கோயம்பத்தூர் மருதமலை சாலை நவாவூர் பிரிவு அருகில் உள்ள பாலாஜி நகரில் செயல்பட்டு வருவது ‘ஸ்ரீ செல்வகணபதி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சாரிடபள் டிரஸ்ட்’ என்பதாகும். இந்த டிரஸ்ட் வேத பாட சாலை ஒன்றையும் நடத்தி வருகிறார்கள். அங்குள்ள ஸ்ரீ புவனேஸ்வரி ஆலயத்தில் அவர்கள் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவருக்கு சன்னதி அமைத்து அதில் மூலவரின் சிலை ஒன்றை நிர்மாணிக்க உள்ளார்கள்.  இந்த டிரஸ்டுக்கு சிருங்கேரி சாரதா பீடம், காஞ்சி மடம் மற்றும் தத்தாத்திரேயரின் வழித்தோன்றலான அவதூதரான ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகள் பாததுளி ஸ்ரீ துர்கா பிரசாத் ஆனந்த ஸ்வாமிகள் போன்றவர்களின் அருளாசியும் உண்டு. இந்த வேத பாடசாலையில் கல்வி, கேள்வி, ஞானம் மற்றும் செல்வத்தை அள்ளித் தரும் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் பஞ்சலோக விக்ரகம் உள்ளது.

இங்குள்ள ஸ்ரீ புவனேஸ்வரி ஆலயத்தை அவதூதரான ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகள் நிறுவியதாக கூறுகிறார்கள். அவருடைய சமாதி சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தில்  உள்ளது.

இதே  டிரஸ்டின்  நிர்வாகத்தில் உள்ள புவனேஸ்வரி ஆலயத்தில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் சிலையையும் பிரதிஷ்டை செய்ய உள்ளார்கள்.  தற்போது டிரஸ்ட் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள உற்சவ மூர்த்தியான ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவரை  அந்த ஆலயத்தில் உள்ள சரஸ்வதி சன்னதிக்கு எடுத்துச் சென்று அங்கு வைத்து பூஜைகளை செய்தபின் மீண்டும் திரும்ப ட்ரஸ்ட் அலுவலகத்தில் வைத்து விடுகிறார்கள். ஆலயத்தில் மூலவர் சிலை அமைக்கப்படும்வரை அந்த உற்சவ மூர்த்தியே பூஜிக்கப்பட்டு வருமாம். அந்த உற்சவ  மூர்த்தி பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு மந்திரங்கள் ஓதி பூஜிக்கப்படுவதினால், உற்சவ மூர்த்தியே என்றாலும், ஆலய சன்னதியில் உள்ள மூலவர் போல அதன் சக்தி பெருகி உள்ளதாம். ஒருமுறை ஒரு இடத்தில் அந்த உற்சவ மூர்த்திக்கு லட்ஷார்ச்சனை செய்தபோது அங்கிருந்த திக்குவாய்  குழந்தை ஒன்று பூஜையின் முடிவில் திக்குவாய் நோய் குணமடைந்து நன்கு பேசத் துவங்கியதாம். இப்படி பல சம்பவங்கள் உள்ளதாம். அங்காங்கே நடைபெறும் லட்ஷார்ச்சனை மற்றும் பூஜையினால் மேலும் மேலும் அந்த விக்ரஹத்துக்கு சக்தி பெருகிக் கொண்டே போவதை பெருமையாக அந்த பூஜையை நடத்தி வைத்த பண்டிதர் கூறினார்.

