ரகுவம்சம்-15
– சாந்திப்பிரியா – 
ரகுவம்ச ஆட்சி தொடர்வு  
முறிந்தது
பல காலம் ஆட்சி செய்து வாழ்க்கையை சுகபோகமாக அனுபவித்து வந்த சுதர்சனுக்கு  ஒரு கட்டத்தில் வாழ்க்கையே அலுத்துப் போய் சலிப்பு ஏற்பட, தனது மகனான அக்னி வருணனை ஆட்சியில் அமர்த்தி விட்டு நைமிசாரண்ய வனத்துக்குச் சென்று தவத்தில் அமர்ந்து கொண்டார். அக்னி வருணன் ஆட்சிக்கு வந்த நேரத்திலே நாட்டில் அவருக்கு எந்த விதமான சங்கடமும் இல்லாமல் இருந்தது. அக்கம்பக்கத்து மன்னர்கள் அடங்கிக் கிடந்தார்கள். நாட்டில் செல்வம் கொழித்துக் கிடந்தது. அரசாள்மை விதிமுறைகள் என்பதெல்லாம் வறைமுறையோடு வழி வகுக்கப்பட்டு நடைமுறையில்  இருந்தன என்பதினால் அந்தந்த அதிகாரிகள் முறையோடு அரசர் சார்பிலே ஆதிக்கம் செய்து வந்தார்கள். மக்களுக்கு எந்தக் குறையுமில்லை. ஆகவே அக்னி வருணன் நாட்டு நடப்பின் எதைக் குறித்தும் கவலைக் கொள்ளாமல் சிற்றின்ப வாழ்க்கையில் மூழ்கிக் கிடந்தான். காமம் தலைக்கேற பெண்கள் விஷயத்தில் துர் நடத்தைக் கொண்டவனாக மாறிக் கொண்டே வந்தான். காமுகனாக மாறிக் கொண்டே இருந்த அவனுக்கு எந்த அமைச்சரும் முன் வந்து அறிவுரைக் கூற முடியாமல் பயந்தார்கள். ஏன் என்றால் அவர்கள் எத்தனை எடுத்துக் கூறியும் அவன் தனது நடத்தையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. அளவுக்கு மீறி சிற்றின்ப வாழ்க்கையில் ஈடுபட்டதினால் அக்னி வருணனுக்கு  மெல்ல மெல்ல உடலில் தீர்க்க முடியாத தேக வியாதி பிடித்துக் கொண்டது.  சில நாட்களிலேயே அவனால் நடக்கக் கூட முடியாமல் போயிற்று.
 

அதனால் அக்னி வருணனுக்கு குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை என்பதினால் வியாதி பிடித்து கிடந்த அக்னி வருணனுக்குப் பிறகு அடுத்து ராஜ்யத்தை யார் ஆளப்போகிறார்கள் என்ற கவலையும் மந்திரிமார்களுக்கு எழுந்தது. பல ஆண்டுகளாக அரசனோ மக்கள் யாரையுமே சந்திக்கவில்லை. எப்போதாவது, எதற்கேனும் அரசனை சந்திக்க விரும்பிய மக்களுக்கு அரசன் புத்திர பாக்கியம் பெறுவதற்காக தபத்தில் அமர்ந்துள்ளதாகவும், ஆகவே அவரை தொந்தரவு செய்ய இயலாது என்று பொய் கூறி,  அரசனுக்கு வந்திருந்த வியாதி குறித்த விஷயத்தை அடியோடு மறைத்து வைத்திருந்தார்கள். அரண்மனையில் கூட அரசனைக் குறித்த எந்த செய்தியுமே யாருக்கும் தெரியவில்லை. அரண்மனையின் அறையிலேயே முடங்கிக் கிடந்த அரசனும் ஒரு நாள் மரணம் அடைந்தான்.

