அத்தியாயம் – 47

சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”இன்னுமொரு கதையைக் கேள்.  கனக்பூரில்  ஒரு ஏழை விவசாயி, தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் இருந்தான். அவன் தனது நிலத்தைத் தானே உழுது வந்தான். தினமும் வயலில் வேலை  செய்த பின் வீடு திரும்பும் வழியில் உள்ள ஸ்வாமிகளின்  ஆஸ்ரமத்திற்கு சென்று  ஸ்வாமிகளை வணங்கிச் செல்வான்.  சங்கமத்தில் இருந்து கனக்பூர் ஆசிரமத்திற்கு நடந்தே வருவான்.  ஸ்வாமிகள் சங்கம் வழியே எப்போது  சென்றாலும் வயலில் இருப்பவன்  ஓடி வந்து அவரை வணங்குவான்.  அவரும் மௌனமாக அவனுடைய வணக்கத்தை எற்றுக் கொள்வார். ஒரு முறை ஸ்வாமிகள்  அந்த வயலின் வெளிப்பாதை  வழியாக சென்று கொண்டு இருந்த பொழுது  விவசாயி ஓடி வந்து ஸ்வாமிகளிடம்  தன் வயல் வழியே நடந்து சென்றால் அவருடைய பாதங்கள் தனது வயலில் விழும். அப்படி அவருடைய பாதம் தனது வயலில் விழுந்தால் அவருடைய அருள் தனக்குக் கிடைக்கும் என்று தான் நம்புவதினால் அந்த வேண்டுகோளை வைத்ததாகக் கூறினான். ஸ்வாமிகளும்  அவனுடைய வேண்டுகோளை  எற்றுக் கொண்டு  அவன் வயல் வழியே நடந்து சென்றார்.

அந்த முறை வயலில் சோளம் பயிரிடப்பட்டு இருந்தது. இன்னும் சில மாதங்களில் அவை அனைத்தும் முற்றி அறுவடைக்கு தயாராகி விடும். வயலின் வழியே நடந்து செல்லும்போது ஸ்வாமிகள்  அவனிடம் கூறினார் ‘அப்பனே நான் ஓன்று கூறினால்  ஏன், எதற்கு, எப்படி என்று ஒரு வார்த்தையும் கேளாமல் நான் நீ செய்வாயா?’ அதைக் கேட்டவனோ அவர் என்ன சொன்னாலும் அதை செய்வதாகக் கூறினான். அதற்கு ஸ்வாமிகள்  தான் மாலையில்  அதே வழியே திரும்பும் முன்னால் எத்தனை   தானிய செடியை பாதி அளவு வெட்டி விட  முடியுமோ அத்தனை தானிய செடியையும் பாதி அளவு  வெட்டி  வைக்குமாறு கூறினார்.

அந்த வயல் அவனுடையது அல்ல. வயல் இன்னொருவருடையது. வருட வாடகைக்கு குத்தகை பெற்றிருந்த அந்த நிலத்தில் அவன் தானியங்களை பயிரிட்டு அதை அறுவடை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் தனக்கு பாதி, குத்தகை தொகைக்காக அந்த வயலின் சொந்தக்காரனுக்கு பாதி என விளைவதைப் பங்கிட்டுக் கொள்வான். அதில் பெரும் அளவில் வருமானத்தை அந்த வயலின் சொந்தக்காரன் பெற்று வந்தான்.  பாதி முற்றிய தானியச் செடிகளை  பாதியாக வெட்டி விடுமாறு கூறிவிட்டு ஸ்வாமிகள் அங்கிருந்து சென்றதும் அந்த விவசாயியும் ஊருக்குள் ஓடிச் சென்று வயலின் சொந்தக்காரரிடம் தானியச் செடிகளை பாதியாக வெட்டி வைக்குமாறு ஸ்வாமிகள் கூறி உள்ளதினால் அவற்றை வெட்ட அதற்கு அனுமதி கேட்க அந்த வயலின் சொந்தக்காரனும்  முற்றாத நிலையில் உள்ள தானிய செடியை  வெட்டிக் கொள்ள வேண்டும் என்றால் முந்தைய ஆண்டின் குத்தகை பணத்தை விட இரு மடங்கு குத்தகைப் பணத்தை தனக்கு தர வேண்டும் என்று கூறி விட்டான்.

விவசாயி என்ன செய்வது என யோசனை செய்தான். தானியம் அறுவடை ஆனால்தான்  அதை விற்று பணம் பெறலாம். ஆனால் முற்றாத தானிய செடிகளை எப்படி  விற்க முடியும்? ஆனாலும் அந்த விவசாயி ஸ்வாமிகள் கூறி விட்டதினால் நல்லதே நடக்கும் என நம்பினான். வேறு வழி  இன்றி தன்னுடைய மாட்டை அடகு வைத்து விட்டு தன்னுடைய குடும்பத்தினரையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு தானிய செடியை  வெட்டச் சென்றான். அவனது மனைவியும் பிற குடும்பத்தினரும்  அப்படி செய்வது முட்டாள்தனம், முற்றாத நிலையில் உள்ள தானியத்தை யார் வாங்குவார்கள் என்று கேட்டு அவனை தடுக்க முயன்றார்கள் என்றாலும் அவன் மன உறுதியோடு இருந்து  தனது மனைவி மற்றும் குழந்தைகளை உதவிக்கு அழைத்துச் சென்று தானிய செடிகளை ஸ்வாமிகள் கூறியதைப் போல வெட்டி வைத்தான்.

