இருப்பதைக் காணலாம். ஆனால், எல்லோருமே செல்வச் செழிப்புடன் நலமோடு இருக்கிறார்களா? இல்லையே! காரணம் ஸ்ரீசக்கர வழிபாட்டுக்கான விதிமுறைகளைச் சரியாகக் கடைப் பிடிக்காததுதான்.

சகஸ்ர நாமாக்களில் உயர்ந்தது வாக்தேவிகளால் இயற்றப்பட்ட லலிதா ஸகஸ்ரநாமமாகும். இதில் உள்ள வார்த்தைகள் சத்தியமானவை, மந்திர சக்தியுடையவை. இது எல்லா நோய்நொடிகளையும் விலக்கும், செல்வத்தையும் நீண்ட ஆயுளும் தரும். ஸ்ரீவித்யா உபாசனையால் சாதகனுக்கு ஞானம், எதையும் வெல்லும் ஆற்றல், வாக்கு வல்லமை போன்றவை கிட்டி முக்தியும் கிடைக்கும்.

தேவியின் மேன்மையைக் கூறும் லலிதா ஸஹஸ்ரநாமம் என்பது பிரும்மானந்தபுராணத்தில் 36 ஆறாவது காண்டத்தில் காணப்படுகின்றது. பதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட புராணத்தில், லலிதோபாக்யானம் என்ற பகுதியில் லலிதா தேவியின் திரு அவதாரமும், அந்த தேவியின் சரிதமும் அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா சகஸ்ரநாமம் என்னும் மகோன்னதமான ஸ்தோத்திரம் உள்ளது என்பதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள். லலிதா சகஸ்ரநாமத்தில் ஒருமுறை கூறப்பட்ட நாமம் மற்றொருமுறை உபயோகப்படுத்தப் பட்டிருக்காது. அதில் தேவியின் ஸ்வரூபம், அவள் தோன்றிய வரலாறு, அவளை வழிபட தக்க யந்திரம், மந்திர பரிவார தேவதைகளின் நிலை, வழிபாட்டு முறை, அவள் அருளால் பெறக்கூடிய மேன்மைகள் ஆகியவைகளை பரமேஸ்வரியின் வாயில் இருந்து வெளிவந்த வாக்தேவதைகளே கூறுவதால் லலிதா சஹஸ்ரநாமம் வேதத்திற்குச் சமமாகக் கூறப்படுகிறது. 

அடுத்து லலிதாம்பிகையின் அருளைத் தரும் ஸ்ரீ சக்கரத்தின் அமைப்பையும், அதன் மேன்மையையும் பார்க்கலாம். பொதுவாக  சமதளத்தில்  உள்ள யந்திரமான ஸ்ரீ சக்கரத்தை வீடுகளில் வைத்து  சுலோகம் சொல்லி பூஜிக்கலாம், ஆனால் மகாமேரு உருவத்தில் உள்ள ஸ்ரீ சக்கரத்தை குருவின் உபதேசம் இல்லாமல் வீடுகளில் பூஜை செய்யக் கூடாது. அதனால்தான் ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள ஸ்ரீ சக்கரம் பெரும்பாலும் மேரு சக்கர உருவில்தான் இருக்கும்.  ஸ்ரீ சக்கரத்தை வீட்டில் வைத்து வழிபடும்போது  சில விதிமுறைகளை கடை பிடிக்க வேண்டும். ஸ்ரீ சக்கரத்தை முறையாக தாமிரத் தகட்டில் வரைந்து கோணங்கள் தவறாமல் கோடுகளால் பூர்த்தி செய்து, விதிமுறைப்படி வழிபடுவது அவசியம்.

ஸ்ரீசக்ரம், மேரு மற்றும் எந்திரங்களை முறைப்படி உபதேசம் வாங்கிக்கொண்டு அதை வைத்து வீட்டில் தியானமோ, ஜெபமோ செய்வதாக இருந்தால் மட்டுமே வீட்டில் வைக்க வேண்டும். சில எந்திரங்களை நாம் வீட்டில் வைத்துவிட்டு ஏனோதானோ என்று இருந்தால் அவை விபரீதமான கெடுபலன்களை தரும்.

