குல தெய்வத்தை

எப்படி கண்டு பிடிப்பது

 

-சாந்திப்பிரியா-

நான் எழுதிய குல தெய்வங்களின் மீதான கட்டுரைகளைப் படித்த பிறகு என்னை பலரும் தொலைபேசியிலும், கடிதம் மூலமும் தொடர்ப்பு கொண்டு குலதெய்வம் குறித்த பல விவரங்களைக் கேட்டார்கள். முக்கியமாக அவர்களுக்கு தெரியாமல் இருந்த அவர்களது குல தெய்வத்தை எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது என்பதைக் குறித்துக் கேட்டார்கள்.  பண்டைய காலங்களில் தமது குலதெய்வம் யார் என்பதைக் கண்டு பிடிக்க கிராமங்களில் இருந்த நம் மூதாதையர்களால்   சில சடங்குகள் செய்யப்பட்டு வந்திருந்ததாக நான் சென்ற சில ஆலயத்தின் சில பண்டிதர்கள் கூறி இருந்தார்கள்.   அவற்றில் நான் கேட்டு அறிந்ததை அவர்களுக்காக மீண்டும் திருத்தப்பட்ட பிரசுரம் செய்கிறேன்.

குலதெய்வத்தை கண்டு பிடிக்க என்ன செய்யலாம்?

முன் காலத்தில் கிராமப்புறங்களில் இருந்த பிராமணர்களுக்கு தமது குல தெய்வம் யார் என்று தெரியாமல் இருந்தபோது அவர்கள் நதியில் குளித்து விட்டு நதிக் கரையில் இருந்து ஒரு பிடி களி மண்ணை எடுத்து வருவார்கள். வீட்டிற்கு வந்து அதை பிள்ளையார் பிடிப்பதைப் போல பெரியதாக பிடித்து ஒரு தட்டில் வைத்து மஞ்சள் குங்குமத்தை இட்டு அதையே தமது குலதெய்வமாக வணங்கி பூஜிப்பார்கள். நாளடைவில் அவர்கள் பிரார்த்தனையை ஏற்று அவர்களது குலதெய்வங்கள் அவர்களுக்கு தெரிந்து விடுமாம்.
நமக்குத் தெரியாத குலதெய்வ வழிபாட்டு பிரார்த்தனை எப்படி செய்வது? அவர்கள் கடைப்பிடித்து வந்த வழிமுறையைக் கொண்டு அடையாளம் தெரியாத குலதெய்வத்தைக் கண்டு பிடிக்கும் பிரார்த்தனை முறை கீழே கூறப்பட்டு உள்ளது.

பிரார்த்தனை முறை

நமக்குத் தெரியாத குல தெய்வத்தை அறிந்து கொள்ள செய்யும் பிரார்த்தனை முறையை செய்வாய் கிழமையில்தான் செய்யத் துவங்க வேண்டும். ஏன் எனில் செய்வாய் கிழமையே ஆண் மற்றும் பெண் என்ற இரு தெய்வங்களுக்கும் உகந்த நாளாகும்.

1) சடங்கை ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்பு -திங்கள் கிழமை – ஒரு கைப்பிடி களி மண்ணை சேகரித்து அதை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருங்கள். அதை எங்கிருந்து கொண்டு வருவது என குழம்ப வேண்டாம். வீட்டு தோட்டத்தில் உள்ள மண் இல்லை எனில் நர்சரியில் இருந்தும் கொண்டு வந்து பத்திரமாக வைக்கலாம்.

2) ஒரு சிறிய மரபு பலகை மற்றும் ஒரு தாம்பாளத்தை தயாராக வைத்து இருக்கவும். பாதுகாப்பாக வைத்து உள்ள அந்த களி மண்ணை எடுத்து தண்ணீர் விட்டு நன்றாகக் பிசைந்து பிள்ளையார் பிடிப்பது போல பிரமிட் வடிவில் செய்து காய வைத்து விடுங்கள்.

3) மறுநாள் காலை அதாவது செய்வாய் கிழமை குளித்தப் பின்னர் அந்த மரப் பலகையின் மீது கோலம் போட்டு அதன் மீது தட்டை வைத்து அதன் மீது களிமண் பொம்மையை வைத்து விடவும்.

4 ) தாம்பாளத்தில் வைத்துள்ள களிமண் பொம்மையை அடையாளம் தெரியாத உங்கள் குலதெய்வமாக மனதார எண்ணி அதற்கு சந்தனம் குங்குமம் இட்டு சிறிய மாலை ஒன்றை அணிந்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

5) உங்களுக்கு தெரிந்த மந்திரம் இருந்தால் அதை கூறவும். அப்படி தெரியாது என்றால் அதன் முன் அமர்ந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ ” தெய்வமே நீங்களே எமது அடையாளம் தெரியாத குலதெய்வம். நீங்கள் விரைவில் எனக்கு உங்கள் அடையாளத்தையும், நீங்கள் அமர்ந்து உள்ள ஆலயத்தின் இடத்தையும் தெரியப்படுத்த வேண்டும். அதுவரை நீங்கள் இங்கு எங்கள் குலதெய்வமாக இருந்து கொண்டு எங்கள் பிரார்த்தனைகளை இந்த பூஜை/ஆராதனை மூலம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்கள் குடும்பத்தைக் காத்து அருள வேண்டும் ” என்று வாயால் கூறி மூன்று முறை பிரார்த்தனை செய்ய வேண்டும். அதற்குப் பிறகு அதற்கு கற்பூர ஆரத்தி காட்டியபின், அதை நமஸ்கரிக்க வேண்டும்.

