விவாகரத்தான பெண்கள்,

குழந்தைகள்-அவர்களது

குலதெய்வம் யார் ?

-சாந்திப்பிரியா-

குல தெய்வம் குறித்து பல பண்டிதர்களிடம் பேசி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்திருந்த என்னிடம் சமீபத்தில் ஒரு பெண்மணி ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பி இருந்தார். இந்த சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் இதற்கான விளக்கங்கள் கூறப்படுகின்றன. அந்த பெண்மணியின் கேள்வி இதுதான்:

”திருமணத்தில் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி ஏறியவுடனேயே அவளுடைய குலதெய்வம் புகுந்த வீட்டின் குல தெய்வம் ஆகி விடும் என்பது சாஸ்திரம் எனும்போது, திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்த பின் அந்த பெண்ணுக்கு விவாகரத்து ஏற்பட்டால் அவள் எந்த குலதெய்வத்தை வணங்க வேண்டும்? விவாகரத்து ஆவதற்கு முன் அவருக்கு குழந்தை பிறந்து இருந்தால் விவாகரத்து ஆன பின் அந்த குழந்தைகள் எந்த குலதெய்வத்தை வணங்க வேண்டும்?”

இவை இரண்டுமே மிக முக்கியமான கேள்விகள் ஆகும். பொதுவாகவே பெண்கள் மட்டும் வெவ்வேறு குல தெய்வங்களை வணங்குபவர்களாக படைக்கப்பட்டு உள்ளார்கள். பிறந்த வீட்டில் இருக்கும்வரை அவளது தந்தையின் குலதெய்வத்தை ஆராதித்து வருகின்றாள். ஆனால் திருமணம் ஆகி புகுந்த வீட்டில் சென்ற பின் இன்னொரு தெய்வத்தை குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு பிறந்த வீட்டில் வணங்கி வந்திருந்த குலதெய்வ ஆராதனையை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகின்றது.

பிறந்த வீட்டு குலதெய்வம் 

ஆனால் திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்களின் இந்த நிலை பிறந்த வீட்டு குல தெய்வத்தை முற்றிலும் துறக்கும் நிலை அல்ல என்பதையும், பிறந்த வீட்டு குல தெய்வம் அவளை நிரந்தரமாக கைவிட்டு விட்டது என்ற அர்த்தமும் அல்ல என்பதையும் மனதில் ஆழமாக வைத்துக் கொள்ள வேண்டும். திருமணம் ஆன பெண்கள் மாற்று குலதெய்வத்தை ஏற்கும் இந்த நிலை சாஸ்திரங்களின் அடிப்படையில் அமைந்தது. அந்த நிலை ஒரு குலதெய்வம் அதுவரை தம்முடைய பாதுகாப்பில் இருந்த ஒருவரை இன்னொரு குலதெய்வத்திடம் அதே காரணத்திற்காக தாமாகவே ஒப்படைக்கும் தெய்வீக நிலைப்பாடாகும். ஒரு தேசத்தை சேர்ந்தவர் இன்னொரு தேசத்துக்கு சென்று அங்கேயே தங்கி அந்த தேசத்தின் பிரஜை ஆகி விட்டால் அந்த தேசத்தின் சட்ட திட்டங்களை அனுசரிக்க வேண்டும் எனும் நிலைபாடு போன்றதுதான் இதுவும். பண்டிகை, பூஜைகள் போன்றவற்றில் முதல் வழிபாடு அந்த வீட்டினரை பாதுகாத்து வரும் குலதெய்வத்துக்கே செய்ய வேண்டும் என்பது தெய்வ நியதி. அதனால்தான் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீடு செல்லும் ஒரு பெண்ணும் அந்த வீட்டின் குலதெய்வத்துக்கே முதல் மரியாதை மற்றும் முக்கியத்துவம் தரும் நியதியை கடைபிடிக்க வேண்டி உள்ளது. ஒரு பெண்ணுக்கு பிறந்த வீட்டின் குலதெய்வமே நிரந்தர மற்றும் நிலையான தெய்வம்  என்றாலும் திருமணம் ஆனபின் அதே குலதெய்வ அனுமதியுடன் ஒரு பெண்ணால் ஏற்கப்பட வேண்டிய குலதெய்வம் கணவர் வீட்டின் குலதெய்வம் ஆகும்.