ஸ்ரீ சக்கரத்தை சுற்றி அறுபத்தி நான்கு (64 ) கோடி தேவதைகள் வீற்று இருக்க, அந்த ஸ்ரீ சக்கரத்தில் உள்ளேயோ நூற்றி பதிமூன்று தேவதைகள் வாசம் செய்கிறார்கள், ஆராதிக்கப்படுகின்றார்கள். அன்னை லலிதாம்பிகை எனும் ஜகன்மாதா தனது நாயகனான சிவபெருமானுடன் ஒன்றிணைந்து அருள் பாலிக்கும் இடம்  நடுவில் உள்ள பிந்து எனப்படும் ஸ்ரீபுரம் ஆகும். அந்த பரமேஸ்வரியே ஸ்ரீ சக்கரத்தின் மத்தியில் ஸ்ரீ சக்கர தேவியாக உள்ளாள் என்பதினால்தான் ஸ்ரீ சக்கர பூஜையை செய்யும்போது பரமேஸ்வரியின் அனுகிரகத்தைப் பெற்றிட நடுவில் உள்ள பிந்துவில்தான் பூக்களையும், குங்குமத்தையும் போட்டு பூஜிக்க வேண்டும் என்பார்கள்.

அம்ருத கடலின் நடுவில் கல்ப விருக்ஷங்களினால் சூழப்பட்ட மணித்வீபம் என்ற தீவில் சிந்தாமணி ரத்தினத்தினால் அமைக்கப்பட்டு உள்ள தேவியின் வாசஸ்தலமே  ஸ்ரீ சக்கரத்தின் பிந்து ஸ்தானம் போன்ற இடம் ஆகும். சிந்தாமணி எனும் ரத்தினம் சாதாரணமானது அல்ல. அது தன் அருகில் வந்தவர்களுக்கு அளவற்ற பொருளை கொடுப்பதும் அல்லாமல் ஒவ்வொரு தினமும் அளவற்ற ரத்தினத்தை உற்பத்தி செய்து ஸ்வர்க லோகத்தையே நிறம்பி விடும் தன்மையைக் கொண்டது என்பதினால், அந்த சிந்தாமணி மீது அமர்ந்துள்ள தேவியை துதிக்கும் பக்தர்களுக்கு அளவற்ற சௌபாக்கியத்தை கொடுப்பாள் என்பது உண்மை. 

ஸ்ரீ சக்கர வழிபாடு செய்வதன் மூலம் ஜீவாத்மன், பரமாத்மனுடன் ஐக்கியமாக வழி ஏற்படுகிறது. இந்த இணைப்பு முழுமையடைவதற்குத் தேவையான ஆன்மீக சக்தியை ஜீவாத்மன் (சாத்விகள்) பெறுவதற்கும், ஜீவாத்மன் தூய்மையடைந்து பரமாத்மனுடன் (தெய்வீக நிலை) ஐக்கியமாக முழுத் தகுதியைப் பெறுவதற்கும், ஜீவாத்மனுக்கு வழிகாட்டி அருள் புரிவதில், யோகினிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒரு குரு மூலமாக உபதேசம் பெற்று, ஸ்ரீசக்கர பூஜையைச் செய்பவர்கள் இந்த உலகில் மகாபாக்யங்களைப் பெற முடியும் என்கிறது ஸ்ரீவித்யா ரகஸ்யம். அத்தகைய மகத்துவம் பெற ஸ்ரீ சக்கரத்தில் என்னென்ன சக்திகள் அடங்கி உள்ளன?  

