வள்ளி தேவி எனும் காத்தாயி அம்மனின் மேன்மை

காத்தாயி அம்மன் வள்ளி தேவியின் அம்சமே என்பதில் ஐயம் இல்லைதான். சிவபெருமானின் ஆசையின்படி சித்தாடியில் தோன்றிய  சித்தாடி காத்தாயி அம்மன் ஆலய வரலாற்றை   படிக்கும் முன் அவள் பிறப்பின் காரணம் மற்றும் அவள் ஏன் உலகின் பல இடங்களிலும் அமர்ந்து இருக்கின்றாள் என்பதை அறிந்து கொள்வது அவசியம் ஆகும். சித்தாடி காத்தாயி அம்மன் எனும் வள்ளி தேவி  உண்மையில் சில முக்கியமான செயல்களை  நிறைவேற்ற பூமியில் அவதரித்த முருகப் பெருமானுக்கு உத்வேக சக்தியைக் கொடுப்பதற்காகவே பூலோகத்தில் தங்கி உள்ளாள் என்பதே உண்மை என்றாலும் சிலர் சித்தாடி காத்தாயி அம்மன் எனும் வள்ளி தேவி முருகப் பெருமானின் இன்னொரு மனைவியான தெய்வானையை கேவலப்படுத்தியதின் காரணமாக பெற்று இருந்த சாபத்தினால் பூமியில் பிறக்க வேண்டி இருந்தது என்ற கருத்து தெரிவிக்கின்றார்கள். அது முற்றிலும் தவறானது.  வள்ளிமலை தவ பீட சாமியார் கூற்றின்படி “சூரனை சம்ஹாரம் செய்தபின் வள்ளியை திருமணம் செய்து கொண்ட முருகப் பெருமான் ஸ்கந்தகிரிக்கு அவரை தன்னுடன் அழைத்து வந்தபோது வள்ளி தேவியை ஆரத் தழுவி  தெய்வானை தேவி வரவேற்ற பின் தனது நாதனையே வேண்டிக் கேட்டாள் ‘ஸ்வாமி எனக்கு வள்ளியின் கதையை நீங்கள் கூற வேண்டும். வள்ளியும் ‘அக்கா இன்று முதல் நீங்கள்தான் என்னை ஆதரித்து வரவேண்டும்’ எனக் கூற அக்கா – தங்கை இருவருமே கட்டி அணைத்துக் கொண்டு மகிழ அங்கேயே இச்சா சக்தி, ஞான சக்தி, மற்றும் க்ரியா சக்திகள் ஒன்றிணைந்த சங்கமமானார் முருகப் பெருமான்”.  பூர்வ ஜென்ம தோற்றம் முதலே (சுந்தரவல்லி மற்றும் அமுதவல்லி) இருவரும் ஒன்றிணைந்த கருத்தைக் கொண்டவர்கள். தனித்தனியான இடங்களில் இவருடைய திருமணம் ஆனதும் கூட, மன அன்போடு இருவரும் ஒன்றிணைந்த நிலையில் ஒருவருக்கொருவர் மனக்கசப்பு கொண்டு சாபமிட்டதாக கருதுவதற்கு சாத்தியமே இல்லை. ஜீவாத்மாவான வள்ளி தேவியின் தெய்வீக சக்தி  பரமாத்மாவான முருகப் பெருமானின் தெய்வீக சக்தியுடன் பூலோகத்தில் இணைந்தால் மட்டுமே  அவரால் கலியுகத்தில் பூலோகத்தில் உள்ள மக்களுக்கு ஞானம் கொடுத்து கலியின் தாக்கத்தில் இருந்து அவர்களை காப்பாற்ற முடியும் என்பதே உண்மையான நிலை என பண்டிதர்கள் கூறுகின்றார்கள்.

