ஸ்வர்ணவல்லி சமேத 
முக்தீஸ்வரர் ஆலயம் 
தில தர்பண  பூமி 
சாந்திப்பிரியா 
தில தர்ப்பண பூமி முக்தீஸ்வரர் ஆலயம் 

முன் ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் கூத்தனூர் பகுதியில் ஹரி-சிவா என்ற ஆறு ஒன்று இருந்தது. சரஸ்வதி ஆலயத்துக்கு பெயர் போன இடம் கூத்தனூர் ஆகும். தக்ஷப்ரஜாபதி நடத்திய யாகத்தில் சிவபெருமானுக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் பார்வதி தீயில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது அனைவருக்கும் தெரியும். பார்வதி தேவி தெய்வமே ஆனாலும் அவள் மனித உருவில் யாகத்துக்கு வந்திருந்தபோது இறந்தாள் என்றாலும் அவளுக்கு மரணம் அடைந்த மனிதர்களுக்கு செய்யப்படும் இறுதி காரியங்களையும் தர்ப்பணம் போன்றவற்றையும் எவரும் செய்யவில்லை. ஆனால் பார்வதி தேவி தற்கொலை செய்து மடிந்ததும், இறந்தவர்களை மனிதர்கள் தோளிலே சுமந்து கொண்டு செல்வது போல அவளது உயிரற்ற சடலத்தை தனது தோளிலே எடுத்துக் கொண்டு உலகெங்கும் சிவபெருமான் சுற்றி வந்தபோது அவர் கோபத்தைத் தணிக்க விஷ்ணு பகவான் பார்வதியின் சடலத்தை வெட்டி எறிய  அந்த உடலின் பல பாகங்களும் பூமியில் பல இடங்களிலும் விழுந்தன.   மனித பிறவி முடிந்ததும் தமது அவதாரத்தை முடித்துக் கொள்ளும் தெய்வங்களின் உடல்கள் அப்படியே மறைந்து விடும், அல்லது மண்ணோடு மண்ணாக பூமியில் புதைந்து அதே போன்ற உருவுடனான கல்லாகிவிடும். அவை பல நூற்றாண்டுகளுக்கு பிறகு எவர் மூலமாவது தோண்டி எடுக்கப்பட்டு ஸ்தாபிக்கப்படும். அதே நேரத்தில் மனித உருவில் இருந்து விடுபட்டு தெய்வ உருவை எடுக்க மீண்டும் சென்று விடும் தெய்வங்கள் அதற்கு முன்னால் தமது தெய்வீக ஆத்மாவை தூய்மை செய்து கொள்ள வேண்டி இருக்கும். ஏன் எனில் தேவலோகத்தில் உள்ள தெய்வங்களுக்கும், பூமியிலே வாழும் மனிதப் பிறவிகளுக்கும் நிறையவே வேறுபாடு உள்ளது. மனித உடலில் இருந்து வெளியேறும் தெய்வீக ஆத்மாக்கள் அந்த உடலின் மீது மீண்டும் பற்று கொள்ளக் கூடாது என்பதினால் தமது ஆத்மாக்களை முதலில் தெய்வீக ஆத்மாவாக முற்றிலும் மாற்றிக் கொள்ள சில நியமங்களை செய்து கொள்ள வேண்டும் என்பது பரமாத்மன் வைத்துள்ள நியதி ஆகும்.  பார்வதியின் மனித உடலில் இருந்து அவளது தெய்வீக ஆத்மா வெளியேறியதும், அதை தூய்மைப்படுத்திக் கொண்டு மீண்டும் தன்னுள் எடுத்துக் கொள்ள பார்வதி சில நியமங்களை செய்ய வேண்டி இருந்தது.

தனக்கு நேரிட்ட அவமானங்களை சந்தித்தப் பிறகு நடைபெற்ற பல்வேறு நிகழ்சிகளுக்குப் பிறகு ஆத்மார்த்தமான மன அமைதி கிடைக்க ஹரி-சிவா ஆறு அருகில் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்த தில தர்ப்பண பூமிப் பகுதிக்கு வந்து தங்கிய சிவபெருமான் ஆழ்ந்த  தவத்தில் அமர்ந்தார் (அப்போது அந்தப் பகுதி தில தர்ப்பண பூமி என்ற பெயரை அடைந்திருக்கவில்லை. ஹரி-சிவா ஆறும் கிடையாது). அதே நேரத்தில்தான் பார்வதி தேவியும் தன்னுடைய ஆன்மாவை தூய்மைப்படுத்திக் கொள்ள அதே இடத்துக்கு வந்திருந்தாள். ஆனால் ஒருவருக்கொருவர் மற்றவர் அங்குள்லத்தை அறிந்திடவில்லை. சிவபெருமான் தவத்தில் அமர்ந்திருந்தபோது அவருக்கு எந்த விதத்திலும் தான் இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்றும், ஹிமய மலையில் அவர் வாழ்ந்திருந்தே அதே போன்ற குளுமையான சூழ்நிலையை அவர் தவத்தில் அமர்ந்துள்ளபோது அவருக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் எண்ணிய கங்கா தேவி சிவபெருமானின் தலை முடியில் இருந்து இறங்கி வந்து அவர் கால்களை வருடியபடி சிறு நதியாக ஓடினாள். இப்படியாக அங்கு பிறந்ததே ஹரி-சிவா ஆறு ஆகும். ஆனால் சிவபெருமானின் தவம் முடிந்ததும், அவர் தலை முடியில் இருந்து மீண்டும் கங்கை நதி பாயத் துவங்க அதன் கிளை நதிகளான ஹரி-சிவா இரண்டும் அதே இடத்தில் பூமியின் அடியில் புகுந்து சென்று தம்மை மறைத்துக் கொண்டு விட்டன. அதனால்தான் தில தர்ப்பண பூமிக்கு வந்து மறைந்த முன்னோர்களுக்கு சிரார்த்த காரியம் செய்தால், காசிக்கு சென்று செய்யப்படும் சிரார்ததுக்கு என்ன பலன் கிடைக்குமோ அதே அளவிலான பலன் இங்கு செய்தாலும் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆயிற்று. இந்த உலகில் தர்ப்பணம் செய்து ஆத்மாக்களை திருப்திபடுத்த மஹா தர்ப்பண ஷேத்திரம் எனப்படும் ஏழு புனித தலங்கள் உள்ளன. அவை காசி, ராமேஸ்வரம், ஸ்ரீ வாஞ்சியம், திருவெண்காடு, தில தர்ப்பண பூமி, கயா மற்றும் அலஹாபாத் போன்றவை ஆகும்.