ஸ்ரீ சக்கரம் என்பது ஒன்பது ஆவரணம் என்னும் கோட்டை மதில்களை கொண்டது. அந்த  ஒன்பது ஆவரணங்களும்  ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்துள்ளன. ஆவரணம் என்பதை தடுப்பு அல்லது சுவர் என்று கூறலாம். அரசர்கள் அரண்மனைகளைச் சுற்றி கோட்டை மதில்களை அமைத்து உள்ளதை போல தேவியின் வாசஸ்தலமான ஸ்ரீ சக்ரபுரம் என்னும் அரண்மனையை  சுற்றி ஒன்பது கோட்டைகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு கோட்டையையும் யுத்த வீரர்கள் காப்பது போல அன்னையின் வாசஸ்தலத்தை சுற்றி பல தோற்றங்களைக் கொண்ட 64 கோடிக்கும் மேற்பட்ட தேவதைகள், பெண் யோகினிகள் மற்றும் பல தெய்வங்கள் அமர்ந்து உள்ளார்கள்.  முதல் சுற்றில் காணப்படும் சித்தி பெற்ற ஆவரண தேவதைகளில் எட்டு (8) ஆவரண தேவதைகளான அனிமா, மஹிமா, கரீமா, பிராப்தி, ப்ராகாம்யம், வசித்வம், ஈஸித்வம் எனும் எட்டு தேவதைகள் முக்கியமானவர்கள். அவளது சக்தியில் இருந்தே வெளியானவர்கள் . ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவார தேவதைகள், மற்றும் சித்தி  தேவதைகள் உள்ளனர்.

ஸ்ரீ சக்கரத்தில் உள்ள யோகினிகள் என்பவர்கள் யார்? அவர்கள் அனைவருமே பராசக்தியின் பல்வேறு அவதாரங்களால் படைக்கப்பட்டவர்கள்.  அதில் உள்ள மாத்ரு தேவதைகள்  பராசக்தியின் இன்னொரு அவதாரமான துர்கா தேவியினால் அவளுடைய பல்வேறு அவதாரங்களில் செய்ய வேண்டிய யுத்தங்களில் அவளுக்கு உதவுவதற்காக படைக்கப்பட்டவர்கள். அவர்களில் பலரும் லலிதாம்பிகை தேவியின் பண்டாஸுர யுத்தத்தில் பங்கேற்று உள்ளார்கள். அவர்கள் சாந்தமான மற்றும் உக்ரஹ குணங்களைக் கொண்ட பெண் தேவதைகள் எனப்படும் மஹா வித்யாவின் தேவதைகளாக இருக்கின்றார்கள். அவர்களின் முகத்தில் நீட்டிக் கொண்டுள்ள பற்களோ, பல கண்கள் போன்றவையும் இல்லை. இறக்கைகள் அல்லது அசாதாரண உடல் அமைப்புக்கள் இல்லை. மாறாக அவை சாந்தமாகவே காட்சி அளிக்கின்றன. யோகினிகள் என்பவர்கள் தேவி அல்லது பெண் கடவுட்களில் இருந்து வெளிப்பட்டவர்கள். அவர்கள் சாந்தமான மற்றும் உக்ரஹ குணங்களைக் கொண்டிராத பெண் தேவதைகள். மகாவித்யாவின் யோகா மற்றும் தந்திரக் கலை பயிலும் தேவி உபாசகர்கள் யோக சக்தியை அடைய இந்த தேவதைகளையே ஆராதிக்கின்றார்கள். ஸ்ரீ சக்கரத்தின் மேன்மையை இதற்கும் மேல் எப்படி கூற இயலும்?

ஸ்ரீ சக்கரத்தின் அமைப்பு என்ன?  ஒவ்வொரு கோட்டையும் ஒவ்வொரு அமைப்பைக் கொண்டது. மைய பகுதியில் உள்ள பிந்துவை சுற்றி நாற்பத்தி மூன்று (43 ) முக்கோணங்கள் மற்றும் இருபத்தி நான்கு (24 ) தாமரை இதழ் போன்ற அரண்கள் உள்ளன. அவற்றை சுற்றி மூன்று மதில்களை போன்ற வட்ட வடிவமும், நான்கு வாயில்களைக் கொண்ட சதுரங்க கட்டங்களும் காணப்படும்.