இந்த ட்ரஸ்ட் அமைக்க உள்ள பெரிய  வேதபாடசாலை மற்றும் ஆலய திருப்பணிக்கான நன்கொடையை வசூலிக்கும் ஒரு வழிமுறையாக அவர்கள் செல்வத்தையும் கல்வியையும் தரும் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவரை பூஜிக்க விரும்பும் பக்தர்கள் வீட்டுக்கே அந்த ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் பஞ்சலோக விக்ரஹத்தை எடுத்துச் சென்று மெத்த பாண்டித்தியம் பெற்றுள்ள பண்டிதர் மூலம் அவரவர் வீட்டில் அந்த விக்ரஹத்துக்கு பூஜை செய்து அவர்களது விருப்பத்தை நிறைவேற்றித் தருகிறார்கள்.  இதன் மூலம் அந்த புனிதமான திருப்பணிக்காக  பெறப்படும் நன்கொடையை அவர்கள் ஆலயம் கட்டும் பணிக்கு பயன்படுத்த உள்ளார்கள்.  விளம்பரம் இல்லாமல் வாய்மொழி செய்தியாகவே  வழியே இந்த பூஜை பற்றிய செய்தி அனைத்து ஊர்களிலும் உள்ள இடங்களிலும் பரவி வருகிறது என்றாலும் தொடர்ந்து ஒரு குழுவாக அந்த ட்ரஸ்டை சார்ந்தவர்கள் இந்தப் பணியை செய்தவண்ணம் ஊர் ஊராக சென்று வருகிறார்கள்.

திருப்பணிக்கான நன்கொடையை அவர்கள் இந்த முறையில் வசூலிப்பதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. ஆலயத்தில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீஸ்வரர் சன்னதியை நிர்மாணிக்க செல்வம் படைத்தவர் சிலர்  முன்வந்து தாமே அனைத்து செலவினையும்  ஏற்கத் தயாராக இருந்தாலும், ஒன்று அல்லது இரண்டு தனி நபர்களிடம் இருந்து நன்கொடைப் பெற்றுக் கொண்டு இந்த திருப்பணியை செய்யக் கூடாது என்பது கட்டளையாக உள்ளத்தினாலும், ஸ்ரீ  லஷ்மி ஹயக்ரீவரை மனித குல மேம்பாட்டிற்காக பல இடங்களிலும் அழைத்துச் சென்று, பல்வேறு இடங்களிலும் வைத்து அவருக்கு பூஜையை செய்து, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்தும் நன்கொடைப் பெற்று குறிப்பிட்ட காலம்வரை அந்த உற்சவ மூர்த்தி அனைத்து இடங்களுக்கும் உலா சென்றுவிட்டு வர வேண்டும் என்பதே குருவின் கட்டளை என்பதினால் இந்த திருப்பணிக்கான நன்கொடையினை ஊர் ஊராகச் சென்று தனி நபர்களின் வீடுகள், தொழில்சாலைகள், வணிக கூடங்கள் மற்றும் கல்விக் கூடங்கள் போன்ற இடங்களில் வைத்து ஆசாரமாக, விதிப்படி பூஜை செய்து நன்கொடை வசூலிக்கிறார்கள். இந்த பூஜைக்கான கட்டண விவரங்களை கட்டுரையின் முடிவில் தரப்பட்டு உள்ள நிர்வாகிகளுடன் தொடர்ப்பு கொண்டு கேட்டறியலாம்.

ஸ்ரீ செல்வகணபதி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சாரிடபள் டிரஸ்ட் சார்ப்பில் நடத்தப்படும் அந்த பூஜை இன்று காலை பெங்களூரில் அரிக்கேரே  எனும் பகுதியில் (ஹுலிமாவு, சாந்திநிகேதன் லேயவுட்  மற்றும் விஜயா பாங்க்  காலனிக்கு மத்தியில் உள்ள இடம்) உள்ள பாரமௌண்ட் பிளட்ஸ் எனும் குடி இருப்பில் தனி நபர் ஒருவர் வீட்டில் சிறப்பாக நடந்தேறியது.  தனி நபர் வீட்டில் நடைபெற்ற பூஜை என்பதினால் 10 அல்லது 15 குடும்பங்களே அழைக்கப்பட்டு இருந்தன. சுமார் 50-60  பக்தர்கள் அதில் கலந்து  கொண்டு ஹயக்ரீவர் அருளைப் பெற்று மன ஆனந்தம் அடைந்தார்கள்.

