சித்தாடி காத்தாயி அம்மனின்
தோற்றமும் வரலாறும்

கட்டுரை: சாந்திப்பிரியா

சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட ஆண்டை சேர்ந்ததாக கூறப்படும் வள்ளி தேவியின் இன்னொரு ரூபமான அன்னை காத்தாயி அம்மன் ஆலயம் மாயவரம் மற்றும் கும்பகோணத்தின் இடையில், நன்னிலம் கிராமத்தின் அருகில் உள்ள சித்தாடி எனும் குக்கிராமத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், குட வாசல் தாலுக்காவில் உள்ள இந்த சித்தாடி காத்தாயி அம்மன் ஆலயம் மாயவரத்தில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலும், முடி கொண்டான் ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ள இடத்தில் உள்ளது.
சித்தாடியில் உள்ள காத்தாயி அம்மன் யார் என்றால், அவள் முருகப் பெருமானின் மனைவியான வள்ளி தேவியே ஆவார். அவர் இச்சா சக்தியை வெளிப்படுத்துபவர். வாழ்க்கைக்கு மூன்று ஆற்றல்கள் உள்ளன. அவற்றை இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிரியா சக்தி எனலாம். வள்ளி தேவியானவள் ஞான சக்தியான முருக பெருமானின் ஒரு துணைவி. அவர் இச்சா சக்தியை வெளிப்படுத்துபவர். இச்சா சக்திதான் நமது வாழ்க்கையின் அடிப்படை தளமாக உள்ளது. இச்சா சக்தி என்பது ஒருவரது விருப்பம் மற்றும் ஆசை ஆகியவற்றின் ஆற்றலைக் குறிக்கிறது. ஒரு செயலைச் செய்ய முதலில் தேவைப்படும் ஆர்வம் அல்லது உந்துதல் இதுதான். ஆகவேதான் வள்ளி தேவி நமக்கு மிகவும் முக்கியமான தெய்வமாக கருதப்படுகின்றார்.
காத்தாயி அம்மன் ஆலயங்கள் பலவும் சில கிராமப்புறங்களில் காணப்படுகின்றன. இந்தியாவை பொறுத்தவரை தெய்வங்களைக் குறித்தும், அவர்களது தோற்றங்களைக் குறித்தும் பல நாடோடிக் கதைகளும், செவி வழிக் கதைகளும் உண்டு. அதில் ஒரு நம்பிக்கைக் கதையின்படி அன்னை காத்தாயி அம்மன் முன்னொரு காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட விளை நிலங்களை கொண்ட காவேரி டெல்டா பகுதி எனப்படும் சோழ மண்டலத்தின் தஞ்சாவூர், மாயவரம், கும்பகோணம் மற்றும் சிதம்பரம் போன்ற பகுதிகளில் இருந்த கிராமங்களில் அன்று முதல் இன்றளவும் வணங்கப்பட்டு வந்துள்ள கிராம தெய்வமாக இருந்திருக்கலாம் என்பது தெரிகின்றது.
இன்னும் சில கருத்துக்களின்படி சோழ மன்னர்கள் ஆண்டு வந்த காலத்தில், அதாவது 1500 முதல் 2000 வருடங்களுக்கு உட்பட்ட காலத்தில் சில கிராமங்களில் அன்னை காத்தாயி வழிபாடு இருந்துள்ளதாக தெரிகின்றது. அதன் காரணம் சோழ மன்னர்களில் சிலர் அன்னை காத்தாயி அம்மனை வழிபட்டு வந்துள்ளார்கள் என்பதே ஆகும்.
சித்தாடியின் இந்த இந்த ஆலய பகுதியில்தான் முருகப் பெருமான் வள்ளி தேவியை மணந்து கொண்டதாகவும், அதனால்தான் காத்தாயி அம்மன் என்ற பெயரில் வள்ளி தேவி இங்கு எழுந்தருளி உள்ளதான கருத்தும் உள்ளது. இதைப் போலவே ஸ்ரீ லங்காவில் உள்ள கதிர்காம ஆலயம் உள்ள பகுதியில் வள்ளி தேவி முருகப் பெருமானை மணந்து கொண்டதான கதைகளும் உண்டு.
புராணங்களின் கூற்றின்படி ஒவ்வொரு தெய்வமும் பல்வேறு நிலைகளில் அவரவர்களுக்கு கிடைத்திருந்த சாபங்களை களைந்து கொள்ள பூலோகத்தில் பல பிறப்புக்களை எடுத்துள்ளன. அப்படி சாப விமோசனம் பெற வந்தவர்களில் தெய்வீக தம்பதிகளும் உண்டு. அப்படி வந்தவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூட தாம் திருமணம் செய்து கொண்டவர்களை பிரிந்து வாழ வேண்டி இருந்தது. இப்படியாக பிறப்பு எடுத்த தெய்வங்கள் சாப விமோசனம் பெற்றவுடன் மீண்டும் அவரவர்களின் கணவனையோ அல்லது மனைவியையோ திருமணம் செய்து கொண்ட கதைகள் பல உள்ளன. தெய்வங்களை பொறுத்தவரை விவாகரத்து போன்றவை கிடையாது என்பதினால் மீண்டும் மணம் என்பது என்ன என்றால் சாப விமோசனகளை நிவர்த்தி செய்து கொள்ள தற்காலிகமாக அவரவர்களை விட்டு விலகி நின்ற ஆண் மற்றும் பெண் சக்திகள் மீண்டும் ஒன்றிணையும் நிலை ஆகும். சாப விமோசனம் அடைந்து அவை மீண்டும் ஒன்றிணையும் நேரத்தில் அதை பரிபூரணமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அதே தெய்வீகத் தம்பதிகளுடைய பல திருமணங்கள் மீண்டும் நடைபெற்றுள்ளது என்று கற்றறிந்த பண்டிதர்கள் கூறுகின்றார்கள்.
