ரகுவம்சம் – 4
– சாந்திப்பிரியா – 

கெளட்ச முனிவர் யாசகம் 
கேட்டு வந்த  கதை

வரதந்து எனும் மாமுனிவரின் சிஷ்யர் கௌட்ச முனிவர் ஆவார். அவருக்கு அவரது குருவிடம் இருந்து கிடைத்த கல்வி அறிவுக்கு ஈடாக குரு தட்க்ஷணை  கொடுக்க வேண்டும் என்ற நிலை தோன்றியபோது  கௌட்ச முனிவர் அதற்குத் தேவையான செல்வத்தை மன்னனிடம் இருந்து யாசகமாக பெற்றுக் கொண்டு செல்லலாம் என வந்திருந்தார். ஆனால் அனைத்து செல்வத்தையும் தானங்களைத் தந்தே இழந்து விட்டு, இனி யார் வந்து தானம் கேட்டாலும் கொடுக்க கையில் எந்த செல்வமும் இல்லாமல் நின்றிருந்த வேளையில்  முனிவர் மன்னனிடம் யாசகம் பெற வந்தார். அந்த முனிவர் வந்த நேரத்திலோ ரகுராமனிடம் மண் பாண்டத்தைத் தவிர வேறு எதுவுமே கொடுப்பதற்கு இல்லை. இருந்த அனைத்து தங்கக் குடங்களையும் தானமாக தந்தாகி விட்டது.  இவருக்கு எதைக் கொடுப்பது என மனம் தடுமாறினாலும், தன்னிடம் யாசகம் கேட்டு வந்தவருக்கு ஒன்றும் கொடுக்காமல் அனுப்ப விருப்பம் இன்றி அவரை அமரச் சொல்லி அர்கியம் கொடுத்து அன்புடன் நலம் விசாரிக்கலானார். ‘முனிவர் பெருமானே, தங்களுடைய குருநாதர் வரதந்து முனிவர் நலமாக இருக்கிறாரா. அவருக்கும் என் வந்தனங்கள்’. என்று கூறியவாறு வந்தவரை உபசரித்தார்.  பேச்சை வளர்த்தபடி ‘ஆஸ்ரமத்தில் மரங்கள் வாடாமல் உள்ளனவா? மாடுகளும் மான்களும் அவற்றின் கன்றுகளும்  இடையூறு இல்லாமல் உலாவுகின்றனவா?’ என்றெல்லாம் எதை எதையோ கேட்டு வந்த முனிவரை அன்புடன் உபசரித்தார்.

அதைக் கேட்ட கௌட்ச முனிவர் கூறினார் ‘மன்னா, உனது ஆட்சியிலே என் குருநாதர் இருப்பிடத்தில் மட்டும் அல்ல அனைத்து இடங்களிலும்  உள்ள மக்கள் எந்த ஒரு குறையும் இல்லாமல்தான் வாழ்கிறார்கள். அரசனே, முன்னோர்களிடம் இருந்துதான் ஒருவர்  வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கத்தையும், பக்தியையும்  கற்றறிய வேண்டும்.  அப்படிக் கற்ற பின் அதை பிழறாமல்தமது வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டும். ஆனால் நீயோ உன் முன்னோர்களை அனைத்து விதத்திலும் மிஞ்சி விட்டாய் என்பதைக் காணவே ஆனந்தமாக உள்ளது.  அதே சமயத்தில் எனக்கு  போதாத காலமோ என்னவோ நான் உன்னிடம் வந்துள்ள நேரம் காலம் கடந்து விட்ட நேரமாக உள்ளதாகவே உணர்கிறேன். வேள்வி செய்து, அதில்  உன்னிடம் இருந்த அனைத்தையுமே அனைவருக்கும் தானம் செய்து விட்டு இப்போது நொடிந்து விட்டாய். அதைக் கேட்க  எனக்கு வருத்தமாக உள்ளது. ஆனாலும் நீ நலமாக இருக்க வேண்டும். உனக்கு மங்களம் உண்டாகட்டும்’.