புகுந்த வீட்டு குலதெய்வம்

தாலி கழுத்தில் ஏறியதும் ஒரு பெண் தனது சொந்த அதிகாரங்கள் உட்பட தன்னையும் கணவனிடம் முழுமையாக ஒப்படைத்து விடுகின்றாள். அந்த நிமிடமே அவளும் புகுந்த வீட்டின் ஒரு அங்கம் ஆகி விடுகின்றாள். அந்தப் பெண்ணின் கணவர் அவளுக்கு முதல் தெய்வம் ஆகி விடுகிறார். அந்த திருமணத்தில் கண்களுக்கு தெரியாமல் வீற்று இருக்கும் இரு வீட்டாரின் குல தெய்வத்தின் ஆசிகளுடன் அக்னி சாட்சியாக தாலி கட்டியதும் அதுவரை அவளை அனைத்து நிலையிலும் பாதுகாத்து வந்திருந்த அவளது பிறந்த வீட்டின் குல தெய்வம் தனது பொறுப்பை விலக்கிக் கொண்டு அந்த பொறுப்பை அவள் புகுந்த வீட்டு குலதெய்வத்திடம் ஒப்படைத்து விடுகின்றது. அது முதல் அவள் மீதான அனைத்து அதிகாரங்களும் புகுந்த வீட்டு குலதெய்வத்தின் கையில் சென்று விடும். இது குல தெய்வங்களுக்கு இடையே வகுக்கப்பட்டு உள்ள பிரும்ம நியதியாகும். அதனால்தான் புகுந்த வீட்டுக்கு சென்று விடும் பெண்ணின் குல தெய்வமும் கணவன் வீட்டினரின் குல தெய்வம் ஆகி விடுகின்றது என்பது சாஸ்திரத்தின் தாத்பர்யம் ஆகும். இந்த அடிப்படை நியதியினால்தான் திருமணம் ஆகும் பெண்மணிகள் தமது பிறந்த வீட்டு குலதெய்வத்தை ஆராதிக்கும் உரிமையை துறந்துவிட்டு புகுந்த வீட்டு குலதெய்வத்தை ஆராதிக்கும் நிலைக்கு சென்று விடுகின்றார்கள்.

சாஸ்திரங்களின்படி ஒரு குழந்தையை வளர்த்து வழிகாட்ட வேண்டிய கடமை ஒரு தம்பதியருக்கு உள்ளதினால் அவர்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மாதா பிதாவே முதல் தெய்வம் ஆகிறார்கள். அதற்கு அடுத்துதான் குல தெய்வம் முதல் மற்ற அனைத்து தெய்வம் வரும். அதை போலவேதான் புகுந்த வீட்டிற்கு சென்று விடும் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை அவளுக்கு கணவனே முதல் தெய்வம் ஆகின்றார். திருமணம் ஆனது முதல் கணவருடன் அவளும் சிவசக்தி தத்துவம் போல சம பாதியாகி விடுவதினால் அனைத்து நிலைகளிலும் அவளுடைய துணையோடு அவர் வாழ்க்கை பயணிக்கின்றது. அவளும் கணவர் வீட்டின் ஒரு பிரஜை ஆகி விடுகின்றாள்.

இன்னொரு உண்மையையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆணோ அல்லது பெண்ணோ எந்த குழந்தையாக இருந்தாலும் ஒரு தாய் தந்தைக்கு பிறக்கும் குழந்தைகள் அவர்களோடு ரத்த சம்மந்தம் கொண்டவை.  அந்த அடிப்படை ரத்த சம்பந்தத்தை மாற்ற முடியாது. ஆகவே தாய் தந்தையோடு உள்ள அவர்களது அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களது தந்தை மற்றும் அவருடைய பதிமூன்று முன் தலைமுறையினர் வழிபட்ட தெய்வமே அடிப்படை மற்றும் நிரந்தர தெய்வம் ஆகும். இந்த அடிப்படை நியதி அந்த வீட்டில் பிறக்கும் அனைத்து ஆண் குழந்தைகளுக்கும், அவர்களுக்கு திருமணம் ஆனாலும், இல்லை தனியாகவே இருந்தாலும், மாறாத நியதியாக இருக்கும். ஆனால் இந்த நிலை பெண் குழந்தைகளுக்கு மாறுபடும். பிறந்த வீட்டு தெய்வம் அவளுடைய தந்தை வீட்டில் வாழுந்தவரை அந்த பெண்ணை பாதுகாக்கும் பொறுப்பு அந்த வீட்டினரின் குலதெய்வத்தை சார்ந்தது என்பது அடிப்படை தத்துவம் ஆகும்.  ஒரு பெண்ணின் திருமணத்துக்குப் பிறகுதான் அவளை புகுந்த வீட்டின் தெய்வத்திடம் தந்தை வீட்டு தெய்வம் குலதெய்வ நியதிகளின்படி ஒப்படைக்கின்றது.  திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்களின் குல தெய்வம் கணவர் வழிபடும் குலதெய்வமாக மாறி விடுவதினால் திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்களின் நலனைப் பாதுகாக்கும் பொறுப்பை பிறந்த வீட்டு தெய்வம் அவளுடைய புகுந்த வீட்டினரின், அதாவது தனது சகோதர, சகோதர குல தெய்வத்திடம் தற்காலிகமாக ஒப்படைத்து விடுகின்றது. ஆனால் அவளை தன்னை விட்டு முற்றிலும் விலக்கி விடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் எத்தனை ஆழமாக இந்த குலதெய்வ தத்துவ நியதியை கையாண்டு உள்ளார்கள் என்பது இந்த விளக்கத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