குடியிருப்பின் நுழை வாயிலிலேயே விக்ரஹத்தை வண்டியில் இருந்து இறக்கி ஒரு சின்ன பீடத்தில் வைத்தப் பின்னர், ஆரத்தி எடுத்தப் பின் மந்திரங்கள் ஓதியபடி வழி முழுவதும் உற்சவ மூர்த்தியின் விக்ரகத்தின் மீது பூக்களைத் தூவியபடியே ஊர்வலமாக எடுத்து வந்தார்கள். அந்த விக்ரஹத்தை வைப்பதற்காக அவர்களே மரப்பலகையிலால் ஆன ஒரு பீடத்தையும் எடுத்து வந்தார்கள். அனைத்து ஏற்பாடுகளையுமே சிரத்தையுடனும், கவனத்துடனும் சிறப்பான தொழில்முறை வல்லுமையின் அடிப்படையில் செய்து உள்ளதினால், ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்த காரியங்களை மளமளவென தடங்கல் இன்றி செய்தார்கள். ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட உற்சவ மூர்த்திக்கு  வீட்டு நுழை வாயிலில் பெண்கள் ஆரத்திப் பாடல்களைப் பாடி, தீபம் காட்டி உள்ளே அழைத்துச் சென்று விக்ரஹத்தை அதற்கான பீடத்தில் வைத்தப் பின் பூஜைகளைத் துவக்கும் முன்னால் அந்த ட்ரஸ்ட்டின் பொறுப்பாளர்  அவர்களுடைய பணிக்கான காரணங்களையும், பூஜையின் மகத்துவம் மற்றும் எதிர்கால திட்டங்களையும்  விளக்கினார்.  அதன் பின்னரே பூஜை   துவங்கியது.

பூஜைகளை துவக்குவதற்கு முன்னதாக சன்னதியை மூடி வைத்துள்ளதைப் போல சம்பிரதாயமாக பீடத்தில் வைக்கப்பட்டு இருந்த விக்ரஹத்துக்கு முன்னால் திரைப் போல ஒரு துணியை இருவர் பிடித்திருக்க, அந்த விக்ரஹத்துக்கு போடப்பட்டு இருந்த அதன் ஆபரணங்கள் மற்றும் ஆடைகளை எடுத்தப் பின் அபிஷேக ஆடைகளை அணிவித்து விட்டு திரையை விலக்கி அபிஷேகங்களை துவக்கினார்கள்.

மந்திரங்களை ஓதியபடியே விக்ரஹத்துக்கு பன்னீர் , பால், சந்தனம் மற்றும் தேன் அபிஷேகம் போன்ற அனைத்தையும் ஆலயத்தில் செய்வது போலவே செய்தபின் முடிவாக தண்ணீர் ஊற்றி விக்ரஹத்தை  அலம்பிய பின்னர் தூப தீபாராதனைக் காட்டிய பின்னர் மீண்டும் திரையால் பீடத்தை மூடி விக்ரஹத்தை நன்கு அலங்கரித்தப் பின்னர் திரையை விலக்கி ஹயக்ரீவர் பூஜைகளை துவக்கினார்கள்.

அந்த பூஜையை செய்வித்த பண்டிதர் அற்புதமாக பூஜைகளை செய்து முடிக்க, கூடி இருந்த பக்தர்கள் திருப்பாவை, திருவாய்மொழி, விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்றவற்றை ஓதிக் கொண்டிருக்க அதன் பின்னர் வேத விற்பனர் ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் மற்றும் லஷ்மி ஸ்தோத்திரத்தையும் ஓதி பூஜைகளை செய்வித்தார். அதன் பின்னர்  கற்பூர ஆரத்தியுடன் தூப தீபாராதனை நடந்து முடிந்தது. சுமார்  மூன்று மணிநேரம் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இறுதியில் பண்டிதர் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் கதையையும் கூறினார்.