தில தர்ப்பணம் என்றால் எள்ளும் தண்ணீரையும் கலந்து மந்திரங்களை ஓதி, தமது மறைந்த முன்னோர்களுடைய பசி தாகம் தீர நீர் நிலைகளில் அவற்றைப் போட்டு வழிபடுவதாகும். தில் என்றால் எள் என்று அர்த்தம். இந்த நியமங்களை பெரும்பாலான இந்துக்கள் பின்பற்றுகிறார்கள். தர்ப்பணம் என்பது அந்தந்த தலத்தில் முன்னோர்களுக்கு எள்ளையும் தண்ணீரையும் கலந்து அதை அவர்களுக்கு அர்ப்பணம் செய்வதாகும்.அப்படி செய்வதின் மூலம் அவர்களது பசியும்  தாகமும்  மறையுமாம்.

தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பிறகு அந்த உடலைத் துறந்து விட்டு வெளிவந்த பார்வதிக்கு அதிக அளவிலான மன உளைச்சலும், பல்வேறு பிரச்சனைகளும் தோன்றின. மனித உருவில் இருந்து மரணம் அடைந்தப் பின் வெளியேறி வந்துள்ள தன்னுடைய ஆத்மாவை எப்படி தூய்மைபடுத்திக் கொண்டு சிவபெருமானின் மனைவியாக மீண்டும் சேர்ந்து கொள்வது என்பதே அவளுடைய மூலப் பிரச்சனையாக இருந்தது. அதன் காரணம் தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்டு விட்டப் பின், மனித உடலை துறந்து சென்ற மற்ற தெய்வீக அவதாரங்கள் மறைந்து விட்டதைப் போல அவள் உடல் மறைந்து போகவில்லை. மாறாக அதற்குப் பிறகு ஏற்பட்ட சில நிகழ்ச்சிகளினால் பல இடங்களிலும் அவளது உடலின் பாகங்கள் விழுந்திருந்தன. பல்வேறு கோணங்களிலும் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தவள் அந்த உடலில் இருந்து வெளிவந்து தன் உடலில் புகுந்து கொண்டிருந்த தனது ஆத்மாவை தூய்மைப்படுத்திக் கொள்ள தனக்குத் தானே தர்ப்பணம் செய்து கொள்ள முடிவு செய்தாள்.

இங்கு முக்கியமான இரண்டு விஷயங்களைக் குறிப்பிட வேண்டும். முதலாவதாக எந்த ஒரு புராணக் கதைகளிலும் பார்வதி மேற்கொண்ட தற்கொலையைப் போல வேறு எந்த தெய்வமும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவோ, பூமியிலே இறந்து போன மனித சடலங்களை தோளில் தூக்கிக் கொண்டு சென்றது போல பல்வேறு நிலைகளிலும் மறைந்து போன அவதார தெய்வங்களின் சடலங்களை எவருமே தூக்கிக் கொண்டு சென்றதாக எந்த சம்பவங்களும் கூறப்படவில்லை. ஆனால் சிவபெருமான் தனது இறந்துபோன மனைவியின் சடலத்தை தோளிலே சுமந்து கொண்டு ஆவேசத்துடன் உலகை சுற்றி வரத் துவங்கியபோது, அவர் கோபத்தை தணிக்க பகவான் விஷ்ணு பார்வதியின் இறந்து போன உடலை துண்டு துண்டாக வெட்டி கீழே விழ வைத்தார் என்ற கதை மட்டுமே காணப்படுகிறது. ஆகவே புராணக் கதையில் காணப்படும் இப்படிப்பட்ட மகத்துவமான கதை ஒரு வினோதமான தெய்வீக நிகழ்ச்சியாகும். இதைப் போல வேறு தெய்வங்களுக்கு நிகழ்ந்துள்ளதா என்றால் இல்லை என்றே கூற முடியும்.