வள்ளி தேவி பகவான் விஷ்ணுவின் மூலம் அவதாரம் பெற்றவர் எனக் கூறப்பட்டாலும்  உண்மையில்  அவள் பராசக்தியின்  அங்கமே.  சில காரணங்களுக்காக பராசக்தியின் ஒரு அங்கமான பார்வதி தேவியின்  மூலம் அவதரிக்க இருந்த முருகப் பெருமானுக்கு துணை நின்று அவர் செயல்களுக்கு சக்தி கொடுக்க வள்ளி தேவி  மஹாவிஷ்ணு பகவானின் கண்ணீரில் இருந்து தனது சகோதரி தெய்வானையுடன் பிறக்க வேண்டி இருந்தது. பராசக்தியின் ஒரு அங்கமான பார்வதி தேவியின் உடலில் இருந்து முருகப் பெருமான் மற்றும் வள்ளி தேவி எனும் இரு சக்திகளும் தோன்றிவிட்டால் சகோதர சகோதரியாகி விடுவார்கள், ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதினால் அவர்கள் வேறு வழி மார்கமாக தோற்றுவிக்கப்பட வேண்டி இருந்தது.  மூன்று சக்திகளும் தனித்தனியே அவதரித்தால் மட்டுமே பிரும்மனின் வரத்தின்படி  அந்த மூன்று சக்திகளும் திருமணம் என்ற போர்வையில் கணவன் மனைவியாகி  சூரசிம்மனை அழிக்க முடியும் என்பதினால்  உலக மக்களின்  நன்மைகளுக்காக  இப்படிப்பட்ட சிக்கலான வழி முறை தோற்றங்கள் தோற்றுவிக்கப்பட்டனவாம். 

இன்னொரு முக்கியமான கருத்தையும் இங்கு கவனத்தில் கொள்வது அவசியம் ஆகும். முருகப் பெருமான் உண்மையில் இரண்டு பெண் சக்திகளை உள்ளடக்கியவர் என்ற கருத்து சரியல்ல. அவர் உண்மையில் தன்னுள் மூன்று பெண் தெய்வ சக்திகளை உள்ளடக்கி இருந்தார் என்பதாக கருத்துக்கள் உள்ளன. சூரனை அழிக்கவும் கலியுகத்தில் மக்களின் அறியாமையை விலக்கி, அவர்களுக்கு  ஞானம் தந்து நல்வழிப்படுத்தவும்  பராசக்தியினால் அவளுள்  இருந்து தோற்றுவிக்கப்பட்ட இன்னொரு சக்தியும் உள்ளதாம். முருகப் பெருமான் தோன்றிய உடனேயே முருகப் பெருமானுக்கு கூடுதல் சக்தி தருவதற்காக ஒரு  பெண் சக்தியும்  அவள் உடலில் இருந்து வெளிவந்து  உடனடியாக ஞான வேலாக மாறி விட அதையே  முருகப் பெருமானின் அங்கமாக இருக்கும் வகையிலான வேலாக மாற்றி சூரனை அழிக்க முருகப் பெருமானுக்கு  பார்வதி தேவி கொடுத்தார்.  அப்படி வெளித் தெரியாத ரூபமாய் வெளிவந்த பெண் சக்தியே ஜ்யோதி தேவி என்பதாக கூறுகின்றார்கள். முருகப்பெருமான் ஞான சக்தியாக கண்களுக்கு புலப்படாமல் வெளிவந்த ஜ்யோதி எனும் தேவியையும், க்ரியா சக்தியாக தெய்வானையையும், இச்சா சக்தியாக வள்ளி தேவியையும் மூன்று பெண் சக்திகளாக தன்னுடன் இணைத்துக் கொண்டார் என்றும், அந்த மூன்று  சக்திகளும் இல்லாமல்  அவருடைய  சுய சக்தியினால் மட்டுமே  சூரனை அழித்து கலியுகத்தில் மக்களை நல்வழிப்படுத்த இயலாது என்பது பிரும்ம தத்துவ நிலையாக இருந்தது.