 
 
 

அந்த பூஜையில் கலந்து கொண்டவர்கள் தமது வீட்டுக் குழந்தைகளின்  புத்தகங்களை ஸ்வாமி அமர்ந்திருந்த பீடத்தில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் காலடியில் வைத்து வழிபட்டார்கள்.

கீழே உள்ளவை பூஜை காட்சிகள், அதில் கலந்து கொண்டவர்களின் சிறு பகுதி மற்றும் பூஜை முடிவில் ஆரத்தி எடுத்ததும்  அவர்களது சம்பிரதாயத்தின்படி பெண்கள் பாடியபடி கும்மி அடித்து நடனமாடி ஸ்வாமியை பெருமைப்படுத்திய காட்சிகள் ஆகும்.

கீழே உள்ள படங்கள் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் பூஜையில் கலந்து கொண்ட குடும்பத்தினரில் சிலர்.

ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் யார்? அவர் கதை என்ன?

பிரபஞ்சம் படைக்கப்பட்டு முடிந்தப் பின்னர் முதல் யுகத்தில் குதிரை முகத்தை உடைய ஹயக்ரீவர் என்றொரு அசுரன்  வாழ்ந்திருந்தான். அந்த அசுரனோ, எவருமே தன்னை அழிக்க முடியாத வரத்தைப் சிவபெருமானை  நோக்கி ஆயிரம் வருட காலம் கடுந்தவம் புரிந்துப் பெற்றான். ( சில கதைகளில் அந்த அசுரன் பெற்ற வரத்தை புவனேஸ்வரி தேவியை நோக்கி தவம் புரிந்து பெற்றதாக கூறப்படுகிறது).  அவனது துதியில் மகிழ்ந்த சிவபெருமான்  ‘மகனே உனக்கு என்ன வரம் வேண்டுமோ அதைக் கேள் தருகிறேன்’ என்று கேட்க ஹயக்ரீவன் தயங்காமல் சிவபெருமானிடம் ‘ என்னைப்போலவே குதிரை முகத்தினை உடையவனாக இருப்பவனால் மட்டுமே என்னை வதம் செய்ய இயலும் என்ற வரத்தைக் கொடுங்கள்’ என்று கேட்க அவனது துதியில் மகிழ்ந்து காட்சி தந்த சிவபெருமானும் அவன் கேட்ட வரத்தை அருளி மறைந்தார். மனித உடலும் குதிரை முகத்தையும் கொண்டிருந்த அந்த அசுரனின்  செயலால் அடுத்தடுத்து வந்த யுகங்களில் மக்கள் பெறும் அவதிக்கு உள்ளானார்கள்.

ஹயம் என்றால் குதிரை என்று பொருள். எனவே, குதிரை முகம் கொண்டவன் என்ற பொருளில் அவனை ஹயக்ரீவன் என்றே அனைவரும் அழைத்தார்கள். அந்த அசுரனின் தொல்லையினால் தேவலோகத்திலோ, பூலோகத்திலோ எங்குமே யாராலும் நல்ல காரியங்களை நடத்த முடியவில்லை. யாகங்கள், வேள்விகள் என எவற்றையுமே யாராலும் நடத்த முடியாமல் அவன் தடங்கல் செய்து அவற்றை தடுத்து நிறுத்தினான். மூவுலகிலும் நடைபெற்று வந்திருந்த தர்ம காரியங்களுக்கு இடையூறு விளைவித்து வந்தான். அவனை யாராலும் வெல்லவும் முடியவில்லை, அழிக்கவும் முடியவில்லை. மகா பராக்கிரமசாலியாக விளங்கியவன் தன்னைப் போன்ற உருவத்துடன் உள்ள ஹயக்ரீவனால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் எனவும் வரம் பெற்று இருந்ததினால் அவன் ஒருவனைத் தவிர குதிரை முகம் கொண்டவர் இந்த பிரபஞ்சத்தில் யாருமே இல்லை, பிறக்கவும் முடியாது என்பதே அவனுக்கு பலமான ஆயுதமாக இருந்தது.