ராமாயணத்தில் கூட சீதாபிராட்டி அவர் கணவர் ராமரின் கட்டளைப்படித்தான் தனது கற்பை வெளிப்படுத்த தீயில் குதித்தார். ஆனால் அவரது உடல் வெந்து போகவில்லை. மாறாக பூமித்தாய் பூமியைப் பிளந்து சீதையை தன்னுள் இழுத்துக் கொண்டு விட சீதையின் உடல் அப்படியே மறைந்து போயிற்று.

வேடனின் அம்பு தாக்கி இறந்துபோன கிருஷ்ணரின் உடலும் அவர் மரணம் அடைந்ததும் அப்படியே மறைந்து விட்டது. பரசுராமர், ராமர் மற்றும் லஷ்மணர் போன்ற தெய்வங்களும் அப்படியே நதியில் சென்று மறைந்தார்கள். பரசுராமரின் தாயாரான ரேணுகா தேவியும் அப்படியே மறைந்து போனாள். சிவபெருமானின் மனித அவதாரமான ஆதி சங்கரரும் இமய மலையிலே அப்படியே மறைந்து போனார். அவர்கள் அனைவருடைய உடலும் என்ன ஆயிற்று என்ற குறிப்புக்கள் எதுவுமே கிடையாது. அவர்கள் அனைவரும் அப்படியே தமது முந்தைய தெய்வ உருவங்களை அடைந்தார்கள். ஆனால் அவை அனைத்துக்கும் மாறாக பார்வதியின் உடலை சிவபெருமான் தோளிலே தூக்கிக் கொண்டு இறந்த மனிதர்களை தோளிலே சுமந்துகொண்டு செல்வதைப் போல சென்றதினாலும், அவள் உடலின் பாகங்கள் பல இடங்களில் விழுந்ததினாலும் அந்த தெய்வீக சடலத்துக்கான கர்மாக்களை செய்ய வேண்டிய கட்டாயம் பார்வதிக்கு ஏற்பட்டது. அதனால்தான் அவள் தர்ப்பணம் செய்து அந்த சடலத்தில் இருந்து வெளியேறிய தன்னுடைய ஆத்மாவை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது.

இரண்டாவதாக பார்வதி செய்து கொண்ட தர்ப்பணம் குறித்த செய்தியாகும். பூமியிலே உள்ளவர்கள் எப்படி தர்ப்பணம் செய்வார்கள்? எள்ளும் தண்ணீரும் கலந்து மந்திரங்களை ஓதி மறைந்து போன முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்து கொண்டு நீர் நிலையில் அல்லது பூமியில் எள் கலந்த தண்ணீரை விடுவார்கள். எள் என்பது தெய்வீக சக்தி கொண்ட விதை என்பதினால் மந்திரங்களைக் கொண்ட எள் தன்னுள் ஆத்மாக்களை இழுத்துக் கொண்டு உடலில் இருந்து வெளியேறி சுற்றித் திரியும் ஆத்மாக்களின் பசி தாகங்களை தீர்க்கும் என்பது நம்பிக்கை. ஆகவேதான் எள் என்பது எந்த ஒரு தர்ப்பணத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. பார்வதி செய்து கொண்ட தர்ப்பணம் என்பது அவள் மரணம் அடைந்ததும் அவள் உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவை தூய்மைப்படுத்திக் கொண்டு, மரணம் அடைந்த அவளது உடலில் இருந்து வெளியேறிய தெய்வீக சக்தியை மீண்டும் தனது ஆத்மாவுக்குள் கிரகித்துக் கொள்ளும் நிலையாகும். அதை பார்வதி தேவி எப்படி செய்தாள்?

கங்கையின் துணை ஆறுகளான ஹரி-சிவா ஆற்றில் குளித்தப் பின் அதன் கரையில் தண்ணீர் ஊற்றி ஈரமாக்கிய பூமியில் ஒரு பாயைப் போல எள்ளை தூவி வைத்து அதன் மீது அமர்ந்து கொண்டு தனது ஆத்மாவிற்கு மட்டுமே உரியதான சில குறிப்பிட்ட மந்திரங்களை ஓதி தனது இறந்து போன உடலில் இருந்து வெளியேறி தனது ஆத்மாவோடு அகண்டத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த தமது தனித்தன்மை கொண்ட தெய்வீக சக்திகளை தன் ஆத்மாவுக்குள் மீண்டும் இழுத்துக் கொண்ட நிலையாகும். இதற்காக ஈரப்பதமான பூமியில் எள்ளைத் தூவி அதன் மீது அமர்ந்து கொண்டு செய்ததினால் அது தெய்வீக தர்ப்பணம் என்று கருதப்பட்டது. ஏன் எனில் முன்னர் கூறியது போல எள்  என்பது தெய்வீக விதைகளாகும்.

ராமரும் லஷ்மணரும் தில தர்பண பூமிக்கு வரும் முன்னால் அவர்களுக்கு வசிஷ்ட முனிவர் அந்த பூமியின் மகத்துவத்தைக் கூறியதினால்தான் அவர்கள் அங்கு வந்தார்கள். ராமரும் லஷ்மணரும் எதற்காக தில தர்பண பூமிக்கு வந்தார்கள்? அந்தக் கதை என்ன?