அந்த பிந்துவின் மைய பகுதியில் இருந்து அதன் மீது நேரான பாதையில் மேல் நோக்கிய நிலையில் காணப்படும் நான்கு முக்கோணங்கள் சிவ கோணங்கள். அதாவது ஆண் சக்தியைக் குறிக்கும் கோணங்கள். அதை போலவேதான் கீழ் நோக்கிய நிலையில் காணப்படும் ஐந்து முக்கோணங்களை சக்தி கோணங்கள் என்பதாக கூறுகின்றார்கள். பிந்துவை சுற்றி உள்ள அந்த ஒன்பது முக்கோணங்கள் சிவ சக்தியைக் குறிப்பதாக கூறுகின்றார்கள்.

 ஸ்ரீ சக்கரம் எனப்படும் மஹா மேருவை மேரு பிரஸ்தாரம், கைலாச பிரஸ்தாரம் மற்றும் பூ பிரஸ்தாரம் என்ற மூன்று பிரிவுகளில் கூறுகின்றார்கள். ஒவ்வொரு ஆவரணத்திலும், அந்தந்த ஆவரணத்தை ஆட்சி செய்வதற்காக, சக்ரேஸ்வரி என்று அழைக்கப்படும் ஒரு அதி தேவதை இருக்கின்றாள். அவளுடன்  இணைந்தே அங்குள்ள பல்வேறு தேவதைகளும் யோகினிகளும் அன்னை லலிதாம்பிகையை அடையும் வழியில் பாதுகாவலர்களாக உள்ளார்கள். மந்திர உச்சாடனைகள் செய்து அவர்களை திருப்திபடுத்திய பின்னரே, சாதகர்களால் ஒவ்வொரு ஆவாரணத்தையும் கடந்து சென்று மைய பகுதியான ஸ்ரீ புறத்தின் வாயிலை அடைய முடியும்.

ஸ்ரீ சக்கரம் என்பது ஒன்பது ஆவரணம் என்னும் கோட்டைகளைக் கொண்டது என்பதாகக் கூறினேன் அல்லவா. அந்த ஸ்ரீ சக்கரத்தின் நுழை வாயிலான சதுரக் கோட்டை அதாவது முதலாவது ஆவரணம் என்பது ‘த்ரைலோக்ய மோகன சக்கரம்’ அல்லது ஸ்ரீபுரம் என்ற பெயரைக் கொண்டது. த்ரைலோக்ய மோகனம் என்றால் மூவுலகங்களையும் மயக்குவது என்று பொருள்.  இது  திரிபுரா சக்ரேஸ்வரி  எனும் தேவியின் கீழ் உள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு கோடும் ரேகை எனப்படும். 

முதல் ரேகையில்  மஹா  சித்தி தேவதைகளான அனிமா, மஹிமா, லஹிமா, ஈசித்தவா, வசித்தவ, பிராகாம்ய, புத்தி  சித்தி,  இச்சா சித்தி, சர்வகாமா சித்தி   மற்றும் பிராப்தி சித்திகள் இருக்க இரண்டாம் ரேகையில் பிராஹ்மி, மாகேஸ்வரி,கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, மாகேந்திரி, சாமுண்டி, மற்றும் மகாலட்சுமி போன்ற  எட்டு அஷ்ட மாதாக்களும்  மூன்றாம் ரேகையில் பத்து (10) முத்ரா தேவதைகள் என மொத்தம் இருபத்தி எட்டு (28) தேவதைகள் உள்ளார்கள்.   முதல் ஆவரணத்தை வணங்குபவர்களுக்கு எல்லா செல்வங்களும் நிலைக்கும். தடைகள் நீங்கும். புத்தி பலம் கூடும், எந்த சக்தியாலும் இடையூறு ஏற்படாது, நினைவாற்றல் பெருகும். அதே ஆவாரணத்தின் அடுத்து உள்ள வட்ட வடிவிலான ஆவாரணத்தில் இந்திரன், அக்னி, எமதர்மன், நிருதிதேவன், வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு திக்கின் அதிபதிகள் உள்ளார்கள். அந்த வட்ட வடிவிலான ஆவணத்தை ‘த்ரிவாலயம் அல்லது மேகலை’ என்பதாக கூறுகின்றார்கள்.