இப்படியாகத்தான்  முருகப் பெருமான் மற்றவர்களுடைய கண்களுக்கு புலப்படாத, தாயார் மூலமே தனது சகோதரியாக வெளிவந்த ஜ்யோதி தேவியின் சக்தியை உள்ளடக்கிக் கொண்டு, அதைத் தவிற தனது மனைவிகள் மூலம் தனக்கு தரப்பட்ட உணரும் சக்தி மற்றும் உயிரூட்டும் சக்தி என்ற  இரு  சக்திகளை உள்ளடக்கியவர் ஆனார் (மூன்றாவது பெண் சக்தியான ஜ்யோதி தேவியைக் குறித்து 1998 ஆம் ஆண்டு சென்னையில் ‘ஆசிய ஸ்கந்த முருகன் ஆய்வு கழகம்’ நடத்திய கருத்தரங்கம் ஒன்றில்  ‘ஸ்வரூப வேல் -ஸ்கந்தனின் சகோதரி ஜ்யோதி ‘ என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சி  கட்டுரையை டாக்டர் திரு அழகப்ப அழகப்பன் என்பவர் வெளியிட்டார். அதன் முழு விவரத்தை  http://murugan.org/jyoti.htm என்ற இணைய தள கட்டுரையில்  காணலாம்).

ஒரு விதத்தில் பார்த்தால் பார்வதி தேவியின் உண்மையான சக்தி கணமான வள்ளி தேவியின் அவதாரமே  தெய்வங்களுக்கு இன பேதம் கிடையாது, அனைவரும் ஒன்றே  என்பதை எடுத்துக் காட்டும் நிலை ஆகும்.   இரண்டு தெய்வீக சக்திகளான  தெய்வானை தேவி மற்றும் வள்ளி தேவி படைக்கப்பட்டு  அதில் ஒருவர்  தேவர்களுடன் தங்க வைக்கப்பட்டு, இன்னொருவர் வேடர் குலத்தவரோடு வாழ்ந்திருக்க வைக்கப்பட்டார். வள்ளி தேவியுடனான முருகப் பெருமானின் திருமணம் கூட தெய்வீக உலகில் வேடர் குல வள்ளி தேவி பெற்று இருந்த மேன்மையை எடுத்துக் காட்டுவதே ஆகும். முருகப் பெருமானுடன் நடைபெற்ற திருமணத்தில்   தேவசேனா செய்து கொண்ட திருமணம் வைதீக முறையிலான முறையில் அமைந்து இருக்க வள்ளியின் திருமணமோ ஆரியர்களின் காலத்துக்கு முற்பட்ட ஆச்சாரமற்ற, வைதீகமற்ற முறையில் நடந்த திருமணம் என்பதை காணலாம். அந்த வள்ளி தேவியே சித்தாடி காத்தாயி அம்மன் தோற்றத்தில் இருந்து  கொண்டு அந்தணர் மற்றும் அந்தணர் அல்லாதோர் என்ற பேதம் இல்லாமல் பலரது குலதெய்வமாக விளங்குகின்றாள் என்பது எத்தனை ஆச்சர்யம்.

1350 ஆம் ஆண்டு காஞ்சீபுரத்தில் குச்சியப்பா என்பவர் இயற்றியதாகக் கூறப்படும்  கந்த புராணத்தில், வள்ளியம்மை திருமணப் படலம் எனும் பகுதியில் காணப்படும் செய்தியின்படி தொண்டை நாட்டின் மேற்பட்டியின் அருகில் உள்ள வள்ளி ஈர்ப்பு என்ற வள்ளி மலை பகுதியில்தான் வள்ளி தேவி பிறந்ததாகவும், அங்குதான் வள்ளி தேவியை காதலித்தபோது முருகப் பெருமான் வள்ளி தேவியுடன் ஆடிப்பாடி விளையாடியதாகவும் அதன் பின் அங்கு வள்ளி தேவியுடன் திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டு உள்ளது. அதே போலவேதான் இலங்கையின் கதிர்காமத்திலும், சித்தாடியிலும் முருகப் பெருமான்-வள்ளி தேவி திருமணம் நடந்துள்ளதாக கூறுகின்றார்கள்.