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்குப் பிறகு அயோத்திக்கு செல்லும் வழியில் இருந்த ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்வது விசேஷம் என்பதினால் ராமரும் லஷ்மணரும் ராமேஸ்வரத்தில் அவர்களது தந்தை தசரதருக்கு தர்ப்பணம் செய்தார்கள். அதற்கு முன்னரும் அவர்கள் வனவாசத்தில் இருந்தபோது அவர்களது தந்தை தசரதர் மறைந்த செய்தி கேட்டு வனத்திலேயே ஸ்ரார்தம் செய்து தர்ப்பணமும் செய்திருந்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு ஸ்ரார்தம் செய்த மன நிறைவோ அல்லது மன அமைதியோ கிடைக்கவில்லை. மனதில் எதோ சங்கடம் இருந்து கொண்டே இருந்தது. அதற்குக் காரணம் அவர்கள் வைத்த பிண்டத்தை எந்த இடத்திலும் காகங்கள் உண்ண வரவே இல்லை என்பதேயாகும். ஒருவர் வைத்த பிண்டங்களை காகம் வந்து உண்ணவில்லை என்றால் அவர்கள் செய்த ஸ்ரார்த்த காரியம் முழுமை அடையவில்லை என்பது சமிக்கை ஆகும். அதனால் தமக்கு ஏற்பட்டிருந்த பிருமஹத்தி தோஷம் விலகவில்லையோ என்ற இனம் தெரியாத தீராத மனக் கலகத்தோடு ராமரும் லஷ்மணரும் இருந்தார்கள். அதனால்தான் அவர்கள் தமது குல முனிவரான வசிஷ்ட முனிவரிடம் ஆலோசனை கேட்டபோது அவரும் நாரத முனிவரும், கங்கை நதியும் தமக்குக் கூறிய சில அதிசயமான செய்தியை அவர்களுக்கு கூறினார்.

அந்த செய்தி என்னவென்றால் தில தர்ப்பண பூமியில் சிவபெருமான் தபத்தில் அமர்ந்து இருந்தபோது ஒருமுறை நாரத முனிவர் அந்த வழியே சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் கங்கை நதி கிளை நதியாக அங்கே ஓடிக் கொண்டு இருந்ததைக் கண்டு வியப்பு அடைந்து கீழே வந்து கங்கை நதியுடன் அது குறித்து பேசலானார். அந்த பேச்சின் இடையே கங்கை அவருக்கு தான் தில தர்ப்பண பூமியில் கண்ட ஒரு வினோதமான காட்சியை விவரித்தாள். நேரம் காலம் பார்க்காமல் வருடத்தின் அனைத்து நாட்களிலும் பலரும் அங்கு வந்து ஹரிசிவா எனும் பெயரில் ஓடிக்கொண்டு இருந்த தன் ஆற்றில் குளித்தப் பின் ஆற்றுப் படுக்கையில் தர்ப்பணம் செய்து விட்டு பிண்ட உருண்டையை (அரிசியிலான சாத உருண்டை) வைத்து விட்டுச் சென்றதும், அவர்கள் எவருக்காக தர்ப்பணம் செய்தார்களோ அந்த உடலின் ஆத்மாக்கள் கண்களுக்கு புலப்படாத சூக்ஷம உருவில் அங்கு வந்து பிண்டத்தை நேரடியாக* எடுத்துக் கொண்டார்கள். அவை அனைத்தையும் வெகு தொலைவில் இருந்த (இன்றைய கூத்தனூர் சரஸ்வதி ஆலயம் உள்ள இடத்தில் ) ஒரு இடத்தில் கண்களுக்கு புலப்படாத சூக்ஷம உருவில் அமர்ந்து இருந்த பிரும்மா குறிப்பு எடுத்துக் கொண்டபடி இருந்தார். கங்கை தேவிக்கு ஆச்சர்யம் தந்த காட்சி என்னவென்றால் அப்படி பிண்டங்களை நேரடியாக வந்து பெற்றுக் கொண்ட ஆத்மாக்களை சுற்றி எந்த யம தூதரும் காணப்படவில்லை, அந்த ஆத்மாக்கள் பிண்டங்களை எடுத்துக் கொண்டபோது அவர்களை எவரும் தடுக்கவும் முற்படவில்லை. ஆனால் நாரதர் அவளுடன் பேசிக்கொண்டு இருந்த அந்த நேரம்வரை கூட அந்த நிலைக்கான காரணமும் கங்கா தேவிக்கு தெரியவில்லை என்றாள். (*ஆத்மாக்களாக அகண்டத்தில் சுற்றித் தெரியும் பித்ருக்கள் நேரடியாக எப்படி பிண்டங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதைக் குறித்த ஒரு விளக்கம் இது: கண்களுக்கு புலப்படாதவகையில் வரும் ஆத்மாக்கள் பூமியிலே வைத்துள்ள உணவை நேரடியாக எடுத்துக் உண்ண முடியாது. அப்படி என்றால் எதற்காக உணவை பிண்டமாக வைக்க வேண்டும்? இறந்தவர்களது பசியும் தாகமும் எப்படி தீரும்? பூமியிலே முறைப்படி ஸ்ரார்தம் மற்றும் தர்ப்பணம் செய்து விட்டு இறந்துபோன பித்ருக்களுக்கு பிண்டம் என்ற பெயரில் வைக்கப்படும் சாத உருண்டைகளின் அளவுக்கு ஏற்றார்போல பல மடங்கு உணவு அந்த பிண்டம் எவருக்காக வைக்கப்பட்டதோ அந்த ஆத்மாக்களின் பசி தீருவதற்காக யம கணங்களினால் யமலோகத்தில் கொடுக்கப்படவேண்டும் என்பது தேவலோக நியதியாகும். அதை யம கணங்களினால் மீற முடியாது. ஆகவே வைக்கப்பட்ட பிண்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது என்பதை சமிக்கையாக காட்டவே பூமியிலே உள்ள யமராஜரின் வாகனமான காகத்தின் வம்சத்தினரை யம கணங்கள் அந்த பிண்டத்தை உண்ணுமாறு கட்டளை இடுவார்கள். பிண்டத்தை காகம் வந்து உண்டால் அவை பித்ருக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன என்பதை அறிந்து கொள்ளலாம் என்பது நம்பிக்கை )