வேத காலங்களில் ஒரு திருமணம் எப்படி நடைபெற்றது என்றால் குலதெய்வ வழிபாடு துவங்கிய காலத்தில் பெண்ணின் குலதெய்வ ஆலயத்துக்கு சென்று அங்கு கடவுள் முன்னால் ஒரு குத்து விளக்கேற்றி வைத்து அதன் முன்பாக தாலியை வைத்து ஆலய கடவுளை வணங்கிய பின்னர் அந்த தாலியை எடுத்துக் கொண்டு பிள்ளை வீட்டின் குலதெய்வ ஆலயத்துக்கு சென்று அங்கும் விளக்கை ஏற்றி வைத்து தாலி கட்டிய பின், மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கைகளை பிடித்துக் கொண்டு இனி இருவரும் ஒருவருடன் ஒருவர் இணைந்து விட்டோம் என இரு வீட்டினரின் பெரியோர்கள் மற்றும் தெய்வத்தின் முன் சத்தியம் செய்து கொடுப்பது போல நிற்க, திருமணம் முடிவுக்கு வந்து விடுமாம். அந்த காலத்தில் திருமணங்களில் மந்திரங்கள் ஓதி செய்யப்படும் சடங்குகள் கிடையாது. இனி இருவரும் ஒருவருடன் ஒருவர் இணைந்து விட்டோம் என்ற அந்த சத்திய பிரமாணத்தையே அந்த பெண்ணின் கழுத்தில் கட்டப்பட்ட தாலியில் (அந்த காலத்தில் காய்ந்த மஞ்சளே தாலியில் கட்டப்பட்ட தாலி சின்னம் ஆகும்) அங்கு கண்களுக்கு தெரியாமல் வீற்று இருக்கும் இரு வீட்டினரின் குலதெய்வங்களும் உருவேற்றி விடுமாம். அதனால்தான் மணமகளின் கழுத்தில் ஏறிய தாலியே தெய்வீகத்துக்கு இணையானதாக கருதப்பட்டது. தாலியே திருமணத்திற்கு சாட்சியாக விளங்கியது. தெய்வ சன்னிதானம், (வழிபாட்டு தலங்கள்) மற்றும் கூடி உள்ள உறவினர்களே அதற்கு பிற சாட்சிகள். அங்கு ஏற்றப்பட்ட தீபமே அக்னி சாட்சி, மணமக்களால் ஏற்கப்பட்ட வாக்குறுதியே சத்திய பிரமாணம் ஆகும். இது திருமண நிலை.