அரசன் மரணமும் அடைந்த பின் அதை வெளியில் தெரியாமல் மறைத்து வைத்து அமைச்சர்கள் கூடி ஆலோசனை செய்த பின் கைதேர்ந்த பண்டிதரை அழைத்து  அவரைக் கொண்டு யாகாக்கினி  எனும் யாகம் செய்வதைப் போல போலி நாடகம் நடத்தி, அந்த அக்னிக்குள் அரசனை மறைத்து வைத்து அவர் உடலை எரித்தார்கள். அனைத்து காரியங்களும் முடிந்ததும் அரசனுக்கு பிள்ளை ஏதும் இல்லை என்றாலும் அவனுடைய மனைவி  அரசாள்வதற்கு தேவையான அனைத்து சத்குணங்களையும் பெற்று இருந்தாள் என்பதை அறிந்து கொண்ட மந்திரிகள் அவளையே  நாட்டை ஆளுமாறு கோரினார்கள்.  ராஜ்யத்தை ஆள்வதற்கு அவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்றாலும்,  ரகுவம்ச ஆட்சி தழைத்திட வேண்டும் என்ற ஆர்வத்தினால் அவளும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பல காலம் நல்லாட்சி தந்து வந்தாள்.

காளிதாசரின் ரகுவம்ச காவியம்   முடிந்தது 
————————–
 ரகுவம்சம்: ஒரு பார்வை  

அக்னி வருணனுக்கு முன்பாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்து கொண்டிருந்த ரகுவம்ச பரம்பரையினர் துறவறம் மேற்கொண்டோ, தத்தம் ஆயுளை தாமே முடித்துக் கொண்டோ தமது வாரிசுகளுக்கு ராஜ்ய பதவியை தந்துவிட்டு தேவலோகம் போய்  சேர்ந்து விட்டார்கள். அக்னி வருணனின் மனைவி ஆண்டபோதும் அவளது ஆட்சியில் எந்தக் குறையும் இல்லை. அவள் தனது முன்னோர்களின் ஆட்சியைப் போலவே திறமையாக ஆண்டு வந்தாள் என்றாலும் வம்சாவளியாக ஆண்டு வந்த ரகு பரம்பரை ஆட்சியின் பின்னலில் ஒரு இழை அறுந்து விட்டது என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.  ஏன் என்றால் பிள்ளைகளை இல்லாத அவளுக்கு பிறகு நாட்டை யார் ஆண்டார்கள் என்பது தெரியவில்லை. ஆகவே அக்னி வருணனின் மறைவே ரகுவம்ச ஆட்சியின் முடிவு என்றே கருத வேண்டி உள்ளது.

சில குறிப்பேட்டுக்களில் அக்னி வருணனுக்குப் பிறகு சூரிய வம்சத்தின் இஷ்வாகு பரம்பரையை சேர்ந்த 35 அரசர்கள் ஆண்டு வந்துள்ளதாகவும் அதில் கடைசியாக ஆண்ட மன்னன் கிழக்கு சூரத் நகரை ஆண்டு வந்த  சுமித்ரா எனும் மன்னன் என்றும் காணப்படுகிறது.  அந்த மன்னனே அயோத்தியாவை ஆண்ட கடைசி சூரிய வம்சத்து மன்னன்  என்றும் காணப்படுகிறது என்றாலும் அது பற்றிய மேல் விவரங்கள் தெரியவில்லை. மேலும்  அக்னி வருணனின் மறைவுக்குப்  பிறகு பதவி ஏற்ற ஷிக்ராகு எனும் மன்னனின் மகனான மாரு  என்ற மன்னன் யோகக் கலைகளில் சிறந்தவராக விளங்கினார் என்றும் அவரே கலியுகத்தில் பிறந்து மீண்டும் ரகு வம்சத்தை ஸ்தாபிக்க உள்ளார் என்ற செய்தி  சிலரிடம் காணப்படுகிறது. ஆனால் அவர்கள் அக்னி வருணனின் மனைவியின் வழித் தோன்றல்களா அல்லது எந்த விதத்தில் இஷ்வாகு பரம்பரையை சேர்ந்தவர்களாக கருதப்பட்டார்கள் என்பதெல்லாம் வரலாற்றில் தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் அக்னி வருணனுடைய முந்தைய மன்னர்களின் மகன் வழியினராக இருந்திருக்கலாம் என்றும் வல்லுனர்கள் கருதுகிறார்கள். அதே போலவே மன்னன் மாருவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மன்னர்களில் எட்டாவது மன்னனாக இருந்த பிரஹத்பால் எனும் மன்னன் மகாபாரதப் போரில் பங்கேற்றவர் என்றும், அவர் மகாபாரதப் போரில் கௌரவர்கள் சேனையில் பங்கேற்று அபிமன்யுவினால் மரணம் அடைந்தவர் என்றும் சில செய்திகள் உள்ளன. ஆனால் அவை எதுவுமே காளிதாசனின் ரகுவம்சத்திலோ அல்லது வால்மீகியின் ராமாயணத்திலோ காணப்படவில்லை.