கங்கா தேவியிடம் இருந்து அந்த செய்திகளைக் கேட்டறிந்து கொண்ட நாரத முனிவருக்கு தில தர்ப்பண பூமிக்கு மட்டும் ஏன் அப்படிப்பட்ட மகத்துவம் உள்ளது என்பதைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற தனது ஆவலை அடக்கிக் கொள்ள முடியவில்லை. ஆகவே சிவபெருமானின் தவம் எப்போது முடிவுறும், இந்த சந்தேகம் குறித்த விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என எண்ணியவர் அங்கேயே தங்கினார். காலம் ஓடியது. சிவபெருமான் தவம் முடிவுற்று கண் முழித்ததும் ஓடிச் சென்று அவர் பாதங்களில் விழுந்து வணங்கி கங்கா தேவி தனக்கு கூறிய செய்தியின் அடிப்படைக் காரணத்தைக் கூறுமாறு வேண்டிக் கொண்டார்.

சிவபெருமானும் தில தர்ப்பண பூமிக்கு ஏன் அப்படிப்பட்ட மகத்துவம் உள்ளது என்பதைக் குறித்து கூறினார். ‘தான் தவத்தில் இருந்த எந்தப் பகுதியிலும் யமராஜருக்கோ அல்லது அவருடைய கணங்களுக்கோ எந்த காலத்திலும் எந்த அதிகாரமும் கிடையாது என்பது நிர்ணயிக்கப்பட்ட நியதி ஆகும். தான் தவத்தில் இருந்த எந்தப் பகுதியிலும் நுழையும் ஆத்மாவிற்கு அவர்கள் எந்தவிதமான துன்பத்தையும் தரக்கூடாது, அவற்றை தடுக்கவும் கூடாது. அந்த இடத்தில் தனது தவத்தின்போது தமக்கு இமயமலையின் சூழ்நிலைப் போன்ற குளுமையைத் தர வேண்டும் என்பதற்காக கங்கை நதி தன் பாதங்களை வருடியபடி ஹரி-சிவா என்ற பெயரில் துணை நதியாக ஓடிச் சென்றதினால் தில தர்ப்பண பூமி புனிதமான சிவபூமி ஆகி விட்டது. அதற்கு இணையாக உலகில் வேறு எந்த இடமும் கிடையாது. ஆகவே தில தர்ப்பண பூமியில் துணை நதி உருவில் ஹரி-சிவா என்ற பெயரில் ஓடிய கங்கையின் ஆற்றில் குளித்துவிட்டு தர்ப்பணம் செய்தபின் பிண்டம் வைத்தால் அந்த பிண்டம் எவருக்காக வைக்கப்பட்டதோ அந்த ஆத்மாக்கள் அவற்றை பெற்றுக் கொள்ள அங்கு வருவதற்கு யமராஜன் தடங்கல் செய்ய முடியாது. தமக்கு பிண்டம் வைத்துள்ள தில தர்ப்பண பூமிக்கு மரணம் அடைந்தவர்களின் ஆத்மாக்கள் வந்து பிண்டங்களை மனதார பெற்றுக் கொண்டு தமது சந்ததியினரை ஆசிர்வதிக்கும்போது அதுவரை மரணம் அடைந்துவிட்ட மூதையார்களுக்கு சரிவர தர்ப்பணமோ, ஸ்ரார்தாமோ செய்யாததினால் ஏற்பட்டு இருந்த அனைத்து பாபங்களும் உடனடியாக விலகுவதால் மன அமைதியும், குடும்ப அமைதியும் மரணம் அடைந்து போன ஜீவன்களின் குடும்பங்களுக்கு கிடைக்கிறது. அது மட்டும் அல்ல கங்கை நதி தனது பாதங்களை வருடியபடி ஓடிச் சென்று அந்த பூமியை புனிதமாக்கி விட்டதினால் சிவபூமி ஆகி விட்ட தில தர்ப்பண பூமியில் வருடத்தின் எந்த நாட்களில் வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வந்து தர்ப்பணம் செய்யலாம், நேரம் காலம் பார்த்து வரத் தேவை இல்லை என்பது இந்த பூமியின் இன்னொரு மகத்துவம் ஆகும். இதன் காரணம் அங்கு சந்திரனும், சூரியனும் தினமும் ஒன்றாக வந்து தம்மை வழிபட்டுச் செல்கிறார்கள் என்பதினால் தில தர்ப்பண பூமியில் உள்ள தமது வழிபாட்டுத் தல பூமி நித்ய அம்மாவாசை நிலவும் பூமியாகும் (குறிப்பு : சந்திரனும் சூரியனும் ஒன்றாக இணையும்போது உலகமே இருண்டு விடுகிறது. அதை அம்மாவாசை தினம் என்பார்கள். இவர்களை பூமியிலே எதற்காக சாமர்த்தியமாக கிருஷ்ணர் வரவழைத்தார் என்ற கதை மகாபாரதத்தில் உள்ளது). இதை உணர்ந்து கொண்டதினால்தான் பார்வதியும் அங்கு வந்து ஆத்மா தர்ப்பணம் செய்து கொண்டு தன்னை புனிதமாக்கிக் கொண்டாள். பூமியிலே தில தர்ப்பண பூமியில் மட்டுமே இறந்தவர்களது ஆத்மாக்கள் நேரடியாக வந்து பிண்டங்களை பெற்றுக் கொண்டு செல்வதும் இல்லாமல், அங்கு நுழைந்த உடனேயே தூய்மை அடைந்து, பிண்டத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் அங்கிருந்து நேரடியாக சிவலோகத்துக்கு சென்று விடும். அவற்றுக்கு யமலோகத்தில் மிச்சம் கழிக்க வேண்டிய தண்டனைக் காலம் இருந்தாலும் அவை தள்ளுபடி ஆகி விடுகின்றது’