இப்படியாக கூறி விட்டு மன்னரிடம் விடைப் பெற்றுக் கொண்டு கிளம்பிய  முனிவரை தடுத்து நிறுத்தி ரகுராமன் கேட்டார் ‘மரியாதைக்குரிய முனிவரே நான் மனம் நொடிந்து இருந்ததினால் நீங்கள் வந்த விவரத்தைக் கேட்காமல்  ஏதேதோ பேசிக் கொண்டு இருந்து விட்டேன். என்னை தாயைக் கூர்ந்து மன்னித்து விடுங்கள். நீங்கள் வந்த காரியம் யாது? அதை கூறுவீர்களா?’ என்று கேட்க, சற்றே சங்கடத்தில் ஆழ்ந்த முனிவர்  கௌட்ச முனிவர் கூறினார் ‘மன்னா எனக்கே நான் வந்த விவரத்தைக் கூற சங்கடமாக உள்ளது.  நான் வரந்து எனும் முனிவரின் சீடராக இருந்தேன். அவரிடம் இருந்து பதினான்கு வித்தைகள், நான்கு வேதங்கள், அனைத்து புராணங்கள், மிமிம்சை, தருமசாஸ்திரம்  என அனைத்தையும்  கற்றறிந்தேன். நான் அவரிடம் கல்வி கற்கத் துவங்கி சில காலமானதுமே அவருக்கான  குரு தட்க்ஷணை என்ன தர வேண்டும் என்று கேட்டபோது நான் அவருக்கு செய்யும் பணிவிடையும், அவரிடம் காட்டும் அன்பும் பக்தியும்  மட்டுமே குரு தட்க்ஷணையாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதுவே தனக்குப் போதுமானது என்றார்.

ஆனாலும் நான் அவரிடம் இருந்து அனைத்தையும் கற்றரிந்தப் பின்னர் அவர் ஆஸ்ரமத்தில் இருந்து போகும் முன் மீண்டும் அவருக்கு நான் என்ன தட்ஷணைத் தர வேண்டும் என்று கேட்க அவரும் என் ஏழ்மை நிலையையும் பார்க்காமல் ‘நீ எனக்கு இதுவரை குரு தட்க்ஷணை தரவில்லை என்பதினால் ஒரு வித்தைக்கு ஒரு கோடி என  பதினான்கு வித்தைகளுக்கு தட்க்ஷணையாக பதினான்கு கோடி தங்க நாணயங்கள் கொண்டு வா’ என்று கூறி என்னை அனுப்பி விட்டார். நான் அதற்கு எங்கு போவது எனத் தெரியாமல் உம்மிடம் வந்து உம்மைக் கேட்டுப் பெற்றுக் கொண்டு செல்லலாம் என இங்கு வந்ததும்தான் உன்னுடைய அனைத்துச் செல்வத்தையும் நீயும் துறந்து விட்டு மண் பாண்டத்தைக் கொண்டு  எனக்கு அர்க்கியம் தரும் நிலையில் உள்ளதைக் காண நேரிட்டது. ஆகவே மன்னா,  இதை எண்ணி நீ யோசனை செய்ய வேண்டாம்.  இங்கு வந்து உன் நிலையைக் கண்டதும் நாம் வேறு யாரிடமாவது சென்று யாசகம் கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என என் மனதில் யோசனை தோன்றியது. ஆகவே வேறு யாரிடமாவது சென்று யாசகம் கேட்கலாம் எனக் கிளம்பினேன்’ என்று கூறி விட்டு கிளம்பிய  முனிவரை மீண்டும்  தடுத்து நிறுத்தினார்  ரகுராமன். அவரிடம் கூறினார் ‘மகா முனிவரே, என்னிடம் வந்து தானம் கேட்டப்பின் அதை பெற்றுக் கொள்ளாமல் வெறும் கையோடு  போக என்னால் எப்படி அனுமதிக்க முடியும்? ஆகவே தயை கூர்ந்து நீங்கள் இங்கு இன்னும் இரண்டு நாள் தங்கி விட்டுச் செல்லுங்கள். நான் எங்கிருந்தாவது நீங்கள் கேட்ட தானத்தை  கொண்டு வந்து தருகிறேன்’ என்று கூறிவிட்டு  அவரை  ஒய்வு எடுக்குமாறு கூறினார்.