இதில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். சாப விமோசனங்களைப் பெற பிரிந்து சென்ற அனைத்து தெய்வீக தம்பதியினரும் இணைந்தபோது மீண்டும் திருமணம் செய்து கொண்டார்கள் என்கின்ற கதைகள் இல்லை. சில தெய்வங்கள் மட்டுமே அவற்றை வெளிப்படுத்தி உள்ளன. அதற்கும் ஒரு காரணம் உண்டு. பல முறை சில தெய்வீக தம்பதிகளின் திருமணங்களைக் காண முடியாமல் இருந்த ரிஷி முனிவர்கள் அவர்களது திருமணத்தை தாம் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டு தவம் இருந்தார்கள். அவர்களின் தவத்தை மெச்சி அவர்களுக்கு காட்சி தந்த தெய்வங்கள் அவர்களது ஆசைகளை பூர்த்தி செய்வதாக கொடுத்த வாக்குறுதிகள் பேரிலும், எந்தெந்த பகுதிகளில் பிரிந்து சென்ற தெய்வங்கள் தவத்தில் அமர்ந்திருந்தனவோ அந்தந்த புனிதப் பகுதியிலும், தமது திருமண வைபவங்களை மீண்டும் நடத்திக் காட்டினார்கள் என்பதினால்தான் இன்றும் பல ஆலய வரலாறுகளில் சிவபெருமான் பார்வதி தேவி, முருகப் பெருமான்-வள்ளி தேவி மற்றும் பகவான் மஹாவிஷ்ணு-லட்சுமி தேவி திருமணங்கள் அந்தந்த ஆலயத்தில் நடைபெற்றதான வரலாற்றுக் கதைகள் உள்ளன. இப்படியாகத்தான் பல ஆலய இடங்களில் தெய்வங்கள் தத்தம் திருமணக் காட்சிகளை மீண்டும் மீண்டும் நடத்திக் காட்டி உள்ளன. இந்த பின்னணியின் காரணமாகவே சூரனின் வதம் முடிந்ததும் சித்தாடியில் காத்தாயி அம்மனாக வீற்று இருக்கும் வள்ளி தேவியின் திருமணம் முருகப் பெருமானுடன் நடைபெற்றதாக கூறப்படுவதும், முருகப் பெருமான் மற்றும் வள்ளி தேவியின் திருமணம் ஸ்ரீலங்காவின் கதிர்காமத்தில் நடைபெற்றதாக கூறப்படுவதும், ஏற்கத் தக்க கருத்தாகவே உள்ளது.
கிராம தேவதைகள் மற்றும் கிராம தெய்வங்களைக் குறித்த மாறுபட்ட, மேன்மை மிக்க நாட்டுப்புறக் கதைகளில் அன்னை காத்தாயி அம்மனைக் குறித்த சில கதைகளும் உள்ளன. பண்டைய காலங்களில் பல கிராம தேவதைகளை வழிபட்டு வந்திருந்த கிராம மக்கள் தமது கிராமங்களை இயற்கை அழிவு மற்றும் தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக காத்தாயி அம்மனையும் வழிபட்டு வந்திருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்தாகும். இதன் காரணம் காவேரி டெல்டா எனப்படும் பகுதியை சேர்ந்த சில கிராமங்களில் காணப்படும் காத்தாயி அம்மனின் ஆலயங்களே. கிராம ஆலயங்களில் உள்ள அன்னை காத்தாயி அம்மன் கிராம தேவதையாகவே வணங்கப்படுகிறாள். பொதுவாகவே கிராம ஆலயங்களில் ஆகம வழிபாட்டு முறையிலான வழிபாடு இல்லாமல் பொது வழிபாட்டு முறையே உள்ளது. ஆனால் சித்தாடியில் உள்ள ஆலயத்தில் மட்டும் அன்னை காத்தாயி அம்மன் ஆகம வழிபாட்டு முறையில் வணங்கப்பட்டு வருகின்றாள் என்பது இந்த ஆலயத்தின் தனித் தன்மையைக் காட்டுகின்றது. அதே சித்தாடி கிராமத்தில் உள்ள இன்னொரு சிறிய காத்தாயி அம்மன் ஆலயத்தில் அவள் கிராம தேவதையாகவே காணப்படுகிறாள்.
சித்தாடி காத்தாயி அம்மன் ஆலயத்தின் சிறப்பை குறித்து கூற வேண்டும் என்றால் இன்னொரு முக்கிய செய்தியையும் கவனிக்க வேண்டும். காவேரி டெல்டா எனப்பட்ட பகுதிகளை சேர்ந்த சில கிராமத்தில் உள்ள அன்னை காத்தாயி அம்மனின் ஆலய வரலாற்றையும், நாட்டுப்புறக் கதைகளையும் பார்க்கும்போது, அவை அனைத்துமே சித்தாடி கிராமத்தில் உள்ள அன்னை காத்தாயி அம்மன் ஆலயம் எழுந்த பின்னர், அதைத் தழுவியே அமைக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுவதற்கு நிறையவே காரணங்கள் உள்ளன.
சித்தாடி ஆலயத்தில் காணப்படும் அன்னை காத்தாயி அம்மன் சிலையில் ஒரு கையில் தாமரை மலரை ஏந்தி நிற்க, லாவகமாக மடித்து வைத்துள்ள இடது கை, இடது கால் தொடை மீது இருக்க, காலின் கீழ் ஒரு முனிவர் காணப்படுகின்றார். மற்ற ஆலயங்களில் காணப்படும் அன்னை காத்தாயி அம்மன் சிலைகள் ஒரு குழந்தையை கையில் ஏந்திய நிலையிலோ அல்லது மார்பளவிலான காத்தாயி அம்மன் உருவ அமைப்பிலோ அல்லது, உள்ளூரில் செய்யப்பட்ட சிலை அமைப்பிலோ காணப்படுகின்றன.
சித்தாடி காத்தாயி அம்மன் தோன்றிய வரலாற்றுக் கதை போல, காத்தாயி அம்மன் ஸ்தாபிக்கப்பட்டு உள்ள பல கிராமங்களில் காணப்படும் காத்தாயி அம்மன் வழிபாட்டுத் தலம் அல்லது ஆலயங்கள் எதிலுமே ஆலயத்துடன் சம்மந்தப்பட்ட வரலாற்றுக் கதைகள் காணப்படவில்லை. அவை சில புராணக் கதைகளையும், நாட்டுப்புறக் கதைகளையும், மன்னர்களது கதைகளையும் மேற்கோள் காட்டி அன்னை காத்தாயி அம்மனின் புகழை கூறுகின்றன. மேலும் அந்த ஆலயங்கள் நிறுவப்பட்டுள்ள காலம் கூட அதிகம் இல்லை.
