3

அடுத்த கணம் அங்கிருந்த நாரத முனிவரும் மறைந்து விட்டார். அந்த கண்ட இந்ரதைய்யுமாவும் சற்றே அதிர்ந்து போனாலும் தனக்கு அசீரி மூலம் கொடுக்கப்பட்ட கட்டளையின்படியே ஒரு ஆலயம் அமைத்து அதை சக்தியூட்ட  பிரும்மாவை வேண்டி அழைத்தார். ஆனால் பிரும்மாவோ அந்த ஸ்ரீ ஷேத்திரம் விஷ்ணு பகவான் தானே அவதரிக்கும் இடம் என்பதினால் தன்னால் அந்த காரியத்தை அங்கு செய்ய இயலாது என்றும், ஆலயம் கட்டி முடிக்கப்பட்டப் பின்னரே தான் வந்து ஆலயத்தின் மீது  ஒரு ஆலயக் கொடியை ஸ்தாபிப்பதாகவும், தூரத்தில் இருந்தே அதை எவர் தரிசித்தாலும், அவர்களுக்கு மோட்ஷம் கிட்டும் என்றும் கூறி விட்டார். ஆகவே ஆலயம் அமைக்க பிரும்மா வருவார் என நாரத முனிவர் கூறியது வெறும் பேச்சோ எனக் குழம்பிய மன்னன் தான் எப்போது ஆலயம் அமைப்பது,  அதில் எப்போது விஷ்ணு பகவான் வந்து அமர்வார், அவர் உருவை வடிவமைக்க தேவையான மரத்தை எங்கு போய் தேடுவது என மேலும் மேலும் குழம்பியவாறு மனம் உடைந்து போன இந்ரதைய்யுமாவும் மீண்டும் உண்ணாவிரதம் இருந்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். அன்று இரவே விஷ்ணு பகவானும் மீண்டும் இந்ரதைய்யுமாவின் கனவில் தோன்றி அந்த ஊரில் உள்ள நதிக்கு சென்றால் அங்கு தன்னை வடிவமைக்க தேவையான மரத்தின் அடிப்பகுதியாக தான் மிதந்து வருவேன் என்றும், அந்த மரத்தின் அடிப் பகுதியே புனிதமான மரம் என்பதை உணர்த்தும் வகையில் அதில் சங்கு, சக்கரம், தாமரை மற்றும் கதை போன்ற உருவங்கள் ஏதாவது  இருக்கும் என்றும் கூறினார்.

மறுநாள் காலையில் எழுந்து நீராடிய பின் நதிக்கு சென்ற மன்னனும் கடலில்  எதோ ஒரு மரத்தின் ஒரு அடிப்பாகம் மிதந்து கொண்டு வந்ததைக் கண்டார். அந்த மரத்தின் அடிப்பாகமும் கரையில் வந்து ஒதுங்கி நின்றது. அது வேப்ப மரமாக இருந்தது. அந்த மரத்தின் அடிப்பாகத்தில் கனவில் விஷ்ணு பகவான் கூறிய அதே சின்னங்களும் காணப்பட்டன. ஆஹா…இதுவே இந்த ஆலயத்தில் நீல மாதவரின் உருவை வடிவமைத்து வைக்க வேண்டிய சிலைக்கான மரம் என்று மகிழ்ந்து போன மன்னன் அந்த மர அடிப்பாகத்தை எடுத்து வருமாறு தனது சேவகர்களுக்கு உத்தரவு இட்டார். ஆனால் எத்தனை பேர் வந்து  தூக்கினாலும், அதை தூக்க முடியவில்லை. என்ன செய்தும் அதை அசைக்கக் கூட முடியவில்லை.

ஆகவே என்ன செய்து அந்த மரத்தை எப்படி எடுத்துப் போகலாம் என மன்னன் துயரத்துடன் அங்கு காவலுக்கு ஆட்களை வைத்தப் பின் அரண்மனைக்கு திரும்பினார். அன்று இரவு மீண்டும் ஒரு கனவு. அதில் தோன்றிய நாரத முனிவரைக் கண்ட மன்னன் கனவிலேயே அவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்தப் பின்னர் தனக்கு ஏற்பட்டு வரும் சோதனைகளைக் கூறி அவற்றை எப்படி நிவர்த்திப்பது என்று கேட்டு  கதறி அழுதார். அதைக் கேட்ட நாரத முனிவர் அவரை தேற்றிய பின்னர் ஒரு மாட்டு வண்டியைக் கொண்டு வந்து அதில் அந்த மரக்கட்டையை ஏற்றிக் கொண்டு போய் தச்சர்களைக் கொண்டு நீல மாதவரின் வடிவத்தை அந்தக் கட்டையில் செதுக்குமாறும், அதை செய்து முடித்தப் பின் அதை ஆலயம் கட்டப்பட உள்ள இடத்தின் அருகில் எடுத்துச் சென்று பிரும்மாவை அழைத்தால் அவர் வந்து ஆலய  நிர்மாணிப்பை பார்த்துக் கொள்வார் என்று கூறி விட்டு மறைய கனவும் கலைந்தது. காலையில் எழுந்த மன்னனும் உடனடியாக ஒரு மாடு பூட்டிய வண்டியை எடுத்து வரச் சொல்லி அந்த மரக்கட்டையின் அருகில் அதை நிறுத்தி வைக்க முதலில் அந்த மரத்தை தூக்க முடியாமல் தவித்தவர்கள் அதை பஞ்சு மூட்டையை தூக்குவது போல தூக்கி வண்டியில் வைத்து அரண்மனைக்கு எடுத்துச் சென்றார்கள்.