இரண்டாம் ஆவணம் பதினாறு (16 ) இதழ் தாமரை தளங்களைக் கொண்ட சோடச தளம் அல்லது கலாச்ரம் எனப்படும் ஆவணம் ஆகும். இந்த ஆவணத்தின் ஒவ்வொரு தாமரை இதழ் போன்ற தளத்திலும் ஒவ்வொரு ஆகர்ஷண  சக்தி தேவதைகள்  அமர்ந்து உள்ளார்கள். அந்த சக்தி தேவதைகளில் பிரிதிவி, அப்பு, ஆகாசம், வாயு, மனம் போன்ற சில சக்திகள் உள்ளன.  இந்த ஆவணத்தை ‘ஸர்வாசா பரிபூரக சக்ரம்’ என்று கூறுவார்கள். இதன் சர்வேஸ்வரி தேவி த்ரிபுரேசி எனப்படுகிறாள். இங்குள்ள பதினாறு யோகினிகளும் அடுத்த ஆவணத்தை அடையத்  துடிக்கும் சாதகர்களின் மன அழுக்கை நீக்குகின்றனர் என்பது ஐதீகம்.ஸர்வாசா பரிபூரக சக்ரம் என்றால் அனைத்து நம்பிக்கைகளும் எண்ணங்களும் நிறைவேறுதல் என்று பொருள்.

மூன்றாவது ஆவரணம் எட்டு தாமரை இதழ்களைக் போன்ற தளத்தைக் கொண்டது. வசு எனப்படும் அந்த எட்டு தளத்தின் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு சக்தி தேவதை அமர்ந்து இருக்கின்றாள். இந்த ஆவரணம் ‘சர்வ சம்க்ஷோபனச் சக்கரம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. இந்த தளத்தில் உள்ள யோகினி தேவதையின் பெயர் குப்த தரயோகினி என்பது ஆகும். இந்த  தளத்தில் உள்ள சக்கரேஸ்வரியின் பெயர் திரிபுரசுந்தரி என்பதாகும். அவளுடன்  இந்த ஆவணத்தில் குஸுமா, மேகலா, மதன, மடநாதுரா, ரேகா, அனங்கவேகினி, அனங்காகுசா  மற்றும் அனங்காமாலினி எனும்   எட்டு மஹா உக்ர தேவதைகள் உள்ளார்கள். இந்த ஆவரணத்தில் உள்ள தேவதைகள் சாத்விகர்களது மனதை ஸ்திரப்படுத்தி அவர்களுக்கு தியானம், பூஜை இவற்றில் பரிபூரண ஈடுபாட்டை எட்ட அருள் புரிகிறார்கள்.

நான்காவது ஆவரணம் பதினான்கு (14) சிறு முக்கோணங்களால் சூழப்பட்ட தளம் ஆகும். இந்த  தளத்தில் உள்ள சக்கரேஸ்வரியின் பெயர் திரிபுரவாஸினி  என்பதாகும். இந்த பதினான்கு தளங்களில் பல்வேறு சக்தி தேவியர் மற்றும் யோகினிகள்  அமர்ந்து உள்ளார்கள். ஒவ்வொருவருடைய உடலிலும் இரத்த ஓட்டத்தையும், பிராண வாயுவையும் கொண்டு செல்லும் நுண்ணிய ரத்த நாளங்கள் உள்ளன. மூளையில் இருந்து கட்டளைகளையும், உணர்வுகளையும் நரம்புகள் எடுத்துச் செல்கின்றன. அதை போலவேதான் கண்ணுக்கே புலப்படாமல் உள்ள சக்தியானது நாடி அல்லது உடலின் உள்ளே உள்ள துடிப்பு என்பதாகும். உடல் முழுவதும் எழுபத்திரண்டாயிரம் வகை நாடிகள் குறுக்கும், நெடுக்குமாக அமைந்துள்ளன. இந்த நாடிகளை கட்டுப்படுத்துவது நாடி தேவதைகளின் பொறுப்பாகும். அப்படிப்பட்ட பதினான்கு நாடி தேவதைகளான வாசனா, ஹஸ்தி, விஸ்வோதாரி, பயஸ்வினி, பசோதி, காந்தாரி, ப்யூஷா,  சங்கினி, சரஸ்வதி (மூன்று பிரதான தேவிகளின் ஒருவரான தேவி அல்ல) , இடை, பிங்கலை மற்றும் ஸுஷும்னை என்பவர்கள் இந்த ஆவணத்தில் காணப்படுகின்றார்கள். இவர்களைத் தவிர  ரஞ்சனி, வசங்கரி, சம்மோஹினி, வித்ராவினி, தர்ஷினி, வாஃஹ்லாதினி, ஸ்தம்பினி, ஜம்பிரீணி, மந்ரமயி, சம்பத்திபூரணி , ஷயங்கரி, மாதினி , சாதினி மற்றும் ஷம்ஷோபினி  எனும் வேறு பதினான்கு கோண  தேவதைகளும் உள்ளனர்.  இந்த ஆவணத்தை ‘ஸர்வ ஸௌபாக்ய தாயக சக்ரம்’ என்பார்கள். இந்த ஆவரண யோகினியின் பெயர் ஸம்ப்ரதாய யோகினீ என்பதாகும். புத்திர பாக்கியத்தை அளிக்கும் ஆவரணம் இது.