அசுர குலத்துக்கே உரிய மூர்க்கத்தனத்துடன் திகழ்ந்து வந்த அந்த அசுரன் கொடுத்து வந்த தொல்லைகளையும், இன்னல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் போன ரிஷிகளும், சாதுக்களும், தேவியிடம் சரண் அடைந்து தம்மை அந்த மூர்கனிடம் இருந்துக் காப்பாற்றுமாறு வேண்டினார்கள். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதினால் அவனைப் படைத்த பிரும்மாவிடமே சென்று முறையிட்டார்கள். அவரும் தன்னால் அந்த விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியாது என்பதினால் அனைவரையும் அழைத்துக்  கொண்டு ருத்ரரின் வடிவில் இருந்த சிவபெருமானைக் காணச் சென்றார்கள். சிவபெருமானும் அந்த அசுரன் அழிய வேண்டிய காலம் வந்துவிட்டதை உணர்ந்து கொண்டு அந்தக் காரியத்தை மஹாவிஷ்ணுவால் மட்டுமே செய்ய முடியும் என்பதினால் திருமாலிடம் சென்று அவர் உதவியை நாடுமாறு அறிவுறுத்தினார்.

 

அவர்கள் சென்று இருந்தபோது மகாவிஷ்ணு ஏற்கெனவே ஓர் அசுரனுடன் பல காலம் யுத்தம் செய்த களைப்பினால் அனந்த சயனத்தின் மீது வில்லை தன் முகவாயிற் பொருத்தி கண்களை மூடியபடி படுத்திருந்தார். லஷ்மி தேவி அவர் கால்களை வருடி விட்டபடி இருந்தாள். அங்கு சென்ற தேவர்கள் எத்தனை அழைத்தும் மகாவிஷ்ணு கண்களை திறக்கவே இல்லை என்பதினால் பிரும்மா அவர் தலைமாட்டில் போய் மகாவிஷ்ணு படுத்திருந்த வில்லின் நாணை இழுத்துப் பார்த்தார். அவ்வளவுதான் அந்த வில்லின் நாணானது அறுந்து விழ மகாவிஷ்ணுவின் தலையும் வெட்டுப்பட்டு பறந்து சென்று கடலுக்குள் சென்று மூழ்கி மறைய, அவ்வளவுதான் பூமியே அதிர்ந்தது கடல் பொங்கி எழுந்து கரை புரண்டது. அவற்றைக் கண்டு அஞ்சிய சூரியனும் அப்படியே மறைந்தார். லஷ்மியும், தேவர்களும் கூக்குரலிட்டு அழுதனர். உடனடியாக அவரை உயிர் பிழைக்க வைக்க என்ன செய்யலாம் என்பதற்காக அவர்கள் அனைவரும் மீண்டும் சிவபெருமானிடமே சென்று கதறி அழ, அவரும் அவர்களை தேற்றி தேவலோகத்தில் இருந்த ஒரு வெள்ளைக் குதிரையின் தலையை வெட்டி எடுத்து வந்து அந்த தலை அற்ற உடலில் வைத்து பிரும்மாவே மந்திரங்களை ஓதினால் அவர் உயிர் பிழைப்பார் என்று கூற பிரம்மதேவரோ, காலம் தாழ்த்தாமல் அந்த வெள்ளைக் குதிரையின் சிரஸை அறுத்து வந்து, அதை மகாவிஷ்ணுவின் உடலில் பொறுத்த அங்கிருந்த அனைவரும் அஸ்வமேக யாக மந்திரங்களை ஓத, சற்று நேரத்தில் குதிரையின் முகத்துடன் படுக்கையில் இருந்து ஹயக்ரீவராக மாறி எழுந்த மகாவிஷ்ணு மிக்க ஆவேசத்துடன் கனைத்தபடி அந்த துஷ்ட அசுரன் ஹயக்ரீவன் இருந்த இடத்துக்கு பாய்ந்து சென்று அவனுடன் யுத்தம் செய்து அவனை வதைத்தார். தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள்.