காளிதாசன் எழுதிய ரகுவம்சம் அக்னி வருணன் ஆட்சியைக் குறித்து எழுதியதும் மேலே தொடராமல் முடிந்து விட்டது. அக்னி வருணனுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அவரது மனைவிக்குப் பின்னர் ராஜ்யத்தை ஆண்ட ரகுவம்சத்தினர் யார், யார் என்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே கூறியபடி காளிதாசன் எழுதிய காவியத்தில் பல பகுதிகள் கிடைக்கவில்லை என்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதைக் குறித்த இன்னொரு செய்தியும் உள்ளது.

உஜ்ஜயினியை ஆண்ட மன்னன் போஜராஜன் காளிதாசரிடம் பெரும் மதிப்பு கொண்டவர். காளிதாசன் போஜராஜனின் அரசவையை அலங்கரித்து வந்திருந்த நவரத்தினங்களில் ஒருவர். போஜனுக்கும் காளிதாசனுக்கும் இடையே ஒரு அற்புதமான உறவு உண்டு. இருவரும் இணை பிரியவே மாட்டார்கள், இணைப் பிரியாத நண்பர்களாக இருந்தவர்கள்.

ஆயினும், சில சமயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்து விடும். அந்த நேரங்களில் காளிதாசர் போஜ ராஜனை விட்டு விலகி எங்கேயேனும் சென்று தான் காளிதாசன் என்பதை எவருக்கும் தெரிவிக்காமல் வாழ்ந்து வருவதுண்டு. ஒரு முறை வழக்கம் போல போஜ ராஜனுக்கும் காளிதாசனுக்கும் கருத்து வேறுபாடு வந்து இருவரும் பிரிந்தனர்.

காளிதாசனும் ஒரு தாசியின் வீட்டில் சென்று தான் யார் என்பதைக் காட்டிக் கொள்ளாமல், தன்னை புலவர் என்று கூறிக் கொண்டு வாழ்ந்து வந்தார். காளிதாசனை ஒரு சிலர் மட்டுமே அறிவார்கள். அத்தனை ஏன், ஒற்றர்கள் உட்பட மன்னனின் படை வீரர்கள் பெரும்பான்மையானவர்களுக்கு கூட காளிதாசன் யார் என்ற அடையாளமே தெரியாதாம். ஆகவே அவர் நாட்டில் எங்காவது சென்று வாழ்ந்து வந்தால் அவரை மீண்டும் கண்டு பிடிப்பது கடினமான காரியமாக இருந்தது.

நல்ல நண்பனின் பிரிவுத் துயர் தாங்க முடியாத போஜராஜன் அவரைக் கண்டுபிடிக்க, தான் எழுதிய புதிருக்கு விடைக் கூறும் மக்களுக்கு பரிசுகள் உண்டு என அறிவித்தார். போஜன் மற்றும் காளிதாசனின் மனநிலை ஒரே நிலையில் இருந்ததினால் அவர்கள் போடும் எந்த புதிருக்கும் மற்றவர்களால் எளிதில் அர்த்தம் கூற முடியாது. போஜனின் புதிர்களுக்கு காளிதாசரும், காளிதாசரின் புதிர்களுக்கு போஜனும் மட்டுமே தக்க விடையைக் கொடுக்க முடியும். ஆகவே தனது புதிருக்கு நிச்சயமாக காளிதாசன் மட்டுமே பதில் கூற இயலும் என்பதை அறிந்திட்ட மன்னன் காளிதாசனின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்க அந்த புதிருக்கான விடை தருபவர்களுக்கு மிகப் பெரிய அளவில் சன்மானங்கள் தருவதாக அறிவித்து இருந்தார்.