ஐந்தாவது  ஆவரணத்தின் பெயர் ‘சர்வார்த்த சாதக சக்கரம்’ என்பதாகும். இதில் மேலும் கீழும் நோக்கிய நிலையில் பத்து முக்கோணங்கள் உள்ளன. அந்த பத்து முக்கோணங்களில் பத்து யோகினிகள் வாசம் செய்து காவலில் உள்ளார்கள். இதன் யோகினி தேவதை குலோத்தீர்ண யோகினி எனப்படுகிறாள். இந்த ஆவரணத்தின் சக்கரேஸ்வரி திரிபுராஸ்ரீ என்பவள் ஆகும். இங்குள்ள பத்து சக்தி தேவதைகள் சர்வசித்திப்ரதா, சர்வசம்பத்ப்ரதா, சர்வப்ரியங்கரி, சர்வமங்கள காரிணி, சர்வகாமப்ரதா, சர்வதுக்க விமோசனி, சர்வம்ருத்யுப்ரசமனீ , சர்வவிக்ன நிவாரணி, சர்வாங்கசுந்தரி, சர்வ சௌபாக்யதாயினி போன்றவர் ஆவர்.

மைய பகுதியில் இருந்து கீழ் நோக்கி உள்ள ஐந்து கோணங்கள் சரஸ்வதி, லஷ்மி, கெளரி, மகேஸ்வரி மற்றும் மனோன்மணி போன்ற தெய்வங்களையும், மேல் நோக்கி காணப்படும் நான்கு கோணங்கள் சிவ பெருமானின் நான்கு முகங்களான தத்புருஷம், சத்யோஜாதம், அகோரம், வாம தேவம் மற்றும் மறைந்திருக்கும் ஈசானம் எனும் சக்தியையும் சேர்த்து ஐந்து சக்திகளையும் நான்கு கோணங்களில் குறிப்பிடுவதாக சொல்லப்படுகின்றது. சிவபெருமானின் இந்த ஐந்து முகங்களையும் நினைத்து தியானம் செய்தாலும் அல்லது வழிபாடு செய்தாலும் இப்பிறவியில் சகல சுகங்களும் கிட்டி மறுபிறவியில் முக்தியும் கிட்டும் என்பது பிரம்ம தேவனின் வாக்கு ஆகும். இத்தனை சக்தி வாய்ந்த அந்த ஆவாரணத்தில் உள்ள பத்து முக்கோண தளங்களிலும் பத்து யோகினிகள் உள்ளார்கள். இந்த ஆபரணத்தை பூஜிப்பதின் மூலம் தேகம், மனம் மற்றும் ஆத்ம பலங்களை பெற முடியும்.