வசிஷ்ட முனிவர் மூலம் தில தர்ப்பண பூமியின் இப்படிப்பட்ட பெருமைகளை அறிந்து கொண்ட ராமபிரான் தனது தந்தை தசரதன் மற்றும் தந்தையைப் போன்ற ஜடாயுவுக்கும் தப்பணம் செய்ய வேண்டிய சரியான இடம் அதுவே என்பதை உணர்ந்து கொண்டார். மேலும் தனக்காக ராவணனுடன் சண்டைப் போட்டு உயிரை துறந்த தனது தந்தையைப் போன்ற பறவை ஜடாயுவிற்கு தர்ப்பணம் சரிவர செய்யாததினாலும், ராமேஸ்வரத்தில் ஜடாயுவிற்கு பூரண தர்ப்பணம் செய்ய மறந்து விட்டதினாலும் தமது மனதில் சஞ்சலம் தொடர்கிறது என்பதையும் அதற்குப் பிறகே உணர்ந்து கொண்டார். ஆகவே சற்றும் தாமதிக்காமல் தில தர்ப்பண பூமிக்கு தமது சகோதரர் லஷ்மணருடன் கிளம்பிச் சென்றார். அங்கு சென்று தனது மாதா, பிதா, குரு மற்றும் தெய்வம் என நால்வரையும் வணங்கிய பின் தனது தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கும் தர்ப்பணம் செய்து விட்டு பிண்டமாக சாத உருண்டையை வைத்த போது அந்த நான்கு பிண்டங்களும் சிவ லிங்கங்களாக மாறிவிட்டன. அடுத்தகணம் தசரதரும், ஜடாயுவும் அங்கு தோன்றி தாம் தமக்கு செய்த தர்ப்பணத்தினால் பூரண திருப்தி அடைந்து விட்டதினால் அங்கிருந்து நேராக சொர்கத்தை நோக்கி செல்வதாகக் கூறினார்கள். அதைக் கேட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்த ராமரும் லஷ்மணரும் அந்த சிவலிங்கங்களுக்கு அங்கேயே பூஜைகளை செய்து வழிபட்டப் பின்னர் அருகில் இருந்த கூத்தனூரில் மனித கண்களுக்கு தெரியாமல் இருந்து கொண்டிருந்த பிரும்மாவையும் வழிபட்டப் பின் பூரண மன அமைதியுடன் அயோத்திக்கு திரும்பினார்கள்.

வெகு காலத்துக்குப் பின் வாரணாசி நகரை ஆண்டு வந்திருந்த மன்னன் ஒருவன் நாரத முனிவரிடம் தர்ப்பணம் செய்து முன்னோர்களின் ஆத்மாக்களின் பசி மற்றும் தாகத்தைத் தீர்க்கவல்ல வாரணாசியைப் போன்ற மேன்மையான பூமி உலகில் உண்டா என்று கேட்டபோது அவர் கூறினாராம், வாரணாசிக்கு சற்றும் குறைவில்லாத மேன்மையான இடம் தில தர்ப்பண பூமியாகும் என்றும் அதைவிட மேன்மையான இடம் அகண்டத்தில் கிடையாது என்றும் அதன் காரணம் அங்குதான் மறைந்த முன்னோர்களின் ஆத்மாக்கள் யம பயமே இல்லாமல் பிண்டத்தை நேரடியாக வந்து பெற்றுக் கொண்டு பசி மற்றும் தாகத்தை தீர்த்துக் கொள்வதும் இல்லாமல் அங்கிருந்து சிவலோகப் பிராப்தி பெற்று சிவலோகத்துக்கு செல்கின்றன என்றும் அங்குதான் சிவபெருமான் தவத்தில் இருந்துள்ளார், பார்வதி ஆத்ம தர்ப்பணம் செய்து கொண்டாள், ராம-லஷ்மணர்கள் வந்து தசரதனுக்கும் ஜடாயுவிற்கும் தர்ப்பணம் செய்துள்ளார்கள், சிவ பூமியான அங்கு யம கணங்கள் நுழையக் கூட முடியாது என்றும் கூறினார்.