காளிதாசன் தங்கி இருந்த வீட்டில் இருந்த தாசியும் இந்த செய்தியைக் கேட்டு, காளிதாசனிடம் வந்து, ‘நீங்கள் ஏதோ புலவர் என்றீர்களே, இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்றாள். சற்றே ஏமார்ந்து போன காளிதாசனும் உடனடியாக, அந்த புதிருக்கான பதிலை ஒரு சமிஸ்கிருத ஸ்லோக வடிவில் தாசிக்கு கூறிவிட்டார்.

அந்த பதிலைக் கேட்ட தாசிக்கு சந்தேகம் வந்து விட்டது. ஒருவேளை காளிதாசனே அரசனிடம் சென்று அந்த பதிலைக் கூறிவிட்டு பரிசைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டால் தன் கதி என்ன ஆகும் என எண்ணியவள் நயவஞ்சகமாக, காளிதாசன் உறங்கிக் கொண்டு இருந்தபோது அவர் கழுத்தை வெட்டி அவரைக் கொலை செய்து விடுகின்றாள். காளிதாசனின் உயிர் பிரிகின்றது.

அதற்குப் பிரு அந்த தாசியும் அரண்மனைக்குச் சென்று அவர் விடுத்த புதிருக்கான பதிலைக் கூறி பரிசைக் கேட்க, அந்த பதிலைக் கேட்ட மன்னனும் அதை காளிதாசன் மட்டுமே கூறி இருக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டு, பரிசை தாசிக்கு கொடுத்தாலும், அவளை விட்டு விடாமல் தாசியை மிரட்டி நடந்த உண்மையை அறிந்து கொண்டார். காளிதாசனை அவள் கொலை செய்து விட்டாள் என்பதை தெரிந்து கொண்டவுடன் அவளை அழைத்துக் கொண்டு ஓடோடி அவள் வீட்டுக்கு சென்றார். போஜனுக்கு ஒரு சக்தி இருந்தது. கற்றறிந்திருந்த அந்த சக்தியினால் தமது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை இறந்தவர் யாராக இருந்தாலும் அவரை ஒரு முகூர்த்த நேரம் அவரால் உயிர் பிழைத்து வைக்க முடியும். ஆகவே அந்த சக்தியை போஜன் பிரயோகித்து காளிதாசரை உயிர் பிழைத்து எழ வைக்கிறார்.

காளிதாசனும் உயிர் பிழைத்து எழுந்திட இருவரும் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார்கள். காளிதாசர் போஜரிடம் கூறினார் ‘ மன்னா, நேரம் மிகக் குறைவாக இருக்கின்றது. நான் எழுதிய ரகுவம்சம் முடிக்கப்படாமல் இருக்கின்றது. ஆகவே முடிக்காமல் நான் மிச்சம் வைத்துள்ள குறிப்புகளைத் உனக்குத் தருகின்றேன். அதைக் கொண்டு நீங்கள் மீதம் உள்ள ரகுவம்சத்தை பாடி முடுஇக்க வேண்டும்’ என்று கூறிய பின் அதன் குறிப்புக்களையும் அவரிடம் தந்தப் பின் மரணம் அடைந்து விடுகிறார். அதைக் கொண்டு போஜராஜன், ரகுவம்சத்தின் முழு பகுதியையும் மீண்டும் எழுதி முடிக்க துவங்கினாலும் முழுமையாக அவரால் அதை எழுதி முடிக்கவில்லை என்றும் அதுவே போஜசம்பு எனும் இராமாயண காவியமாகி விட்டது என்றும் கூறுகிறார்கள். போஜ சம்புவிலும் அக்னி வர்ணன் என்பவனின் கதையோடு ராமாயணம் முடிவதினால் காளிதாசன் எழுதிய மீதி பாகம் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