அன்று மாலை ஸ்வாமிகள் வருவதற்குள் பெரும் அளவிலான தானிய செடிகளை  வெட்டி வைத்து இருந்தான். ஸ்வாமிகள் வந்து கேட்டார் ‘அப்பனே, நான் எதோ கூறி விட்டேன் என்பதற்காக நீ  செய்த காரியம் எந்த பலனையும் தரப்போவது இல்லை  எனும்போது எப்படி என்னை நம்பி இதை செய்தாய்?   நீ மிகவும் பாவம். முற்றாத தானியச் செடி எதற்கும் உபயோகமாகப் போவது இல்லை எனும் உண்மையை என்னிடம் கூறி இந்த தானிய செடிகளை வெட்டாமல் இருந்திருக்கலாமே’ என்றார். ஆனால் அந்த விவசாயியோ ‘ஸ்வாமிகளே, நல்லதோ கேட்டதோ, நீங்கள் கூறியதை மீற முடியாமல் நான் இதை வெட்டி வைத்தேன். என் தலையில் இது நஷ்டத்தையே ஏற்படுத்த வேண்டும் என எழுதி இருந்தால் நான் என்ன செய்ய முடியும்? அதை விதியின் விளைவாகவே ஏற்றுக் கொள்வேன்’ என மிக்க அடக்கத்துடன் கூறினான்.  அதைக் கேட்ட ஸ்வாமிகளோ ஒன்றுமே கூறாமல் சென்று விட்டார்.

ஒரு வாரம் கழிந்தது. அந்த ஊரில் பெரும் மழை பெய்து வீடுகள், வயல் வெளிகள், பயிர்கள் என அனைத்துமே நாசமாகி விட்டன. அனைவரது வயல்களில் மீண்டும் தானியங்களை பயிரிட வேண்டி இருந்தது. ஆனால் அப்போது தானியத்தை பயிரிடும் காலம் இல்லை என்பதினால் இன்னும் காத்திருக்க வேண்டும் என்று ஆயிற்று. ஆனால் அதே சமயம் அந்த விவசாயி பாதி அளவில் மட்டுமே வெட்டி வைத்து இருந்த தானிய செடிகள்  மீண்டும் துளிர் விட்டன. பயிரிடும் காலம் இன்னும் இருந்ததினால் மற்றவர்கள் யாருமே பயிர்களை பயிரிட முடியவில்லை. மற்றவர்களினால் எதையுமே பயிரிட முடியாத நிலையில் இருந்தபோது  அந்த வருடம் அவன் நிலத்தில் மட்டும் பாதி வெட்டி இருந்த தானியச் செடிகள் துளிர் விட்டு பெரியதாகி எப்போதையும் விட மிக அதிகமான அளவு விளைச்சலைக் கொடுக்க, அறுவடை முடிந்ததும்  அவனுக்கு  அமோக அறுவடை கிடைக்க அதை விற்ற பணத்தில் அவன் தனது மாட்டை மட்டும் மீட்கவில்லை எப்போதையும்விட மிக அதிக அளவில் பணம் கிடைத்ததினால்  அந்த நிலத்தையே  விலைக்கு  வாங்கி விட்டான். முதலில் அந்த விவசாயியைக் குறைக் கூறி ஸ்வாமிகளை சந்தேகித்தவர்கள் தங்களுடைய தவறை உணர்ந்து வருந்தினார்கள். ஸ்வாமிகளிடம் அனைவரும் சென்று மன்னிப்பும் கேட்டார்கள்.

அறுவடைக்கு முன் அந்த விவசாயி நிலத்துக்கு பூஜை செய்தான். தன்னுடைய மனைவியுடன் ஸ்வாமிகளிடம் சென்று அவரை நமஸ்கரித்தப் பின் அவரால்தானே தனக்கு இப்படி அமோக விளைச்சல் கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் தனக்கு கிடைத்ததில் பாதியை ஸ்வாமிகளுக்கு  காணிக்கையாகக் கொடுக்க முன் வந்தான். ஆனால் ஸ்வாமிகளோ  அதை ஏற்காமல் முதலில் கடன்களை  அடைத்த பின் கூலி ஆட்களுக்கும் முழு கூலியைத் தந்தப் பின் மீதி இருந்தால் அந்த பணத்தைக் கொண்டு அதே நிலத்தையும் விலைக்கு வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். அதனால்தான் அவனும் அதையே செய்து நிறைவான செல்வம் பெற்று வளமான வாழ்க்கையுடன்  நிறைவாக வாழ்ந்து வந்தான்(இத்துடன் அத்தியாயம்-47 முடிவடைந்தது) .

……தொடரும்