சோழர்கள் ஆண்ட காலத்தில் அதாவது 1500 வருடங்களுக்கு முன்பாக ஆட்சியில் இருந்தவர்கள் ஆட்சியில் சில கிராமங்களில் சிறிய அளவிலான காத்தாயி அம்மன் ஆலயங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயம் இல்லைதான். அதன் காரணம் சோழ மன்னர்களில் சிலர் அன்னை காத்தாயி அம்மனை தமது குல தெய்வமாகவே வணங்கி வந்துள்ளனர் என்பது ஆகும். முக்கியமாக ராஜராஜ சோழனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மன்னனான விக்ரம சோழன்-I என்பவர் அன்னை காத்தாயி அம்மனை தொடர்ந்து வழிபட்டு வந்துள்ளதாகவும், அவளை தமது குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளார் என்பதாகவும் செய்திகள் உள்ளன.
இந்த செய்தி சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கூறப்படும் காட்டுமன்னார் காத்தாயி அம்மன் ஆலய வரலாற்று செய்தியில் இருந்து தெரிய வருகின்றது. அங்குள்ள அன்னை காத்தாயி அம்மன் நின்ற நிலையில் இருக்க, அவளை பூங்குறத்தி என்றும் அழைக்கின்றார்கள். அவள் குறத்தி வடிவில் சென்று சோழ மன்னனின் பிரச்னையை தீர்த்து வைத்ததினால் அவளை பச்சை வாழி அம்மனுடன் சேர்த்து பிரதிஷ்டை செய்து வணங்கினாராம். ராஜராஜ சோழனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சில மன்னர்கள் தாம் வழிபட்ட ஆலயங்களில் பச்சை வாழி அம்மன் எனும் காத்யாயினி (பார்வதி அம்மன்) அம்மனுடன், அன்னை காத்தாயி அம்மனையும் சேர்த்தே வழிபட்டு வந்துள்ளார்கள் என்பதான சில குறிப்புக்கள் உள்ளன. பார்வதி தேவியின் பெரும்பாலான தோற்றங்களில் அவள் பச்சை புடவையுடன் காட்சி தந்தே வந்ததினால் அவள் பெயர் பச்சை வாழி அம்மன் என்று மருவி உள்ளதாகவும் தெரிகின்றது.
சித்தாடி காத்தாயி அம்மன் ஆலயத்தில் மட்டும் எப்படி அவளுக்கு கருங்கல்லினால் ஆன சிலை அமைக்கப்பட்டு உள்ளது என்பதற்காக கூறப்படும் கருத்துக்கள் நம்பக் கூடியவைகளாக உள்ளன. ஒரு கருத்தின்படி சோழ மண்டலத்தில், சோழ மன்னர்கள் மற்றும் நாயகர்கள் ஆட்சி காலத்தில், பல பெரிய மற்றும் சிறிய ஆலயங்கள் கிராமபுறங்களில் அவர்களால் கட்டப்பட்டுள்ளன. அந்த ஆலயங்கள் பலவற்றில் கருங்கல்லில் செதுக்கப்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. காவிரி டெல்டா பகுதிகளில் இருந்த அந்த ஆலயங்களில் சிற்பிகளினால், எந்த தெய்வத்தின் உருவம் எப்படி இருக்க வேண்டும் என்ற நியமங்களைக் கூறும் சில்ப சாஸ்திர முறைபடி சிலைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன.
பலமுறை இயற்கையின் சீற்றத்தினால் கிராமங்களும் ஆலயங்களும் சேதமுற்று அழிந்துள்ளன. அவற்றில் சில பூமியில் புதைந்து விட்டன, அங்கங்கே இருந்த நதிகளில் மூழ்கி விட்டன. காவிரி ஆற்றில் வெள்ளம் வந்து பல இடங்கள் மூழ்கி சிதைந்து போனபோதும், அன்னியர்கள் படையெடுப்புக்களினாலும் பல ஆலயங்கள் சேதம் அடைந்து அழிந்துள்ளன. காவேரி டெல்டா பகுதிகளில் உள்ள பல இடங்களில் இதற்கு ஆதாரமாக அழிந்து போன ஆலயங்கள் இன்றளவும் உள்ளன. அழிந்து போய் வெட்ட வெளியில் நிற்கும் ஆலய சிலைகள் கருங்கல்லில் செதுக்கப்பட்டவை ஆகும். அப்படி அழிந்து போன ஆலயங்களில் ஏதாவது ஒன்றில் அன்னை காத்தாயி அம்மனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்திருக்கலாம். அந்த சிலையே சித்தாடியில் கிடைத்து இருக்கலாம். இது ஒரு கருத்து.
இந்த பகுதியில் கருங்கல்லில் அற்புதமாக செதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு இருந்த சிலைகளைக் கொண்டதாக கூறப்படும் அழிந்து போன ஆலயங்களுக்கு என்ன ஆதாரம் என சிலர் கேட்கலாம். இன்று பிரபலமாக உள்ள வைத்தீஸ்வரன் ஆலயம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஐந்து இடங்களில் இருந்துள்ளது. அவற்றில் கருங்கல்லில் அற்புதமாக செதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு இருந்த சிலைகளைக் கொண்ட மூல ஆலயங்கள் இரண்டு அழிந்து விட்டன. அழிந்து சின்னாபின்னமாகி கிடந்த ஒரு மூல ஆலயத்தின் சிலைகளைக் கண்டெடுத்து மண்ணிப்பள்ளம் கிராமத்தினர் புதிய வைதீஸ்வரன் ஆலயத்தை அமைத்து உள்ளார்கள். 1300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் இருந்த வைத்தீஸ்வர பகவான் ஆலயம் பல மைல் சுற்றளவில் கட்டப்பட்டு இருந்துள்ளது என்பதற்கு ஆதாரமாக கல்வெட்டுக்களும் ஆலயத்தின் சிதைபாடுகளும் தொலைதூர அளவுக்கு பல இடங்களில் கிடைத்துள்ளன. அங்கிருந்த பல அற்புதமான கருங்கல் சிலைகள் திருடிச் செல்லப்பட்டு கேரளா மற்றும் பிற இடங்களில் உள்ள ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதாம்.