ஒரு காலத்தில் இந்தியாவின் தென் பகுதிகளும் இலங்கையும் கடலால் பிளவு படாத ஒரே நிலமாக இருந்துள்ளது என்பது வரலாற்று செய்தி. தெய்வங்களுக்கு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்தை அடைய சில கணங்களே போதுமானது. ஆகவே முருகப் பெருமானும் வள்ளி தேவியும் தமிழ்நாட்டின் தென் பகுதியில் பல இடங்களில் ஆடிப்பாடிக் கொண்டு இருந்திருக்கின்றார்கள். இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த நாறிணை 82.4 என்ற மிகப் பழமையான குறிஞ்சி என்ற தமிழ் நூலில் உள்ள அஹம் என்ற பாடலில் முருகப் பெருமானையும் வள்ளி தேவியையும் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் ஒன்றிணைத்துப் பார்க்கும்போது இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டிலேயே வள்ளி- முருகன் இருவருமே தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களிலும் மானிட உருவில் இருந்திருப்பது புலனாகும். அதன் காரணம் கொண்டை முடியுடன், வலது கையில் தாமரை மலரை ஏந்தியவண்ணம் காட்சி தரும் சித்தாடி காத்தாயி அம்மனின் சிலை வள்ளி மலை வள்ளி தேவியின் உருவத் தோற்றத்துடன் பெரும் அளவில் ஒத்து உள்ளது என்பதே. ஆகவே தேவலோகத்துக்கு திரும்பிச் செல்லும் முன் சித்தாடியில் காத்தாயி அம்மன் உருவில் வாழ்ந்திருந்த வள்ளி தேவி விட்டுச் சென்றுள்ள மானிட உடலே காலப்போக்கில் சிலையாகி நதிக்குள் மூழ்கி இருந்திருக்க வேண்டும் என கருதுவதில் தவறில்லை. 

வெளி உலகைப் பொறுத்த மட்டில் வள்ளி தேவி வேடர் குலத்தில் இருந்து உதயமான தெய்வம் எனப்பட்டாலும் அவள் பார்வதி தேவியின் நேரடி அம்சம் என்பதினால் வள்ளி தேவியான  சித்தாடி காத்தாயி அம்மனின் சக்தி பராசக்தியின் தன்மையைக் கொண்டது என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது.  ஆதி உலகை  ஆண்டவள் பராசக்தி, அனைத்தையும் தாங்கி நின்ற, நிற்பவளும் பராசக்தியே. அந்த பராசக்தியின் தெய்வீக கணமே சித்தாடி காத்தாயி அம்மன். அப்படி என்றால்  எதற்காக  முருகப் பெருமானின் இரண்டு மனைவிகளில் ஒருவராக வள்ளி தேவி  பூமியிலே தங்கினாள் ? தெய்வானையை   வடமொழியில்  தேவசேனா என்று கூறுவார்கள். அவள் தேவலோகத்தில் வளர்ந்தவள். சேனா  என்ற சொல்லுக்குக் காப்பது என்பது பொருள். ஆகவேதான் தேவர்களை காக்க  அவளை தேவலோகத்தில்   தங்குமாறும்  பூமியிலே    வேடர் குலத்தவருடனேயே வளர்ந்து வாழ்ந்திருந்த வள்ளி தேவி பூமியில் உள்ளவர்களைக் காக்க பூமியிலேயே தங்குமாறும் கூறப்பட்டாள். 

முருகப் பெருமானுடனோ அல்லது தனியாகவோ வள்ளி தேவி எந்த ஆலயத்தில் இருந்தாலும்  அவள்  வள்ளி தேவி  என்ற பெயரில்தான், வள்ளி தேவி என்ற உருவில்தான் ஆலய  சன்னதிகளில்  காட்சி தருகின்றாள், வள்ளி தேவி  என்ற பெயரில்தான் அனைத்து ஆலயங்களிலுமே  பூஜிக்கப்படுகின்றாள். ஆனால்  வள்ளி தேவி  வேறு ஒரு அவதார தோற்றத்தில், வேறு ஒரு பெயரில் காணப்படுவது சித்தாடி காத்தாயி அம்மன் ஆலயத்தில் மட்டுமே என்பது இன்னுமொரு வியப்பான உண்மை ஆகும். சித்தாடி காத்தாயி அம்மன் எனும் அவதார தோற்றத்தைத் தவிர உலகில் வள்ளி தேவிக்கு வேறு எந்த பெயரிலும் அவதாரத் தோற்றம் கிடையாது என்பது நிதர்சனமாகத் தெரிகின்றது.  இது ஒன்றே தெய்வீக உலகில் சித்தாடி காத்தாயி அம்மன் பெற்றுள்ள பெருமைக்கு ஒரு சான்றாகும்.  முருகப் பெருமான் பெருமளவில் வணங்கப்படும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீ லங்கா, மௌரூஷியஸ் போன்ற நாடுகளில் உள்ள ஆலயங்கள் அனைத்திலுமே முருகப் பெருமான், வள்ளி தேவி மற்றும் தெய்வானை தேவி எனும் மூவருமே அவரவர்களின் ஆரம்பகால தோற்றத்தின் பெயர்களிலேயே காட்சி தருகின்றார்கள். 