காளிதாசன் எழுதிய ரகுவம்ச காவியத்தில் ராமருடைய மூதையோர் மற்றும் அவரைத் தொடர்ந்து வந்தவர்களின் சிறிய வாழ்க்கைக் குறிப்புக்களே காணப்படுகின்றன. ராமருடைய தந்தையின் முந்தைய வம்ச சாபம் போன்றவை கூறப்பட்டு இருந்தாலும் அவர் எழுதி உள்ள ராமருடைய கதையில் அவர்கள் அவதாரம் குறித்த அதிக விவரங்களைக் கொடுக்காமல் பொதுவாக கூறிவிட்டு விட்டுள்ளார்.

காளிதாசன் எழுதிய ரகுவம்ச காவியத்தில் வால்மீகி முனிவரின் இராமாயண பாடலைப் பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளதினால் காளிதாசர் வால்மீகியின் ராமாயணத்தை அறிந்து கொண்டோ அல்லது படித்தோ இருக்கலாம் என்று நம்ப இடமுள்ளது. வால்மீகி எழுதியதாக கூறப்படும் உண்மையான ராமாயணம் 24000 த்துக்கும் அதிகமான பாடலைக் கொண்டது என்றும், அவற்றில் ராமர் பிறப்பில் இருந்து இறப்பு வரை விவரமாக விவரிக்கப்பட்டு இருந்துள்ளது என்றும், அவர் எழுதிய ராமாயணம் ராமனின் வாழ்க்கை வரலாற்றையும் பெருமைகளைப் பற்றி மட்டுமே என்பதினால் ராமருடைய முன் வழி சந்ததியினரையோ அல்லது ராமருக்குப் பிறகு ஆண்டவர்களையோ குறித்த செய்திகளை வால்மீகி ராமாயணம் கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார்கள். அதே சமயத்தில் வால்மீகி ராமாயணத்தின் முதல் சில பாகங்களும் இறுதி பாகமான ராமர் இறப்பும், அவர் வம்சத் தொடர்ச்சி குறித்த பாடல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஒருவேளை வால்மீகியின் முதல் சில பாகத்தில் அவர் ராமர் சந்ததியினர் குறித்து கூறி இருக்கலாம் என்றும், அதுவே காளிதாசரின் ரகுவம்ச காவியத்தின் கருவாக அமைந்திருக்கலாம் என்ற கருத்தும் ஆய்வாளர்களுக்கு உள்ளது. நான் முன்னரே எழுதியது போல காளிதாசரால் எழுதப்பட்டிருந்த ரகுவம்சம் எனும் மூல நூலில் 25 காண்டங்கள் இருந்ததாகவும், ஆனால் அவற்றில் 19 காண்டங்களே புலவர்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. மற்ற ஆறு காண்டங்களில் கூறப்பட்டுள்ள மன்னர்கள் யார் என்பதோ, இல்லை அவை எதை வெளிப்படுத்தின என்பதோ தெரியவில்லை. ஆனால் வால்மீகி ராமாயணத்தைப் போலவே காளிதாசரின் கதைக்குப் பின்னர் காவியம் மீண்டும் தொடராமல் அந்தரங்கத்தில் ரகுவம்சக் காவியம் நின்று விட்டு உள்ளதைக் காணும்போது காளிதாசரின் கண்டெடுக்கப்படாத பாடல்களில் பிந்தைய வம்சத்து செய்திகள் இருந்திருக்கலாம் என்பதாக நம்ப இடமுள்ளது.  எது எப்படியோ, காளிதாசரின் ரகுவம்சக் காவியத்தை முடிக்கப்படாத காவியமாகவே கருத வேண்டி உள்ளது.