இன்னொரு வைத்தீஸ்வரன் ஆலயத்தை சேர்ந்த மூல ஆலய மூர்த்தி (சிவலிங்கம்) சிதைந்த நிலையில் மணிப்பள்ளம் என்ற கிராம பகுதியில் உள்ளே உள்ள ஒரு குக்கிராமத்தில் இன்றும் கூரையினால் வேயப்பட்ட ஒரு வழிபாட்டுத் தலத்தில் வைக்கப்பட்டு உள்ளதாகக் கூறுகின்றார்கள். மணிப்பல்ல வைத்தீஸ்வரன் ஆலய வரலாற்றில் இந்த செய்திகள் காணப்படுகின்றது.
இரண்டாவதாக சிக்கல் சிங்காரவேலர் எனும் முருகப் பெருமான் நிறுவியதாக கூறப்படும் ஆலயங்களின் செய்தியை கவனிக்கவும். சூரனை அழிக்கப் போகும் முன்னர் பார்வதி தேவி அவருக்கு வேல் எனும் ஆயுதத்தை தந்தார். அந்த வேலினை பெற்றுக் கொள்ளும் முன் ஒன்பது சிவன் ஆலயங்களில் அவரை வணங்கி விட்டு வருமாறு பார்வதி தேவி கூற, அதனால் முருகப் பெருமான் தான் தங்க இருந்த சிக்கல் (சிக்கல் சிங்காரவேலர் ஆலயம்) ஊரை சுற்றி இருந்த பெரும்கடம்பனூர், கடம்பரவாழ்க்கை, வல்லமங்கம், பட்டமங்கலம், சொட்டால்வண்ணம், திருத்தேவூர் மற்றும் ஓதியத்தூர் போன்ற கிராமங்களில் ஒன்பது சிவலிங்கங்களை நிறுவி சிவபெருமானை வழிபட்ட பின்னர் பார்வதி தேவியை வழிபட்டு ஆயுதத்தை பெற்றுக் கொண்டு சூரனை அழிக்கச் சென்றாராம். கருங்கல்லில் அற்புதமாக செதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு இருந்த சிலைகளைக் கொண்ட அந்த ஆலயங்கள் பாழடைந்து வழி பட முடியாத நிலையில் இன்றைக்கும் கவனிப்பாரற்று கிடக்கின்றன.
>இந்த அடிப்படையில் பார்த்தால் முருகப் பெருமானை மணந்து கொண்டதாக கூறப்படும் சித்தாடியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அன்னை காத்தாயி அம்மன் வீற்று இருந்த ஏதாவது ஒரு ஆலயம் சேதம் அடைந்தோ அல்லது முடிகொண்டான் ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கியோ இருக்கலாம். அங்கேயே தங்க விரும்பிய அன்னை காத்தாயி அம்மன், கஞ்சமலை முனிவர் மூலம் நடைபெற்ற நாடகத்தின் மூலம் தன்னை அங்கேயே வெளிப்படுத்திக் கொண்டு தற்போது உள்ள ஆலயத்தில் குடி கொண்டு இருக்கலாம் என்பதற்கான அடையாளமே ஆற்றில் கிடைத்த, ¬சித்தாடி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள அற்புதமான சிலை என்று நம்பத் தோன்றுகின்றது.
சித்தாடி அன்னை காத்தாயி அம்மனின் சிலை இயற்கையாகவே உருவான சிலை, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலை என்று கருத்தப்படவும் கூட வலுவான காரணங்கள் உள்ளன. பல புராணங்களின் கூற்றின்படியும், கதைகளின்படியும் தெய்வங்கள் பலவும் தமது சாபங்களை விலக்கிக் கொள்ளவும், வேறு காரணங்களினாலும் பூமியில் அவதரித்து எவர் கண்களிலும் படாமல் தவத்தில் இருந்துள்ளன. அதை போலவே மானிட ரூபத்திலும் இருந்துள்ளன என்பது புராணக் கதைகள் மூலம் தெரிய வரும். பூமியில் வந்து தங்கி மனித உருவிலே வாழ்ந்து தமது சாபங்களை விலக்கிக் கொண்ட தெய்வங்கள் பின்னர் தாம் இருந்த தமது உண்மையான உருவத்தை பூமிக்குள் புதைய வைத்து விட்டே சென்றன. பூமிக்குள் புதைந்து கிடந்த உடல்கள் தெய்வீக உடல்கள் என்பதினால் சிதைவு ஏற்படாமல் எந்த ரூபத்தில் இருந்தனவோ அதே ரூபத்தில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பூமியில் புதைந்து இருந்து, அதே ரூபத்தில் கருங்கல்களாகி விட்டன. இவற்றை பார்க்கும்போது காவிரி டெல்டா பகுதியில் முருகப் பெருமானை சித்தாடிப் பகுதியில் மணந்து கொள்ளும் முன் வள்ளி தேவியானவள் சித்தாடி கிராம பகுதியில் மூன்று கொண்டைகளுடன் கூடிய அன்னை காத்தாயி அம்மன் உருவில் தங்கி இருந்திருக்க வேண்டும். வள்ளி தேவி தேவலோகத்துக்கு திரும்பிச் சென்ற போது, கலி காலத்தில் மக்களை வழி நடத்தி ஞான சக்தியிடம் ஒப்படைக்க, மீண்டும் தாம் அவதரிக்க வேண்டும் என்பதினால் மூன்று கொண்டைகளுடன் கூடிய தனது காத்தாயி உருவை பூமியில் புதைய வைத்து விட்டுச் சென்று விட, காலபோக்கில் அந்த பகுதி மீது முடிகொண்டான் நதியும் இயற்கையாக அமைந்து விட, அந்த சிலையே முடி கொண்டான் ஆற்றில் மூழ்கி இருந்து வெளி எடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சித்தாடி காத்தாயி ஆலய சிலையாக இருந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. இப்படியாக பூமியில் புதைந்து கிடந்த சிலைகள் கண்டறியப்பட்டு அவை இருந்த இடங்களிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆலயங்கள் அமைக்கப்பட்ட வரலாற்றுக் கதைகள் திருப்பதி வெங்கடாசலபதி முதல் கேதாரீஸ்வர், பத்ரிநாத் சிவாலயம் போன்ற பல ஆலயங்களிலும் உண்டு.