இன்னொரு பக்கத்தில் ஆயிரம் குதிரைகளைக் கொண்டு யாகத்தையும் நடத்தி முடித்த மன்னன்  பல்லாயிரக்கணக்கான ஆட்களை ஈடுபடுத்தி  சில நாட்களிலேயே  ஆலயத்தையும் கட்டி  முடித்து விட்டார். அதே சமயத்தில் அந்த  மரத்தின்  அடிப்பகுதியை அரண்மனைக்கு எடுத்துச் சென்று அவற்றில் உருவங்களை வடிவமைக்கத் துவங்கினார்கள். ஆனால்  எத்தனை தச்சர்கள் முயன்றும் அந்த மரத்தில் சிறிய  கீரலை கூட ஏற்படுத்த முடியவில்லை.  ஆகவே அன்று இரவு வருத்தமுற்று உறங்கிய  மன்னனின் கனவில் மீண்டும் நாரத முனிவர் வந்து மறுநாள் காலையில் தேவலோகத்தில் இருந்து விஸ்வகர்மாவின் தச்சர்கள் வந்து உருவங்களை வடிவமைத்துக் கொடுப்பார்கள் என்று கூறி விட்டு மறைந்தார். காலை பொழுதும் விடிந்தது. தேவலோகத்தில் இருந்து விஸ்வகர்மாவின் ஆட்கள் வந்து அந்த அரண்மனையில் இருந்து மரத்தை எடுத்துப் போய் ஆலய சன்னதியில் வைத்து விட்டு மன்னனிடம் கூறினார்கள் ‘ மன்னா, எங்களுக்கு விஸ்வகர்மா கட்டளை இட்டு உள்ளபடி சன்னதியின் உள்ளே சென்று, கதவுகளை மூடிக்கொண்டு நாங்கள் விரைவில் ஜகன்னாதரின் உருவையும், அவருடன் சுபத்ரா, பாலபத்ரா  மற்றும் சுதர்சனத்தின் உருவங்களையும் இந்த மரத்தின்   கட்டையில் செய்வோம்.

ஆனால் நாங்கள் உருவங்களை செதுக்கி முடிக்கும்வரை எத்தனை நாட்கள் ஆனாலும் நாங்கள் மூடி வைக்கும்  கதவை யாரும் திறக்கக் கூடாது.  அப்படி கதவுகளை திறந்து நாங்கள் வடிவமைக்கும் சிலையை பார்க்க முயன்றால்  அத்தனையும் வீணாகி விடும்’ என்று கூறி விட்டு மரத்தை சன்னதிக்குள் எடுத்துச் சென்று கதவுகளை மூடிக்கொண்டார்கள். சில நாட்கள் தொடர்ந்து அவர்கள் மரத்தில் வேலைகளை செய்து கொண்டிருந்த சப்தம்  கேட்டது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அந்த அறைக்குள் இருந்து சப்தம் வருவது நின்று விட்டது. விஸ்வகர்மாவின் ஆட்கள் வெளியிலும் வரவில்லை. வேலையும் தொடர்வதாக தெரியவில்லை என்பதினால் உள்ளே என்னதான் நடக்கிறது,  ஆட்கள் இருக்கிறார்களா இல்லை போய் விட்டார்களா எனப் பார்க்கும் ஆவலில் மன்னனும் அவரது பரிவாரங்களும்  சன்னதியை மூடி இருந்த கதவை பலவந்தமாக திறக்க அங்கிருந்த அனைவரும் மறைந்து போனார்கள்.

சன்னதிக்குள் இருந்த நான்கு தெய்வங்களின் சிலைகளும் இடுப்புப் பகுதிவரை மட்டுமே செதுக்கப்பட்டு இருந்தது.  அதே சமயத்தின் மன்னன் முன் காட்சி அளித்த நாரதரும் அவர்கள் அவசரப்பட்டு விட்டதினால், உருவங்களை முழுமையாக நிறைவு செய்வதற்கு முன்பாகவே அவற்றை வடிவமைத்த விஸ்வகர்மாவின் ஆட்கள் திரும்பிச் சென்று விட்டார்கள். இனி அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பதினால் இடுப்பு பகுதிவரை மட்டுமே செய்யப்பட்டு இருந்த சிலைகளை ஆலயத்தில் வைத்து அவற்றை பிரதிஷ்டை செய்ய தேவலோகம் சென்று பிரும்மாவை அழைத்து வருமாறு கூறினார். மன்னனும் தாம் செய்த தவறை எண்ணி வருந்தினாலும், அதுவும் நீல மாதவரின் லீலையே என்பதாக எண்ணிக் கொண்டு உடனடியாகக் கிளம்பி பிரும்மாவை அழைக்க தேவலோகத்துக்கு சென்றார். இதனால்தான் இந்த ஆலயத்தில் உள்ள மூலவர்களின் சிலைகள்  முழுமையான உருவைக் கொண்டிராமல் பாதி உருவைக் கொண்ட சிலைகளாக  உள்ளன.

……..தொடரும்