இன்றும் அங்குள்ள முக்தீஸ்வரர்-ஸ்வர்ணவல்லி ஆலயத்தில் பின்புறத்தில் ராம லஷ்மணர்கள் பூஜித்த சிவலிங்கங்கள் உள்ளன. அந்த ஆலயத்தை சற்று தள்ளி ஓடும் அரசலூர் என்ற ஆறே தில தர்ப்பண பூமியில் காலத்தால் பூமிக்குள் மறைந்து விட்டதாக கூறப்படும் கங்கையின் கிளை நதிகளாக ஓடிய ஹரி-சிவா ஆறு என்றும் கூறுகிறார்கள்.

ஆகவே தமது வாழ்நாளில் எவர் ஒருவர் முறையாக தமது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பிண்டம் போடவில்லையோ, அல்லது தர்ப்பணமே செய்யாமல் இருந்துள்ளார்களோ அவர்கள் ஒருமுறை தில தர்ப்பண பூமிக்கு வந்து தர்ப்பணம் செய்து பிண்டம் போட்டால் அதுவரை அவர்களுக்கு நிலவி வந்திருந்த பாபம் விலகும் என்பது நம்பிக்கை ஆயிற்று. அதன் மூலம் அவர்களது முன்னோர்களின் ஆத்மாக்களும் மன அமைதியோடு சிவலோகம் செல்லும், அவர்களது குடும்பத்திலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் என்கிறார்கள்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தில தர்ப்பணபுரி ஆலயத்தில் உள்ள முக்தீஸ்வரர் ஸ்வயம்புவாக எழுந்தருளியவர். தர்ப்பணம் முடிந்த பின் அவர்கள் அளிக்கும் பிண்டத்தைப் பெற்றுக் கொள்ள நேரில் வரும் முன்னோர்களுடைய ஆத்மாக்களுக்கு முக்தி தருபவர் என்பதினால் இந்த ஈசனை முக்தீஸ்வரர் என்பார்கள். மேலும் இங்குள்ள முக்தீஸ்வரரை சந்திர பகவானும் சூரிய பகவானும் தினமும் நேரிலே வந்து வணங்குவதினால் இந்த பூமி தின அம்மாவாசை பூமியாகவே கருதப்படுகிறதாம். அதனால்தான் நித்திய அம்மாவாசை தினமாக உள்ள இந்த ஆலயத்தில் வருடத்தின் எந்த நாட்களில் வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வந்து தர்ப்பணம் செய்யலாம் என்கின்றார்கள். இந்த ஆலயம் மாயவரம் செல்லும் வழியில் உள்ள கூத்தனூரில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

முன்னோர்கள் மட்டும் அல்லாமல் மறைந்து விட்ட ஆனால் தெரிந்த அல்லது தெரியாத எந்த ஒரு நண்பர்களுக்கும் இங்கு வந்து தர்ப்பணம் செய்தால் அவர்களது ஆத்மாக்கள் சாந்தி அடையும் என்பது நிச்சயம் என்று அங்கிருந்த பண்டிதர் ஒருவர் கூறியபோது என் வியப்பு இன்னும் அதிகம் ஆயிற்று.
மனிதத் தலையுடனான

ஆதி வினாயகர் தோன்றிய கதை 

 ஆலயத்தில் மனித தலையுடன் 
காட்சி தரும் ஆதி வினாயகர் 

தில தர்பண பூமிக்கு இன்னொரு பெருமையும் உண்டு. அது என்ன என்றால் இங்குதான் விநாயகப் பெருமான் மனித முகத்துடன் தனது பெற்றோர்களுடன் இருந்து அதற்குப் பிறகு யானையின் முகத்தைப் பெற்றாராம்.