அதை போலவேதான் இருவரும் இணைந்து வாழ முடியாமல் போன சூழ்நிலையில் (பெண்ணுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை என்பதே முக்கியமான காரணமாக அமைந்து இருந்தன) பெண்களை வாழாவெட்டி என்று தள்ளி வைத்து, திருமணம் ஆன அதே ஆலயத்துக்கு சென்று அங்கு தெய்வ சாட்சியாக மணமகள் அனைவர் முன்னிலையிலும்  இனி எங்களுக்கு இடையே எந்த பந்தமும் இல்லை என சத்திய பிரமாணம் எடுத்தப் பின் தாலியை கழுத்தில் இருந்து எடுத்து அதை தெய்வத்தின் முன்னிலையில் வைத்து விடுவார்களாம். அந்த தாலியின் சத்தியத் தன்மையும் அங்கேயே விலகுகிறது எனும்போது அப்போது அவர்கள் இருவரும் மாணவன் மனைவி எனும் அந்தஸ்தை இழந்து விடுகின்றார்கள். மணமான தம்பதியினர் பிரிந்து வாழும் நிலை அதாவது விவாகரத்து என்பது உடலால் மட்டும் பிரிவது அல்ல, உணர்வுகளாலும் பிரிக்கப்படுகின்றது எனும்போது அதில் அவர்கள் வணங்கிய குலதெய்வங்களும் அடங்கி இருந்தன. அவளுக்கோ மறுமணம் செய்து கொள்ள தடை போட்டு இருந்தார்கள். அப்படி தள்ளி வைக்கப்பட்ட பெண்கள் வாழ வேறு வழி இன்றி தந்தை வீட்டுக்கு சென்று வாழலானார்கள்,  விவாகரத்து என்ற நியதி இல்லாமல் இருந்தது. கால ஓட்டத்தில் மெல்ல மெல்ல அந்த பழக்கம் மாறத் துவங்கி மந்திரம் ஓதி, சடங்குகள் செய்து தாலி கட்டும் பழக்கம் வந்து விவாகரத்து போன்ற நடைமுறை பழக்கங்களும், இருவருமே மறுமணம் செய்து கொள்ளலாம் எனும் நிலைபாடுகளும் வழக்கத்தில் வந்தன.

இடைக் காலத்தில் மன்னர்கள், மற்றும் மன்னர்களால் நியமிக்கப்பட்ட கிராமத் தலைவர்கள் மற்றும் ஆலய தலைமை பூஜாரிகளே தெய்வ சாட்சியாக திருமணம் செய்து கொள்ளவும், மன விருப்பத்தோடு வாழ விரும்பாத தம்பதியினர் பிரிந்து கொள்ளும் வகையிலான தர்ம சாஸ்திர நியமங்களையும் கடைப்பிடித்து அதற்கான தீர்ப்புக்களை தர்ம தேவதையின் தீர்ப்பு என்ற பெயரில் கொடுத்து வந்துள்ளார்கள் என்பதினால்தான் மன்னர் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என வழக்க மொழியும் இருந்துள்ளது. அதன் பின் அவர்களது செயல்களை நிறைவேற்றி தரும் பொறுப்பு நீதிமன்றங்களில் நிறுவப்பட்ட நீதிபதிகள் மீது விழுந்தது. நீதி தேவதையின் (தெய்வம்) சார்ப்பில் செயல்படும் ஒரு நீதிபதியால் தம்பதியினர் பிரியும் வகையிலான விவாகரத்து எனும் தீர்ப்பு தரப்படுகின்றது என்பதினால் அதுவும் தெய்வம் கொடுக்கும் தீர்ப்பாகின்றது. ஏன் எனில் நீதிக்கு அதிபதி என்பவர்கள் தர்ம தேவதையின் நிழல்கள். நீதி தேவதையின் நியதிக்கு ஏற்ப முடிவு எடுப்பவர்கள்.

விவாகரத்து தீர்ப்பை கொடுக்கும் முன்னர் ஒரு நீதிபதி தனக்கு முன் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டு அதாவது தெய்வ சாட்சியாக தான் கட்டிய கணவரை பிரிந்து வாழ விரும்புகின்றேன் என்று மனைவியும் அதை போலவே தான் தாலி கட்டிய மனைவியை பிரிந்து வாழ்கிறேன் எனக் கணவன் கூறுவதையும் கேட்ட பின்னரே அந்த சத்திய பிராமணத்தின் அடிப்படையில் அவர்களுக்கு இடையே இனி பந்தம் இல்லை எனும் பொருளிலான விவாகரத்தை தருகிறார். அந்த நிலையில்  அங்கு கண்களுக்கு தெரியாமல் வீற்று இருக்கும் இரு குலதெய்வங்களும் அதை ஆமோதிக்கும் வகையில் தமது கடமைகளை செய்கின்றன. விவாகரத்து பெறும் பெண்ணின், அதாவது புகுந்த வீட்டினரின் குலதெய்வம், மீண்டும் அவளை அவளது மூல குலதெய்வத்திடம் (பெற்றோர் வணங்கிய) ஒப்படைத்து விடுகின்றது.