இரவு முழுவதும் தூக்கம் இன்றி தவித்த மன்னன் மறுநாள் காலை விழித்தெழுந்ததும் குபேரனிடம் சென்று செல்வம் கேட்கலாம், அவர் கொடுக்க மறுத்தால் போர் தொடுத்தாவது திரவியத்தைக் கொண்டு வரலாம் என்ற நினைப்புடன், காலைப் பொழுதை எதிர்பார்த்தபடி  பல ஆயுதங்களையும் இரவிலேயே எடுத்து வைத்துக் கொண்டு தனது தேரில் அமர்ந்திருந்தவர் அப்படியே தன்னை மறந்து  உறங்கி விட்டார். மறுநாள் பொழுது விடிந்தது. அவரது அரண்மனையின் பொக்கிஷங்களைக் காப்பவர் விடியற்காலை ஓடோடி வந்து மன்னனை எழுப்பி ‘மன்னா நமது பொக்கிஷ அறையில் இடமில்லாமல் பொன்னும் பொருளும் நிரம்பிக் கிடக்கின்றன’ என்ற சேதியைக் கூற மன்னனும் அதிசயப்பட்டு அங்கு சென்று பார்க்க அவர் முன் வந்த குபேரன்  ‘மன்னா இது போதுமா, இல்லை இன்னும் வேண்டுமா?’ எனக் கேட்க மன்னனும்  ‘நன்றி குபேரா, நன்றி’ எனக் கூறி அவருக்கு விடை கொடுத்து அனுப்பிய பின் அந்த பொக்கிஷங்களை அப்படியே தன்னிடம் யாசகம் கேட்டு வந்திருந்த  கௌட்ச முனிவருக்குக் கொடுத்தார். அந்த முனிவரும் ‘மன்னா நான் கேட்டுப் பெற வேண்டிய அளவைக் காட்டிலும் அதிகமாக பெற்றுக் கொண்டு சென்று அவற்றை எடுத்துச் சென்று எங்கு வைக்க முடியும்?  நீ வாக்கு தவறாதவன் என்பதை உணர்கிறேன். ஆகவே எனக்கு குரு தட்ஷணைத் தருவதற்கு பதினான்கு கோடி தங்க நாணயங்கள் மட்டும் போதும். அதற்கு மேல் ஒரு நாணயம் கூட வேண்டாம்.   நீ நீடூழி வாழ்ந்தவண்ணம் இருந்து கொண்டும், உன் ராஜ்யத்தை தொடர்ந்து  ஆள்வதற்கு நல்ல மகன் பேறு பெற்றுக் கொண்டும்   வாழ உனக்கு  என் ஆசிகள்’ என மன்னனை வாழ்த்தி விட்டுச் சென்று விட்டார்’ . நாளடைவில்  ரகுராமனுக்கும்  ஒரு மகன் பிறக்க அவனுக்கு அயன் என்ற நாமதேயம் சூட்டினார்கள்.

 

அயன் சாபம் தீர்த்த கதை 

அயனும் வயதுக்கு வந்தபோது பல கலைகளையும் கற்றறிந்தவனாக இருந்தான்.  அப்போது விதர்ப தேசத்தை சேர்ந்த பேரரசன் ஒருவன் தனது தங்கையான இந்துமதிக்கு திருமணம் செய்ய முடிவு செய்து ஸ்யம்வரத்தை நடத்த முடிவு செய்து இருந்தார். அதில் பங்கேற்பதற்கு பல நாட்டு ராஜகுமாரர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.  அதில் கலந்து கொள்ள ரகுராமனின் மகன் அயனுக்கும் அழைப்பு  விடுத்திருந்தார்.

அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட அயனும் அந்த ஸ்யம்வரத்தில் கலந்து கொள்ள நான்கு வகைப் படைகளுடன் விதர்ப தேசத்துக்கு கிளம்பிச் சென்றார். அவர்கள் சென்ற வழியிலே நர்மதை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடியவண்ணம் இருந்தது.  நதிக்கரையை அவர்கள் அடைய இன்னும் சில கஜ தூரமே இருந்தது. அந்த நேரத்தில் நதியின் அடுத்த பக்கத்தில் இருந்து மதம் பிடித்த மிகப் பெரிய யானை ஒன்று நதியிலே நீந்தி இந்தப் பக்கம் வந்து கரையில் இறங்கி  ஆக்ரோஷமாக கோஷமிட்டபடி அவர்களை நோக்கி ஓடி வந்தது.  அது கிட்டே வந்து விட்டால் ஒரு சிலருக்காவது காவு நிச்சயம் என்பதை உணர்ந்த மன்னன் அயனும் சற்றும் தயங்காமல் தனது வில்லை எடுத்து அம்பு தொடுத்து அதன் நெற்றிப் பொட்டில் அதை செலுத்தினார். அந்த அம்பும் அந்த யானையின் நெற்றியை துளைத்துக் கொண்டு அதன் உடலில் புகுந்ததும், அந்த யானை மறைந்து போனது. யானைக்கு பதில் அங்கு ஒரு அழகிய மனிதர் நின்று இருந்தார்.  அடுத்த வினாடி அவர் மன்னரை நோக்கி நடந்து வந்தார். அப்படியே மன்னனின் கால்களில் விழுந்து வணங்கினார்.