பார்வதி தேவி தற்கொலை செய்து கொண்டு மனித உடலை அழித்துக் கொண்டப் பின் தன்னுடைய ஆத்மாவை தூய்மைப்படுத்திக் கொண்டு, மனித உடலில் உடலில் இருந்து வெளியேறிய தன்னுடைய பிரத்தியேக தெய்வீக சக்தியை திரும்ப கிரகித்துக் கொள்ள அடர்ந்த காட்டுப் பிரதேசமாக இருந்த இந்த இடத்துக்கு வந்தாள். அவள் அங்கு வந்த நேரத்தில்தான் சிவபெருமானும் தன் மனக்கோபம் குறைய அங்கு வந்து தவத்தில் இருந்தார். ஆனால் இருவருக்குமே மற்றவர் அங்கு இருப்பது தெரியாது. அங்கு வந்த பார்வதி தேவி ஹரி-சிவா ஆற்றில் குளித்தப் பின் ஆத்ம தர்ப்பணம் செய்துகொண்டு தனது ஆத்மாவை தூய்மையாக்கிக் கொள்ள மனதார மரத்தின் அடியில் தவம் செய்தாள். அப்படி தன்னுடைய ஆத்மாவை தூய்மைப்படுத்திக் கொண்டு, மனித உடலில் உடலில் இருந்து வெளியேறிய தன்னுடைய பிரத்தியேக தெய்வீக சக்தியை திரும்ப கிரகித்துக் கொண்டு தனது நாயகன் சிவபெருமானுடன் மீண்டும் இணைய அந்த நியமங்களை அனுஷ்டிக்க வேண்டி இருந்தது.

இந்த நிலையில் அவள் தினமும் குளித்துவிட்டு உடை மாற்றிக்கொள்ள ஆற்றின் அருகில் சிறு கொட்டகை அமைத்துக் கொண்டாள். அங்கிருந்து சற்று தொலைவில் ஒரு மஞ்சள் உருண்டையில் தனது மகன் வினாயகரை மறைந்து இருந்தவாறு காவலில் இருக்குமாறும் தான் குளித்துவிட்டு வரும் வரையில் அந்த எல்லைக்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்ற கட்டளையையும் தந்து இருந்தாள்.

அதற்கு இடையில் தவத்தை முடித்துக் கொண்டு சிவலோகத்துக்கு திரும்பிச் சென்ற சிவபெருமான் தனது மனைவியைக் காணாமல் அவளை பல இடங்களிலும் தேடியபடி சென்றபோது பார்வதி தான் தவம் இருந்த தில தர்ப்பண பூமிப் பகுதியில் இருப்பது தெரிந்து அங்கு வந்தார். அவர் வந்த நேரத்தில் பார்வதி குளித்துக் கொண்டு இருந்தாள். அவளைக் காண ஓடி வந்த சிவபெருமானைக் கண்ட மஞ்சள் உருவ வடிவில் மறைந்து இருந்த வினாயகர் அங்கு தோன்றி தந்தைத்தானே என்றும் பார்க்காமல் அவரை தடுத்து நிறுத்தினார். அதனால் கோபமுற்ற சிவபெருமான் அவர் தலையை வெட்டி வீழ்த்தினார். வினாயகரின் தலை வடக்குப் பக்கத்தில் துடித்தபடி கிடக்க, தென் பகுதியில் தலை இல்லாத சரீரம் கிடந்தது. அந்த கூச்சல் குழப்பத்தைக் கேட்டு ஓடி வந்த பார்வதி நடந்ததை அறிந்து கொண்டு சிவபெருமான் கால்களில் விழுந்து மன்னிப்பைக் கோரி அவள் மகனுக்கு மீண்டும் உயிர் பிச்சைத் தருமாறு வேண்டிக் கொள்ள, கோபம் தணிந்த சிவபெருமானும் தனது கணங்களை அழைத்து வடக்கு பக்கம் சென்று அங்கு சரீரம் இல்லாத எந்த தலை முதலில் தென்படுமோ அதை உடனடியாக எடுத்து வர ஆணைத் தந்தார். சிவபெருமான் கட்டளைப்படி அவரது கணங்கள் வடக்கு பக்கத்தில் கிடந்த யானையின் தலையை எடுத்து வர அதை மரணம் அடைந்து கிடந்த வினாயகரின் சரீரத்தில் வைக்க வினாயகர் மீண்டும் உயிர் பிழைத்து எழுந்தார். ஆனால் அவர் முகம் மட்டும் யானை முகமாக இருக்க வேண்டியதாயிற்று.

அவரைக் கட்டி அழைத்துக் கொண்ட பெற்றோர் அவருக்கு ஆசி வழங்கினார்கள். இனி அந்த இடத்தில் வினாயகர் மனிதத் தலையுடன் காட்சி தந்து பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்வார் என்றும், அவர் அமர்ந்துள்ள இடத்தின் எதிரிலேயே அமைய உள்ள ஆலயத்தில் அவர்களும் முக்தீஸ்வரர் மற்றும் சுவர்ணவல்லி என்ற பெயரில் இருந்தவாறு அருள் பாலிப்பார்கள் என்றும், அங்கு வந்து மரணம் அடைந்து விட்ட தமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பிண்டத்தை வைத்தால் அந்த ஆத்மாக்கள் அங்கு வந்து அதை பெற்றுக் கொண்ட பின்னர் அந்த ஆத்மாக்களின் அனைத்து பாபங்களும் விலக்கப்பட்டு அங்கிருந்து நேரடியாக சிவலோகத்துக்கு செல்வார்கள் என்ற நியதியையும் ஏற்படுத்தினார்கள். இப்படியாக தென் பகுதியில் மனித முகம் கொண்ட ஆதி வினாயகர் காட்சி தர தில தர்ப்பண பூமி ஈடு இணையற்ற மேன்மை வாய்ந்த ஆலய பூமியாயிற்று.