ஆனால் அளவுக்கு மீறி சினத்துடன் இருந்த ஹயக்ரீவரின் கோபத்தைக் குறைக்க முடியவில்லை. அவரது உக்ரஹத்தை தேவலோகத்தில் இருந்த எவராலும் தாங்க முடியவில்லை. ஆகவே அவர்கள் செய்வதறியாது மீண்டும் லஷ்மி தேவியிடம் சென்று, ஹயக்ரீவரை சாந்தப்படுத்துமாறு கூற லக்ஷ்மி தேவியானவள் அவர் இருந்த இடத்தை அடைந்து அவர் மடியில் அமர்ந்து அவரை சாந்தப்படுத்தத் துவங்கினாள். அங்குமிங்குமாக அலைகழித்தபடி நீண்ட தூரப் பயணத்தில் ஹயக்ரீவரை  ஈடுபடவைத்து, அதே நேரத்தில் அவர் மடியில் இருந்தபடியே அவருடைய கோபம் நீங்க அவருக்கு ஆறுதல் கூறிக் கொண்டே வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றாள். அங்கு ஏற்கனவே அவர் வரவை எதிர்நோக்கி அமர்ந்திருந்த சரஸ்வதி தேவியைக் கண்டதும் அவள் கேட்டுக் கொண்டபடி அவளுக்கே ஞானோபதேசம் செய்த பின்னர் அகஸ்திய முனிவரை அழைத்து பூமியில் மனிதகுல மேம்பாட்டிற்காக அவருக்கும் லலிதா சஹாஸ்ரனாமாவளியை போதனை செய்துவிட்டு அதை பூலோகத்தில் சென்று மனிதகுலத்தில் பரப்புமாறு கூறிவிட்டு அமர்ந்ததும் அவருக்கு மீண்டும் பழைய உருவம் திரும்ப வந்து சேர்ந்தது. தன் பழைய உருவை அடைந்தவர் லஷ்மி தேவியுடன் வைகுண்டத்துக்கு சென்றார். இப்படியாக ஹயக்ரீவர் கல்வியின் அதிபதியான சரஸ்வதிக்கே குருவானார் என்பதினால்தான் கல்வி அறிவுக்கு  குருவானவர் லஷ்மி ஹயக்ரீவர் என்பவர் என்ற ஐதீகம் ஆயிற்று. இதனால்தான் மஹா விஷ்ணுவானவர் ஹயக்ரீவர் அவதாரத்தில் சரஸ்வதி தேவிக்கே ஞானோபதேசம் செய்து, மஹாலஷ்மியை தன் மடியில் அமர வைத்து இருந்ததினால் பூலோகத்தில் உள்ளவர்கள் ஹயக்ரீவரை துதித்து பூஜித்தால் அளவற்ற செல்வமும், ஞானமும், அபார கல்வி அறிவும் பெறுவார்கள் என்பதாயிற்று.

 ‘ஸ்ரீ செல்வகணபதி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சாரிடபள் டிரஸ்ட்’ குழுவினரிடம்  பூஜை  விவரம் குறித்து கேட்டறிய விரும்புவோர் தொடர்ப்பு கொள்ள வேண்டிய முகவரி:

திரு சந்தான கிருஷ்ணன், மானேஜிங் ட்ரஸ்டி : 098422 62311
திருமதி  கிரிஜா, செக்ரடரி : 098420 40386
அர்ச்சகர் திரு ராமகிருஷ்ணன் : 099943 11019
அர்ச்சகர் திரு சிவராமகிருஷ்ணன் : 096008 67678
சென்னையில் :
திருமதி  P.  சுகந்தி : 097109 16999
திரு K.P. வரதராஜன் : 098412 64666