மேலும் சித்தாடி காத்தாயி அம்மனாக வள்ளி தேவி  உள்ளதை போல தெய்வீக தனித் தன்மையை, மேன்மையை  தெய்வானை தேவி மற்றும் ஜ்யோதி தேவி எனும் இருவரும் பெற்று இருக்கவில்லை. அவர்கள் எப்போதுமே முருகப் பெருமானுடன் சேர்ந்து மட்டுமே வழிபடப்படுகின்றார்கள். அவர்களில் தெய்வானை தேவி மட்டும் முருகப் பெருமான் வீற்று இருக்கும் ஆலயத்தில் தனி சன்னதியில் ஒரு சில ஆலயத்தில் இருக்கின்றாள் என்றாலும் அவள் தெய்வானை என்றே வணங்கப்படுகிறாள். வள்ளி தேவி பலரது குலதெய்வமாக இருந்து வருகின்றாள். அந்த நிலை தெய்வானை தேவிக்கு இல்லை. கலியுகத்தில் மக்களுக்கு ஞானம் தந்து அவர்களை நல்வழிப்படுத்த தோன்றிய முருகப் பெருமானுக்கு அவரது செயல்பாடுகளில் உதவி சூரனை வதம் செய்யத் தேவையான சக்திகளை அளிக்க பராசக்தி மூலம் வெளி வந்துள்ள மூன்று தனித்தனி சக்திகளைக் கொண்ட தேவிகளே அவர்கள் மூவரும் என்றாலும் அனைத்தையும் நோக்கும்போது தெய்வீக உலகில் சித்தாடியில் காத்தாயி அம்மனாக காட்சி தரும் வள்ளி தேவி மிக முக்கியமான, உயர்வான, தனித்  தன்மை மற்றும் தனி அந்தஸ்தைக் கொண்டு உள்ள தெய்வம்  என்பதை நிதர்சனமாக காட்டுகின்றது.

மூன்று சக்திகள் அவதரித்த கதை

படைப்பு தெய்வம் பிரும்மாவினால் பிரபஞ்சம்   படைக்கப்பட்டவுடன்  முதலில் தேவர்களும் அசுரர்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தார்கள்.  ஆனால் காலப்போக்கில்  அவர்கள் இடையே பிளவு ஏற்பட்டது. தேவர்கள் தேவலோகத்தில் வாழ்ந்து வந்தாலும் அவர்களில் சிலர் பெற்று  இருந்த சாபங்களை நீக்கிக்கொள்ள மானிடப் பிறவி எடுத்து பூவுலகத்திற்கும்   வந்து போய்க் கொண்டுதான் இருந்தார்கள். சிறு அளவிலான அசுரர்களில் நல்லவர்கள் மட்டும் தேவலோகத்தில் தேவர்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தாலும் தீய அசுரர்கள் பூமியில் தங்கி இருந்தார்கள். 

தீய எண்ணம் கொண்ட அசுரர்கள் தேவலோகத்தில் உள்ள தேவர்களை மட்டும் அல்ல பூமியில் உள்ளவர்களையும் வாட்டி வதைத்தார்கள். அவர்களுடைய அட்டூழியம் எந்த அளவிற்கு சென்றது என்றால் பூலோகத்தில் உள்ளவர்கள் தம்மையே கடவுளாக வணங்க வேண்டும் என நிர்பந்தித்தார்கள். ரிஷி முனிவர்களையும் விட்டு வைக்காமல் தம்மை வணங்குமாறு கூறினார்கள். அந்த அசுரர்களில் ஒருவனான சூரசிம்மன் முதலில் நல்ல குணங்களைக் கொண்டு பின்னர் கொடூரமான மனத்தைக் கொண்டவனாக வாழ்ந்தவன். அவனை யாராலும் அடக்க முடியவில்லை, அவனை அழிக்க  முடியாமல் அனைவரும் தவித்தார்கள். அதன் காரணம் அவனுக்கு பகவான் பிரம்மாவிடம் இருந்து கிடைத்து இருந்த வரமே ஆகும்.