பொதுவாக ஆலயங்களில் வள்ளி தேவி முருகப் பெருமானுடன் சேர்ந்தோ அல்லது தனி சன்னதியில் வள்ளி தேவியாகவோ காட்சி தருவார். ஆனால் சில கிராம ஆலயங்களில் அவள் அன்னை காத்தாயி அம்மன் என்ற பெயரில் கையில் குழந்தையை ஏந்தியபடி காட்சி தருகின்றார். அன்னை காத்தாயி அம்மன் என்ற பெயரில் உள்ள வள்ளி தேவி எதற்காக கையில் குழந்தையை ஏந்தியபடி காட்சி அளிக்க வேண்டும்? உண்மையில் குழந்தையை கையில் ஏந்தியபடி காட்சி தரும் அன்னை காத்தாயி அம்மன் சித்தாடி காத்தாயி அம்மனின் அவதாரமா இல்லை வேறு ஒன்றா என்ற சந்தேகம் உள்ளது.
கிராம கதையின்படி ஒரு இளம்பெண் தான் கற்புக்கரசி என்பதை நிலை நாட்ட தனது இளம் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு தீயில் பாய்ந்தாள். ஆனால் எங்கிருந்தோ அங்கு தோன்றிய ஒரு வயதான பெண்மணி தீயில் குதித்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றி விட்டாள். அதன் பின் அவளைக் காணவில்லை. ஆகவே மாயமாய் மறைந்து விட்ட பெண்மணியை ஒரு தேவதை என எண்ணிய மக்கள் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு நிற்கும் காட்சியில் ஒரு சிலையை வடிவமைத்து குழந்தையைக் காத்த வயதான பெண்மணி என்பதைக் குறிக்கும் வகையில் உயிர் காத்த ஆயி அல்லது உயிர் காத்த பாட்டி என்ற பெயரில் அழைக்கப்பட்டு காத்தாயி என மருவி இருக்கலாம். அவளை காத்தாயி அம்மன் என்ற தெய்வமாக பூஜித்து இருக்க வேண்டும். இதனால்தான் சில கிராமங்களில் உள்ள வழிபாட்டு தலங்களில் காணப்படும் அன்னை காத்தாயி அம்மன் எனப்படும் கிராம தேவதை கையில் குழந்தையை ஏந்தியபடி காட்சி தருகிறாள்.
பிற்காலத்தில் சித்தாடி காத்தாயி அம்மனின் பெருமை அக்கம் பக்கத்து கிராமங்களில் பரவத் துவங்கியபோது குழந்தையை கையில் ஏந்தியபடி காட்சி தந்த காத்தாயி அம்மன் எனப்பட்ட கிராம தேவதையையும் முருகப் பெருமானின் மனைவியான வள்ளி தேவியின் அவதாரமான காத்தாயி அம்மன் என்றே கருதலானார்கள். இதற்கான காரணம் என்ன என்றால் சித்தாடி காத்தாயி அம்மனின் பெயரும் குழந்தையைக் கையில் ஏந்தியபடி காட்சி தந்த கிராம தேவதையின் பெயர்களும் காத்தாயி என்று இருந்ததே ஆகும். ஆகவே குழந்தையை கையில் வைத்துக் கொண்டிருக்கும் காட்சியில் உள்ள கிராம தேவதை சித்தாடி காத்தாயி அம்மனாக இருக்க வாய்ப்பு இல்லை என்றே கருத வேண்டி உள்ளது.
சிலர் அன்னை காத்தாயி அம்மனை பார்வதி தேவிக்கு காவல் இருந்த சப்த கன்னிகைகளில் ஒருவர் என்றும், இன்னும் சிலர் அவள் காத்யாயன முனிவரின் மகள் என்றும் குறிப்பிடுகின்றார்கள். இந்த இரு கூற்றுகளுக்கும் எந்த விதமான ஆதாரமும் புராணக் கதைகளில் கிடையாது. காட்டு மன்னார் கிராமத்தில் உள்ள அன்னை காத்தாயி அம்மன் கையில் குழந்தையை ஏந்திய நிலையில் காணப்படுகிறாள். அந்தக் குழந்தை முருகப் பெருமான் என்று அங்குள்ள கிராம மக்கள் கூறுகின்றார்கள்.
ஆகவே முருகப் பெருமானை எதற்காக அன்னை காத்தாயி அம்மன் தனது இடுப்பில் வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. இதனால்தானோ என்னவோ இடுப்பில் குழந்தையை கையில் ஏந்தியபடி காட்சி தரும் அன்னை காத்தாயி அம்மனை நாணல் புதரில் விழுந்து கிடந்த குழந்தையான முருகப் பெருமானை எடுத்து வளர்த்த சப்த கன்னிகைகளில் ஒருவர் என்று கூறுகிறார்கள் என தெரிகின்றது. ஆனால் சித்தாடி காத்தாயி அம்மன் முருகப் பெருமானின் மனைவியான வள்ளி தேவியே என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
குழந்தையை கையில் ஏந்தியபடி காட்சி தரும் அன்னை காத்தாயி அம்மனின் கோலத்தின் தத்துவம் என்ன என்பதை ‘எப்படி ஒரு குழந்தையானது மனதில் பயம், காமம், க்ரோதம், மற்றும் பொறாமை போன்றவை இல்லாமல் இயற்கையாக வாழ்கின்றதோ அந்த நிலையில் எந்த ஒரு மனிதன் தன்னை வைத்திருப்பானோ அவர்களை தனது குழந்தையைப் போல பாதுகாத்து வருவேன் என்பதையே அந்த கோலத்தின் மூலம் அவள் குறிக்கின்றாள்’ என்பதாக பண்டிதர்கள் விளக்குகிறார்கள். இந்த செய்திகள் பலவற்றையும் முன் காலத்தைய கிராம மக்களின் நாட்டுப்புற பாடல்கள் மூலமும், நாடோடிக் கதைகள், கும்மிப் பாடல்கள் போன்றவற்றின் மூலம் உணர முடிகின்றது.