மன்னர் காலில் விழுந்து வணங்கியவர் அவரிடம் கூறினார் ‘மன்னா, நான் பிரியம்வதன் எனும் கந்தர்வ புருஷன் ஆவேன். முன் ஒரு காலத்தில் என்னுடைய தந்தையான பிரியதர்சனன் என்பவர் மாதங்க முனிவரின் சாபத்தைப் பெற்றார். அதன் காரணமாக நான் யானை உருவில் இத்தனைக் காலமும் வாழ வேண்டியதாயிற்று. மாதங்க முனிவரிடம் இருந்து சாபத்தைப் பெற்று யானை உருவை அடைந்த எனக்கு ஆறுதலாக மாதங்க முனிவர் என்னிடம் கூறினார் ‘பின் காலத்தில் இங்கு வர உள்ள அயன் எனும் மன்னன் மூலமே சாப விமோசனம் கிடைக்கும். அவர் உன் மீது அம்பை  எய்தும் அளவுக்கு நீ அவரைக் கோபப்பட வைக்க வேண்டும். அப்போது அவர் விடுக்கும் அம்பு  உன் உடலில் புகுந்ததும் உனக்கு சாப விமோசனம் கிடைத்து நீ பழைய உருவை அடைவாய்’.

பிரியம்வதன் தொடர்ந்து கூறலானார் ‘மன்னா, நானும் இத்தனைக் காலமும் உன் வரவுக்காக இங்கே காத்துக் கிடந்தேன்.  மாதங்க முனிவர் கூறியது போல இன்று உன்னால் எனக்கு சாப விமோசனம் கிடைத்து விட்டது. அதற்கு மிக்க நன்றி.  மன்னா, என்னிடம் சில சக்திகள் உள்ளன. அவற்றை உனக்குத் தருகிறேன். அவை உனக்கு தக்க நேரத்தில் உதவிடும்’  என்று கூறிய பின் அவருக்கு ஒரு பாணத்தை தந்து விட்டுக் கூறினார் ‘மன்னா, நான் கொடுக்கும் சம்மோகனம் எனும் இந்த பாணமானது பல சக்திகளை உள்ளடக்கிக் கொண்ட ஒரு பெரிய படையைப் போன்றது. அது இரண்டு மந்திரங்களைக் கொண்டது. இதை எய்யும்போது ஒரு மந்திரத்தையும், அதை திரும்ப அழைக்கும்போது இன்னொரு மந்திரத்தையும் ஓத வேண்டும். இதற்கு அழிவே கிடையாது.  இதை பயன்படுத்தினால் எதிரிகளை இந்த பாணம்  முற்றிலும் அழிக்கும். உனக்கும் வெற்றியைக்  கொடுக்கும்’. அயனும் அந்த கந்தர்வ புருஷன் கொடுத்த சம்மோகனம் எனும் படையை உள்ளடக்கிய பாணத்தை மனதார பெற்றுக் கொண்டு அவருக்கு நன்றி கூறிய பின் அங்கிருந்து கிளம்பி விதர்பாவை நோக்கிச் சென்றார்.

நகர் பகுதியை அயன் வந்தடைந்து விட்ட செய்தியைக் கேட்ட விதர்ப அரசனும் நகர் எல்லைக்கே வந்து அவரை வரவேற்று சபைக்கு அழைத்துச் சென்றார். அங்கோ அரண்மனையில் ஸ்வயம்வரத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்திருந்த நிலையில் பல மன்னர்களும், ராஜ குமாரர்களும் ஏற்கனவே அங்கு வந்து கூடி அவரவர் ஆசனங்களில் அமர்ந்து கொண்டு இருக்க, அங்கு போய் சேர்ந்த அயனும் தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார்.

தொடரும்……5