6) தினமும் காலை இந்த பிரார்த்தனையை குளித்தப் பின் தொடர்ந்து செய்யவும். காலை மற்றும் மாலையில் அதை செய்வது நல்லதே. ஆனால் தினமும் அதற்கு மஞ்சள் குங்குமம் தூவி அர்ச்சனை செய்ய வேண்டியது இல்லை .
7)வாரம் ஒருமுறை அதாவது சனிக்கிழமை அந்த பொம்மையை வெளியில் எடுத்து வைத்து விட்டு தாம்பாளத்தை சுத்தம் செய்து மரப்பலகையில் கோலம் போட்டு அன்று மட்டும் சந்தன குங்குமம் சிறிது தூவி பூஜை செய்யலாம். ஆனால் நம்பிக்கையுடன் செய்வது முக்கியம்.

8) மர பீடத்தின் முன் ஒரு உண்டியை வைத்து அதில் ஒரு ரூபாய் அல்லது நீங்கள் விரும்பும் காணிக்கையை போட்டு வைக்கவும்.

9) களிமண் பொம்மையை பத்திரமாக பாதுகாத்து வைக்கவும். எதோ ஒரு அஜாகிரதையினால் அல்லது வேறு காரணத்தினால் அது உடைந்து விட்டால் கவலைப் படவேண்டாம். அந்த அடையாளம் தெரியாத தெய்வத்திடம் தவற்றுக்கு மனதார மன்னிப்பு கேட்டுவிட்டு, மீண்டும் களிமண் பொம்மையை முன்போல தயார் செய்து அந்த பூஜையை பழையபடி செய்யத் துவங்கவும். வேண்டும் என்றே நீங்கள் தவறை செய்யவில்லை என்பதினால் உங்கள் குலதெய்வம் உங்களை நிச்சயம் மன்னித்து விடும்.

10) நம்பிக்கையோடு ஆரம்பித்த பூஜையை வெறுப்பினாலோ அல்லது யாராவது குறை கூறுகிறார்களே என்பதற்காகவோ நடுவில் கைவிடாதீர்கள்.

11) உங்கள் குலதெய்வம் யார் என்பது தெரியும்வரை ஒவ்வொரு வருட முடிவிலும் எந்த செய்வாய்க் கிழமையிலாவது உண்டியலில் உள்ள பணத்தை எடுத்து அருகில் உள்ள ஆலயத்தின் உண்டியலில் அதை உங்கள் அடையாளம் தெரியாத குலதெய்வத்திற்கு காணிக்கை என சேர்க்கவும்.

12 ) இந்த பிரார்த்தனையை செய்யத் துவங்கிய உடனேயே குலதெய்வத்தை உதாசீனப்படுத்தினீர்கள் என்ற சாபம் உங்களை விட்டு விலகிவிடும்.

13) நீங்கள் முழு மனதோடு பிரார்த்தனையை ஆரம்பித்த சில நாட்களிலேயே தன்னை அடையாளம் அதுவரை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் உள்ள உங்கள் குலதெய்வம் அந்த களிமண் சிலையில் புகுந்து கொண்டு உங்கள் குடும்பத்தின் பாதுகாவலராக மாறிவிடுமாம்.

14) எந்த நேரத்தில் உங்கள் குலதெய்வம் உங்களுக்கு காட்சி தர வேண்டும் என்ற பிராப்தம் உள்ளதோ அப்போது அந்த தெய்வம் உங்கள் கனவில் வந்தோ, யார் மூலமாவது எதேர்சையாக தன்னை அடையாளம் காட்டி விடும்.

15) ஆனால் நம்பிக்கையை இழக்காமல் எத்தனை வருடம் ஆனாலும் அந்த பிரார்த்தனையை தொடர வேண்டும். பிரார்த்தனையை துவங்கிய சில தினத்திலேயே உங்கள் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகளும், குழப்பங்களும் தீர்வதை காணுவீர்கள்.

16) பல வருடங்கள் ஆகியும் உங்களது குலதெய்வம் உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் கூட கவலை வேண்டாம். அந்த களிமண் பொம்மை மூலம் உங்களது குல தெய்வம் உங்கள் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றும்.
மீண்டும் கூறுகின்றேன். இந்த வகையிலான பிரார்த்தனையை நம்பிக்கையோடு செய்ய வேண்டும். நம்பிக்கையுடன் செய்து வந்தால் உங்களுக்கு தெரியாமல் உள்ள உங்கள் குல தெய்வம் ஒரு நாள் வெளித் தெரியும்.

17) இதற்கு இடையிலேயே உங்கள் குலதெய்வம் யார் என்பது தெரிந்து விட்டால் அந்த களிமண் பொம்மையை குலதெய்வ ஆலயத்துக்கு எடுத்துச் சென்று அங்குள்ள மரத்தின் அடியில் வைத்து விட்டு பிரார்த்தனையை நிறைவு செய்த பின் திரும்பலாம். அதுவரை அந்த களிமண்ணால் செய்த உருவமே உங்கள் குல தெய்வம் என்பதை மனமார நம்ப வேண்டும்.

இந்த முறையிலான வழிபாடு கண்டிப்பாக நிறைவேறும் என்று என்னால் உத்திரவாதம் கொடுக்க முடியாது. காலம் காலமாக நம்பப்பட்டு செய்யப்பட்டு வரும் இந்த வழிமுறை நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் பலன் தரும் என்பது பெரியவர்கள் கூறும் வாக்கு ஆகும். நான் சில மஹான்கள், பண்டிதர்கள் மூலம் கேட்டதை  என் இணைய தளத்தில் எழுதி உள்ளேன்.