வள்ளி தேவி எனும் காத்தாயி அம்மனின் மேன்மை
காத்தாயி அம்மன் வள்ளி தேவியின் அம்சமே என்பதில் ஐயம் இல்லைதான். சிவபெருமானின் ஆசையின்படி சித்தாடியில் தோன்றிய சித்தாடி காத்தாயி அம்மன் ஆலய வரலாற்றை படிக்கும் முன் வள்ளி தேவி எதற்காக பூமியில் பிறந்தாள், மற்றும் அவள் ஏன் உலகின் பல இடங்களிலும் அமர்ந்து இருக்கின்றாள் என்பதை அறிந்து கொள்வது அவசியம் ஆகும். சித்தாடி காத்தாயி அம்மன் எனும் வள்ளி தேவி உண்மையில் சில முக்கியமான செயல்களை நிறைவேற்ற பூமியில் அவதரித்த முருகப் பெருமானுக்கு உத்வேக சக்தியைக் கொடுப்பதற்காகவே பூலோகத்தில் தங்கி உள்ளாள் என்பதே உண்மை என்றாலும் சிலர் வள்ளி தேவி முருகப் பெருமானின் இன்னொரு மனைவியான தெய்வானையை கேவலப்படுத்தியதின் காரணமாக பெற்ற சாபத்தினால் பூமியில் பிறக்க வேண்டி இருந்தது என்று கருத்து தெரிவிக்கின்றார்கள். அது முற்றிலும் தவறானது.
வள்ளிமலை தவ பீட சாமியார் கூற்றின்படி “சூரனை சம்ஹாரம் செய்த பின் வள்ளியை திருமணம் செய்து கொண்ட முருகப் பெருமான், ஸ்கந்தகிரிக்கு அவளை தன்னுடன் அழைத்து வந்தபோது, வள்ளி தேவியை ஆரத் தழுவி அவளை வரவேற்ற பின் தனது நாதனையே தெய்வானை தேவி வேண்டிக் கேட்டாள் ‘ஸ்வாமி எனக்கு வள்ளியின் கதையை நீங்கள் கூற வேண்டும்’. அதைக் கேட்ட வள்ளியும் ‘அக்கா இன்று முதல் நீங்கள்தான் என்னை ஆதரித்து வரவேண்டும்’ எனக் கூற, அக்கா – தங்கை இருவருமே ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டு மகிழ, அங்கேயே இச்சா சக்தி, ஞான சக்தி, மற்றும் க்ரியா சக்திகள் என்ற மூன்று சக்திகளும் ஒன்றிணைந்து சங்கமம் ஆயின’.
பூர்வ ஜென்ம தோற்றம் முதலே (சுந்தரவல்லி மற்றும் அமுதவல்லி) இருவரும் ஒன்றிணைந்த கருத்தைக் கொண்டவர்கள். தனித்தனியான இடங்களில் இவருடைய திருமணம் ஆனதும் கூட, மன அன்போடு இருவரும் ஒன்றிணைந்த நிலையில் ஒருவருக்கொருவர் மனக்கசப்பு கொண்டு சாபமிட்டதாக கருதுவதற்கு சாத்தியமே இல்லை. ஜீவாத்மாவான வள்ளி தேவியின் தெய்வீக சக்தி, பரமாத்மாவான முருகப் பெருமானின் தெய்வீக சக்தியுடன், பூலோகத்தில் இணைந்தால் மட்டுமே அவரால் கலியுகத்தில் பூலோகத்தில் உள்ள மக்களுக்கு ஞானம் கொடுத்து கலியின் தாக்கத்தில் இருந்து அவர்களை காப்பாற்ற முடியும் என்பதே உண்மையான நிலை என பண்டிதர்கள் கூறுகின்றார்கள்.
வள்ளி தேவி, விஷ்ணுவின் மூலம் அவதாரம் பெற்றவர் எனக் கூறப்பட்டாலும் உண்மையில் அவள் பராசக்தியின் அங்கமே. பராசக்தியின் ஒரு அங்கமான பார்வதி தேவியின் மூலம் அவதரிக்க இருந்த வள்ளி தேவி சில காரணங்களுக்காக மஹா விஷ்ணுவின் கண்ணீரில் இருந்து தனது சகோதரி தெய்வானையுடன் பிறக்க வேண்டி இருந்தது.
பராசக்தியின் ஒரு அங்கமான பார்வதி தேவியின் உடலில் இருந்து முருகப் பெருமான் மற்றும் வள்ளி தேவி எனும் இரு சக்திகளும் தோன்றி விட்டால் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரியாகி விடுவார்கள், அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதினால் அவர்கள் வேறு மார்கமாக தோற்றுவிக்கப்பட வேண்டி இருந்தது. மூன்று சக்திகளும் தனித்தனியே அவதரித்தால் மட்டுமே பிரும்மனின் வரத்தின்படி அந்த மூன்று சக்திகளும் திருமணம் என்ற போர்வையில் கணவன் மனைவியாகி சூரசிம்மனை அழிக்க முடியும் என்பதினால் உலக மக்களின் நன்மைகளுக்காக இப்படிப்பட்ட சிக்கலான வழி முறை தோற்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன. முருகப் பெருமான் உண்மையில் இரண்டு பெண் சக்திகளை மட்டுமே உள்ளடக்கியவர் என்ற கருத்து சரியல்ல. அவர் உண்மையில் தன்னுள் மூன்று பெண் தெய்வ சக்திகளை உள்ளடக்கி இருந்தார் என்ற சில கருத்துக்கள் உள்ளன. சூரனை அழிக்கவும் கலியுகத்தில் மக்களின் அறியாமையை விலக்கி, அவர்களுக்கு ஞானம் தந்து நல் வழிப்படுத்தவும் பராசக்தியினால் அவளுள் இருந்து தோற்றுவிக்கப்பட்ட இன்னொரு சக்தியும் உள்ளதாம்.