ஆறாவது ஆவரணமும் பத்து முக்கோணங்களைக் கொண்டதளம் ஆகும். இந்த ஆவரணத்தில் பத்து ஆவரண தேவியர்கள் குடிகொண்டிருக்கின்றனர். இந்த ஆவரணம் ‘சர்வ ரக்சா கரச் சக்கரம்’ என்று கூறப்படும். இந்த ஆவரணத்தின் சக்கரேஸ்வரி திரிபுரமாலினி என்பவள் ஆவார். இங்குள்ள சக்தி தேவதைகள் சர்வக்ஞா, சர்வ சக்தி, சர்வைஸ்வர்ய ப்ரதா, சர்வ ஞானமயீ, சர்வ வியாதி வினாசினி, சர்வா தார ஸ்வரூபா, சர்வ பாவஹரா, சர்வானந்தமயீ, சர்வரக்ஷா ஸ்வரூபினி, ஸர்வேப்ஸித பலப்ரதா போன்றவர்கள். இந்த ஆறாவது ஆவரண பூஜையினால் காம, குரோத, மத மாச்சரியம் நீங்கும். பொறாமை குணம் விலகும்.

எட்டு முக்கோண தளங்களைக் கொண்டஏழாவது  ஆவரணத்திற்கு ‘சர்வ ரோஹ சக்கரம்’ என்று பெயர். இதில் வசினீ, காமேச்வரி, மோதினி, விமலா, அருணா, ஜயிநீ, சர்வேச்வரி, கௌலினி போன்ற எட்டு வாக் தேவிகள் குடி கொண்டுள்ளார்கள். இந்த வாக் தேவிகள் தான் லலிதா சஹஸ்ரநாமத்தை இயற்றியவர்கள். இந்த தள யோகினியின் பெயர் ரஹஸ்ய யோகினீ என்பதாகும். இந்த ஆவரணத்தின் சக்கரேஸ்வரி திரிபுராசித்தா என்பவள் ஆகும். இந்த ஆவரணத்தை பூஜிப்பதின் மூலம் ஆத்ம ஞானம் பெருகும். 

எட்டாவது  ஆவரணம் ஒரே ஒரு முக்கோண வடிவமான தளத்தைக் கொண்டது. இந்த ஆவரணத்தின் சக்கரேஸ்வரி திரிபுராம்பா  என்பவள் ஆகும்.  ஸர்வஸித்தி ப்ரத சக்கரம்  எனப்படும் இந்த ஆவரணத்தில் காமேசி, வச்சிரேசி, பகமாலினி என்ற மூன்று தேவதைகளும் முக்கோணத்தில் ஒவ்வொரு பகுதியிலும் நின்று காவலில் உள்ளார்கள். இதில் மேலும் சில சக்தி தேவியர்களும், அதிரஹஸ்ய யோகினீ  தேவதையும் உள்ளார்கள். மனிதனை கடைநிலைக்கு தள்ளுகின்ற ஆணவம், கர்மா, மாயை என்ற மும்மலங்களும் இச்சக்கரத்தை பூஜிப்பதினால் எரிந்து சாம்பலாகி விடுகிறது.

ஒன்பதாவது ஆவரண தளத்தின் உள்ளே மையப்பகுதியில் புள்ளி வடிவில் இருப்பதே ஸ்ரீபுரம் என்பது. அதையே  பிந்து ஸ்தானம் என்கின்றார்கள். இதில் வாமாதியர்கள் என்ற சக்தி தேவியர்களும், அதிஷ்டான யோகினி தேவதையான பராபர ரஹஸ்ய யோகினீயும் இடம் கொண்டிருக்கிறார்கள். பிந்து ரூபமான இந்த ஆவரணம் ஸர்வானந்த மயசக்ரம்  எனப்படுகிறது. இந்த பிந்துவில்தான் ஸ்ரீதேவியானவள் காமேஸ்வரி எனும் பெயரில் பிந்துவாக, சிவ-காமேசுவரியாக, காமேஸ்வரன் எனும் சிவனுடன் ஒன்றியவளாக எழுந்தருளியிருக்கிறாள்.