அப்படிப்பட்ட அரிய வரம் என்னதான்  அவனுக்கு கிடைத்து இருந்தது?  அவனுக்கு பகவான் பிரும்மா கொடுத்த வரம்தான் என்ன? பகவான் பிரும்மா அவனுக்கு கூறி இருந்தார் ‘சூரன் என்றால் யாராலும் வெல்ல முடியாதவன் என்று அர்த்தம். நீ பல பிறப்புக்களை எடுப்பாய். ஆனால் அத்தனை பிறவிகளிலும்  நீ விரும்பினால் மட்டுமே உனக்கு மரணம், அதுவும்  உன்னால் மட்டுமே ஏற்பட முடியும். மற்றவர்கள் யாராலும் உன்னைக் கொல்ல முடியாது.  உன்னுடைய அழிவற்ற ஆத்மாவோ நீ எடுக்கும் ஒவ்வொரு பிறப்பிலும் அதே மூல குணங்களோடு சென்று  அமர்ந்து விடும் என்பதினால் நீ அனைத்து பிறப்பிலும் அதே குணங்களைக் கொண்டவனாகவே இருப்பாய். ஆனால் மிக அதிசயமான வகையில், சிறிய மற்றும் மிகப் பெரிய காரணங்களுக்காக, ஏதாவது ஒரு ஆண் சக்தியில் இருந்து நேரடியாக வெளிவரும் இரண்டு பெண் சக்திகளும், அதே  சமயம் மற்றுமொறு ஆண் பெண் சக்திகளில் இருந்து வெளிவரும் இன்னொரு சக்தியும் ஒன்றாக இணைந்து செயல்படும்போது அவர்களில் ஒருவரால் உன்னுடைய நிலையான ஆத்மா அழிந்து உனக்கு மரணம் ஏற்பட வாய்ப்பு உண்டு.  அது மட்டும் அல்ல நேரடியாக ஒரு ஆண் மூலம் வெளிவரும் இரண்டு பெண் சக்திகளும் மீண்டும் ஒரு பிறப்பு எடுத்து அந்த புதிய பிறப்பின் மூலம் மூன்றாவது சக்தியுடன் இணையும் நேரத்தில் மட்டுமே அது சாத்தியம் ஆகும். இன்னும் ஒன்று முக்கியம். அந்த பிறவிகள் அனைத்தும் மானிட உருவில் தோன்றுகையில்  அவை   எதுவுமே தாயின் கருப்பையில் தங்கி வளராமல் வெளிவர வேண்டும் என்பது நியதி’ என்று கூறினார். சூரசிம்மனை அழிக்க இப்படி ஒரு குட்டையைக் கிளப்புவது போன்ற குழப்பமான வரத்தின்படி எந்த பிறவிகள் பிறக்க முடியும் ?

அப்படிப்பட்ட வரத்தின் தன்மை மற்றும் அதனுள் மறைந்து கிடந்த செய்தியின் உள் அர்த்தத்தை எவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதினால் சூரசிம்மன் ‘சிறிய மற்றும் மிகப் பெரிய காரணங்களுக்காக தாயின் கருப்பையில் தங்கி வளராமலேயே, அதுவும் ஒரு ஆண் மூலம் எப்படி இரண்டு பெண் சக்திகள் வெளிவந்து, இன்னொரு பிறப்பு எடுத்து, இன்னொரு ஆண் பெண் மூலம் வெளிவரும் சக்தியுடன் இணைய முடியும்? ஆகவே இவை எதுவுமே நடைபெற சாத்தியமே இல்லை என்பதினால் எனக்கு மரணம் என்பதே இருக்காது’ என இறுமாப்புடன் சென்றான்.