முருகப் பெருமான் தோன்றிய உடனேயே முருகப் பெருமானுக்கு கூடுதல் சக்தி தருவதற்காக ஜ்யோதி எனும் ஒரு பெண் சக்தி பராசக்தியின் உடலில் இருந்து வெளி வந்து விட, அதையே சூரனை அழிக்க, முருகப் பெருமானின் கையில் காணப்படும் வேலாக பராசக்தி கொடுத்தார். அப்படி வெளித் தெரியாத அரூபமாய் வெளி வந்த பெண் சக்தியே ஜ்யோதி தேவி என்பதாக கூறுகின்றார்கள். முருகப்பெருமான் ஞான சக்தியாக கண்களுக்கு புலப்படாமல் வெளிவந்த ஜ்யோதி எனும் தேவியையும், க்ரியா சக்தியாக தெய்வானையையும், இச்சா சக்தியாக வள்ளி தேவியையும் மூன்று பெண் சக்திகளாக தன்னுடன் இணைத்துக் கொண்டார் என்றும், அந்த மூன்று சக்திகளும் இல்லாமல் அவருடைய சுய சக்தியினால் மட்டுமே சூரனை அழித்து கலியுகத்தில் மக்களை நல் வழிப்படுத்த இயலாது என்பது பிரும்ம தத்துவ நிலையாக இருந்தது. இப்படியாகத்தான் முருகப் பெருமான் மற்றவர்களுடைய கண்களுக்கு புலப்படாத, தாயார் மூலமே தனது சகோதரியாக வெளிவந்த ஜ்யோதி தேவியின் சக்தியை உள்ளடக்கிக் கொண்டு, அதைத் தவிற தனது மனைவிகள் மூலம் தனக்கு தரப்பட்ட உணரும் சக்தி மற்றும் உயிரூட்டும் சக்தி என்ற இரு சக்திகளை உள்ளடக்கியவர் ஆனார் (மூன்றாவது பெண் சக்தியான ஜ்யோதி தேவியைக் குறித்து 1998 ஆம் ஆண்டு சென்னையில் ‘ஆசிய ஸ்கந்த முருகன் ஆய்வு கழகம்’ நடத்திய கருத்தரங்கம் ஒன்றில் ‘ஸ்வரூப வேல் -ஸ்கந்தனின் சகோதரி ஜ்யோதி ‘ என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை டாக்டர் திரு அழகப்ப அழகப்பன் என்பவர் வெளியிட்டார். அதன் முழு விவரத்தை http://murugan.org/jyoti.htm என்ற இணைய தள கட்டுரையில் காணலாம்).
இப்படியாக படைக்கப்பட்ட மூன்று தெய்வ சக்திகளில் ஒரு சக்தி வேலாகி விட, மற்ற இருவர்களான வள்ளி தேவி மற்றும் தெய்வானை என்பவர்களில் வள்ளி தேவி வேடர் குலத்தவரோடு வாழ்ந்திருக்க வைக்கப்பட்டார்; தெய்வானை தேவர்களுடன் தங்க வைக்கப்பட்டார். முருகப் பெருமானுடன் நடைபெற்ற திருமணத்தில் தேவசேனா செய்து கொண்ட திருமணம் வைதீக முறையிலான முறையில் அமைந்து இருக்க, வள்ளியின் திருமணமோ ஆரியர்களின் காலத்துக்கு முற்பட்ட ஆசாரமற்ற, வைதீகமற்ற முறையில் நடந்த திருமணம் என்பதை காணலாம். அந்த வள்ளி தேவியே சித்தாடி காத்தாயி அம்மன் தோற்றத்தில் இருந்து கொண்டு அந்தணர் மற்றும் அந்தணர் அல்லாதோர் என்ற பேதம் இல்லாமல் பலரது குலதெய்வமாக விளங்குகின்றாள் என்பது எத்தனை பெரிய ஆச்சர்யம்.
1350 ஆம் ஆண்டு காஞ்சீபுரத்தில் குச்சியப்பா என்பவர் இயற்றியதாகக் கூறப்படும் கந்த புராணத்தில், வள்ளியம்மை திருமணப் படலம் எனும் பகுதியில் காணப்படும் செய்தியின்படி தொண்டை நாட்டின் மேற்பட்டியின் அருகில் உள்ள வள்ளி ஈர்ப்பு என்ற வள்ளி மலை பகுதியில்தான் வள்ளி தேவி பிறந்ததாகவும், அங்குதான் வள்ளி தேவியை காதலித்தபோது முருகப் பெருமான் வள்ளி தேவியுடன் ஆடிப்பாடி விளையாடியதாகவும் அதன் பின் அங்கு வள்ளி தேவியுடன் திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டு உள்ளது. அதே போலவேதான் இலங்கையின் கதிர்காமத்திலும், முருகப் பெருமான்-வள்ளி தேவி திருமணம் நடந்துள்ளதாக கூறுகின்றார்கள்.