பேரழகின் இலக்கணமாக லலிதாம்பிகையே விவரிக்கிறார்கள்.  இங்குள்ள லலிதாம்பிகை பாசம், அங்குசம், கரும்புவில், ஐம்மலர் அம்புகள் என்பன நான்கு கரங்களில் தாங்கியவளாக, பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன் ஆகியோர் அவளது சிம்மாசனத்தின்  கால்களாக விளங்கும்  சிம்மாசனத்தில்  காமேசுவரனாகிய ஈசனின்  மடியில் அமர்ந்து இருக்க, இரு பக்கங்களிலும் லக்ஷ்மியும் சரஸ்வதியும்  கவரி வீச  காட்சி அளிக்கிறாள்.  இங்குள்ள சர்வேஸ்வரியை எப்போதுமே பார்த்துக் கொண்டே, சேவித்துக் கொண்டே இருக்க வேண்டும், ஆனால் அவள் அருகில் செல்ல தங்களுக்கு சக்தி இல்லை என்பதை உணர்ந்த ஈஸ்வரன், ருத்திரன், மஹாவிஷ்ணு, பிரும்மா ஆகிய நால்வரும் அவரவர்களது தபஸ் சக்தியினால் வேதஸ்வரூபமான சர்வேஸ்வரியின் சிம்மாசனத்திற்கு  நான்கு கால்களாக ஆகும் தன்மையை எடுத்துக் கொண்டு சிம்மாசனத்தின்  கால்களாகி அவளது ஸ்வரூபத்தை எப்போதுமே உபாசித்துக் கொண்டு உள்ளதாக சௌந்தர்யலஹரியின் 92  ஸ்லோகத்தில் கூறப்பட்டு உள்ளது.  

தேவியின் மாளிகையின் வாயிலில் அணிமா, கரிமா, லஹிமா, மஹிமா, பிராப்தி, ப்ரகாம்யம், வசித்தவம் மற்றும் ஈசித்தவம் போன்ற எட்டு சித்திகள் துவாரகாபாலர்களாக ஆயுதபாணியாக நிற்பதினால், பசுபதி (ஈஸ்வரன்) என்பவரைத் தவிர்த்து வேறு எவரும் உள்ளே சென்று தேவியை பூஜிக்க முடியவில்லை என்பதினால்தான் இந்திரன் போன்ற தேவர்களுக்கு கூட உள்ளே செல்ல முடியவில்லை என்பதினால், வாயிலிலேயே நின்றபடி தேவிக்கு பாதுகாவலராக நின்ற வண்ணம் அவளை ஆராதித்து வருகின்றார்கள் (சுலோகம் 95).

இங்குதான் சிவ – சக்தி ஐக்கியம் எனப்படும் படைப்புத் தொழில் நிகழ்கிறது. இங்கு சிவனின் இடது பக்க மடியில் சக்தி அமர்ந்து அவர்களிருவரும் சேர்ந்து தங்களை நாடி வருபவர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். இங்கு பிறப்பு இறப்பு என்னும் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு, பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு, முக்தி பெற ஞானம் ஏற்படுகிறது. ஆத்மா பிரம்மத்துடன் இணைகின்றது. அனைத்து ஆனந்தங்களுக்கும் உறைவிடமாய் திகழும் பேரின்பம் எனும் பரப்ரும்ம நிலையில் ஒன்ற வைக்கும் நிர்விகல்ப சமாதி நிலை இதுவே ஆகும். நிர்விகல்ப சமாதி என்பது எந்தவிதமான மானிட உணர்ச்சிகளும், எண்ணங்களும், யோசனைகளும் இல்லாத ஒரு பேரின்ப நிலை, சூன்ய நிலை ஆகும். அதற்கும் மேலே தொடர்ந்து தியானிக்க ஒன்றுமே கிடையாது என்பதின் காரணம் அந்த நிலையை எட்டியவன் பிரும்மத்துடன் தன் ஆத்மாவை இணைத்துக் கொண்டு மனித உணர்வுகள் அனைத்தையும் துறந்து, தானே பிரும்மன், தானே தெய்வம் எனும் நிலையை எட்டி விடுகின்றான்.