இனி கேள்விக்கான பதிலுக்கு வருவோம். விவாகரத்து பெற்ற பெண் கணவனை பிரிந்து ஒன்று பிறந்த வீட்டிற்கு வந்து விட்டாள், இல்லை தனியாகவே வாழத் துவங்குகிறாள். சில காலம் கடந்த பின் இன்னொரு கணவரை மணந்து கொண்டு விட்டால் அவருடைய குலதெய்வத்தை ஆராதிக்கத் துவங்க வேண்டும் என்பதும் நியதி என்பதினால் கணவனை பிரிந்து விடும் ஒரு பெண், இன்னொரு திருமணம் செய்து கொள்ளும் வரை அந்த இடைப்பட்ட காலத்தில் எந்த தெய்வத்தை ஆராதிக்க வேண்டும்?  விவாகரத்து ஆன பெண் இன்னொரு திருமணமே செய்து கொள்ளாவிடில் எந்த தெய்வத்தை ஆராதிக்க வேண்டும்? இதில் குழப்பம் அடையாத தேவையே இல்லை. 

எந்த நிலையிலும் அந்த பெண்களுடைய அடிப்படை ரத்த சம்மந்தம், அதாவது அவளை பெற்று எடுத்த பெற்றோர்களோடு அறுபடுவதில்லை. விவாகரத்து பெறும் பெண்களுக்கு நேரடி ரத்த சம்மந்தம் இல்லாத புகுந்த வீட்டின் உணர்வுகளுடன் தொடர்ப்பு முற்றிலும் முறிந்து விடுவதினால் அந்த பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்தை புகுந்த வீட்டை சேர்ந்த குலதெய்வம் இழந்து விடுகின்றது. அவளை பாதுகாக்கும் உரிமையை மீண்டும் அந்த குலதெய்வம் பழைய குல தெய்வத்திடம் திரும்பத் தந்து விடவேண்டும் என்பது நியதி என்பதினால், அவளுக்கு நேரடி ரத்த சம்மந்தம் உள்ள தந்தையின் குலதெய்வத்தையே தற்காலிக குலதெய்வமாக மீண்டும் ஏற்க வேண்டும் என்பது நியதி ஆகின்றது. இந்த நிலை அவள் மீண்டும் மறுமணம் செய்து கொள்வதை பொறுத்தது. ஏன் எனில் மறுமணம் செய்து கொள்ளும் பெண்களின் குலதெய்வம் மறு திருமணத்தின்போது மீண்டும் மாறி விடுகின்றது. அதே சமயம் விவாகரத்து ஆன பெண்கள் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டு இருந்தால் அவர்கள் வணங்கி கொண்டு இருக்க வேண்டிய குலதெய்வம் தந்தை வீட்டு குலதெய்வமே ஆகும்.

இன்னொரு சிக்கலான கேள்வியும் உள்ளது. விவாகரத்து பெறும் பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் ஏற்க வேண்டிய குலதெய்வம் – தாயின் குலதெய்வமா இல்லை தந்தையின் குலதெய்வமா? விவாகரத்து ஆனவர்களுக்கு பிறந்திருந்த குழந்தைகள் நேரடி ரத்த சம்மந்தம் உள்ள தந்தையின் குலதெய்வத்தைத்தான் ஏற்க வேண்டும் என்பது நியதி. இதில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. ஏன் எனில் நிரந்தரமான குலதெய்வம் ஆண்களுக்கு மட்டுமே உள்ளது. திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு சென்று விடும் பெண்கள் அந்த வீட்டின் ஆணுடன் உறவு கொண்டுதான் குழந்தைகளை பெற்றெடுக்கிறாள். சாஸ்திரங்களின்படி குழந்தைகளுடன் நேரடி ரத்த சம்மந்தம் உள்ள  தந்தையின் குலதெய்வமே அவருக்கு பிறக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் குலதெய்வம்  என்பதினால் புகுந்த வீட்டு குலதெய்வத்திற்கே அந்த குழந்தைகள் மீதான அதிகாரம் வந்து விடுகின்றது. விவாகரத்து ஆனவர்களுக்கு பிறந்திருந்த ஆண் குழந்தைகள் தாயாரோடு வளர்ந்தாலும் சரி தந்தையோடு வளர்ந்தாலும் சரி அவர்கள் வணங்க வேண்டிய குலதெய்வம் மூல தந்தையின் குலதெய்வத்தையே சார்ந்து இருக்கும். பெண் குழந்தைகளை பொறுத்தவரை அவர்களது குலதெய்வம் அவர்களுடைய திருமணத்தின்போது மாறி விடுகின்றது என்பதினால் பெண் குழந்தைகள் பற்றிய சச்சரவு கிடையாது.