ஒரு காலத்தில் இந்தியாவின் தென் பகுதிகளும் இலங்கையும் கடலால் பிளவு படாத ஒரே நிலமாக இருந்துள்ளது என்பது வரலாற்று செய்தி. தெய்வங்களுக்கு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்தை அடைய கண்சிமிட்டும் நேரமே போதுமானது. ஆகவே முருகப் பெருமானும் வள்ளி தேவியும் தமிழ்நாட்டின் தென் பகுதியில் பல இடங்களில் ஆடிப் பாடிக் கொண்டு இருந்திருக்கின்றார்கள். இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த நாறிணை 82.4 என்ற மிகப் பழமையான குறிஞ்சி என்ற தமிழ் நூலில் உள்ள அஹம் என்ற பாடலில் முருகப் பெருமானையும் வள்ளி தேவியையும் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் ஒன்றிணைத்துப் பார்க்கும்போது இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டிலேயே வள்ளி- முருகன் இருவருமே தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களிலும் மானிட உருவில் இருந்திருப்பது புலனாகும். அதன் காரணம் கொண்டை முடியுடன், வலது கையில் தாமரை மலரை ஏந்திய வண்ணம் காட்சி தரும் சித்தாடி காத்தாயி அம்மனின் சிலை, வள்ளி மலை வள்ளி தேவியின் உருவத் தோற்றத்துடன் பெரும் அளவில் ஒத்து உள்ளது என்பதே ஆகும். ஆகவே தேவலோகத்துக்கு திரும்பிச் செல்லும் முன் சித்தாடியில் காத்தாயி அம்மன் உருவில் வாழ்ந்திருந்த வள்ளி தேவி விட்டுச் சென்றுள்ள மானிட உடலே காலப்போக்கில் சிலையாகி நதிக்குள் மூழ்கி இருந்திருக்க வேண்டும் என கருதுவதில் தவறில்லை.
வெளி உலகைப் பொறுத்த மட்டில் வள்ளி தேவி வேடர் குலத்தில் இருந்து உதயமான தெய்வம் எனப்பட்டாலும், அவள் பார்வதி தேவியின் நேரடி அம்சம் என்பதினால் வள்ளி தேவியான சித்தாடி காத்தாயி அம்மனின் சக்தி பராசக்தியின் தன்மையைக் கொண்டது என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது. ஆதி உலகை படைத்தவள் பராசக்தி, அனைத்தையும் தாங்கி நின்றவளும் அவளே, நிற்பவளும் பராசக்தியே. அந்த பராசக்தியின் தெய்வ கணமே சித்தாடி காத்தாயி அம்மன் எனும்போது எதற்காக முருகப் பெருமானின் இரண்டு மனைவிகளில் ஒருவரான வள்ளி தேவி பூமியிலே தங்கினாள்? தெய்வானையை வடமொழியில் தேவசேனா என்று கூறுவார்கள். அவள் தேவலோகத்தில் வளர்ந்தவள். சேனா என்ற சொல்லுக்குக் காப்பது என்பது பொருள். ஆகவேதான் தேவர்களை காக்க அவளை தேவலோகத்தில் தங்குமாறும் பூமியிலே வேடர் குலத்தவருடனேயே வளர்ந்து வாழ்ந்திருந்த வள்ளி தேவி பூமியில் உள்ளவர்களைக் காக்க பூமியிலேயே தங்குமாறும் கூறப்பட்டாள்.
முருகப் பெருமானுடனோ அல்லது வள்ளி தேவி தனி சன்னதியில் எந்த ஆலயத்தில் இருந்தாலும் அவள் வள்ளி தேவி என்ற பெயரில்தான் காட்சி தருகின்றாள்; வள்ளி தேவி என்ற பெயரில்தான் அனைத்து ஆலயங்களிலுமே பூஜிக்கப்படுகின்றாள். ஆனால் வள்ளி தேவி வேறு ஒரு அவதார தோற்றத்தில், வேறு ஒரு பெயரில் காணப்படுவது சித்தாடி காத்தாயி அம்மன் ஆலயத்தில் மட்டுமே என்பது இன்னுமொரு வியப்பான உண்மை ஆகும். சித்தாடி காத்தாயி அம்மன் எனும் அவதார தோற்றத்தைத் தவிர உலகில் வள்ளி தேவிக்கு வேறு எந்த பெயரிலும் அவதாரத் தோற்றம் கிடையாது என்பது நிதர்சனமாகத் தெரிகின்றது. இது ஒன்றே தெய்வீக உலகில் சித்தாடி காத்தாயி அம்மன் பெற்றுள்ள பெருமைக்கு ஒரு சான்றாகும்.
>முருகப் பெருமான் பெருமளவில் வணங்கப்படும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, மௌரூஷியஸ் போன்ற நாடுகளில் உள்ள ஆலயங்கள் அனைத்திலுமே முருகப் பெருமான், வள்ளி தேவி மற்றும் தெய்வானை எனும் மூவருமே, அவரவர்களின் ஆரம்ப கால தோற்றத்தின் பெயர்களிலேயே காட்சி தந்தாலும் ஒரே சன்னதியில்தான் இருப்பார்கள்.
மேலும் சித்தாடி காத்தாயி அம்மனாக வள்ளி தேவி உள்ளதை போல தெய்வீக தனித் தன்மை மற்றும் மேன்மை, தெய்வானை தேவி மற்றும் ஜ்யோதி தேவி எனும் இருவருக்குமே கிடையாது. அவர்கள் எப்போதுமே முருகப் பெருமானுடன் சேர்ந்து மட்டுமே வழிபடப்படுகின்றார்கள். அவர்களில் தெய்வானை மட்டும் முருகப் பெருமான் வீற்று இருக்கும் ஒரு சில ஆலயத்தில் தனி சன்னதியில் இருக்கின்றாள் என்றாலும் அவள் தெய்வானை என்றே வணங்கப்படுகிறாள்.
வள்ளி தேவி பலரது குலதெய்வமாக இருந்து வருகின்றாள். அந்த நிலை தெய்வானை தேவிக்கு இல்லை. கலியுகத்தில் மக்களுக்கு ஞானம் தந்து அவர்களை நல் வழிப்படுத்த தோன்றிய முருகப் பெருமானுக்கு அவரது செயல்பாடுகளில் உதவி, சூரனை வதம் செய்யத் தேவையான சக்திகளை அளிக்க பராசக்தி மூலம் வெளி வந்துள்ள மூன்று தனித்தனி சக்திகளைக் கொண்ட தேவிகளே அவர்கள் மூவரும் என்றாலும், அனைத்தையும் நோக்கும்போது தெய்வீக உலகில் சித்தாடியில் காத்தாயி அம்மனாக காட்சி தரும் வள்ளி தேவி மிக முக்கியமான, உயர்வான, தனித் தன்மை மற்றும் தனி அந்தஸ்தைக் கொண்ட தெய்வம் என்பதை நிதர்சனமாக காண முடிகின்றது
                                                                                                                                                      …………………….பாகம் 2 தொடர்கின்றது