பகவான் பிரும்மா கொடுத்த வரத்தைக் குறித்து கேள்விப்பட்ட தேவர்கள் உடனடியாக அவரிடம் ஓடிச் சென்று தமது கவலையை எடுத்துரைக்க பகவான் பிரும்மா அவர்களுக்கு ஆறுதல் கூறினார் ‘ என்றும் அழிவில்லாத ஒரு நிலை என்பது கூட  அழிவற்றதல்ல. நான் வேறு வழி இன்றிதான் சூரனுக்கு அப்படி ஒரு வரம் கொடுக்க வேண்டி இருந்து விட்டது. ஆனால் கவலைப்பட வேண்டாம், அனைத்துமே நல்லவைகளாகவே முடியும்.  விதி இருந்தால்  விரைவில் சிறிய மற்றும் பெரிய காரணத்திற்காக நல்லதே நடக்கும்’. அப்படி அவர் கூறியது தேவர்களை மேலும் குழப்பியது. அவர் கொடுத்திருந்த வரத்தின் உள் அர்த்தமோ  அதன் மர்மமோ விளங்கவில்லை. அப்போது அவர்களுக்கு தெரிந்திராத ஒரு உண்மை என்ன என்றால் கலியுகத்தில் மக்களின் அறியாமையை விலக்கி ஞானம் தந்து நல்வழிப்படுத்த பராசக்தி மூலம் மூன்று சக்திகள் வெளி வரவுள்ளன.  முதலில் அவை மூன்றும் ஒன்றாகி  சூரனை அழித்த பின் உலகை நல்வழிப்படுத்த உள்ளார்கள். அவர்களில் க்ரியா சக்தியாக தெய்வானையும், ஞான சக்தியாக முருகப் பெருமானும்  மற்றும்  இச்சா சக்தியாக வள்ளி தேவியும் வெளிவர உள்ளார்கள். பூலோகத்தில் உள்ள பல ஆலயங்களிலும் வள்ளி தேவி  தங்கி இருந்து கொண்டு, அதே சமயம் சித்தாடியில் மட்டும் காத்தாயி அம்மனாக இருந்து கொண்டு முருகப் பெருமானின் செயல்களுக்கு வடிவம் தந்து உறுதுணையாக இருக்க உள்ளாள், அவளோடு பராசக்தியும் அதே  ஆலயத்தில் குடி இருக்க  உள்ளாள் போன்றவை ஆகும்.

ஞான சக்தி, க்ரியா சக்தி, மற்றும் இச்சா சக்திகளாக, மூவர் சூரசிம்மனை அழிக்க அவதரிக்க உள்ளனர் என்பது சிறிய காரணம். கலியுகத்தில் உலகில் சூழ உள்ள தீமைகளை தடுத்து நிறுத்தி கலியின்  தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்றி அவர்களை நல்வழிப்படுத்த அந்த மூன்று சக்திகளும் தேவை என்பது இரண்டாவதான பெரிய காரணம். அந்த செயலை ஞான சக்தியாக அவதரிக்க இருந்த முருகப் பெருமானே  செய்ய இருந்தார். ஆனால் அதே நேரத்தில் உலகில் ஞான சக்தியாக அவதரித்தப் பின் முருகப் பெருமான் சூரனை வதம் செய்யும் செயலை மறந்து விட்டு  ஞான மார்கத்தை போதிப்பதிலேயே கவனமாக இருந்து விட்டால்,  அவருடைய அவதாரத்தின்  முக்கியமான சிறிய காரணமான சூரசிம்மனின் வதம் நிகழாமல் போய் விடும். ஆகவே முருகப் பெருமானுடைய ஞான சக்தி வலுவடைய இன்னும் இரு குறிப்பிட்ட சக்திகள் தேவை. அந்த இரு சக்திகளே சூரசிம்மனை வதம் செய்யும் செயலில்  அவரை முதலில்  ஈடுபட வைக்கும். அந்த இரு சக்திகளும் இல்லாமல் கலியுகத்தில் அவரால் தனிமையில் செயல்பட முடியாது. இதனால்தான் பராசக்தியானவள் முருகப் பெருமானை ஞான சக்தியாக படைத்தபோதே மற்ற ஆற்றல் மிக்க துணை  சக்திகளான க்ரியா மற்றும் இச்சா சக்திகளாக தெய்வானை தேவி மற்றும் வள்ளி தேவியை ஒரே காலகட்டத்தில் படைக்க வேண்டி இருந்தது.

…….continued-3